Thursday, July 23, 2026

தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்

தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர் ஆசிரியர்: மூவலூர் இராமாமிர்தத்தம்மாள்
சில புத்தகங்கள் உலகின் சமூக-பொருளாதார-கலாச்சார அமைப்புகளையே மாற்றும். இதற்கு எடுத்துக்காட்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மூலதனம் மற்றும் சோவியத் இலக்கியங்கள் முதலானவை. சில புத்தகங்கள், சமுதாய அமைப்பையே மாற்றும். இதற்கு உதாரணம் பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள், அவர் குடியரசு இதழில் எழுதிய கட்டுரைகள் முதலானவைகளாகும். சில புத்தகங்கள் படிப்போரின் எதிர்காலத் திசைவழியையே மாற்றி யமைத்திடும். இதற்கு உதாரணம், நினைவுகள் அழிவதில்லை, வீரம் விளைந்தது, தாய் முதலானவற்றைக் குறிப்பிடலாம். சில புத்தகங்கள் தாங்கள் தாங்கள் பிறந்த சமூகத்தின் காரணமாக, தாங்கள் அனுபவித்த சமூகக் கொடுமைகளை, வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததுடன் அதற்கெதிராகக் குரல் எழுப்பி, அடியோடு ஒழித்துக்கட்ட நடவடிக்கைகள் எடுக்க தன் சமூகத்தில் பிறந்தவர்களையும், தங்கள் சமூகத்தின் பழக்க-வழக்கங்கள் இழிவு என்று கருதியவர்களையும் இணைத்து இயக்கம் காண வைப்பதும் உண்டு. இதற்கு உதாரணங்களாக டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நூல்களைக் குறிப்பிடலாம். இதே திசைவழியில் தோழர் மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் எழுதிய தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் என்னும் நூலும் ஒன்று என்று சொன்னால் அது மிகையல்ல, உண்மை. இளைய சமுதாயத்திற்கு வரலாறு மிகவும் முக்கியம். இந்திய சமூக அமைப்பில் வர்ணாசிரம (அ)தர்மத்தின் கொடுங்கோன்மை சென்ற தலைமையினர் மத்தியில் எந்த அளவிற்குக் கொடூரமாக இருந்தது என்பது இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு அவ்வளவாகத் தெரியாது. இதன் காரணமாகத்தான் ஒரு காலத்தில் கீழத் தஞ்சை மாவட்டத்தில் தங்கள் இழிவினை ஒழித்துக் கட்டுவதற்கு செங்கொடி இயக்கம் எந்த அளவிற்கு முன்கை எடுத்துப் போராடியது என்பதை வரலாற்றுரீதியாகத் தெரிந்துகொள்ளாத காரணத்தால்தான், தலித் இளைஞர்களில் பலர் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு எதிராகவே செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. அநேகமாக இவர்கள் பி.சீனிவாசராவ், பி.எஸ். தனுஷ்கோடி முதலானவர்களின் வரலாறுகளை அறிந்திருக்க மாட்டார்கள். அதேபோன்றே, தமிழகத்தில் ஒரு சாதியில் பிறந்த பெண்கள் மிகவும் இழிவான முறையில் வர்ணாச்ரம (அ)தர்மம் வலியுறுத்தி வந்ததையும் அதனை தந்தை பெரியார் தலைமையில், அந்த சாதியில் பிறந்த பெண்ணான மூவலூர் ராமாமிர்தத்தம்மாள், தன் இனப் பெண்களைத் திரட்டி, அக்கொடுமைக்கு எதிராகப் போராடிய வரலாறும் அந்த இனத்தில் பிறந்த பலருக்கே இன்றைக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. தமிழகத்தில்தான் தேவதாசி முறை முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்பட்டிருக்கிறது. நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இப்போதும் வெளிப்படையாகவும், ஆந்திராவில் இலைமறை காய்மறையாகவும் இருந்து வருவதாகவே அறிகிறோம். வர்ணாச்ரம (அ)தர்மம் மத்தியில் கோலோச்சிக்கொண்டிருக்கிற இத்தருணத்தில் நம் முன்னோர்கள் நடத்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் குறித்த நூல்களை இன்றைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டும். அத்தகைய நூல்களில் ஒன்றுதான் மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் எழுதிய “தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்” என்னும் நூலாகும். இந்நூல் அவர்களால் 1930களில் எழுதிப்பட்டு வெளியாகியிருக்கிறது. இதனை வெளிக்கொணர்வதற்காக அவர் எவ்வளவு கடினமானமுறையில் உழைத்திருக்கிறார் என்பதை இந்நூலின் முன்னுரையில் அவரும், அவருக்கு உதவியாக இருந்த பெரியோர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்நூல் குறித்து நான் சொல்வதைவிட இதனை வெளிக்கொரண காரணமாக இருந்த மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் தன்னுடைய என்னுரையில் கூறியுள்ளவற்றில் ஒருசிலவற்றைக் குறிப்பிட்டுவிட்டு, ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதற்கிணங்க கதையிலிருந்து ஒரு சிறு பகுதியை மட்டும் இங்கே பதிவிடலாம் என விரும்புகிறேன். மூவலூர் இராமமிர்தத்தம்மாள், என்னுரையில் கூறியிருப்பதன் சாராம்சம் வருமாறு: “தேவதாசி, தேவடியாள்! ஆஹா, என்ன திவ்வியமான திருப்பெயர்கள். தெய்வத்திற்குப் பக்தி சிரத்தையுடன் திருத்தொண்டு புரிபவளே, தேவதாசி. தேவடியாள், இந்தப் பெயர் காதில்பட்ட மாத்திரத்தில் நாம் என்ன நினைக்கிறோம்? குடிகெடுக்கும் விபசாரி என்ற நினைவைத் தவிர தெய்வத் திருத்தொண்டு புரியும் பக்த சிரோமணி என்ற நினைவு கனவிலும் வருவதில்லை. தேவதாசி வேறு, மற்ற விலைமகளும் பரத்தையும் வேறு என்று வாதிடுகின்றவர்களும் இங்கே இருக்கிறார்கள். ஆனால் பண்டைக் காலந்தொட்டே, கோவில் குருக்கள்மாரும், அரசர்களும், செல்வர்களும் மற்றவர்களும் தெய்வத்தின் பேரால், கலையின் பேரால், போகத்தின் பேரால், குறிப்பிட்ட ஒரு பெண் சமூகத்தை விபச்சாரத்திற்கு உபயோகிக்க ஆக்கம் அளித்து வந்தார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பது எனது கெட்டியான அபிப்பிராயம். எனவே அந்த விபச்சாரக் கூட்டத்தில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்துக் கொண்டு வாதித்துப் பெருமை பேசிக்கொண்டிருப்பது வீண் வேலையாகும் தேவ தாசி முறையை ஒழிக்க வேண்டும், தெய்வங்களின் பேரால் பொட்டுக்கட்டும் அநாகரிக வழக்கத்தை ஒழித்துவிட வேண்டும் என்று டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் போன்ற