Sunday, May 11, 2014

நிவாரணம் கோரி மக்கள் அலைதான் வீசுகிறது


-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
பதினாறாவது மக்களவைக்காக நடைபெற்ற தேர்தல்களில் மொத்தம் உள்ள ஒன்பது கட்டங்களில்  எட்டு கட்டங்கள்  நிறைவடைந்துள்ளன. இன்னும் ஒரே ஒரு கட்டம்தான் மீதம் உள்ளது என்ற போதிலும், மேற்கு வங்கம் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் தீர்மானகரமான கட்டமாக இது அமைந்திருக்கிறது. பொதுவாகத் தேர்தல்கள், மிகப்பெரிய அளவில் வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளால் உருக் குலைக்கப்பட வில்லை என்றபோதிலும், சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளும் இருந்தன. கடைசியாக நடைபெற்றக் கட்டத்தின்போது, மேற்கு வங்கத்தில் மூன்றாவது கட்டமாக நடைபெற்றத் தேர்தலில், மாநிலத்தின் ஆளும் கட்சி வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியதாகவும், மிகப்பெரிய அளவில் பயங்கரவாத அச்சுறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் வந்துள்ளன. தேர்தல் ஆணைய எந்திரத்தால் தன்னுடைய வீடியோ கண்காணிப்பு மூலமாக, அத்தகைய வாக்குச்சாவடிகள் கைப்பற்றலை முழுமையாக மேலாண்மை செய்ய முடியவில்லை. உண்மையில் பல முக்கியமான வாக்குச்சாவடிகளில் அத்தகைய ஏற்பாடுகளே இல்லை. மத்திய துணைப் பாதுகாப்புப் படையினர் அத்தகைய வாக்குச்சாவடிகளில் நிலைநிறுத்தப்பட வில்லை. தனிப்பட்டவர்கள் சிலர் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் எப்படியெல்லாம் வாக்காளர்களை மிரட்டி அவர்களுக்குப்பதிலாகத் தாங்கள் வாக்களித்தார்கள் என்பதைப் பதிவு செய்து, அவற்றை சமூக வலைத்தளங்களில் பரப்பி இருக்கிறார்கள்.  மேற்கு வங்கத்தில் மே 7 அன்று கடைசியாக நடைபெற்ற தேர்தல்களிலும் மீண்டும் மிகப்பெரிய அளவில் ஆளும் கட்சியினர் சட்டவிரோதமானமுறையில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவ்வாறு ஆளும் கட்சியினர் சட்டவிரோதமான முறையில் ஈடுபட்ட வாக்குச்சாவடிகளில் அவற்றைச் சரிசெய்யக்கூடிய விதத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், அந்த வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு மனுச் செய்திருக்கிறோம்.   இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். ஆயினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவின் மீது தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, அடுத்து நான்காவதாக கட்டத்தில் நடைபெறக்கூடிய தேர்தலின்போதும் இதேபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவும், ஜனநாயகத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிடவும் திரிணாமுல் காங்கிரசுக்கு மிகவும் தெளிவான முறையில் தைர்யத்தைக் கொடுத்திருக்கிறது.  வீடியோ கேமராக்கள் வலுக்கட்டாயமாக மூடி வைக்கப்பட்டிருப்பது, அல்லது வேண்டும் என்றே வேறுபக்கம் திருப்பி வைக்கப்பட்டிருப்பது போன்ற புகார்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 17இல் தேர்தல்கள் நடக்க இருக்கும்  கடைசி மற்றும் தீர்மானகரமான கட்ட வாக்களிக்கும் நாளன்றும் திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளில் மீண்டும் ஈடுபடும் என்பது நிச்சயம். இவ்வாறு ஜனநாயகத்தையும், ஜனநாயக தேர்தல் நடைமுறையையும்  மிகப்பெரிய அளவில் சிதைப்பது அனுமதிக்கப்படக்கூடாது. காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற கட்சிகளைப்போலவே புஜபலம் மற்றும் பண பலத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் மிகப்பெரிய அளவில் பயங்கரவாத மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற திரிணாமுல் காங்கிரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் முறையான பரிசீலனைக்கு உட்படுத்தி. உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு விஷயங்கள் முறையாக பரிசீலிக்கப்பட வேண்டிய அதேசமயத்தில், ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட மோடி அலை சுனாமியாக மாறி நாட்டையே சூறையாடியிருப்பதுபோல் தோன்றுகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும், ஓராண்டு காலமாகவே அவரை எதிர்காலப் பிரதமர் என்று தூக்கி நிறுத்திய விளம்பரத் தட்டிகள், நடைமுறையில் மோடி எதிர்ப்பு காரணியாகவே (ANTI-INCUMBENCY FACTOR) செயல்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. நாடு முழுதும் இருந்து வந்துள்ள கள ஆய்வுகள் அழுத்தமான முறையில் பாஜக வெற்றி பெறும் என்று  ஊடகங்கள் ஊதித்தள்ளியுள்ள கருத்துக்கணிப்புக்கும் எதார்த்தத்திற்கும் எவ்விதச் சம்பந்தமுமில்லை என்பதை வெளிக்கொணர்ந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தினை மிகவும் பரிதவிக்க வைத்த விஷயம் என்னவெனில், அது மிகவும் கனவு கண்டு கொண்டிருந்த இந்தி பேசும் மாநிலங்களில்கூட அதற்கு எந்த வரவேற்பும் இல்லாதிருந்ததுதான். மோடி குறித்து பிரச்சாரம் இருந்தபோதிலும், உள்ளூர் பிரச்சனைகள்தான் பிரதானமான பாத்திரம் வகித்தது, என்பதே தலைப்புச் செய்தியாக அனைத்து ஊடகங்களும் வெளியிட்டன. பீகாரில், லாலு மீண்டும் பாஜகவின் ரதத்தை நிறுத்தியது ஒரு புறத்திலும், மறுபுறத்தில் நிதிஷ், வளர்ச்சியின் பயன்களை அறுவடை செய்திருப்பதும் செய்திகளாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில், மக்கள் சாதிய ரீதியாக ஏற்கனவே முலாயம்மைச் சுற்றிலும், மாயாவதியைச் சுற்றிலும் அணிதிரண்டு விட்டார்கள் என்று ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருக்கின்றன. ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் உள்ளூர் காரணிகளின் பிடியிலிருந்து மக்களை விடுவித்திடுவதற்காக, நாம் எதிர்பார்த்ததைப் போலவே மதவெறித் தீயை விசிறிவிட்டுப் பார்த்தது.  உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக எஜமானர்களின் வலதுகரமாகத் திகழ்ந்த பேர்வழி ஆரம்பத்தில் மதவெறிப் பேச்சுக்களைக் கட்டவிழ்த்துவிட்டதைத் தொடர்ந்து, தற்போது சமாஜ்வாதிக் கட்சித் தலைவரின் தொகுதியான அசம்கார் பயங்கரவாதிகளின் தளமாக செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகளை அள்ளி விசிக்கொண்டிருக்கிறார். மிகவும் மட்டரகமான முறையில் இந்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்துவதற்கான அனைத்துவிதமான வகுப்புவாத வாக்கு வங்கிக் கொள்கைகளிலும் அது இறங்கி இருக்கிறது. மே 5 அன்று, பைசாபாத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் (இத்தொகுதியில்தான் அயோத்தி இருக்கிறது) நரேந்திர மோடி பேசிய பொதுக்கூட்டத்தின் மேடையின் பின்னணியில் ராமர் படம் வைக்கப்பட்டிருந்தது. தாவாவுக்குரிய இடத்தில் ராமர் கோவிலைக் கட்டுவோம் என்ற உறுதிமொழி மீளவும் எழுப்பப்பட்டு அதன் மூலம் மதவெறித் தீயை கூர்மைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன் மே 4 அன்று வங்கத்தில் அசன்சால் தொகுதியில் பேசுகையில் மோடி, தான் பிரதமரான பின்னர் வங்கதேச வாசிகள் தங்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு தங்கள் நாட்டுக்குத் திரும்ப தயாராகிக்கொள்ள வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.  இந்துக்கள் வரவேற்கப்படக்கூடிய அதே சமயத்தில் தங்கள் இலக்கு முஸ்லீம்கள்தான் என்பதை அவர் மிகவும் தெளிவாக்கி இருக்கிறார். இதுஉண்மையான அனைத்து இந்திய வங்க முஸ்லீம்களுக்கு எதிராகவும் வெறுப்பை உமிழும் வேலை என்பது மிகவும் தெளிவான ஒன்றாகும்.  இவ்வாறு மோடி வங்க முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்கியதைத் தொடர்ந்துதான் அஸ்ஸாமில் போடோ லாந்து தீவிரவாதிகள் இதுவரை 31 பேரைக் கொல்வதற்கும் பலரைக் காயமடையச் செய்வதற்கும் காரணமாக அமைந்தன என்று ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.  வங்க தேசத்திலிருந்து வரும் செய்திகளும் மிகவும் கவலை அளிப்பவையாக உள்ளன. அங்குள்ள மதச்சார்பற்ற சக்திகள் மோடியின் பேச்சை வன்மையாக விமர்சித்திருக்கக்கூடிய அதே சமயத்தில், மத அடிப்படைவாத சக்திகள் இந்துக்களை குறிவைக்கத் தொடங்கி இருக்கின்றன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்து வகுப்புவாதமும் முஸ்லீம் அடிப்படைவாதமும் தாங்கள் ஜீவித்திருப்பதற்காக  ஒன்றையொன்று ஊட்டி வளர்க்கும் என்று நாம் கூறிவருவதை இந்த செய்தி மீண்டும் ஒருமுறை மெய்ப் பித்திருக்கிறது. உண்மையில், இதுநாள்வரை நம்மால் போற்றிப்பாதுகாத்து வரப்பெற்ற அடிப்படை மனித உரிமைகள், ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தால் அதன் தேர்தல் ஆதாயத்திற்காக பலிபீடத்தின்முன் வைக்கப் பட்டிருக்கின்றன.  