Sunday, February 16, 2025

ஒரு புரட்சியாளனின் பயணங்கள்-சௌகத் உஸ்மானி

ஒரு புரட்சியாளனின் பயணங்கள்-சௌகத் உஸ்மானி - ச.வீரமணி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கு முன்பே, நாட்டில் ஆட்சி செய்துவந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக நாடு முழுதும் பல்வேறு மையங்களில் பல்வேறு தோழர்கள் செயல்பட்டுவந்திருக்கின்றனர். அவர்களில் தோழர் சௌகத் உஸ்மானியும் ஒருவராவார். சௌகத் உஸ்மானி பிறந்த தேதி தெரியவில்லை. எனினும் அவர் ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் 1901இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. அவரது இயற்பெயர் மௌலா பக்ஷ் என்பதாகும். பின்னர் அவர் மௌலான சௌகத் அலி அவர்களின் தீவிர அபிமானியாக மாறியதால் தன் பெயரை சௌகத் உஸ்மானி என மாற்றிக்கொண்டார். 1917இல் நடைபெற்ற மாபெரும் அக்டோபர் புரட்சி, அநேகமாக அனைத்து ஒடுக்கப்பட்ட மற்றும் காலனியாதிக்க நாடுகளிலும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களின் மீது ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த சமயத்தில், ரஷ்யாவில் தொழிலாளர்கள்-விவசாயிகளின் செம்படை பெற்றிட்ட அற்புதமான வரலாற்றுச்சிறப்புமிக்க வெற்றிகள் சௌகத் உஸ்மானியிடம் மிகவும் எழுச்சியினையும் ஆர்வத்தினையும் ஏற்படுத்தியது. இதன் பாதிப்பின் காரணமாக சோவியத்யூனியனில் நடைபெற்றதைப்போல ஒரு செம்படைப் புரட்சியை இந்தியாவிலும் நடத்த வேண்டும் என்று சௌகத் உஸ்மானி விருப்பம் கொண்டார். இதே போன்ற கருத்து கொண்ட இளைஞர்கள் 85 பேர் இந்தியாவிலிருந்து, சோவியத் யூனியனுக்கு நடந்தே சென்றுள்ளார்கள். இதனைத் தோழர் சௌகத் உஸ்மானி, ஒரு புரட்சியாளனின் பயணங்கள் (சோவியத் யூனியனில் சிறிதுகாலம் தங்கியிருத்தல்) என்ற பெயரில் பாரதி புத்தகாலாயம் வெளியிட்டிருக்கிறது. எங்களின் தமிழாக்கத்தில் வெளிவந்துள்ள அதிலிருந்து ஒரு சிறு பகுதியை, தங்கள் பார்வைக்காகச் சமர்ப்பிக்கிறோம். புரட்சிப் பாதையில் மீண்டும் பயணம் அடுத்த நாள் காலை, காலை உணவு உண்ட பின், நாங்கள் தங்கியிருந்த பெரிய கூரைக் குடிசையிலிருந்து வெளியேறினோம். ஆக்சஸ் (Oxus) ஆற்றின் வலதுகரைக்கு வந்தபின்னர், இத்தனை காலமும் அதனை மீண்டும் கடக்கவில்லை என்று எங்களுக்குத் தெரியுமாதலால், நாங்கள் எங்கள் வழியைச் சரியானமுறையில் தீர்மானித்துக்கொண்டோம். எங்களில் மிகவும் உயரமானவர் வெண்கொடியை ஏந்திய வண்ணம் முன்னே செல்ல, நாங்கள் வட திசை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினோம். விரைவில் மீண்டும், நாங்கள் ரஷ்யப் புரட்சியாளர்களுடன் இணைந்தோம். எங்களுக்காக இரு பெரிய தங்குமிடங்கள் (barracks) ஒதுக்கப்பட்டன. மீண்டும் நாங்கள் ஒரு வசதியான வாழ்க்கை என்றால் என்ன என்றும், அதையும் விட மேலாக, சுதந்திரம் என்றால் அதன் பொருள் என்ன என்றும் தெரிந்து கொண்டோம். ஏராளமான ரேஷன்கள், நல்ல உணவு, நட்பு, மற்றும் படிப்பதற்கு புரட்சிகரமான இலக்கிய நூல்கள்! மரண தண்டனைக் கைதிகளாக இருந்து, அடிமைகளாக மாறி, இப்போது பசிபிக்கிலிருந்து பால்டிக் வரையும், வெண்கடலிலிருந்து இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான், துருக்கியின் எல்லை வரை வியாபித்திருக்கும் மாபெரும் குடியரசின் விருந்தினர்களாக மாறி இருக்கிறோம். மீண்டும் பிளவு ரஷ்யப் புரட்சியின் முக்கியத்துவம், கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் மீது, அதிலும் குறிப்பாக எங்களில் அறிவுஜீவிகளாக இருந்தவர்கள் மீது, ஒளியைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது. சுதந்திரம் என்றால் என்ன