சீர்திருத்தவாதிகள் சொன்னால் இப்பொழுதும் முட்டுக்கட்டை போடுகின்றவர்கள் யார் என்பதைக் கவனியுங்கள். வைதீகர் கூச்சல் ஒருபுறம் இருக்கட்டும், பெரிய பெரிய சட்ட நிபுணர்களான அரசியல் தலைவர்கள் – சமூகச் சீர்திருத்தத் தலைவர்கள் என்பவர்களே குறுக்கு விழுகிறார்கள். கும்பகோண சாஸ்திரிகளைக் காட்டிலும் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் “தேவதாசிகள் இருக்க வேண்டும், தேவதாசி முறையை ஒழிப்பது தெய்வ விரோதம், சட்டவிரோதம்” என்று கூச்சல் போட்டுப் பிரச்சாரம் செய்யத் தொடங்குகின்றார்கள். கிருஷ்ணய்யர்களோ “தேவதாசி முறையை ஒழிப்பது நமது புராண நாட்டியக்கலை – இசைக்கலைப் பொக்கிசங்களை ஒழிப்பதாகும்,” என்று கூச்சல் கிளப்புகிறார்கள். சாஸ்திரிகளோ, “தேவதாசி முறையை ஒழித்தால் சாஸ்திரம் போச்சு, நாத்திகம் ஆச்சு,” என்று தலைகளில் அடித்துக்கொள்கிறார்கள். இனி, தாசிகள் வீடுகளே மோட்சம் என்று கருதிக்கொண்டிருக்கும் ஜமீன்தார்கள், பிரபுக்கள் முதலியவர்களைப் பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. தேவதாசி முறையை ஒழிப்பதற்கு எதிரிடையாகத் தங்களுடைய அதிகாரமும் செல்வமும் எவ்வளவு தூரம் பாயுமோ அவ்வளவு தூரம் உபயோகிக்கத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நமது நாட்டில் பெண்கள் தெய்வங்களாகப போற்றப்படுகிறார்கள் என்பது ஏமாற்றுப் பேச்சு. இந்நாட்டுப் பெண்கள் எல்லாத் துறையிலும் அழுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்குத் தெய்வங்களின் பேராலும் சாஸ்திரங்களின் பேராலும் ஒரு பெண் சமூகத்தை விபச்சாரத்திற்குத் தயாராக்கிக் கொண்ட பாதகம் செய்திருப்பதொன்றே போதிய சான்றாகும். அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் தலைவர்ககளாய் விளங்கிய தோழர்கள் ஈ.வெ. ராமசாமியார், திரு.வி.கலியாணசுந்தர முதலியார், டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்ற பிரமுகர்கள் தேவதாசி முறையை ஒழிப்பதில் ஒருவாறு அநுதாபங் காட்டினர். இந்தச் சமூகத்திலேயே பிறந்து படாத பாடெல்லாம் பட்டுத்தேர்ந்த எனக்கு எவ்வழியிலேனும் இவ்விபசாரக் கூட்டத்தைத் தலையெடுக்கவிடாமல் ஒழித்துவிட வேண்டும் என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு அந்தச் சந்தர்ப்பம் பெருந்துணையாக வந்து வாய்த்தது. பொட்டறுப்புச் சங்கங்கள் கண்டு பிரச்சாரம் செய்யத் தொடங்கினேன். தேவதாசி சமூகத்திலேயே பலமான எதிர்ப்புக் கிளம்பியதோடு நான் மேலே குறிப்பிட்ட பெரிய தலைவர்கள் – சாஸ்திரிகள் – ஜமீன்தார்கள் – பிரபுக்கள் மாமாக்களின் எதிர்ப்புகளும் விரோதங்களும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கிளம்பத் தலைப்பட்டன. எனக்கும் என்னுடைய தோழர்களுக்கும் ஏற்பட்டன. தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர் என்னும் பெயரில் உள்ள இந்நாவல் புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்ததொன்றாகும்.” அடுத்து, அன்றைய சமூகம் தேவதாசிகள் சமூகம் எப்படி இருந்தது என்பதை கதையின் தொடக்கத்திலேயே மிகவும் சிறப்பாக வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார். அது என்ன என்று கூறி என் உரையை முடித்துக்கொள்கிறேன். “மைசூர் வித்வானுக்கு ரூபாய் 5000 கொடுத்துச் சங்கீதம் பயின்று பிரபலமடைந்திருக்கும் கமலாபுரம் போக சிந்தாமணியின் புத்திரிகளான காந்தா கானவதி சகோதரிகள் சங்கீதக் கச்சேரிகளுக்கு ஏக கிராக்கியாய் இருக்கிறது. பக்கத்து வீட்டுத் தாசிகளெல்லாம் பொறாமையால் புழுங்கி வேதனையடையும்படி காந்தா கானவதி வீட்டிற்குக் காரிலும் வண்டியிலும் கோச்சிலுமாகப் பல பிரபுக்கள் வருவதும், போவதும் சங்கீதம் கேட்பதுமாய் இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது ஒரு நாள் தந்திச் சேவகன் ஒரு தந்தியைக் கொண்டுவந்து கொடுத்தான். போகசிந்தாமணி உடனே கருணாகரனைக் கூப்பிட்டு, “இந்தத் தந்தியை எடுத்துக்கொண்டு ஓட்டமாய் ஓடிப்போய் வக்கீல் சுந்தரம் ஐயரிடத்தில் காட்டி விவரம் தெரிந்து கொண்டுவா. அவரையும் தங்கச்சிகள் வரச்சொன்னதாகச் சொல்லிவிட்டு வா,” என்று கட்டளையிட்டாள். அக்கட்டளையைச் சிரமேல் தாங்கிய கருணாகரன் தந்தியை எடுத்துக்கொண்டு வக்கீல் வீட்டுக்கு ஓடினான். வீட்டைச் சமீபித்தவுடன் மரியாதையாய் அங்கவஸ்திரத்தைக் கட்கத்தில் இடுக்கிக்கொண்டு அடக்க ஒடுக்கமாகச் சென்றான். ஏதோ அன்றைக்கு வேண்டிய கேஸ் கட்டைப் படித்துக் கொண்டிருந்த வக்கீல் ஐயர் இவனைப் பார்த்ததும் அப்படியே நிறுத்திவிட்டு எழுந்து கருணாகரன் அருகே வந்து “வா அப்பா! கருணாகரா! என்ன விசேஷம்?” என்று கேட்டார். கருணாகரன், தன் தாயார் தந்தியைக் கொடுத்து விவரத்தைத் தெரிந்துவரச் சொல்லியதையும் அவரைக் கையோடு அழைத்துவரச் சொன்ன விவரத்தையும் தெரிவித்தான்.” இதுதான் நாவலின் முதல் பக்கம் உள்ளவை. இந்த முதல் பக்கத்திலேயே மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் அன்றைய தினம் தேவதாசி குடும்பத்தில் ஒரே தாய் வயிற்றில் பிறந்த பெண்களின் நிலையையும், ஆண்களின் நிலையையும் தோலுரித்துக்காட்டியிருப்பார். சமூகத்தை மாற்ற நினைக்கும் ஒவ்வொருவரும், நம் கடந்தகால சமூகம் எப்படி இருந்தது என்கிற வரலாறை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நம் மூதாதையர்கள் எப்படி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு, போராடி ஓரளவுக்காவது சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்தார்கள், இதனைத் தக்க வைத்துக்கொண்டு மேலும் முன்னேற வேண்டியது அவசியம் என்பதை உணர்வோம். இல்லையேல், இப்போது ஆட்சிபுரிவோர் சமூகத்தை 150 ஆண்டுகளுக்குப் பின்னேயிருந்தது போல் மாற்றுவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நம்மை அறியாமலேயே நாம் துணை போய்விடுவோம். எனவே, இதுபோன்று வரலாறுகளைக் கோடிட்டுக் காட்டும் நாவல்களை அவசியம் மீள்வாசிப்புச் செய்திடுவோம்.