இதேதொனியில், ஐபிஎல் கிரிக்கெட் சீசன் போது நடைபெறும் சூதாட்டம் (MATCH FIXING) போல, புதுவிதமான சூதாட்டம் இப்போது பாஜகவிற்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே வங்கத்தில் நடைபெறுவதைப் பார்க்க முடிகிறது. வகுப்புவாத உணர்வை வளர்த்து மக்களிடையே வேற்றுமையை விரிவுபடுத்து வதன் மூலம் தங்கள் தங்கள் வாக்கு வங்கிகளை ஒருமுகப்படுத்துவதற்கான போராட்டமாக இது நடந்துகொண்டிருக்கிறது.  மோடிக்கும் மமதாவிற்கும் இடையே நடைபெறும் சொற்போரைக் கூர்ந்து கவனித்தோமானால்பாஜக தன்னுடைய வெறித்தனமான இந்துத்துவா ஆதரவுத்தளத்தை ஒருமுகப்படுத்த முயற்சிக்கும் அதே சமயத்தில்தற்சமயம் திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்து வரும் சிறுபான்மையினர், திரிணாமுல் காங்கிரசுடன் விரக்தியுற்று இடது முன்னணிக்கு ஆதரவாகத் திரும்பிவிடக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்தக்கூடியவிதத்தில் இருப்பதையும் காண முடியும். பாஜக, தேர்தல் முடிந்தபின், மத்தியில் ஆட்சியை அமைக்க வேண்டுமானால், மேலும் பல கட்சிகளின் ஆதரவு தேவை என்பதை நன்கு உணர்ந்துள்ளதால், பாஜக அரசாங்கத்திற்கு திரிணாமுல் ஆதரவு அளிக்கக்கூடிய விதத்தில் வங்கத்திற்கான சலுகைகள் குறித்து பாஜக தலைவர் பேசுவதையும் கேட்க முடிகிறது. ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தின் இரட்டை வேடம் என்பது இதுதான்.
திரிணாமுல் காங்கிரஸ் கடந்த காலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் ஒட்டி உறவாடியது என்கிற உண்மையுடன், அதன் தலைவி இரு கட்சிகளின் கீழான ஆட்சிகளிலும் ரயில்வே அமைச்சராக இருந்தார் என்பது மட்டுமல்லஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் மிகவும் நெருக்கமான முறையில் ஒட்டுறவை வைத்திருந்தார் என்பதும் உண்மையாகும். 2003இல்குஜராத் மாநிலத்தில் முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து, அதன் நெருப்பு நன்கு கனிந்துகொண்டிருந்த சமயத்திலேயே, திரிணாமுல் காங்கிரசின் தலைவி ஆர்எஸ்எஸ் விழா ஒன்றில் பங்கேற்றதும், அந்த விழாவில் அவர், வங்கத்தின் துர்கை என்று போற்றிப் புகழப்பட்டதும், நடந்தது. இதற்கு, பிரதிபலனாக, திரிணாமுல் காங்கிரசின் தலைவி, ஆர்எஸ்எஸ் இயக்கத்தை, உண்மையான தேசப்பற்றாளர்கள்  என்று கூறி வானளாவப் போற்றிப் புகழ்ந்தார். அத்தோடு மட்டும் அவர் நின்றுவிடவில்லை, அதற்கும் ஒருபடி மேலே சென்று, நீங்கள் (ஆர்எஸ்எஸ்) நாட்டை நேசிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், என்றும், கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் உங்களுடன் (ஆர்எஸ்எஸ்-உடன்) நாங்களும் இருக்கிறோம், (தி டெலிகிராப், செப்டம்பர் 15, 2003) என்றும் பேசினார். இப்போது, இவ்வாறுஇவர்களிருவரும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதுபோல் சூதாட்டம் (அயவஉ கஒபே) மேற்கொண்டிருப்பது வாக்கு வங்கி அரசியலின் மிகவும் மட்டரகமான வடிவமாகும். இவை அனைத்துக்கும் மத்தியில், மக்களை மிகவும் பாதித்துள்ள அடிப்படைப் பிரச்சனையை இவர்கள் பார்க்கவே மறுக்கிறார்கள். மக்களுக்குத் தேவையான நிவாரணம் குறித்து பேசவே மறுக்கிறார்கள். பணவீக்கம், வேலையின்மை, நாளுக்கு நாள் அதிகரிக்கும் துன்பதுயரங்கள் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் மக்களுக்குத் தேவை. இத்தகைய நிவாரணம் மாற்றுக் கொள்கைகளால் மட்டுமே அளிக்கப்பட முடியும். அதாவது தற்போதைய பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றால் நியாயப்படுத்தப்படும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றான கொள்கைகளால் மட்டுமே அளிக்கப்பட முடியும். உண்மையில், இந்தத் தேர்தலில் எங்காவது அலை வீசியது என்றால், அது இவ்வாறு நிவாரணம் கோரி எழுந்த மக்களின் அலைதான். மக்கள் அலையின் வெற்றி, தேர்தல்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதைப் பொறுத்தே அமைந்திருக்கிறது. மக்கள், வெளி நிர்ப்பந்தம் எதற்கும் அல்லது கவர்ச்சி எதற்கும் உட்படுத்தப்படாது, வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும். இதற்கு, வரும் மே 12 அன்று நடைபெறும் கடைசிக் கட்டத் தேர்தலை உத்தரவாதமாக நடத்திட தேர்தல் ஆணையம் உறுதியுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

(தமிழில்: ச.வீரமணி)    

Friday, May 9, 2014

வகுப்புவாத அரசியலை முறியடிப்போம்



பிரகாஷ் காரத்

மக்களவைக்கான இறுதிக்கட்டத் தேர்தல் வரும் மே 12உடன் முடிவடையக் கூடிய நிலையில் இவற்றுக்காக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் சில சங்கடமான சங்கதிகளையும் முன்கொணர்ந்திருக்கிறது. முதலாவதாக, பாஜக/ஆர்எஸ்எஸ் கட்ட விழ்த்துவிட்ட மதவெறிப் பிரச்சாரம், குறிப் பாக உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் இவைமேற்கொண்ட பிரச்சாரம், மதவெறி வெப்பத்தை உச்சத்திற்குக் கொண்டு சென் றுள்ளது. ஒருசில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற வெடிகுண்டு விபத்துக்கள் சம்பந்தமாக இந்துத்துவா தீவிரவாதிகளுடன் சம்பந்தப்பட்டதாக விசாரிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் தலைவரான இந்த்ரேஷ் குமார், சமீபத்தில் ஒரு நேர்காணலில், உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட் பாளர்களுக்காக ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது இவர்கள் வெளிப்படை யாகவே சிறுபான்மையினருக்கு எதிராக இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நாட்டின் வளர்ச்சி மற்றும் நல்ல அரசாங்கம் ஆகியவை குறித்துத்தான் நரேந்திர மோடியின் தேர்தல் மேடை அமைந் திருப்பதாக கார்ப்பரேட் ஊடகங்கள் என்னதான் பூசி மெழுகினாலும், மோடி பேசும் போது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முஸ்லிம்களுக்கு எதிரான கண்ணோட்டத்துடன்தான் பிரச்சனைகள் குறித்துப் பேசிக் கொண் டிருந்தார். பீகாரிலும் மற்றும் பல இடங்களிலும் மோடி, ஐ.மு.கூ. அரசாங்கத்தின் இளஞ் சிவப்பு புரட்சி’’ குறித்து பேசினார். நாட்டில் ஐ.மு.கூ. ஆட்சியின்போது மேற் கொள்ளப்பட்ட எருமை இறைச்சி ஏற்றுமதி, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செல்லப் பிராணியான பசுவைக் கொன்று அதன் இறைச்சியை ஏற்றுமதி செய்வதுபோல், சித்தரிக்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் மோடி பிரச்சாரம் மேற்கொள்கையில் தன்னுடைய அர சியல் வெற்றியைத் சிவபெருமானும் ஸ்ரீராமனும் தூக்கிப்பிடித்திட வேண்டும் என்றுகடவுள்களிடம் வேண்டிக் கொண்டிருக் கின்றார். மேற்கு வங்கத்திலும், அஸ்ஸாமி லும் உரையாற்றுகையில் மோடி, வங்க தேசத்திலிருந்து வந்தவர்களை தாக்கிப் பேசினார். அவர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு, வங்க தேசத்திற்குத் திரும்ப தயாராகிக் கொள்ள வேண்டும் என்றும் மிரட்டினார்.

வங்க முஸ்லிம்கள்

வங்க மொழி பேசும் முஸ்லிம்களை ஊடுருவியர்கள்’’ என்று சித்தரித்த இத்தகைய பிரச்சாரத்தின் விளைவுகள் ஏற்கனவே அஸ்ஸாமில் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. போடோ தீவிரவாதிகளின் தாக்குதலில் 31 பேர் படுகொலை செய் யப்பட்டார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் பெண்களும் குழந்தைகளுமாவர். அனைவருமே வங்கமொழி பேசும் முஸ் லிம்கள். போடோ எல்லை மாவட்டப் பகுதியில் ஏப்ரல் 24ல் தேர்தல் நடந்த சமயத்தில்தான் இது நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில்தான் இன சுத்திகரிப்பு என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். அந்த சமயத்திலும் ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம், வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்கள் என்கிற தன்னுடைய வெறிபிடித்த மதவெறிப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது.
இவ்வாறு நடைபெற்ற கொலைகளுக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த போது, அக்கிளர்ச்சிகளுக்கு எதிராக விசுவ இந்து பரிசத்தும், பஜ்ரங் தளமும் 2012 ஆகஸ்ட்டில் மாநிலத்தில் பந்த்திற்கு அழைப்பு விடுத்தன. இப்போது மீண்டும் வங்கதேசத்திலிருந்து ஊடுருவியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் வங்கமொழி பேசும் முஸ்லிம்களுக்கு எதிராக போடோ தீவிரவாதிகள் தாக்குதல் கொடுக்கக் காரணமாய் அமைந்தது.நாட்டில் தற்போது நிலவும் மத நல் லிணக்கத்திற்கும் மக்களின் ஒற்றுமைக்கும் மத்தியில் பாஜக தலைமையிலான பரிவாரம் அதிகாரத்திற்கு வருமானால் என்ன நடக் கும் என்பதற்கு அஸ்ஸாம் கொலைகள் ஒரு பயங்கரமான அச்சுறுத்தலாக அமைந் துள்ளது.

பாசிஸ்ட் தாக்குதல்

மற்றொரு முக்கியமான நிகழ்ச்சிப்போக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரிக் கட்சிகளையும் நசுக்குவதற்காக மேற்குவங்கத்தில் தேர்தல்களில் மோசடிவேலைகளில் இறங்கியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாசிஸ்ட் முயற்சி களாகும். ஏப்ரல் 30 அன்று மூன்றாம் கட்டத்தேர்தலில் அம்மாநிலத்தில் நடைபெற்ற ஒன்பது மக்களவைத் தொகுதிகளுக்கானத் தேர்தலிலும் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப் பட்டமை, வாக்காளர்களுக்கு எதிரான மிரட்டல் மற்றும் வன்முறை நிகழ்வுகள் மிகவும் விரிவான அளவில் நடைபெற்றதைப் பார்த்தோம். 1300க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் மிகவும் அராஜகமான முறையில், அனைவருக்கும் நன்கு தெரியும்படியே தேர்தல் அதிகாரிகளை மிரட்டி, திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் வாக்குகளைப் போட்டுள்ளனர்.

வங்கத்திலிருந்து வெளி வரும் தொலைக்காட்சி ஊடகங்களும் செய்திஊடகங்களும் இவர்களின் அராஜக நடவடிக்கைகளில் பலவற்றைப் படம் பிடித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான வாக் காளர்கள் திரிணாமுல் குண்டர்களின் ரவுடித்தனத்தை எதிர்த்துநின்று முறியடித்தபின் தங்கள் வாக்குரிமையை செலுத்தியுள்ளார்கள். இவ்வாறு தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநிறுத்தக்கூடிய விதத்தில் வாக்களித்தமைக்காக இவர்களில் பலர் தாக்குதல் களுக்கு உள்ளாகியுள்ளனர்.தங்களுடைய ஆதிக்கத்தை மேற்கு வங்கத்தில் எப்படியும் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வெறி திரிணாமுல் காங்கிரசுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் இத்தகைய இழிவு நடவடிக்கைகளில் திரிணாமுல் காங்கிரஸ் ஈடுபடும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

ஆனால் மிகவும் அதிர்ச்சி தந்த விஷயம் என்னவெனில் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்பட்ட அதிகாரிகளில் பலரே இத்தகு கொடு மைகளுக்கு உடந்தையாக இருந்ததேயாகும். தேர்தல் ஆணையத்தால் அமர்த்தப்பட்ட சிறப்புப் பார்வையாளர் இவ்வாறு ஊடகங் கள் தாக்கல் செய்த சாட்சியங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, தேர்தல் நியாய மாக நடந்ததாகவும், தாக்கல் செய்த முறை யீடுகளுக்கு அடிப்படை எதுவுமில்லை என்றும் கூறியிருக்கிறார். கணிசமான அளவில் வாக்குச்சாவடிகளில் மோசடி நடைபெற்றிருந்தும் அவற்றில் தலையிட்டு, அவற் றைச் சரிசெய்திட இயலாத நிலையில் தேர்தல் ஆணையம் இருப்பது என்பது அதிர்ச்சியளிக்கக்கூடியதாகவும், வருந் தத்தக்கதாகவும் உள்ளது. இவ்வாறான தேர்தல் ஆணையத்தின் செயலானது, நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புக்கு மிகவும் ஆணிவேராக இருக்கக்கூடிய தேர்தல் ஆணை யத்தின் மீதான நம்பகத்தன்மையையும், நேர்மையையுமே பாதிக்கும்.

மேற்குவங்க மக்கள் தங்களின் உரிமைகளை நிலைநிறுத்தி, திரிணா முல் காங்கிரஸ் குண்டர்களின் அச்சுறுத்தல் களுக்கும், குண்டாயிசத்திற்கும் அடுத்து நடக்கும் இரு கட்டத் தேர்தல்களின்போதும் (மேற்கு வங்கத்தில் அதிகமான இடங்களில் கடைசி இரு கட்டங்களில்தான் தேர்தல் கள் நடக்கின்றன) தக்க பதிலடி கொடுப் பார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும் மக்களுடன் இணைந்து நின்று ஜனநாயகத்தையும், மக்களின் உரிமைகளையும் பாதுகாத்திட உறுதியாகப் போராடும். இத்தேர்தலின் மூலம் இடது முன்னணி மீண்டும் வலுவடைந்தால், அது திரிணாமுல் காங்கிரசின் ரவுடித்தனமான ஆட்சியால் நாளுக்கு நாள் அதிகமான அளவில் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் மக்கள் அதிலிருந்து விடுபடக்கூடிய அளவில் மீண்டும் தங்கள் வெகுஜனப் போராட்டங்களை நடத்துவார்கள் என்பது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கு மிக நன்கு தெரியும்.

எனவேதான், அவை இடது முன்னணியை நசுக்கிட வேண்டுமெனத் துடிக்கின்றன. தற்சமயம், பாஜகவும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களும் ஒருவர்மீது ஒருவர் பொதுக்கூட்ட மேடைகளில் வார்த்தைகளால் ஒரு நிழல் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் தங்கள் ஆதரவுத் தளத்திற்கு முட்டுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வகுப்புவாதத் தலைவர்களை ஊட்டி வளர்த்து மேற்குவங்க மண்ணில் வகுப்புவாத அரசியலை மேம்படுத்திக்கொண்டிருக்கிறது. பாஜக, மதவெறி போட்டி அரசியலின் மறுபக்கமாகத் திகழ்கிறது.

அது, மம்தா பானர்ஜியையும், திரிணாமுல் காங்கிரசையும் சிறுபான்மை இனத்தினருக்குத் துதி பாடுவதாக முத்திரை குத்துகிறது. இவ்வாறு விமர்சனம் செய்யும் அதே சமயத்தில் மம்தா பானர்ஜியிடம் இச்சகம் பேசவும் அது தயங்கவில்லை. நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரின் அணுகுமுறையும் பேச்சுக்களும் இதை நன்கு புலப்படுத்திடும். பாஜகவின் முன்னால் கூட்டணி சகாவான திரிணாமுல் காங்கிரசுக்கு அது தெரிவித்திடும் செய்தி இதுதான்: தேர்தலுக்குப்பின் எங்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள்.’’ மக்கள் தங்கள் இரு கைகளிலும் ரசகுல்லாவை வைத்துக்கொள்ள முடியும் என்று நரேந்திர மோடி பேசியிருப்பதன் பொருள் இதுதான்.

இவ்வாறு, நாடு முழுவதும் பாஜக மற்றும் இந்துத்துவா சக்திகளுக்கு எதி ரான போராட்டம் என்பதும், மேற்கு வங்கத்தில் இடது முன்னணியும் ஜனநாயக சக்திகளும் மேற்கொண்டுள்ள போராட்ட மும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை களாகும். தேசிய அளவில் பாஜகவைத் தோற்கடிப்பதும், மேற்கு வங்கத்தில் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த கம்யூனிச விரோத பிற்போக்கு சக்தியான திரிணாமுல் காங்கிரசைத் தோற்கடிப்பதும் இன்றைய சூழலில் மிகவும் அவசியமாகும்.
-தமிழில்: ச.வீரமணி


Sunday, May 4, 2014

மாக்கியவெல்லியின் தந்திரம்!


பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்
16வது மக்களவைக்கான தேர்தல் களில் மொத்தம் உள்ள 9 கட்டங்களில் ஏழு கட்டங்களுக்கான தேர்தல்கள் முடிவடைந்துவிட்டது. ஏழாவது கட்டத் தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங் கிரஸ் மிகவும் விரிவான அளவில் வன்முறையில் இறங்கி, வாக்குச் சாவடி களைக் கைப்பற்றி மோசடிகளில் ஈடுபட்டது. தேர்தல் ஆணையத்திடம் இதுதொடர்பாக முறையீடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மோசடி நடந்தவாக்குச்சாவடிகளில் மத்திய பாது காப்பு படையினரின் முறையான மேற்பார்வையுடன் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருக் கிறோம். தேர்தல் ஆணையத்தின் உரிய முடிவுகளுக்காகக் காத்திருப்போம். அடுத்து, இன்னும் இரு கட்டத் தேர்தல்கள் நடைபெறவேண்டிய சூழ்நிலையில், ஆர்எஸ்எஸ்/பாஜக திட்டமிட்டமுறையில் மதவெறித் தீயை கிளறிவிடத் தொடங்கி இருக்கிறது.

இதற்குக் காரணம், மீதம் உள்ள இரு கட்டத் தேர்தல்களில் மிகப்பெரும்பாலான தொகுதிகள் உத்தரப் பிரதேசத்திலும், பீகாரிலும் நடைபெறவிருக் கின்றன. மக்களவைக்கு அதிக உறுப்பினர்களை அனுப்பக்கூடிய மாநிலங்களாக இவ்விரு மாநிலங்களும் விளங்குவதோடு, மதவெறி சக்திகளுக்கும் மிக முக்கியமான மாநிலங்களாக, அவற்றின் வலுவான அடித்தள மாக இவை விளங்குவதுமேயாகும். பெரும்பான்மையாகவுள்ள இந்துக்களின் வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்தும் விதத்தில் மதவெறித் தீ விசிறிவிடப் படுகிறது. பாஜகவின் பிரதமர் வேட் பாளரே மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் வங்கதேசவாசிகள் மே 16க்குப்பின் இந்தியாவைவிட்டு வெளியேற தங்கள் மூட்டை முடிச்சு களுடன் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்திருப்பதன் மூலம் இத்தகைய வாக்குவங்கி அரசியலுக்கு நெருப்பை வைத்துத் துவக்கி வைத் திருக்கிறார்.

கடந்த காலங்களிலும், அவர்கள் வங்க மொழி பேசும் மெய்யான இந்தியப் பிரஜைகளை, அதிலும் குறிப்பாக மேற்குவங்கத்திலிருந்து தில்லி, மும்பை போன்ற மாநகரங்களில் வந்து வசிப் போரைக் குறிவைத்து, துன்புறுத்தி, அச்சுறுத்தி இருக்கிறார்கள். இப்போது ஆர்எஸ்எஸ்/பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியும் இவ்வாறு கூறியிருப்பதானது, இந்துத்துவா வெறியர்கள் தங்கள் மத வெறித் தீயை நாடு முழுவதும் பற்ற வைத்து தங்கள் தாக்குதலைத் தொடுப் பதற்கான சமிக்ஞையே தவிரவேறல்ல. இதனைத் தொடர்ந்து ஆர் எஸ்எஸ் ஆக்டோபஸின் கொடுக்குகள் இந்த வேலையில் இறங்கியுள்ளன. குஜராத் மாடல் என்பதன் உண்மையான சொரூபத்தை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் தொகாடியாவின் பேச்சு அமைந்திருக்கிறது. குஜராத்தில் சில முஸ்லிம்கள் இந்துக்கள் குடியிருக்கும் பகுதிகளில் நிலம் வாங்கியதை மிகவும் கேவலமான முறையில் அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் அவர் பேசியிருக்கும் பேச் சானது, இன்றைய தினம் குஜராத்தில் இந் துக்களும் முஸ்லிம்களும் தனித்தனியே வாழக்கூடிய காலனிகளை உருவாக்கி இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இந்திய துணைக் கண்டத்தை பிரிட்டி ஷார் பிரித்ததில் உத்வேகம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பின் இப்போது குஜராத் மதரீதியாக, நாட்டின் பிரதமராக வரத்துடிக்கும் இன்றைய குஜராத் முதலமைச்சரால், மாற்றப்பட்டிருக்கிறது. இப்படி மதவெறித் தீயை விசிறிவிடுவதன் மூலம் பாஜக கூடாரத்திற்கு ஏதோ கொஞ்சம் தேர்தலில் ஆதாயம் கிடைத்திடலாம். ஆனால் அதற்காக நாட்டு மக்கள் இத்தனை ஆண்டு காலம் கட்டிக்காத்து வந்த ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கம் அனைத்தையும் காவு கொடுக்க வேண்டியிருக்கிறது. இப்போது பாஜக இரண்டகமான முறையில் பேசத்துவங்கியிருப்பதிலிருந்து இது தெளி வாகிவிட்டது. நாட்டில் எங்கேயெல்லாம் மதவெறித் தீயை விசிறி அதன்மூலம் தாங்கள் ஆதாயம் அடைய முடியாது என்ற நிலை இருக்கிறதோ அங்கெல்லாம் பாஜக கூடாரம் தன்னுடைய உண்மை யான மதவெறி நிகழ்ச்சிநிரலை மூடி மறைத்து வைத்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சி குறித்து திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்கிறது.

