Thursday, August 8, 2013

நாடாளுமன்றம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது


ஆட்சியாளர்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களை செயல் படாது தடுத்திட மேற்கொள்ளும் முயற்சிகளும், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் பணபலத்தின் செல் வாக்கு வளர்ந்து கொண்டிருப்பதும், மக்களின் நியாயமான அபிலாசை களைக் கருக வைத்திருக்கிறது.
நாடாளுமன்றம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவ லனாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை, நாட்டு மக்களே ஒப்புயர்வற்ற வர்கள் என்று மிகவும் கம்பீரமாகப் பறை சாற்றுகிறது. அவர்கள் தங்கள் ஒப்புயர் வற்ற நிலையினைத் தங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். இப்போதெல் லாம், நாடாளுமன்றம் செயல்படா நிலையே தலைப்புச் செய்திகளாக உள்ளது. அது உண்மையும் கூட. இதுவரையிலான இந்திய நாடாளுமன்ற மக்களவைகளிலேயே தற்போதைய 15ஆவது மக்களவைதான், மிகவும் குறைந்த நாட்களே இயங்கிய ஒன்று என்கிற வரலாறு’(?) படைத்துள்ளது.

மக்களவை செயலகம் தயார்செய்துள்ள புள்ளி விவரங்களின்படி, 15ஆவது மக்களவையின் 12ஆவது அமர்வுவரை 1,157 மணி நேரம்தான் அமர்ந்திருக்கிறது. 14ஆவது மக்களவையின் 1,736 மணி 55 நிமிடங்களுடன் ஒப்பிடுகையில் இது மிக வும் பின்தங்கிய ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள முடியும். உண்மையில் முதலா வது மக்களவை 677 நாட்கள் அமர்ந்து, தன்னுடைய 14 அமர்வுகளில் 3,784 மணி நேரம் இயங்கி இருக்கிறது. நாடாளுமன்றத்தின் மேலவை என்று கூறப்படும் மாநிலங்களவையிலும் நிலை மைகளில் எந்த வித்தியாசமும் இல்லை. வரலாற்றில் முதன்முறையாக, மாநிலங் களவை பட்ஜெட்டை எவ்வித விவாதமு மின்றி திருப்பி அனுப்பி இருக்கிறது.பல சட்ட முன்வடிவுகள் கிடப்பில்நாட்டில் ஜனநாயகத்தின் செயல்பாடு அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என் பதை இது மட்டும் காட்டவில்லை. ஆட்சி யாளர்கள் பல கொள்கை முடிவுகளை நாட்டின் ஒப்புயர்வற்ற அமைப்பான நாடாளுமன்றத்தைக் கலந்தாலோசிக்கா மலேயே எடுத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு, ‘ஆதார்’ (Aadhar)அட்டை வழங்குத லாகும். ஆதார்அட்டை என்பது அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளையும் பெறு வதற்கு அத்தியாவசியமான ஒன்று என்று கருதப்படுகிறது. ஆதார்எண் இல்லா மல் ஒரு மாணவன் மத்திய, மாநில அரசு களிடமிருந்து எவ்வித உதவியும் பெற முடியாது. நேரடிப் பயன் மாற்றல் (Direct Benefit Transfer) என்னும் திட்டமானது ஆதார்எண்ணையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

வங்கிக் கணக்குகள் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆதார் திட்டத்திற்கு சட்டரீதி யாக என்ன பின்னணி இருக்கிறது? ஆதார் அமலாக்கத்திற்கான சட்டமாக தன்னிகரற்ற அடையாளஅட்டை சட்ட முன்வடிவு (UID bill - Unique Identification Bill) கருதப்படுகிறது. ஆனால், இச்சட்ட முன்வடிவின் பல ஷரத்துக்களுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு தன்னுடைய அறிக்கையில் கடும் ஆட்சேபணைகளைத் தெரிவித்திருந்தது. அரசாங்கம் நிலைக் குழுவின் ஆட்சேபணைகள் குறித்து, கிஞ் சிற்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில் லை. அதனை முழுமையாக அப்படியே கிடப்பில் போட்டு வைத்துவிட்டது. இச் சட்டமுன்வடிவினை எந்த வடிவத்திலும் இதுவரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றிட அரசாங்கம் முன் வரவே இல்லை.ஆனால், ‘ஆதார்ஏற்கனவே மக்க ளின் வாழ்க்கையில் எதார்த்தமான ஒன் றாக, ஒவ்வொரு இந்தியப் பிரஜைக்கும் தன் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்க மாக மாறிவிட்டது. அரசாங்கத்தின் இத்த கைய திருட்டுத் தனமான அணுகுமுறை யை அது, மத்திய, மாநில அரசு ஊழியர் களுக்காகக் கொண்டுவந்துள்ள பங் களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (Contributory Pension Scheme)அறிமுகப்படுத்தி யதிலும் பார்க்க முடியும். நம் நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளும் தன்னுடைய ஊழியர்களிடமிருந்து ஓய்வூதிய நிதியாக கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித் துக் கொண்டிருக்கின்றன.