Monday, August 18, 2025

உயர் கல்வியில் தீவிரமடையும் இந்துத்துவாமயம்

உயர் கல்வியில் தீவிரமடையும் இந்துத்துவாமயம்
-ஜி.ராமகிருஷ்ணன் தமிழில்: ச.வீரமணி இந்தியாவில் முனைவர் பட்ட ஆராய்ச்சியைத் தொடர விரும்பும் எவரொருவரும், 2024-25 வரை இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ‘உதவிப் பேராசிரியர்’ மற்றும் ‘ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர்’ பதவிகளுக்கு இந்திய குடிமக்களின் தகுதியைத் தீர் மானிக்க நடத்தப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு-தேசியத் தகுதித் தேர்வில் (UGC-NET (Nati onal Eligibility Test) பங்கேற்க வேண்டும். 2024ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு - ஆராய்ச்சி திட்டங்களின் தரத்தை “தரப்படுத்துதல்” மற்றும் “மேம்படுத்துதல்” என்ற போர்வையில் - தேசியத் தகுதித் தேர்வு மதிப்பெண்களை முனைவர் என்னும் பிஎச்டி (PhD) பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஒரு முக்கிய அளவுகோலாக மாற்றியது. மாநில பல்கலைக்கழகங்களின் சுயாட்சி பறிப்பு மாநில அரசுகளின் உயர்கல்வித் துறைகளால் நிர்வகிக்கப்பட்டு, பொது நிதியுதவியுடன் இயங்கும் அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி கள், தங்கள் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி களில் பிஎச்டி மாணவர்களைச் சேர்ப்பதற்கு, தங்க ளின் சொந்த அளவுகோல்களையும் நடைமுறை களையும் பின்பற்றி வந்தன. நாட்டில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகங்கள் மற்றும் நிறுவனங்களைவிட மாநில அரசுகள் நடத்திடும் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மிக அதிகமாகும். எனினும், இப்போது புதிதாக வெளியிடப் பட்டுள்ள பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆணை, மாநில அளவிலான நிறுவனங்களும் படிப் படியாக தேசியத் தகுதித் தேர்வு மதிப்பெண்களை தங்கள் சேர்க்கை செயல்முறைகளில் இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளது. இத்த கைய தீவிர மையப்படுத்தல் ஏழை மற்றும் பின் தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களை, குறிப்பாக தலித்/பழங்குடியின மாணவர்களை, ஆராய்ச்சிப் படிப்பைத் தொடருவதைக் கட்டுப் படுத்திடும். சேதுபந்த வித்வான் யோஜனா - இரட்டை நிலைப்பாடு ஒரு பக்கத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சியில், ஒன்றிய அரசாங்கம் பிஎச்டி சேர்க்கைக்குக்கூட தேசியத் தகுதித் தேர்வை கட்டாயமாக்குகிறது. மறுபக்கத்தில் ஐ.ஐ.டி.கள் போன்ற கல்வி நிறுவனங்களில் பெருமளவில் விதி விலக்குகளை வாரி வழங்கியிருக்கிறது. சேதுபந்த வித்வான் யோஜனா (Setubandha Vidwan Yojana) என்னும் திட்டத்தின்கீழ் பாரம்பரிய குருகுலங்களில் சமஸ்கிருதம் படித்த மாணவர்களு க்கு கூட்டு நுழைவுத் தேர்வு (JEE-Joint Entrance Examination) மதிப்பெண்கள் தேவையில்லை என்று கூறியிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ், மேற்கண்ட குருகுலங்களில் இருந்து வரும் மாண வர்களுக்கு அனைத்து விதமான நிதிஉதவியும் தாராளமாக வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதாவது, முறையான கல்விப் பட்டங்களைப் பெறாத மாணவர்கள் கூட, அங்கீகரிக்கப்பட்ட தகுதி களைப் பெறவும், முதன்மையான ஐ.ஐ.டி.களில் ஆராய்ச்சிப்படிப்புக்காக தாராளமாக கல்வி உத வித்தொகைகளைப் பெறவும் வாய்ப்பளிக்கிறது, இது ‘மாணவர் மேம்பாட்டுத் திட்டம்’ எனக் கூறப் பட்டுள்ளது. திட்டத்தின் விரிவான அம்சங்கள் ஜூலை 29 தேதியிட்ட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் வந்துள்ள தகவல்களின்படி, இந்தத் திட்டம், “கல்வி அமைச்சகத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்டு, மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் ‘இந்திய அறிவு அமைப்பு’ (Indian Knowle dge System) என்னும் பிரிவால் செயல்படுத்தப்படு கிறது. இது ஆயுர்வேதம் முதல் அறிவாற்றல் அறி வியல் (cognitive science) வரை, கட்டடக்கலை முதல் அரசியல் கோட்பாடு வரை, இலக்கணம் முதல் உத்தி சார் ஆய்வுகள் (strategic studies) வரை, நிகழ்த்துக் கலைகள் (performing arts) முதல் கணிதம், இயற்பியல் மற்றும் சுகாதார அறிவியல் வரை, என சுமார் 18 இடைநிலைத் துறைகளுக்கு மாதத்திற்கு 65 ஆயிரம் ரூபாய் வரை ஆய்வுதவித் தொகை (fellowship) வழங்குகிறது. தரநிலைகளில் முரண்பாடு ஆராய்ச்சிப் படிப்புகளில் சேருவதற்கான அடிப்ப டைத் தகுதி, 10+2+3+2 