Friday, May 22, 2009

தேர்தல் முடிவும் பொருளாதாரக் கொள்கையும் --வெங்கடேஷ் ஆத்ரேயா





தேர்தல் வெற்றி, ஐமுகூ முகாமிற்கு அளப்பரிய சந்தோஷத்தை அளித்திருப்பதைப் புரிந்துகொள்ளும் அதே சமயத்தில், அரசின் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் அதனை ஆய்வு செய்வது என்பதும் அவசியமாகும். உண்மையில் அரசாங்கமானது 2004க்கும் 2009க்கும் இடையில் கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு மக்கள் அளித்திட்ட அங்கீகாரம் என்ற முறையில் இதனை அரசு கூறுவதற்கும் வாய்ப்பு உண்டு. மேலும், குறிப்பாக, தேர்தல் முடிவானது, இடதுசாரிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்திருப்பதும், தாங்கள் மேற்கொண்ட நவீன தாராளமயச் சீர்திருத்தங்களுக்கு மக்கள் அளித்திட்ட ஆதரவு என்று கூட அரசு குதித்துக் கும்மாளமிடலாம். இந்தப் பாணியில் கார்பரேட் நிறுவனங்களும் அவற்றின் ஊதுகுழல்களாகச் செயல்படும் ஊடகங்களும் ஏற்கனவே கத்தத் தொடங்கிவிட்டன. இவ்வாறு தேர்தல் முடிவைத் தங்ளுக்குச் சாதகமாக அவை மாற்ற முனைந்திருப்பதைக் கண்டுகொள்ளாமல் விடுத்தோமானால், அது நாட்டில் மிகப் பெரிய பொருளதாரச் சீரழிவிற்கே இட்டுச் செல்லும்.

2008 செப்டம்பரில் உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்களாகத் திகழ்ந்த பல நிதி நிறுவனங்கள் தகர்ந்து தரைமட்டமான சமயத்தில், அரசின் செய்தித் தொடர்பாளர்கள், ‘‘இதன் தாக்கம் இந்தியாவைப் பாதிக்க வாய்ப்பில்லை’’ என்றும் ‘‘ஏனெனில் இந்தியாவில் உள்ள நிதித்துறை என்பது உலக நிதித்துறையிடமிருந்து ‘வேறுபட்டது’ என்றும், ‘‘நம் நாட்டைப் பொறுத்தவரை நாம் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையில் வலுவான முறையில் பொதுத்துறையைப் பெற்றிருக்கிறோம்’’ என்றும் கூறி பெருமைப்பட்டுக் கொண்டார்கள். இவர்கள் கூற்று சற்று மிகைஎன்றபோதிலும், உலகப் பொருளாதார நெருக்கடி இந்தியப் பொருளாதாரத்தையும் பல வழிகளில் தாக்கியது என்பதே உண்மையாகும். ஆயினும், இந்தியப் பொருளதாரத்தில் உலக நிதி நெருக்கடியின் தாக்கம் கடுமையான முறையில் ஏற்படாது தடுத்திட அவை -அதாவது இந்தியப் பொதுத்துறை நிதி நிறுவனங்கள் - பெரிதும் உதவின. ஆனால், இந்தியாவில் நிதித்துறையில் சீர்திருத்தங்களைக் கொணர அரசு முயற்சிகளை மேற்கொண்டபோது, அதனை இந்திய இடதுசாரிக் கட்சிகள், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும், கடுமையாகவும் உறுதியாகவும், எதிர்த்ததுதான் இதற்குக் காரணங்களாகும்.

