Monday, September 21, 2015

தூய்மை இந்தியா திட்டத்தின் தோல்வி





தூய்மை இந்தியா திட்டத்தின் தோல்வி

தில்லியில் டெங்கு நோய்க்கு ஆளாகிஏழு வயது சிறுவன் இறந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவனது பெற்றோர் களும் துயரார்ந்த முறையில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமானது, நம்நாட்டில் பொது சுகாதார அமைப்பு எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறதுஎன்பதனை மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய விதத்தில் நமக்கு நினைவூட்டி இருக்கிறது. ஒவ்வோராண்டும் 30 மில்லியன் (3 கோடி) மக்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்படுகிறார்கள். இவர்களில் 80 சதவீதத்தினருக்கு மருத்துவப் பாதுகாப்பு என்பதுகிடையாது. அதாவது மருத்துவமனை களில் படுக்கை வசதி இல்லை என்று கூறி இவர்களுக்கு மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்படுகிறது. நாட்டில் பொது சுகாதார நெருக்கடி எந்த அளவிற்கு வியாபித்திருக்கிறது என்பதை இது நன்கு சித்தரிக் கிறது.
சுகாதார நிதி வெட்டிக் குறைப்பு
டெங்கு தொற்றுநோய் தில்லியை அடிக்கடித் தாக்குகிறது. ஆனால் அரசாங் கமோ பொது சுகாதார அமைப்போ இதனை எதிர்கொள்ளக்கூடிய திராணியற்ற நிலை யிலேயே இருந்து வருகின்றன. நாட்டின் தலைநகராக உள்ள தில்லியிலேயே இந்த நிலைமை என்றால், இதர மாநிலங்களில் பொது சுகாதாரப் பாதுகாப்பு எந்த அள விற்கு இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ள முடியும். பொது சுகாதார அமைப்பு என்பது ஆட்சியாளர்களால் படிப்படியாக தரம் தாழ்த்தப்பட்டு வந்திருக்கிறது. அதற்கு ஒவ்வோ ராண்டும் ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகையும் குறைக்கப்பட்டு வந்துள்ளது. இன்றைக்குப் போதுமான அளவிற்கு நிதி இல்லாமல் அது திண்டாடுகிறது. நவீன தாராள மயக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு, அனைத்து அடிப்படைச் சேவைகளும் தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டபின் நிலைமைகள் மிகவும் மோசமாகி விட்டன. இதன் காரணமாகத்தான் உலகத்திலேயே தனியார் சுகாதாரப் பாதுகாப்பு என்பது இந்தியாவில் தற்சமயம் கோலோச்சிக் கொண்டிருக் கிறது. அரசுத்தரப்பில் பொது சுகாதார அமைப்பிற்கு ஒதுக்கப்படும் செலவினம் என்பது மிகவும் வெட்கக்கேடான முறை யில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9சதவிகிதமாக இருக்கிறது. மோடி அரசாங்கமும் சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டை சென்ற பட்ஜெட்டில் மேலும் வெட்டிக் குறைத்திருக்கிறது.
சிகிச்சையளிக்க மறுத்ததனியார் மருத்துவமனைகள்
ஏழே வயதான அவினாஷ் என்கிற சிறுவனும், ஒருசில நாட்களுக்கு முன்பு ஆறு வயது அமன் என்ற குழந்தையும் இறந்ததற்கான காரணம், இவர்களைத் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக சேர்த்துக் கொள்ள மறுத்ததேயாகும். அவினாஷ் வழக்கைப் பொறுத்தவரை, மிகவும் ஆபத் தான நிலையில் இருந்த அக்குழந்தையை ஐந்து தனியார் மருத்துவமனைகள் சிகிச்சையளிக்க மறுத்திருக்கின்றன. இது அனைத்து மருத்துவ மாண்புகளுக்கும் எதிரானதும், குற்றமுறு (கிரிமினல்) உதாசீன நடத்தையுமாகும். இந்த மருத்துவ மனைகளுக்கு எதிராக தில்லி அரசாங்கம் நடவடிக்கையைத் தொடங்கிட வேண்டும். கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் பல்வேறு மருத்துவமனைகளும் மற்றும் பல்வேறு தனியார் நர்சிங் ஹோம்களும் அரசாங்கத்திடமிருந்து இலவசமாக அல்லது மிக மலிவான விதத்தில் நிலம் கையகப்படுத்தல் மற்றும் சலுகைகள் உட்பட பல்வேறு வகைகளில் மிகப்பெரிய அளவில் மானியங்கள் பெற்று வருகின்றன. இவற் றுக்குப் பதிலாக அவை ஏழைகளுக்கு இலவசமாக படுக்கைகளை அளித்திட வேண்டும். ஆனால் இத்திட்டத்தை இவைகள் பல்வேறு வழிகளிலும் மீறிச் செயல்பட்டு வருகின்றன. ஏழை நோயாளிகளை ஏமாற்றிட உரிமம் பெற்றவை போன்றே அவை செயல்பட்டு வருகின்றன. ஒரு விரிவான பொது சுகாதார அமைப்புக்கு மாற்றாக தனியார் சுகாதார அமைப்பு எந்தக் காலத்திலுமே இருந்திடாது, இருக்கவும் முடியாது.
வெற்றுப் பிரச்சாரம்
நகரின் மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் துப்புரவற்ற நிலைதான் டெங்கு காய்ச்சலுக்கு காரணமாகும். இந்நோயைத் தடுத்திடப் பிரதானமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது நகரைச் சுத்தமாகவும், துப்புரவாகவும் வைத்திருப்பதாகும். கொசுஉற்பத்தி ஏற்படாது தடுத்திட, கொசு ஒழிப்பு மருந்தினை தொடர்ந்து தெளித் துக் கொண்டிருக்க வேண்டும். டெங்கு வியாதி அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியிருப்பது என்பது ஆட்சியாளர்கள் ஓராண்டுக்குமுன் மிகவும் தம்பட்டம் அடித்து மேற் கொண்ட தூய்மை இந்தியா பிரச்சாரம் வெற்றுப் பிரச்சாரமே என்பதை உலகிற்குத் தெள்ளத் தெளிவாகக் காட்டிவிட்டது. ஆட்சியாளர் களின் இத்திட்டத்தின் மூலமாக நாட்டின் தலைநகரான தில்லியிலேயே இவர்களால் சுத்தமான சூழலை உத்தரவாதப்படுத்த முடியவில்லை. மேலும், தில்லியில் உள்ளமாநகராட்சிகள் தங்கள் துப்புரவுத் தொழி லாளர்களுக்கு ஊதியம் வழங்காததால் அவர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டமும் இப்பிரச்சனைக்குக் கூடுத லாகக் காரணமாகி விட்டது.டெங்குக் காய்ச்சலை சமாளிக்க முடியாது அரசாங்கம் தோல்வி கண்டிருப்பதி லிருந்து என்ன முடிவுக்கு நாம் வரவேண்டி யிருக்கிறது என்றால், நாட்டில் பொது சுகாதார அமைப்புமுறையை விரிவாக்கி, வலுப்படுத்த வேண்டியதே உடனடியான அவசியத் தேவை என்பதாகும். அனைத்து மக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பு உரிமையை உத்தரவாதப்படுத்திட இது ஒன்றே வழியாகும்.
தமிழில்: ச.வீரமணி

Monday, September 14, 2015

ஸ்தாபனம்: ஓர் அறிமுகம் செம்பியன்








ஸ்தாபனம்: ஓர் அறிமுகம்
செம்பியன்

முதல் பதிப்பு: ஜூலை 1984
வெளியீடு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்,
59, சேசாசல முதலித் தெரு, சைதாப்பேட்டை,
சென்னை - 600 015.

முதல் பதிப்பிற்கான முன்னுரை

அரசு ஊழியர்கள் இன்றைய மாறிவரும் சூழ்நிலையில் புதிய திசைவழியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கப் பதாகையின் கீழ் அணிதிரளத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு அணி திரளும் ஊழியர்களிடையே சரியான ஸ்தாபனம் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குவது நமது கடமையாகும். அந்த வகையில் அரசு ஊழியர்மாத இதழில் தோழர் செம்பியன் அவர்கள் எழுதிய இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்கிறோம்.




ஸ்தாபனம் ஓர் அறிமுகம்
செம்பியன்

உழைப்பாளர்கள்: ஒரு ஸ்தாபனத்தின் கீழ்... அணிதிரள வேண்டியதும் மற்றப் பகுதி உழைப்பாளி மக்களை அணிதிரட்ட வேண்டியதும் ஊழியர்களுடைய வரலாற்றுக் கடமையாகும்.
உழைக்கின்ற தொழிலாளர்கள் அல்லது ஊழியர்கள் தாங்களாகவே விரும்பி ஒன்றிணைத்து அமைத்துக்கொள்ளும் அமைப்புத்தான் சங்கம் அல்லது தொழிற்சங்கம் அல்லது ஸ்தாபனமாகும்.
அன்றாடம் வெடித்துக்கிளம்பும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் உடனடிப் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் போராடித் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் கருவி மட்டுமா, சங்கம்?
இல்லை, இல்லை.
உழைக்கும் வர்க்கத்தினுடைய வர்க்க உணர்வை வளர்த்தெடுப்பதும்
அவர்கள் சமூக மாற்றத்திற்கான வரலாற்றுக் கடமையை, செயல் நோக்கத்தை கற்றுக்கொள்ளும் தொடக்கப்பள்ளிக் கூடமாகவும் இந்தத் தொழிற்சங்க ஸ்தாபனம் விளங்க வேண்டும்.
உடனடித் தேவைக்காகவும், கோரிக்கைகளுக்காகவும், நடத்தும் போராட்டங்கள் அனைத்தும் சமூக மாற்றத்துக்காக நடத்தப்படும் நெடிய போராட்டத்தின் ஒரு பகுதியே.
அவை ஓர் இயந்திரத்தின் உறுப்பு போலவும், ஒரு முழுமையில் அடங்கிய ஒரு பகுதி போலவும் ஆகும்.
அவ்வப்போது எழும் பிரச்சனைகளுக்காக மட்டும் பஞ்சப்படி, ஊதிய உயர்வு போன்ற உடனடிப் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டும் போராடினால் போதும் என்பவர்கள் இன்றைய ஏற்றத் தாழ்வுள்ள சமுதாயத்தை அப்படியே நிலைநிறுத்தும்  போக்கினராவர்.  அல்லது அந்தப் போக்கிற்குத் துணை போகின்றவராவர்.   அவர்கள் சுரண்டும் சமூக அமைப்பைச் சவக்குழிக்கு அனுப்பும் தொழிலாளர்களின் இயக்கத்திற்குள்ளேயே ஊடுருவி  இன்றைய சமுதாய அமைப்பை அப்படியே கட்டிக் காக்கும் முன்னணி ஆதரவாளர்களாகவும் செயல்படுகிறார்கள் என்பதுதான் நிஜமானதாகும்.
சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்து வரும் பல்வேறு கருத்துக்களுடைய உழைப்பாளர்களிடம் ஒருமித்த சிந்தனையை ஏற்படுத்தி, சிந்தனையில் ஒத்தக்கருத்தை உருவாக்குவது அவசியமானதாகும்.  இந்நிலைதான் ஒன்றிணைந்த செயல்பாடுகளுக்கு இட்டுச்செல்லும். செயலுக்கான முழுப் பயனையும் விளைவிக்கும். நடைமுறையில், தொழிற்சங்கத்தின் செயற்பாடு இம்முறையில்தான் அமைய வேண்டும்.
சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியே உடனடிக் கோரிக்கைக்கான போராட்டம்.
எனவே, வாழ்க்கைக்காகப் போராடுவதும், போராடுவதற்காக வாழ்வதும் தவிர்க்க இயலாதது. உழைக்கும் மக்களுடைய இயக்கங்களிலிருந்து ஒதுங்கி நிற்பதோ அன்றி செயல்பாடு களிலிருந்து பிரிந்து நிற்பதோ அரசு ஊழியர்களுக்கோ, அல்லது அவர்களுடைய ஸ்தாபனங்களுக்கோ ஏற்ற நடைமுறைகளல்ல.
அரசு ஊழியர்கள், கரத்தால் உழைக்கும் மக்களோடிணைந்த கருத்தால் உழைக்கும் ஒரு பிரிவினர்தான்.
அரசு ஊழியர்களின் விடுதலை என்பதும் உழைக்கும் மக்களுடைய விடுதலையோடு பின்னிப்பிணைந்து ஒன்றிணைந்தது தான்.  போராட்ட வரலாறுகளின் போதனையே இதுதான். அசைவில்லாது இருக்கின்ற அரசு ஊழியர் இயக்கங்களின் அசமந்த நிலைமையைப் போக்கியாக வேண்டும். அந்த நோக்கத்துடனேயே தொழிற்சங்க ஸ்தாபனத்தின் அமைப்புபற்றிய ஓர் ஆரோக்கியமான விவாதத்தைத் தொடங்கி வைப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தொழிற்சங்கத்திற்கு ஒரு வரலாற்றுக் கடமையுண்டு. அந்தக் கடமையை நிறைவேற்ற திறமைவாய்ந்த தலைமை தேவை. உணர்வுள்ள போர்க்குணமிக்க தொண்டர்கள் தேவை. முழுமையான ஜனநாயக ரீதியான நடைமுறை தேவை.
போராட்டத்தின் போது தான்
ஒரு தோழன்
மற்றொரு தோழனுக்கு
இனியவனாகிறான்.
என்ற புகழ்பெற்ற கவிதை வரியுண்டு. எனவே, எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும், அவைகளை உறுதியுடனும், நிதானமாகவும், விடாமுயற்சியோடும் தியாக மனப்பான்மையோடும் வெற்றியைப் பறித்தெடுக்க வேண்டும்.
சங்கத் தலைமை தமது அனுபவங்களிலிருந்து திரட்டியவைகளை கற்றறிந்தவைகளை ஊழியர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் போதிப்பது அவசியமாகும்.
ஊழியர்களுடைய பிரச்சனைகள் - குறைகள் - தேவைகள் ஆகிய இவற்றை உடனுக்குடன் புரிந்துகொண்டு தீர்க்க, செயல்பட வேண்டும். ஊழியர்களுடைய உணர்வின் ஆழத்தையும், அனுபவங்களையும், சரியாகப் புரிந்துகொள்ளுகின்ற தலைமை வேண்டும். குறிப்பாக ஊழியர்களிடமிருந்து கற்றுக்கொண்டு ஊழியர்களுக்குப் போதிக்க வேண்டும்.
சமுதாயத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எவ்வாறு ஏற்படுகிறது, எந்த வடிவத்தில் ஏற்படுகிறது, ஏற்படும் சம்பவங்கள் எந்தத் திசைவழியில் செல்கின்றது ஆகியவற்றைத் தொலைநோக்கோடு பார்க்க வேண்டும். சூழ்நிலைக்கேற்பத் தேவையான மாற்றங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்குரிய தகுதிகள் அனைத்தும் தலைமைக்கு வேண்டும்.
மீனுக்கும் தண்ணீருக்கும் இடையே பிரிக்க முடியாத உறவு இருப்பதுபோல, தலைமைக்கும் ஊழியர்களுக்கும் இடையே பிரிக்க முடியாத இணைப்பு இருக்க வேண்டும்
இந்த இணைப்புதான்,
இந்த நம்பிக்கைதான்,
இ ந்த உறவுதான
தொய்வில்லா பணிகளை
நிறைவேற்ற உதவும்.  
ஜனநாயகம்
 தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களை அபிப்பிராயங்களை வெளியிடுவதற்குரிய முழு வாய்ப்பைத் தருவதுதான் ஸ்தாபனத்தின் ஆரோக்கியமான தன்மையாகும். இதுவே இயக்கத்தின் உள்ளே ஜனநாயகத்தைப் பரிபூரணமாகப் பேணுவதாகும்.
இந்த வாய்ப்பை உறுப்பினர்களுக்கு அளிக்க மறுத்தல் என்பது இயக்கத்தின் ஆரோக்கியத்தை சிதைப்பதாகும்.
இந்த உள்இயக்க ஜனநாயகமே சக்தி வாய்ந்த போர்க்குணமிக்கத் தலைமையை உருவாக்கும்.
ஜனநாயகம் தொழிற்சங்க இயக்கத்தின் அடிப்படை அஸ்திவாரமாகும்.
கட்டுப்பாடு என்பது உறுப்பினர்களின் உணர்வுப்பூர்வமான கட்டுப்பாடேயாகும். அதுதான் ஓர் அமைப்பின் கட்டுப்பாட்டை வளர்ப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் தேவையானதாகும்.
ஊழியர்களின் சிந்தனையைச் செயல்பாட்டோடு இணைப்பதன் மூலம் உருவாகின்ற கட்டுப்பாடே உண்மையான கட்டுப்பாடாகும்.
ஓர் அமைப்பில் அங்கம் பெறும் அனைத்துக் குழுக்களும் சமமான உரிமை பெற்றதாகும். அதிகாரத்திலும் சரி, மற்றைய நிலையிலும் சரி, ஒரு குழு, மற்றொரு குழுவிற்குக் குறைந்ததுமில்லை, தாழ்ந்ததுமல்ல.
தலைமை ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் தேர்ந்தெடுக்கப் படுவதாகும். ஒவ்வொரு குறிப்பிட்ட கால வரையறைக்குள்ளும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.  
தலைமையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அனைத்து உறுப்பினர்களுக்கும் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.  பெருவாரியான உறுப்பினர்களின் முடிவே தேர்தல் முடிவில் பிரதிபலிக்க வேண்டும்.
தலைமை என்பது ஒரு தனிப்பட்ட நபரல்ல. உறுப்பினர்களிடமிருந்து உருவாகும் கூட்டுக் குழுவாகும். இந்தக் கூட்டுக்குழுவே தொழிற்சங்க இயக்க ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகும்.
பெருவாரியான உறுப்பினர்களின் முடிவைப் புறக்கணிப்பதோ அலலது அதற்கு மறைமுகமாகக் குந்தகம் விளைவிப்பதோ - ஜீவனுள்ளஉடலில் அசைவற்றத் தன்மையை உருவாக்
குவதற்கொப்பாகும். தேர்தலில் நிற்பதற்கும் மற்றவரகளைத் தேர்ந்தெடுப்பதற்குரிய உரிமையை வெளிப்படையாகவே அளித்தல் வேண்டும்.
உள் இயக்க ஜனநாயகத்தின் மூலமே சாதாரண உறுப்பினர்களையும், உறுப்பினர் அல்லாதவர்களையும் சங்கத்தினுடைய அன்றாட நடவடிக்கைகளிலும், போராட்டங்களிலும் ஈடுபடுத்த முடியும். சங்கத்தின் கொள்கையை உருவாக்கும் விவாதங்களில் ஈடுபடுத்துவதும் முடிவுகளுக்கு வடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபடுத்துவதும் உள் இயக்க ஜனநாயகத்தின் மூலமே முடியும்.
உள் இயக்க ஜனநாயகத்தின் மூலமாக ஊழியர்களுக்கு வர்க்கப் பார்வையையும் பெற வைக்க முடியும்.
இந்த உள் இயக்க ஜனநாயகமிலலை என்றால் தலைமைக்கும் ஊழியர்களுக்கும் இடையில் உயிரோட்டமுள்ள இணைப்பு இல்லை என்றுதான் அர்த்தம்.