ஆண்டுகள் பெறும் உயர்நிலைப் பள்ளி மற்றும் உயர்கல்வி ஆகும். மேலும் இந்த 17 ஆண்டு கால கடுமையான அறிவியல் படிப்புக ளுக்கு மேல், ஆராய்ச்சியில் தரத்தை தரப்படுத்துவ தற்கு தேசியத் தகுதித் தேர்வின் மதிப்பெண்களை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியது. இவ்வாறு கட்டாயமாக்கிய இதே ஒன்றிய அரசாங் கம்தான் இப்போது, அங்கீகரிக்கப்பட்ட குரு குலத்தில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் படித்து, சாஸ்திரங்கள் அல்லது பாரம்பரிய அறிவில் சிறந்து விளங்கினாலே, அவர்களும் ஆராய்ச்சிப் படிப்புக ளில் சேர அவை போதுமானது என்று கூறுகிறது. சாதிய அரசியலின் புதிய முகம் பிஎச்டி சேர்க்கைக்கு தேசியத் தகுதித் தேர்வைக் கட்டாயப்படுத்தியிருப்பதன் மூலம் படிப்பைத் தொடர முடியாமல் யார் வெளியேறுவார்கள்? சேது பந்த வித்வான் யோஜனா என்னும் வியக்க வைக்கும் விசித்திரமான திட்டத்தின் மூலம் யார் பயன் அடைவார்கள்? சாதி, வர்ணாஸ்ரம அமைப்பு முறையின் கீழ் பிளவுபட்டுள்ள சமூகத்தில் ஒன்றிய அரசாங்கத்தின் இவ்விருவகை அணுகுமுறையானது உண்மையில் ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டத்திற்கே பங்களிப்பினைச் செய்துள்ளது. தேசியத் தகுதித் தேர்வு கொண்டுவந்ததன் மூலம் சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருந்த அடிமட்ட அடுக்கில் சிக்கித் தவிப்ப வர்களிலிருந்து வரும் மாணவர்கள், ஆராய்ச்சிப் படிப்பில் சேர்வது என்பது மிகவும் கடினமாகும். அதா வது இந்த தேசியத் தகுதித் தேர்வு ஏழை மற்றும் விளிம்புநிலை பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களை வடிகட்டிவிடும். அதே சமயத்தில், சமூகத்தின் உயர்மட்டப் பிரிவு களைச் சேர்ந்த மாணவர்கள் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்வதற்கான வாய்ப்புகளை தேசியத் தகுதித் தேர்வு அதிகரிக்கிறது. சேதுபந்த வித்வான் யோ ஜனா, வேத சாஸ்திரங்களின் மீது அதிகாரம் கொண்ட தாகக் கூறும் ஒரு குறிப்பிட்ட - சமஸ்கிருதம் தெரிந்த பிரிவினருக்கு, ஐ.ஐ.டி.களில் அவர்கள் விரும்பும் ஆராய்ச்சிப் படிப்புக்கான வாய்ப்புகளை தங்கத் தட்டில் வைத்து வழங்கி இருக்கிறது. அந்தப் பிரிவு யார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். குருகுலக் கற்றல் முறையின் வரலாற்றுப் பின்னணி குருகுலக் கற்றல் முறை என்பது வேத காலத்தில், அதாவது கி.மு.1500 வாக்கில் தோன்றியதாகக் கூறப்படும் ஒரு பண்டைய கற்றல் முறையாகும். இது வாய்மொழி மரபை அடிப்படையாகக் கொண்டது. மனப்பாடம் செய்வது, பாராயணம் செய்வது போன்ற வற்றில் கவனம் செலுத்தும் முறையாகும். இது பிராம ணரல்லாதவர்களை கல்வி கற்பதிலிருந்து வெளிப்படையாக விலக்கி வைத்தது. சாதி மற்றும் வர்ணாஸ்ரம அமைப்பின் கொடுமைகளுக்கு ஏகலைவன் -துரோணாச்சாரியார் கதை நம்முன் உள்ள ஒரு வலுவான சான்றாகும். குருகுலக் கல்வி மற்றும் அறிவியல் தரத்தின் சீரழிவு குருகுலப் படிப்பிற்கு மொழி, இலக்கணம், சில அறிவியல் மற்றும் கணிதம் போன்றவற்றை உள்ள டக்கிய பல்வேறு பாடங்கள் இருப்பதாகக் கூறப் பட்டாலும், இவற்றுடன் மந்திரங்களை மனப்பாடம் செய்தல், மந்திரங்களை உச்சரித்தல் போன்றவை யும் குருகுலங்களில் கற்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த மந்திரங்களை மனப்பாடம் செய்து குரு குலத்தில் ‘கற்பவர்களை’ ஐ.ஐ.டி.களின் ஆராய்ச்சிப் பகுதிகளுக்குள் அனுமதிப்பது என்பதன் பொருள், கல்வி மற்றும் ஆராய்ச்சியில், குறிப்பாக பொறியி யல் மற்றும் தொழில்நுட்பத்தில், ஐ.ஐ.டி.கள் இது வரை அடைந்துள்ள உலகளாவிய தரத்தை இழக்கச் செய்வதற்கே இட்டுச்செல்லும். இது இந்தியாவின் ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மனித மூலதனத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திடும். இது நாட்டின் தொழில் துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்திடும். அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை நமது இந்திய அரசமைப்புச்சட்டம், ஒவ்வொரு குடிமகனின் அறிவியல் மனப்பான்மையையும் வளர்ப்பதை அடிப்படைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 51A(h)-ஆவது பிரிவு, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் “அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், விசாரணை மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று கட்டளையிடுகிறது. இந்த ஆணை பகுத்தறிவு சிந்தனை, விமர்சன ரீதியான விசாரணை (critical inquiry) மற்றும் அறிவியல் முறைகள் மூலம் அறிவியல் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ்.சின் இந்திய அறிவு அமைப்பு எனினும், ஆர்.எஸ்.எஸ்./பாஜக தன்னுடைய 2020 தேசியக் கல்விக் கொள்கை மூலமாக தற்போதுள்ள அறிவியல் அமைப்பு முறையை அரித்து வீழ்த்தி விட்டு, இந்திய அறிவு அமைப்புகள் மூலம் தங்கள் மனுவாத சமூகத்தை, பகுத்தறிவற்ற மற்றும் சமத்து வமற்ற சமூகத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறது. இதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் நூறாண்டு கால கனவாகும். மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பல்க லைக்கழகம், தெற்காசியாவின் முதல் மகளிர் பல்க லைக்கழகம் என்று தன்னைக் கூறிக் கொள்கிறது. இது 1916இல் நிறுவப்பட்டது. இது 2020 தேசியக் கல்விக் கொள்கையின்படி “இந்திய அறிவு முறை யின் ஆரம்பம்” என்ற இளங்கலைப் பாடத்திற்கான பாடத்திட்டத்தை வகுத்துள்ளது. வேத தர்மம் மற்றும் ஷத் தரிசனம் (இந்து மதத்திற்குள் இந்திய தத்து வத்தின் ஆறு மரபுவழி பள்ளிகள்), வாஸ்து-வித்யா ஆகியவை இந்தப் பாடத்திட்டத்தில் பொதிந்துள்ள கற்றல் பாடங்கள் ஆகும். எதிர்காலத்தின் அபாயகரமான திசை நமது கல்வி, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவ னங்களில் ‘இந்திய அறிவு அமைப்புகளை’ அனு மதிப்போமானால், எதிர்காலத்தில் நமக்கு என்ன காத்திருக்கின்றன என்பதை இவை காட்டுகின்றன. உயர்கல்வி பாடத்திட்டத்தில் “இந்திய அறிவு அமைப்புகளை” இணைப்பதற்கான வழிகாட்டுதல் கள் 2023 ஜூனில் வெளியிடப்பட்டன. இளநிலை அல்லது முதுநிலை திட்டத்தில் சேரும் ஒவ்வொரு மாணவரும் மொத்த கிரெடிட்டுகளில் குறைந்தது 5 சதவீதம் ‘இந்திய அறிவு அமைப்புகளில் உள்ள கிரெடிட் படிப்புகளை எடுக்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அது பரிந்துரைத்திருக்கிறது. இதன் பொருள் என்ன? இளநிலை/முதுநிலை திட்டத்தில் சேரும் ஒவ்வொரு மாணவரும் ‘இந்திய அறிவு அமைப்பு’ என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ்.சின் தத்துவத்தைக் கற்க வேண்டும். அதன் அணியில் சேர்வதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதாகும். இவ்வாறு 2014 முதல் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பாஜக அரசாங்கம், இந்து ராஷ்டிரத்தை நிறுவுவதற்கான நிகழ்ச்சி நிரலை அமல்படுத்திட வெறித்தனமாக ஈடுபட்டு வரு கிறது. மனுஸ்மிருதி மற்றும் இந்து ராஷ்டிரத்தின் கனவு ஆர்.எஸ்.எஸ்.க்கு சித்தாந்த அடித்தளங்களை அமைத்த எம்.எஸ். கோல்வால்கர், மனு (அ) தர்மத்தை உருவாக்கிய மனுவை ‘உலகின் முதல் மற்றும் மிகச்சிறந்த சட்டத்தை உருவாக்கியவர்’ என்று பாராட்டியபின்னர், உலகில் உள்ள அனை வரும் இந்துயிசத்திற்கு மாறி, இந்த மண்ணில் பிறந்த மூத்த குடியினரான பிராமணர்களின் புனித காலில் விழுந்து தங்கள் கடமைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறார். டாக்டர் அம்பேத்கராலும், அரசியல் நிர்ணயசபை யாலும் நிராகரிக்கப்பட்ட மனுஸ்மிருதிதான் இந்தியாவின் அரசமைப்புச்சட்டமாக அமைக்கப் பட்டிருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். வலி யுறுத்துகிறது. அரசமைப்புச்சட்டத்தின் மதச்சார் பற்ற தன்மையால் வருத்தமடைந்த எம்.எஸ். கோல் வால்கர், இந்திய அரசமைப்புச்சட்டம் “பாரதமற்றது” (“unbharat”) என்று பகிரங்கமாகவே புலம்பினார். இப்போது, தேசியக் கல்விக் கொள்கை மூலமாக ஆர்.எஸ்.எஸ்./பாஜக அரசாங்கம், மனுஸ்மிருதி யின் அடிப்படையிலான ஓர் இந்து ராஷ்டிரமாக, அதா வது நவீன தாராளமயத்தின் தேவைகளுக்கு ஏற்ற மற்றும் அதற்கு வளைந்துகொடுக்கக்கூடிய ஒரு வர்ணாஸ்ரம சமூக அமைப்பை உருவாக்கிட இந்தி யாவை இழுத்துச்சென்று கொண்டிருக்கிறது. எதிர்த்துப் போராடுவது காலத்தின் கட்டாயம் ஒரு நாட்டின் கல்விக் கொள்கை அதன் இளைஞர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் எதிர் காலத்தையும் தீர்மானிக்கிறது. மேலும், கல்வி என்பது இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பொதுப் பட்டியலில் (concurrent list) உள்ள ஒன்றாகும். எனினும் ஒன்றிய பாஜக அரசாங்கம் தேசியக் கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவோ அல்லது மாநில அரசாங்கங்களுடன் கலந்தாலோசனைகள் மேற்கொள்ளவோ இல்லை. இந்தியாவில் உள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் ஆர்.எஸ்.எஸ்.சின் இத்தகைய சூழ்ச்சித் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை இடைவிடாது நடத்திட தங்கள் முழு பலத்தையும் திரட்ட வேண்டும். ..

