Sunday, October 12, 2008

இந்திய முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி








இந்திய முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி



சங்பரிவாரக் கூட்டத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது



புதுடில்லி, அக். 12-



இந்திய முஸ்லீம்கள் அனைவருமே பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கும் முயற்சியில் சங்பரிவாரக் கும்பல் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று புதுடில்லியில் நடைபெற்ற சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அறிஞர் பெருமக்கள் கருத்துக்கள் தெரிவித்தனர். நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லீம் மக்களுக்கு எதிராக, அவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் என்று கருதப்படும் விதத்தில் சங்பரிவாரக் கும்பல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன.



இதுதொடர்பாக ஒரு கலந்துரையாடலுக்கு சஹமத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. தலைநகர் புதுடில்லியில் சனிக்கிழமையன்று மாலை கான்ஸ்டிட்யூசன் கிளப், துணை சபாநாயகர் கூடத்தில் நடைபற்ற இக்கலந்துரையாடல் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், மனித உரிமைகளுக்கான முன்னணி ஊழியர்கள், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், ஊடகங்களைச் சேர்ந்தோர் எனப் பல்வேறு தரப்பினரும் பங்கேற்றார்கள்.



இவர்களில் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகமது சலீம், மது, ராம் புனியானி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவார்கள். கலந்துரையாடலுக்கு வந்திருந்தோரை, ஜகீருடீன் அலிகான் மற்றும் ஷப்னம் ஹாஷ்மி வரவேற்றார்கள். கலந்துரையாடலுக்கான பின்னணி குறித்து ஜஃபார் ஆகா விளக்கினார். பின்னர், ஹைதராபாத் மசூதியில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவமானது எப்படி முஸ்லீம் மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதை வீடியோ ஒளிபரப்பின் மூலமாக மனித உரிமைகளுக்கான முன்னணி ஊழியரும் வழக்கறிஞருமான ஷபிக் மகாஜீர் விளக்கியபோது, அரங்கில் அமர்ந்திருந்த அனைவருமே உறைந்த நிலைக்கு மாறினார்கள் என்று சொன்னால் மிகையல்ல.



மும்பையைச் சேர்ந்த ராம் புனியானி பேசுகையில் விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தளம், ஆர்எஸ்எஸ் ஆகியவை எப்படி வன்முறை வெறியாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன என்பதை அடுக்கடுக்காக முன்வைத்தார். மேலும் இவர்களின் வன்முறை வெறியாட்டங்களுக்குக் காவல்துறையினரும் ஒத்துழைப்புடன் இருந்து வருவதையும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.



சமீபத்தில் டில்லி அருகே நடைபற்ற ஜமியாநகரில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் அதில் மாரடைப்பு வந்து இறந்து போன காவல் ஆய்வாளரை பயங்கரவாதியின் தாக்குதலால் இறந்துபோனார் என்று சித்தரித்தும், ஒட்டுமொத்த முஸ்லீம் மக்களுக்கு எதிராக உணர்ச்சிகளைக் கிளப்பிவிடும் முயற்சிகளையும் விவாதத்தில் கலந்துகொண்டோர் சுட்டிக்காட்டினார்கள். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பஜ்ரங் தளம், விசுவ இந்து பரிசத் அப்பாவி கிறித்துவர்களை, முஸ்லீம்களைக் கொன்று குவித்து வந்தபோதிலும் அவர்களைக் கைது செய்து தண்டிக்க பாஜக ஆட்சியாளர்கள் முன்வராதது மட்டுமல்ல, மத்திய ஐமுகூ ஆட்சியாளர்களும் அவர்களுக்கு உதவக்கூடிய வகையில் அவற்றைக் கண்டு கொள்ளாதிருப்பதற்கும் விவாதத்தில் பங்கேற்றோர் தங்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினர்.