விமர்சனமும் சுய விமர்சனமும்
விமர்சனமும், சுய விமர்சனமும் ஓர் இயக்கத்தின் ரத்தமும் சதையும் போன்றதாகும்.
சங்கத்தினுடைய ஜனநாயக மரபுகளைப் பேணிப் பாதுகாப்பதற்கான மாபெரும் வாய்ப்பைத் தருவது விமர்சனமாகும். இதுவே சங்கத்தில் ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்துவதற்குரிய பாதுகாப்பையும் வழங்கும்.
சங்கத்தில் உள்ள தலைவர்களோ அல்லது ஏனையோரோ செய்யும் தவறுகளை, பிழைகளை, சறுக்கல்களை வெளிக்கொணரும் வாசல்களைத் திறந்துவிடுவது விமர்சனமும் சுய விமர்சனமுமேயாகும்.
தவறுகளை, பிழைகளை, சறுக்கல்களைக் களையவும், எதிர்காலத்தில் இப்போக்குகள் ஏற்படுத்துவதைத் தடுக்கும் சக்தியாகவும் விமர்சனமும், சுய விமர்சனமும் அமைகின்றது.
சுய விமர்சனமும், விமர்சனமும் ஆகிய நெறிமுறைகளில் சங்கம் செயல்படாவிட்டால், செயல்திறன், மிக்கவர்கள் பங்கேற்கும் ஸ்தாபனமானாலும் கூட அது அழிவுப் பாதையை நோக்கித்தான் செல்லும்.
தவறுகளையும், குறைபாடுகளையும் விமர்சனத்தின் மூலமும், சுய விமர்சனத்தின் மூலமும் கலையாமல், நீண்ட நாட்களுக்கு அனுமதித்துவிட்டால் அத்தவறுகளும், குறைபாடுகளுமே நடைமுறையாகிவிடக்கூடிய அபாயம் நேரும். இந்தக் கால கட்டத்தில் அந்தத் தவறுகளையும் குறைகளையும் களைந்து சரி செய்ய முயலும்போது, எதிர்பாராத சிரமத்தையும் மிகுந்த கடினத்தையுமே அது உருவாக்கும்.
ஒரு ஸ்தாபனத்தில் சகல மட்டங்களிலும் செய்யப்படும் சரியான, ஆரோக்கியமான விமர்சனமே அந்த ஸ்தாபனத்தினுடைய செழுமையான வளர்ச்சிக்கு அடையாளமாகும்.
பொதுவாக இன்றைய நிலையில் பல்வேறு ஸ்தாபனங்களில் உள்ள தலைவர்கள் மத்தியிலும், ஊழியர்கள் மத்தியிலுமே ஒரு தவறான கருத்தோட்டம் நிலவுகிறது. தாங்கள் சரியானதையே செய்யும்போது விமர்சனமும், சுய விமர்சனமும் தேவையே இல்லை எனும் கருத்தோட்டம்தான் அது.
மேலும் ஒரு சாராரிடத்தில் தலைமைதான் விமர்சனம் செய்யவும், தவறுகளை நீக்கவும் மற்றவர்களை மேற்பார்வை செய்யவுமான தகுதி படைத்தது என்ற கண்ணோட்டத்தில் ஆழ்ந்து போயிருக்கின்றனர்.
இந்த இருவித கருத்தோட்டங்களுமே முற்ற முழுக்கத் தவறானதாகும்.
ஊழியர்களிடமும் மற்றவர்களிடமும் இத்தகைய கருத்தோட்டங்கள் நீடிக்குமானால் ஸ்தாபனத்தை விரிவான அளவில் கட்டி வளர்த்தெடுப்பதற்கு இயலாது.
விமர்சனத்தின் பயன் - இலட்சியம் - நோக்கம் - ஆக அனைத்துமே தவறுகளைத் திருத்தவும், உணர்வுமட்டத்தை மேம்படுத்தவும் அமைப்பில் ஒற்றுமையை உருவாக்குவதுமேயாகும்.
விமர்சனத்தின் மேன்மையைச் சிறப்பை வலியுறுத்தும்போது ஒன்றை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
விமர்சனத்தின் மூலமே குறைகள் அனைத்தும் களையப்பட்டவிடும் என்றோ அல்லது தவறுகள் ஒரே நாளில் சரிசெய்யப்பட் விடும் என்றோ கூற முடியாது.
விமர்சனம் என்பது ஸ்தாபன வழிமுறையின் ஓர் அங்கம் மட்டுமேயாகும்.
ஒருவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதோ அல்லது வேறு ஒருவரின் செயல்திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோ விமர்சனத்தின் இலட்சியமல்ல.
விமர்சனத்தால் ஒரு ஸ்தாபனம் பலவீனம் அடைந்துவிடாது. மாறாக ஒற்றுமையை வளர்க்கவும் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தவும், ஜனநாயக அடித்தளத்தை வலுவூட்டவும் விமர்சனத்தால் முடியும்.
தலைமையின் கடமை
தலைமைஎன்று குறிப்பிடப்படுகின்ற ஸ்தானம் ஸ்தாபனத்தின் உயர்நிலையில் உள்ள முக்கிய உறுப்பாகும்.
சரியான தீர்மானங்களைத் தீட்டுவது மட்டுமல்ல, அவற்றை செயல்மூலம் அமல்படுத்துவதும் தலைமையின் கடமை ஆகும்.
சரியான தீர்மானம் நிறைவேற்றல், அவற்றைச் சரியாக அமல்படுத்துதல், கூட சகல பகுதிகளிலும் கூர்மையான முறையில் அறிவை வளர்த்தெடுக்க வேண்டும்.
சரியான தீர்மானங்களை நிறைவேற்றுகிற சில தலைமை’ - அவற்றை நடைமுறைப்படுத்துவதில் திறமையின்றி இருக்கின்றன.
சரியான தீர்மானங்களை எப்படி உருவாக்குவது?
ஆழமான தத்துவார்தத அறிவும் நடைமுறை அனுபவமும் சரியான தீர்மானத்தை உருவாக்கத் துணை புரியும்.
அவ்வாறு அனுபவமின்றி தீட்டப்படும் தீர்மானங்கள் எதிர்பார்க்கும் பலனை அளிக்காது.
தத்துவார்த்த அறிவோடும், நடைமுறை அனுபவத்தோடும், தீட்டப்படும் தீர்மானங்களில்தான் லட்சியம் தெளிவாக வெளிச்சத்தைப் பாய்ச்சும். எதிரியைச் சரியாக குறி வைக்கும், எதிரியை எப்படித் தாக்க வேண்டும் என்பதைச் சரியாக அறிவுறுத்தும்.
எதிரியைத் தாக்குவதற்குரிய சக்தியையும், ஊழியர்களையும் எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பதை விளங்க வைக்கும் சரியான தீர்மானங்களை நிறைவேற்றுகிறோம். சரி அவைகளை நடைமுறைப்படுத்த வேண்டும், மிகச்சரி. ஆனாலும் அவற்றைக் குறித்த நேரத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். இது மிக முக்கியமானது.
இவ்வளர்ச்சி முறை இல்லை என்றால், தீர்மானங்கள் வெற்றியை ஈட்டாது.
மக்களையும், ஊழியர்களையும் பயில வேண்டும், அதோடு கூடவே எதிரிகளையும் பயில வேண்டும். எதிரிகளைப் பற்றிய கவனமான தேர்ச்சிதான் - ஒரு சூழ்நிலையில் எதிரிகளின் பிளவு, அவநம்பிக்கை, பலம், பலவீனம் ஆகியவற்றை உய்த்துணர்ந்து வெற்றிகளைப் பெற முடியும்.
ஓர் இயக்கத்தின் பாதை என்பது நேரான அல்லது எளிமையான தன்மை கொண்டதல்ல, அது கரடுமுரடானது, தடைகள் பல நிறைந்தது. இவைகளை உணர்ந்து, சரியாக வழி நடத்த, தொலை நோக்கும் மன உரமும் கொண்ட தலைமையே தேவை.
வெற்றி என்பது தானாகவே கிடைப்பதல்ல. அதை போராட்டங்களின் மூலம்தான் பறித்தெடுக்க முடியும்.
சரியான, திறமையான தலைமையே, சரியான இடத்தில்,  சரியான நேரத்தில், சரியான கோஷத்தை முன்வைக்கும். தந்திரங்களைச் சரியாகப் பயின்று முழுத் தேர்ச்சியும் பெறும். தந்திர ரீதியான மாற்றங்களை சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு புரிந்துகொள்ளும்.
பலவிதமான தந்திரங்களைக் கையாற்வதற்கு, முன்னுணர்வு பெற்றிருக்க வேண்டும்.
ஒரு முடிவை,
அல்லது ஒரு நடவடிக்கையை,
எடுத்த பின்னர் அது தவறென தெரியும்பட்சத்தில், அப்போதே திருத்திக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு,
ஒரு முடிவை தவறாக எடுத்ததற்குரிய காரண, காரியங்களையும், சூழ்நிலைகளையும் ஆராய்ந்து மீண்டும் அவ்விதத் தவறுகள் ஏற்படாத வண்ணம் முன்னுணர்வோடு தடுக்க வேண்டும். இத்தகைய பண்புகளும் சரியான தலைமைக்குத் தேவையானதாகும்.
சரியாக பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்கள்
ஊழியர்கள், அல்லது தொண்டர்கள், தலைமையையும், சாதாரண ஊழியர்களையும் இணைக்கின்ற பாலம் போன்றவர்கள்.
சரியான தீர்மானங்களை நிறைவேற்றவும், அவற்றை அமல்படுத்தவும், அவ்வாறு அமல்படுத்தும்போது ஏற்படும் முழுப் பயன்களும் ஊழியர்களினாலேயே  ஏற்படுத்த முடியும்.
வெற்றியும் தோல்வியும் இந்த ஊழியர்களையே சார்ந்திருக்கும். எனவே, ஊழியர்கள்பால் தலைமைக்கும் தீவிரமான கவனம் வேண்டும்.