Sunday, February 16, 2025

ஒரு புரட்சியாளனின் பயணங்கள்-சௌகத் உஸ்மானி

ஒரு புரட்சியாளனின் பயணங்கள்-சௌகத் உஸ்மானி - ச.வீரமணி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கு முன்பே, நாட்டில் ஆட்சி செய்துவந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக நாடு முழுதும் பல்வேறு மையங்களில் பல்வேறு தோழர்கள் செயல்பட்டுவந்திருக்கின்றனர். அவர்களில் தோழர் சௌகத் உஸ்மானியும் ஒருவராவார். சௌகத் உஸ்மானி பிறந்த தேதி தெரியவில்லை. எனினும் அவர் ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் 1901இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. அவரது இயற்பெயர் மௌலா பக்ஷ் என்பதாகும். பின்னர் அவர் மௌலான சௌகத் அலி அவர்களின் தீவிர அபிமானியாக மாறியதால் தன் பெயரை சௌகத் உஸ்மானி என மாற்றிக்கொண்டார். 1917இல் நடைபெற்ற மாபெரும் அக்டோபர் புரட்சி, அநேகமாக அனைத்து ஒடுக்கப்பட்ட மற்றும் காலனியாதிக்க நாடுகளிலும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களின் மீது ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த சமயத்தில், ரஷ்யாவில் தொழிலாளர்கள்-விவசாயிகளின் செம்படை பெற்றிட்ட அற்புதமான வரலாற்றுச்சிறப்புமிக்க வெற்றிகள் சௌகத் உஸ்மானியிடம் மிகவும் எழுச்சியினையும் ஆர்வத்தினையும் ஏற்படுத்தியது. இதன் பாதிப்பின் காரணமாக சோவியத்யூனியனில் நடைபெற்றதைப்போல ஒரு செம்படைப் புரட்சியை இந்தியாவிலும் நடத்த வேண்டும் என்று சௌகத் உஸ்மானி விருப்பம் கொண்டார். இதே போன்ற கருத்து கொண்ட இளைஞர்கள் 85 பேர் இந்தியாவிலிருந்து, சோவியத் யூனியனுக்கு நடந்தே சென்றுள்ளார்கள். இதனைத் தோழர் சௌகத் உஸ்மானி, ஒரு புரட்சியாளனின் பயணங்கள் (சோவியத் யூனியனில் சிறிதுகாலம் தங்கியிருத்தல்) என்ற பெயரில் பாரதி புத்தகாலாயம் வெளியிட்டிருக்கிறது. எங்களின் தமிழாக்கத்தில் வெளிவந்துள்ள அதிலிருந்து ஒரு சிறு பகுதியை, தங்கள் பார்வைக்காகச் சமர்ப்பிக்கிறோம். புரட்சிப் பாதையில் மீண்டும் பயணம் அடுத்த நாள் காலை, காலை உணவு உண்ட பின், நாங்கள் தங்கியிருந்த பெரிய கூரைக் குடிசையிலிருந்து வெளியேறினோம். ஆக்சஸ் (Oxus) ஆற்றின் வலதுகரைக்கு வந்தபின்னர், இத்தனை காலமும் அதனை மீண்டும் கடக்கவில்லை என்று எங்களுக்குத் தெரியுமாதலால், நாங்கள் எங்கள் வழியைச் சரியானமுறையில் தீர்மானித்துக்கொண்டோம். எங்களில் மிகவும் உயரமானவர் வெண்கொடியை ஏந்திய வண்ணம் முன்னே செல்ல, நாங்கள் வட திசை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினோம். விரைவில் மீண்டும், நாங்கள் ரஷ்யப் புரட்சியாளர்களுடன் இணைந்தோம். எங்களுக்காக இரு பெரிய தங்குமிடங்கள் (barracks) ஒதுக்கப்பட்டன. மீண்டும் நாங்கள் ஒரு வசதியான வாழ்க்கை என்றால் என்ன என்றும், அதையும் விட மேலாக, சுதந்திரம் என்றால் அதன் பொருள் என்ன என்றும் தெரிந்து கொண்டோம். ஏராளமான ரேஷன்கள், நல்ல உணவு, நட்பு, மற்றும் படிப்பதற்கு புரட்சிகரமான இலக்கிய நூல்கள்! மரண தண்டனைக் கைதிகளாக இருந்து, அடிமைகளாக மாறி, இப்போது பசிபிக்கிலிருந்து பால்டிக் வரையும், வெண்கடலிலிருந்து இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான், துருக்கியின் எல்லை வரை வியாபித்திருக்கும் மாபெரும் குடியரசின் விருந்தினர்களாக மாறி இருக்கிறோம். மீண்டும் பிளவு ரஷ்யப் புரட்சியின் முக்கியத்துவம், கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் மீது, அதிலும் குறிப்பாக எங்களில் அறிவுஜீவிகளாக இருந்தவர்கள் மீது, ஒளியைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது. சுதந்திரம் என்றால் என்ன என்று அதன் உண்மையான பொருளுடன் பார்த்தோம். எதிர்ப்புரட்சியாளர்களாலும், ஏகாதிபத்திய வாதிகளாலும் திணிக்கப்பட்ட வறுமை இப்போதும் நீடித்த போதிலும்கூட, மக்கள் முன்பு இருந்ததைவிட மகிழ்வுடனும், திருப்தியாகவும் இருந்தார்கள். புரட்சி அவர்கள் மத்தியில் நம்பிக்கையையும், அச்சமின்மையையும் விதைத்திருந்தது. ஐம்பது விதமான தேசிய இனத்தவர்கள் மத்தியில் இங்கே ஓர் உண்மையான மனிதகுல சகோதரத்துவத்தைப் பார்க்க முடிந்தது. சாதி, மதம் என எதுவும் அவர்கள் ஒருவர்க்கொருவர் சுதந்திரமாகக் கலந்து வாழ்வதில் தடையை ஏற்படுத்திடவில்லை. ஒவ்வொரு நபரும் சிறந்த பேச்சாளராக மாற்றப்பட்டிருந்தார்கள். ஒரு தொழிலாளி, ஒரு விவசாயி, அல்லது ஒரு படைவீரர் தலைசிறந்த விரிவுரையாளர் போன்று வீராவேசமாக உரையாற்றுவதை ஒருவர் பார்க்க முடியும். அங்கிருந்து எங்கள் “வீரதீர” செயல்கள் துவங்குவதற்கு முன், டிர்மிஷ்சில் எங்களில் இருந்த ஒரு குழுவினரிடம் தலைதூக்கிய பிளவு மீண்டும் தலைதூக்கியது. அவர்களில் சிலர், துருக்கிக்குப் போவதற்கு வசதி செய்து தர வேண்டும் என்று மீண்டும் நச்சரிக்கத் தொடங்கினார்கள். உள்ளூர் பொறுப்பாளர்கள் அவர்களிடம், இது தொடர்பாக முடிவு எடுப்பதற்கு எங்களுக்கு உரிமை இல்லை என்றும், இதை தாஷ்கண்டில் உள்ள மத்திய