Sunday, October 12, 2008

இந்திய முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி








இந்திய முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி



சங்பரிவாரக் கூட்டத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது



புதுடில்லி, அக். 12-



இந்திய முஸ்லீம்கள் அனைவருமே பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கும் முயற்சியில் சங்பரிவாரக் கும்பல் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று புதுடில்லியில் நடைபெற்ற சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அறிஞர் பெருமக்கள் கருத்துக்கள் தெரிவித்தனர். நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லீம் மக்களுக்கு எதிராக, அவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் என்று கருதப்படும் விதத்தில் சங்பரிவாரக் கும்பல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன.



இதுதொடர்பாக ஒரு கலந்துரையாடலுக்கு சஹமத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. தலைநகர் புதுடில்லியில் சனிக்கிழமையன்று மாலை கான்ஸ்டிட்யூசன் கிளப், துணை சபாநாயகர் கூடத்தில் நடைபற்ற இக்கலந்துரையாடல் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், மனித உரிமைகளுக்கான முன்னணி ஊழியர்கள், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், ஊடகங்களைச் சேர்ந்தோர் எனப் பல்வேறு தரப்பினரும் பங்கேற்றார்கள்.



இவர்களில் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகமது சலீம், மது, ராம் புனியானி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவார்கள். கலந்துரையாடலுக்கு வந்திருந்தோரை, ஜகீருடீன் அலிகான் மற்றும் ஷப்னம் ஹாஷ்மி வரவேற்றார்கள். கலந்துரையாடலுக்கான பின்னணி குறித்து ஜஃபார் ஆகா விளக்கினார். பின்னர், ஹைதராபாத் மசூதியில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவமானது எப்படி முஸ்லீம் மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதை வீடியோ ஒளிபரப்பின் மூலமாக மனித உரிமைகளுக்கான முன்னணி ஊழியரும் வழக்கறிஞருமான ஷபிக் மகாஜீர் விளக்கியபோது, அரங்கில் அமர்ந்திருந்த அனைவருமே உறைந்த நிலைக்கு மாறினார்கள் என்று சொன்னால் மிகையல்ல.



மும்பையைச் சேர்ந்த ராம் புனியானி பேசுகையில் விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தளம், ஆர்எஸ்எஸ் ஆகியவை எப்படி வன்முறை வெறியாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன என்பதை அடுக்கடுக்காக முன்வைத்தார். மேலும் இவர்களின் வன்முறை வெறியாட்டங்களுக்குக் காவல்துறையினரும் ஒத்துழைப்புடன் இருந்து வருவதையும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.



சமீபத்தில் டில்லி அருகே நடைபற்ற ஜமியாநகரில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் அதில் மாரடைப்பு வந்து இறந்து போன காவல் ஆய்வாளரை பயங்கரவாதியின் தாக்குதலால் இறந்துபோனார் என்று சித்தரித்தும், ஒட்டுமொத்த முஸ்லீம் மக்களுக்கு எதிராக உணர்ச்சிகளைக் கிளப்பிவிடும் முயற்சிகளையும் விவாதத்தில் கலந்துகொண்டோர் சுட்டிக்காட்டினார்கள். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பஜ்ரங் தளம், விசுவ இந்து பரிசத் அப்பாவி கிறித்துவர்களை, முஸ்லீம்களைக் கொன்று குவித்து வந்தபோதிலும் அவர்களைக் கைது செய்து தண்டிக்க பாஜக ஆட்சியாளர்கள் முன்வராதது மட்டுமல்ல, மத்திய ஐமுகூ ஆட்சியாளர்களும் அவர்களுக்கு உதவக்கூடிய வகையில் அவற்றைக் கண்டு கொள்ளாதிருப்பதற்கும் விவாதத்தில் பங்கேற்றோர் தங்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினர்.



விவாதத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர், விவாதத்தில் கலந்துகொண்டவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் தன்னை மிகவும் பாதித்ததாகவும், நாம் ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற அமைப்புமுறையைப் பின்பற்றுகிறோம் என்றும், இதனைச் சீர்குலைக்க எவர் முனைந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். நாம் நம் நாட்டின் மதச்சார்பின்மை மாண்பினை உயர்த்திப்பிடித்தாக வேண்டும் என்றும் கூறினார்.

No comments: