Thursday, August 13, 2015

கருத்துரிமையின் கழுத்தை நெறிப்பதா?




சீத்தாராம் யெச்சூரி

மக்களை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரில் தேவையற்ற கட்டுப் பாடுகளை திணித்தல், சீருடை விதிகளைத் திணித்தல், உணவுக் கட்டுப்பாடுகளை வலியுறுத்துதல், (தங் களிடம் மிகவும் அறிதாக இருக்கின்ற நகைச்சுவை உணர்வுப் பற்றாக்குறையை வெளிப்படுத்தும் விதத்தில்) சமூகவலைத்தளங்களின் தகவல்களுக்குக் கட்டுப்பாடு விதித்தல் மற்றும் இணையதளங்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தடை விதித்திருத்தல் ஆகியவற்றுடன், தற்போது இந்த அரசு பிரதானமான தொலைக்காட்சி அலைவரிசை நிறு வனங்களுக்கு, கேபிள் டெலிவிஷன் நெட் வொர்க் விதிகளின்கீழ் காரணம் கோரும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அரசாங்கம், இந்தத் தொலைக்காட்சி அலைவரிசை நிறுவனங்களிடம், “குடி யரசுத் தலைவர் மற்றும் நீதித்துறையின் நேர்மைக்கு எதிராக அவதூறுகளை அள்ளிவீசிய’’தற்காக ஏன் நட வடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்டி ருக்கிறது.
யாகூப் மேமன் தூக்குதண்டனை தொடர்பாக கருணை மனுக்கள் உச்சநீதிமன்றம் மற்றும் குடியரசுத் தலைவரிடம் இருந்ததன் பேரில் தொலைக் காட்சிகளில் விவாதங்கள் நடைபெற்றன. உலகின் 97 நாடுகள் மரண தண்ட னையை ஒழித்துக்கட்டியுள்ள நிலை யில் உலக அளவில் பொது விவாதம் மிகவும் உணர்ச்சிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சூழலில் அதன் ஒரு பகுதியாகவே இதுவும் நடை பெற்றது.நாட்டில் நடைபெறும் இத்தகைய பொது விவாதங்களைத் தடைசெய்வது என்பது கருத்துக்கூறும் உரிமை மீதான தாக்குதலுக்கு நிகரானதாகும். அதுவும், மோடி அரசு மதச்சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படுகிறது என்ற கருத்து மேலோங்கியுள்ள நிலையில் இதனைச் செய்திருப்பது மேலும் மோசமான ஒன்றாகும்.
பயங்கரவாதத்திற்கு எதிரானபோர் என்ற பெயரில் ஒரு மதச் சிறு பான்மையினருக்கு எதிராக வெறுப்பைக் கக்கும் வெறிபிடித்த ஆர்எஸ்எஸ், இந்துத்துவா நிகழ்ச்சிநிரலையே இது பிரதிபலிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவது என்கிற பிரச்சனையைப் பொறுத்தவரை, சமரசத்திற்கு இட மிருக்க முடியாது. இந்தியாவில் பயங்கரவாதம் எவ்விதமான மதத்தையோ, பிராந்தியத்தையோ அல்லது இதர எல்லைகளையோ கொண்டிருக்க வில்லை.மகாத்மா காந்தி இந்து வெறியர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டில் பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தி சீக்கியத் தீவிரவாதிகளாலும், ராஜீவ் காந்தி எல்டிடிஇ-இனராலும் படுகொலை செய்யப் பட்டார்கள். பயங்கரவாதம் தொடர்பாகத் தற்போது நடைபெற்று வரும் புலன்விசாரணைகளும் இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளில் முஸ்லிம், இந்துத்துவா மற்றும் இதரர்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவது அவசரத் தேவை என்பதிலும் மாறுபட்ட கருத்து கிடையாது.
உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும் ராஜ்யக்கொள்கை மற்றும் அயல்துறைக் கொள்கை என்பவை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களுக்கு அச்சமற்ற முறையில் வாழ்வதற் குரியவிதத்தில் பாதுகாப்பான சூழ்நிலை யை ஏற்படுத்துதல் மற்றும் அவர்களின் வளமான வாழ்க்கைக்கான திட்டங்களை மேற்கொள்ளுதல் என்பவை களாகும். இவற்றிற்கு ஆட்சியாளர்கள் அதிகபட்ச முன்னுரிமை அளித்திட வேண் டும். இதுவே உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ள பொதுவான வழிகாட்டுதல் களாகும். இதற்கு நாட்டின் உளவு அமைப்புகள் மிகவும் விழிப்புடன் தங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இவற்றின் வலுவைக் குறைத்திடக்கூடாது. இவற்றின் ஒற்றறியும் திறனை பல்வேறு அமைப்புகளின்மூலம் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
ஆனால், இவற்றை மத வெறியின் அடிப்படையில் பழம்பெருமை பேசிக்கொண்டு குறுகிய நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் “56 அங்குல சர்க் காரால்’’ செய்ய முடியாது.இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சமீபத்தில், இந்தியா தன் னுடைய வல்லமையை இழந்துள்ளது. நாம் அதனை அதிகரிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். முட்டாள்தனமான பழம்பெருமை பேசுவது எதிர்விளைவுகளை மட்டுமே கொண்டு வரும். உண்மையில், அது சர்வதேச அளவில் மிகவும் பெருமைக்குரிய நாடாகப் போற்றிப் பாராட்டப்பட்டு வந்த, இந்தியாவை, பாகிஸ்தானுடன் போட்டிபோடக்கூடிய ஒரு நாடாக தரம் தாழ்த்திவிட்டது. இவ்வாறு இந்தியாவை பாகிஸ் தானோடு ஒப்பிட்டுப்பார்ப்பது மற்றொரு முக்கியமான காரணத்திற்காகவும் தீங்கு பயக்கும் ஒன்றாகும். இந்தியக் குடியரசின் முத்திரைச் சின்னமே, நம் அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதுபோல, அனைத்துப் பிரஜைகளுக்கும் சாதி, மத பேதமின்றி பாலின வேறுபாடின்றி சமத்துவம்அளிப்பதாகும்.
சுதந்திரம் பெற்று அறுபதாண்டுகள் கழிந்த பின்னரும், இந்த உறுதிமொழி, பொருளாதார நிலையிலோ அல்லது சமூக விவகாரங்களிலோ இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை என்பதைப் பார்க்கிறோம். இவ்வாறு மக்களுக்கு அளிக்கப்பட்ட உறுதி மொழி விரிவான அளவிற்கு ஆட்சியாளர் களால் மறுக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய விதத் திலும், நம்பிக்கை யூட்டக்கூடிய விதத்திலும் அமைய வேண் டியது நீதித்துறையே யாகும். நீதித்துறை குறித்துஇப்போதும் பலர் விமர்சன ரீதியாக பல் வேறு கருத்துக்களைக் கூறியபோதிலும், அரசமைப்புச் சட்டத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் நீதித் துறையே இன்றைக்கும் சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து, ஒரு தலைப்பட்சமாக நிற்காமல், நீதி வழங்கும் என்று நம்பப்படுகிறது. நம் நாட்டில் நீதி வழங்கும் அமைப்பின்மீது சந்தேகத்தின் நிழல்கள் வீழும்போது, நம் ஜனநாயக அமைப்பே இடருக்குள்ளாகிவிடும். யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டுள்ள பின்னணியில் இதனை ஆராய்வோம். 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப் பட்டதற்குப்பின்னரும், 1993 மார்ச்சில்பம்பாய் குண்டுவெடிப்புகள் ஏற் பட்டதற்குப் பின்னரும் பம்பாயில் நடைபெற்ற மதவெறிக் கலவரங்கள் தொடர்பாக விசாரிக்க நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் விசாரணை மேற்கொண் டது.
இந்த ஆணையத்தின் ஆய்வெல்லைகளில் ஒன்று (எண் ஏஐஐ), வகுப்புக்கலவரங்கள் மற்றும் குண்டுவெடிப்புகள் இடையே பொதுவான இணைப்புச் சங்கிலி ஏதேனும் உண்டா என்பதுமாகும். நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா, “ முந்தைய நிகழ்வுதான் பிந்தைய நிகழ்வுக்கான காரணியாக செயல்பட்டிருக்கிறது என்றேதோன்றுகிறது. இரு கலவரங்கள் மற்றும்தொடர் குண்டுவெடிப்புகளுக்கு இடையே காரணகாரிய உறவுமுறை இருப்பது போன்றே தோன்றுகிறது,’’ என்று தன் அறிக்கையில் முடிவுக்கு வந்திருந்தார். மேலும், அவர், “விரக்தியடைந்த நிலை யிலும், நம்பிக்கையற்ற நிலையிலும் இருந்த முஸ்லிம்களில் ஒரு பகுதியின ருக்கு பல்வேறு வடிவங்களில் கோபம்இருந்தது. தங்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு எதிராகவும், அட்டூ ழியங்களுக்கு எதிராகவும் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று அவர்கள் குறியாக இருந்தனர்.
