Saturday, October 4, 2008

தொடரும் ஒரிசா வன்முறைகள் - ஆரூர் சங்கரி

சங்பரிவாரம், ஒரிசாவில் வி.எச்.பி.தலைவர் லட்சுமாணந்தா படுகொலைக்கு கிருஸ்துவ மக்களையே பொறுப்பாக்கி மீண்டும் வெறித் தாக்குதல்களை தனது ஆதரவு நவீன் பட்நாயக் ஆட்சியில் திட்டமிட்டே இப்போது நடத்திக்கொண்டிருக்கிறது. போக்குவரத்து -வணிக குடியிருப்பு வளாகங்களில் குண்டுகளை விதைத்து வெடிக்கச் செய்தல் போன்ற மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயல்களை இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளும் சந்தித்து வருகின்றன. ஆனால் ஒரிசா பயங்கரவாத வன்செயல்களின் தன்மையை ஆய்வு செய்யும் போது எளிதில் நம்பவியலாத திரைப்படக்காட்சிகளில் வருவதுபோன்ற இரக்கமற்ற வெறிச் செயல்களை காண முடியும். உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்து கொள்ளும் சிறுபான்மை பெண்களுக்கெதிரான இரக்கமற்ற கூட்டுக்கற்பழிப்பும், நிராதரவாக மாட்டிக் கொண்டவர்களை உயிரோடு தீயிட்டுக் கொளுத்தி படுகொலை செய்வதும் இச்சமகால உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அதிர்ச்சியளிக்கும் வெறிச் செயல்களாக உள்ளன. இக்காட்டுமிராண்டித்தனமான செயல்களை பட்டப் பகலில் பெரும் திரளான மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் இந்துத்துவா வெறிக்கூச்சலுடன் சங்பரிவாரங்கள் நடத்துகின்றன.
25.8.2008 அன்று புட்பாலி அனாதை குழந்தைகள் இல்லத்தில் இருந்த ரஜ்னி மஜ்கி என்ற 21 வயதுள்ள இளம் பெண்ணை சங்பரிவாரம் உயிரோடு தீயிட்டு கொளுத்திப் படுகொலை செய்ததும் அன்றே கந்தமால் மாவட்டத்தில் ஒரு கன்னிகாஸ்திரியை பகிரங்கமாக காவல்துறையினர் முன்பாகவே கூட்டுக் கற்பழிப்பு செய்ததும் சமீபத்திய பயங்கரவாரதச் செயல்களாகும்.

1998 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை சிறுபான்மை மக்கள் மீது குறிப்பாக கிருஸ்துவ மக்கள் மீது இந்துத்துவா குண்டர்கள் நடத்திய அட்டூழியங்கள் கணக்கிலங்கடாதவை.
கந்தமால் மாவட்டத்தில் நூற்றுக் கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. படுகொலைகள் மற்றும் சேதங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. குஜராத்தை அடுத்து ஒரிசா இரண்டாவது இந்து நிலமாகும். இங்கே என்ன நிகழ்ந்தாலும் அது இந்துத்துவாவிற்கு இசைவளிக்கும் அரசியல் நிகழ்வாகவே அமையும்” என ஒரிசா பஜ்ரங் தளத்தின் தலைவர் சுபாஷ் செளகான் 2003 இல் பேட்டியளித்திருந்தார்.
மீண்டும் ஒரு குஜராத்தை ஒரிசா மண்ணில் நிகழ்த்திக் காட்ட சங் பரிவாரம் சரியான நேரத்தை தேடிக் கொண்டிருக்கிறது.