நிர்வாகம்தான் தீர்மானித்திட முடியும் என்று கூறியும் அவர்கள் கேட்கத் தயாராயில்லை. நாங்கள் அவர்களிடம், என்ன நடந்தாலும் சரி, உங்களுடன் வர நாங்கள் தயாரில்லை என வெளிப்படையாகவே தெரிவித்து விட்டோம். அடிமைகளாக இருந்த சமயத்தில் கடவுள் கிருபையால் நாம், மீண்டும் போல்ஷ்விக்குகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டால், அவர்களின் அறிவுரையை மீறி மீண்டும் எதுவும் செய்யமாட்டோம் என்று உறுதிமொழி அளித்ததை அவர்களுக்கு நினைவு கூர்ந்தோம். எனினும் அனைத்தும் வீணானது. பின்னர் நாங்கள், எங்கள் அணுகுமுறையில் பொதுவான அம்சம் இல்லை என்கிற முடிவுக்கு வந்தோம். செஞ்சேனையில் இணைந்தோம் ஒரு சில தினங்களில், துர்க்மேன் எதிர்ப்புரட்சியாளர்கள் அவர்களின் கடைசி சண்டைக்குத் தயாரானார்கள். அவர்கள் கெர்கியைச் சுற்றியுள்ள அனைத்து திசைகளிலிருந்தும் திரண்டு வந்தார்கள். கெர்கியை முற்றுகையிட்டார்கள். ஆற்றங் கரையிலிருந்து நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு ஒரு வீரரின் சடலத்தைக் கொண்டுவந்ததை நாங்கள் பார்த்தோம். துருக்கிக்கு வெளியேறத் துடித்துக்கொண்டிருந்தவர்கள் ‘நாமும் ரஷ்யர்களுடனும், சிவப்பு துர்க்மேனியர்களுடன் இணைந்து, எதிர்ப்புரட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வேண்டும்’ என்று கோரியதை ஏற்க மறுத்தார்கள். ஐயகோ! எங்கள் அறிவுரையை மீறிச் சென்ற அக்குழுவிலிருந்தவர்களில் பத்து பேரை நாங்கள் இழந்துவிட்டோம். சிலர் எதிர்ப்புரட்சி யாளர்களால் சிறைப்படுத்தப்பட்டிருந்தபோது கொல்லப் பட்டார்கள். இருவர் மட்டும் ஆப்கானிஸ்தானுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக அறிந்தோம். இவ்வாறு இவர்களுடன் ஒத்துப்போகாத நாங்கள், எங்களில் 36 பேர், ஆயுதமேந்த எங்கள் விருப்பத்தினைத் தெரிவித்தோம். எங்கள் பிரதிநிதிகள் புரட்சிக் குழுவின் தலைவரை அணுகினார்கள். அவர் எங்கள் முடிவைப் பாராட்டினார். ஆற்றின் முன்புரத்தில் சண்டையிட நாங்கள் நியமிக்கப்பட்டோம். நகரின் கோட்டை வாசலின் முன்பாக ஐயாயிரம் எதிர்ப்புரட்சியாளர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். ஆற்றின் மறுபக்கத்தில் மூவாயிரம் பேர் நின்று கொண்டிருந்தார்கள். கோட்டைமுன் நின்று கொண்டிருந்த ஐயாயிரம் பேர் சார்பில் சமிக்ஞை கிடைத்தவுடன் தாக்குவதற்குத் தயாரான நிலையில் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால், எங்கள் பக்கத்தில் ரஷ்யர்களும், சிவப்பு துர்க்மேன்களும் 300 பேர் மட்டுமே இருந்தோம். நகரம் மிகப்பெரிய ஒன்றுதான். சுமார் 20 ஆயிரம் பேர் வாழ்ந்து வந்தார்கள். எனினும், அந்த சமயத்தில் பிற்போக்கு மற்றும் அமீர் ஆதரவு பிரச்சாரத்தை முல்லாக்களும், அவருடைய ஏஜண்டுகளும் செய்து கொண்டிருந்ததால், மக்களின் மனோபாவத்தை அந்த சமயத்தில் சரிவரத் தீர்மானிக்க முடியவில்லை. ஆற்று முனையைப் பாதுகாப்பதற்கு மிகப்பெரிய அளவில் போர்த்தந்திரம் தேவைப்பட்டது. நிலைமைகளை மிகவும் திறமையான முறையில் கையாள வேண்டியிருந்தது. இதில் ஏதேனும் தோல்வி எற்பட்டால், நாங்கள் உயிரிழப்பதுடன் மட்டுமல்லாது, பாதுகாப்பு அரணையும் இழக்க வேண்டி வரும். ஆனால் நாங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் 36 பேரும் பலதரப்பட்டவர்கள். எங்கள் போர்த்திறனும் உண்மையில் பெரிய அளவிற்குப் பரீட்சித்துப்பார்த்த ஒன்றுமல்ல. எனினும், எங்களுக்கு வேறு எந்த வழியும் கிடையாது. ஒன்று போரிட்டு சாக வேண்டும், அல்லது எங்கள் கண் முன்னாலேயே நகரம் சூறையாடப்படும். நாங்கள் பிற்போக்குவாதிகளின் கைகளில் வீழ வேண்டும். அதன்மூலம் நாங்கள் ஓர் இழிவான மற்றும் கோழைத்தனமான மரணத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேலும், அக்டோபர் புரட்சியின் லட்சியத்திற்காகவும், போல்ஷ்விக்குகள் மற்றும் முற்போக்கு பொகாரன்களுடன் இணைந்து உலகில் விடுதலையை நேசிக்கும் அனைத்து மக்களின் லட்சியத்திற்காகவும் போராட வேண்டும் என்று நாங்கள் வாதிட்டோம். இப்போது நாங்கள் அங்கே இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. புரட்சியாளர்களுக்கு என்ன நடக்குமோ அதை நாங்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும். எனவே, நாங்கள் எங்கள் படைப்பிரிவை அமைத்தோம். புரட்சிக் குழுவின் தலைவரிடம் எங்களின் கடைசி ரத்தம் உள்ளவரைக்கும் எதிர்ப்புரட்சியாளர்களுக்கு எதிராகப் போராடத் தீர்மானித் திருக்கிறோம் என்று கூறினோம். எங்களின் வைராக்கிய உணர்வு ரஷ்யர்கள் மற்றும் இதர தோழர்களின் மத்தியில் தார்மீக ரீதியாக சாதகமான விளைவை ஏற்படுத்தியது. நாம் தனியாக இல்லை என்கிற உணர்வை அவர்களுக்குக் கொடுத்தது. ஒட்டுமொத்த ஆற்றின் முனையையும் பாதுகாத்திட உறுதிபூண்டோம். எங்களுக்கு துப்பாக்கிகளும், கைத்துப்பாக்கிளும் அளிக்கப்பட்டன. எங்களின் மிகவும் குறைவான லக்கேஜ்களை எங்களுடன் எடுத்துக்கொண்டு, ஆற்று