தசரத் தேவ்
புதுதில்லியில்,
நாடாளுமன்ற மக்களவையில், நாடாளுமன்றத்தின் முதல்
மக்களவைக்கு 1952இல் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்கள்
உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கும்
விதத்தில், மேற்கு வங்கத்திலிருந்து இடதுசாரி எம்பியாகத் தேர்வுசெய்யப்பட்ட புகழ்பெற்ற
விஞ்ஞானியான டாக்டர் மெக்னாத் ஷாஹா சிவப்பாகவும் அழகாகவும் இருந்த பழங்குடி இளைஞர்
ஒருவரைச் சுட்டிக்காட்டி சபாநாயகரின் கவனத்தை ஈர்த்தார். “அவர்
தசரத் தேவ். திரிபுராவில் கிழக்கு திரிபுரா (பழங்குடியினர்
தொகுதி)யிலிருந்துகம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு, நாடாளுமன்ற
உறுப்பினராகத் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார். ஆனால், இப்போதும்
அவர் காவல்துறையினரால்,
பிடியாணைகளுடன் (அரஸ்ட் வாரண்டுகளுடன்) வேட்டையாடப்
பட்டுக்கொண்டிருக்கிறார். அவர் தலைமறைவாக இருக்கும் காலத்திலேயே மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.’’
இவ்வாறு கூறிய டாக்டர் ஷாஹா பின்னர் சபாநாயகர் பி.ஜி, மாவலங்காரிடம், தசரத்
தேவுக்கு எதிராக உள்ள பிடியாணைகளை ரத்து செய்திட, உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட
உறுப்பினர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்
என்று உறுதி அளித்த சபாநாயகர் மாவலங்கார், பிரதமர் ஜவஹர்லால்
நேருவைப் பார்த்து,
தசரத்தேவ் மீதான பிடியாணைகளை ரத்து செய்ய உடனடி நடவடிக்கை
எடுக்குமாறு கட்டளையிட்டார். பிரதமர் ஜவஹர்லால் நேரு, தசரத்தேவ்
மீதும் மற்றும் கண முக்தி பரிஷத் தலைவர்கள்மீதும் இருந்த பிடியாணைகள் அனைத்தையும்
விலக்கிக் கொள்ள வேண்டும் என்று திரிபுரா மாநில அரசாங்கத்திற்கு கட்டளை
பிறப்பித்தார். அதன்பின்னர்தான் பழங்குடியினர் பகுதிகளில் இருந்த ராணுவமும்
போலீசும் விலக்கிக்கொள்ளப்பட்டன. கணமுக்தி
பரிஷத் தலைவர்கள் மீண்டும் சுதந்திரமாக இயங்கத் தொடங்கினார்கள். இவ்வாறு சுமார்
ஐந்தாண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த தசரத் தேவ் அதிலிருந்து வெளியே
வந்தார்.
மன்னராட்சியின்கீழ் அடிமைகளாக நடத்தப்பட்ட பழங்குடியின
மக்களை அடிமைத்தளையிலிருந்து
விடுவித்திடவும்,
பழங்குடியின மக்களுக்கும் இதர இனத்தினருக்கும் இடையே
நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்பதிலும்,
தலைமைப்பாத்திரம் வகித்த மாபெரும் கம்யூனிஸ்ட்டாக தோழர்
தசரத் தேவ் விளங்கினார்.
தோழர் தசரத் தேவ் 1916 பிப்ரவரி 2 அன்று திரிபுரா மாநிலத்தில் கோவாய் உட்கோட்டத்தின்கீழ் அம்புராவில்
குக்கிராமம் ஒன்றில் ஏழை பழங்குடியின விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். 1943இல்
அகர்தலாவில் உமாகந்தா பள்ளியில் மெட்ரிகுலேசன் தேர்ச்சி அடைந்தார். பின்னர் (தற்போது வங்கதேசத்தில் உள்ள) ஹபிகஞ்ச்சில் 1945இல்
பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் முதுகலைப்படிப்பைத் தொடர்வதற்காக கொல்கத்தாவில் உள்ள கல்லூரியில்
சேர்ந்தார். ஆயினும் அவர் சக நண்பர்கள்
சிலர் திரிபுரா பழங்குடியினர் வாழும் கிராமங்களில் `மக்கள் எழுத்தறிவு இயக்கத்தை’ தொடங்கியதைத் தொடர்ந்து
அவர் மீண்டும் திரிபுராவிற்கு அழைக்கப் பட்டார்.
மன்னராட்சியின்கீழ் கிராமத்தின் மகாஜனங்களால் காலங்காலமாய்
எழுத்தறிவு மறுக்கப்பட்டு,
அடிமைகளாய் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.