என்று அதன் உண்மையான பொருளுடன் பார்த்தோம். எதிர்ப்புரட்சியாளர்களாலும், ஏகாதிபத்திய வாதிகளாலும் திணிக்கப்பட்ட வறுமை இப்போதும் நீடித்த போதிலும்கூட, மக்கள் முன்பு இருந்ததைவிட மகிழ்வுடனும், திருப்தியாகவும் இருந்தார்கள். புரட்சி அவர்கள் மத்தியில் நம்பிக்கையையும், அச்சமின்மையையும் விதைத்திருந்தது. ஐம்பது விதமான தேசிய இனத்தவர்கள் மத்தியில் இங்கே ஓர் உண்மையான மனிதகுல சகோதரத்துவத்தைப் பார்க்க முடிந்தது. சாதி, மதம் என எதுவும் அவர்கள் ஒருவர்க்கொருவர் சுதந்திரமாகக் கலந்து வாழ்வதில் தடையை ஏற்படுத்திடவில்லை. ஒவ்வொரு நபரும் சிறந்த பேச்சாளராக மாற்றப்பட்டிருந்தார்கள். ஒரு தொழிலாளி, ஒரு விவசாயி, அல்லது ஒரு படைவீரர் தலைசிறந்த விரிவுரையாளர் போன்று வீராவேசமாக உரையாற்றுவதை ஒருவர் பார்க்க முடியும். அங்கிருந்து எங்கள் “வீரதீர” செயல்கள் துவங்குவதற்கு முன், டிர்மிஷ்சில் எங்களில் இருந்த ஒரு குழுவினரிடம் தலைதூக்கிய பிளவு மீண்டும் தலைதூக்கியது. அவர்களில் சிலர், துருக்கிக்குப் போவதற்கு வசதி செய்து தர வேண்டும் என்று மீண்டும் நச்சரிக்கத் தொடங்கினார்கள். உள்ளூர் பொறுப்பாளர்கள் அவர்களிடம், இது தொடர்பாக முடிவு எடுப்பதற்கு எங்களுக்கு உரிமை இல்லை என்றும், இதை தாஷ்கண்டில் உள்ள மத்திய நிர்வாகம்தான் தீர்மானித்திட முடியும் என்று கூறியும் அவர்கள் கேட்கத் தயாராயில்லை. நாங்கள் அவர்களிடம், என்ன நடந்தாலும் சரி, உங்களுடன் வர நாங்கள் தயாரில்லை என வெளிப்படையாகவே தெரிவித்து விட்டோம். அடிமைகளாக இருந்த சமயத்தில் கடவுள் கிருபையால் நாம், மீண்டும் போல்ஷ்விக்குகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டால், அவர்களின் அறிவுரையை மீறி மீண்டும் எதுவும் செய்யமாட்டோம் என்று உறுதிமொழி அளித்ததை அவர்களுக்கு நினைவு கூர்ந்தோம். எனினும் அனைத்தும் வீணானது. பின்னர் நாங்கள், எங்கள் அணுகுமுறையில் பொதுவான அம்சம் இல்லை என்கிற முடிவுக்கு வந்தோம். செஞ்சேனையில் இணைந்தோம் ஒரு சில தினங்களில், துர்க்மேன் எதிர்ப்புரட்சியாளர்கள் அவர்களின் கடைசி சண்டைக்குத் தயாரானார்கள். அவர்கள் கெர்கியைச் சுற்றியுள்ள அனைத்து திசைகளிலிருந்தும் திரண்டு வந்தார்கள். கெர்கியை முற்றுகையிட்டார்கள். ஆற்றங் கரையிலிருந்து நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு ஒரு வீரரின் சடலத்தைக் கொண்டுவந்ததை நாங்கள் பார்த்தோம். துருக்கிக்கு வெளியேறத் துடித்துக்கொண்டிருந்தவர்கள் ‘நாமும் ரஷ்யர்களுடனும், சிவப்பு துர்க்மேனியர்களுடன் இணைந்து, எதிர்ப்புரட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வேண்டும்’ என்று கோரியதை ஏற்க மறுத்தார்கள். ஐயகோ! எங்கள் அறிவுரையை மீறிச் சென்ற அக்குழுவிலிருந்தவர்களில் பத்து பேரை நாங்கள் இழந்துவிட்டோம். சிலர் எதிர்ப்புரட்சி யாளர்களால் சிறைப்படுத்தப்பட்டிருந்தபோது கொல்லப் பட்டார்கள். இருவர் மட்டும் ஆப்கானிஸ்தானுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக அறிந்தோம். இவ்வாறு இவர்களுடன் ஒத்துப்போகாத நாங்கள், எங்களில் 36 பேர், ஆயுதமேந்த எங்கள் விருப்பத்தினைத் தெரிவித்தோம். எங்கள் பிரதிநிதிகள் புரட்சிக் குழுவின் தலைவரை அணுகினார்கள். அவர் எங்கள் முடிவைப் பாராட்டினார். ஆற்றின் முன்புரத்தில் சண்டையிட நாங்கள் நியமிக்கப்பட்டோம். நகரின் கோட்டை வாசலின் முன்பாக ஐயாயிரம் எதிர்ப்புரட்சியாளர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். ஆற்றின் மறுபக்கத்தில் மூவாயிரம் பேர் நின்று