மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பின் கடந்த ஓராண்டிற்குள், 18 அயல்நாடு களுக்குப் பயணம் செய்து சாதனை படைத்திருக்கிறார். நாட்டின் பிரச்சனைகளைத் தீர்த்திட அவர் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று நாடும் நாட்டு மக்களும் விரும்பக்கூடிய அதே சமயத்தில், பிரதமர் இப்பயணங்களின் மூலமாக உலகின்பல பகுதிகளிலுமுள்ள 40 நாடுகளுக்குச் சென்று தங்கள் வலைப்பின்னலைப் பரப்புவதில் உதவி இருப்பதாக, ஆர்எஸ்எஸ் குதூகலம் அடைந்திருக்கிறது. ஆர்எஸ்எஸ்-இன் பிரச்சாரகர் என்ற முறையில் அவர் தொடர்ந்து தன் பொறுப்புக்களை நிறைவேற்றுவார் என்பது தெளிவு.மோடி பயணம் செய்த கடைசி நாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே பேசுகையில்,
கடந்த அறுபது ஆண்டுகளாக வெளிநாடுவாழ்
இந்தியர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்பட்டனர் என்றும், இப்போதுதான்
தங்கள் அரசின் காரணமாக,நாட்டுப்பற்றுடன் தங்களை இந்தியர்என்று கூறிக்கொள்வதில் பூரிப்புகொள்கின்றனர்
என்றும் பீற்றிக்கொண்டிருக் கிறார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள்இந்தியப் பிரஜா
உரிமையைப் பாதுகாத் துக் கொள்ளவும், இந்தியக் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்டு)களைத் தக்க
வைத்துக் கொள்ளவும் விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஆதரவைப் பெற மோடியும் பாஜகவும்
எது வேண்டுமானாலும் செய்ய லாம்.
அருகதை இல்லை
இவையல்லாமல், இந்த ஓராண்டு காலத்தில்,
சுதந்திர இந்தியாவில் கடந்த அறுபதாண்டு காலமாக தொடர்ந்து ஆட்சிசெய்து வந்த அரசாங்கங்கள்
நிர்மூலமாக்கி இருந்த நாட்டை மீண்டும் கட்டி எழுப்பிக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடியும்
பாஜக அரசாங்கமும் மிகவும் அருவருப்பையும் வெறுப்பையும் உண்டாக்கும் விதத்தில் நாட்டிற்கும்,
உலகிற்கும் சொல்லிக்கொண்டு வருகின்றனர். இந்த அறுபதாண்டுகளில், அடல் பிகாரி வாஜ்பாயின்
தலைமையிலான ஆறு ஆண்டு காலதேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங் கமும் இருந்தது என்பதை மிகவும்
கருணையற்ற முறையில் இவர்கள் அங்கீகரிக்க மறுத்துள்ளனர்.
மேற்படி அறுபதுஆண்டுகளில் மக்களுக்கு
அளித்தஎண்ணற்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட வில்லை என்பதிலோ, நம் நாட்டின் வளங்கள்
எவ்விதத் தங்குதடையுமின்றிக் கொள்ளையடிக்கப்பட்டது என்பதிலோ, நம் மக்கள் சுரண்டப்படுவது
நாளும் அதிகரித்து வந்தது என்பதிலோ எவ்விதச் சந்தேகமுமில்லை. ஆயினும், இவற்றை மோடி
அரசாங்கம் சொல்வதற்கு எந்த அருகதையும் கிடையாது. புத்தெழுச்சி பெற்ற இந்தியாவை இந்த
அரசாங்கம்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்வதில் எந்த அர்த்தமும் கிடையாது.
மாறாக, நாட்டின் மீதும் நாட்டு மக்கள்மீதும் புதிய வகையில் மும்முனைகளிலிருந்து தாக்குதல்கள்
தொடுக்கப்பட்டிருக்கின்றன என்பது இப்போது தெளிவாகி இருக்கிறது.
நவீன தாராளமயக் கொள்கைகளை அரக்கத்தனமான
முறையில் பின்பற்றிக் கொண்டிருத்தல், மதவெறியைக் கூர்மைப்படுத்தி இந்தியக் குடியரசின்
மதச்சார்பற்ற அடித்தளங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களைத் தொடுத்து வருதல், நாடாளுமன்ற
ஜனநாயகத்தில் புனிதமாகக் கருதப்படும் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகளைக் காலில்
போட்டு மிதிப்பதன் மூலமாக எதேச்சதிகாரத்தை நோக்கி முன்னேறுதல் எனத் தாக்குதல்கள் கொத்தாக
நம் மீது பாய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த மோடி அரசாங்கம், டாக்டர் மன்மோகன் சிங் பின்பற்றிய
அதே தாராள மயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேலும் அரக்கத்தனமான முறையில் பின்பற்றிக்
கொண்டிருக்கிறது. நம் பொருளாதாரத்தின் கேந்திரமான துறைகள் அனைத்துமே மிகப் பெரிய அளவில்
அந்நிய நேரடிமுதலீட்டிற்காக அகலத் திறந்து விடப்பட்டிருக்கிறது.
முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது
எதிர்த்த பலவற்றை (எடுத்துக்காட்டாக, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை
முன்பு எதிர்த்து வந்தது) இப்போது எதிர்ப்பதிலிருந்து பின்வாங்கிவிட்டது. இதில் மிகவும்
வெட்கங்கெட்ட முறையில் பின்வாங்கல் என்பது புதிய நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டமாகும்.
2013 சட்டமுன்வடிவுக்கு அது அளித்து வந்த ஆதரவை மறுதலித்துவிட்டு இப்போது மூன்று முறை
நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.
‘நல்ல’ விதத்தில் சித்தரிக்க நடத்தும் சித்துவேலை
நம் நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள
விவசாயிகளின் வாழ்வைச் சூறையாடிவிட்டு, அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள்
கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக நம் நிலங்களைத் தாரை வார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கத் துடிப்பதுடன், நம் நாட்டின்
இயற்கை கனிம வளங்களையும், அந்நியமற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்து
விட்டுக் கொண்டிருக்கிறது. சலுகை சார் முதலாளித்துவம் (crony capitalism) கொடிகட்டிப்
பறக்கிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP)யை
நல்லவிதத்தில் சித்தரிக்க வேண்டும்என்பதற்காக தேசிய வருமானக் கணக்குகளுக்கான புள்ளிவிவர
அடிப்படை ஆண்டு மாற்றப்பட்டிருக்கிறது. எனினும்கூட, தொழில் வளர்ச்சி தொடங்கவே இல்லை.
கார்ப்பரேட்டுகள் உற்பத்தி செய்தபொருட்கள் சந்தைக்கு வராமல் முன்னெப் போதும் இல்லாத
அளவிற்கு குவிந்து கிடக்கின்றன. இது வேலைவாய்ப்பில் வீழ்ச்சியை ஏற்படுத்தி, வேலையில்லாத
இளைஞர் பட்டாளத்தையும் அதிகப்படுத்தி இருக்கிறது. அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தின்
விலைகளும் நாளும் ஏறிவருவதாலும், எரிபொருள்களின் விலைகளும் தொடர்ந்து கடுமையாக உயர்த்தப்
பட்டு வருவதாலும், நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்கள் கடும் பாதிப்புகளுக்கு
உள்ளாகி இருக்கின்றன.
விவசாய நெருக்கடியும் ஆழமாகிக்
கொண்டிருக்கிறது. சுதந்திரம் பெற்ற பின் முதன்முறையாக, மொத்த விளை நிலங்களில் வீழ்ச்சி
ஏற்பட்டிருக்கிறது. வேளாண் இடுபொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பதாலும், விவசாயிகளுக்கு
அளிக்கப்பட்டு வந்த மானியங்களைக் கடுமையாகக் குறைத்து விட்டதாலும் விவசாயிகளில் பெரும்பாலோருக்கு
விவசாயம் தங்கள் வாழ்வாதா ரங்களை எதிர் கொள்வதற்குப் போதுமான வையாக அமையவில்லை. இதன்
காரணமாகத்தான் விவசாயிகள் தற்கொலைகள் தொடர்கின்றன. தொழிலாளர்களின் நிலைமையும் சிறந்ததாக
இல்லை. 1990-91இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழிலாளர்களின் ஊதிய விகிதம் 25 சதவீதமாக
இருந்தது. ஆனால் அது இன்றைய தினம் 10 சதவீதத்தைவிடச் சற்றே அதிகம் அவ்வளவுதான். ஆனால்,
அதே சமயத்தில், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி இருக்கிறார் கள். ஃபோர்ப்ஸ் (குடிசநௌ)
இதழின் 2014ஆம் ஆண்டின் பட்டியலின்படி, இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களில்
100 பேர் பில்லியனர்களாவார்கள்.
அதாவது ஒரு பில்லியன் அமெரிக்க
டாலருக்கும் அதிகம் வைத்திருப்பவர் களாவார்கள். (ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் என்பது
இன்றைய தினம் இந்திய ரூபாயின் மதிப்பில் 6,400 கோடி ரூபாய்க்குச் சம மாகும்.) 2011இல்
இருந்த பட்டியலின்போது இது வெறும் 55 பேர்களாக இருந்தது. இப்போது மேலும் 45 பேர் அதிகரித்து
100 பேர்களாக மாறியிருக்கிறது. இந்த 100 பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு346 பில்லியன்
அமெரிக்க டாலர்களா கும். நாட்டில் உச்சத்தில் உள்ள 1 சதவீதத்தினரின் சொத்து மதிப்பு
2000இல் 36.8 சதவீதமாக இருந்தது, தற்போது 2014இல் 49 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
வெறும் கனவாய்ப்போன‘நல்ல கால’ வாக்குறுதி`நல்லகாலம் வருகுது’ என்று கூறி மக்களுக்கு
இந்த அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் வெறும் கனவாய் போய்விட்டன. இந்த ஓராண்டில்,
இருப்போர்க்கும் இல்லாதோருக்கும் இடையேயான இடைவெளி மேலும் கூர்மையாக விரிவடைந்திருக்கிறது.
