Tuesday, March 4, 2008

அனைவருக்கும் பொது விநியோகமுறையை அமல்படுத்தக்கோரிஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சிறப்பு மாநாடு

புதுடில்லி, மார்ச் 4-
‘வறுமைக் கோட்டுக்குக் கீழ்’, ‘வறுமைக்கோட்டுக்கு மேல்’ என்று மோசடியான பாகுபாடுகளைச் சொல்லி நாட்டு மக்களில் பெரும்பாலோருக்கு பொது விநியோக முறையை இல்லாது ஒழித்திடும் அரசின் செயலைக் கண்டித்தும், அனைவருக்கும் எவ்விதப் பாகுபாடுமின்றி பொது விநோயக முறையில் உணவுப் பொருள்களை வழங்கக் கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது.
தலைநகர் புதுடில்லியில் உள்ள மாவலங்கார் அரங்கத்திற்கு அருகில் செவ்வாயன்று காலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஏழைகளை ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி நிராகரித்திடும் மோசடியான வறுமைக்கோட்டுக்குக் கீழ் குறியீட்டை எதிர்த்து தேசிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் சுபாஷினி அலி தலைமை வகித்தார். சிறப்பு மாநாட்டை புதுடில்லி, ஜவஹர்லால் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் உத்சா பட்நாயக் துவக்கி வைத்து உரையாற்றினார். பின்னர் மாநாடுத் தீர்மானத்தை முன்மொழிந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘மத்திய அரசாங்கம் மிகவும் மோசடியான முறையில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களை அடையாளப்படுத்தி, பெரும்பான்மையான ஏழை மக்களுக்கு பொது விநியோக முறையிலான குடும்ப அட்டைகள் தராமல் நீக்கியுள்ளது. இதனால் நாட்டில் பெரும்பகுதி ஏழை வறிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு தான்யங்கள், பொது சுகாதாரம், கல்வி, ஓய்வூதியம், வீட்டு வசதித் திட்டங்கள் மற்றும் ஏராளமான அரசுத் திட்டங்களின் பயன்கள் கிடைத்திட வில்லை. சமீபத்தில் வெளியான தேசிய மாதிரி சர்வே அறிக்கையானது, கிராமப்புறங்களில் உள்ள தலித் குடும்பங்களில் 61 சதவீதம், பழங்குடியினர் குடும்பங்களில் 55 சதவீதம், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களில் 52 சதவீதத்தினர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான குடும்ப அட்டைகளைப் பெறவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழ், வறுமைக்கோட்டுக்கு மேல் என்று குறியீடு நிர்ணயித்திருப்பது ஒரு மோசடி என்று இச்சிறப்பு மாநாடு கருதுகிறது.
உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் தூண்டுதலால் அரசு மக்களுக்கு அளிக்கும் மான்யங்களை குறைப்பதற்காக இவ்வாறு மோசடியான முறையில் மத்திய அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. திட்டக் கமிஷன் மதிப்பீட்டின்படி நாட்டில் 22 சதவீத மக்களே வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கிறார்கள். அரசின் புள்ளி விவரங்கள் அனைத்தும் தவறானவைகளாகும். வறுமை குறைந்து விட்டது என்கிற அரசின் கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். திட்டக்கமிஷன் மதிப்பீடுகள் மோசடியானவை என்று நாங்கள் கூறுகிறோம். 1979ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கலோரி அடிப்படையிலான வறுமைக்கோட்டின் மீது அவ்வாறு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன்படி, தற்போதைய வறுமைக்கோடு என்பது ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு 327 ரூபாய் கிராமப்புறத்திலும், 454 ரூபாய் நகர்ப்புறத்திலும் வருமானத்திற்குக் கீழ் உள்ளவர்கள் மட்டுமே. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஒவ்வொரு நபருக்கும் குறைந்தபட்சம் ஆண்களுக்கு 3800 கலோரி அளவும், பெண்களுக்கு 2925 கலோரி அளவும் உணவு தேவை என்று கூறியிருக்கிறது. ஆனால் இதனையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அரசு வறுமைக்கோட்டை நிர்ணயித்திருக்கிறது. மேலும் இது காலாவதியாகிப்போன ஒன்று.