கொண்டிருந்தார்கள். கோட்டைமுன் நின்று கொண்டிருந்த ஐயாயிரம் பேர் சார்பில் சமிக்ஞை கிடைத்தவுடன் தாக்குவதற்குத் தயாரான நிலையில் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால், எங்கள் பக்கத்தில் ரஷ்யர்களும், சிவப்பு துர்க்மேன்களும் 300 பேர் மட்டுமே இருந்தோம். நகரம் மிகப்பெரிய ஒன்றுதான். சுமார் 20 ஆயிரம் பேர் வாழ்ந்து வந்தார்கள். எனினும், அந்த சமயத்தில் பிற்போக்கு மற்றும் அமீர் ஆதரவு பிரச்சாரத்தை முல்லாக்களும், அவருடைய ஏஜண்டுகளும் செய்து கொண்டிருந்ததால், மக்களின் மனோபாவத்தை அந்த சமயத்தில் சரிவரத் தீர்மானிக்க முடியவில்லை. ஆற்று முனையைப் பாதுகாப்பதற்கு மிகப்பெரிய அளவில் போர்த்தந்திரம் தேவைப்பட்டது. நிலைமைகளை மிகவும் திறமையான முறையில் கையாள வேண்டியிருந்தது. இதில் ஏதேனும் தோல்வி எற்பட்டால், நாங்கள் உயிரிழப்பதுடன் மட்டுமல்லாது, பாதுகாப்பு அரணையும் இழக்க வேண்டி வரும். ஆனால் நாங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் 36 பேரும் பலதரப்பட்டவர்கள். எங்கள் போர்த்திறனும் உண்மையில் பெரிய அளவிற்குப் பரீட்சித்துப்பார்த்த ஒன்றுமல்ல. எனினும், எங்களுக்கு வேறு எந்த வழியும் கிடையாது. ஒன்று போரிட்டு சாக வேண்டும், அல்லது எங்கள் கண் முன்னாலேயே நகரம் சூறையாடப்படும். நாங்கள் பிற்போக்குவாதிகளின் கைகளில் வீழ வேண்டும். அதன்மூலம் நாங்கள் ஓர் இழிவான மற்றும் கோழைத்தனமான மரணத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேலும், அக்டோபர் புரட்சியின் லட்சியத்திற்காகவும், போல்ஷ்விக்குகள் மற்றும் முற்போக்கு பொகாரன்களுடன் இணைந்து உலகில் விடுதலையை நேசிக்கும் அனைத்து மக்களின் லட்சியத்திற்காகவும் போராட வேண்டும் என்று நாங்கள் வாதிட்டோம். இப்போது நாங்கள் அங்கே இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. புரட்சியாளர்களுக்கு என்ன நடக்குமோ அதை நாங்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும். எனவே, நாங்கள் எங்கள் படைப்பிரிவை அமைத்தோம். புரட்சிக் குழுவின் தலைவரிடம் எங்களின் கடைசி ரத்தம் உள்ளவரைக்கும் எதிர்ப்புரட்சியாளர்களுக்கு எதிராகப் போராடத் தீர்மானித் திருக்கிறோம் என்று கூறினோம். எங்களின் வைராக்கிய உணர்வு ரஷ்யர்கள் மற்றும் இதர தோழர்களின் மத்தியில் தார்மீக ரீதியாக சாதகமான விளைவை ஏற்படுத்தியது. நாம் தனியாக இல்லை என்கிற உணர்வை அவர்களுக்குக் கொடுத்தது. ஒட்டுமொத்த ஆற்றின் முனையையும் பாதுகாத்திட உறுதிபூண்டோம். எங்களுக்கு துப்பாக்கிகளும், கைத்துப்பாக்கிளும் அளிக்கப்பட்டன. எங்களின் மிகவும் குறைவான லக்கேஜ்களை எங்களுடன் எடுத்துக்கொண்டு, ஆற்று முனையில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்றோம். அங்கே, நாங்கள் எங்கள் படைப் பிரிவுகளை தலா 18-18 பேராகப் பிரித்துக்கொண்டோம். ஆற்றுமுனையில் எங்கள் படைப்பிரிவின் நடவடிக்கைகள் குறித்து எழுதுவது தற்புகழ்ச்சி போன்று தோன்றக்கூடும். கடுங்குளிர் மற்றும் சூறைக்காற்றுடன் செப்டம்பர்-அக்டோபர் மழையில் நனைந்துகொண்டு, மறைகுழிக்குள் வாழ்க்கை நடத்தினோம் என்கிற ஒரேயொரு விஷயத்தை மட்டும் என்னால் கூறாமல் இருக்க முடியாது. அது, உற்சாகம் அளிக்கக்கூடியதாகவும், எளிதாகவும் இல்லைதான். எனினும், மிகவும் விறு விறுப்பாகவும், எழுச்சியூட்டக்கூடிய விதத்திலும் இருந்தது. மாபெரும் அக்டோபர் புரட்சிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம் என்கிற திருப்தி எங்களுக்கு இருந்தது. ரஷ்யத் தோழர்கள் அளித்த இந்த சலுகைக்காக நாங்கள் மிகவும் பெருமிதம் கொண்டோம். கெர்கி புரட்சிக்குழுவின் தலைவர் எங்கள் தலைமையகத்திற்கு அடிக்கடி வந்து சந்தித்தார். வரும்போதெல்லாம் எங்களை மிகவும் பாராட்டிவிட்டுச் சென்றார். ஒருநாள் காலை, நான் ரோந்துப் பணியிலிருந்தபோது, ஒரு படகின் அருகில் ஒருவன் தன் கால், கை, முகத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். படகின் அருகில் அவன் வெகுநேரம் நின்றதும், அந்தப் படகை அவிழ்ப்பதற்காக அவன் மிகவும் சிரமப்பட்டதும், எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. நான் உதவிக்காக சீழ்க்கை ஒலியை ஏற்படுத்தினேன். பின் நான் என்னுடைய துப்பாக்கியுடன் சுடத் தயாரான நிலையுடன் அவனை அணுகினேன். “நீ நிற்கும் இடத்தைவிட்டு நகராதே,” என்று அவனை எச்சரித்தேன். அவன் ஆரம்பத்தில் ஓட எத்தனித்தான். ஆனால், பின்னர் மனம்மாறி அங்கேயே நின்றுவிட்டான். இந்த சமயத்தில் மற்றொரு வீரரும் (இப்போது நாங்கள் எல்லாம் வீரர்கள்) எனக்கு உதவுவதற்காக வந்து சேர்ந்தார். அவனை சோதிப்பதற்காக அவனிடம் சென்றேன். அவனுடைய டிரவுசர் பாக்கெட்டில் ஒரு கடிதம் வைத்திருந்தான். அந்தக் கடிதம் துர்க்மேன் மொழியில் இருந்ததால் எங்கள் எவராலும் அதனைப் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னர் அவனைக் கைது செய்து புரட்சிக் குழுவின் தலைவரிடம் ஒப்படைத்தோம். அந்தக் கடிதத்தின் வாசகம், பொகரான் கமிசாரால் மொழிபெயர்த்து அவருக்குக் கூறப்பட்டது. அதில் உள்ள வாசகங்கள் என்ன என்று தெளிவானவுடனேயே அவர் எங்களிடம் வந்தார். எங்களை உயரத் தூக்கி, சந்தோஷத்திற்கிடைய, “இந்தியத் தோழர்கள் நீடூழி வாழ்க!” “இந்திய சுதந்திரத்திற்கான லட்சியம் வெற்றி பெறட்டும்!” “கெர்கி பாதுகாப்பாளர்கள் நீடூழி வாழ்க!” என முழக்கமிட்டார். எங்களுக்கு ஒரே திகைப்பு. இது எங்களை மிகவும் தடுமாற்றத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. பொகாரா கமிசார் எங்களிடம் அந்தக் கடிதம் ஒரு பிற்போக்குக் குழுவால் எழுதப்பட்டது என்று தெரிவித்தார். அதிலிருந்த வாசகங்கள் கிட்டத்தட்ட கீழ்வருமாறு அமைந்திருந்தது: “நீங்கள் இங்கே மூவாயிரம் பேர் இருக்கிறீர்கள். அங்கே உங்களுக்கு எதிராக இந்தியர்கள் 36 பேர் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நீங்கள் பயந்து சாவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? ஒருசில இந்தியர்களின் போர்த்தந்திரம் உங்களின் வீரத்தை காலாவதியாக்கி இருக்கிறது. வாருங்கள்: நாங்கள் உங்களுக்காகத் தயாராயிருக்கிறோம். 36 இந்தியர்களுக்கு எதிராக நீங்கள் 72க்கும் மேற்பட்டவர்களை அனுப்பவேண்டிய தேவையில்லை. நகரம் உங்கள் வசப்படும்.” அக்டோபர் பதினைந்து தேதி வரையிலும் நாங்கள் மறை குழிக்குள் இருந்தோம். அப்போது சிறிய, நீராவிப் படகு வந்து, எங்கள் பக்கத்தில் நங்கூரமிட்டது. படகின் குழுவினர் மிகவும் குறைவுதான். எனினும் அதன் உயரத்தில் ஒரு துப்பாக்கி (gun on board) இருந்தது. இந்த சமயத்தில் செஞ்சேனையினர் தெற்கு துர்கிஸ்தானில் எதிர்ப்புரட்சியாளர்களுக்கு எதிராக அனைத்துப் பக்கங்களிலிலிருந்தும் தாக்குதல் தொடுக்கத் தொடங்கி இருந்தார்கள். எதிர்ப்புரட்சியாளர்கள் சரண் எதிர்ப்புரட்சியாளர்களின் எதிர்ப்பு அடித்துநொறுக்கப்பட்டது. அனைத்து முனைகளிலும் அவர்கள் சரணடைந்தார்கள். புரட்சிக்குழு துரிதமாகச் செயல்பட்டு தவறாக வழிநடத்தப்பட்ட விவசாயிகளை வென்றடையும் விதத்தில் அனைவருக்கும் பொது மன்னிப்பு அறிவித்தது. இரண்டே வாரங்களுக்குள், சண்டையிட்டவர்கள் நண்பர்களாக மாறினார்கள். சோவியத் அதிகாரம், அமீரின் நுகத்தடியிலிருந்தும், தங்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டிருந்த நிலப்பிரபுக்களின் சுரண்டலிலிருந்தும் முழுமையாக விடுவித்திடுவதற்காகவே இருக்கிறது என்பதை துர்க்மேன்கள் உணர்ந்துகொள்ள அதிக காலம் பிடிக்கவில்லை. புரட்சி எதற்காக என்று அவர்களுக்குத் தெரிந்தபின்னர், அவர்கள் அதனை எதிர்க்க விரும்பவில்லை. அவர்கள் மனந்திருந்தி திரும்பி வந்தார்கள். கொஞ்ச காலத்திற்கு முன்பு குண்டுகள் பொழியும் சத்தத்தைத்தவிர வேறெதுவும் கேட்காது, போர்க்களம் போல் காட்சியளித்த கெர்கியும், டிர்மிஷ்சும் மீண்டும் ஒருமுறை அமைதிப் பகுதியாக மாறியது. பொகாராவிற்காகப் புறப்பட்டோம் என் நினைவு சரியாக இருக்கும்பட்சத்தில், நாங்கள் போர்முனையில் சுமார் ஒரு மாத காலம் இருந்தோம். அக்டோபரின் இறுதியில் (சற்று முன்னதாகக் கூட இருக்கலாம்) வலுவான படைப்பிரிவுகள் அங்கே வந்து சேர்ந்தன. பின்னர் எங்கள் பணிகள் விட்டொழிக்கப்பட்டது. தாஷ்கண்டுக்குக் செல்வதற்குத் தயாராக இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம். ஆக்சஸ் வழியே ஓர் உற்சாகமான பயணத்தை மேற்கொண்டோம். கெர்கியில் எதிர்ப்புரட்சியாளர்களுக்கு எதிராக ஆற்றின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சமயத்தில் எங்களுக்குப் பக்கபலமாக வந்து நங்கூரமிட்டு நின்ற அதே நீராவிப்படகுதான், எங்களை வடக்குப் பக்கமாக இழுத்துச் சென்றது. நாங்கள் போகும் வழியில் கிராமப்புறங்களில் மிச்சமீதமிருந்த எதிர்ப்புரட்சி சக்திகளைக் கண்டறிந்து, களையெடுக்கும் பணியைச் செய்து கொண்டே சென்றோம். செஞ்சேனைத் தோழர்கள் திருப்தியுறும் விதத்தில் நாங்கள் எங்கள் கடமைகளைச் செய்தோம். பயணத்தின் இரண்டாம் நாளன்று மாலை, நாங்கள் சர்ஜூயி (Charjui) போய்ச் சேர்ந்தோம். இங்கே எங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ இசைக்குழுவினர் எங்களை வாழ்த்தி முழங்கிக் கொண்டிருந்தன. மக்கள், “கெர்கியைப் பாதுகாத்த வீரர்கள் நீடூழி வாழ்க” என்று வீறாவேசத்துடன் முழக்கமிட்டார்கள். சர்ஜூயியில் இரண்டு நாட்கள் தடபுடலாக விருந்து. நாங்கள் இந்த நகரை விரும்பினோம். ஒரு திரைப்படத்திற்கும் போகத் திட்டமிட்டிருந்தோம். எனினும், திடீரென்று, மேற்கொண்டு பயணத்தைத் தொடங்க தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டோம். இந்த அழகான நகரத்தில் மேலும் கொஞ்ச நேரம் இருப்பதற்கு விரும்பினோம். எனினும் பெரிய மசூதிகள், தங்கம் பதித்த கூம்பு வடிவத்திலிருந்த தேவாலயங்கள், பூங்காக்கள், தியேட்டர்கள் நிறைந்த இந்த நகரத்தை விட்டு புறப்பட்டோம். எங்களை உடனடியாகப் புறப்படச் செய்ததற்கான காரணம், தாஷ்கண்ட் அதிகாரிகளிடமிருந்து வந்த ஒரு தந்தியாகும். அதில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக எங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. பொகாரா நிர்வாகம், தாஷ்கண்ட் மத்திய அதிகாரக் குழுமத்திடம் எங்களை எமிரேட் வீழ்ந்த பின் இடைக்கால நகரமாக விளங்கும் அந்த நகரத்தில் தங்கியிருக்கும் சமயத்தில் நடைபெறும் விழா வைபவங்களைக் கண்டு களித்திட அனுமதித்திடுமாறும் கேட்டுக் கொண்டிருந்தது. தாஷ்கண்ட் தாஷ்கண்டில் நாங்கள் சந்தித்த இந்தியர்களுக்கு இரண்டு இல்லங்கள் இருந்தன. இந்தியன் இல்லம் மற்றும் பொகாரா இல்லம். எம்.என்.ராய், அபானி முகர்ஜி, சஃபீக் (Shafique), முகமது அலி (பின்னர் இவர் சிபாசி (Sepasi) என்னும் புனைபெயரால் அறியப்பட்டார்) ஆகியவர்களும் மற்றும் சில சோவியத் தோழர்களும் பொகாரா இல்லத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இந்த இல்லம் முன்பு பொகாராவின் அமீரின் பிரதிநிதிகளுக்கான இல்லமாக இருந்தது. இப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் தலைமையின் இல்லமாக இருந்தது. எங்களை இந்தியன் இல்லத்தில் (Indiiski Dom) தங்க வைத்தார்கள். இங்கே, மௌலானா அப்துல் ரப் (Maulana Abdul Rab), எம்.