விவாதத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர், விவாதத்தில் கலந்துகொண்டவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் தன்னை மிகவும் பாதித்ததாகவும், நாம் ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற அமைப்புமுறையைப் பின்பற்றுகிறோம் என்றும், இதனைச் சீர்குலைக்க எவர் முனைந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். நாம் நம் நாட்டின் மதச்சார்பின்மை மாண்பினை உயர்த்திப்பிடித்தாக வேண்டும் என்றும் கூறினார்.

Thursday, October 9, 2008

உட்கட்சிப் போராட்டத்தில் இயக்கவியல் அணுகுமுறை-மாசேதுங்

ஒற்றுமை சம்பந்தமாக, அதன்அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து, ஒருசில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன்.

ஒரு தோழர் - அவர் நாசவேலை செய்பவராகவோ அல்லது இயக்கத்திற்கு எதிராகப் போனவராகவோ இல்லாதபட்சத்தில் - அவரைக் கட்சியின் நடவடிக்கைகளுடன் ஒன்றுபடுத்துவது தொடர்பாக ஒரு நேசமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவரைப் பொறுத்தவரை, நம் அணுகுமுறை என்பது ஓர் இயக்க வியல் அணுகுமுறையாக இருக்க வேண்டுமேயொழிய, இயக்கமறுப்பியல் அணுகுமுறையாக இருக்கக் கூடாது.

இயக்கவியல் அணுகுமுறை என்று சொல்வதன் மூலம் நாம் என்ன பொருள் கொள்கிறோம்?

இதன் பொருள், ஒவ்வொன்றை குறித்தும் ஆய்வுக் கண்ணோட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். அதாவது மனிதர்கள் அனைவருமே தவறு செய்பவர்கள்தான், ஒருவர் தவறு செய்திருக்கிறார் என்பதற்காக அவரை முழுமையாக மறுதலித்திடக் கூடாது. தவறு செய்யாத மனிதனே உலகில் இல்லை என்று லெனின் ஒருசமயம் கூறினார். ஒவ்வொருவருக்கும் ஆதரவு தேவைப்படுகிறது. வேலியிட வேண்டுமென்றால் அதற்கு மூன்று பக்கங்களிலும் மரமுளைகளைக்கொண்டு இறுக்குவதுபோல், ஒரு திறமைசாலிக்கும் மூன்று பேர்களின் உதவி தேவைப்படுகிறது. தாமரைப் பூ அழகானதுதான், ஆனால் அது இலைகளுடன் இருக்கும்போது மேலும் அழகுபெறுகிறது என்பது சீனப் பழமொழி. எல்லாம் அறிந்தவர் என்றோ அல்லது சகலகலா வல்லவர் என்றோ ஒருவர் தன்னை நினைத்துக்கொண்டால், அவர் மிதப்பில் இருக்கிறார் என்றே கொள்ள வேண்டும்.

தவறு செய்யும் தோழரிடம் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது? நாம் அவர் மேற்கொண்ட தவறுகளை ஆய்வுக்கண்ணோட்டத்துடன், இயக்கமறுப்பியல் அணுகுமுறையைப் பின்பற்றாது, இயக்கவியல் அணுகுமுறையுடன் ஆய்ந்திட வேண்டும். ஒருகாலத்தில் நம் கட்சியும் இயக்கமறுப்பியல் சகதியில், வறட்டுத் தத்துவாதச் சேற்றில் மூழ்கி வெளிவரமுடியாமல் தத்தளித்தது. பின்னர்தான், நாம் வறட்டுத்தத்துவாதச் சேற்றிலிருந்து மீண்டு, இயக்கவியல் குறித்து சற்றே கற்றுக் கொண்டோம். எதிர்மறைகளின் ஒற்றுமை என்பதே இயக்கவியலின் அடிப்படை சித்தாந்தமாகும். இந்த சித்தாந்தத்தின்படி, தவறு இழைக்கும் ஒரு தோழரிடம், நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