இப்போது முதல் ஏழு கட்டங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தேர்தல்கள் முடிந்துவிட்டன. மீதம் உள்ள இரு கட்டங்களில் நடைபெறும் தேர்தல்களில் ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் தன் மதவெறிப் பற்களைக் காட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் தங்கள் வாழ்க்கையை கடுமையாகப் பாதித்துள்ள பொரு ளாதார சுமைகளிலிருந்து ஏதேனும் நிவாரணம் கிடைக்காதா என ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஊடகங்களோ மக்களின் கவனத்தை இதிலிருந்து திசைதிருப்பும் நோக் கத்துடன், உணர்ச்சிபூர்வமான (sensational) செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக் கின்றன. `இளவரசர் தன்ஆட்சியை ஒருமுகப் படுத்துவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்என்று மாக்கியவெல்லி அறி வுறுத்தினாரோ அதையெல்லாம் பாஜக/ஆர்எஸ்எஸ் கூடாரம் மிக அற்புதமாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதாவது, உங்கள் ஆட்சியில் எந்த அளவுக்கு மோசமாக மக்களை நடத்த முடியுமோ அந்த அளவுக்கு நடத்துங்கள். பின்னர் கொஞ்ச காலம் கழித்து அதனைக் குறைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மக்கள் உங்களையும், உங்கள் ஆட்சியையும் புகழத் தொடங்கிவிடுவார்கள் என்பதுதான் இதன்பொருள்.அதேபோன்று பாஜக சிறுபான்மை யினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக் களை’’ தங்கள் தலைவர்கள் மூலம் கட்டவிழ்த்துவிடும். பின்னர் அதனை சமாதானப்படுத்தக்கூடிய விதத்தில் அதன் `வல்லுநர்கள்பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை 41 மற்றும் 42ஆம் பக்கத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது என்றும் அதற்கு அது அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் பூசி மெழுகுவார்கள்.அடுத்த இரு கட்டத் தேர்தல் களின்போதும் ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் ஒரு பக்கத்தில் ஹிட்லரின் பாசிச பாணி பிரச்சார முறையைக் கட்டவிழ்த்துவிடக்கூடிய அதே சமயத் தில், மறுபக்கத்தில் இத்தகைய மாக்கிய வெல்லி தந்திரத்தையும் கையாளும் என்பது தெளிவாகி இருக்கிறது.

மதச்சார்பற்ற ஜனநாயக இந் தியக் குடியரசை, வெறிபிடித்த- சகிப்புத் தன்மையற்ற பாசிஸ்ட் இந்து ராஷ்ட் ரமாகமாற்ற வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தின் மிக ஆபத்தான நிகழ்ச்சிநிரல் இது. இத்தகையதொரு நிகழ்ச்சிநிரல் வெற்றி பெற அனுமதித்தோமானால், பின், நாடு இன்றுள்ளதுபோல் இருக்காது. எண்ணற்றோர் உயிரிழக்க வேண்டி யிருக்கும், இதுநாள் வரை ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த மக்கள், தங்கள் உடலுக்குள் மதவெறி விஷம் ஏற்றப்பட்டு, ஒருவருக்கொருவர் கடித்துக் குதறி உயிர் துறக்க வேண்டிய கொடூரம் நிகழும்.

இந்தியா இதுநாள்வரை கட்டிக்காத்து வந்த நாகரீக சமுதாயம் தடம்மாறி நிலை குலைந்து நின்றுவிடும். எனவே, நடைபெறும் தேர்தல் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் பதிலாக ஒரு மாற்று அரசாங்கத்தை, மாற்றுக் கொள்கைகளைப் பின்பற்றக்கூடிய விதத்தில் அமைத்திடக்கூடிய வகையில் மக்கள் அணிதிரள வேண்டியது மிகவும் அவசியம். அதுதான், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சிறந்ததோர் இந்தியாவை எதிர்காலத்தில் கட்டி எழுப்புவதற்கும் உதவிடும்.

தமிழில்: ச.வீரமணி