Showing posts with label Thiruchi Siva. Show all posts
Showing posts with label Thiruchi Siva. Show all posts

Saturday, August 11, 2018

நாட்டில் விதவைகள் நலத்திற்காக சட்டம் கொண்டுவர வேண்டும் மாநிலங்களவையில் திருச்சி சிவா தனி உறுப்பினர் தீர்மானம் தாக்கல்


புதுதில்லி, ஆக. 11-
நாட்டில் விதவைகள் நலத்திற்காகப் பொருத்தமான சட்டம் கொண்டுவர வலியுறுத்தி, மாநிலங்களவையில் திருச்சி சிவா (திமுக) தனி உறுப்பினர் தீர்மானம் கொண்டுவந்தார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. வெள்ளிக்கிழமையன்று மாநிலங்களவை உறுப்பினர்களின் தனி உறுப்பினர் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் நாளாகும். இதில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா,  நாட்டில் விதவைகள் படும் துன்பங்களை அடுக்கி, அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பொருத்தமான சட்டத் நிறைவேற்றிட அரசாங்கம் முன்வர வேண்டும் என ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அதன்மீது உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
“2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் விதவைகளின் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 61 ஆயிரத்து 278 ஆகும். அதாவது நாட்டின் மொத்த பெண்களின் தொகையில் 7.37 சதவீதமாகும். இது உலகிலேயே அதிகம் உள்ள விதவைகளின் எண்ணிக்கையாகும்.
விதவைகள் நம் நாட்டில் பல்வேறுவிதமான பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். விதவைகள் மறுமணம் என்பது அபூர்வமாகும். அவர்கள் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, சட்டரீதியாக மற்றும் உடல்நல ரீதியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள். பெரும்பாலான விதவைகள் முறையான பயிற்சியோ, கல்வியோ இன்றி இருப்பதால், அவர்களுக்குத் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேலை தேடிக்கொள்வதிலும் சிரமங்கள் இருக்கின்றன. அதிலும் நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதமாக இருக்கக்கூடிய முறைசாராத் துறையில் உள்ள விதவைகளின் நிலைமை மிகவும் மோசமாகும்.
சமூகத்தில் ஊறிப்போயிருக்கிற பத்தாம்பசலித்தனமான பழக்கவழக்கங்களின் காரணமாக, கணவன் இறந்துவிட்டால், அது மனைவியின் வாழ்க்கையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சமூகரீதியாக அவரும் கொல்லப்பட்டுவிடுகிறார்.
பழைய கூட்டுக் குடும்ப கட்டமைப்பு இன்றையதினம் புதிய தனிக்குடித்தனக் கட்டமைப்பாக மாறியுள்ள நிலையில், கணவன் இறந்துவிட்டால் மனைவியை எவர் வைத்துக்கொள்வது என்பதில் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. விதவைகளைப் பேணிப் பாதுகாத்திட எக்குடும்பத்தினரும் முன்வருவதில்லை. பெண்கள் மக்கள் தொகையில் 72 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் 60 வயதை அடைந்தவர்கள். அவர்கள் எவரையாவது சார்ந்தே வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். 70-74 வயதுக்கிடையிலான விதவைகளில் 60 சதவீதத்தினர் போதிய சுகாதாரப் பாதுகாப்பு வசதி இல்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
1956ஆம் ஆண்டு இந்து வாரிசு சட்டத்தின்கீழ் விதவைகளுக்கு சொத்துரிமைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தாங்கள் இவ்வாறு உரிமைகள் பெற்றிருக்கிறோம் என்று பெரும்பாலான விதவைகளுக்குத் தெரியாது.  அவர்களுக்கு சொத்துரிமைகளை வழங்குவதில் பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டு அவற்றால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
2016ஆம் ஆண்டில் மகளிர்க்கான தேசிய ஆணையம் நாட்டில் உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள விதவைகளின் நிலைமைகள் குறித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டது. இவர்களில் 84 சதவீதத்தினர் ஸ்வாதார் கிரே (Swadhar Greh) என்னும் சேவை இல்லங்களில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு குடும்பச் சொத்தில் எவ்விதமான பங்கும் அளிக்கப்படவில்லை என்றும்  அந்த ஆய்வறிக்கை கூறியிருக்கிறது.
நாட்டில் புண்ணிய ஸ்தலங்கள் என்று கூறப்படும் விருந்தாவன், மதுரா, வாரணாசி போன்ற இடங்களில் உற்றார் உறவினர்களால் கைவிடப்பட்ட ஆதரவற்ற விதவைகள் மிகப்பெருமளவில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.  இவர்கள் தங்கள்  ஜீவனத்திற்காக அரசாங்கத்தையே  முழுதும் சார்ந்திருக்கிறார்கள். 
தற்சமயம் அரசாங்கத்தின் சார்பில் இத்தகைய விதவைகளைப் பராமரித்திட எவ்விதத் திட்டத்தையும் அமல்படுத்திட வில்லை. இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம் என்ற ஒன்று மட்டும் இருக்கிறது.  
சென்ற ஆண்டு அவசரப்பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் விருந்தாவன் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள விதவைகள் பரிதாபகரமான நிலைமைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தேன். எனினும் அதன்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் தமிழ்நாட்டில் வாழலாம், அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாழலாம். எனினும் நாம் அனைவருமே சகோதர சகோதரிகளாவோம்.  எல்லாம் இந்தியக் குடிமக்கள்தான். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைகள் விருந்தாவனில் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கென்று இருப்பிடங்களோ, உணவு அளிக்கும் திட்டங்களோ எதுவும் கிடையாது. எனவே, அவர்கள் தெருக்களில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நிலைமைகள் மிகவும் மோசமாகும். எனவேதான் இந்தத் தனி உறுப்பினர் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறேன்.  
இது ஒன்றும் ஓர் அரசியல் கட்சிக்கான பிரச்சனை அல்ல. இது ஒரு மனிதாபிமானப் பிரச்சனையாகும். விதவைகளில் பல்வேறு வயதினரும் இருக்கிறார்கள். 20 வயதிலிருந்து 70 வயது வரையிலும் இருக்கிறார்கள். இத்தகைய சமூகக் கொடுமை நம் நாட்டில்தான் இருக்கிறது. வேறெந்த நாட்டிலும் கிடையாது.
நான் ஒரு விதவன்தான். (I am a widower) ஆனால் அதனைக் காட்டும் விதத்தில் எனக்கு எவ்வித அடையாளமும் கிடையாது. ஆனால் ஒரு பெண் விதவையாகிவிட்டால் எத்தனை அடையாளங்கள்? அவர்கள் மற்ற பெண்கள் போல் சமூகத்தில் இயங்கிட முடியாது. இத்தகைய சமூகப் பாகுபாடு அவர்களை மிக மோசமான நிலைமைக்குத் தள்ளிவிடுகிறது. இதன்காரணமாக அவர்கள் தங்கள் வாழ்க்கையின் இறுதிக்காலத்தை மிகவும் மோசமான முறையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. குடும்பத்தினர் அவர்களைக்  கைவிட்டுவிடுகிறார்கள். நான் கேள்விப்பட்டதென்னவெனில், உத்தரப்பிரதேசத்திலோ, மேற்கு வங்கத்திலோ ஒரு பெண் விதவையாகிவிட்டார் என்றால், அவரை அவர்களது குடும்பத்தினர் இத்தகைய இடங்களுக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்கள் என்பதாகும். அதன்பின் அவர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படியாவது சொந்தமாகக் கழித்துக்கொள்ள வேண்டும்.
சில அரசு சாரா நிறுவனங்கள் அவர்களுக்கு ஏதோ கொஞ்சம் உதவி செய்கின்றன. அவர்களுக்கு நாளொன்றுக்கு எட்டு ரூபாய் கொடுக்கிறார்கள். இன்றைய நிலையில் ஒரு நபர் எட்டு ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்திட முடியும்?
இதுபோன்ற நிலைமை விருந்தாவனில் மட்டுமல்ல, நாடுமுழுதும் இதுதான் நிலைமை.  அவர்களின் நலனைப் பாதுகாத்திட அரசின் தரப்பில் எவ்விதமான சட்டமும் இல்லை..  எங்கள் தலைவர் டாக்டர் கலைஞர் எங்களை விட்டுப் பிரிந்துள்ள சூழ்நிலையில் இந்தத்தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறேன். அவர்களுக்காக நாம் ஏதேனும் செய்தாக வேண்டும். அவ்வாறு செய்தோமானால் அதுவே அவருக்கு அளித்திடும் உண்மையான சமர்ப்பணம் ஆகும். ஏனெனில் விதவைகள் பிரச்சனையை அவர் எப்போதும் தன் உள்ளத்தில்  கொண்டிருந்தார்.
எங்களுக்கெல்லாம் மூளையாக இருந்து, எங்களை உருவாக்கிய தந்தை பெரியார்  விதவைகள் குறித்துக் கூறியிருந்த அனைத்தையும், எங்கள் தலைவர் டாக்டர் கலைஞர் ஆட்சியிலிருந்தபோது அமல்படுத்தினார்.  
