Showing posts with label Banks. Show all posts
Showing posts with label Banks. Show all posts

Tuesday, June 20, 2017

வராக்கடன் பாக்கிவைத்துள்ள கார்ப்பரேட்டுகளுக்கு மோடி அரசாங்கம் வரப்பிரசாதம்

இந்தியாவின் வங்கி அமைப்புமுறை ஒருகாலத்தில் மிகவும் சிறப்பாக இருந்தது. 2008ஆம் ஆண்டு, உலகம் முழுதும் நிதி நெருக்கடியால் சிக்கித்தவித்த காலத்தில்கூட இந்தியாவின் வங்கிகள் எவ்விதமான பிரச்சனைகளும் இன்றி, மிகவும் வலுவான நிலையிலேயே, நிலைத்து நின்றன. ஆனால் அவற்றின் இன்றைய நிலை, குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் நிலை,  மிகவும் பரிதாபமாகும். கார்ப்பரேட்டுகள் தாங்கள் வாங்கிய கடன்களை அவற்றிற்குத் திருப்பிச்செலுத்தாமல் அவற்றை செயல்படா சொத்துக்களாக (NPA—Non-performing Assets), வராக்கடன்களாக மாற்றியிருப்பதன் காரணமாக, மிகவும் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. இதுவங்கித்துறையின் எதிர்காலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
கடந்த மூன்றாண்டுகளில், மத்தியில் பாஜக தலைமையிலான மோடி ஆட்சியின்கீழ், வங்கிகளின் வராக்கடன்கள் மதிப்பு மும்மடங்கு ஆகியிருக்கிறது. 2.3 லட்சம் கோடி ரூபாய்களாக இருந்தது, 6.8 லட்சம் கோடி ரூபாய்களாக மாறியிருக்கிறது. பொதுத்துறை வங்கிகளின் இன்றைய செயல்படா சொத்துக்களாக மாற்றப்பட்டுள்ள வராக்கடன்களின் மதிப்பு  அவை அளித்துள்ள கடன்களின் மதிப்பில் 11 சதவீதமாகும். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அவை அதிகமாகும்.
இந்தியாவில் உள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிச்செலுத்தாது இருப்பதுதான் வங்கிகளின் செயல்படா சொத்துக்கள் பெருகியிருப்பதற்கு முக்கிய காரணமாகும். நாடாளுமன்றக் கணக்குக் குழுவின் தலைவரான கே.வி.தாமஸ் நாடாளுமன்றத்தில் அளித்த அறிக்கையின்படி, வங்கிகளின் செயல்படா சொத்துக்களில் 70 சதவீதம் விரல்விட்டு எண்ணக்கூடிய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களேயாகும்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இவ்வாறு செயல்படா சொத்துக்கள் உருவாவதற்கு முந்தைய ஐமுகூ அரசுதான் காரணம் என்று சொல்லி நழுவப்பார்த்தார். ஐமுகூ அரசு காலத்தில் கொடுக்கப்பட்ட கடன்கள்தான் இன்றைய அரசின் காலத்தில் செயல்படா சொத்துக்களாக மாறி இருக்கின்றன என்று கூறினார். ஐமுகூ அரசாங்கம், கார்ப்பரேட்டுகளிடம் மிகவும் தாராளமாக நடந்து கொண்டது என்பது உண்மைதான். ஆனால் பாஜக அரசாங்கம் அவர்களையும் மிஞ்சிவிட்டது.
இதன்காரணமாக இவ்வாறு கடன் வாங்கிவிட்டு கட்டாத கார்ப்பரேட்டுகளுக்கு மேலும் இதே வங்கிகளால் கடன்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு கடன் வாங்கிவிட்டு பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றிய பேர்வழிகளில் விஜய் மல்லய்யா மிகச் சரியான உதாரணமாகும்.  இதன் பின்னனில் மோடிக்கு மிகவும் வேண்டியவரான அதானியின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள நிறுவனங்கள்  பொதுத்துறை வங்கிகளுக்கு அளிக்கவேண்டிய தொகை இன்னமும் அதிகமாகும். சுமார் 72 ஆயிரம் கோடி ரூபாயை அதானி பொதுத்துறை வங்கிகளுக்கு அளித்திட வேண்டும்.  இந்தப் பேர்வழிக்குச் சொந்தமான விமானத்தில்தான் பிரதமர் மோடி உலகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
பாஜக அரசாங்கம் மத்தியில் அமைந்தபின்னர், அதானிக்குச் சொந்தமான இரு மின்சாரம் உற்பத்தி செய்திடும் நிறுவனங்களுக்கு பொதுத்தறை வங்கிகளிலிருந்து 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு கடன்கள் அளிக்கப்பட்டன. இந்த இரு நிறுவனங்களும் இந்தத் தொகைக்கான வட்டியைக் கட்டக்கூடிய அளவிற்குக்கூட உற்பத்தியை உருவாக்காத நிலையிலேயே இவ்வாறு கடன்கள் அளிக்கப்பட்டன. இவ்வாறு கடன் வழங்கும்போது, இந்நிறுவனங்கள் இதற்கு முன் வாங்கிய கடன் தொகையையும் இப்புதிய கடனுடன் சேர்த்து, இத்தொகையை மேலும் பத்தாண்டுகள் கழித்து வழங்கினால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனங்கள் இக்காலகட்டத்தில் இதற்கான வட்டியைக் கூட கட்ட வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்றே, மோடிக்கு மிகவும் வேண்டியவரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான நிறுவனமான ரிலயன்ஸ் கேஸ்  டிரான்ஸ்போர்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்திற்கான பழைய கடனையும் சேர்த்து புதிதாக 4,500 கோடி ரூபாய் புதுக்கடனாக அளிக்கப்பட்டு அதனைத்திருப்பிச் செலுத்தும் காலத்தையும் பத்தாண்டுக்கும் மேலாக நீட்டித்துள்ளது.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் அறிக்கையின்படி, இவ்வாறு செயல்படா சொத்துக்கள் மற்றும் வராக்கடன்களில் பெரும்பாலானவை ரிலையன்ஸ், அதானி மற்றும் வேதாந்தா ஆகிய கார்ப்பரேட்டுகளுக்குச் சொந்தமானவைகளாகும். வேதாந்தா என்பவரின் நிறுவனம்தான், ஒடிசாவில் விவசாயிகள் மற்றும் பழங்குடியினருக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை, தன்னுடைய தொழிற்சாலைகளை அமைப்பதற்காக பறித்துக்கொண்டதாகும்.  
இவ்வாறு இந்நிறுவனங்கள் வாங்கிய கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாத நிலையில் அதே நிறுவனங்களுக்கு இக்கடன்களோடு மேலும் கடன்கள் வழங்கப்பட்டு அவை மாற்றியமைக்கப்பட்டிருப்பதுடன், அவற்றைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தையும் நீட்டித்திருப்பதானது வரவிருக்கும் காலங்களில் இவ்வங்கிகள் மிகப்பெரிய அளவில் இழப்புகளைச் சந்திப்பதற்கு இட்டுச்செல்லும்.
சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துள்ள முகேஷ் அம்பானியின் கடன்களை அவர் திருப்பிச் செலுத்துவதற்கு காலக்கெடுவை நீட்டித்திடும் இதே அரசாங்கம், நாட்டில் வறட்சி மற்றும் பயிரிழப்பு ஆகியவற்றின் காரணங்களால் விவசாயிகள் செத்தாலும் அல்லது அவர்கள் தங்கள் நிலங்களை விற்றாலும் கவலையில்லை என்று கூறி அவர்கள் வாங்கிய கடன்களை மட்டும் தள்ளுபடி செய்ய மறுக்கிறது.
கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சியால் பாதிப்புக்கு உள்ளான தமிழ்நாட்டு விவசாயிகள், கடன் தள்ளுபடிக்காக பல மாதங்களாகப் போராடி வருகிறார்கள். மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளவே இல்லை. கடன்வலையில் கடுமையாகச் சிக்கிக்கொண்டு தவிக்கும் விவசாயிகளைக் காப்பாற்றிட மத்திய மோடி அரசாங்கம் சிறிதும் கவலைப்படவில்லை. விவசாயிகள் என்ன மத்திய அரசால் நிறைவேற்ற முடியாத அளவிற்கா கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையிலிருக்கும் விவசாயிகள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் பெயர்கள் பொதுவெளியில் தொங்க விடப்படுகின்றன. எவ்விதமான மன உறுத்தலுமின்றி அவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்படுகின்றன. இவ்வாறு செய்ய முன்வந்துள்ள அரசாங்கமானது, கார்ப்பரேட்டுகளிடம் மட்டும் ஏன் அதனைச் செய்ய மறுக்கிறது? இவ்வாறு வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிச்செலுத்தாத கார்ப்பரேட்டுகளின் பெயர்களை வெளியிடுங்கள் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்கூட மத்திய அரசு அதனைச் செய்ய மறுக்கிறது.
வங்கிகள் என்பவை அரசாங்கத்திற்குச் சொந்தமானவை. எனவே மக்களுக்கும் அவை சொந்தமானவைகளாகும். அதன்காரணமாக வங்கிகளின் சேமிப்புகள் மக்களுக்குச் சொந்தமானவைகளாகும். வங்கிகளில் உள்ள சேமிப்புகளில் சுமார் 60 சதவீதம் சாமானிய மக்களால்  அளிக்கப்பட்டுள்ளவைகளாகும். 15 சதவீதம் அரசுத்துறை நிறுவனங்களால்  அளிக்கப்பட்டுள்ளன.
வங்கிகள் நஷ்டம் அடைகின்றன என்றால் மக்கள் நஷ்டம் அடைகிறார்கள் என்றே பொருளாகும்.  சேமிப்பாளர்கள் என்ற முறையிலும் அவற்றின் உரிமையாளர்கள் என்ற முறையிலும் நஷ்டம் அடைகிறார்கள்.  
இவ்வாறு பொதுப்பணத்தை கார்ப்பரேட்டுகளுக்கு வாரிவழங்கிவிட்டு, இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள மோடியின் செல்லப்பிள்ளைகள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவரான வைரல் ஆச்சார்யா என்பவர் செயல்படா சொத்துக்கள் நெருக்கடிக்குத் தீர்வு பொதுத்துறை வங்கிகளை மறுபடியும் தனியாரிடம் தாரை வார்த்துவிட வேண்டுமாம். அதேபோன்று அரசு முதலீடுகளையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டுமாம். இந்திய ரிசர்வ் வங்கி தலைவர் உர்ஜித் பட்டேல் கூற்றும் இதிலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை. செயல்படா சொத்துக்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய வங்கிகள் மூழ்கிவிட இயற்கையாகவே அனுமதித்துவிட வேண்டுமாம். 2008 உலக நிதி நெருக்கடியிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றியது நம் நாட்டின் பொதுத்துறை வங்கிகள்தான் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.
சரி, அப்படியே இந்தியாவில் வங்கிகளை விற்பதற்கு அரசு முன்வந்தால் அவற்றை வாங்கப்போவது யார்? பொதுத்துறை வங்கிகளுக்குத் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பித்தராமல், சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வரைக்கும் கடன்பட்டிருக்கிற, இதே கார்ப்பரேட்டுகள்தான் வாங்க முன்வருவார்கள்.
நம் நாட்டில் ஆட்சியாளர்களையும் அதனை வழிநடத்திடும் அதிகாரவர்க்கத்தினரையும் சலுகைசார் முதலாளித்துவம் என்னும் புற்றுநோய்  நன்கு கவ்விப் பீடித்திருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சாட்சியம் தேவையில்லை.
இந்தியாவில் கார்ப்பரேட்டுகளுக்கு மோடி அரசாங்கத்தின் கடந்த மூன்றாண்டு கால ஆட்சியில் சலுகைகளுக்கு மேல் சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. மோடி, இவ்வாறு தன்னை ஆட்சியில் அமர்த்திய கார்ப்பரேட்டுகளின் ‘மணிப்பர்ஸ்’களை நிரப்புவதற்குத் தவறவில்லை. இதற்குப் பிரதிபலனாக  இப்போது அதே கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிப்பதையும் சட்டப்படி செல்லத்தக்கதாக்கிவிட்டார்.

(தமிழில்: ச.வீரமணி)