Tuesday, November 26, 2024

இலங்கை: மக்கள் எங்களுக்கு அளித்துள்ள அதிகாரத்தை மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்திடப் பயன்படுத்துவோம் ஜேவிபி பொதுச் செயலாளர் தில்வின் சில்வா உறுதி

இலங்கை: மக்கள் எங்களுக்கு அளித்துள்ள அதிகாரத்தை மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்திடப் பயன்படுத்துவோம் ஜேவிபி பொதுச் செயலாளர் தில்வின் சில்வா உறுதி
[இலங்கையில் தேர்தல்கள் நடைபெற்றபின் நவம்பர் 15 அன்று மாலை ஜேவிபி தலைமையகம் உள்ள பெலவத்தாவில் பொதுச் செயலாளர் தில்வின் சில்வா, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது தேசிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் டாக்டர் நிகல் அபெசிங்கே மற்றும் அதன் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் சரோஜா பால்ராஜ், வழக்குரைஞர் சுனில் வடகலா ஆகியோரும் உடன் இருந்தார்கள். அப்போது அவர் கூறியதாவது:] “நாடாளுமன்றத் தேர்தல்களின் இறுதி முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. தேசிய மக்கள் சக்தி இந்தத் தேர்தலில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இது ஒரு வரலாற்றுசிறப்புமிக்க அரசியல் திருப்புமுனையாகும். பிரதிநிதித்துவ வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஓர் அரசியல் கட்சி இத்தகைய ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருப்பது இதுவே முதல் தடவையாகும். இது, ஆட்சியின் ஒரு சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, புதிய சகாப்தத்தை தொடங்கும் நோக்கில் நம்நாட்டு மக்கள் நமக்கு அளித்துள்ள கட்டளையாகும். மக்கள் நமக்கு அளித்துள்ள கட்டளையில் உள்ள அரசியலை நம்மால் தெளிவாகவே பார்க்க முடியும். நாடாளுமன்றத்தின் மொத்தம் உள்ள 225 இடங்களில் 159 இடங்களை நம்மால் வெல்ல முடிந்திருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருக்கிறது. வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய இரு மாவட்டங்களிலும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் ஒரு சிறப்பான அரசியல் தன்மை முன்னுக்கு வந்திருக்கிறது. கிழக்கு மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் திரிகோணமலை ஆகிய இரு மாவட்டங்களிலும் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். கடந்த காலங்களில் ஒரு விதமான அரசியலால் ஆதிக்கம் பெற்றிருந்த தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியான மலை நாட்டிலும் நாம் வெற்றிகளை ஈட்டியிருக்கிறோம். நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் வெற்றிகளை ஈட்டியிருக்கிறோம். நம் நாட்டு மக்கள் அனைவரும் ஒரே லட்சியத்தை நோக்கி முன்னேறும் விதத்தில் வெற்றிக்காக கைகோர்த்திருக்கிறார்கள். எனவேதான் இந்த வெற்றியை மிகவும் சிறப்பான ஒன்றாக நாம் கருதுகிறோம். மேலும், அரசு ஊழியர்களில் 80 விழுக்காட்டினரும் தங்கள் ஆதரவை நல்கி இந்த வெற்றிக்குத் தங்கள் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். நமக்குக் கிடைத்துள்ள இந்தக் கட்டளை முழுக்க முழுக்க ஓர் அரசியல் கட்டளையாகும். இதுவரையிலும், இதற்கு முன்னிருந்த பல கட்சிகளின் கூட்டணிகளால் கட்டமைக்கப்பட்ட வெற்றிகளைக் காட்டிலும் இந்த வெற்றியானது ஓர் அரசியல் ஆழத்தையும் சாராம்சத்தையும் கொண்டுள்ளது. எனவே, இதற்காக முதலில் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்த இயக்கத்தை இந்த வெற்றிக்கு கொண்டு வருவதில் பலர் தாங்கள் எதிர்கொண்ட கஷ்டங்களை சகித்துக்கொண்டனர். பலர் தியாகம் செய்து உழைத்துள்ளனர். மேலும், நமக்கு வாக்களித்து உதவியவர்களும் உள்ளனர். தேசிய மக்கள் சக்தி என்ற வகையில், நீண்டகாலமாக துன்பங்களைச் சகித்துக்கொண்டு, இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நாங்கள் எங்களது அஞ்சலியை செலுத்துகிறோம். அந்த மக்கள் அனைவரின் துணிச்சலும்தான் புதிய நாட்டைக் கட்டியெழுப்பும் வாய்ப்பை நமக்கு வழங்கியுள்ளது. இந்த வெற்றியை ஆதரித்த, வாக்களித்த, உதவிய அனைவருக்கும் எங்கள் நன்றியையும் மரியாதையையும் தெரிவிப்பதற்கும், தலை வணங்குவதற்கும் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறோம். குறிப்பாக, வட பகுதி மக்கள் வரலாற்றில் முதன்முதலாக மற்றொரு பிராந்தியத்தைத் சேர்ந்த ஒரு தலைவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். வடக்கு, கிழக்கு மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இனவாதத்தைப் புறந்தள்ளிவிட்டு தென்னிலங்கை மக்களுடன் கரம்கோர்த்துள்ளார்கள். இதற்கு நாங்கள் அளப்பரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இனவெறியை விசிறிவிடும் தலைவர்களால் பரப்பப்படும் பொய்கள், புழுகு மூட்டைகள், தவறான கருத்துக்கள் மற்றும் கற்பனைக்கதைகளைக் கொஞ்சம்கூட நம்பாமல் நம்முடன் கைகோர்த்திருப்பதற்காகவும், நாம் அனைவரும் ஒரு நாட்டு மக்கள் என்று சிந்தித்திருப்பதற்காகவும் நாம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். சிலர், சமூகத்தில் எங்கள் கருத்தை எடுத்துச் செல்வதற்காக, எங்களிடமிருந்து எதையும் எதிர்பாராமல் எங்களுக்குப் பணம் அளித்து உதவியிருக்கிறார்கள். சில இதழாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் தங்களுக்கு வேலையிழக்கும் ஆபத்து இருந்தபோதிலும் அதனை உதாசீனப்படுத்திவிட்டு எங்களுக்கு உதவியிருக்கிறார்கள். நாட்டை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் ஏராளமான மக்கள் எங்களுக்கு உதவி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்குக் கிடைத்துள்ள வெற்றியின் முழுப் பரிமாணத்தையும் நாங்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கிறோம். மக்கள் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம். நாட்டில் 76 ஆண்டுகளாக அரசியல் அதிகாரத்தை வைத்திருந்த அரசியல் கட்சிகளைத் தோற்கடித்து நாங்கள் இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எங்களின் வெற்றியின் வேகத்தைப் பார்க்கும்போது, சுமார் 56,34,000 வாக்குகளைப் பெற்றிருந்தோம். இந்த பொதுத் தேர்தலில் அதை 68,63,000 ஆக உயர்த்தி இருக்கிறோம். ஒன்றரை மாதங்களில் 12 லட்சம் அதிகரித்திருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் சமகி ஜன பலவேகய சுமார் 43,63,000 வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அது பெற்ற வாக்குகள் 19,68,000 ஆகக் குறைந்துள்ளது. அவர்கள் கிட்டத்தட்ட 24 லட்சம் வாக்குகளை இழந்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளில் பாதியைக்கூட அவர்களால் பெற முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க சுமார் 22,99,000 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்தத் தேர்தலில் அவரால் சுமார் 5,00,000 மட்டுமே பெற முடிந்தது. சுமார் 17 லட்சம் பேர் அவரை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த ஒன்றரை மாதங்களில் இந்த அரசியல் கட்சிகள் சரிந்து விட்டன. ஜனாதிபதி தேர்தலின் போது ரணிலும், சமகி ஜன பலவேகய கட்சியினரும் பொய்களை கூறி மக்களை மிரட்டியதால் மக்கள் சற்றே தயங்கினர். ஆனால், கடந்த ஒன்றரை மாதங்களில் இவர்களின் பொய்களின் அளவு என்ன என்பதை அவர்கள் நன்கு உணர்ந்துவிட்டனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரமும், பங்குச் சந்தையும் வீழ்ச்சியடையும், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும், ரூபாய் மதிப்பு குறையும் என்றார்கள். இரண்டு கார்களில் ஒன்று எடுக்கப்படும், ரத்தம் சிந்தப்படும், அமைதி குலைந்துவிடும், நாடு அழிந்துவிடும் என்றார்கள். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் மத வழிபாட்டை அனுமதிக்க மாட்டோம் என்றார்கள். அந்த வகையில் அவர்கள் அச்சமூட்டிய சமூகத்தில்தான் நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றோம். ஆனால், அதன் பிறகு கடந்த ஒன்றரை மாதங்களில் அந்த அறிக்கைகள் அனைத்தும் பொய் என்பதை மக்கள் உணர்ந்தனர். அதனால் மக்கள் எங்களுக்கு உதவுவது எளிதாக இருந்தது. பொய்யால் வெற்றி பெற முயன்றவர்கள் பொய்யால் தோற்கடிக்கப்பட்டனர். பொதுப் பணத்தைச் சார்ந்து இருந்த பழைய, சிறப்புரிமை, குடும்பக் கட்டுப்பாடு, உயர்சாதி ஆதிக்க அரசியல் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. பழைய காலம் முடிந்துவிட்டது. இப்போது, சாதாரண மக்களின் அரசியல், ஆட்சியைப் பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்கு மக்களின் ஆதரவும் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. நமது நாட்டு மக்கள் மதவெறியை நிராகரித்துள்ளனர் என்பதை இந்த முடிவிலிருந்து அறியலாம். வடக்கின் இனவாதத் தலைவர்கள் வடக்கிற்குச் சென்று இனவாதத்தைத் தூண்ட முயன்றனர். எங்களின் சில அறிக்கைகளைத் திரித்து தமிழ் மக்களுக்கு எதிரான அறிக்கைகளாக காட்ட முயன்றனர். மேலும், தேசிய மக்கள் சக்திக்கு எதிராக முஸ்லிம் மக்களைத் தூண்டிவிடவும், முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மதவெறியை விசிறிவிட ஆரம்பித்தனர். எனினும் அவர்களின் பொய்களை தமிழ் மக்களோ அல்லது முஸ்லிம் மக்களோ ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே முடிவுகள் காட்டுகின்றன. நம் நாட்டின் அரசியல் தலைவர்களைக்காட்டிலும் நம் மக்கள் புரிந்துணர்வுடன் செயல்பட்டுள்ளார்கள். மதவெறி மற்றும் தீவிரவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பழைய அரசியல் கட்சிகளுக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது. கடந்த 50 நாட்களில், தேசிய மக்கள் சக்தியின் நடைமுறையை நம் நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டதைக் காண முடிந்தது. எளிமையான அரசை தொடங்கினோம். பொதுமக்களின் பணத்தை வீணாக்காமல் எப்படி செயல்படுவது என்பதை நிரூபித்துள்ளோம். மக்களுக்கும் மேலே நின்று பிரபுத்துவ மனப்பான்மையுடன் நாங்கள் நடந்துகொள்ளவில்லை. மக்களோடு மக்களாக உழைத்து நேர்மையாக உழைக்கும் எளியவர்கள் என்பதைக் காட்டி இருக்கிறோம். அதுவே நமது வாக்குகள் பெருகக் காரணமாக இருந்திருக்கலாம். இவ்வாறு நம்மீது நம்பிக்கை வைத்துள்ள நம் மக்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாப்பது நமக்கு சவாலாக உள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அதிகமான அதிகாரம் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதீத சக்தியைப் பயன்படுத்துவதில் நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்போம். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வழங்கக்கூடாது என்ற கருத்து இருந்து வருகிறது. அது, ஏன்? 1977க்குப் பிறகு, ஆட்சிபுரிந்தவர்கள் தங்களுடைய அதீத அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்களை அடக்கி ஒடுக்கி, மக்களின் குரலுக்குச் செவி சாய்க்காமல், முடிந்தவரை பொதுச் சொத்துக்களை அனுபவித்து வந்தனர். இதுவரை ஆட்சி புரிந்தவர்கள் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அதிகார போதையில் மிதந்தனர். அது தோற்கடிக்கப்பட வேண்டியிருந்தது. நாங்கள் அரசியல் அதிகார போதையில் இருக்க மாட்டோம். இந்த அதிகாரம் மக்களால் எங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரமாகும். அதை மிகவும் கவனமாக மக்கள் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு நம் முன் உள்ளது. இந்த அதிகாரத்தை மக்களை ஒடுக்குவதற்கோ அல்லது ஆட்சியில் இருப்பவர்களின் பிழைப்புக்காகவோ பயன்படுத்தப்படாமல், இந்த நாட்டைக் கட்டியெழுப்ப, ஜனநாயகத்தை நிலைநாட்ட, மோசடி இல்லாத, ஊழலற்ற நல்லாட்சியை உருவாக்கிட, மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிட பயன்படுத்துவோம் என்று உறுதி அளிக்கிறோம். நம் நாடு மிகவும் வறுமையில் இருந்து வருகிறது. மூன்று வேளையும் உண்ண முடியாத மக்கள் இருந்து வருகிறார்கள். குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. போதைப் பொருள்கள் பயன்படுத்துவது அதிகமாகி இருக்கிறது. சர்வதேச சமூகத்தின் முன்னால் நம் பிம்பம் அழிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் பொதுப் பணத்தில் சொகுசாக வாழ்ந்து ஊறித்திளைத்தார்கள். அத்தகைய அமைப்பு முறைக்கு முற்றிலும் மாற்றாக புதியதொரு நாட்டைக் கட்டி எழுப்பிட வேண்டும். நல்லதொரு நாட்டைக் கட்டி எழுப்பிட வேண்டும். ஜனநாயகம் மற்றும் பொருளாதாரத்தின் நேர்மையற்ற தன்மை நம் முன் உள்ளது. நாம், நம் மக்களின் அத்தியாவசியப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டியிருக்கிறது, கிராமப்புற வறுமையை ஒழித்துக்கட்ட வேண்டியிருக்கிறது, ஒரு தூய்மையான இலங்கையை உருவாக்க வேண்டியிருக்கிறது, கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்கமான நாட்டை உருவாக்க வேண்டியிருக்கிறது, மக்களின் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டியிருக்கிறது, நாட்டின் கடனை அடைக்க வேண்டியிருக்கிறது, வீழ்ந்த பொருளாதாரத்தை மீளவும் கட்டி எழுப்ப வேண்டியிருக்கிறது, மக்கள் கண்ணியத்துடன் வாழக்கூடிய விதத்தில் நாட்டை உருவாக்க வேண்டியிருக்கிறது. இந்த சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுவதற்கு இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவோம் என்றும், எங்கள் கட்சியின் சொந்த நலனுக்காக இதனைப் பயன்படுத்தமாட்டோம் என்றும் மக்களுக்கு நாங்கள் உறுதி கூறுகிறோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இந்தத் தேர்தலிலும் அரசியல் கலாச்சாரம் மாற்றப்பட்டதுடன் தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகள் இடம்பெறவில்லை. எங்களுக்கு வாக்களிக்காதவர்களை அடக்கியாளும் வெற்றியைக் கொண்டாடும் கலாச்சாரத்தை நாங்கள் உருவாக்கவில்லை. எனவே ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்காதவர்கள் இம்முறை எங்களுக்கு வாக்களித்திருப்பது எளிதானது. குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றியைப் பெற்றுள்ளோம். இந்த வெற்றியால் எங்களுக்குத் தலைக்கனம் ஏறிவிடவில்லை. இதன் பின்னே வெற்றியாளர்கள், தோல்வியாளர்கள் என்று இரண்டு பிரிவுகள் இல்லை. நம் நாட்டு அரசியலுக்குத் தேவைப்படாத அரசியல்வாதிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். இனி அவர்கள் தேவையில்லை. நாம் அனைவரும் இந்த நாட்டின் குடிமக்கள். இது நாட்டுக்குக் கிடைத்த வெற்றி. முஸ்லிம்கள், தமிழர்கள், சிங்களவர்கள், பர்கர்கள், மலாய்க்காரர்கள், பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள், இந்துக்கள் ஆகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, வீழ்ந்துள்ள நாட்டை மீளவும் தூக்கி நிறுத்திடுவோம். இது நம் பொறுப்பாகும். இதற்காக அனைத்துத் தரப்பினரையும் எங்களுடன் சேர வருமாறு அறைகூவி அழைக்கிறோம். தேசிய மறுமலர்ச்சி, பொருளாதார மறுமலர்ச்சி, அரசியல் மறுமலர்ச்சி, கலாச்சார மறுமலர்ச்சி, மனித சிந்தனையின் மறுமலர்ச்சி ஆகியவற்றை உருவாக்கி, நம் நாட்டை உலகில் ஒளிமயமானதாக மாற்றிட நாம் அனைவரும் இப்போதிருந்தே பாடுபடுவோம். மக்கள் எமக்கு வழங்கிய ஆணை நாட்டிற்கு வெற்றியை பெற்றுத் தருவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என நாங்கள் உறுதியளிக்கின்றோம். இந்த வெற்றிக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். “பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 25.11.2024” (தமிழில்: ச.வீரமணி)