பி.டி.ஆச்சார்யா, அமின் சித்திக் மற்றும் பரூக்கி என்பவர்கள் தங்கி இருந்தார்கள். அன்று மாலை இந்தியன் இல்லத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. எம்.என்.ராய் மற்றும் அபானி முகர்ஜி அதில் உரையாற்றினார்கள். இங்கே தங்கள் குழு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்து அவர்கள் விரிவாகப் பேசினார்கள். பின்னர் எங்களிடம் ‘நீங்களும் எங்களுடன் இணைந்துகொள்ள விருப்பமா’ எனக் கேட்டார்கள். இந்தியாவில் எப்படி வேலையைத் திட்டமிடுவது என்பது குறித்து ராய் அளித்த யோசனைகளை, எங்கள் குழுவிலிருந்த பலர் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அவருடன் இணைந்தனர். நானும், அக்பர் கான் குரேஷியும், அப்துல் மஜீத்தும் மற்றும் சிலரும் நடுநிலை வகித்தோம். நாங்கள், ராயிடம், “உங்களுடைய முன்மொழிவினை ஆராய்ந்துபார்த்து பின் உங்கள் குழுவில் சேர்ந்துகொள்வோம்,” என்றோம். ராய், மார்க்சியம் குறித்து ஆழமான அறிவினைப் பெற்றிருந்தார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் (Comintern-Communist International) இந்தியப் பிரிவுக்குப் பொறுப்பு வகித்தார். நாங்கள், மௌலானா அப்துல் ரப் தலைமையிலான குழுவைக்காட்டிலும், ராய் தலைமையிலான குழுவிடம் அதிக சாய்மானம் கொண்டோம். ஆச்சார்யா, அதிக காலம் அண்டிஜானில் (Andijan) இருந்தார். அங்கே அவர் கஷ்காரி புரட்சியாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அவ்வப்போது தாஷ்கண்டுக்கு வந்து சென்றார். மேலும், இந்தியப் போராளிகளுக்கு செஞ்சேனையின் உதவி கிடைப்பதற்குரிய சரியான சந்தர்ப்பம் வாய்த்திருப்பதாக எங்களிடம் ராய் நம்பிக்கை ஏற்படுத்தியிருந்தார். இதுதான் அவரிடம் எங்களை அதிக அளவில் ஈர்த்ததற்கான காரணமாகும். ஆனாலும் ஆப்கானிஸ்தானத்தின் அமீர், சோவியத் தோழர்கள், அவருடைய நாட்டின் வழியே இந்தியா வருவதற்கு அனுமதி கொடுப்பதற்கு எதிராக இருப்பதாக, ராய் சொன்னார். இது, சோவியத் எல்லைக்குள் நுழைவதற்கு மேலும் இந்திய முஹாஜிரீன்களை அனுப்புவதற்கு அனுமதி மறுத்திருந்த ஆப்கன் அரசாங்கத்தின் அணுகுமுறைக்கு மிகவும் சரியாக ஒத்திருந்தது. ஆனாலும், ஆப்கன் அரசாங்கத்தின் நட்பற்ற அணுகுமுறை இவ்வாறு இருந்தபோதிலும், தாஷ்கண்டில் எங்களின் எண்ணிக்கை, சுமார் இரு ராணுவப் படைப்பிரிவுகளை அமைக்கும் அளவுக்கு அதிகரித்திருந்தது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைமையின் கீழ், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிமைத்தனத்திலிருந்து, இந்தியாவை விடுவிப்பதற்காக சுமார் 50 ஆயிரம் அல்லது 75 ஆயிரம் வீரர்களை அனுப்பிவைத்திட, சோவியத் ரஷ்யா ஒப்புக்கொண்டிருப்பதாக, இந்திய வட்டாரங்களில் செய்திகள் சுற்றிக்கொண்டிருந்தன. இதற்கிடையில் கம்யூனிஸ்ட் அகிலம் இந்தியப் புரட்சிக்காக சுமார் 14 மில்லியன் தங்க ரூபிள்கள் ஒதுக்கியிருந்ததாகவும், ராய்-ஆச்சார்யா கருத்துவேறுபாடுகளின் விளைவாக வெளிவந்த செய்திகள் தெரிவித்தன. இது வதந்தியா, வெட்டிப்பேச்சா அல்லது செய்தியா என்று என்னால் உறுதிப்படுத்தவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை. எனினும், கம்யூனிஸ்ட் அகிலம், இந்தியாவின் லட்சியத்திற்காக அளப்பரிய அளவில் உதவி இருக்கிறது என்பதையும், அதன் பொக்கிஷங்களின் சாவிகள் எம்.என்.