அத்தியாவசியப் பொருள்கள் பலவற்றின் விலை விஷம்போல் உயர்ந்திருக்கிறது. ஆனால் 1999-2000இல் இருந்த விலைவாசியை வைத்து வறுமைக்கோடு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் விநியோகம் செய்ய வேண்டிய குடும்ப அட்டைகள் குறித்து திட்டக்கமிஷன் தான்தோன்றித்தனமாக எண்ணிக்கையை நிச்சயித்திருக்கிறது. இதன் விளைவாக உண்மையில் வறுமைக்கோட்டுக் கீழ் உள்ள பெரும்பாலோருக்கு குடும்ப அட்டைகள் கிடைக்கவில்லை. பல மாநிலங்களில் குடும்ப அட்டைகள் மிகவும் குறைவாகவே விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. திட்டக்கமிஷன் கணக்கீட்டை விட அதிகமான அளவிலேயே மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள் என்று அரசின் பல்வேறு ஆய்வுகள் மெய்ப்பித்திருக்கின்றன.
சமீபத்திய அர்ஜூன் சென் குப்தா குழு அறிக்கையானது, முறைசாராத் தொழிலாளர்களில் 77 சதவீதத்தினரும், தலித் மற்றும் பழங்குடியினரில் 88 சதவீதத்தினரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 80 சதவீதத்தினரும், முஸ்லீம்களில் 84 சதவீதத்தினரும் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவாகவே வருமானம் உள்ளவர்கள் என்று கூறியிருக்கிறது. சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார சர்வேயின்படி, மூன்று வயதுக்குக் குறைவான குழந்தைகளில் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை, போதிய எடையின்றி இருப்பதாகக் கூறியிருக்கிறது. அவர்கள் போதுமான அளவு உண்ணாததே இதற்கெல்லாம் காரணமாகும். நம் நாட்டில் பெரும் பகுதி மக்கள் ஏழைகளாகவும், போதிய போஷாக்கின்றியும் உழன்றுகொண்டிருக்கும் நிலையில், அவர்களை மேலும் மோசமான முறையில் பாதிக்கக்கூடிய வகையில், ‘‘வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள்’’ என்றும், ‘‘வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்கள்’’ என்றும் பிரிப்பது கொடுமையிலும் கொடுமையாகும். ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதற்கு வகை செய்யும் இழி செயலாகும். மேற்படி அதே சர்வேயின்படி 59 சதவீத மக்களுக்கு நிரந்தர வீடு கிடையாது, 58 சதவீதத்தினருக்கு குடிதண்ணீர் வசதி கிடையாது, 55 சதவீதத்தினருக்கு கழிப்பிட வசதி கிடையாது, 32 சதவீதத்தினருக்கு மின்வசதி கிடையாது. உண்மை நிலை இவ்வாறிருக்கையில் அரசு வறுமைக்கோடு சம்பந்தமாக அளித்திடும் புள்ளி விவரங்கள் அனைத்தும் யதார்த்த உண்மைகளுக்கு சம்பந்தமில்லாதவை என்பது தெளிவாகும்.
எனவே, ஏழைகளை இவ்வாறு பிரித்து அவர்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுவதை ஒருபோதும் அனுமதியோம். இதனை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கிறோம். ‘‘வறுமைக்கோட்டுக்குக் கீழ்’’ குறித்த திட்டக் கமிஷனின் மோசடியான கருத்தாக்கத்தை கடுமையாக எதிர்க்கிறோம்.திட்டக்கமிஷன் நாட்டு மக்களின் வறுமை நிலை குறித்து உண்மையான முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், நாட்டு மக்கள் அனைவருக்கும் எவ்வித பேதமுமின்றி பொது விநியோக முறையில் குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என்றும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் என்கிற நிலைபாட்டினை வைத்து சுகாதாரம், கல்வி, ஓய்வூதியம், மற்றும் அரசுத் திட்டங்கள் பலவற்றிலிருந்து அப்புறப்படுத்தப்படுவதை நீக்கிட வேண்டும் என்றும் கோருகிறோம்.இவ்வாறு சுதா சுந்தரராமன் பேசினார். பின்னர் தீர்மானத்தின் மீது பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த பிரதிநிதிகளும் உரையாற்றினார். மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் நிறைவுரையாற்றினார்.மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து சட்ட உதவி மைய மாவட்ட செயலாளர் ஆர். ராஜலட்சுமி தலைமையில் புவனேஸ்வரி, ஆதிலட்சுமி, பேபி, ஞானம், விஜயகுமாரி, சுமதி, பானுமதி முதலானோர் வந்திருந்தார்கள்.
(தொகுப்பு: ச.வீரமணி.)

Monday, March 3, 2008

ஹைடு சட்டம் இந்தியாவைக் கட்டுப்படுத்தாது என்பதை ஏற்பதற்கில்லை--சீத்தாராம் யெச்சூரி

புதுடில்லி, மார்ச் 3-

இந்திய அமெரிக்க ராணுவம் சாரா அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக அமெரிக்க இயற்றியுள்ள ஹைடு சட்டம் இந்தியாவுக்குப் பொருந்தாது என்கிற இந்திய அயல்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கூற்றை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்களன்று மதியம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. அடுத்து, இன்று மக்களவையில் அயல்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தன்னிச்சையாக ஓர் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். அதில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரு பத்திகள் இருக்கின்றன. அதில் அரசின் தரப்பில் கூறப்பட்டுள்ள விளக்கங்களிலும் அரசின் நிலைபாட்டிலும் புதிதாக ஒன்றுமில்லை. அரசாங்கம் அதன் நிலைபாட்டினைத் தெரிவித்திருக்கிறது. இடதுசாரிக் கட்சிகளும் தங்களுடைய சொந்த நிலைபாட்டினை இங்கே திரும்பவும் வலியுறுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றன. எங்களைப் பொறுத்தவரை, சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் நடைபெறும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே ஓர் எழுத்துபூர்வமான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. அதன்படி, அரசாங்கம் சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடரலாம். பேச்சுவார்த்தைகளின் முடிவை ஐமுகூ அரசாங்கம் - இடதுசாரிக் கட்சிகளின் குழுவில் சமர்ப்பித்து, அக்குழு எடுத்திடும் முடிவின் அடிப்படையிலேயே மேல்நடவடிக்கையை அரசு தொடர வேண்டும். எனவே, அவ்வாறு ஐமுகூ அரசு - இடதுசாரிக் கட்சிகளின் குழுவின் முடிவு எதுவும் எடுக்காது, அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு தொடரும் என்று நாங்கள் கருதவில்லை. இடதுசாரிக் கட்சிகள் தங்கள் நிலைபாட்டில் உறுதியாக இருக்கின்றன.

அதேபோன்று அமைச்சர் ஹைடு சட்டம் குறித்து விளக்கியுள்ள பத்தியைப் பொறுத்தவரை, ‘ஹைடு சட்டத்தின் தாக்கங்கள் இந்தியாவைக் கட்டுப்படுத்தாது என்கிற அரசின் புரிதலோடு நாங்கள் ஒத்துக்போகவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். பிரணாப்முகர்ஜி அந்த அறிக்கையில், ‘‘ஹைடு சட்டம் அமெரிக்க அரசாங்கத்தின் நிர்வாகத்திற்கும் நாடாளுமன்ற அமைப்புகளுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஷரத்து’’ என்று கூறியிருக்கிறார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அமெரிக்க நாடாளுமன்றமானது அமெரிக்க ஜனாதிபதிக்கு இந்தியாவுடன் ராணுவம் சாரா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு, ஒரு சில நிபந்தனைகளுடன், அதிகாரம் அளித்திருக்கிறது. எனவேதான் அந்த நிபந்தனைகள் இந்தியாவைக் கட்டுப்படுத்தும் என்று நாங்கள் கூறுகிறோம். அந்த நிபந்தனைகள் நம் நாட்டின் அயல்துறைக் கொள்கையில் தலையிடுகின்றன, நம் நாட்டின் இறையாண்மையில் தலையிடுகின்றன, இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்திலும் தலையிடுகின்றன. அந்த நிபந்தனைகள் குறித்து கடந்த காலங்களில் நாம் விரிவாக விவாதித்திருக்கிறோம். எனவேதான் அந்த நிபந்தனைகள் இந்தியாவுக்கு ஏற்புடையதல்ல என்றும், ஹைடு சட்டம் இந்தியாவைக் கடுமையாகப் பாதிக்கும் ஒரு சட்டம் என்று நாம் கூறுகிறோம். இத்தகைய நிபந்தனைகளை உள்ளடக்கிய ஹைடு சட்டத்துடன் போடப்படும் எந்த ஒப்பந்தமாக இருந்தாலும், அது நம் நாட்டின் இறையாண்மை மீது ஏவப்படும் நேரடித் தாக்குதலாகும்.

நம்மைப் பொறுத்தவரை, இந்தியாவின் அயல்துறைக் கொள்கைக்கு ஹைடு சட்டம் ஆபத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவின் இறையாண்மைக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தி இருக்கிறது, மேலும் இந்தியாவை அமெரிக்காவுடனான ஒரு ராணுவக் கூட்டாளியாக மாற்றுவதற்கும் முயற்சிக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் அமெரிக்காவின் நலன்களுக்கு ஏற்ற வகையில் மாற்ற முயற்சிக்கிறது.

இந்திய அமெரிக்க ராணுவம் சாரா அணுசக்தி ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை அரசாங்கம் இடதுசாரிக் கட்சிகளுடன் ஏற்படும் கருத்தொற்றுமை அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார். இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை இப்பிரச்சனையில் அரசாங்கத்துடன் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்திட விரும்புகிறோம்.

தற்சமயம் அமெரிக்காவில் ஜனாதிபதிக்கான தேர்தல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த சமயத்தில் ஏன் அவசரப்படுகிறீர்கள் என்றுதான் நாம் நம் அரசாங்கத்தைக் கேட்கிறோம். எனவே, இந்திய அரசு இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைத் நடைமுறைப்படுத்தும் பணியைத் தொடரக்கூடாது என்கிற எங்கள் நிலைபாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

(தொகுப்பு: ச.வீரமணி)

அணுசக்தி ஒப்பந்தத்தை இந்தியா தொடரக்கூடாது-சிபிஎம்

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை இந்தியா தொடரக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

‘‘நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அயல்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ‘‘அயல்துறைக் கொள்கை தொடர்பான நிகழ்ச்சிப் போக்குகள்’’ குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாகவும் சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் மேற்படி அறிக்கையில், ஹைடு சட்டத்தின் பிரயோகம் குறித்தும், ராணுவம் சாரா அணுசக்தி ஒத்துழைப்பு குறித்தும் அமெரிக்க அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள சில அறிக்கைகளைக் கவனத்திற்குக் கொண்டு வந்து, ‘ஹைடு சட்டம் அமெரிக்காவுக்கு மட்டுமே பயன்படத்தக்கது’ என்றும், இந்தியாவின் உரிமைகள் இருதரப்பு 123 ஒப்பந்தத்தில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் அவ்வாறு அமெரிக்க அதிகாரி என்று குறிப்பிடுவது, அமெரிக்க அரசின் அயல்துறை அமைச்சர் கண்டலீசா ரைஸ் அவர்களைத்தானே தவிர வேறு யாரையுமல்ல. அவர்தான் பிப்ரவரி 14 அன்று அயல்துறை விவகாரங்கள் குழுவின் பிரதிநிதிகள் அவையில் ‘‘ஹைடு சட்டத்திற்கு முரணாக அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியாவிற்கு ஆதரவாக நாங்கள் இருந்திட மாட்டோம்’’ என்றும், ‘‘ஹைடு சட்டத்துடன் முழுமையாக ஒத்துப்போய்த்தான் ஆக வேண்டும்’’ என்றும் மிரட்டியிருந்தார். இதுதான் ஹைடு சட்டம் குறித்து, அமெரிக்க அரசாங்கத்தின் தெளிவான நிலைபாடு. ஹைடு சட்டத்திற்கும் இந்தியாவுக்கும் சம்பந்தம் இல்லை என்று திரும்பத் திரும்ப சொல்வது இந்திய அரசுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. இதனை நம்புவார் யாருமில்லை. ஹைடு சட்டமோ அல்லது ஹைடு சட்டத்தின் ஷரத்துக்களின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள 123 ஒப்பந்தமோ 2006 ஆகஸ்ட்டில் நாடாளுமன்றத்தில் பிரதமர் அளித்திட்ட உறுதிமொழிகளுக்கு உட்பட்டவைகளாக இல்லை. நாட்டில் விரிவான அளவில் அரசியல் கட்சிகளுடனான கருத்தொற்றுமையைக் ‘‘கோர’’ அரசாங்கம் முயலும் என்று அரசு, நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது விந்தையிலும் விந்தையாகும். நாடாளுமன்றத்தின் 2007 குளிர்காலக் கூட்டத் தொடரில் 123 ஒப்பந்தம் விவாதிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் கூறிய கருத்துக்களை அரசாங்கம் முதலில் மதித்து நடந்திட வேண்டும். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அரசின் நிலைபாட்டிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு கிடையாது என்பதை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும். இது தொடர்பாக அரசியல் கருத்தொற்றுமை ஏற்படவே இல்லை. எனவே, இந்த ஒப்பந்தத்தை அரசு மேலும் தொடரக் கூடாது.’’

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.