தனது எதிர்கால கலகங்களுக்கு ஒரிசாவை ஏன் சங் பரிவாரம் தேர்ந்தெடுத்தது? முஸ்லீம்களுக்கு கற்பிக்க குஜராத் என்றால் கிருஸ்துவர்களுக்கு ஒரிசா என்பதும் ஒரு காரணமாகும். தனது மதவெறி கலகங்களுக்கு தோதாக அதே பகுதி மக்களைத் திரட்டுவதற்கான வறுமையும் அறியாமையும் ஒரிசா கிராமங்களில் இருப்பதுதான் மற்றொரு முக்கிய காரணமாகும். 2001 கணக்கெடுப்புபடி ஒரிசா மக்கட்தொகை சுமார் 3.7 கோடியாகும். இதில் மலைவாழ் பழங்குடி மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கை முறையே 22.1. மற்றும் 16.5 சதமாக ஒரிசாவில் இருக்கிறது. இந்திய சராசரி 9.66 என்பதிலிருந்து ஒப்பிட்டுப் பார்க்கும்போது நாட்டின் அதிக அளவு மலைவாழ் பழங்குடி மக்கள் ஒரிசாவில்தான் வசிக்கிறார்கள் என்பது தெரியவரும். ஒரிசா பழங்குடி மக்களில் பெரும்பாலர் கடுமையான வறுமையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மலைவாழ் பழங்குடி மக்கள் அதிகாக வாழும் 12 மாவட்டங்களில் 5 மாவட்டங்களில் நாட்டின் அதிகஅளவு வறுமை நிலவுகிறது. 10வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின் நிலவரப்படி வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஒரிசா மக்களின் எண்ணிக்கை 47.15 சதமாக இருக்கிறது. இது இந்திய சராசரியை விட இரட்டிப்பு மடங்காகும்.
ஒரிசா நிலப் பரப்பில் 59 சதம் வேளாண்மைக்கான நிலமாகும். இதில் 21 சதவீத வேளாண் நிலங்களே பாசன வசதி கொண்டிருக்கிறது. தேவையான நிலச் சீர்திருத்தங்கள் மேற்க்கொள்ளப்படவில்லை. எனவே மலைவாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களில் கிட்டத்தட்ட 81 சதமானோர் அறவே நிலமில்லாத‡கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். எனவே மோசமான தினப்படி அத்துக்கூலி முறை ஒரிசா கிராமங்களில் நிலவுகிறது. 10000 மக்களை பலிகொண்ட 1999 புயலில் கடுமையான சேதத்தையும் ஒரிசா சந்தித்தது. 2000 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை கடுமையான வறட்சியும், வெள்ளச்சேதம் மற்றும் இழப்பினையும் ஒரிசா மக்கள் மாறி மாறி சந்தித்தனர். இதனால் ஒரிசா மலைவாழ் ‡பழங்குடி ‡தாழ்த்தப்பட்ட மக்களது சுகாதார நிலமை பரிதாபத்திற்குரியதாகவும் இருக்கிறது, உலகமய நடவடிக்கைகளின் எதிர்விளைவுகள் மற்றும் தொழிலுறவு சார்ந்த அறிவுசார் சொத்துரிமை சட்ட மாற்றங்களால் மருந்துகளின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஏழைகள் பணக்காரர்களிடையிலான மருத்துவ பயன்பாட்டின் இடைவெளி ஒரிசாவில்அதிகரித்துள்ளது. என ஒரிசா அரசின் செய்தியே கூறுகிறது.