இத்தகைய பழிவாங்கும் உணர்வுதான் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்களின் சதிக்கு அடிப்படையாக அமைந்தது. மேலும் இது, தேச விரோத மற்றும் கிரிமினல் பேர்வழிகளுக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளித்து அவற்றை வெற்றிபெறவும் வைத்தது,’’ என்றும் கூறியிருக்கிறார்.ஆயினும், பம்பாயில் வகுப்புக்கலவரங்களுக்குக் காரணமானவர் களுக்கு எதிராக உருப்படியான நட வடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. 2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை வழக்குகளிலும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை. 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதி ரான கலவரங்களை மேற்கொண்டவர்கள் மீதான வழக்குகளிலும் இதே கதிதான். நம் நாட்டின் நீதிபரிபாலன அமைப்புமுறை இவ்வாறு மிகவும் தொளதொளப்பாக இருப்பது வெள்ளிடைமலையாகத் தெரிகையில் அதைப்பற்றிக் கேள்வி கேட்பது என்பது, அரசுக்கு எதிரானஇராஜத்துரோகசெயலாகிவிடுமா? நம் ஜனநாயக அமைப்பை வலுப் படுத்துவதற்காக, அல்லது அரசமைப்புச் சட்டம் உத்தரவாதப்படுத்தி இருக்கக் கூடிய சமத்துவ உரிமையை, சாதி மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் வழங்குவதற்காக, நடைபெறக்கூடிய இத்தகைய விவாதங்களுக்கு வாய்ப் பூட்டுப் போடலாமா? இந்துத்துவா குழுக்கள் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த விசாரணைகளை மென்மையாகக் கையாளுங்கள் என்று சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்களுக்கு, பாஜக அரசாங்கம் கட்டளையிட்டிருப்பதாக, சில ஊடகங்கள் குற்றஞ்சாட்டி யிருக்கின்றனவே, ஏன்? முஸ்லிம்இளைஞர்கள் மீதான புலன்விசாரணை களில் அவர்கள் அப்பாவிகள் என்று தெரிந்தபிறகும் சிறைகளிலிருந்து அவர்கள் விடுவிக்கப்படாமல் தொடர்ந்து சிறைகளிலேயே அவர்கள் வாடிக் கொண் டிருக்கிறார்களே, ஏன்? நீதிபரிபாலனமுறையில் உள்ள இத்தகைய பாகுபாடு களையப்பட வேண் டும் என்று கோருவது நாட்டின் உச்ச பட்ச நலன் கருதிய செயலேயாகும். இத்தகைய பிரச்சனைகளின் மீதான பொது விவாதங்கள், “அவதூறை அள்ளி வீசுவதற்காக அல்ல,’’ மாறாக, நம் ஜனநாயக அமைப்பை வலுப்படுத்து வதற்கே அது இட்டுச்செல்லும். அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதப்படுத்தப் பட்டு, இதுவரை நிறைவேறாத லட்சியமானசாதி மத பேதமின்றி, பாலின வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் சமத்துவத்தைப் பெற்றிடுவதற்காக, அவர்கள் பொது விவாதங்கள் மூலம் ஆட்சி யாளர்களை வலியுறுத்துகிறார்கள். இதனை மறுதலிப்பதன்மூலம், பாஜக அரசாங்கம், நல்லாட்சி வழங்குவது தொடர்பாகவோ, அல்லது, மக்களுக்கு வளமான வாழ்க்கையை அளிப்பது தொடர்பாகவோ, எவ்வித நிகழ்ச்சிநிரலும் தங்களிடம் இல்லை என்று உறுதி செய்துகொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலான, தற்போதைய மதச் சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, ‘இந்து ராஷ்ட்ரம்’-ஆக மாற்ற வேண்டும் என்கிற ஒரேயொரு நோக்கம் மட்டுமே அதனிடம் இருக்கிறது.
-நன்றி: தி இந்துஸ்தான் டைம்ஸ்
தமிழில்: ச.வீரமணி

Friday, July 31, 2015

யாகூப் மேமன் தூக்கு: சிதைக்கப்பட்ட நீதி





யாகூப் மேமன் தூக்கிலிடப் பட்டிருப்பதன்மூலம் நீதி சிதைக்கப்பட்டுள்ளது. யாகூப் மேமனின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனை யாகக் குறைப்பதற்கு வலுவான காரணங்கள் இருந்த நிலையில் அவ்வாறு செய்யாது தூக்கிலிடப் பட்டிருப்பதால் இதனை வேறெந்தவிதத்திலும் சித்தரித்திட முடியாது. யாகூப் மேமன், மும்பையில் 257பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த கொடூரமான வெடிகுண்டு விபத்திற்கான சதியில் அவருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது என்ற அடிப்படையில், ஒரு குற்றத்துடன் நிச்சயமாக சம்பந்தப்பட்டிருக்கிறார். ஆனால், இதில்அவர் பங்களிப்பும் அவர் புரிந்த குற்றத்தன்மையும் நிச்சயமாக உயர்ந்தபட்ச தண்டனைக்கு உரியவை அல்ல. இதர பத்து பேர்களுக்கு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றியதைப்போல, இவருக்கும் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், நீதி சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்திருக்கும்.
யாகூப் மேமன் இவ்வழக்கில் அதீத தண்டனைக்காகத் தனிமைப்பட்டார். ஏனெனில், இவ்வழக்கின் பிரதான சதிகாரரான அவர் சகோதரர் டைகர் மேமன், தாவுத் இப்ராகிமுடன சேர்ந்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதால்தான், யாகூப் மேமனுக்கு இத்தண்டனை. யாகூப் மேமன் பாகிஸ்தானிலிருந்து திரும்பி வந்துஇவ்வழக்கின் விசாரணையில் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கத் தயாராக இருந்தார். அவர் பாகிஸ்தானில் இயங்கிடும் ஐஎஸ்ஐ அமைப்பு இந்த சதிவேலைகளுக்கு எப்படியெல்லாம் உதவியது என்பதற்கான உபயோகமான தகவல்களையும், சான்றுகளையும் விசாரணை அதிகாரிகளிடம் அளித்திருந்தார்.
இதனை உளவுத்துறையில் மூத்த அதிகாரியாகப்பணியாற்றிய மறைந்த பி. ராமன் ஒப்புக்கொண்டிருக்கிறார். உச்சநீதிமன்றம், யாகூப் மேமனின் தண்டனையைக் குறைப்பதற்காக முன்வைக்கப்பட்ட இத்தகைய காரணிகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அவரது சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. யாகூப் மேமனுக்கு தண்டனை அளித்த வழக்கில் நடைமுறைத் தவறுகள் இருக்கின்றன என்று உச்சநீதிமன்றத்தின் இரு நபர் அமர்வாயத்தில் நீதியரசர் குரியன் ஜோசப் எழுப்பிய கூற்றை, மூவர் அடங்கிய அமர்வாயம் தன் மேலதிகாரத்தைப் பயன்படுத்தி, நிராகரித்துவிட்டது.குடியரசுத் தலைவர் அரசமைப்புச் சட்டத்தின் 72ஆவது பிரிவின்கீழ் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீதித்துறை யின் தீர்ப்பை மாற்றி, தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்திருக்க முடியும்.
இவ்வாறு செய்யப்படாதது துரதிர்ஷ்டமாகும். யாகூப் மேமனுக்கு முன்பு 2013 மார்ச்சில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்சல்குரு மிகவும்ரகசியமாகத் தூக்கிலிடப்பட்ட விதமும், அவருக்கு உரிமைகள் அளிக்கப்படாது மீறப்பட்டதும் அப்சல் குருவின் தூக்குதண்டனை அரசியல்ரீதியாகத் தீர்மானிக்கப்பட்டது என்பதைக் காட்டியது.தூக்கு தண்டனை தொடர்பாக மேல்முறையீடுகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் கூட முன்னுக்குப்பின் முரணா னவைகளாகவே இருக்கின்றன. அவை, அமர்வாயத்தில் அமரும் நீதியரசர்களின் கருத்துக்களைப் பிரதிபலிப்பவை களாகவே இருக்கின்றன. 2014ல் உச்சநீதிமன்றம் சில முக்கியமான பயங்கரவாதி களின் வழக்குகளில் தூக்கு தண்டனை களைக் குறைத் திருக்கின்றன.
மிகப் பெரிய அளவில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் வழக்கில் தண்டனை பெற்றமூவரின் தண்டனைகள் ஆயுள் தண்டனைகளாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து பயங்கரவாதி களின் வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கு ஒன்றில் தூக்கு தண்டனை பெற்ற தேவிந்தர் பால் சிங் புல்லார் தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டிருக்கிறது. இவ்விரு வழக்குகளிலும், முறையே தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலிருந்து, அவர்களது தண்டனைகளைக் குறைத்திட வலுவான அரசியல் பின்னணி அமைந்திருந்தது.2004க்குப்பின், கடந்த 11 ஆண்டுகளில், மூவர் மட்டுமே தூக்கிலிடப் பட்டிருக்கின்றனர். பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மல் கசாபை ஒதுக்கி விட்டுப் பார்த்தோமானால், மற்ற இருவரும் - அதாவது அப்சல் குருவும் யாகூப் மேமனும் -முஸ்லீம்கள். இது, நம் நாட்டின் குற்றவியல் நீதிபரிபாலன அமைப்பில் முஸ்லீம்கள் மட்டும் வித்தியாசமான அளவுகோலின்கீழ், குறிவைத்துத் தாக்கப்படுகிறார் கள் என்று ஓவைசி போன்றவர்கள் கூறும் கூற்றை வலுப்படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கிறது.
பாஜக, சிவசேனை வகையறாக்கள் பயங்கரவாதகுற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வர்களில் முஸ்லீம்களுக்கு எதிராக மட்டும் தங்கள் ரத்தவெறியைக் காட்டுகின்றன. இந்துத்வா பயங்கரவாதம் சம்பந்தப்பட்டுள்ள ஆஜ்மீர் சரீப், மாலேகான் மற்றும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் வெடிகுண்டு தாக்குதல் வழக்குகள் எப்படியெல்லாம் அதிகாரிகளின் உடந்தையுடன் உரியமுறையில் விசாரணை மேற்கொள்ளப்படாமல் கைவிடப்பட்டு வருகின்றன என்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
தூக்குதண்டனை விதிப்பது இருக்கட்டும், இந்துத்வா பயங்கரவாதி கள் எவரேனும் தண்டிக்கப்படுவார்களா என்பதே சந்தேகம்தான். யாகூப் மேமனின் முடிவு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெகுகாலமாகக்கோரிவரும், தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கை யின் தேவையை அடிக்கோடிட்டு அழுத்தமாகக் கூறியிருக்கிறது. தூக்கு தண்டனை மிகவும் கொடுங்கோன்மையான ஒன்று.“அரிதிலும் அரிதாகஎன்னும் கொள்கை,ஒவ்வொரு நீதிபதி யாலும் வெவ்வேறு விதமாக வியாக்கியானம் செய்யப் பட்டுள்ளன. தில்லி, தேசியச் சட்டப் பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஆய்வின்படி, தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நபர்களை ஆராய்ந்து பார்ப்போமானால் அவர்களில் பெரும்பகுதி யானவர்கள் ஏழைகள் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களாவார்கள். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளில் 75 சதவீதத்தினர் ஏழைகள், 75 சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இனத்தவர்கள். தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் நீதிபதிகள் மற்றும் சட்டவல்லுநர்கள் பலர் குரல் எழுப்பியுள்ளனர். சட்டப்புத்தகங்களிலிருந்து தூக்கு தண்டனையை நீக்குவதற்கு ஆதரவாக, பொதுக்கருத்தையும் அரசியல் கட்சிகளின் ஆதரவையும் அணிதிரட்ட வேண்டியது அவசியமாகும். இதனை அடையக்கூடிய விதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாகச் செயல் படும்.
தமிழில்: .வீரமணி