Wednesday, November 27, 2024
Tuesday, November 26, 2024
இலங்கை: மக்கள் எங்களுக்கு அளித்துள்ள அதிகாரத்தை மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்திடப் பயன்படுத்துவோம் ஜேவிபி பொதுச் செயலாளர் தில்வின் சில்வா உறுதி
Monday, November 25, 2024
Sunday, November 24, 2024
Saturday, November 23, 2024
Sunday, November 17, 2024
Monday, November 11, 2024
Tuesday, November 5, 2024
வைகறைவாணனும் நானும்.
வைகறைவாணனும் நானும்.
ச.வீரமணி
~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் 1970களில் மன்னார்குடியில் வேலை பார்த்த சமயத்தில் மன்னை பேருந்து நிலையத்தில் உள்ள புத்தகக்கடைகளை மேய்ந்தபோது, ‘மனிதன்’ என்று ஒரு சிவப்பிலக்கிய இதழ், புதிதாக வெளிவந்த இதழ், அட்டைப்படத்தில் ஓர் உழைப்பாளி தன் கைவிலங்கை முறித்துக்கொண்டு ஓடிவருவது போன்ற படத்துடன் வெளிவந்ததைப் பார்த்தேன். உடனே அதனை வாங்கிவிட்டேன்.
பின்னர் நான் திருவையாறு, நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு மாற்றலாகிவந்தபோது, திருவையாறில் செந்தமிழ்வேங்கை என்கிற ப.ஜெயபாலன் என்பவர் ‘மனிதன்’ இதழ் வரவழைத்து விநியோகம் செய்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டு, அவர் தங்கியிருக்கும் அறையைத் தேடிச் சென்றேன். வெளியில் ஒரு சிறு பெயர்ப்பலகை. அதில் செந்தமிழ் வேங்கை, இளமுருகன், மெய்யடியான், திருவேங்கடம் என்னும் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இளமுருகன், அப்போது தமிழ்க்கல்லூரியில் இறுதி ஆண்டில் படித்து வந்தார். அவரிடம், செந்தமிழ்வேங்கை இருக்கிறாரா என்று கேட்டேன். அவர் ‘நீங்கள் யார்?’ என்று என்னை வினவ, நான் ‘நீதிமன்றத்திலிருந்து வருகிறேன்’ என்றதும் சற்றே அவர் துணுக்குற்றார் என்றே கருதுகிறேன். பின்னர் சிறிது நேரம் பேசியபின் சரளமான உணர்வுக்கு வந்து, ‘ஜெயபாலன் கடைவீதியில் உள்ள ‘திருவையாறு கபே’ என்னும் உணவுவிடுதியில் மூலையில் உள்ள மேசையில் உட்கார்ந்து கணக்கு எழுதிக்கொண்டிருப்பார். போய்ப் பாருங்கள்’ என்று அனுப்பி வைத்தார்.
அப்போது பார்த்த, வைகறையின் புன்னகை முகம் இப்போதும் என் நெஞ்சில் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது. பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த, ஒருசில நிமிடங்களிலேயே நாங்கள் ஒன்றிப் போனோம்.
அடுத்து, ந.விஜயரங்கனும் திருவையாறு நீதிமன்றத்திற்கு மாற்றலாகி வந்தபின், அநேகமாக மூவரும் இணைபிரியாது இருந்தோம். தோழர் சி.அறிவுறுவோன் எங்கள் மூவரையும் அநேகமாக தன்னுடைய அன்புப் பிணைப்பில் கட்டிப்போட்டிருந்தார் என்று சொன்னால் மிகையல்ல.
1975இல் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட சமயத்தில், வைகறைவாணன் தலைமையில் கமுக்கமாக எவ்வளவோ செய்திருக்கிறோம். தோழர்கள் ஏ.கே.கோபாலன், இரா.செழியன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள், தமிழாக்கம் செய்யப்பட்டு, வந்ததை, தட்டச்சு செய்து, உருளச்சு முறையில் பல படிகள் எடுத்து, பரப்பியிருக்கிறோம். தோழர் சிகரம் செந்தில்நாதன் அவர்களை வரவழைத்து திருவையாறில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் கூட்டம் நடத்தி இருக்கிறோம்.
தோழர் வைகறைவாணனிடம் உள்ள அசாத்திய திறமை எவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக இருந்தாலும் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு, மிகச் சிறப்பாக நடத்திடுவார்.
ஒருதடவை தோழர் கோ.வீரய்யன் மற்றும் தோழர் வே.ஆனைமுத்து இருவரையும் வரவழைத்து, ஒரே மேடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும், பெரியார் சமஉரிமைக் கட்சி குறித்தும் பேச வைத்தார்.