எழுத்தறிவு ஒரிசாவில் 63.09 சதமாகும். அதில் மலைவாழ் மக்களின் எழுத்தறிவு 37 சதமே. தமது வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கான அரசியல் வழி அறியமாட்டா அப்பாவி மக்களின் குடிசை வாசல்களுக்கே வந்த கிருஸ்துவ தொண்டூழியத்தின் ஆறுதல் வாசகங்கள் மற்றும் நிவாரணங்களில் மனம் மாறி மதமும் மாறினர் என்ற யதார்தத்தை ஒரிசாவின் கிராமங்களில் நாம் காண முடியும். “இப்பிரதேச நலன்கள் புறக்கணிக்கப்பட்டதால் வந்த தாழ்நிலையை தீவிரவாத வன்முறை சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன. ஒரிசா நிகழ்வுகளை சட்டம்‡ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்காமல் மலைவாழ்‡பழங்குடி மக்களின் யதார்தமான சமூக பொருளாதார நிலையில் அரசு அக்கரை செலுத்த வேண்டும். இதுவே அரசின் முதல் மற்றும் முதன்மை கடமையாகும். ஆயுதபடை அணிகளால் ஆட்சி செய்வது மட்டும் அங்கே அமைதியை கொண்டுவர முடியாது. பொருளாதார சுயசார்பு மற்றும் தரமான வாழ்விற்கு உபரி நிலங்கள் கண்டறியப்பட்டு நிலமற்ற மலைவாழ்‡தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவைகள் வழங்கப்படவேண்டும்” எனமலைவாழ் மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிக்Vன தேசிய ஆலோசனை கவுன்சிலின் அறிக்கை கூறுகிறது. முதலாவதாக:இந்துத்துவா சக்திகள் இம்மக்களின் வறுமை, அறியாமையை பயன்படுத்தி மூளைச சலவை செய்து தமது மண்ணின் சிறுபான்மை மக்களுக்கெதிரான கலவரங்களுக்கு அவர்களையே பயன்படுத்திக் கொள்கின்றன அல்லது அவர்களை வெறும் பார்வையாளர்களாக மாற்றுகின்றன. அம்மக்கள் வாழும் கிராமங்களை வன்முறை அச்சத்தால் நிரப்புவதன் மூலம் மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டுவரவும் முயற்சிகள் மேற்க்கொள்ளப்படுகின்றன.
இரண்டாவதாக, தங்களது பயங்கரவாத அரசியல் மேலாதிக்கத்தை இந்தியாவில் நிறுவுவதற்காக ஒரிசா மண்ணை இரண்டாவது சோதனை களமாக்கிப் பார்க்க சங்பரிவாரங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கந்தமால் மாவட்டத்தில் மட்டும் மலைவாழ்‡பழங்குடி மக்களின் எண்ணிக்கை 52 சதமாகவும் அதில் கிருஸ்துவர்கள் எண்ணிக்கை 16 சதமாகவும்இருக்கிறது. எனவேதான் கந்தமால் மாவட்டதையே மையமாக வைத்து சங்பரிவாரத்தினர் தங்கள் கலக வேலையை திட்டமிட்டுள்ளனர்.சங் பரிவாரத்தின் முக்கிய பிரிவுகளான ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தளம், வி.எச்.பி. ஆகிய மூன்றும் 35 அமைப்புகளை உருவாக்கி உள்ளன. இம்மூன்றிலும் சுமார் 1,80,000 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு பகுதியிலும் பெரும் கலவரங்களை உருவாக்க தொடர் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மத்திய‡மாநிலஅரசுகளின் வெற்று அறிக்கைகள்‡அனுதாபங்கள் ஒரிசா படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்திட முடியாது. முதலாவதாக சர்வதேசஅரங்கில் நாட்டிற்கு மேலும் தலைகுனிவு ஏற்படாமல் தடுக்க பிஜேபியுடனான உறவை நவீன்பட்நாய்க் துண்டித்துக் கொள்வதுடன், பஜ்ரங் தளம், விஎச்பி அமைப்புகளை உடனடியாக தடை செய்ய வேண்டும். இரண்டாவதாக மலைவாழ் -பழங்குடி மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களுக்கு கூடுதல் நிதியினை ஒதுக்கி அம்மக்கள் புதியதொழில்கள்- கல்வி வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை உடனே மேற்க் கொள்ள வேண்டும். மூன்றாவதாக மலைவாழ்‡பழங்குடி‡ தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்நிலை மேம்பாட்டிற்காக முழுமையான நிலச் சீர்திருத்தத்தை கொண்டுவந்து நிலமற்ற மலைவாழ்‡தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலமளிக்க வேண்டும். மூன்றாவதாக மதசார்பற்ற ஜனநாயக சக்திகளைக் கொண்ட அமைதிக்குழுக்களை ஒவ்வொரு பகுதியிலும் உருவாக்கி அம்மக்களின் வழிபாட்டு சுதந்திரத்தையும் அமைதியையும் உறுதி செய்யவேண்டும்.

No comments: