Friday, June 25, 2010

நீதிமன்றங்களும் அவற்றின் வழக்கு மொழியும்

தமிழகத்தில், உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதிக்கவேண்டும் என்று கோரி வழக்குரைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தி, சிறையேகி, தற்போது உயர்நீதிமன்ற நீதியரசர்களின் கருணையினால் தமிழில் வழக்காடலாம் என அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கோவையில் நடைபெறும் உலகச் செம்மொழித் தமிழ் மாநாட்டில் உரையாற்றிய பலர், இந்தி ஆட்சி மொழியாக உள்ள வட இந்திய மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் இந்தி வழக்கு மொழியாகச் செயல்படுவதாகப் பேசியுள்ளாரகள்.
ஆனால், உண்மை நிலை என்ன?

மத்தியஅரசின் அலுவல் மொழியாக இந்தி பிரகடனப்படுத்தப் பட்டிருப்பது உண்மை.
ஆனால், வழக்கறிஞர் ‘சிகரம்’ ச. செந்தில்நாதன் தன் கட்டுரையில் தெளிவுபடுத்தியிருப்பதுபோல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348ஆவது பிரிவின்படி ஆங்கிலம் மட்டுமே உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் அலுவல் மொழியாகும்.
சமீபத்தில் தில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் வழக்கறிஞர் ஒருவர் இந்தியில் வாதாடினார். இதனை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாகிய நீதியரசர் ரேகா ஷர்மா அனுமதித்தார். ஆனால் அதே வழக்குரைஞர், அதே நீதிமன்றத்தில் நீதியரசர் ஏ.கே. பதக் முன்பு ஆஜராகி இந்தியில் வாதாடியபோது, நீதியரசர் ஏ.கே. பதக் அனுமதி மறுத்துவிட்டார். ஆங்கிலத்தில்தான் வாதாட வேண்டும், அதுதான் உயர்நீதிமன்ற அலுவல் மொழி என்று கூறியுள்ளார்.

நாட்டில் உள்ளஅனைத்து உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் அனைத்து வழக்குகளும், மனுக்களும் ஆங்கிலத்தில்தான் தாக்கல் செய்யப்படுகின்றன. ஒரு சில நீதிபதிகள், மொழி உணர்வுக்கேற்ப இந்தியில் நீதிமன்றத்தில் வாதாட அனுமதிக்கிறார்களே ஒழிய, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவ்வாறு அனுமதிக்க முடியாது.
எனவே, உண்மையில் அந்த அந்த மாநிலங்களில் உள்ள ஆட்சிமொழிகளே, அந்த அந்த உயர்நீதிமன்றங்களுக்கும் ஆட்சி மொழி என்ற முறையிலும், உச்சநீதிமன்றததில் நாட்டின் அனைத்து மாநில ஆட்சி மொழிகளிலும் வழக்குகள் தாக்கல் செய்திடவும் அவறறை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திடக் கூடிய விதத்திலும் அரசியலமைப்புச் சட்டத்தின் 348ஆவது பிரிவு மாற்றப்பட வேண்டும்.

இவ்வாறு மாற்றுவதற்கு ஐமுகூ-2 அரசு முன்வருமா? ஐமுகூ-2 அரசிற்கு ஆதரவு
அளித்து வரும் திமுக இதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமா?
செம்மொழி மாநாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக ஓங்கிக் குரல் கொடுத்துள்ள கே. வி. தங்கபாலுவும், தமிழக முதல்வர் கலைஞரும்தான் கூற வேண்டும்.

-ச.வீரமணி

தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி



தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜூன் 25 அன்று சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்:
பெருமதிப்பிற்குரிய கல்விமான்களே, என் அருமை நண்பர்களே,
உலகச் செம்மொழித் தமிழ் மாநாட்டில் பங்கேற்க என்னை அழைத்தமைக்காக, மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியறிதலை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு முன் எட்டு மாநாடுகள் நடைபெற்றிருந்தபோதிலும், இந்த ஒன்பதாவது மாநாடுதான் வரலாற்றில் நிலைத்து நிற்கும். ஏனெனில், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டபின் நடைபெறும் முதல் மாநாடு இதுதான். அதுமட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் சில கட்சிகளுடன் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவில் ஐமுகூ-1 அரசாங்கம் ஆட்சி செய்த காலத்தில்தான் இவ்வாறு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது என்கிறபோது நாங்கள் கூடுதலாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.

இங்கே உங்கள் முன் நிற்கையில் தனிப்பட்ட முறையிலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு தெலுங்கு குடும்பத்தில் நான் பிறந்திருந்தாலும், தமிழ்நாட்டிலும் ஒரு பங்கினை நான் கோருவதற்கு எனக்கு உரிமை உண்டு. நான் பிறந்தது அன்றைய மதராஸ் எனப்படும் இன்றைய சென்னை மாநகரில்தான் அல்லது அந்தக் காலத்தில் பலராலும் அழைக்கப்பட்ட சென்னைப் பட்டணத்தில்தான். மேலும் மொழி மற்றும் பண்பாட்டு அம்சங்களில் நமக்குள் பல பொதுவான பண்புகள் உண்டு.

‘‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’’
அதாவது, உலகில் அனைத்து இடங்களும் என் சொந்த நகரம்தான், உலகில் உள்ள ஒவ்வொருவரும் என் உறவினர்கள்தான்.

பிபிசி தொடர்களில் ஓர் இனிய நிகழ்ச்சித் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. அதன் பெயர் ‘இந்தியாவின் கதை’. அது ஆதிக் காலத்தில் ஆப்ரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் குறித்துக் கூறியது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மனிதகுல உயிரணுத் திட்டத்திற்கும் (Human Genome Project) நன்றி தெரிவித்துக் கொள்வோம். ஆதி காலத்தில் ஆப்ரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களின் மிச்சசொச்சத்தில் காணப்பட்ட உயிரணு (gene M.130)க்கள், தமிழ்நாட்டின் மேற்கு மலைத்தொடர்ச்சிப் பகுதிகளில் வாழ்ந்த கள்ளர் மக்களிடம் காணப்பட்டதாக அந்நிகழ்ச்சித் தொகுப்பில் கூறப்பட்டது. மதுரைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஏ. பிச்சப்பன் அவர்கள், இந்தக் கண்டுபிடிப்பைக் கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்து, ஒரு வேளை இவர்கள்தான் நம் எல்லோருக்கும் மூதாதையர்களாக இருப்பதற்கான அடிப்படையாக இருக்கலாம் என்று கூறினார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆதாம் - ஏவாள்தான் நம் மூத்த குடிமக்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்றால், ஆதாம் ஆப்ரிக்காவிலிருந்து வந்தார் என்றால், ஏவாள் இந்தியாவிலிருந்து வந்தாள் என்று கொள்ளலாம். எனவே உண்மையில் இது ‘தாய் நாடு’ (Mother India) தான். நாம் இன்றைய தமிழ்நாட்டில் இருப்பதற்கு உண்மையில் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.
இத்தகைய நீண்ட நெடிய வரலாற்றைத்தான் இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். மொழியின் பரிணாம வளர்ச்சித் தோற்றம் என்பது அதன் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்ததாகும்.


காரல் மார்க்ஸ், மொழி குறித்துக் கூறுகையில், அது ‘‘சிந்தனையின் உடனடி எதார்த்தநிலை’’ என்று அழைத்திட்டார். ஜெர்மன் சித்தாந்தம் (German Ideology) என்னும் நூலில் மொழியின் தோற்றுவாயை ஆராய்கையில் அவர் கூறியதாவது: ‘‘மொழி என்பது மனிதனின் உணர்வு தோன்றிய காலத்திலேயே தோன்றிவிட்டது, மொழி என்பது உணர்வின் நடைமுறை. இது அனைத்து மனிதர்களிடமும் தோன்றியது. அதன் காரணமாகவே என்னிடமும் அது உளதாயிருக்கிறது. உணர்வைப் போன்றே மொழியும் தேவையின் அடிப்படையிலிருந்து, அத்தியாவசியததிலிருந்து, மற்ற மனிதர்களோடு உறவாடுதலிலிருந்து விளைந்தது.’’

மொழியின் பரிணாம வளர்ச்சி குறித்து ஸ்டாலின், தன்னுடைய ‘‘மார்க்சிசமும் மொழியியல் பிரச்சனைகளும்’ என்னும் நூலில் விளக்குகையில், கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:
‘‘மொழி என்பது சமூகத்தின் அற்புதப்பொருள்களில் ஒன்று. அதன் மூலம் சமூகத்தின் உண்மை நிகழ்வுகளிலிருந்தே மொழியும் இயங்குகிறது. சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப, மொழியும் வளர்ந்தோங்குகிறது. சமூகம் மறையும்போது, மொழியும் மறைந்துவிடும். சமூகத்திற்கு அப்பால் மொழி கிடையாது. எனவேதான், மொழி என்பது அதன் சமூகத்தின் வரலாற்றுடன் பிரிக்கமுடியாதவகையில் பின்னிப்பிணைந்திருப்பதை, மொழி பேசும் மக்களின் வரலாற்றுடன், அதனை உருவாக்குபவர்கள் மற்றும் வளர்த்தெடுப்பவர்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தால் மட்டுமே, மொழி குறித்தும் அதன் வளர்ச்சி விதிகள் குறித்தும் புரிந்துகொள்ள முடியும்.

‘‘மொழி என்பது ஒரு சாதனம், ஒரு கருவி. அதன் உதவியுடன் மக்கள் ஒருவர்க்கொருவர் தகவல் பரிமாறிக்கொள்கிறார்கள், சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறார்கள். சிந்தனையுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பதன் மூலம், மொழி வார்த்தைகளை உருவாக்கிப் பதிவு செய்கிறது, வார்த்தைகளிலிருந்து வாக்கியங்களைக் கோக்கிறது. இவ்வாறு மனிதனின் அறிவாற்றலுடன் கூடிய சிந்தனையும் சாதனைகளும் மனித சமூகத்தில் சிந்தனைகளைப் பரிவர்த்தனை செய்துகொள்வதை சாத்தியமாக்குகின்றன.

‘‘மொழி ஒட்டுமொத்தத்தில் சமூகத்திற்கு சேவை செய்வதற்காக, மக்களிடையே கலந்துறவாடுவதற்காக, சமூகத்தின் உறுப்பினர்களிடையே ஒத்திருப்பதற்காக, சமூகத்தின் தனிப்பட்ட மொழியினை ஏற்படுத்துவதற்காக, சமூகத்தின் மக்களின் வர்க்க நிலைப்பாட்டைப்பற்றிப் பொருட்படுத்தாமல் அவர்கள்அத்துணைபேர்களுக்கும் சமமாகச் சேவை செய்வதற்காக, மிகவும் நுட்பமான வகையில் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஒட்டமொத்த மக்களுக்கும் பொதுவானதொரு மொழியாக இருப்பதிலிருந்து அது பிறழ்ந்து செல்லுமானால், மற்ற சமூகக் குழுக்களுக்குத் தீங்கிழைத்துக்கொண்டு, குறிப்பிட்ட சில சமூகக்குழுக்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்குமானால், அது தன்னுடைய ஒழுக்கப்பண்பை இழந்துவிடுமானால், சமூகத்தில் மக்கள் மத்தியில் ஓர் உறவாடும் சாதனமாக இருப்பதிலிருந்து அது தன்னை அறுத்துக்கொண்டுவிடுகிறது, விரைவில் அது சில சமூகக் குழுக்களின் பிதற்றல்களாக மாறிப்போய்விடுகிறது, தரம்தாழ்ந்து கெட்டுவிடுகிறது, விரைவில் மறைந்து ஒழிந்துவிடுகிறது.’’

ஆனால், லத்தீன் போன்று உலகின் மற்ற செம்மொழிகளைப் போல அல்லாமல், தமிழ் மொழி தழைத்தோங்கி வளர்வது தொடர்கிறது என்றால், அது மக்கள் மத்தியில் -சாமானிய மக்கள் மத்தியில் - உயிரோட்டமுள்ள தொடர்பினை கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணமாகும்.

மாநாட்டின் இலச்சினையில் (‘logo’வில்), ஆழிப்பேரலைகளின் சீற்றத்தை எதிர்கொண்டு முறியடித்த கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவரின் சிலையும், அதனைச் சுற்றிலும் சிந்து சமவெளி நாகரிகத்தைப் பறைசாற்றும் ஏழு அடையாளச் சித்திரங்களும் (icon) சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. மாநாட்டின் சின்னத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தின் உருவச் சித்திரங்களைச் சித்தரித்திருப்பதால் அது தொடர்பாக ஒன்றைத் தெரிவிப்பது நலம்பயக்கும். பல்வேறு கலாச்சாரங்கள் ஒரு பொதுவான நூலால் இணைக்கப்பட்டிருப்பதை, தொடர்ச்சியை அது தெளிவுபடுத்துகிறது. பெருமதிப்பிற்குரிய தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர், டாக்டர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், முந்தைய மாநாடுகளின் போது சமர்ப்பித்த ஓர் ஆய்வுக் கட்டுரையில், சிந்து சமவெளி நாகரிகக் கால கல்வெட்டுக்கள், திராவிடக் கலாச்சாரத்திற்குச் சொந்தமானவைகளாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியிருந்தார். உண்மையில், சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கும் இடையேயிருந்த இணைப்பை நிறுவிட அவர் முயற்சித்தார். ‘சிந்து சமவெளி எழுத்துக்களின் பொருளைக் கண்டுபிடித்தல்’ என்னும் பணிக்காக, ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை’ப் பெறுவதில் வெற்றி பெற்ற, டாக்டர் அஸ்கா பர்போலா அவர்களும் கூட, இந்து சமவெளி எழுத்துக்கள், பழைய தமிழுக்கு மிகவும் நெருக்கமாக உள்ள, திராவிட எழுத்துக்கள் என்று பரிந்துரைத்திருப்பதும் முக்கியத்துவம் உள்ளதாகும்.
அதுமட்டுமல்ல, மாநாட்டின் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கிற முகப்பு வாசகத்தில், ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்பது ஒன்றே மனிதகுலம் என்பதை உரத்துச் சொல்கிறது. கலைஞர் அவர்கள் விளக்கியதுபோல் அது இன்றைக்கும் பொருந்தக் கூடியதே. ‘‘மனிதகுலம் அனைத்தும் குறுகிய சாதி, இன, பேதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும், அதுவே மனிதகுலத்தின் மகத்துவம்’’ என்று அழுத்தந்திருத்தமாகத் தெரிவிக்கிறது. நம் நாட்டின் வரலாறு , குறிப்பாக இப் பிராந்தியம், நமக்குப் போதிக்கும் முக்கியப் படிப்பினை இது.

பல்வேறு மொழிகளுக்கும் இடையே காணப்படும் பொதுமைப் பண்புகளும் மற்றும் அவை இன்றைய நாளில் பெற்றுள்ள வளர்ச்சிகளும், அவற்றின் செறிவான பண்பாட்டுப் பாரம்பர்யத்துடன், அவற்றை ஆய்வுக்குட்படுத்தி மேலும் வளர்த்தெடுத்திடவும் கவனம் செலுத்திடவேண்டும். தென்னிந்தியாவில் உள்ள தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளையுமே எடுத்துக்காட்டிற்காக எடுத்துக்கொள்வோம். 2005இல் மிகவும் பொறுத்தமாகவே தமிழுக்கு செம்மொழிக்கான அந்தஸ்து அளிக்கப்பட்ட அதே சமயத்தில், தெலுங்கு மற்றும் கன்னடத்திற்கும் 2008இல்அதேபோன்று செம்மொழி அந்தஸ்துகள் அளிக்கப்பட்டன. தலைமுறை தலைலமுறையாக காப்பியின் மணத்தை நுகர்ந்துகொண்டும், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் பாடலை வானொலியில் கேட்டுக்கொண்டும் எழும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டு நாம் வளர்ந்திருக்கிறோம். கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராசர், ஷியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகிய இம்மூவருமே - அவர்கள் தாய்மொழி வெவ்வேறாக இருந்தபோதிலும் - தங்கள் இசையை தெலுங்கில்தான் வடித்தார்கள். ஆயினும், இந்த இசை ‘கர்நாடக இசை’ என்றுதான் அழைக்கப்படுகிறது. இவ்வாறு நம் வேற்றுமைக்குள் இணக்கமான ஒற்றுமை காணும் பண்பு மிகவும் உன்னதமானது. தெலுங்கில் வடிக்கப்பட்ட இசையை எவ்விதச் சிரமமுமின்றி தமிழிலோ அல்லலது கன்னடத்திலோ மீள அளித்திட முடியும். இதுதான் நம்மிடையேயுள்ள மா மன்னுய்திக் கோட்பாட்டின் (universalism) மகத்துவமாகும். நம்முடைய பாரம்பர்யம் இதனை நமக்குக் கற்றுத்தந்திருக்கிறது. இந்த எளிய உண்மையை அங்கீகரிக்க மறுத்து, ஒருசமயம் ஒருவர் தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருவையாறில் நடைபெற்ற தியாகராசர் இசை விழாவின்போது ஒருவர் தமிழில் பாடியதற்காக அவர்மீது இசை வெறியர்கள் மிகவும் அசிங்கமாக நடந்து கொண்டிருக்கின்றனர். ஏனெனில் அவர் தெலுங்கில் பாடாமல் தமிழில் பாடினாராம். மக்களைப் பிணைத்திடும் முகவராக வரலாற்றுரீதியாகச் செயல்பட்டு வரும் மொழி என்பது அதன் அடிப்படைச் சிறப்பியல்புக்கு எதிராக, தங்களுடைய வெறித்தனத்தையும் பிரிவினைகளையும் காட்டிட ஏவப்பட்டிருக்கிறது. வரலாறு நமக்குச் சொல்லித்தந்துள்ள உன்னதப் பண்புகளை மேம்படுத்துவதன் மூலம் இத்தகைய முயற்சிகள் தடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.


கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள், போராட்டத்தின்போது மக்களை ஒன்றுபடுத்தும் சக்தியாக, சமூகத்தின் வளர்ச்சிக் கருவியாக மொழியைப் பார்க்கிறோம். தேசிய இனத்தை வரையறுத்திடும் நான்கு அவசியமான நிபந்தனைகளில் ஒன்றாக, அதனை நாங்கள் பார்க்கிறோம். நாட்டில் விடுதலைப் போராட்டம் நடைபெற்று வந்த காலத்திலிருந்தே, இத்தகையப் புரிந்துணர்வின் அடிப்படையில்தான் நாங்கள் தெலுங்கு பேசும் மக்களுக்காக விசாலாந்திரா, மலையாளம் பேசும் மக்களுக்காக ஐக்கிய கேரளம், மராத்தி பேசுபவர்களுக்காக சம்யுக்த மகாராஷ்ட்ரா ஆகிய மாகாணங்களுக்காகப் போராடினோம். அதேபோன்று தமிழ்நாட்டிலும் கம்யூனிஸ்ட்டுகள் தமிழுக்காக, முனைப்பான பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். இங்கே, தியாகி சங்கரலிங்கம் பெயரைக் குறிப்பிடுவது சாலப்பொருத்தமுடையதாக இருக்கும். மதராஸ் ராஜதானி என்றிருந்ததை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்பதற்காக 64 நாட்கள் அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, இறந்து போனார். அவர் இறந்தபின் தன் உடலை கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தன் விருப்பத்தினை அவர் வெளிப்படுத்தி இருந்தார். இம்மாநிலத்திலிருந்து வந்த முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், தொழிற்சங்கத் தலைவருமான பி. இராமமூர்த்தி, ப. ஜீவானந்தம் மற்றும் என். சங்கரய்யா ஆகியோர் மாநில சட்டமன்றத்தில் தமிழில் பேசுவோம் என்று பிரகடனம் செய்து, தமிழிலும் பேசினார்கள். அ. நல்லசிவம், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சமயத்தில், தமிழில் தந்தி கொடுக்கும் முறைக்காகப் போராடினார். உண்மையில் இவர்கள் அனைவரும் தமிழுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கான போராட்டத்தில் நம் முன்னோடிகளாக விளங்கினார்கள். மக்களின் மொழியில் ஆட்சி அதிகாரம் நடைபெறாவிட்டால், ஜனநாயகம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் எதுவும் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். ஐயன் திருவள்ளுவர் தன்னுடைய திருக்குறளில் சொல்லியதுபோல,

காட்சிக் கெளியன் கடுஞ் சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

(அதாவது, காட்சிக்கு எளிமையும், கடுங்சொல் கூறாத இனிய பண்போடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.) (அதிகாரம் 39, குறள்: 386)

ஜனநாயகம் வெற்றிகரமாக அமைந்திட, நிர்வாகத்துடன் எளிதில் அணுகத்தக்க தன்மை முக்கியமான அம்சங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. இதற்கான பல அம்சங்களில் மொழி என்பது ஆட்சியாளர்களையும் ஆட்சிக்குட்பட்டவர்களையும் இணைத்திடுவதோடு மட்டுமல்லாமல், ஆட்சியாளர்கள்/ஆளும் வர்க்கத்தினர் மக்களோடு கொண்டுள்ள உறவின் அளவையும் வரையறுக்கிறது. மொழி சமூகத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. ‘‘அரசியல் துறையிலும் பண்பாட்டுத் துறையிலும், சமூக வாழ்க்கையிலும், மக்களின் ஒவ்வொரு நாளின் நடவடிக்கைகளிலும்’’ அவர்களுக் கிடையேயான சிந்தனைகளைப் பரிமாற்றம் செய்துகொள்ளும் கருவியாக மொழி விளங்குகிறது.
இந்தப் பின்னணியில்தான், இன்றைய அரசாங்கங்கள் முக்கிய பங்களிப்பினைச் செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றன. ‘மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம்’ என்ற ‘நேரு மாதிரி’ என்கிற வலைப்பொறிக்குள் சிக்கிக்கொள்ளாமல், அந்தந்த மண்ணின் மொழி செயல்படுத்தப்படுவது உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும். நிச்சயம் இதனை குறுகிய மொழிவெறி என்று எவரும் கருதிடக் கூடாது. அனைத்து மொழிகளும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும், அனைத்து மொழிகளையும் தழைத்தோங்கச் செய்திட அனுமதித்திட வேண்டும்.
இன்றைய உலகில் எந்த ஒரு மனிதனும் தனியொரு அடையாளத்துடன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் பல்வேறு மொழிகள்அடுத்தடுத்துப் பேசப்படக்கூடிய ஒரு நாட்டில் பல்வேறு அடையாளங்கள் விரிவடைந்திருக்கின்றன.

எழுதப்பட்ட வரலாறு நெடுகிலும், இன்றைய எதார்த்த நிலையிலும், இந்தியாவில் உள்ள நாம், தாய்மொழி, வேலை செய்யும் இடத்தில் புழங்கும் மொழி, படைப்புத்திறனை வெளிப்படுத்துவதற்கான மொழி என்று ஒரே சமயத்தில் குறைந்தபட்சம் மூன்று மொழிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நான் முன்பு குறிப்பிட்ட கர்நாடக இசை எடுத்துக்காட்டை இது விளக்குகிறது. இவ்வாறு நாட்டின் பல்வேறு அடையாளங்களை, எந்த ஒரு ‘குறிப்பிட்ட’ அடையாளத்திற்கும் தனி முக்கியத்துவம் தந்துவிடாமல், பேணி வளர்க்க வேண்டியது அரசின் கடமையாகும்.

நான் தமிழ்நாட்டில் பிறந்தேன், என் தாய்மொழி தெலுங்கு, இந்தி பேசும் டில்லியில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் மேற்கு வங்க மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். இங்கே உங்கள் முன் இம்மாமன்றத்தில் உலகம் முழுதுமிருந்து வந்துள்ள தமிழர்கள் முன்பாக நின்று பேசிக்கொண்டிருக்கிறேன். இதுதான் இந்தியா.

நான் உரையை நிறைவுசெய்வதற்கு முன், பரிசீலனைக்காக மாநாட்டை நடத்துவோருக்கு முன் சில ஆலோசனைகளை வைக்க விரும்புகிறேன். தமிழ் மிகவும் வளமான பாரம்பர்யத்தைக் கொண்ட ஒரு மொழி, இன்றைக்கும் பொருந்தக்கூடிய வகையில் இலக்கியங்களைப் படைத்த ஒரு மொழி. அதுமட்டுமல்லாமல், ஏட்டில் எழுதப்பெறாத, வாய்வழி வரலாற்றுச் செல்வங்களையும் (huge treasures of oral history) அபரிமிதமாகக் கொண்டுள்ள ஒரு மொழி. இவற்றை உடனடியாக ஆவணப்படுத்தி, என்றென்றைக்கும் நிலைபேறுடையதாக மாற்றக்கூடிய விதத்தில் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நாட்டுப்புற இசை, நாடகம், நாட்டுப்புறக் கலைகள் அனைத்தும் மதிப்புமிக்க பொக்கிஷங்களாக நாட்டுப்புற மக்கள் மத்தியில் விளங்கிக்கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக இம்மாநாடு சில நடவடிக்கைகளைத் தொடங்கிடும் என்று நான் நம்புகிறேன். தமிழ்ச் சமூகமானது தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம், தலித் இயக்கம் மற்றும் பெண்ணுரிமை இயக்கம் என்று பல்வேறு இயக்கங்களால் செழுமையடைந்த ஒன்றாகும். இந்த இயக்கங்களின் இலக்கிய வளங்களின் மூலம் தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் ஏற்பட்ட செல்வாக்கு மற்றும் வளர்ச்சி குறித்தும் இம்மாநாடு சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் முழுமையாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியதும் அவசியத் தேவையாகும். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகள் இம்மாநாட்டின் ஓர் அங்கமாக மட்டுமல்ல, இத்தகைய திட்டங்களை மேற்கொள்ளும்போது இணைத்துக்கொள்ளவும் பட வேண்டும்.

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்

என்கிறது திருக்குறள். அதாவது அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமை உடையவர்கள் பெருமைக்குரியவர்கள் ஆவார்கள்.
தமிழ் மொழியை மேலும் தழைத்தோங்கச் செய்வதற்காகவும், மேலும் வளர்ப்பதற்காகவும் அதன் வளமான பாரம்பர்யங்களிலிருந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து கற்றுக்கொள்வோம்.

(ச.வீரமணி)

Monday, June 21, 2010

இந்நாள்; வரலாற்றில் ஒரு பொன்னாள்!



-பிரகாஷ் காரத்
மேற்கு வங்கத்தில் இடது முன் னணி அரசு ஆட்சிக்கு வந்து ஜூன் 21 ஆம் தேதியுடன் 33 ஆண்டு நிறைவ டைகிறது. இது வரலாற்றில் பொன் எழுத் துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும். வேறெந்தவொரு மாநில அரசும் இத்தகு வரலாற்றுச் சிறப்பினைப் பெற்ற தில்லை.

நீண்ட காலம் ஆட்சியில் இருந்ததி லும் மக்கள் நலன் சார்ந்த கொள்கை களை அமல்படுத்தியதிலும் வேறெந்த அரசியல் கட்சியும் இத்தகைய வரலாறு படைத்ததில்லை. இத்தகைய ஈடிணை யற்ற சாதனையை, கடந்த ஓராண்டில் மக்களவைத் தேர்தலிலும் சமீபத்தில் நக ராட்சி/மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தல்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும், இடது முன்னணிக் கும் ஏற்பட்ட தேர்தல் பின்னடைவு களை வைத்துக் குறைத்து மதிப்பிட சில சக்திகள் முனைந்துள்ளன.

கடந்த முப்பதாண்டுகளில் இடது முன்னணி அரசாங்கத்தால் மேற்கொள் ளப்பட்ட அனைத்துச் சாதனைகளை யும் மறுதலித்திட இந்த சக்திகள், இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள் கின்றன. “சிவப்பு ஆட்சி” யின் கீழ் “மூச் சுத்திணறிக் கொண்டிருக்கும்” ஒரு மாநி லமாக மேற்கு வங்கத்தைச் சித்தரிக்க வும், அங்கு உருப்படியாக எவ்வித வளர்ச்சியும் ஏற்படாது, அது பாலைவன மாக மாறிவிட்டது என்றும், மிகவும் மோசமான முறையில் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இத்த கையப் பிரச்சாரங்கள் ஆளும் வர்க்கங்க ளாலும், பெரு நிறுவன ஊடகங்களாலும் மேற்கொள்ளப்பட்டிருப்பதில் ஆச்சரி யப்படுவதற்கு எதுவுமில்லை. ஏனெ னில், இடது முன்னணி அரசாங்கத்தின் அனைத்துச் சாதனைகளுமே நாட்டை ஆளும் முதலாளித்துவ - நிலப்பிரபுத் துவ வர்க்கங்களின் நலன்களுக்கு உகந் தவை அல்ல என்பதும் அவற்றிற்கு எதி ராக கொண்டு வரப்பட்டவை என்பதும் ஆகும்.

மேற்குவங்க அரசு மேற்கொண்ட அளவிற்கு வேறெந்த மாநில அரசும் நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்தவில் லை. நாட்டில் கையகப்படுத்தப்பட்ட உபரி நிலத்தில் ஐந்தில் ஒரு பாகம் மேற்கு வங்கத்தில் மட்டும் கையகப்ப டுத்தப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோ கிக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்துறை யில் வளர்ச்சியின் பயன்கள் அனைத் தும் நிலப்பிரபுக்களுக்கோ, பணக்கார விவசாயிகளுக்கோ சென்றடையாமல், முழுமையாக, சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்குச் சென்றடைவதை உத்தரவாதப்படுத்தியதும் மேற்கு வங்கத் தைத் தவிர வேறெந்த மாநில அரசும் கிடையாது. பஞ்சாயத்து அமைப்புகள் முறைப்படுத்தப்பட்டதால் கிராமப்புற உழைக்கும் மக்கள், உள்ளூர் நலன் சார்ந்த விஷயங்களில் தாங்களே நேரடி யாகப் பங்கேற்க முடிந்தது. இடது முன் னணி தொடர்ந்து ஆட்சி செய்ததன் விளைவாக ஓர் உறுதியான பாதுகாப்புச் சூழ்நிலை அங்கே உருவாகி இருக்கிறது. உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவின ராலும் மேற்கொள்ளப்படும் ஜனநாயக உரி மைகள், அங்குள்ள அரசியலமைப்பு முறையின் உள்ளார்ந்த அம்சம் (inாநசநவே கநயவரசந) ஆகும். இடதுமுன்னணியின் முப் பதாண்டு கால ஆட்சி என்பது மேற்கு வங்கத்தின் முகத்தோற்றத்தை மிகவும் வலிவுடனும் பொலிவுடனும் மாற்றி அமைத்திருக்கிறது என்பதில் ஐய மில்லை.

இவ்வாறு கூறுவதன் மூலம், இடது முன்னணி அரசாங்கம் அங்கே முன் னேறி வந்ததற்கான பாதை மிகவும் எளி தான ஒன்று என்று பொருள் அல்ல. அதி லும் குறிப்பாக 1990களில், அகில இந் திய அளவில் நவீன தாராளமயப் பொரு ளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத் தப்பட்ட பின்னர், மக்கள் சார்புக் கொள் கைகளைப் பின்பற்றுவதில் சிரமங்கள் ஏற்பட்டதைப் பார்க்க முடிந்தது. மாநில அரசு தன்னுடைய குறைந்தபட்ச அதிகா ரத்திற்குள் மாற்றுக் கொள்கைகளை நிறைவேற்றுவதில் கடும் சிரமத்திற்குள் ளாயின. நவீன தாராளமயப் பொருளா தாரக் கொள்கைகளையும், மத்திய ஆட்சி யாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்து டன் கூடிக் குலாவுவதையும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் உறுதியாக எதிர்த்து வந்த தால், அவற்றின் மீதான தாக்குதல்களும் கடுமையாயின.

ஆளும் வர்க்கங்களுக்கும் அமெ ரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஓர் இடது முன்னணி அரசாங்கம் தொடர்ந்து ஆட்சி செய்து வருவது என்பது சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாகும். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிக ளும் 2004 மக்களவைத் தேர்தலின் போது தேசிய அரசியலில் ஆற்றிய செல் வாக்கான பங்களிப்பு இதனை மெய்ப்பித் தன. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரிகளையும் பல வீனப்படுத்த, மேற்குவங்க இடது முன் னணி அரசாங்கத்தைத் தனிமைப் படுத் துவது அவசியம் என்று அவை கருதத் தொடங்கியுள்ளன.

மேற்கு வங்கத்திற்குள்ளும், இடது முன்னணி அரசாங்கம் தொடர்ந்து ஆட்சி யிலிருந்த போதும் வர்க்கப் போராட்டம் ஓய்ந்துவிடவில்லை. நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக கிராமப் புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வர்க்க உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இடது முன்னணி அரசாங்கம் பின்பற் றிய கொள்கைகளின் வரையறைக்குள் ளும் கூட புதிய முரண்பாடுகளும் பிரச் சனைகளும் முன்வந்துள்ளன. மாநிலத் தில் அரசியல் நிலைமைகளில் இவை ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை மிகவும் ஆழமாக ஆய்வு செய்து, புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள எதிர்ப்பினை ஆராயும்போது சில அரசியல் உண்மை களை அவை வெளிப்படுத்துகின்றன. வலதுசாரி சக்திகள் கூட, தங்களுடைய கடுமையான கம்யூனிச எதிர்ப்பை மூடி மறைத்துக்கொண்டு, இடதுசாரி முகமூடி யை அணிந்துகொண்டு வலம்வரத் தொடங்கியிருக்கின்றன. மக்கள், வலது சாரிகள் மற்றும் பிற்போக்குவாதிகள் பக்கம் அணிதிரளமாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்டு, இவை இவ் வாறு முகமூடிகள் அணியத் தொடங்கி இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் காங்கிரஸ் கட்சி தலை மையிலான கம்யூனிஸ்ட் எதிர்ப்பு முன் னணி சில அதிதீவிர முழக்கங்களை முன் வைத்து மக்களைத் திரட்ட முயற் சித்ததை நாம் கண்டோம். இதேபோன்று இப்போது மேற்குவங்கத்திலும் மார்க் சிஸ்ட் கட்சிக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கில் சில கீறல்கள் விழுந்திருப் பதைப் பயன்படுத்திக்கொண்டு, வலது சாரி எதிர்க்கட்சிகள் அனைத்துக் கம்யூ னிச எதிர்ப்பு சக்திகளையும், பிரிவினை சக்திகளையும் ஒன்றுதிரட்டி தாக்குதல் தொடுக்க முனைந்திருக்கின்றன.

மக்களவைத் தேர்தலுக்குப்பின் கடந்த ஓராண்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஊழியர்கள் 245 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்துள் ளனர். விவசாயிகளும் குத்தகை விவ சாயிகளும் வலுக்கட்டாயமாக அவர் களது வீடுகளிலிருந்து வெளியேற்றப் பட்டிருக்கின்றனர். கட்சி மற்றும் வெகு ஜன அமைப்புகளின் அலுவலகங்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன. இடது முன்னணிக்கு எதிராக உள்ள அரசியல் சக்திகளின் உண்மையான கோர முகத் தை இத்தாக்குதல்கள் வெளிப்படுத்து கின்றன. மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடது சாரிக் கட்சிகள் மீது மட்டுமல்ல, சாமா னிய மக்களுக்கு எதிராகவும் அவர்கள் இடதுமுன்னணி ஆட்சியில் அடைந்த ஆதாயங்களுக்கு எதிராகவும் அவர்கள் தொடுத்துள்ள தாக்குதல்களிலிருந்து அவர்களின் வர்க்கப் பின்னணியைத் தெரிந்து கொள்ள முடிகிறது. திரிணா முல் - காங்கிரஸ் கூட்டணியின் குறிக் கோள், இடது முன்னணி அரசாங்கத்தை அகற்றி, அதன் மூலம் “மோசமான சிவப்பு ஆட்சி”க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான்.

மேற்கு வங்கத்தின் நிலச்சீர்திருத்தங்கள் மூலமாக கிராமப்புறங்களில் ஏழை விவசாயி களுக்கு ஆதரவாக மாற்றியமைக்கப்பட்டுள்ள நில உறவுகளை, மீண்டும் நிலப்பிரபுக்களுக்கு ஆதரவான ஒன்றாக மாற்ற அனுமதிக்கப் போகிறோமா?

முதலாளித்துவ சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளின் மதவெறி, பிரிவினை வெறி சார்ந்த அரசியலை மேற்கு வங்கத்தில் மீண் டும் தலைதூக்க அனுமதிக்கப் போகிறோமா? என்பவையே இப்போது நம் முன் உள்ள முக்கிய கேள்விகளாகும்.

நகராட்சி/மாநகராட்சித் தேர்தல்களின் போது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர், தேர் தலுக்குப் பின் மாநிலத்தில் வகுப்புக் கல வரங்கள் வெடிக்கும் என்று அச்ச உணர்வை சிறுபான்மையினர் மத்தியில் கிளப்பியதை நாம் பார்த்தோம். கடந்த முப்பதாண்டுகளாக மேற்கு வங்கத்தில் மதநல்லிணக்கம் மூலம் நாம் ஏற்படுத்தியுள்ள அமைதிச் சூழலை, இவர்களின் குறுகிய அரசியல் லாபங்களுக் காக காவு கொடுத்திட அனுமதிக்கக்கூடாது.

கம்யூனிச எதிர்ப்புக் கூட்டணியானது, இனவெறி, மதவெறி, சாதிவெறி என்கிற அடையாள அரசியலை முன்னுக்குத் தள்ளி, அதன்மூலம் ஆதாயம் அடைய முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய அரசியலா னது உழைக்கும் மக்கள் மத்தியில் உருவாகி யுள்ள ஒற்றுமையினைக் குலைத்து, சமூகத் தின் முன்னேற்றப் பாதையினை சீர்குலைத்து, மீண்டும் பின்னுக்குத் தள்ளும்.

இடது முன்னணி தொடர்ந்து ஆட்சியிலி ருந்ததன் மூலம் எண்ணற்ற சாதனைகளை ஏற்படுத்தியிருந்த போதிலும், சில எதிர்மறை அம்சங்களையும் தோற்றுவித்திருக்கிறது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உணர்கிறது. நாட்டில் உள்ள அதிகாரங்களற்ற ஒரு மாநில அரசைத்தான் நடத்திக்கொண்டி ருக்கிறது என்ற அடிப்படைப் புரிதலுடன் தான் இதுநாள்வரையிலும் கட்சி செயல்பட்டு வந்திருக்கிறது. மாநில அரசின் கீழ் இயங்கும் அதிகாரவர்க்கம், காவல்துறை மற்றும் பல் வேறு நிறுவனங்கள் எவ்வித அடிப்படை மாற்றங்களுக்கும் உட்படுத்தப்படவில்லை. இவ்வாறு ஓர் அரசாங்கத்தில் செயல்பட்டதா னது, கட்சி மீதும் அதன் அமைப்பு மீதும் மோச மான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின் றன. இவ்வாறு ஓர் அரசாங்கத்தை ஆட்சி செய்யும் சமயத்தில், கட்சி ஊழியர்களின் கம்யூனிஸ்ட் குணங்கள் அரிக்கப்படுவதற் கான வாய்ப்புகள் ஏற்பட்டன. அவற்றைப் போக்கிட கட்சி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்திய தேர்தல் முடிவுகள், மக்களின் சில பிரிவினர் நம்மிடமிருந்து தனிமைப் பட்டிருப்பதைக் காட்டுகிறது. இதற்கு இடது முன்னணி அரசாங்கத்தின் செயல்பாடு மட்டும் காரணம் என்று கூறுவதற்கில்லை. கட்சியில் உள்ள பலவீனங்களும், ஸ்தாபனக் குறைபாடுகளும் மற்றும் அங்குள்ள அரசியல் சூழ்நிலையும் அவற்றுக்கான காரணங்களா கும். பலவீனங்களைக் களைய, ஸ்தாபனக் குறைபாடுகளைப் போக்க மக்களுடன் மேலும் வலுவான பிணைப்பினை ஏற்படுத்த, கட்சி பல்வேறு முனைகளிலும் நடவடிக் கைகள் எடுத்திருக்கிறது.

இடது முன்னணி, சென்ற ஆண்டு பட் ஜெட்டில் அறிவித்த மக்கள் நலன்சார்ந்த கொள்கைகள் அனைத்தையும் அமல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொண்டிருக்கிறது. மத்திய ஆட்சியின் மோச மான கொள்கைகளால் கடுமையாக ஏறியுள்ள விலைவாசி உயர்வு, விவசாய நெருக்கடி மற் றும் பல்வேறு கொள்கைகளினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

உண்மையில் பெரு நிறுவன ஊடகங்கள் சித்தரிப்பது போல் நிலைமை மேற்கு வங்கத் தில் கிடையாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் வெகுஜனத் தளம் உறுதியாகவும் விரிவடைந்தும் இருப் பது தொடர்கிறது. இடது முன்னணிக்கு எதி ராகக் கைகோர்த்துள்ள சக்திகளால் நிரந்தர மாக ஒன்றிணைந்து செயல்பட முடியாது. சரியான உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும், மக்களிடம் சென்று தீர்மானகரமாகப் பணியாற்றுவதன் மூலமும், நிலைமைகளை மீண்டும் நமக்குச் சாதகமாக மாற்றியமைத் திட முடியும்.

பிற்போக்கு சக்திகளின் தாக்குதலைத் தடுத்து நிறுத்திடவும் மக்களுடன் இணைப் பை மீண்டும் ஏற்படுத்தவும் மேற்கு வங்கத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் மேற்கொண்டுள்ள போராட்டத் திற்கு நாடு முழுவதும் உள்ள கட்சியும், இடது சாரி மற்றும் ஜனநாயக சக்திகளும் உடன் நிற் கின்றன. இடது முன்னணி அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதன் பொருள், உழைக்கும் மக்களின் உரிமைகளையும் அவர்கள் இதுவரை பெற்ற ஆதாயங்களையும் பாதுகாப்பது என்பதாகும். இடது முன்னணி அரசாங்கம் என்பது மேற்கு வங்கத்தில் உழைக்கும் மக்கள் நீண்ட நெடுங்காலமாக நடத்தி வந்த போராட்டங்களின் விளைபொ ருள் என்பதை நாம் எந்தக் காலத்திலும் மறந் திட முடியாது.

தமிழில்: ச. வீரமணி