ராயிடம் இருந்தன என்பதையும் என்னால் நம்பிக்கையுடன் கூற முடியும். தாய்நாட்டிற்கு வெளியே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயம் (Emigre Communist Party of India Founded) அக்டோபரின் இறுதியை இப்போது நெருங்கியிருந்தோம். தாய்நாட்டிற்கு வெளியே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை அமைப்பதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன. இத்தகைய துணிச்சலான நடவடிக்கைக்கான பிரதான முயற்சி ராய் மற்றும் முகர்ஜி தலைமையிலான குழுவிடமிருந்து வந்திருந்தது. என் நினைவு சரியாக இருக்குமானால், கட்சி 1920 நவம்பர் 7 அன்று அதிகாரபூர்வமாகத் துவக்கப்பட்டது. முகமது சஃபீக், கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர், ராஜா மகேந்திர பிரதாப், மௌலானா பரகதுல்லா மற்றும் காபூலில் ஒபீதுல்லா சிந்தி ஆகியோரால் நிறுவப்பட்டிருந்த தற்காலிக அரசாங்கத்தின் முன்னாள் உறுப்பினர். (a former member of the Provisional Government established by Raja Mahendra Pratap, Maulana Barkatullah and Obeidullah Sindhi in Kabul). நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சுமார் ஆறு மாத காலம் இணைந்துகொள்ளாமல் இருந்தேன். இதற்கான காரணம் மிகவும் எளிது. எனக்கு மார்க்சியம் என்றால் என்ன என்றே தெரியாது. என்னுடைய பிரதான குறிக்கோள், ஒரு ராணுவ வீரனைப்போல சண்டையிட வேண்டும் என்பது மட்டுமேயாகும். இந்தியாவை விடுவிப்பதற்கான போராளிகளில் ஒருவனாக இருக்க விரும்பினேன், அவ்வளவுதான். ராயுடன் நடைபெற்ற ஒரு சந்திப்பின்போது அவர், புரட்சிக்குழு அலுவலகத்திற்குச் சென்று, அங்கே ஒரு சிறு அலமாரியில் வைக்கப்பட்டிருந்த சில ஆங்கிலப் புத்தகங்களை எடுத்துவருமாறும், அவற்றைப் படிக்குமாறும் கேட்டுக் கொண்டார். அவருடைய அறிவுரையின்படி புரட்சிக்குழு அலுவலகத்திற்குச் சென்று, பாரசீக மொழியிலும், ஆங்கிலத்திலும் இருந்த சில பிரசுரங்களை எடுத்துக்கொண்டேன். அவற்றைப் படிக்கத் தொடங்கினேன். பூர்ஷ்வா (bourgeoisie), தொழிலாளி வர்க்கம் (புரலிடேரியட்) (proletariat), குட்டி-பூர்ஷ்வா (petty-bourgeoisie), தொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம், (dictatorship of the proletariat) போன்ற சொற்றொடர்கள் எனக்கு மிகவும் வேடிக்கையாகத் தெரிந்தன. இத்தகைய சொற்றொடர்களைப் படிக்கும்போதெல்லாம் என்னையறியாமலேயே எனக்குச் சிரிப்பு வந்ததை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் நடந்துகொள்ளும் விதத்தைக் கண்டு, என்னுடன் தங்கியிருந்தவர்களுக்கும் வேடிக்கையாக இருந்தது. ஒரு சமயம், தொழிற்சங்கவாதம் (trade unionism) குறித்து, படிக்குமாறு என்னை ராய் கேட்டுக்கொண்டபோது நான் சிரித்துவிட்டேன். நான் ஒன்றும் வர்த்தகம் (trade) புரிவதிலோ அல்லது தொழில் நடத்துவதிலோ (industry) ஆர்வம் உள்ளவன் இல்லை என்று அவரிடம் கூறினேன். இதைக்கேட்டதும் ராயும், அவருடைய அமெரிக்க மனைவியும் சிரிப்பை அடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இப்போது நாங்கள், எஸ்கி-ஷேஹரின் (பழைய நகரத்தின்) தெருக்களில் இயங்கத் தொடங்கினோம். அங்கே மக்களுடன் எங்களுக்குத் தெரிந்த பாரசீக மொழி மற்றும் துர்கிஷ் மொழிகளின் உதவியுடன், அவர்களுடன் கலந்துரையாடினோம். எங்கள் கருத்துக்களை ஆர்வத்துடன் கேட்டார்கள். லெனினிஸ்ட் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எங்கள் அறிவு நாளுக்கு நாள் வளரத்தொடங்கியது. புதிய பார்வை, புதிய தொலைநோக்கு என் கண் முன்னால் விரியத் தொடங்கின. என்னுடைய பார்வை, படிப்படியாக