முதலாவதாக, அவரது தவறான கருத்துக்களை அவர் விட்டொழித்திட போராட்டத்தை நடத்திட வேண்டும். இரண்டாவதாக, அவருக்கு நாம் உதவிடவும் வேண்டும். முதலில் அவருடன் போராடு, அடுத்து அவருக்கு உதவிடு. நல்ல எண்ணத்துடன், அவர் தன் தவறுகளைக் களைந்திட உதவுவதன் மூலமே, தவறான நிலைபாட்டிலிருந்து அவரை வெளிக்கொண்டுவர முடியும். ஆயினும், வேறுவகையான பேர்வழிகள் குறித்த அணுகுமுறை என்பது வேறு. அதாவது, டிராட்ஸ்கி போன்றவர்களைப் பொறுத்தவரை, ஓர் இணக்கமான அணுகுமுறையைப் பின்பற்றுவது சாத்தியமே இல்லை, ஏனெனில் அத்தகையவர்கள் சீர்திருத்த முடியாத அளவிற்கு சீர்கேடடைந்துவிட்டவர்கள். அதேபோன்றுதான் ஹிட்லர், சியாங்கே ஷேக், ஜார் போன்ற இழிபிறவிகளும் தூக்கி எறியப்பட வேண்டியவர்களாவார்கள். ஏனெனில், நாமும் அவர்களும் ஒருவர்க்கொருவர் பொருத்தமற்றவர்களாவோம். நமக்கும் அவர்களுக்கும் எவ்விதத்திலும் ஒற்றுமை ஏற்பட வழி கிடையாது.

அதேபோன்று, இறுதியாக ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைகள், சோசலிச அமைப்பு முறையால் மாற்றியமைக்கப்பட வேண்டியதும் உண்மை. இது, தத்துவார்த்த நிலைபாட்டிற்கும் பொருந்தும். கருத்துமுதல்வாதம், பொருள் முதல் வாதத்தால், ஆத்திகம், நாத்திகத்தால் மாற்றியமைக்கப்பட வேண்டும். இங்கே நாம் நம்முடைய இறுதி இலட்சியம் (strategy) குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதனை அடைவதற்கான உத்திகளுக்கான கட்டங்கள் (tactics) வித்தியாசமானவை. எங்கு சமரசம் தேவையோ அங்கே சமரசம் செய்துகொள்ளப்பட வேண்டும். உத்திகளுக்கான கட்டங்கள் ஒவ்வொன்றின்போதும், போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் அதே சமயத்தில் சமரசங்களைச் செய்து கொள்வதற்கான அவசியம் ஏற்பட்டால் அதனையும் செய்து கொள்ள வேண்டும்.

இப்போது தோழர்கள் தொடர்பான பிரச்சனைக்கு மீண்டும் திரும்புவோம். தோழர்களுக்கிடையே புரிந்துணர்வில் பிழை ஏற்பட்டிருப் பின், ஒருவரை ஒருவர் தவறாகப் புரிந்துகொண்டிருந்தால், அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்ந்து விட்டாலே, அவர்கள் பரிசுத்தமானவர்கள் என்றும், அவர்களுக்குள் கருத்து வேறுபாட்டிற்கோ, தப்பபிப்பிராயங்களுக்கோ இடம் இல்லை என்றும் சிலர் நினைப்பதுபோல் தோன்றுகிறது. மேலும் அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள அனைவருமே கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை, வேறுபாடுகளின்றி எங்கும் ஒரே சீராகக் கெட்டியாயுள்ளவர்கள் என்றும் எனவே இவர்களுக்கிடையே பேச்சுவார்த்தைக்கு அவசியம் இல்லை என்றும் கருதுவதுபோல் தோன்றுகிறது. கட்சிக்குள் ஒருவர் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டாரானால் அவர் நூறு சதவீதம் மார்க்சிஸ்ட்டுகளாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுவதுபோன்று தோன்றுகிறது. ஆனால், நடைமுறையில் நூறு சதவீத கம்யூனிஸ்ட்டுகள் இருக்கிறார்கள் என்றபோதிலும், 90, 80, 70, 60 அல்லது 50 சதவீத மார்க்சிஸ்ட்டுகளும் இருக்கிறார்கள், ஏன் சில இடங்களில் 10 அல்லது 20 சதவீத மார்க்சிஸ்ட்டுகள் கூட இருக்கிறார்கள். ஒரு சிறிய அறையில் நம்மில் இரண்டு அல்லது மூன்று பேர் கூட உட்கார்ந்து ஒரு விஷயத்தைக் குறித்துப் பேசி முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதில்லையா? பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு காணமுடியாமல் போனதில்லையா? மார்க்சிசம்-லெனினிசக் கொள்கைக்கு ஊறு ஏற்படாத வகையில், பேச்சுவார்த்தைகள் நடைபெறும்போது, மற்றவர்கள் கூறும் கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்கும்பட்சத்தில், அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் கொண்டிருந்த கருத்துக்கள் கைவிடப்பட வேண்டியதாக இருந்தால், கைவிட்டுவிட வேண்டும்.

