Saturday, December 2, 2023
Friday, February 10, 2023
புத்தகங்களும் நானும்
அன்பார்ந்த நண்பர்களே,
இன்றைய தினம் என் வாழ்நாளில் நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து இதுநாள்வரையிலும் என்னைக் கவர்ந்த புத்தகங்கள், இன்றளவும் என் நினைவில் உள்ள புத்தகங்களில் ஒருசிலவற்றைப் பட்டியலிடுகிறேன்.
நான் சிறுவனாக இருந்தபோது, தமிழ்வாணனின், மணிமொழி நீ என்னை மறந்துவிடு. சங்கர்லால் துப்பறிகிறார். இருண்ட இரவுகள். கருநாகம் முதலியவை என்னைக் கவர்ந்த கதைகளாகும்.
அப்போது நான் கண்ணன் என்னும் கலைமகள் குழுமத்தின் சார்பில் மாதம் இருமுறை வெளியான சிறுவர் இதழையும், தமிழ்வாணனின் கல்கண்டு இதழையும் தொடர்ந்து வாங்கிப் படித்து வந்தேன். நூலகத்தில் அம்புலிமாமா இதழைப் பார்த்திருக்கிறேன்.
பின்னர் பதினோராம் வகுப்பு படிக்கும் காலத்தில் பழைய புத்தகக் கடையில் எவரோ ஒருவர், சாண்டில்யனின் யவன ராணி கதையை, குமுதத்தில் வெளிவந்து கொண்டிருந்ததை - ஒரு 89 இதழ்களில் வந்த கதையைத் - தனியே பிரித்து வைத்திருந்து, பின்னர் அவர் என்ன நினைத்தாரோ அல்லது அவருக்கு என்ன சிரமமோ அப்படியே பழைய புத்தகக் கடையில் கொண்டுவந்து எடைக்குப் போட்டிருந்தார். அதைக் கண்ணுற்ற நான் அதை வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். ஆனால் யவன ராணி மொத்தம் 114 வாரங்கள் தொடராக வந்ததாகும். பின்னர் என் நண்பன் ஒருவனுடன் சேர்ந்து மீண்டும் பழைய புத்தகக் கடைகளில் அவை வந்த குமுதம் இதழ்களைத் தேடி 114 இதழ்களையும் தொகுத்து ஒரு புத்தகமாகப் பைண்டிங் செய்துவிட்டோம். நான் படித்த முதல் சாண்டில்யனின் சரித்திர நாவல் இது. பின்னர் அதனை இரவு – பகல் என்று இரண்டே நாட்களில் படித்து முடித்தேன்.
பின்னர் அவருடைய மன்னன் மகள், கடல் புறா உட்பட வேறுபல சரித்திர நாவல்களையும் படித்திருக்கிறேன்.
அடுத்து பதினோராம் வகுப்பு படிக்கும்போது ஜெயகாந்தன் கதைகளை என் நண்பன் அறிமுகப்படுத்தினான். முதலில் ‘யாருக்காக அழுதான்’, அடுத்து தேடிப்பிடித்து ‘உன்னைப்போல் ஒருவன்’ படித்தேன். பின்னர் அவர் கதைகள் வந்த ஆனந்த விகடன் இதழ்கள் அனைத்தையும் வாங்கிவிடுவேன். அநேகமாக ஒவ்வொரு ஆண்டிலும் சுதந்தர தினம், குடியரசு தினம் மற்றும் முக்கிய பண்டிகை தினங்களில் ஆனந்த விகடன் சிறப்பிதழ்கள் வெளியிடும். அவற்றில் ஜெயகாந்தன் முத்திரைக் கதை இடம் பெறும்.
இதனைத் தொடர்ந்து நூலகத்தில் மறைமலையடிகளார் எழுதிய புத்தகங்களைப் படித்திருக்கிறேன். மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை (இரு பாகங்கள்), தொலைவிலுணர்தல், முதலானவற்றைப் படித்திருக்கிறேன். சாகுந்தலம், சாகுந்தலம் ஆராய்ச்சி முதலான நூல்களையும் படித்ததாக நினைவு.
அதேபோன்று டாக்டர் மு.வ. அவர்கள் எழுதிய கதைகளையும் படித்திருக்கிறேன். அகல் விளக்கு, நெஞ்சில் ஒரு முள், கயமை, கி.பி.2000 போன்ற கதைகள். இவர் கதைகள் குறித்து என் அண்ணன் கிண்டலாகக் கூறும் விமர்சனம் என்னவென்றால் மு.வ.வின் கதைகளில் வரும் டாக்டர்கள், பொறியாளர்கள் எல்லாரும் அயோக்கியர்களாக இருப்பார்கள். ஓர் ஆசிரியர் அல்லது பேராசிரியர் வருவார். அவர் மட்டும் எவ்விதக் கெட்டப் பழக்கமுமில்லாத ஒழுக்கசீலராக இருப்பார் என்பதாகும்.
அகிலன் எழுதிய சித்திரப்பாவை, பாவை விளக்கு படித்திருக்கிறேன்.
பின்னர் வேலைக்கு வந்தபின், திருத்துரைப்பூண்டியில், நூலக உறுப்பினரானேன். அங்கே ஜெயகாந்தன் சிறுகதைத் தொகுப்புகளையும், டால்ஸ்டாய் கதைத் தொகுப்பையும் ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைத் தொகைப்பையும் படித்த ஞாபகம் இருக்கிறது.
இவை அனைத்தும் பதின்பருவக் காலத்தில் படித்தவைகளாகும். அப்போதெல்லாம் அரசியலறிவு என்பது அநேகமாகக் கிடையாது. சினிமா பைத்தியம் என்றுகூட சொல்லலாம். சபரிமலைக்கு 40 நாள் விரதம் இருந்து எரிமேலி பாதையில் அய்யப்பனைத் தரிசிக்கச் சென்றிருக்கிறேன்.
ஆனால் என்ன ஆச்சர்யம்! மலையிலிருந்து திரும்பியபின் முழுமையாக கடவுள் நம்பிக்கை என்னிடம் இருந்து அகன்றுவிட்டது.
அதன்பின்னர் தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயிற்சி. சுருக்கெழுத்துப் புத்தகங்களை தில்லியிலிருந்து வரவழைத்துப் படித்திருக்கிறேன். பயிற்சி செய்திருக்கிறேன்.
பின்னர் மன்னார்குடியில் பணியிலிருந்த காலத்தில் கோட்டூர் இரங்கசாமி முதலியார் நூல் நிலையத்தில் ஓர் அற்புதமான நூலகர். ராமம் போட்டுக்கொண்டு குடுமி வைத்துக்கொண்டு இருப்பார்.
பகத்சிங் எழுதிய ‘நான் நாத்திகன் ஏன்’ என்னும் பிரசுரத்தை, தோழர் ஜீவா மொழியாக்கம் செய்து, தந்தை பெரியார் வெளியிட்ட அந்தச் சிறு பிரசுரத்தை –அந்த நூலகரிடமிருந்துதான் பெற்றுப் படித்தேன். அதனைத் தட்டச்சு செய்து விடுதலை ஏட்டிற்கு அனுப்பி வைத்தேன். கவிஞர் கலிபூங்குன்றன் அவர்கள் அதனை உண்மை மாத இதழில் தொடராக வெளியிட்டார். பின்னர்தான் ‘நான் நாத்திகன் ஏன்?’ மீண்டும் தமிழகத்தில் பிரபல்யமானது.
அதேபோன்று சாக்ரடீஸ், அரிஸ்டாடில் ஆகியோர் வரலாறுகளையும் அங்கேதான் படித்தேன்.
Men is born free, but everywhere he is in chains என்னும் பிளாட்டோவின் சமுதாய ஒப்பந்தம் (Social Contract) நூலில் வரும் வரிகளை இங்கே இருக்கும்போதுதான் மனப்பாடம் செய்தேன்.