விசாலமடையத் தொடங்கியது. சொத்தின் பரிணாம வளர்ச்சி, மனிதனின் பரிணாம வளர்ச்சி, வரலாற்றுப் பொருள்முதல்வாதம் குறித்துக் கற்றுக்கொண்டேன். இப்போது நான் உண்மையிலேயே மார்க்சியத்தை ஆழமாகக் கற்கத் துவங்கினேன். படிப்பதில் நிறைய நேரத்தைச் செலவு செய்தேன். ஆழமான புத்தகங்களை மணிக்கணக்காகப் படித்தேன். புதிய சிந்தனைகளில் பொதிந்துள்ள உண்மைகளைத் தெரிந்துகொள்ளத் தொடங்கிய பின்னர் இதன் மீதான நம்பிக்கை மேலும் மேலும் அதிகரித்தது. நான் கற்ற புதிய கருத்துக்களை, இதர தோழர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினேன். மாணவனாக இருந்த நான், புதிய சிந்தனைகளின் பரப்புரையாளராக மாறினேன். இதைத்தான் ராய் என்னிடமிருந்து எதிர்பார்த்தார். . “…இப்போது அவருடைய பேச்சுக்கள் உடனடியாகப் புரிந்து, செல்வாக்கு செலுத்தத்தொடங்கியது. …” இன்னும் மனம்திறந்து சொல்லவேண்டுமென்றால், நான் இது தொடர்பாக கற்றுக்கொண்ட தத்துவார்த்த அறிவுடன் திருப்தியடையவில்லை. இதன் அடிப்படையில் உள்ளூரில் உள்ள மக்களையும் பார்க்க விரும்பினேன். புதிய சிந்தனைகள் குறித்து முஸ்லீம்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினேன். இருப்பினும், சூழ்நிலைகள் எங்களை எங்களின் ராணுவ ஆசைகளை மறந்துவிடுமாறு எங்களுக்கு நிர்ப்பந்தம் அளித்தன. மற்றவர்களின் கோஷ்டிச் சண்டைகளின் சுழல்களுக்குள் எங்கள் தனித்துவம் காணாமல் போய்விட்டது. நாங்கள் மெய்யாகவே அவர்களின் எரிபொருளாக மாறியிருந்தோம். மாபெரும் தத்துவவாதிகள் இந்தியப் புரட்சிக்கான தத்துவார்த்தப் பின்னணியைக் கட்டி எழுப்புவதுபற்றிய வாதங்களுக்குள் எங்களை அமிழ்த்திக் கொண்டிருந்தார்கள். இவ்வாறாக செஞ்சேனையின் உதவியுடன் இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்கிற கனவுகள் வெறும் கதையாக மாறியது. இதில் சோவியத் தோழர்கள் மீது எவ்விதத் தவறும் கிடையாது. மாறாக, இந்திய மண்ணில் பிறந்தவர்களால், எதிர்காலத்தில் இந்தியாவில் புரட்சியை முன்னெடுத்துச் செல்லக்கூடிய பரப்புரையாளர்களாக மாற்றப்பட்டு எங்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகளால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். இவ்வாறுதான், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் இந்திய பூர்ஷ்வாக்களின் கூட்டாட்சியைத் தூக்கி எறிவதற்காக நாங்கள் செம்பதாகைகளுடன் அணிவகுக்கப்பட்டுக் கொண்டிருந்தோம். இவ்வாறு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. மார்க்சியத்தைக் கற்கத் தொடங்கினோம்.” சோவியத் யூனியனில் சௌகத் உஸ்மானி கற்ற கல்வி, அவருக்குள்ளே மார்க்சிய-லெனினியத்தின் உண்மையான போதனைகளைப் படிப்படியாகப் புகட்டி அவரைத் தெளிவு படுத்தியது. அதன்பின்னர், சோவியத் யூனியன் அவருக்கு உத்வேகமூட்டும் ஒரு நாடாக மாறியது. புகழ்மிக்க அந்நாட்டின்மீது அவருக்கிருந்த அளவிடற்கரிய அன்பு அவரை மூன்று முறை அந்நாட்டிற்குச் சென்றுவர அவரைக் கட்டாயப்படுத்தியது. இந்த அனுபவங்கள் அனைத்தையும் இந்தப் புத்தகத்தில் அவர் எழுதியிருக்கிறார். இந்தப் பயணங்கள், வெவ்வேறான மூன்று கால கட்டங்களில், வெவ்வேறான சூழ்நிலைகளில், மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு முறையும் அந்நாட்டிற்குச் சென்று அந்நாட்டு மக்களுடன் இரண்டறக் கலந்தபின் அவருடைய சிந்தனைகளும் செயல்பாடுகளும் அபரிமிதமான அளவில் வளம் பெற்றன. பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டிருக்கிறது. ஒவ்வொரு தோழரும் அதனை வாங்க வேண்டியதும் வாங்கிப் படிக்க வேண்டியதும் அவசியமாகும். ...