தவறு செய்த ஒரு தோழரைக் கையாளும்போது, நம் இரு கைகளையும் பயன்படுத்த வேண்டும். ஒரு கை அவருடன் போராடும் அதே சமயத்தில், மற்றொரு கையால் அவரை அன்பாதரவோடு அரவணைத்துக் கொள்ள வேண்டும். போராட்டத்தின் குறிக்கோள், மார்க்சிசத் தத்துவத்தை உயர்த்திப்பிடிப்பதுதான் - அதாவது அந்தத் தோழரை தத்துவார்த்தத்தின் அடிப்படையில் கெட்டிப் படுத்துவதுதான். அது ஒரு கை. மற்றொரு கை, அவரை அன்பாதரவோடு அரவணைத்துக் கொள்ளுதல். ஒற்றுமையின் குறிக்கோள் அவரைத் தன்னுடைய தவறான நிலைபாட்டிலிருந்து வெளிக்கொணர்தலேயாகும். அவரோடு சமரசம் செய்துகொள்ளுதல் அதாவது சற்றே நெகிழ்வுத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். தத்துவத்தை நெகிழ்வுத்தன்மையுடன் இணைத்தல் என்பதே மார்க்சிச - லெனினிசத் தத்துவமாகும். எதிர்மறைகளின் ஒற்றுமை என்பது இதுவேயாகும். எந்த ஒரு உலகமாக இருந்தாலும், அதிலும் குறிப்பாக ஒரு வர்க்க சமுதாயத்தில், முரண்பாடுகள் பல்கிப் பெருகியிருக்கும்.

சிலர், சோசலிச சமூகத்தில் கூட முரண்பாடுகள் ‘‘காணப்படுகிறதே’’ என்று கூறுகிறார்கள். இவர்கள் விஷயத்தைத் தவறான வகையில் முன்வைக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன். முரண்பாடுகள் காணப்படுகின்றன என்பது பிரச்சனை அல்ல. முரண்பாடுகள் காணப்படாத இடங்கள் என்று எதுவுமே கிடையாது. அதேபோன்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட முடியாத நபர் என்றும் எவரும் கிடையாது. அப்படி ஒருவரை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்று ஒருவர் நினைத்தால், அவர் இயக்கமறுப்பியல்வாதியாவார். அணு என்பது எதிர்மறைகளின் ஒற்றுமை - இரு எதிர்மறைகளின் - நியுக்ளியஸ் மற்றும் எலக்ட்ரான்களின் - ஒற்றுமை என்பது உங்களுக்குத் தெரியும். நியுக்ளியஸிலும்கூட, மீண்டும் இரு எதிர்மறைகளின் ஒற்றுமை காணப்படுகிறது. அதாவது புரோட்டான்களுக்கும் நியுட்ரான்களுக்கும் இடையிலான ஒற்றுமை. அதேபோன்று நியுட்ரானிலும் நியுட்ரான்கள் - ஆன்ட்டிநியுட்ரான்களின் ஒற்றுமை காணப்படுகிறது. சுருக்கமாகச் சொல்வதானால், எதிர்மறைகளின் ஒற்றுமை என்பது எங்கும் காணப்படுகிறது. எதிர்மறைகளின் ஒற்றுமை என்கிற சித்தாந்தம் - இயக்கவியல் - விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். அதாவது இயக்கவியலை குறுகிய சிறு தத்துவவாதிகளின் வட்டத்திலிருந்து வெளிக்கொணர்ந்து விரிந்த அளவில் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறுகிறேன். இந்தப் பிரச்சனை அரசியல் தலைமைக்குழு, மத்தியக்குழு மற்றும் கட்சியின் அனைத்து மட்டங்களில் நடைபெறும் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட வேண்டும். குறிப்பாக, கட்சியின் கிளைச் செயலாளர்கள் இயக்கவியலை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்துகொண்டு, தாங்கள் கிளைக் கூட்டங்களுக்குத் தயாரித்திடும் வேலை அறிக்கைகளின்போது, அவற்றில் வழக்கமாக இரு இனங்களையும் - முதலாவதாக தன் கிளை புரிந்திட்ட சாதனைகளையும், இரண்டாவதாக, செய்திட்ட பலவீனங்களையும் எழுதிட வேண்டும். இதுவே உலகம் முழுதும் உள்ள நிகழ்ச்சிப்போக்காகும். இதுவே இயக்கவியலாகும்.

***
(1957 நவம்பர் 18 அன்று, மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சியின் பிரதிநிதிகள் கூட்டத்தில், தோழர் மாசேதுங் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள். )

தமிழில்: ச.வீரமணி

இயக்கவியலும் இயக்கமறுப்பியலும்

(Dialectics and metaphysics)

தர்க்கவியல் என்றும் இயக்கவியல் என்றும் தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்னும் டைலக்டிக்ஸ் (DIALECTICS) என்னும் ஆங்கிலச் சொல், கிரேக்க மொழியில் உள்ள டையலெகோ (DIALEGO) என்பதிலிருந்து வந்ததாகும். எதிரிகளின் வாதத்தில் காணப்படும் முரண்பாடுகளை வெளிப்படுத்தி, அந்த முரண்பாடுகளை அகற்றுவதன் வாயிலாக உண்மையைக் கண்டறியும் கலைக்கு பண்டைக் காலத்தில் ‘டைலக்டிக்ஸ்’ என்று கூறுவதுண்டு. சிந்தனையில் உள்ள முரண்பாடுகளை வெளிப்படுத்துவதும் ஒன்றுக்கு ஒன்று எதிரான கருத்துக்களை மோதவிடுவதும்தான் உண்மையைக் கண்டறிவதற்கான மிகச் சிறந்த முறை என்று பழங்காலத் தத்துவவாதிகள் நம்பினர். சிந்தனைகளின் உண்மையைக் கண்டறிவதற்குக் கையாளப்பட்ட இந்த முறை, பிற்காலத்தில் இயற்கைத் தோற்றங்களின் உண்மையைக் கண்டறிவதற்கும் கையாளப்பட்டது.

இயற்கைத் தோற்றங்கள் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன என்றும், அவை ஒவ்வொரு கணமும் தொடர்ச்சியான மாற்றத்துக்கு உள்ளாகின்றன என்றும் இந்த இயக்கவியல் அணுகுமுறை கருதுகிறது. மேலும், இயற்கையினுள்ளே இயங்கும் முரண்பாடுகள் வளர்ச்சியடைவதன் விளைவாகவும், இயற்கையினுள்ளே இயங்கும் எதிர்எதிரான சக்திகள் மோதிக்கொண்டு இயங்குவதன் விளைவாகவும் இயற்கை வளர்ச்சி அடைகிறது என்றும் இயக்கவியல் அணுகுமுறை கருதுகிறது.

இயக்க மறுப்பியல் அல்லது மாயாநிலைத் தத்துவம் என்று தமிழில் மொழிபெயர்க்கப்படும் METAPHYSICS இதற்கு நேர்மாறான தத்துவம் ஆகும். பொருள் இயலுக்கு (materialism) அப்பாற்பட்டது என்று பொருள்தரும் கிரேக்க சொல்லிலிருந்து உண்டான சொற்றொடர் மெடாபிசிக்ஸ் என்பதாகும். அதாவது பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுவதுதான் மெடாபிசிக்ஸ்.இந்தப் பெயர் கிடைத்தது வரலாற்றில் நிகழ்ந்த ஒரு தற்செயலான நிகழ்ச்சியால்தான். தர்க்க சாஸ்திரத்தைப் பற்றிய விரிவுரை என்ற நூலை எழுதிய அரிஸ்டாடில் நிறைய எழுதியிருக்கிறர். அரிஸ்டாடில் இறந்தபிறகு, அவரது சீடர்கள் அவரது நூல்களை வகை வகையாகப் பிரித்துத் தொகுத்துப் பட்டியலிட்டார்கள். பொருள் இயல் (பிசிக்ஸ்) என்ற தலைப்பின் கீழ் அரிஸ்டாடில் எழுதிய ஒரு நூல் இருந்தது. அதோடு மனம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றிய வேறொரு நூலொன்றும் இருந்தது. அதற்குத் தலைப்பு ஒன்றும் கிடையாது. சீடர்கள் பார்த்தார்கள். பொருளியலுக்கு என்று நூல் இருக்கிறது. ஆகவே இந்த நூலுக்குப் பொருளியலுக்கு அப்பாற்பட்டது என்று தலைப்புக் கொடுப்போமே என்று கருதி ‘‘மெடாபிசிக்ஸ்’’ என்று பெயர் கொடுத்து வகைபிரித்து விட்டார்கள்.

***

தொழிற்சங்கங்கள் தந்த சிங்கார வேலர்

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் ம. சிங்காரவேலர் ஆவார். பகுத்தறிவு இயக்கத்தில் ஈ.வெ.ரா.வுடன் தோளோடு தோள் கொடுத்து நின்றவர். பொதுவுடைமை இயக்கம் இந்தியாவில் வேரூன்றக் காரணமாக இருந்த மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர். தொழிற்சங்க இயக்கத்தை முதன்முதலாக இந்திய அளவில் உருவாக்கிய முன்னோடி. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் காமராசருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். உழைப்பாளர் தினமான மே தினத்தை இந்தியாவிலேயே - ஏன் ஆசியாவிலேயே - முதன்முறையாகக் கொண்டாடி, வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். உடன் உழைக்கும் இயக்கத்தவர்களை தோழர் என்று முதன்முதலாக அழைத்தவர். இப்படிப் பல விஷயங்களில் தேசிய அளவில் முன்னோடியாக விளங்கியவர் தோழர் ம. சிங்காரவேலர்.தமிழகத்தையே உலுக்கிய நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தை பத்து மாதங்களுக்கும் மேலாக முன்னின்று நடத்தியவர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு கான்பூரில் நடைபெற்றபோது அதனைத் துவக்கி வைத்தார். கயா காங்கிரஸ் மாநாட்டில் சிங்காரவேலர் பங்குகொண்டது வரலாற்றுப் புகழ்மிக்க நிகழ்ச்சியாக மதிக்கப்படுகிறது. அவர் உரைநிகழ்த்தும்போது கூட்டத்தினரை ‘‘காம்ரேட்ஸ்’’ என்று அவர் அழைத்தது அனைவரையும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் அவர் காங்கிரஸ்காரர்களால் ‘காம்ரேட்’ என்றே அழைக்கப்பட்டார். மரியாதையும் முக்கியத்துவமும் நிறைந்த தலைவர்கள் என்னும் மேன்மை பறிபோய்விடுமோ என்றும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நடவடிக்கை எடுத்துவிடுமோ என்று இளம் தலைமுறையினரே பயந்து நடுங்கிக்கொண்டிருந்த வேளையில் அறுபது வயதைத் தாண்டிய முதியவர் தன்னை மிகவும் துணிச்சலுடன் ‘‘நான் ஒரு கம்யூனிஸ்ட்’ என்று அழைத்துக் கொண்ட துணிச்சலை அங்கு வியந்து பாராட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று 1923இல் வேன்கார்டு இதழில் எம்.என்.ராய் பதிவு செய்திருக்கிறார்.தமிழன் இன்னொரு தமிழனுடன் தமிழில்தான் பேசவேண்டும். தமிழ்நாட்டு அரசியல் தமிழில்தான் நடைபெறவேண்டும். தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் என்று போராடியவர்களில் முதன்மையானவர். மிகுந்த போராட்டங்களுக்குப்பிறகு சென்னை மாநகராட்சிக் கூட்டங்கள் தமிழில் நடக்க வழிவகுத்தவர்.1917இல் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்த சிங்காரவேலர், இயக்கப் பாடல்களைப் பாடியும் பிறரைப் பாட வைத்தும் மக்களை அணிதிரளச் செய்தார். 1918இல் ரௌலட் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் பொதுக் கூட்டங்களும் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த ஏற்பாடுகளில் முக்கியப் பங்கு வகித்தவர் சிங்காரவேலர். ‘போராட்டங்களை நடத்துவது சிங்காரவேலருக்கு நிலாச்சோறு சாப்பிடுவதுபோல’ என்று அண்ணா ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.1919ஆம் ஆண்டில் ஜாலியன்வாலாபாக் வெறியாட்டத்தைக் கண்டித்து, அவர் தமிழகத்தில் நடத்திய கடையடைப்புப் போராட்டம் முழு வெற்றியடைந்தது. சின்னச் சின்ன இட்லிக்கடைக்காரர்களும், இறைச்சிக் கடைக்காரர்களும்கூடத் தங்கள் கடைகளை அன்று திறக்கவில்லை. எதிர்ப்பைக் காட்டும் விதத்தில் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலின் அடையாளமான கருப்புக்கோட்டினை தெருவில் எரித்தார். அதன்பின் அவர் வழக்கறிஞர் தொழிலையே கைவிட்டுவிட்டார்.உத்தரப்பிரதேசம் கோரக்பூர் மாவட்டத்தில் சௌரிசௌரா என்னும் ஊரில் விவசாயத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியின்மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பேரணியில் வந்தோர் காவல்துறையினரைத் திருப்பித்தாக்கி, காவல்நிலையத்திற்குத் தீ வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு சென்னையில் நடைபெற்றது. வழக்கின் முடிவில் பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இச்சம்பவத்தைக் காரணமாக வைத்து காந்தி ஒத்துழையாமை இயக்கத்தையே நிறுத்திவிட்டார். அதனைக் கண்டித்து சிங்காரவேலர் மிக நீண்ட கட்டுரையொன்றை இந்து நாளிதழுக்கு எழுதினார். ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி தொடங்கியபோது சிங்காரவேலர் காந்திக்கு எழுதிய கடிதத்தில் ‘‘நான் இன்று எனது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டேன். நாட்டின் மக்களுக்காக உங்களின் போராட்டத்தில் பங்கேற்கிறேன்’’ என்று எழுதியிருந்தார். ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி முடித்தபோது அதனைக் கண்டித்தும் காந்திக்கு சிங்காரவேலர் கடிதம் எழுதினார்.தமிழகத்தில் முதன்முறையாக தொழிற்சங்கத்தை நிறுவிய பெருமை சிங்காரவேலரையே சாரும். திருவிக, சக்கரைச் செட்டியார் ஆகியோர் தோளோடு தோள் நின்று இவருக்குத் துணை புரிந்தனர். சென்னை தொழிலாளர் சங்கம், நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர் யூனியன், கோவை நகரத் தொழிலாளர் சங்கம், மின்சாரத் தொழிலாளர் சங்கம், மண்ணெண்ணெய் தொழிலாளர் சங்கம், அச்சுத் தொழிலாளர் சங்கம், அலுமினியத் தொழிலாளர் சங்கம் போன்று பல்வேறு தொழிற்சங்கங்களை தொடங்கினார்.ஒவ்வோராண்டும் ஏப்ரல் 6 - 13 தேதிகளில் தேசிய வாரம் என்ற ஒரு வாரத்தைக் கொண்டாடி வந்தார். இறுதி நாளான ஏப்ரல் 13 அன்று சென்னைக் கடற்கரையில் மாபெரும் கூட்டம் நடைபெறும். 1925ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் 13வது வட்டம் யானைக்கவுனி பகுதியிலிருந்து அதிக வாக்குகள் வித்தியாசம் பெற்று நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆங்கிலத்தில் அதிகப் புலமை பெற்றிருந்தும் நகரசபைக் கூட்டங்களில் தமிழிலேயே பேசினார். அலுவலகங்களில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்தார். அதேசமயத்தில்h தனிப்பட்ட முறையில் ஜெர்மன், பிரெஞ்சு, இந்தி முதலிய மொழிகளைக் கற்றுக்கொண்டார்.சென்னையில் நடைபெற்ற ஒரு தொழிலாளர் போராட்டத்தில் ஏழு பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோனார்கள். அவர்களின் சவ ஊர்வலத்தில் சிங்காரவேலரும் கலந்துகொண்டார். சவஊர்வலத்தில் சென்ற சிங்காரவேலரை குறிபார்த்து காவல்துறையினர் துப்பாக்கியை உயர்த்தினார்கள். அவர்களுக்குத் தன்மார்பை நிமிர்த்துக்காட்டித் தன்னைச் சுடுமாறு சிங்காரவேலர் சொன்னார். இச்சவஊர்வலம் குறித்து குடியரசு இதழில் அவர் எழுதிய கட்டுரை மிகவும் பிரசித்தி பெற்றது.1943ஆம் ஆண்டு ஜூன் 20 அன்று சென்னையில் தீண்டாமை ஒழிப்பு நாள் கொண்டாடப்பட்டது. அதில் தள்ளாதவயதிலும் சிங்காரவேலர் தந்தை பெரியாருடன் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார். 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அச்சுத் தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு தலைமை தாங்கி உரையாற்றினார். அதுவே அவர் கலந்து கொண்ட இறுதி பொது நிகழ்ச்சியாகும்.அந்தக்கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘இப்போது எனக்கு வயது 84. எனினும் தொழிலாளர் வர்க்கத்துக்கு என் கடமையைச் செய்ய முன்வந்துள்ளேன். உங்களில் ஒருவனாக இருப்பதைக் காட்டிலும் மற்றெதை நான் விரும்பமுடியும். உங்கள் மத்தியில் இறந்தாலும் அதைவிட எனக்குக் கிடைக்கக்கூடிய பாக்கியம் வேறு என்னவாக இருக்க முடியும்’’ என்று உருக்கமாகப் பேசினார்.அவரும் அவருடைய முன்னோர்களும் ஈட்டிய சொத்துக்களின் மதிப்பு அந்நாளிலேயே சுமார் 200 கோடியாகும். அந்த திரண்ட சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்த அந்த மாமேதை இறுதிவரை ஏழைத் தொழிலாளர்களுடனேயே வாழ்ந்தார். தன் சொத்துக்களைத் தன் காலத்திலேயே அறக்கட்டளை அமைத்து பல அறப்பணிகளை நடத்தி வந்தார். மிகத் திரண்ட சொத்துக்களை உள்ளடக்கியதும் சிங்காரவேலரின் முன்னோர்களால் நிறுவப்பட்டதுமான எம்கேஏ சாரிடீஸ் தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அறக்கட்டளை வழியாக சிங்காரவேலரின் மருமகள் பத்மா சத்தியகுமாருக்கு தமிழக அரசு மாதா மாதம் தவறாமல் உதவித் தொகை அனுப்பி வருகிறது. ஆனால் உதவித் தொகையின் அளவு வெறும் ரூ.50 என அறிகிறோம். அத்தொகை உயர்த்தப்பட்டதா என்பது தெரியவில்லை...