தலைமை ஊழியர்களிடத்தில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்கள் உண்டு.
ஏனென்றால், அமைப்பின் மிகச்சிறந்த போர்க்கருவிகள் ஊழியர்கள்.
ஊழியர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் நேரடியான பிணைப்பு உண்டு. பிரச்சனைகளில் மூழ்கி எழுந்து தீர்க்கப் போராடிக் கொண்டிருப்பவர்கள் ஊழியர்கள்தான். எனவே, ஊழியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவைகள் பலவுண்டு.
ஊழியர்கள் தலைமையிடமிருந்து சரியான வழிகாட்டுதலைக் கற்றுக்கொள்ள வேண்டும். உறுப்பினர்களிடமிருந்து சரியான அனுபவங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஊழியர்கள் தங்களுக்கும், சாதாரண உறுப்பினர்களுக்கும் உள்ள உறவை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும்.
உறுப்பினர்களின் விருப்பு, வெறுப்புக்களை உணர்ந்து அவர்களுடைய அபிப்ராயங்களுக்கு உரிய மதிப்பைத் தருதல் வேண்டும்.
ஓர் அமைப்பின் விலைமதிக்க முடியாத செல்வங்கள்தான் சரியானமுறையில் பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்கள்.
தலைமையால் ஊழியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஊழியர்களின் வளர்ச்சிக்குத் தலைமை உறுதுணையாக இருக்க வேண்டும்.
ஊழியர்கள்மீது தலைமை கவனமில்லாதிருந்தால் ஊழியர்களிடையே முழு ஆற்றலோடு செயல்படாத நிலையும்
சுறுசுறுப்பற்ற நிலையும் ஏற்படும்.
ஊழியர்களின் தனிப்பட்ட பழக்க வழக்கங்களையும், ஒழுக்கங்களையும், நடவடிக்கைகளையும் விழிப்போடு கற்றுணர்தல் வேண்டும்.
பிரச்சனைகளுக்கேற்ற மாதிரி சரியான ஊழியர்களை சரியான இடத்தில் அமர்த்த வேண்டும்.
தலைமைக்கும், ஊழியர்களுக்கும் இடையே உள்ள உறவில் தொந்திரவு அல்லது இடைஞ்சல் நிலையை தலைமை தருவதாக உள்ளது என்ற எண்ணம் ஏற்படும் நிலையைக்கூட தவிர்த்தல் வேண்டும்.
ஊழியர்களின் குறைகள், தவறுகளை அனுதாபத்தோடு தலைமை சுட்டிக்காட்ட வேண்டும்.
இத்தகைய ஊழியர்களிடமிருந்துதான் எதிர்காலத்தில தலைவர்கள் வருவார்கள்.
ஏராளமான புதிய புதிய இளந் தலைவர்களை உருவாக்குகின்ற தலைமையே தலைமைக்குரிய முழுக் கடமையையும் ஆற்றியவர்களாவார்கள்.
தன்னால் உருவாக்கப்பட்ட இளந் தலைமை, சங்கச் செயல்பாடுகளில் தலைமையையும் விஞ்சி வேகத்தோடு செயல்படும்போதுதான தலைமைக்கு மிகுந்த பெருமிதத்தைத் தோற்றுவிக்கம்.
குறுகிய மனப்பான்மை உள்ள தலைமையே இளந்தலைமையின் வளர்ச்சிப் பாதைக்குத் தடையாக இருக்கும்.
குறுகிய, கடினமானத் தன்மையுடைய தலைமையே தனிநபர் வழிபாட்டுப் போக்குக்கும், அதிகார வர்க்க மனோபாவத்திற்கும் எடுத்துக்காட்டாகும்.
ஊழியர்களின் தனித் திறமைகளைக் கண்டு பிடித்து, மேலும் மேலும் அவர்களுடைய திறமைகளை வளர்க்க வேண்டும்.
ஊழியர்களின் குறைகளைத் தீர்த்து வைத்து அவர்களைச் சரியான திசை வழியை நோக்கி, தலைமையானது செலுத்துதல் வேண்டும்.
ஊழியர்களின் தத்துவார்த்த அறிவையும் அவர்களின் உணர்வு மட்டத்தையும் மேம்படுத்த உதவி புரியவேண்டும்.
ஊழியர்களின் தனிப்பட்ட கஷ்டங்களையும் தலைமை புரிந்து கொள்ள வேண்டும்.
பற்றுறுதி, நேர்மை, துணிவு, பொறுப்புணர்வு, கட்டுப்பாடு, அறியும் ஆர்வம், உறுப்பினர்களோடு பிணைப்பு இவைகளே ஓர் ஊழியரின் சிறந்த குணங்களாகும்.
முடிவுகளும் அமல்படுத்துதலும்
ஒரு முடிவை எடுக்கும்போது ஊழியர்களின் உணர்வை தலைமை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த கால அனுபவங்கள், தீர்மானங்களை நிறைவேற்ற உதவியாகவும் வழிகாட்டியாகவும் அமைய வேண்டும்.
முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் அமல்படுத்த, பல்வேறு மட்டங்களிலுமுள்ள தலைமைகளுக்குரிய பொறுப்புக்களையும் நிர்ணயிக்க வேண்டும்.
அமைப்பின் சகல மட்டங்களிலும், எடுத்த முடிவைக் கொண்டு செல்வதற்குரிய திட்டங்களை வகுக்க வேண்டும்.
திட்டங்களில் பாதி முடிவுகள் வெற்றி பெறாது.
எல்லா மட்டத்திலும் நிரந்தரமான பிணைப்பும், நிரந்தரமான ஆய்வும், நிரந்தரமான கூட்டுப் பொறுப்பும் முடிவுகளை அமல்படுத்த உறுதி செய்யப்பட வேண்டும்.
பற்றாக்குறை, சரியான கணக்குச் சமர்ப்பிக்காமல் இருத்தல், தணிக்கைக்கு ஒப்பாமை, செலவு பற்றிய விளக்கம் அளிக்க தயார் இல்லாத நிலை - ஆகிய இந்நிலைகள் ஸ்தாபனத்தில் ஆரோக்கியமற்ற நிலைமைகளைத் தோற்றுவிக்கிறது.
ஸ்தாபனத்தினுள் விரிவான தணிக்கைக்கு உட்படுவது என்பது ஸ்தாபனத்தின் ஜனநாயக அஸ்திவாரத்தை உறுதிப்படுத்துவதாகும்.
தணிக்கைமுறை என்பது அமைப்பிற்குள்ளேயே இருக்கின்ற வர்களாலேயே செய்யப்படுதல் அவசியமாகும்.
வெளியிலுள்ள சார்ட்டர்டு அக்கௌண்ட்டண்ட்தணிக்கையாளர்கள் ஸ்தாபனத்தின் வரவு செலவுக் கணக்கை சரி பார்ப்பது என்பது வவுச்சர்களைசரிபார்த்தலாக இருக்குமே தவிர, ஸ்தாபனத்தின் செலவு முறையில் தேவையான செலவா? தேவையற்ற செலவா? சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செலவு செய்யப்பட்டுள்ளதா? என்பதையெல்லாம் அவர்களால் பரிசீலனை செய்ய இயலாது. ஆகவே, தணிக்கையென்பது இயக்கத்திலுள்ள உறுப்பினர்களாலேயே செய்யப்பெறுதல் வேண்டும்.
ஸ்தாபனத்தின் உள்ளே இருக்கும் உறுப்பினர்களே தணிக்கை செய்யும்போது செலவைப்பற்றிய முழுச் சித்திரத்தையும் உணர்ந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனால் இயக்கத்தினுடைய தேவைகளை ஊழியர்கள் மனப்பூர்வமாக நிறைவேற்றுவார்கள். பற்றாக்குறை என்பது இருக்காது. இந்த முறையை கடைப்பிடித்த ஸ்தாபனங்களின் கடந்தகால அனுபவமும் இதுதான்.
விவாதமும் மதிப்பிடுதலும்
ஒவ்வொரு முடிவையும், அமல்படுத்திய பிறகு விரிவான விவாதமும் மதிப்பீடும் தேவை.
அமலாக்கப்பட்டத் தீர்மானங்களைப் பற்றி ஒட்டுமொத்தமான மதிப்பீடும் கணிப்பும் முதலில் தலைமை செய்ய வேண்டும். இதை ஒவ்வொரு மட்டத்திலும் செய்ய வேண்டும். தீர்மானங்களைப் பற்றியும், மதிப்பீடு பற்றியும், ஸ்தாபனத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள குழுக்கள் விவாதம் செய்ய வேண்டும். இதிலிருந்தே சரியான கணிப்பை செய்துள்ளோமா என்பதைக் கணிக்க வேண்டும். தலைமையின் அனுபவமும், ஊழியர்களின் அனுபவமும் இதன் மூலமே இணைக்கப்பட முடியும். சரியான பாடங்களைப் பெற முடியும்.
விரிவான விவாதம், தனிப்பட்ட முயற்சிகள் - கூட்டு முயற்சிகள், உறுப்பினர்களுடைய பிரதிபலிப்புகள் அமல்படுத்துவதிலுள்ள குறைபாடுகள் - ஆகியவற்றை மதிப்பிட்டுப் பதிவு செய்ய வேண்டும்.
தவறு நடந்திருந்தால், சரியான விளக்கம் கொடுத்து, திருத்த வேண்டும்.
இப்படிச் செய்வதன் மூலமே ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு வழிவகுக்க முடியும்.
கூட்டு முயற்சியும், உறுப்பினர்களின் ஒட்டுமொத்தமான முயற்சியும், ஒட்டுமொத்த உணர்வு மட்டங்களையும் உயர்த்தி, அடிப்படை இலட்சியங்கள் நிறைவேற்றுவதற்குரிய தகுதி வாய்ந்த அமைப்பை உருவாக்க முடியும். 
---