நாங்கள் தந்தை பெரியாரின் வாரிசுகள் என்று கூறிக்கொள்வதில் பெருமைகொள்கிறோம். நாங்கள் சமூக சீர்திருத்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை பெரியார் குறித்து நீங்கள் இதுவரை அறிந்திருக்கிற விஷயங்கள் மற்றும் இதர உறுப்பினர்கள் அறிந்திருக்கிற விஷயங்கள் எப்படியோ, தந்தை பெரியார் குறித்து நான் ஒருசிலவற்றைச் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன்.  தந்தை பெரியார் அடிக்கடி கூறுவார்: “எனக்கு என்று ஒரு நாடு கிடையாது, எனக்கு என்று ஒரு மதம் கிடையாது, எனக்கு என்று ஓர் இனம் கிடையாது,” என்பார்.  “அப்படியென்றால்?” என்று மக்கள் அவரைத் திருப்பிக் கேட்கும்போது, அவர்,  “எனக்கென்று சொந்தமாக எதுவும் கிடையாது. ஒரு நாடு வலுவாக இருந்த,  வலுவற்ற மற்றொரு  நாட்டை அடிமைப்படுத்த முயன்றால் நான் வலுவற்ற நாட்டிற்காகப் போராடுவேன்,“ என்றும், “ஓர் உயர்சாதிக்காரன், ஒரு கீழ்சாதிக்காரனை நசுக்கினான் என்றால் நான் கீழ்சாதிக்காரரின் பக்கம் நிற்பேன், அவருக்காகப் போராடுவேன்“ என்றும், “ஒரு கீழ்சாதிக்காரன் ஒரு தொழிற்சாலையை நடத்தி, அங்குள்ள தொழிலாளர்களுக்கான உரிமைகளைப் பறிக்கிறான் என்றால், நான் தொழிலாளர்களின் பக்கம் நிற்பேன், அவர்களுக்காகப் போராடுவேன் “ என்று விளக்கம்  அளித்தார். மேலும் அவர், பல்வேறு உரிமைகளைப் பெற்ற ஒரு தொழிலாளி, வீட்டில் தன் மனைவியை துன்புறுத்துகிறான் என்றால், நான் அந்த மனைவியின் பக்கம் நிற்பேன், அந்தக் கணவனுக்கு எதிராகப் போராடுவேன்“ என்றும் விளக்கினார்.
கடைசியில் அவர் பெண்களின் பக்கம் வந்துவிட்டார். அவர் மேலும் கூறினார்: “ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு கைகள் உண்டு. வலது கை மற்றும் இடது கை. இதில் எதுவும் உயர்வும் இல்லை, எதுவும் தாழ்வும் இல்லை. இரண்டு கண்களுக்கு இடையே பாகுபாடு பார்க்க முடியாது. மனிதகுலமும் அப்படித்தான். ஆண் – பெண் இருவரும் சமம்தான். அவர்கள் இருவருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அவர்களைப் பாகுபடுத்திடக்கூடாது. எக்காரணத்திற்காகவும் ஓரங்கட்டக்கூடாது,” என்றார். கடைசியாக அவர்  விதவைகளுக்காகவும் பாடுபட்டார்.
தனிப்பட்டமுறையில் என்னைப்பற்றி நான் சொல்லிக்கொள்வதில் எனக்குத் தயக்கம் ஏதும் இல்லை. நான் மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோதே என் தந்தையை இழந்துவிட்டேன். அப்போது என் அம்மாவிற்கு 29 வயதுதான்.  அவர்கள் எப்படி சமூகத்தில் சுதந்திரமாக இயங்க முடியவில்லை என்பதை நான் பார்த்திருக்கிறேன்.  தன் குழந்தைகளை அவர் வளர்க்க வேண்டியிருந்தது. அவர்கள் சுதந்திரமாக திருமண விழாக்களில் கலந்துகொள்ள முடியாது. விதவைகள் புண்ணியஸ்தலங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வீட்டிற்கு வெளியில் வரக்கூடிய மனிதஜன்மங்களாக அவர்களைக் கருதிட மாட்டார்கள்.     ஒரு பெண் விதவையாகிவிட்டால் அவரை மொட்டையடிக்கும் வழக்கம் இப்போதும் சில பகுதிகளில் உண்டு. சில பகுதிகளில் அவர்கள் தங்கள் ஜாக்கெட்டுகளை கழட்டிட வேண்டும். இந்த உலகத்தில் பெண் இனத்திற்கு இப்படிப்பட்ட கொடுமைகளை ஏன் அளித்திட வேண்டும்?
இக்கொடுமைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறேன்.
விதவைகள் உலகம் முழுதும் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் போல வேறெங்கும் கிடையாது.
நம் நாடு சாதி அடுக்கு முறையைக் கொண்டதாகும். ஒவ்வொருவனும் தன்னை மற்றொருவனை விட உயர்ந்த சாதி என்று பீற்றிக்கொள்வான். பெண்களும் அப்படித்தான் தாழ்த்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். எவனோ மனுஸ்மிருதியில், சில பழக்க வழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என்று எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறான். நாம் அவற்றிலிருந்து வெளிவர வேண்டும். நம் சமூகம் நன்கு வளர்ந்திருக்கிறது. அறிவியல் மனப்பான்மையே அரசாங்கத்தின் நோக்கம் என்று நாம் பீற்றிக் கொள்கிறோம். அறிவியல் மனப்பான்மையை அரசமைப்புச்சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால், பெண்கள் விதவைகளாக நடத்தப்படுகிறார்கள். விதவைகள் என்றால் என்ன பொருள்? தன்னுடைய கணவனை இழந்தவள் என்று பொருள். ஒரு பெண் திருமணத்திற்குப்பிறகு தான் பிறந்த வீட்டிலிருந்து அனைத்தையும் விட்டுவிட்டுக் கணவனின் இல்லத்திற்குச் செல்கிறாள். துரதிர்ஷ்டவசமாக அவள் தன் கணவனை இழந்துவிட்டால், அவள் கதி என்ன? அவளைக் கணவனின் குடும்பத்தினர் ஏற்கத் தயாரில்லை என்றால், அவள் விரட்டப்படுகிறார், எவரும் ஆதரிக்காது விடப்படுகிறார். இப்படிப்பட்டவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
டாக்டர் எல். ஹனுமந்தையா: இந்தப் பெண்ணைத் திருமணம் செய்ததால்தால் இவன் இறந்தான் என்று குற்றச்சாட்டு வேறு. சமூகத்தின் மனோபாவம் இப்படித்தான் இருக்கிறது.
திருச்சி சிவா: அதைத்தான் நானும் கூறுகிறேன்.   இத்தகைய மூடப்பழக்க வழக்கங்கள்  தூக்கி எறியப்பட வேண்டும். இவர்களைப் பாதுகாத்திட அரசாங்கம் முன்வர வேண்டும்.
எங்கள் தலைவர் டாக்டர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, மறுமணம் போன்று விதவைகளுக்காக எண்ணற்ற புனர்வாழ்வுத் திட்டங்களைக் கொண்டுவந்தார். தமிழில் விதவைகள் என்று கூறப்படுவதை அவர் கைம்பெண் என்று மாற்றினார். ஏனென்றால் விதவை என்கிறபோது அதில் ஒற்று இருக்காது. கைம்பெண் என்கிறபோது இரண்டு ஒற்றுகள் இருக்கும். அதேபோன்று அவருக்கு இரு வாழ்க்கைகள் உண்டு என்கிற பொருளில் மாற்றியமைத்தார். விதவைகள் மறுமணம் செய்துகொள்வதற்கு உரிமை உண்டு, விதவைகளின் குழந்தைகளுக்கு கல்வி கற்க நிதி உதவி வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார். இட ஒதுக்கீட்டின் மூலம் மறுமணம் செய்துகொண்ட விதவைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இது அமல்படுத்தப்பட்டு வருகிறது.
தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். அதிலும் முக்கியமாக சுயமரியாதைத் திருமணத்தையும் அறிமுகப்படுத்தினார். எங்கள் அன்புத்தலைவர் அறிஞர் அண்ணா முதல்வராக வந்தவுடன்  நிறைவேற்றிய முதல் சட்டம், சுயமரியாதைத் திருமணத்தை இந்து சட்டப்படி செல்லத்தக்கது என்று மாற்றியதாகும். அதன்பின்னர் தந்தை பெரியார் நடத்திய முதல் சுயமரியாதைத் திருமணத்தின் மணமகள் ஒரு விதவையாகும். இவ்வாறு மாபெரும் சுயமரியாதை வரலாறு படைத்திட்ட இயக்கத்தைச் சார்ந்தவன் என்ற முறையில்தான் இந்தத் தீர்மானத்தை இங்கே முன்மொழிகிறேன். நாட்டில் உள்ள விதவைகளின் நலன்களைப் பாதுகாத்திட உரிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.
(தமிழில்: ச.வீரமணி)