அதே சமயத்தில், மக்களின் வாழ்வாதாரங்கள்
மோசமாகி வருவதன் காரணமாக, மக்கள் தங்கள் கிளர்ச்சிப் போராட் டங்களை வலுப்படுத்த வேண்டிய
கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக இந்தஅரசாங்கம்
மதவெறி நடவடிக்கைகளை யும் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின்
ஓர் அரசியல் அங்கம் என்ற விதத்தில், தற்போதைய நவீன மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை,
ஆர்எஸ்எஸ் இயக்கத் தின் லட்சியமான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து
ராஷ்ட்ரமாக’ மாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. `தாய்மதம் திரும்புதல்’ மற்றும்
`காதலுக்கு எதிரான புனிதப்போர்’ என்ற மதவெறிப் பிரச்சாரங்களுடன் புராணக் கட்டுக்கதைகளை
வரலாறாகவும், மதப் பிரச்சாரத்தை தத்துவஞானமாகவும் மாற்றுவதற்கான இழிமுயற்சிகளில் வெறித்தனமாக
இறங்கி இருக்கிறது.
இவற்றின் விளைவாக, பள்ளி மற்றும்
கல்லூரிப் பாடத்திட்டங்களும் கல்வியாளர்களின் ஆராய்ச்சி அமைப்புகளும் மாற்றப்படுவதற்கான
முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அறிவியல் மனோபாவம் கடும் தாக்குதலுக்கு உள்ளாகிஇருக்கிறது.
நாட்டின் பல பகுதிகளிலும் வகுப்புவாதப் பதற்ற நிலைமைகளும், கலகங்களும் அதிகரித்துக்
கொண்டிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான
தாக்குதல்களும், குறிப்பாக கிறித்தவ தேவாலயங்கள் தாக்கப்படுவதும் அதிகரித்து வருகின்றன.
மதவெறியுடன் வெறுப்பைக் கக்கும் தன் அமைச்சரவை சகாக்கள் மற்றும் எம்பிக்களுக்கு எதிராக
நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற உத்தரவாதத்தைக்கூட பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கூற
மறுத்துள்ளார்.
அச்சுறுத்தும் அறிகுறிகள்
பாஜக, வெறும் 31 சதவீத வாக்கு
களைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள போதிலும், மக்களவையில் தனக்கிருக்கும் பெரும்பான்மை
பலத்தை வைத்துக் கொண்டு, நாடாளுமன்றத்தில் எவ்வித ஆய்வுக்கும் ஓர் அர்த்தமுள்ள விவாதத்
திற்கும் உட்படுத்தாமல், முக்கியமான பல சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றிட முயற்சித்துக்
கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் உண்மையில் அச்சுறுத்தும் சமிக்ஞைகளாகும்.
நாடாளு மன்ற நடைமுறைகளைக் காலில்போட்டு
மிதிப்பது என்பது நிச்சயமாக எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்லும் வழியே யாகும். இது நம்
குடியரசின் ஜனநாயக அடித்தளங்களை அழிப்பதற்கே இட்டுச் செல்லும். வேற்றுமையில் ஒற்றுமை
கண்டு இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்துவந்த நம் சமூக நல்லிணக்கத்தை அழிக்கும் நோக்கத்துடன்,
தங்கள் வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை அரக்கத்தனமாகப் பின்பற்றுவதும், மதவெறித்
தாக்குதல்களைத் தொடுப்பதும், நம் குடியரசின் அடித்தளங்கள் மீதும் மாபெரும்தாக்குதல்களைத்
தொடுக்கும் செயல் களேயாகும்.பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணியின் முதலாமாண்டில்
மூவகை அச்சுறுத்தல்கள் வெளிப்பட்டிருக்கின்றன.
இது, நாட்டு மக்களில் பெரும்பான்மையோர்மீது
கருணையற்ற முறையில் தாக்குதலைத் திணித்திருக்கும் அதே சமயத்தில் மதச்சார்பற்ற ஜனநாயகக்
குடியரசு என்கிற `இந்தியா’ என்னும் மாபெரும் சிந்தனையை அழித்திடும் செயலுமாகும். “மிகச்சிறிய
அளவிலான அரசாங்கம் மிகப்பெரிய அளவிலான ஆட்சி’’ (“minimum government maximum governance)
என்று இவர்கள் கூறும் சொற்றொடரின் உண்மைப் பொருள் இதுவேயாகும். இந்த ஓராண்டில் ஊழல்
வழக்கு எதுவும் வெளிப்படவில்லை என்று பிரதமர்மோடியும், பாஜகவும் பீற்றிக்கொண்டி ருக்கிறார்கள்.
ஐமுகூ அரசாங்கத்தின் முதல் நான்கு ஆண்டு காலங்களில் இவ்வாறு ஊழல் எதுவும் வெளிப்பட்டதாக
எவரேனும் நினைவுகூர முடியுமா? சலுகைசார் முதலாளித்துவக் கொள்கைகளை அரக்கத்தனமாகப் பின்பற்றும்
இந்த அரசாங்கத்தின் உண்மை சொரூபமும் விரைவில் வெளியாகும்.
தமிழில்: ச.வீரமணி