Showing posts with label Mother. Show all posts
Showing posts with label Mother. Show all posts

Tuesday, January 17, 2017

கவ்விப்பிடிக்கிறார் கார்க்கி




“நாங்கள் .அனைவரும் புரட்சிக்காரர்கள். ஒருசிலர் வேலை வாங்கவும், மற்றவர்கள் அனைவரும் வேலை செய்யவுமாக இருக்கின்ற நாள் வரையிலும், நாங்களும் புரட்சிக்காரர்களாகவே இருப்போம்.”
“We are revolutionaries and we will be going on being revolutionaries as long as some people do nothing but give orders and others do nothing but work.”
தாய் நாவலில் கதாநாயகன் பாவெல் நீதிமன்றத்தில் முழங்கிய முழக்கத்தின் ஒருசில வரிகள்தான் மேலே குறிப்பிட்டுள்ளவை.
நான் பதின்பருவத்தினனாக இருந்தகாலத்தில் தாய் நாவலைத் திரும்பத் திரும்ப படித்தேன். தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் படித்தேன். அவ்வாறு படித்து அப்போது ஆங்கிலத்தில் மனனம் செய்த வரிகள்தான் மேலே இருப்பவைகளாகும்.
1904ஆம் ஆண்டு தாய் நாவலின் முதல் பதிப்பு வெளிவந்தது. அதன்பின்னர் கடந்த  114 ஆண்டுகளில் உலகின் பல மொழிகளில் பல பதிப்புகளை இந்நாவல் கண்டுவிட்டது. இப்போது மீண்டும் படிக்கும்போதும், அதன் வளர்ச்சியும் மகிமையும் குறையாது தொடர்கிறது. இதுதான்  மாமேதை லெனினை கார்க்கியை நேசிக்க வைத்தது.
தாய் நாவல், மனிதனை மானுடப்படுத்தி, ஒரு புதிய சமூகத்தை நிர்மாணிப்பதில் இலக்கியம் வகிக்கின்ற மகத்தான பாத்திரத்தை நமக்கு உணர்த்துகிறது. கலைநயமிக்க மிக நுணுக்கமான கருத்துப்பதிவு இந்த நாவல். இது உழைக்கும் மக்களின் வெகுஜனங்களின் மத்தியில் வாசிக்கும் அனைவரது நெஞ்சங்களிலும் தனது ஆழமான வேர்களைப் பதித்துள்ளது. கார்க்கி அதையும் ஒரு தாயின் குரலாகப் பதிவு செய்திருப்பதுதான் நாவலின் வெற்றியின் ரகசியம். அதனால்தான் இது காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கிறது.
இயக்கத்தில் இப்போது செயல்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு, இதில் வரும் கதாமாந்தர்களான தாய் பெலகேயா நீலவ்னா , கதையின் நாயகன்  பாவெல் விலாசவ் மட்டுமல்ல கதையில் வரும் அனைத்து மாந்தர்களுமே இயக்கத்தில் இயங்கும் நமக்கு முன்னோடிகள்தான். அவர்கள் ஒவ்வொருவருமே நமக்கு ஏதாவது ஒருவிதத்தில் பரிச்சயமானவர்களாகவும், நாம் எடுத்து வைக்கும் அடிகளை எந்த அளவிற்கு எச்சரிக்கையுடன் எடுத்து வைக்க வேண்டும் என்பதற்கும் முன்னுதாரணங்களாகவும் திகழ்பவர்களாவார்கள்.
தாய் நீலவ்னா வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள மரியா கோர்சனாவா மூலமாகத்தான் தொழிற்சாலைக்குள் சாப்பாட்டுக்காரியாக நுழைந்து தொழிலாளர்கள் மத்தியில் பிரசுரங்களை விநியோகிப்பார். மரியாவின் குரலில் அன்றிருந்த பெண்களின் நிலைமையை கார்க்கி விளக்கியிருப்பார்.
“…என்னதான் உழைத்தாலும் நான் என்னமோ பிச்சைக்காரியாய்த்தான் சாகப்போகிறேன். என் காதலர்களே என்னைத் தின்று தீர்த்துவிடுவார்கள். அங்கேயும் இங்கேயுமாக நான் வாயைக் கட்டி,வயிற்றைக்கட்டி பத்து ரூபிள் சேர்த்துவைத்தால் அதையும் பிடுங்கிக்கொண்டு சென்றுவிடுகிறான். பெண்ணாகப் பிறந்தாலே இந்தப் பிழைப்புத்தான். ஊம், என்ன கழிசடைப் பிழைப்ப! தனியாய் வாழ்வது சங்கடமாயிருக்கிறது. எவன்கூடவாவது வாழ்வது அதைவிடத் தொல்லையாய் இருக்கிறது.”
பெண்களின் .இத்தகு அவலநிலையை சோசலிஸ்ட் சோவியத் யூனியன் மாற்றியமைத்தது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்தியாவில் இன்றைக்கும்கூட பெண்களின் நிலை இத்தகு நிலையில்தான் இருக்கிறது என்பதை சன் டிவியில் குஷ்புவின் நிகழ்வுகளையும், அதேபோன்று ஜீடிவியில் வரும் நிகழ்ச்சி ஒன்றில் பெண்களின் அவலநிலை குறித்து ஒளிபரப்பப்படுவதையும் காண்பவர்கள் அறிவார்கள்.
தாய் நாவலின் மற்றுமொரு சிறப்பு என்னவெனில் சோசலிசம் என்றால் என்ன, சோசலிச சமூக அமைப்பை எப்படி உருவாக்கிட வேண்டும் என்பவை குறித்து எதுவுமே தெரியாத ஒருவரின் அறிவுதான் கதையின் ஆரம்பத்தில் தாய்க்கு இருக்கும். எழுதப்படிக்கத்தெரியாத பாமரப் பெண்மணிதான் நீலவ்னா. ஆனால், அவர் எப்படிப் படிப்படியாக எழுத்தறிவு பெற்று, சோசலிசம் என்றால் என்ன என்பதையும், சோசலிச சமூக அமைப்பைக் கட்டி எழுப்பிட எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும், அறிந்து கொள்பவராக மாறுகிறார் என்பதையும் மிகவும் அற்புதமாக தோழர்  கார்க்கி சித்தரித்திருப்பார். எனவேதான் . சோசலிச இலக்கியம் குறித்து .அனா, ஆவன்னா கூட தெரியாதவர்களையும் கூட  இந்த நாவலை அவர்கள் படிக்கத் தொடங்கியபின்னர், கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அமைத்துவிடுகிறது.
“தங்குதடையற்று நீ முன்னேறிச் செல்ல வேண்டுமானால் சில சமயங்களில் நீ உன் விருப்பத்துக்கு மாறான காரியங்களைக் கூடச் செய்ய வேண்டும். அதற்காக நீ சகலத்தையும் உன் பரிபூரண இதயத்தையும் விட்டுக்கொடுக்கத் தயாராயிருக்க வேண்டும். கொள்கைக்காக நீ உன் உயிரை இழப்பது, மிகவும் லேசான காரியம். அதைவிட மகத்தானவற்றை, உன்னுடைய சொந்தவாழ்வில் உனக்கு மிகவும் அருமையும் விருப்பமும் நிறைந்தவற்றைக்கூட நீ தியாகம் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட மகத்தான தியாகத்தினால்தான் நீ எந்த ஒரு சத்தியத்துக்காகப் போராடுகிறாயோ அந்த சத்தியம் எப்படி ஒரு மகா சக்தியாக வளர்ந்தோங்கிப் பெருகுகிறது என்பதை உன்னால் பார்க்க முடியும். அந்தச் சத்தியம் எப்படி ஒரு மகா சக்தியாக வளர்ந்தோங்கிப் பெருகுகிறது என்பதை உன்னால் பார்க்க முடியும்….”
இப்படி எத்தனையோ வரிகளை நாவலின் பல இடங்களில் கார்க்கித் தூவி இருப்பார். அதேபோன்று அரசு ஊழியர் இயக்கத்தில் நான்  பணியாற்றிய காலத்தில் ஓர் அனுபவம். மத்திய அரசு ஊழியர்களுக்கு .இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று போராடும்போது காவல்துறையினர் மிக அதிகமான அளவில் எங்களைச் சூழ்ந்து நின்று கொண்டிருப்பார்கள். சில இடங்களில் மோதல்களும்கூட நடந்திருக்கின்றன. இவர்களுக்கும் சேர்த்தேதான் நாம் போராடுகிறோம் என்கிற உணர்வோ, அறிவோ இவர்களில் பெரும்பாலோருக்கு இருப்பதில்லை.  இதை நன்கு மனதில்கொண்டுதான் தோழர் உமாநாத் போலீசார்  ந்ம் போராட்டத்தை நசுக்குவதற்காக பெரும்திரளாக நிறுத்தப்பட்டிருக்கும் சமயங்களில் அவர்களை நோக்கியும் உரையாற்றி இருப்பதைக் கண்ணுற்றிருந்திருக்கிறேன். அதேபோன்றே நானும் அவர்கள் கோரிக்கைகளையும் இணைத்து மத்திய அரசு போலீசுக்கு இணையாக, மாநில அரசு போலீசுக்கும் வழங்கிடு வழங்கிடு ஊதியம் வழங்கிடு”  என்று முழக்கமிடும்போது அவர்கள் உள்மனதில் ஆதரவு அளிப்பதைக் காண முடியும்.
இந்நாவலில் ஒரு சில வரிகள்.
”போலீஸ், அரசியல் போலீஸ், ஒற்றர்கள் எல்லோரும் நமது எதிரிகள். ஆனால் அவர்களும் நம்மைப்போன்ற மனிதர்கள்தானே. நம்மைப் போலவே, ரத்தம் உறிஞ்சப்படும் வர்க்கம்தானே. அவர்களையும் மனிதர்களாகக் கருதுவதில்லை. ஆள்வோர் அவர்களை நமக்கு எதிராக கிளப்பிவிடுகிறார்கள். பயத்தினாலும், அறிவின்மையாலும் ஜனங்களின் கண்களைக் குருடாக்கி கையையும் காலையும் தளையிட்டுக் கட்டி, மக்களைக் கசக்கிப் பிழிந்து, ரத்தத்தை உறிஞ்சித்தீர்க்கிறார்கள். மக்களை ஒருவர்க்கொருவர் உதைக்கவும், நசுக்கவும் தூண்டிவிடுகிறார்கள். அவர்கள் மக்களைத் துப்பாக்கிகளாகவும், குண்டாந்தடிகளாகவும் கற்களாகவும் உருமாற்றி, பார், இதுதானடா அரசு! என்கிறார்கள்.”
தஞ்சையில் கிராமப்பணியாளர்கள் போராட்டத்தின்போது அவர்களுக்கு ஆதவாக அரசு ஊழியர் சங்கம் ஆதரவு அளித்தபோது, அவர்களின் போராட்டத்தை வாழ்த்திப்பேசிய தோழர் என்.சீனிவாசன்மீது ஓர் ஆய்வாளர் கைவைத்துவிட்,டார். உடனே நான் “போலீசாருக்கும் சேர்த்து ம்த்திய அரசு ஊதீயம் வாங்கிக்கொடுத்த அரசு ஊழியர் சங்கத் தோழர்கள் மீது போலீசே கைவைக்கலாமா” என்று முழக்கம் இட அங்கே குழுமியிருநத காவல்துறையினர் அனைவரும் அப்படியே ஸ்தம்பித்துநின்ற காட்சியை இன்றளவும் என்னால் மறக்கமுடியவில்லை.
இந்நாவலைப் படிக்கும்போது இயக்கத்தில் ஈடுபட்டுள்ள நம் எல்லோருக்குமே நம் இயக்க அனுபவங்களும் நம்மைக் கவ்விப்பிடித்துக்கொள்வதைத் தடுக்க முடியாது.
அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில் தாய் நாவலை மீண்டும் நாம் படிப்போம். புதிதாக இயக்கத்திற்கு வந்துள்ள மாணவர்கள்,இளைஞர்கள்,பெண்கள் முதலானோரையும் படிக்கச் செய்திடுவோம்.
--ச.வீரமணி.