தேர்தல் முடிவுகள் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் பல்வேறு மனவோட்டங்களின் விளைவாகவும் பல்வேறு காரணிகளைப் பிரதிபலிக்கும் வகையில் வெளிவந்துள்ளன. மத்தியில் நிலையான ஆட்சிக்கான அவா, மதவெறி மற்றும் வெறுப்பு அரசியலுக்கு எதிரான கடும் வெறுப்பு, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சிபுரிவோருக்கு எதிரான சக்திகளுக்கிடையேயான ஒற்றுமையின்மை மற்றும் ஸ்தலத்தில் உள்ள பிரத்யேகக் காரணிகள் ஆகியவற்றுடன் பொருளாதார அம்சங்களும் காரணமாகும்.
ஐமுகூ அரசாங்கத்தின் வெற்றிக்கான முக்கியமான காரணிகளில், தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும் ஒன்று. இத்திட்ட அமலாக்கத்தில் பல இடங்களில் பல்வேறு கோளாறுகளும் பலவீனங்களும் இருந்தபோதிலும், ஒட்டுமொத்த அளவில் நாட்டுப்புற ஏழை மக்களுக்கு அது கணிசமான அளவிற்கு நிவாரணம் அளித்தது. அதேபோன்று பழங்குடியினர் பாதுகாப்பு குறித்து நிறைவேற்றப்பட்ட சட்டம் பழங்குடி இன மக்களுக்கு வன உரிமைகளை அளித்தது. ஆனால் இவ்விரு சட்டங்களும் அதிலிருந்த பல்வேறு ஓட்டைகளையும் அடைத்து, நிறைவேற்றப்பட முக்கிய காரணமாக இருந்தது இடதுசாரிக் கட்சிகளாகும். இவ்வாறு ஐமுகூ அரசாங்கத்தின் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் இருந்த மக்கள் நலத் திட்டங்கள் அமலாக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவை இடதுசாரிக் கட்சிகளாகும். ஆனால் அதன் விளைவாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட மனமாற்றங்களை ஐமுகூ அரசாங்கத்தில் அங்கம் வகித்த கட்சிகள் அறுவடை செய்துகொண்டுவிட்டன.

புதிதாக அமைய இருக்கும் அரசாங்கமானது இவற்றையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும். ‘இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில் பலவீனமடைந்துவிட்டார்கள், எனவே நிதித் சீர்திருத்த நடவடிக்கைகளை தாராளமாக நிறைவேற்றிக் கொள்ள மக்களால் பச்சைவிளக்கு காட்டப்பட்டுவிட்டது’ என்று கருதிக்கொள்ளக்கூடாது. குறிப்பாக இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகப்படுத்திட முயற்சித்தல், ஓய்வூதிய நிதிய மேலாண்மையைத் தனியாரிடம் தாரை வார்க்க விழைதல், பங்குச்சந்தையில் பார்ட்டிசிபேடரி நோட்ஸ் (யீயசவiஉiயீயவடிசல nடிவநள)என்னும் வெற்றுப் பத்திரங்களை அனுமதிக்கும் போக்கு ஆகியவற்றைத் தங்கள் இஷ்டம்போல் தொடரலாம் என்று கருதிவிடக்கூடாது. சமீபத்தில் ஏற்பட்ட உலகப் பொருளாதார சுனாமியால், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் ஓய்வூதிய நிதியத்தில் முதலீடு செய்திருந்த பல லட்சக்கணக்கான மூத்த குடிமக்களின் பல லட்சம் கோடி டாலர்கள் திடீரென்று காணாமல் போனதையடுத்த அவர்களின் எதிர்கால வாழ்வே கடும் கேள்விக்குறியாகியுள்ளதை அரசு மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ழுனுஞ) கடந்த இருபதாண்டுகளில் நன்கு வளர்ச்சியடைந்திருக்கிறது என்று அரசு பீற்றிக்கொண்டபோதிலும், நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு, குறிப்பாக தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு என்பது இன்னும் முழுமையடையாத நிலையிலேயே இருக்கிறது. குழந்தைகளில் பெரும்பான்மையானவை ஊட்டச்சத்துக் குறைவினால் எடை குறைந்தவைகளாகவே காணப்படுகின்றன. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சுகாதாரம், அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு என்பதும் புதிய அரசாங்கத்தின் முன் உள்ள மாபெரும் சவாலாகும். நவீன தாராளயமயப் பொருளாதாரக் கொள்கையால் இவற்றை நிறைவேற்றிட முடியாது என்பதை அரசு உணர வேண்டும். அதேபோன்று தொடரும் விவசாய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் அரசு தன் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சுகாதாரம் அளிப்பதற்குத் தேவையான அளவில் முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டியதும், மீண்டும் முன்பிருந்தபடி, அனைவருக்கும் பொது விநியோக முறையை அமல்படுத்துவதும் அவசியமாகும். இவற்றை நிறைவேற்றிட அரசுக்கு ஓர் அரசியல் உறுதி அவசியம்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: