இலக்கியா:
அன்பார்ந்த நண்பர்களே,வணக்கம். என்னுடைய...: அன்பார்ந்த நண்பர்களே, வணக்கம். என்னுடைய வாழ்வில் என்னை ஆட்கொண்டு இன்றுவரையிலும் (72 வயது வரையிலும்) நான் இயங்குவதற...
Tuesday, January 14, 2020
அன்பார்ந்த நண்பர்களே,
வணக்கம். என்னுடைய வாழ்வில் என்னை ஆட்கொண்டு இன்றுவரையிலும்
(72 வயது வரையிலும்) நான் இயங்குவதற்கு உறுதுணையாக இருக்கும் தமிழ்ச் சுருக்கெழுத்து
குறித்து இதில் பதிவிடுகிறேன்.
நான், ஆங்கிலச் சுருக்கெழுத்துத் தேர்வுக்குச் சென்ற காலங்களில் பிட்மேன் முறை, ஸ்லோவன் முறை, க்ரெக் முறை என்று பல முறைகளில் சுருக்கெழுத்து கற்ற மாணவர்களுக்கும்
கேள்வித்
தாள்கள் இருந்தன. இப்போது பிட்மேன் முறை மட்டுமே இருக்கிறது.
ஸ்லோவன் முறையைப் பயன்படுத்தி சுப்பிரமணிய ஐயர் என்பவர் தமிழ்ச்சுருக்கெழுத்து முறையை உருவாக்கி இருந்தார். லிப்கோ பதிப்பகம் அதை வெளியிட்டிருந்தது. இப்போது அதன் நிலை என்ன என்று தெரியவில்லை.
பிட்மேன் முறையைத் தழுவி சீனிவாசராவ் தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழில் சுருக்கெழுத்து முறையை உருவாக்கித் தந்துள்ளார்.
திரு.ஜி.எஸ். அனந்தநாராயணன் அவர்கள், சீனிவாசராவ் முறையில் தமிழ்ச் சுருக்கெழுத்தைக் கற்று, உயர்வேகத் தேர்வில் தேர்ச்சி பெற்று, சட்டமன்றத் தமிழ்ச் செய்தியாளராகப் பணியாற்றியவர்.
அவர் உருவாக்கிய
தமிழ்ச் சுருக்கெழுத்து முறையைத்தான் தமிழ்நாடு அரசு 1958ஆம் ஆண்டில் அங்கீகரித்து, தேர்வுகளும் நடத்திக் கொண்டிருக்கிறது.
தமிழ்ச் சுருக்கெழுத்து நூல் முதல் பதிப்பு 1965இல் வெளிவந்தது. அதன்பிறகு 1970களில் நான் கற்றுக்கொள்ளும் காலத்தில் எல்லாம் புத்தகம் கிடைப்பது அரிதாக இருந்தது. எங்கள் வீனஸ் பயிலகத்தின் சார்பில் எங்களின் முயற்சியில் தட்டச்சு செய்து, நகலச்சு எடுத்து புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம். பின்னர் 1977இல் இரண்டாம் பதிப்பு வெளியாகியது. இப்போது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் தொடர்ந்து பத்து பதிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
நான், பிட்மேன்
முறையிலான ஆங்கிலச் சுருக்கெழுத்தையும், சீனிவாசராவ் முறையிலான தமிழ்ச் சுருக்கெழுத்தையும் கற்று, நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தராகவும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவையில் நிருபராகவும் பணியாற்றியவன். சுய ஓய்வு (voluntary retirement) பெற்றபின்,
தற்போது நாளிதழ்
ஒன்றின் செய்தியாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். தமிழ்ச்சுருக்கெழுத்து உயர்வேகம் (நிமிடத்திற்கு 150 வார்த்தைகள்) தேர்வில் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேர்ச்சி அடைந்தேன். இதற்காக தஞ்சையில் வீனஸ் வணிகவியல் பயிலகத்தை நடத்தி வந்த எங்கள் ஆசிரியத் தந்தை பா. டென்னிஸ் அவர்கள் எனக்குத் தங்கப் பதக்கம் அளித்து சிறப்பித்தார்.
நான் சுருக்கெழுத்துப் பயிற்சி செய்த காலத்திலும், சட்டமன்றத்தில் பணியாற்றிய காலத்தில் என்னுடன் பணியாற்றிய சக நண்பர்களும் தமிழ்ச் சுருக்கெழுத்தை மிகவும் வேகமாக எழுதும் விதத்தில் எண்ணற்ற மாற்றங்களைச் செய்திருக்கிறோம். என்னிடம் சுருக்கெழுத்துப் பயின்ற மாணவர்களும் நிறைய மாற்றங்களைச் செய்து சுருக்கெழுத்து வளர்ச்சிக்கு உதவி இருக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில்தான் தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயிற்சி மாணவர்களுக்கென்று
ஒரு மாத இதழைத் தொடர்ந்து வெளிக்கொணரலாம் என்று 2020ஆம் ஆண்டின் சபதமாக எடுத்துக் கொண்டுள்ளேன்.
முதல்
இதழை மார்ச் முதல் வாரத்தில் கொண்டு வர இருக்கிறேன். ஆரம்பத்தில் இது ஒரு மின்னிதழாக
– இணைய இதழாக – அமைந்திடும். அச்சு இதழ் வேண்டுவோர் அதற்கான தொகையைச் செலுத்தினால்
அஞ்சலில் அனுப்பி வைத்திடலாம் என எண்ணியிருக்கிறேன்.
தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயிலும் மாணவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்ச் சுருக்கெழுத்து நூலை வாங்கிப் பயிற்சி பெற வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு பயிற்சி பெறும்போது அதில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான் செய்திருக்கின்ற மாற்றங்களை நான் கொண்டுவரவிருக்கும்
இதழில் தந்திருக்கிறேன். அவற்றை உன்னிப்பாகக் கவனித்து, உரியமுறையில் பயிற்சி செய்துவிட்டு, பின் நான் தயாரித்து அளித்துள்ள சுருக்கெழுத்து வடிவங்களைப் பயிற்சி செய்தால், தமிழ்ச்
சுருக்கெழுத்து
முதுநிலைத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைவது திண்ணம்.
நான் தமிழ்ச் சுருக்கெழுத்து முதுநிலைத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தவன் என்ற முறையிலும், என்னிடம் பயிற்சி செய்த மாணவர்கள் அனைவருமே முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்ற முறையிலும் இதனை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
தொடர்ந்து
சந்திப்போம்.
அன்புடன்
ச.
வீரமணி.
Subscribe to:
Posts (Atom)