ஆனால், அது தொடர்பான சட்டமுன்வடிவு இன்னமும் நாடாளுமன்றத்தில் நிலுவையிலேயே இருந்து கொண்டிருப்பதை நாம் காண் கிறோம். இத்தனை ஆண்டு காலமாக இவ்வாறு கோடிக்கணக்கான ரூபாய் களை அரசு ஊழியர்களிடமிருந்து வசூ லித்துக் கொண்டிருப்பதற்கான சட்டப் பூர்வமான நிலை என்ன? நாட்டு மக்க ளைக் கடுமையாகப் பாதிக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளை அரசாங்கமானது நாடாளுமன்றத்தைப் புறந்தள்ளிவிட்டு எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுவதற்கு இவை ஒருசில எடுத்துக் காட்டுகளேயாகும்.நாட்டின் அரசியலமைப்புச் சட்ட மானது, ஜனநாயக அமைப்பின் பல்வேறு அங்கங்களுக்கும் இருக்கின்ற அதிகாரங் கள் குறித்து மிகவும் தெளிவாக வரை யறை செய்து தந்திருக்கிறது. நாடாளுமன் றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றும்போது அது நாட்டின் சட்டமாக மாறுகிறது. நாட்டி லுள்ள அனைத்துப் பிரஜைகளும் அதற் குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டியவர் களாகிறார்கள். ஆனால், இத்தகைய அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டளை யையே ஆட்சியாளர்கள் மீறும் போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானமே ஓரங்கட்டப்பட்டுவிட்டது2012-13ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்கையில், அப் போது நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, கடந்தகால வரி நிலுவைகளை வசூலிப்பதற்காக, கடந்தகால வரிவிதிப்பு முறையை (retrospective taxation) அறி முகப்படுத்தினார்.

இச்சட்டமுன்வடிவினை நாடாளுமன்றத்தின் இரு அவை களும் ஒருமனதாக நிறைவேற்றின. ஆனால், ப.சிதம்பரம் நிதியமைச்சரானபிறகு, காட்சிகள் மிக வேகமாக மாறின. இந்தப் புதிய வரிவிதிப்பு சீர்திருத்தத்தை ஆராய் வதற்காக ஒருநபர் குழுவை அமைத்தார். வரிகள் தொடர்பான வல்லுநர், பார்த்த சாரதி சோம், அறிக்கையைப் பெற்ற ஒரு வார காலத்திற்குள்ளாகவே நாடாளுமன் றத்தின் இரு அவைகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட கடந்தகால வரி விதிப்புமுறை சட்டத்தை மூன்றாண்டு காலத்திற்கு அரசாங்கம் கிடப்பில்போடத் தீர்மானித்தது. நாட்டின் மிக ஒப்புயர்வற்ற அமைப்பான நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒருமனதாக நிறைவேற்றிய ஒரு சட்டத்தை ஒரு வல்லுநர் ரத்து செய்ய முடியுமா? நாடாளுமன்றத்தின் குழுக்கள், ஒரு சிறிய அளவிலான நாடாளுமன்றம் என்றே கருதப்படுகின்றன. இக்குழுக்களில் அநேகமாக அனைத்து அரசியல் கட்சிக ளின் உறுப்பினர்களும் அங்கம் வகிப்பது வழக்கம். நன்கு வளர்ந்த ஜனநாயக நாடு களில், நாடாளுமன்றக் குழுக்களின் முடிவுகளை நாடாளுமன்றம்தான் ரத்து செய்திட முடியும். ஆனால், இந்தியாவில் தான், நாடாளுமன்றக் குழு அளித்திட்ட பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள் வதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ உரிமை பெற்றிருக்கிறது.
ஒரு சட்டமுன் வடிவில் புதிதாக ஏதேனும் ஒரு பிரிவை அரசாங்கம் இணைக்கும்பட்சத்தில், மீண்டும் அச்சட்டமுன்வடிவு, பரிசீல னைக்காக நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆனால், இதுநாள்வரை இவ்வாறு பின்பற் றப்பட்டு வந்த அரசியலமைப்புச் சட்ட நடைமுறைக்கு முரணாக, இந்தியக் குடி யரசின் வரலாற்றில் முதன்முறையாக, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை களை ஆய்வு செய்வதற்காக அரசாங்கம் ஒரு வல்லுநர் குழுவை அமைக்கிறது. நாம் மிகவும் ஆச்சர்யப்படத்தக்க விதத்தில், நிதித்துறை சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு நேரடி வரிவிதிப்புச் சட்டம் (Direct Tax Code) குறித்து தன் அறிக்கை யை சமர்ப்பித்தபோது, நிதி அமைச்சக மும் உடனடியாக அந்த அறிக்கை மீது ஒரு குழுவை அமைத்ததைப் பார்த்தோம். இதுதொடர்பாக மோதல் வெடித்த போது, அமைச்சகத்தின் சார்பில் சில சமாதா னங்கள் சொல்லப்பட்ட போதும், இவ்வாறு குழு அமைக்கப்பட்டதை நியாயமான அல்லது நேர்மையான ஒன்று எனக் கருத முடியுமா? இது நாடாளுமன்றத்தின் அதி காரத்தைப் பறிக்கும், மக்களின் குரலை நெறிக்கும் செயலாகாதா?இவை அனைத்தும் நாடாளுமன்றத் தின் சட்டமியற்றும் அதிகாரங்களைக் கீழ றுத்திடுவதற்கான ஒரு திட்டத்தின் அடை யாளங்களேயன்றி வேறல்ல. அரசின் இத்த கைய இழிவான நடவடிக்கைகள் இதர பல கொள்கைப் பிரச்சனைகளிலும் வெளிப்பட்டிருக்கின்றன. 1990களுக்கு முன்பெல்லாம், நாட்டிலுள்ள சாமானியன், தொலைக்காட்சி முன் அல்லது வானொலி முன் அமர்ந்து, பட்ஜெட் முன்மொழிவுகள் குறித்து தெரிந்துகொள்வதற்காக ஆவ லோடு காத்திருப்பார்கள். வரி விதிப்பு முறைகளில் ஏதேனும் மாற்றம் வருமா? பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலைகளில் மாற்றம் இருக்குமா? ரயில் கட்டணம் உயருமா? இதுபோன்று எண் ணற்றவை குறித்து எதிர்பார்ப்புடன் அமர்ந் திருப்பார்கள்.

ஆனால், இப்போதெல்லாம், எவரொருவரும் பட்ஜெட் குறித்து அலட் டிக்கொள்வதில்லை. சமீபகாலங்களில், நாடாளுமன்றம் மட்டுமல்ல, அரசாங்கம் கூட, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்திடுவதில் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. அரசாங் கம் அதற்கான அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டது. சென்ற ரயில்வே பட்ஜெட்டின்படி இனி ரயில் கட்டணங்கள் ஓர் ஒழுங்குமுறை அதிகாரக்குழுமத்தின் (regulatory authority) மூலமாக தீர்மானிக்கப்பட இருக் கின்றன. அரசாங்கம் தற்போது பொருள்கள் மற் றும் சேவைகள் வரி (Goods and Services Tax) அமல்படுத்துவதற்காக ஓர் அரசிய லமைப்புத் திருத்தச் சட்டமுன்வடிவை நிறைவேற்றத் தயாராகிக் கொண்டிருக் கிறது. வரைவு சட்டமுன்வடிவின்படி, வரி விகிதங்களைத் தீர்மானித்திட, நாடாளு மன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் கிடை யாது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு களுக்கான வரி விதிகத்தைத் தீர்மானிப் பதற்கான அதிகாரங்களை பொருள் மற் றும் சேவை வரிக் கவுன்சில் (GST Council) மட்டுமே பெற்றிருக்கும். இவ்வாறு வரிவிதிக்கும் நடைமுறைகளில் இனி நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றங் களுக்கோ எவ்வித வேலையும் கிடை யாது. இதன் மூலமாக பட்ஜெட் என்பது வெறுமனே காலத்தைச் செலவழிக்கும் ஒன்றாகவே மாறுகிறது. இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளுக்கு, அரசியலமைப்புச் சட் டம் வழங்கிய பொறுப்புகள் அவர்களிட மிருந்து, பறிக்கப்பட்டுள்ளன. சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் அரசின் இத் தகைய முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்புகள் வந்தபின்னர், அரசாங்கம் இச்சட்டமுன் வடிவில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய் திருக்கிறது. அதாவது பொருள் மற்றும் சேவை வரிக் கவுன்சில் அதிகாரங்கள் சிபாரிசுசெய்யக்கூடியவை மட்டுமே என்று அரசு கூறியிருக்கிறது. ஆனால், உண்மையில், இதன் சிபாரிசுகள் எதிர் காலத்தில் நிதியமைச்சர்களின் கை களைக் கட்டிப்போடும் என்பதிலோ, அதன்மூலம் நாடாளுமன்றத்தின் அதி காரங்களை நீர்த்துப்போகச் செய்திடும் என்பதிலோ ஐயமில்லை. நாடாளுமன்ற அமைப்புமுறைக்கு ஏற் பட்டுள்ள மற்றுமொரு மிகப்பெரிய அச் சுறுத்தல், இந்திய சமூகத்தின் அடிப்படை அமைப்பாக விளங்கும் இதன் பிரதிநிதி களின் வர்க்கப் பின்னணி மிக மோசமாக வீழ்ச்சியடைந்திருப்பதாகும். நாடாளு மன்ற உறுப்பினர்கள் தொடர்பாக மேற் கொள்ளப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 15ஆவது மக்களவையில் 306 நாடாளு மன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களா வார்கள். இது, 14ஆவது மக்களவையை விட நூறு விழுக்காட்டுக்கும் அதிகமான தாகும். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப் பினரின் சராசரி சொத்து மதிப்பு 5.8 கோடி ரூபாய்களாகும். நாட்டின் மக்கள்தொகை யில் 77 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர் கள் நாளொன்றுக்கு 20 ரூபாய்க்கும் கீழே தான் செலவழிக்கிறார்கள் என்று கூறப் படுகிற ஒரு சமூகத்திற்கு இவர்கள்தான் பிரதிநிதிகள் என்று கூறப்படுவது கேலிக் கூத்தாக இல்லையா? மற்றொரு புள்ளி விவரம் என்ன கூறுகிறதெனில், சென்ற மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களில் 5 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து உள்ள வர்கள் 32 விழுக்காட்டினர் என்பதாகும். 50 லட்சம் ரூபாய்க்கும், 5 கோடி ரூபாய்க் கும் இடையே சொத்து உள்ள வேட்பாளர் களின் வெற்றி வாய்ப்பு 18.5 விழுக்காடு, பத்து லட்சத்திற்கும் கீழே சொத்துள்ளவர் களின் வெற்றி வாய்ப்பு வெறும் 2.6 விழுக் காடு மட்டுமே.

இதன் மூலம், தாராளமயப் பொருளாதாரத்தின் தேர்தல் அமைப்பு முறையில் மிகப்பெரிய காரணிகளில் ஒன்றாக பணபலம் இருக்கிறது என்பது தெளிவு.ஒரு குறிப்பிட்ட காலம் வரை, இந்திய ஜனநாயக அமைப்புமுறை ஒரு முற் போக்கு குணாம்சத்தோடு இருந்தது. ஆனால், ஆளும் வர்க்கத்தினரால் அது தாக்குத லுக்கு உள்ளாக்கப்பட்டது. நாடாளுமன் றத்தின் பிரதிநிதித்துவ குணாம்சத்தைப் பாதுகாத்திட வேண்டும். நாடாளுமன்றம் மூலமாகத்தான் மக்களின் அபிலாசை களையும் தேவைகளையும் பூர்த்தி செய் திட முடியும். இதன்மூலம்தான் நாட்டின் சட்டங்களையும், மக்களுக்கான நீதியை யும் வழங்கிட முடியும். நாடாளுமன்றத் திற்கான அதிகாரங்களையும், பொறுப்பு களையும் மறுப்பதோ அல்லது அவற்றைப் பறிப்பதோ மக்களின் நியாயமான அபிலா சைகள் அரிக்கப்படுவதற்கே இட்டுச் செல்லும்.