திருவையாறு என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, திருவையாறு தியாகேசர் கீர்த்தனாவாகும். அதைப்போலவே தமிழிசைக்கும் விழா எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, வைகறைவாணன், சி.அறிவுறுவோன், பேராசிரியர்கள் திருமாவளவன், இளவழகன், திருவேங்கடம், தங்க. கலியமூர்த்தி உள்ளிட்டு ஒருசில நண்பர்கள் தமிழிசை விழா தொடங்கி அது இன்றளவும் ஒவ்வோராண்டும் தைத் திங்களில் நடைபெற்று வருகிறது என்றே நம்புகிறேன்.
அன்னக்கிளி திரைப்படம் வந்த புதிது. அதில் மிகவும் புகழ்பெற்ற அன்னக்கிளியே உன்னைத் தேடுதே பாட்டின் மெட்டில் இவர் ஒரு பாடல் எழுதித் தந்ததை, தோழர் சி.அறிவுறுவோன் தன் நிலத்தில் நாற்றுப்பறிக்கும் பெண்களை விட்டுப் பாடச் செய்தார். அப்போதெல்லாம் நாங்கள், கண்ணதாசன் போன்று, வாலி போன்று நாளை நாம் நம் வைகறைவாணனையும் பார்க்கப் போகிறோம் என்று கற்பனை செய்துகொண்டிருந்தோம்.
எங்களுடன் அன்பு நண்பர் அரண்மனைக்குறிச்சி கு.கைலாசம் அவர்களும் இணைந்தார். அதன்பின் ஈழ இலக்கியங்கள் அனைத்தும் எங்களுடன் மிகவும் நெருக்கமாக உறவாடின. குறிப்பாக செ.கணேசலிங்கன் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த 26 குமரன் இதழ்கள் எங்களைப் பக்குவப்படுத்தியதில் முக்கியமான பங்கினையாற்றியது. குமரனில் வெளிவந்த தோழனின் காதல் கடிதம், பின்னர் அதற்குத் தோழி எழுதிய பதில் கடிதத்தின் சாராம்சம் இன்றளவும் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. மாவோவின் ‘மலையைப் பிளந்த மூடக் கிழவனின் கதை’யை முதலில் படித்தது, செ.கணேசலிங்கனின் ‘சிறுவர்க்கான சிந்தனைக் கதைகள்’ என்னும் புத்தகத்தில்தான் என்று நினைவு.
ஈழ இலக்கியங்கள் மட்டுமல்ல, ஈழத்திலிருந்து வரும் நண்பர்களும் பலர் வைகறையைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
எங்கள் மத்தியில் வறுமை கடுமையாக இருந்த நேரம். இருந்தாலும் வறுமையால் எங்களின் உணர்வுகளைத் தடுத்திட முடியவில்லை. என் அன்னை இறக்கும் நாளன்று, நான், விஜயரங்கன், வைகறைவாணன் ஆகியவர்களுடன் திருவையாற்றில் பூசைபடித்துறைத் தெருவிலிருந்த மாடி அறையில் இரவு முழுதும் பேசிக்கொண்டே இருந்தோம். இப்படி மத்தியதர ஊழியராக இருக்கும் நம்மாலேயே நம் அன்னையரை ஒழுங்காகக் கவனிக்க முடியவில்லையே, நம்மைவிட மோசமான நிலையில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்ற விதத்தில் எங்கள் விவாதம் அன்றையதினம் அமைந்திருந்தது. அதன்பின்னர்தான், இவ்வாறு வெறுமனே சிவப்பு இலக்கியங்களைப் படித்துக்கொண்டிருந்தால் மட்டும் போதாது, இடதுசாரி இயக்கங்களில் ஏதேனும் ஒன்றுடன் பிணைத்துக்கொண்டு, ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைத்திட நம்மாலான அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற முடிவினை அன்றைய தினம் எடுத்தோம் என்றே கூறலாம். அதன் பின் நான் நாகைக்கு சுருக்கெழுத்தராக மாற்றலானேன்.
வைகறை சென்னை சென்றுவிட்டார். 15 சாரி தெரு, கோடம்பாக்கம் ரயில்நிலையம் அருகில் அறை. அநேகமாக அந்த சமயத்தில் தஞ்சையிலிருந்து வேலை தேடி செல்லும் பட்டினிப் பட்டாளத்தின் புகலிடமாக அது பல ஆண்டு காலம் இருந்தது.
சென்னையில், வைகறை, அரணமுறுவலுடன் இணைந்து பயணித்தார். நான் தமிழ்ச்சுருக்கெழுத்தைச் சுயமாகக் கற்று, இளநிலை, பின் முதுநிலை என்று தேர்ச்சியடைந்தபின், உயர்வேகத் தேர்வு, நிமிடத்திற்கு 100 வார்த்தைகள், 120 வார்த்தைகள், பின் 150 வார்த்தைகள் என்று தேர்வுகள் எழுதி, தேர்ச்சியடைந்தபோது, தோழர் வைகறைவாணன், ‘மக்கள் செய்தி’யில் ஒரு பெட்டிச் செய்தி, ‘தமிழ்ச் சுருக்கெழுத்தில் வீரமணிக்கு முதலிடம்’ என்று வெளியிட்டிருந்தார். இதைவிடச் சிறந்த விருது வேறு என்ன இருக்க முடியும்!
அஞ்சலட்டை வடிவிலான என் திருமண அழைப்பிதழையும், விஜயரங்கனின் திருமண அழைப்பிதழையும் வடிவமைத்தது தோழர் வைகறைவாணன்தான். என் திருமணத்திற்காக நான் அச்சிட்ட அழைப்பிதழையும், மணமகள் சார்பில் என் மைத்துனர் தோழர் இரா.இரத்தினகிரி அச்சிட்ட அழைப்பிதழையும் பேராசிரியர் இரா. இளவரசிடம் நானும், வைகறையும் சென்று அளித்தபோது, இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்துவிட்டு, இளவரசு ஐயா அவர்கள், ‘இரத்தினகிரி அச்சிட்டுள்ள அழைப்பிதழில் இல்லாத தமிழ் இதில் இருக்கிறது’ என்று மகிழ்வுடன் சொன்ன வரிகள் என் நெஞ்சில் இப்போதும் இருக்கிறது. இதற்குக் காரணம் தோழர் வைகறைவாணன்தான்.
அதேபோல் மே தினம் ஒன்றிற்கு வாழ்த்துச் செய்தி ஒன்று சுமார் 100 அஞ்சலட்டைகள் அச்சிட்டு விநியோகித்தோம். அதன் வாசகங்களை தோழர் ஜோதி இன்றளவும் நினைவு கூர்வார். அதனைப்பார்த்தபின்தான் தோழர்கள் மணியரசனும், ஜோதியும் எங்களுக்கு மிகவும் நெருக்கமானார்கள்.
அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டபின்னர், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நாமக்கல்லில் ஒரு பயிற்சி முகாம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்திலிருந்து கி.வெங்கட்ராமன், சி.அறிவுறுவோன், வைகறைவாணன், பொதியவெற்பன், நான் உட்பட ஏழு பேர் கலந்துகொண்டோம். தோழர் கு.சின்னப்பபாரதி ஏற்பாடு செய்திருந்தார். தோழர்கள் என்.சங்கரய்யா, கே.முத்தையா, கே.செல்வராஜ், செந்தில்நாதன், இளவேனில் முதலானவர்கள் உரையாற்றினார்கள். தோழர் இளவேனில் சீன இலக்கியம் குறித்து ஆற்றிய உரையும், தோழர் என்.சங்கரய்யா, செம்மலரில் வெளியான ஒரு சிறுகதையை விமர்சனம் செய்ததும் இன்னமும் நெஞ்சில் நிழலாடுகின்றன.
நான் திருமணமானபின் நாகையில் வேலைபார்த்த சமயத்தில், 1976இல் புயலால் நாகை நிர்மூலமாக்கப்பட்ட சமயத்தில், நாகைக்கும் இதர பகுதிகளுக்கும் தொடர்பு அறுபட்டிருந்த சமயத்தில், தோழர் வைகறை எப்படியோ நாகை வந்து எங்களைச் சந்தித்ததை மறக்க முடியாது. அப்போதுதான் நாங்களிருவரும் சென்று சர்வதேசகீதத்தைத் தமிழில் எழுதிய கவிஞர் நாகை சாமினாதன் அவர்களைச் சந்தித்தோம். அதனைத் தோழர் வைகறை ஒரு சிறுபிரசுரமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
1984இல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உருவாகிக்கொண்டிருந்த சமயம். அதற்கு முன் ‘அரசு ஊழியர்’ மாத இதழ் தோழர் தே.இலட்சுமணனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துகொண்டிருந்தது. இதனை ஆரம்பத்தில் அச்சிடும் பணியைத் தோழர் வைகறைவாணன்தான் பார்த்தார்.