இவர்களை இந்நிலையிலிருந்து மீட்பதற்காகவே இவ்வாறு `மக்கள் எழுத்தறிவு இயக்கம்’ தொடங்கப்பட்டது. 1945
டிசம்பர் 27 அன்று மக்கள் எழுத்தறிவு இயக்கம் (ஜனசிக்சா சமிதி) அமைக்கப்பட்டு, தசரத் தேவ் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டுக்குள்ளேயே மாநிலம் முழுவதும் 488
பள்ளிகள் இதன்கீழ் நிறுவப்பட்டன.
இவ்வியக்கத்தினை முளையிலேயே கிள்ளி எறிய மன்னராட்சி முயற்சிகளை
மேற்கொண்டது. ஆயினும் அவர்களின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை முறியடித்து, மக்கள்
எழுத்தறிவு இயக்கம் தன் பயணத்தைத் தொடர்ந்தது.
மக்கள் எழுத்தறிவு இயக்கத் தலைவர்கள், நாட்கள்
செல்லச் செல்ல,
மாநிலத்தில் ஜனநாயகபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்ட ஓர்
அரசாங்கம் அமைந்திட வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பத் தொடங்கினார்கள்.
இயற்கையாகவே இது மன்னராட்சியின் கோபத்திற்கு ஆளானது. எனவே முன்னெப்போதும் இல்லாத
அளவிற்கு இவ்வியக்கத்தினை நசுக்கிட, அடக்குமுறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்கு மன்னராட்சியின் போலீசாரும், ராணுவத்தினரும்
அனுப்பப்பட்டனர். கிராமம் கிராமமாக தீ
வைத்துக் கொளுத்தப்பட்டன. உணவு தானியங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. எழுத்தறிவு
இயக்கத் தலைவர்கள் வலைவீசித் தேடப்பட்டனர். கிராமத்தினர் எவரும் தங்கள் கிராமங்களை
விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மன்னராட்சியின் அடக்குமுறை வெறியாட்டங் களுக்குப் பயந்து
ஆண்கள் காடுகளுக்குள் சென்று பதுங்கி வாழ்ந்தார்கள். பெண்களை போலீசாரும், ராணுவத்தினரும்
மானபங்கப்படுத்தி,
முரட்டுத்தனமாக இழுத்துச் சென்றார்கள்.
இத்தகைய மிகவும் கொடூரமான பின்னணியில்தான், மன்னராட்சியின்
ஏவல்நாய்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக, கண முக்தி பரிஷத் (GMP) அமைப்பு 1948இல் உருவாக்கப்பட்டது. இதே சமயத்தில் திரிபுராவை இந்தியாவுடன் இணைப்பதற்கான
பேச்சுவார்த்தைகள் தொடங்கின. 1950இல்
திரிபுரா மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு, திரிபுரா எல்லை கவுன்சில்
அமைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ்
பெரும்பான்மை பெற்றிருந்தது. இவ்வாறு மன்னராட்சியின்
கீழிருந்த நிர்வாகம் காங்கிரஸ்
நிர்வாகமாக மாற்றப்பட்டது. எனினும் கண முக்தி பரிஷத் மீதான
அணுகுமுறையில் ஆட்சியாளர்கள் எவ்விதமாற்றத்தையும் ஏற்படுத்திடவில்லை. பழங்குடியின மக்கள் மீதான அடக்குமுறை காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்ந்தது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் முன்பைவிட மிகவும்
மோசமானமுறையில் காட்டுமிராண்டித் தனமாக கிராமத்தினர்மீது அடக்குமுறையை அவர்கள்
ஏவினார்கள். தசரத் தேவ் உட்பட கணமுக்தி பரிஷத் தலைவர்கள் குறித்து தகவல்
தெரிவிப்போருக்கு பத்தாயிரம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்கள்.
1952இல் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, கிழக்கு
திரிபுரா தொகுதியிலிருந்து தசரத் தேவ் தலைமறைவாக இருந்து கொண்டே போட்டியிட்டார்.
தேர்தலில் பெரும் வித்தியாசத்துடன் வெற்றி பெற்ற தசரத் தேவ், தில்லியில்
நாடாளுமன்றத்திற்குள் ரகசியமாகவே பிரவேசித்தார். அதன்பின் மக்களவையில்
நடந்தவற்றைத்தான் முதல் பத்தியிலிலேயே தெரிவித்திருக்கிறோம்.
1950இல் தோழர் தசரத் தேவ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1951இல் நடைபெற்ற முதல் மாநாட்டில் மாநில செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1952இல் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964இல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்தல்வாதப் பிரிவினருக்கு எதிராக எதிர்ப்பு
தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டபோது, தசரத்
தேவ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியின் மத்தியக்குழுவிற்கும்
தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலிருந்து 1998இல்
உடல் நலிவடைந்த சமயத்தில் அதிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
திரிபுரா மாநிலத்தில்
பட்டினியால் வாடிக்கொண்டிருந்த மக்களுக்கு உணவுக்காகவும், கிழக்கு
பாகிஸ்தானிலிருந்து (இன்றைய வங்க தேசத்திலிருந்து) அகதிகளாக புலம்பெயர்ந்து வந்த
மக்களுக்கு முறையான புனர்வாழ்வுக்காகவும்,
நடைபெற்ற அலை அலையான போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள்
காரணமாக 1978இல் நடைபெற்ற தேர்தலில் இடது முன்னணி அரசாங்கம் மாபெரும் வெற்றி பெற்றது.
தசரத் தேவ், நிருபன் சக்ரவர்த்தி,
பிரன் தத்தா ஆகியோர் அளப்பரிய தலைவர்களாக உருவானார்கள்.
இடது முன்னணி அரசாங்கம் அமைந்தபின், வரலாறு
படைக்கக்கூடிய விதத்தில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தியது. இவற்றில்
திரிபுரா மாநிலத்தின் இரண்டாவது மொழியாக கோக் பாரோக் என்னும் பழங்குடியின மொழியை
அங்கீகரித்தது,
கல்வி மற்றும் அரசின் வேலைவாய்ப்புகளில் பழங்குடியினருக்கான
இடஒதுக்கீடுகளைக் கறாராக அமல்படுத்தியது,
கிராமப்புற ஏழைகளுக்கு `உணவுக்கான திட்டத்தை’
அறிமுகப்படுத்தியது,
மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்திருப்போருக்கு நில வரியை
ரத்து செய்தது,
பழங்குடியினரிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும்
பழங்குடியினருக்கே வழங்கியது,
பழங்குடியினர் பகுதிகளில் சுயாட்சி கவுன்சில் அமைத்தது, ஆரம்பப்பள்ளி
மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்தது, ஆகியவைகளாகும்.
இடது முன்னணியின் செல்வாக்கைச் சீர்குலைப்பதற்காக பிற்போக்கு
சக்திகள் பழங்குடியினர் - பழங்குடியினரல்லாதவர்கள் இடையே மிகப்பெரிய அளவில்
வகுப்புத்துவேஷத்தை உருவாக்கிட 1980 ஜூனில் வன்முறைகளைக் கட்டவிழ்த்தவிட்டன. தசரத் தேவைக் கொலை செய்திட வங்க
வெறியர்களும், பழங்குடியின வெறியர்களும் தேடி அலைந்தனர். அவர் பல சமயங்களில்
அவர்களிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.
1978 முதல் 1988 வரை திரிபுரா மாநில முதல்வராக நிருபன் சக்ரவர்த்தி இருந்த சமயத்தில் அவரது
அமைச்சரவையில் தசரத் தேவ் கல்வி மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக
இருந்தார். காங்கிரஸ் - திரிபுரா
உபசாதி ஜூபசமிதி கூட்டணி ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டார்.
தோழர் தசரத் தேவ் பழங்குடியினர் - பழங்குடியினரல்லாதவர்
இடையே நல்லிணக்கத்தையும் நட்புறவையும் வலுப்படுத்துவதில் பாலமாக விளங்கினார். அவர்
ஒருசிறந்த பேச்சாளர் மட்டுமல்ல,
சிறந்த நாடாளுமன்றவாதியும், தலைசிறந்த
நிர்வாகியுமாவார். அவரது முயற்சியின் காரணமாகத்தான் பேச்சு வழக்கில் மட்டும்
இருந்த கோக் போராக் மொழிக்கு எழுத்துரு கண்டுபிடிக்கப்பட்டது. அவரது “திரிபுரா மக்கள் இயக்கம் - என் நினைவுகள்’’ (The history of mass movement in my memory)என்ற
நூலும், “கணமுக்தி பரிஷத் வரலாறு’’
(History of Mukti Parishad) என்னும் நூலும் திரிபுரா மாநில வெகுஜன இயக்க வரலாற்றின் மதிப்பிடற்கரிய
ஆவணங்களாகும்.
2015 பிப்ரவரி 2இலிருந்து தசரத்தேவ் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் திரிபுரா மாநிலம் முழுதும்
வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பிறந்த
நாள் விழாக் குழு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவது என இலக்கு நிர்ணயத்திருந்தது, ஆனால்
அதனை ஏற்கனவே விஞ்சி,
ஒரு லட்சத்து 70 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது.
தோழர் தசரத் தேவ் வரலாறு படைத்திட்ட மக்கள் எழுத்தறிவு
இயக்கத்தை நிறுவனத் தலைவர்களில் ஒருவர்
என்ற முறையிலும்,
திரிபுராவில் மன்னராட்சிக்கு முடிவுகட்டி ஜனநாயகஇயக்கம்
அமைத்திட்டவர்களின் ஒருவர் என்ற முறையில் திரிபுரா மக்களால் மட்டுமல்ல, நாட்டு
மக்கள் அனைவராலும் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
(தமிழில்: ச.வீரமணி)