அதுமட்டுமல்ல, காண்டேகரின் கிரௌஞ்சவதம், அதில் கதாநாயகன் தினகரன் என்னும் திலீபன், கதாநாயகி சுலோசனாவிற்கு அன்பளிப்பாகக் கொடுத்திடும் ‘எரிநட்சத்திரம்’, அதன் நாயகியின் பெயர் ‘உல்கா’, புயலும் படகும், கருகிய மொட்டு, வெறும் கோயில், மனோரஞ்சிதம், இருமனம் முதலான அனைத்துக் கதைகளையும் அந்த நூலகத்திலிருந்து பெற்றுத்தான் படித்தேன்.
பம்பாயிலிருந்து வந்துகொண்டிருந்த Blitz வார இதழின் வாசகனாகவும் இருந்தேன். கே. ஏ. அப்பாஸ் அவர்களின் கடைசிப் பக்கக் கட்டுரையையும், அதன் ஆசிரியர் ஆர்.கே. கரஞ்சியாவின் கேள்வி – பதில் பகுதியையும் படித்துவிடுவேன். ஒருதடவை ஒருவர் இந்திரா காங்கிரசுக்கும், சிண்டிகேட் காங்கிரசுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு அவர் அளித்த பதில் என்ன தெரியுமா: Tweedledom and Tweedle dee என்பதாகும். பெயரில்தான் வித்தியாசம், வேறு எந்த வித்தியாசமும் கிடையாது என்று இது குறித்து அகராதியைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன்.
அதேபோல் கே.ஏ. அப்பாஸ், ஒருதடவை சோ, தந்தை பெரியாரைச் சற்றே இழிவுபடுத்தி எழுதியிருந்ததைக் கண்டிக்கும் விதத்தில் 32 vs. 92 என்ற தலைப்புடன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் தந்தை பெரியார் குறித்து அவர் பதிவு செய்த வாக்கியங்களை அப்படியே மனனம் செய்துவிட்டேன்.
அது வருமாறு: “Whatever his senile idiosyncracies, there is no doubt that he is an iconoclast from his well beginning of his age.” (இப்போது அவருடைய வயதான சுபாவம் எப்படி இருந்தபோதிலும், அவர் தன்னுடைய வயதின் தொடக்க காலத்திலிருந்தே, மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறிபவராக, கடவுள் சிலைகளைத் தகர்ப்பவராக இருந்தார் என்பதில் சந்தேகம் இல்லை, என்பது இதன் பொருள். Iconoclast என்பதற்கு அகராதியில் மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறிபவர் என்றும், கடவுள் சிலைகளைத் தகர்ப்பவர் என்றும் பொருள் விளக்கம் கூறப்பட்டிருந்தது-)
என் அரசியல் சிந்தனை என்பது மாறத் தொடங்கியது. தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் பதிப்பித்து வெளியிட்ட பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – மூன்று பாகங்களையும் வாங்கினேன், படித்தேன்.
அப்போது தந்தை பெரியார் சிந்தனைகளில் என்னை மிகவும் பாதித்து என்னுடன் ஒட்டிக்கொண்டுள்ள சிந்தனை என்பது வருமாறு:
“நான் ஒரு பூரண பகுத்தறிவுவாதி. எனக்கு நாட்டுப்பற்றோ, மொழிப்பற்றோ, இனப்பற்றோ கிடையாது. ஓர் உண்மையான பகுத்தறிவுவாதிக்கு மனிதப்பற்றைத் தவிர வேறு எந்தப்பற்றும் இருக்கவும் கூடாது.”
தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகளில் குறிப்பாக இரண்டாம் தொகுதிதான் என்னைப் புரட்டிப்போட்டது. பெரியார் சிந்தனையாளனாக இருந்த என்னை, மெல்ல மெல்ல சிவப்புச் சிந்தனையாளனாக மாற்றுவதற்கு என்னைத் தள்ளியது.
அதன்பின் சோவியத் பிரசுரங்கள் அறிமுகமாகின்றன. முதலில் தாய், இளைஞர் படை, பின்னர் வீரம் விளைந்தது, உண்மை மனிதனின் கதை. தொடர்ந்து எண்ணற்ற நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள். இன்றளவும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற நூல்கள் என்றால் வானவில், சாவுக்கே சவால், விடிவெள்ளி, அன்னை வயல், முதல் ஆசிரியர், சிறுவர்களுக்கான கதையான பள்ளிக்கூடம், அவன் விதி, அதிகாலையின் அமைதியில் என அடுக்கிக் கொண்டே போகலாம். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, பல தடவை வாங்கி இருக்கிறேன். படிக்க முயற்சித்திருக்கிறேன்.
பின்னர் சென்னை புக் ஹவுஸ் வெளியிட்ட நிரஞ்சனாவின் ‘நினைவுகள் அழிவதில்லை’, என் வாழ்க்கையில் மட்டுமல்ல, இதைப்படித்த என் நண்பர்கள் பலரைத் தோழராக மாற்றிய புத்தகம் என்றே கூறலாம். இந்தசமயத்தில் என் வாழ்க்கையில் அரசு ஊழியர் இயக்க வாழ்க்கையும் பின்னிப் பிணைந்தது. இதன்பின்னர் அரசியல் புத்தகங்களும் என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கின. இதில் என்னை மிகவும் கவர்ந்தது ஜூலியஸ் பூசிக்கின், தூக்குமேடைக் குறிப்பு. தோழர் இஷ்மத்பாஷா அவர்கள் மிக அற்புதமாகத் தமிழாக்கம் செய்திருப்பார். அதனைத் தொடர்ந்து சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு (போல்ஷ்விக்), உலகைக் குலுக்கிய பத்துநாட்கள், பின்னர் சீன இலக்கியங்களில் மாவோவின் சிறுபிரசுரமான நடைமுறையைப்பற்றி, லியோசௌசியின் சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி, உள்கட்சிப் போராட்டம், கட்சியைப் பற்றி ஆகியவை.
சென்னையில் பணியாற்றிய சமயத்தில் தோழர் எஸ்.எஸ்.கண்ணனின் காரல் மார்க்ஸ் நூலகத்தில் டி.செல்வராஜ் அவர்களின் மூலதனம் நாவலைப் படித்தேன். கிறித்தவ இலக்கியச் சங்கம் வெளியிட்டிருந்த டி.செல்வராஜின் தேநீர், மலரும் சருகும் போன்ற நாவல்களையும் முன்னரே படித்திருந்தேன். இதற்கிடையில் தோழர் கு.சி.பா.வின் சங்கம் நாவலை முதலிலும், பின்னர் தாகம் நாவலையும், தொடர்ந்து சர்க்கரை நாவரையும் படித்திருக்கிறேன். அதேபோன்று கே. முத்தையா அவர்களின் உலைக்களம் நாவலின் இரு பாகங்களையும் படித்திருக்கிறேன்.
கம்பீரமான மனிதனின் கதை என்கிற தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் அவர்களின் சரிதையை தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதியதையும், பண்ணை அடிமையாக இருந்து தலைவராக உருவாகிய பி.எஸ். தனுஷ்கோடியின் வரலாறையும் அதனைத் தொடர்ந்து அவர் எழுதிய அனைத்து நூல்களையும் படித்திருக்கிறேன்.
இடையில் கணையாழி வாசகனாக இருந்து சுஜாதா, இந்திரா பார்த்தசாரதியின் சுதந்திர பூமி மற்றும் தந்திரபூமி போன்ற தொடர்கதைகளையும், பின்னர் குருதிப்புனல் தொடர்கதையையும் படித்திருக்கிறேன்.
நான் திருவையாற்றில் நீதிமன்றத்தில் பணியாற்றிய சமயத்தில் அருமை நண்பர் கு.கைலாசம் அவர்களின் தொடர்பு கிடைத்தது. அவர், தமிழ்நாட்டில் வெளிவரும் இதழ்கள் அனைத்தையும் வாங்கி, இலங்கையில் ஒரு நண்பருக்கு அனுப்பிவைப்பார். அங்கேயுள்ள நண்பர், இலங்கையில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் வாங்கி அவருக்கு அனுப்பி வைப்பார். அவ்வாறுதான் செ.கணேசலிங்கனின் குமரன் இதழ்கள் (கிட்டத்தட்ட 26 இதழ்கள் என்று நினைவு) அனைத்தையும் படித்திருக்கிறேன். அப்போது அதில், செம்மலரின் த.சா.இராசாமணி திருக்குறள் குறித்து எழுதிவந்த ‘பாட்டில் தெறித்த பொறி’, அப்படியே வெளிவந்திருக்கும்.
அதில் ஒரு புதுக்கவிதை. வரதபாக்கியான் என்பவர் எழுதியிருந்தார். ஒரு தோழிக்கு, ஒரு தோழனின் காதல் கடிதம் என்று தலைப்பு. நான் பொதுவுடைமை இயக்கத்தில் முழுநேர ஊழியனாகச் செல்ல இருப்பதால் எனக்குக் காதல் செய்வதற்கு நேரம் கிடையாது. எனவே என்னை விட்டுவிடு என்பது போன்று அந்தக் கடிதம் இருக்கும். இதற்கு தோழியின் பதில் கடிதம் அடுத்த இதழில் வந்திருக்கும். அதில் அந்தத் தோழி, எந்த நாட்டில் பெண்களின் பங்களிப்பு இல்லாமல் புரட்சி மலர்ந்தது என்று எனக்குச் சொல் என்று அவர் கேட்டிருப்பார். நான் உன்னை வரச்சொன்னதே அதற்காகத்தான் என்கிற முறையில் அந்தப் பதில் கடிதம் அமைந்திருக்கும்.
இதன்பிறகு நான் தீக்கதிர் செய்தியாளனாக வந்தபிறகு, படிப்பது என்பதும், படைப்பது என்பதும் இரண்டறக்கலந்துவிட்டது. தில்லிக்கு வந்தபின்னர், தோழர் வி.பரமேஷ்வரன் தில்லி வந்திருந்த சமயத்தில், இனி ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ இதழின் தலையங்கத்தைத் தொடர்ந்து தமிழாக்கம் செய்து அனுப்புகிறேன் என்று கேட்டுக்கொள்ள, உடனடியாக அவர் அதற்கான உத்தரவும் பிறப்பித்தார். இனி தீக்கதிரில் நீ அனுப்புகிற தமிழாக்கம் தொடர்ந்து வெளிவரும் என்றும் கூறினார். அவ்வாறு கடந்த 20 ஆண்டுகளாக, பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கத்தை அநேகமாகத் தொடர்ந்து அனுப்பி வந்திருக்கிறேன்.
இத்துடன் மத்திய அரசின் கீழ் இயங்கும் பப்ளிகேஷன் டிவிஷன் சார்பாக நவபாரதச் சிற்பிகள் என்னும் தொடர் வரிசையில் நேஷனல் ஹெரால்ட் ஆங்கில இதழின் ஆசிரியராக இருந்த சலபதி ராவ் எழுதிய ஜவஹர்லால் நேருவின் வரலாறையும், டபிள்யு.என்.குபேர் எழுதிய பி.ஆர்.அம்பேத்கர் வரலாறையும் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இதுவல்லாமல் பாரதி புத்தகலாயத்திற்காக எண்ணற்ற புத்தகங்களையும் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இதில் மிகவும் குறிப்பிடத்தக்கவை மோடி அரசாங்கம் – வகுப்புவாதத்தின் புதிய அலை, குஜராத் கோப்புகள் – ரானா அயூப், குஜராத்:திரைக்குப்பின்னால் – ஆர்.பி. ஸ்ரீகுமார்,, சீத்தாராம் யெச்சூரியின் மாநிலங்களவை உரைகள், தீஸ்தா செதால்வத்தின் நினைவோடை, தோழர் சவுகத் உஸ்மானியின் புரட்சியாளனின் அனுபவங்கள், டி.கே.ரெங்கராஜனின் மாநிலங்களவை உரைகள் மற்றும் கட்டுரைகள், பேராசிரியர் சம்சுல் இஸ்லாம் எழுதிய முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர், ஆர்எஸ்எஸ் ஆவணங்களிலிருந்து ஆர்எஸ்எஸ்-ஐ அறிந்துகொள்வோம் முதலானவைகளாகும்.
தோழமையுடன் ச.வீரமணி.
Subscribe to:
Posts (Atom)