அரசு ஊழியர் இதழில் செம்பியன் (எம்.ஆர்.அப்பன்) எழுதிய ஸ்தாபனம் என்ற கட்டுரையை ஒரு சிறுபிரசுரமாகக் கொண்டுவர, எம்.ஆர்.ஏ-இடம் நான் அனுமதி கோர, அவரும் அனுமதி அளித்தார். அதன்பின்னர் நான், தோழர்கள் வைகறைவாணன், வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து அதனை வெளியிட்டோம். தோழர் இளவேனில் அட்டையை வடிவமைத்துத்தர அதனை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முதல் மாநாட்டின்போது வெளியிட்டோம்.
நான் சென்னையில் சட்டமன்ற மேலவையில் வேலை பார்த்த சமயத்தில் ‘சீன இலக்கியம்’ மாத இதழ் ஒன்றிலிருந்து, நாட்டுப்புற நாடோடிக் கதை ஒன்று. ஒருவன், ஒரு கிளிக்கு ‘ஆமாம்’ என்று மட்டும் சொல்லக் கற்றுக்கொடுத்து, இந்தக் கிளி, தங்கம், வெள்ளி புதைத்து வைத்திருக்கும் இடங்களைச் சரியாகக் கூறும் என்று ஏமாளிகளை நம்ப வைத்துக்கொண்டிருப்பான். இவனது ஏமாற்றுத்தனத்திற்கு அந்நாட்டின் அரசனும் பலியாகிவிடுவார். இந்தக் கதையை, ‘ஆமாம்’ என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்து தந்ததை, க.சுப்பு அவர்களை ஆசிரியராகவும், க.திருநாவுக்கரசு அவர்களையும், வைகறையையும் உதவி ஆசிரியர்களாகக் கொண்டும் வெளியிட்டுவந்த நக்கீரன் இதழில் வெளியிட்டார். அதேபோன்று நான் பிரேம்சந்த்தின் சிறுகதைகளில் ஐந்தை (குழந்தை, கடவுளின் இல்லம், மோட்சம், பண்பாளன் யார்? மற்றும் இரு நண்பர்கள்) கதைகளைத் தமிழாக்கம் செய்து அது, காக்கை சிறகினிலே மற்றும் பல இதழ்களில் வெளிவருவதற்கு, முக்கிய காரணம் தோழர் வைகறைவாணன்தான்.
அதேபோன்று ‘நாடாளுமன்றத்தில் தமிழ்’ தொடர்பாக வீர.வியட்நாமின் எழுதிய கட்டுரையும் மற்றும் ‘ஞாயிற்றைக் கை மறைப்பாரில்’ என்ற பழமொழிக்கேற்ப ‘கதிரவனைக் கைகள் மறைத்திடுமோ’ என்று மாக்சிம் கார்க்கி குறித்து எழுதிய கட்டுரை காக்கை சிறகினிலே இதழில் வெளிவந்ததற்கும், வைகறைவாணன்தான் காரணம்.
தோழர் வைகறை, எவ்வளவோ திருமணங்களை மிகவும் எளிமையாகவும், சிறப்பாகவும் நடத்தியிருக்கிறார். ஆனால் அவருக்குத் திருமணமே நடக்காதா என்று நாங்கள் ஏங்கிக்கொண்டிருந்த சமயத்தில், பேராசிரியர் விருத்தாசலனார் முன்முயற்சியில், தோழர் வைகறைக்கும் தோழர் இந்திராவுக்கும் தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அத்திருமணம் நடைபெற்ற சமயத்தில் தோழர் செல்வபாண்டியன் எறும்பைப்போல் சுறுசுறுப்பாக சுழன்று பணியாற்றியது இன்னமும் என் நெஞ்சில் நிலைத்திருக்கிறது.
இவ்வாறு 1970களில் எங்களிடையே ஏற்பட்ட நட்புப் பிணைப்பு, 50 ஆண்டுகள் கழிந்தும் வளர்பிறையாகவே தொடர்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக நானும், தோழர் வைகறையும் பலவிதமான நோய்களுக்கு ஆளாகி அவதிப்பட்டபோதிலும், மனதளவில் இறப்பு குறித்து எவ்விதமான அச்சமுமின்றி, வாழ்ந்த வாழ்க்கையை எங்களால் முடிந்த அளவிற்கு, சமூகத்திற்குப் பயனுறுவிதத்தில்தான் வாழ்ந்திருக்கிறோம் என்ற மனநிறைவு எங்களுக்கு உண்டு. அந்த மனநிறைவுடன் வருங்காலங்களையும் கடத்திடுவோம்.