(கட்டுரையாளர் : நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்)
நன்றி:தி இந்து நாளிதழ் ஆகஸ்ட்7
தமிழில்: ச.வீரமணி


Sunday, August 4, 2013

தெலுங்கானா தனி மாநிலம்



பல ஆண்டுகளாக மேற்கொள்ளப் பட்ட மழுப்பல் பேச்சுகளுக்குப் பின், தற் போதைய ஆந்திரப் பிரதேச மாநிலத்தி லிருந்து தெலுங்கானா மாநிலம் தனியே அமைக்கப்படும் என்கிற தீர்மானத்தை காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒருமனதாக நிறைவேற்றியிருப்பதனை அடுத்து வர விருக்கும் மாதங்களில் விரைவில் அமைக்கப்படவிருக்கிறது. ஆயினும், இம் முடிவினை எதார்த்தமாக்கிட மேலும் பல நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்.மத்திய அமைச்சரவை தனித் தெலுங் கானா மாநிலம் அமைத்திட ஒப்புதலை அளித்தபின்னர், மத்திய அரசு புதிய மாநிலம் உருவாக்கப்படுவதற்கான தீர் மானங்களைத் தற்போதைய ஆந்திரப் பிரதேச மாநில சட்டமன்றப் பேரவை மற்றும் சட்டமன்ற மேலவை ஆகிய இரு அவைகளிலும் தனித்தனியே கொண்டுவந்து நிறைவேற்றிட நடவடிக் கைகள் எடுத்திட வேண்டும். இவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குடியரசுத் தலைவர் பெற்றபின்னர் அவற்றை மத்திய அமைச்சரவைக்கு மீண்டும் அனுப்பிவைப்பார். மத்திய அமைச்சரவையானது தற்போதைய ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து இரு கூறுகளாகப் பிரிப்பதற்கான நடைமுறை யைப் ஆழமாகப் பரிசீலிப்பதற்காக மீண்டும் அமைச்சரவைக் குழு ஒன்றை அமைத்திடும்.

அமைச்சரவைக்குழு அளித்திடும் திட்டங்களைக் குடியரசுத் தலைவர் பெற்றபின்னர் அவற்றை மீண் டும் அவர் ஆந்திர மாநில சட்டமன்ற பேர வைக்கு அனுப்பி வைத்து ஒருகுறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதன் கருத் தைக் கேட்டறிவார். பின்னர் மத்திய அமைச்சரவையால் ஒரு வரைவு சட்ட முன்வடிவு தயார் செய்யப்பட்டு நிறை வேற்றப் படுவதற்காக நாடாளுமன்ற மக்க ளவைக்கும், மாநிலங்களவைக்கும் தனித் தனியே அனுப்பி வைக்கப்படும். நாடாளுமன்றத்தில் இது நிறைவேற்றப் பட்டபின்பு, குடியரசுத் தலைவர் புதிய மாநிலம் எந்தத் தேதியிலிருந்து உதய மாகிறது என்பதை நிர்ணயிப்பார். ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்திய அரசின் அரசி தழ்களில் குடியரசுத் தலைவரின் தேதி நிர்ணயிக்கப்பட்ட ஆணை பிரசுரிக்கப் பட்ட பின்னர், அத் தேதியிலிருந்து புதிய தெலுங்கானா மாநிலம் உதயமாகிடும். தெலுங்கானா தனி மாநிலம் அமைக் கும் பிரச்சனை மீது காங்கிரஸ் அரசின் மழுப்பல் என்பது ஒன்றும் புதிதல்ல. நாற்பதாண்டுகளுக்கு முன்பு (1968இ லிருந்தே) மிகப் பெரிய அளவில் வன் முறை கிளர்ச்சிகள் வெடித்து, அப்போது நடைபெற்ற காவல்துறையினரின் துப்பாக் கிச் சூட்டில் 300க்கும் மேற்பட்டோர் தங்கள் உயிர்களையும் உடைமைகளை யும் இழந்தபின்னர், தெலுங்கானா பிராந் தியத்தின் வளர்ச்சியை உத்தரவாதப் படுத்துவதற்காகவும் அதன் பிற்பட்ட பொருளாதார நிலையை ஒழிப்பதற் காகவும் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்டது. 1973ல் மத்தியில் ஆட்சிசெய்த அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் அரசியலமைப்புச் சட்டத்தில் 32ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. அது 1974இல் அமலுக்கு வந்தது.

அரசி யலமைப்புச் சட்டத்தில் 371ஆவது பிரிவில் 371-னு, ‘‘ஆந்திரப் பிரதேச மாநிலம் தொடர்பாக சிறப்பு ஷரத்துக்கள்’’ என்னும் பிரிவு கூடுதலாகச் சேர்க்கப்பட் டது. அதன்படி குடியரசுத் தலைவர், ‘‘ஓர் ஆணையின்படி மாநிலத்தின் பல்வேறு பிரிவுகளிலும் உள்ள மக்கள், அரசு மற்றும் பொது வேலைவாய்ப்புகள், கல்வி மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நேர்மை யான முறையிலும் நியாயமான முறை யிலும் பெறக்கூடிய விதத்தில் வாய்ப்பு களையும் வசதிகளையும் அளித்திடு வார்.’’ கடந்த நாற்பதாண்டு கால வரலாற்றில், தெலுங்கானா மக்களுடைய பிற்பட்ட நிலைமைகளை ஒழித்துக்கட்டுவதற்காக ஆட்சியாளர்களால் கூறப்பட்ட அனைத்து உறுதிமொழிகளும் நம்பிக்கை களும் அநேகமாக எதுவுமே நிறைவேற் றப்படாமல் அம்மக்கள் வஞ்சிக்கப்பட் டனர் என்பதே கசப்பான உண்மை யாகும். கடந்த நாற்பதாண்டுகளிலும் தெலுங்கானா மக்களுக்கு அளித்த உறுதி மொழிகளையும் நம்பிக்கைகளையும் நிறைவேற்றாததற்கு பிரதானமாகப் பொறுப்பேற்க வேண்டியது காங்கிரஸ் கட்சிதான். ஏனெனில் நாற்பதாண்டுகளில் நீண்ட காலம் இம்மாநிலத்திலும் சரி, மத்தியிலும் சரி ஆட்சிப் பொறுப்பி லிருந்தது இக்கட்சிதான்.ஆயினும் தெலுங்கானா மாநிலம் அமைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய மற்றொரு முக்கியமான நட வடிக்கை என்பது தற்போது இருக்கிற அரசியலமைப்புச் சட்டத்தின் 371-னு பிரிவை நீக்குவதாகும். தெலுங்கானா மாநிலம் சட்டப்பூர்வமாக அமைவதற்கு முன்னர் இதற்காக நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து அது நிறைவேற்றப்பட வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்தபின்னர் மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாக மறுசீரமைக்கப்பட்ட சமயத்தில் தெலுங்கு பேசும் மக்கள்தான் முதல் முழக்கமிட்டார்கள் என்பது இங்கே நினைவுகூரப்பட வேண்டியது அவசிய மாகும்.

தியாகி பொட்டி ஸ்ரீராமுலு விசாலாந்திராவுக்கான இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதன் எதிரொலியை ஐக்கிய கேரளம் மற்றும் சம்யுக்த மகாராஷ்ட்ரம் ஆகிய இயக்கங்களிலும் காண முடிந்தது. இவற்றிற்காக நடை பெற்ற பிரம்மாண்டமான மக்கள் போராட்டங்களின் வலிமைதான், சுதந்திர இந்தியாவுடன் மன்னர் சமஸ்தானங்கள் இணைந்த பின்னர், நாட்டில் மறுசீர மைக்கப்பட்ட மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு இட்டுச்சென்றன. மொழி வாரி மாநிலங்கள் என்னும் ஜனநாயகக் கொள்கை அடிப்படையில் இந்திய மாநி லங்களின் ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்காக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து உறுதியுடன் நின்று போராடி வருகிறது. மத்தியிலும் பல்வேறு மாநிலங் களிலும் காங்கிரஸ் கட்சித் தலைமையில் உள்ள அரசாங்கங்கள் நிலைமைகளை முரட்டுத்தனமாய்க் கையாளுவதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் தனி மாநில கோரிக்கைகள் தற்போது எழுந்தவண்ணம் உள்ளன. தெலுங்கானா குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டியின் அறிவிப்பு வந்தவுடனேயே தனி கூர்க்கா லாந்து மாநிலம் வேண்டுமென்று கோரி மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப் பகுதிகளில் மூன்று நாள் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. போடோலாந்து தனி மாநிலத்திற்கும் இதுபோன்று அழைப்பு விடுக்கப் பட்டிருக்கிறது. பல்வேறு அடையாளங் களின் அடிப்படையில் புதிய மாநிலங்கள் உருவாவதற்கான இத்தகைய அழைப்புகள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத் தின் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் கட்ட மைப்புக்கு ஆபத்தான விளைவுகளை உருவாக்கிடும் என்பது மட்டுமல்ல மக்கள் மத்தியில் நாட்டில் பிரிவினை உணர்வுகளைக் கட்டவிழ்த்து விடுவதற் கும் இட்டுச் செல்லும்.

எனவே தெலுங்கானா மாநிலம் அமைவதற்காக நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கும் அதே சமயத்தில், மக்கள் மத்தியில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதும் மக்கள் ஆத்திர மூட்டலுக்கு இரையாவதற்கான தூண்டு தலிலிருந்து தடுக்கப்பட வேண்டியதும் அவசியம். அதே சமயத்தில் நாட்டில் அமைதியையும், இயல்பு வாழ்க்கை யையும் உத்தரவாதப்படுத்த வேண்டியது காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள மத்திய, மாநில அரசாங்கங் களின் கடமையுமாகும்.

(தமிழில்: ச.வீரமணி)

Tuesday, July 30, 2013

ஏழைகளை எண்ணுவதில் நேர்மையின்மையைக் கடைப்பிடிக்கும் திட்டக் கமிஷன்:உத்சா பட்நாயக்


(திட்டக் கமிஷனின் கயமைத்தனமான கணக்குமுறையின் காரணமாக நம் நாட்டின் வறுமை வீழ்ச்சியடைந்திருப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது.)
திட்டக் கமிஷன்  20011-12ஆம் ஆண்டில் நாட்டில் வறுமை குறைந்துவிட்டதாகக் கூறி, மறுபடியும் நம்மை சங்கடத்திற்குள்ளாக்கி இருக்கிறது. நகர்ப்புறங்களில் 13.7 விழுக்காட்டினரும், கிராமப்புறங்களில் 25.7 விழுக்காட்டினரும் மட்டுமே வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கிறார்கள் என்று எதார்த்தமற்ற அளவுகோளை அது வரையறுத்திருக்கிறது. அதாவது நகர்ப்புறங்களில்  மாதத்திற்கு ஆயிரம் ரூபாயும் (நாளொன்றுக்கு ரூ.33.33ம்), கிராமப்புறங்களில் மாதத்திற்கு 816 ரூபாயும் (நாளொன்றுக்கு ரூ.27.20ம்) சம்பாதிப்பவர்கள் வறுமையைத் தாண்டிவிட்டவர்களாம். இந்தத் தொகையைக் கொண்டு நகர்ப்புறத்தில் ஒருவர் முடிவெட்டிக்கொள்ளக்கூட முடியாது என்ற நிலை இருக்கையில், திட்டக்கமிஷனானது  அந்தத் தொகையில் ஒருவர் வாழ்க்கைக்குத் தேவையான உணவு மற்றும் உணவு அல்லாத அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்வார் என்று தெரிவித்திருக்கிறது. இவர்களது கணக்கின்படி, 2009-10க்குப்பிறகு கடந்த இரு ஆண்டுகளில்வறுமை என்பது மிகப்பெரிய அளவில், கிராமப்புறங்களில்  எட்டு விழுக்காடு புள்ளிகளும், நகர்ப்புறங்களில் ஏழு விழுக்காடு புள்ளிகளும் வீழ்ச்சியடைந்திருக்கிறதாம். இந்த இரு ஆண்டுகளிலும் நாட்டின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவியதைப்பற்றியோ, வேலைவாய்ப்பு வளர்ச்சி மிகவும் மோசமாக இருந்தது பற்றியோ, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விலைவாசிகள் விஷம்போல் ஏறியதைப் பற்றியோ திட்டக்கமிஷன் கொஞ்சமாவது  பொருட்படுத்தியதாகவே தெரிய வில்லை. இப்போது பின்பற்றும் கயமைத்தனமான கணக்கீட்டு முறையையே திட்டக்கமிஷன் தொடர்ந்து பயன்படுத்துமேயானால், அடுத்த நான்காண்டுகளில் நாட்டின் வறுமைப் பட்டியலில் எவருமே இருக்க மாட்டார்கள்.
உண்மை நிலை என்ன?
இவ்வாறு வறுமை மட்டம் குறைந்திருக்கிறது என்று ஆட்சியாளர்கள் சொல்வது முழுமையாக தவறான கணக்கீட்டின் அடிப்படையிலேயேயாகும்.  உணவு அல்லாத அத்தியாவசிய செலவினங்கள் (வாடகை, போக்குவரத்து, உடல்நலம், கல்வி முதலான) அனைத்தையும் ஒருவர் பூர்த்திசெய்தபிறகு, கிராமப்புறங்களில் உள்ள ஒருவர் நாள் ஒன்றுக்குத் தனக்குத் தேவையான 220 கலோரி உணவை உட்கொள்வதற்கு இயலாத நிலையில் 75.5 விழுக்காட்டினரும், நகர்ப்புறங்களில் நாள் ஒன்றுக்குத் 2100 கலோரி உணவை உட்கொள்வதற்கு, 73 விழுக்காட்டினரால் இயலவில்லை என்பதுமே எதார்த்தமாகும்.  2004-5ஆம் ஆண்டில் இது முறையே கிராமப்புறத்திற்கு 69.5 விழுக்காடாகவும், நகர்ப்புறத்திற்கு 64.5 விழுக்காடாகவும் இருந்தது. எனவே இந்தப் பத்தாண்டுகளில் வறுமை என்பது கணிசமாக வளர்ந்திருக்கிறது.  இப்போதுள்ள பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பில் மந்த நிலைமை ஆகியவற்றின் காரணமாக நிலைமைகள் நிச்சயம் மோசமாகத்தான் இருக்க முடியும்.
தனியார் மருத்துவமனைகளுக்கு ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்றார் என்றால்  அவருக்கு ஏற்படும் செலவுகள், கல்வி, மின்சாரம், பெட்ரோல், எரிவாயு போன்றவற்றிற்குப் பயன்படுத்தும் செலவுகள் ஆகியவற்றுடன் உணவுப் பணவீக்கத்தால் கடுமையாக உயர்ந்துள்ள உணவுப்பொருள்களின் விலை ஆகியவற்றால் பொது விநியோக முறை மூலம் தான்யங்கள் வாங்கமுடியாத நாட்டின் பெரும்பான்மை மக்கள் எவரும் கற்பனைசெய்ய முடியாத அளவிற்கு மிகவும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதும், அவர்கள் உட்கொள்ளும் சத்தான உணவு என்பது முன்பிருந்த நிலையைவிட மிகவும் மோசமான நிலைக்கு வீழ்ச்சியடைந்துவிட்டது என்பதுமே உண்மையாகும்.
இவ்வாறு எதார்த்த உண்மைகளைக் கணக்கில் கொள்ளாமல், மிகவும் குறைவான மற்றும் மக்களின் வறுமைக்கோடு வீழ்ச்சியடைந்துவிட்டதான மதிப்பீடுகளை திட்டக்கமிஷன்அளிக்க வேண்டியதற்கான அடிப்படைக் காரணம்தான் என்ன? நடைமுறையில் கமிஷனானது வறுமைக்கோடு தொடர்பாக தான்அளித்திட்ட தன் சொந்த வரையறையையே கைவிட்டுவிட்டது. 1973-74ஆம் ஆண்டில் மட்டும்தான் அது தன்னுடை சொந்த வரையறையை பிரயோகித்தது. அதன்பின்னர், கடந்த 40 ஆண்டுகளில் ஒருதடவை கூட மக்கள் உண்மையிலேயே செலவு செய்யும் அளவை வைத்து அது கணக்கிடவே இல்லை. ஆனால், தேசிய மாதிரி சர்வே ஐந்தாண்டுக்கு ஒருமுறை மேற்கொள்ளும் புள்ளிவிவரங்களைக் கொண்டு திட்டக் கமிஷன் இதனை மிகவும் எளிதாகச் செய்திட முடியும். ஆனாலும் அவ்வாறு செய்ய அது முன்வரவில்லை.
மாறாக, திட்டக் கமிஷன்  1973-74ஆம் ஆண்டில் விலைவாசி குறியீட்டெண்ணைக் குறிப்பதற்கு, மாதாந்திர வறுமைக்கோடு நகர்ப்புறங்களில்  ரூ.56 என்றும் கிராமப்புறங்களில் ரூ.49 என்றும்  மேற்கொண்ட கணக்கீட்டை  மட்டும் பிரயோகிக்கிறது. டெண்டுல்கர் குழு இந்த அம்சத்தை மாற்றவில்லை. அது குறிப்பிட்ட விலைவாசிக் குறியீட்டெண்ணை மட்டும் மாற்றியிருக்கிறது.
விலைவாசிக் குறியீட்டெண் குறிப்பிட்ட கால அளவில் ஒருவர் மேற்கொள்ளும் உண்மையான செலவுகளைப் பிரதிபலிப்பதில்லை.  1973-74இல் உயர் மட்ட அரசு அலுவலர் ஒருவர் ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஊதியம் பெற்றார் என்றால், அவரது சம்பளம் மட்டும் அட்டவணைப்படுத்தப்பட்டால் இன்று அவர் தன் மாதாந்திர ஊதியமாக 18 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் பெறுவார். ஆனால் வாழ்க்கைச் செலவினங்களை அட்டவணைப்படுத்தும்போது  அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அரசால் அமைக்கப்பட்ட ஊதியக் குழுக்கள் அங்கீகரித்திருப்பதன் காரணமாக அன்றையதினம் 1000 ரூபாய் ஊதியம் பெற்ற உயர் அரசு அலுவலர் இன்றையதினம் திட்டக்கமிஷன் கணக்கீட்டின்படி 18,000 ரூபாய் மாதாந்திர ஊதியமாகப் பெறவில்லை. மாறாக நான்கு பங்குக்கும் அதிகமாக 70,000 ரூபாய்க்கும் மேலாக ஊதியம் பெற்றுக்கொண்டிருக்கிறார். ஆயினும், வறுமை மதிப்பீட்டைச் செய்வதற்கு மட்டும் அதேபழைய முறையைக் கடைப்பிடிப்பதைத் திட்டக் கமிஷன் தொடர்கிறது. உண்மையில் இது வறுமைக்கோடு (poverty line)என்று சொல்வதைவிட. வறியநிலைக்கான கோட்டைவிட (destitute line) கீழானதாகும்.
மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கும் இல்லாமை நிலைமை
அதிகாரபூர்வமான வறுமைக்கோட்டு வரையறைகள் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேலும் மேலும் கீழே தள்ளிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இவ்வாறு இவர்கள் வறுமைக்கோட்டின் தரத்தைத் தொடர்ந்து கீழிறக்கிக்கொண்டே செல்வதன் காரணமாக, மக்கள் உண்மையில் இல்லாமையை நோக்கி சென்றுகொண்டிருந்த போதிலும்கூட, அவர்கள் ஏதோ முன்னேறிக் கொண்டிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை எப்போதும் இவர்களது அறிக்கைகள் காட்டிக் கொண்டிருக்கின்றன.  ஒரு பள்ளிக்கூடத்தில் ஆண்டுத் தேர்வில் சென்ற ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விழுக்காட்டை, இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விழுக்காட்டோடு ஒப்பிடவேண்டுமானால் தேர்ச்சி மதிப்பெண் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பது பள்ளி மாணவனுக்கு நன்கு தெரியும். ஒரு பள்ளி முதல்வர் தன் இஷ்டம்போல் மக்களுக்குத் தெரிவிக்காமல் தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்திட முடியாது. அதாவது சென்ற ஆண்டு ஒரு மாணவன் தேர்ச்சி பெற 100க்கு 50 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றிருந்ததை இந்த ஆண்டு 100க்கு 40 மதிப்பெண் எடுத்தால் போதும் என்று தன்னிச்சையாக அவர் குறைத்திட முடியாது. அவ்வாறு அவர் குறைத்துவிட்டு, சென்ற ஆண்டு தேர்ச்சி அடைந்த மாணவர்களைவிட இந்த ஆண்டு அதிகமானவர்கள் தேர்ச்சி அடைந்துவிட்டார்கள் என்று அவர் பீற்றிக்கொள்ளவும் முடியாது. பள்ளியின் தரத்தை மதிப்பிட வேண்டுமானால் இரு ஆண்டும் தேர்ச்சி மதிப்பெண் ஒரே அளவினதாக இருந்தால்தான் சாத்தியம். மாறாக இவ்வாறு தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைத்ததன் மூலம் பள்ளியின் தரம் குறைந்ததாகவே கருத முடியும். பள்ளிக்கூடும் அடுத்த ஆண்டு தேர்ச்சி மதிப்பெண் அளவை மேலும் குறைக்கிறது எனில், அதற்கு அடுத்த ஆண்டு மேலும் மேலும் குறைக்கிறது எனில், அப்பள்ளியில் தேர்ச்சி பெறாத மாணவர்களே இருக்கமாட்டார்கள். 100 விழுக்காடு அளவிற்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக பள்ளி முதல்வர் பீற்றிக்கொண்டிருப்பார்.
கிட்டத்தட்ட இதே அணுகுமுறையைத்தான் அதிகாரபூர்வ வறுமைக்கோட்டு வரையறை குறித்து, திட்டக் கமிஷன் செய்திருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக வறுமைக் கோடுக்கு இருந்த தர நிர்ணயத்தை, திட்டக் கமிஷன் படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வந்திருக்கிறது. இதே பாணியைத் திட்டக்கமிஷன் தொடர்ந்து மேற்கொண்டால், அடுத்த சில ஆண்டுகளில் திட்டக்கமிஷனின் கணக்கீட்டின்படி இந்தியாவில் வறுமையே இருக்காது.
திட்டக்கமிஷன், நகர்ப்புற தில்லி மாநிலத்திற்கு மாதாந்திர வறுமைக்கோட்டுக்கான வரையறையை 2009-10க்கான ஆண்டிற்கு ரூ.1040 என்று வரையறுத்திருந்தது. இன்றையதினம் விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியில் இதர செலவுகள் அனைத்தையும் ஒரு நுகர்வோர் செய்தபின்ஒரு நாளைக்கு 1400 கலோரி உணவை உட்கொள்ளத்தான் அவரால் செலவு செய்ய முடியும்.  ஒருவர் 2100 கலோரி உணவு உட்கொள்ள வேண்டுமானால், மிகச் சரியான வறுமைக்கோடு வரையறை என்பது ரூ. 5,000 ஆகும். நாட்டில் நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கும் உணவுப் பணவீக்கத்தின் காரணமாக உணவுப் பொருள்களின் அதீத விலைகளும், தனியார் மருத்துவமனைகளில் ஏற்படும் கடுமையான செலவினங்களும், மற்றும் போக்குவரத்துக் கட்டணம், மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் போன்றவற்றிக்கு ஆகும் செலவினங்களும் எல்லாம் சேர்ந்து மக்களைத் தங்கள் உணவுக்காகச் செய்திடும் செலவை மிகப்பெரிய அளவில் வெட்டிச் சுருக்கி இருக்கிறது என்று சொன்னால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. ஆய்வாளர்கள் மேற்கொண்டிருக்கிற கணக்கீட்டின்படி தில்லியில் ஒருவர் உட்கொள்ளும் உணவு நாளொன்றுக்கு 1756 கலோரி அளவேயாகும். நிலையான வருமானம் உடையோர் தங்கள் தேவைகளை எப்படியோ சமாளித்துக்கொள்கிறார்கள் என்றபோதிலும், நாட்கூலி பெறும் அடிமட்டத்தில் உள்ளவர்கள் தங்கள் ஜீவனத்தை நடத்திட எந்த அளவிற்கு இன்னலுக்கு ஆளாகிறார்கள் என்பது பணக்கார வர்க்கத்தினருக்குத் தெரியாது. நகர்ப்புற மக்கள் தொகையில் 55 விழுக்காட்டினர் நாளொன்றுக்கு 1800 கலோரி உணவுகூட உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். ஐந்தாண்டிற்கு முன்பு இந்த அளவிற்கு மோசமான நிலை கிடையாது.
திட்டக் கமிஷனில் வேலைபார்க்கும் பொருளாதார வாதிகள் அதிக அளவில் பயிற்சி பெற்றவர்கள்தான். எதார்த்த நிலையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், சரியற்ற கணக்கீட்டு முறையை இவர்கள் தொடர்வது ஏன் என்று கேட்கப்படுகிறது. நாம் கணக்கிடுவதைப்போன்றே வறுமைக்கோட்டுக்காக நிர்ணயித்திருக்கிற 1040 ரூபாயில் ஒருவரால் 1400 கலோரி உணவைத்தான் உட்கொள்ள முடியும் என்று நிச்சயமாக அவர்களுக்கும் தெரியும்.  ஆயினும் இந்தியா உட்பட வளர்முக நாடுகள் இத்தகைய கணக்கீட்டு முறையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று உலக வங்கியின் பொருளாதாரவாதிகள் அளித்திடும் நிர்ப்பந்தம் இதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
ஆசியாவில் வறுமை வீழ்ச்சியடைந்திருப்பதாக உலக வங்கி அளித்திடும் அறிக்கைகளும் போலித்தனமான ஒன்றேயாகும். எதார்த்தத்தில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதும், அதீத உணவுப் பணவீக்கமும் வறுமை நிலையையும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதனை ஒப்புக்கொள்வது என்பதன் பொருள் தற்போது உலக அளவில் வறுமை குறித்து உலக வங்கியின் பொருளாதாரவாதிகள் அளித்துவரும் தவறான கணக்கீடுகள் அனைத்தும் ஓர் அழுகிய கரையான் தின்ற வீடுபோல நொறுங்கி வீழ்ந்துவிடும். மேலும் இவர்களால் இவ்வாறு அளிக்கப்படும் போலித்தனமான வறுமை வீழ்ச்சி அறிக்கைகள் மூலமாகத்தான் இவர்களால் உலகமயம் மற்றும் நவீன தாராளமயக் கொள்கைகள் காரணமாக மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள் என்கிற வாதத்தை மிகவும் சவுகரியமாக முன்வைத்திட முடியும். ஆயினும்,
உண்மை ஒருநாள் வெளியாகும் - அதில்
உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும்.
பொறுமை ஒருநாள் புலியாகும் - அதற்குப்
பொய்யும் புரட்டும் பலியாகும்.
(கட்டுரையாளர், தில்லி, ஜவஹர்லால் நேருப் பல்கலைக்கழக, ஓய்வுபெற்ற பேராசிரியர்.)
(தமிழில்: ச.வீரமணி)