முனையில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்றோம். அங்கே, நாங்கள் எங்கள் படைப் பிரிவுகளை தலா 18-18 பேராகப் பிரித்துக்கொண்டோம். ஆற்றுமுனையில் எங்கள் படைப்பிரிவின் நடவடிக்கைகள் குறித்து எழுதுவது தற்புகழ்ச்சி போன்று தோன்றக்கூடும். கடுங்குளிர் மற்றும் சூறைக்காற்றுடன் செப்டம்பர்-அக்டோபர் மழையில் நனைந்துகொண்டு, மறைகுழிக்குள் வாழ்க்கை நடத்தினோம் என்கிற ஒரேயொரு விஷயத்தை மட்டும் என்னால் கூறாமல் இருக்க முடியாது. அது, உற்சாகம் அளிக்கக்கூடியதாகவும், எளிதாகவும் இல்லைதான். எனினும், மிகவும் விறு விறுப்பாகவும், எழுச்சியூட்டக்கூடிய விதத்திலும் இருந்தது. மாபெரும் அக்டோபர் புரட்சிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம் என்கிற திருப்தி எங்களுக்கு இருந்தது. ரஷ்யத் தோழர்கள் அளித்த இந்த சலுகைக்காக நாங்கள் மிகவும் பெருமிதம் கொண்டோம். கெர்கி புரட்சிக்குழுவின் தலைவர் எங்கள் தலைமையகத்திற்கு அடிக்கடி வந்து சந்தித்தார். வரும்போதெல்லாம் எங்களை மிகவும் பாராட்டிவிட்டுச் சென்றார். ஒருநாள் காலை, நான் ரோந்துப் பணியிலிருந்தபோது, ஒரு படகின் அருகில் ஒருவன் தன் கால், கை, முகத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். படகின் அருகில் அவன் வெகுநேரம் நின்றதும், அந்தப் படகை அவிழ்ப்பதற்காக அவன் மிகவும் சிரமப்பட்டதும், எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. நான் உதவிக்காக சீழ்க்கை ஒலியை ஏற்படுத்தினேன். பின் நான் என்னுடைய துப்பாக்கியுடன் சுடத் தயாரான நிலையுடன் அவனை அணுகினேன். “நீ நிற்கும் இடத்தைவிட்டு நகராதே,” என்று அவனை எச்சரித்தேன். அவன் ஆரம்பத்தில் ஓட எத்தனித்தான். ஆனால், பின்னர் மனம்மாறி அங்கேயே நின்றுவிட்டான். இந்த சமயத்தில் மற்றொரு வீரரும் (இப்போது நாங்கள் எல்லாம் வீரர்கள்) எனக்கு உதவுவதற்காக வந்து சேர்ந்தார். அவனை சோதிப்பதற்காக அவனிடம் சென்றேன். அவனுடைய டிரவுசர் பாக்கெட்டில் ஒரு கடிதம் வைத்திருந்தான். அந்தக் கடிதம் துர்க்மேன் மொழியில் இருந்ததால் எங்கள் எவராலும் அதனைப் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னர் அவனைக் கைது செய்து புரட்சிக் குழுவின் தலைவரிடம் ஒப்படைத்தோம். அந்தக் கடிதத்தின் வாசகம், பொகரான் கமிசாரால் மொழிபெயர்த்து அவருக்குக் கூறப்பட்டது. அதில் உள்ள வாசகங்கள் என்ன என்று தெளிவானவுடனேயே அவர் எங்களிடம் வந்தார். எங்களை உயரத் தூக்கி, சந்தோஷத்திற்கிடைய, “இந்தியத் தோழர்கள் நீடூழி வாழ்க!” “இந்திய சுதந்திரத்திற்கான லட்சியம் வெற்றி பெறட்டும்!” “கெர்கி பாதுகாப்பாளர்கள் நீடூழி வாழ்க!” என முழக்கமிட்டார். எங்களுக்கு ஒரே திகைப்பு. இது எங்களை மிகவும் தடுமாற்றத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. பொகாரா கமிசார் எங்களிடம் அந்தக் கடிதம் ஒரு பிற்போக்குக் குழுவால் எழுதப்பட்டது என்று தெரிவித்தார். அதிலிருந்த வாசகங்கள் கிட்டத்தட்ட கீழ்வருமாறு அமைந்திருந்தது: “நீங்கள் இங்கே மூவாயிரம் பேர் இருக்கிறீர்கள். அங்கே உங்களுக்கு எதிராக இந்தியர்கள் 36 பேர் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நீங்கள் பயந்து சாவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? ஒருசில இந்தியர்களின் போர்த்தந்திரம் உங்களின் வீரத்தை காலாவதியாக்கி இருக்கிறது. வாருங்கள்: நாங்கள் உங்களுக்காகத் தயாராயிருக்கிறோம். 36 இந்தியர்களுக்கு எதிராக நீங்கள் 72க்கும் மேற்பட்டவர்களை அனுப்பவேண்டிய தேவையில்லை. நகரம் உங்கள் வசப்படும்.” அக்டோபர் பதினைந்து தேதி வரையிலும் நாங்கள் மறை குழிக்குள் இருந்தோம். அப்போது சிறிய, நீராவிப் படகு வந்து, எங்கள் பக்கத்தில் நங்கூரமிட்டது. படகின் குழுவினர் மிகவும் குறைவுதான். எனினும் அதன் உயரத்தில் ஒரு துப்பாக்கி (gun on board) இருந்தது. இந்த சமயத்தில் செஞ்சேனையினர் தெற்கு துர்கிஸ்தானில் எதிர்ப்புரட்சியாளர்களுக்கு எதிராக அனைத்துப் பக்கங்களிலிலிருந்தும் தாக்குதல் தொடுக்கத் தொடங்கி இருந்தார்கள். எதிர்ப்புரட்சியாளர்கள் சரண் எதிர்ப்புரட்சியாளர்களின் எதிர்ப்பு அடித்துநொறுக்கப்பட்டது. அனைத்து முனைகளிலும் அவர்கள் சரணடைந்தார்கள். புரட்சிக்குழு துரிதமாகச் செயல்பட்டு தவறாக வழிநடத்தப்பட்ட விவசாயிகளை வென்றடையும் விதத்தில் அனைவருக்கும் பொது மன்னிப்பு அறிவித்தது. இரண்டே வாரங்களுக்குள், சண்டையிட்டவர்கள் நண்பர்களாக மாறினார்கள். சோவியத் அதிகாரம், அமீரின் நுகத்தடியிலிருந்தும், தங்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டிருந்த நிலப்பிரபுக்களின் சுரண்டலிலிருந்தும் முழுமையாக விடுவித்திடுவதற்காகவே இருக்கிறது என்பதை துர்க்மேன்கள் உணர்ந்துகொள்ள அதிக காலம் பிடிக்கவில்லை. புரட்சி எதற்காக என்று அவர்களுக்குத் தெரிந்தபின்னர், அவர்கள் அதனை எதிர்க்க விரும்பவில்லை. அவர்கள் மனந்திருந்தி திரும்பி வந்தார்கள். கொஞ்ச காலத்திற்கு முன்பு குண்டுகள் பொழியும் சத்தத்தைத்தவிர வேறெதுவும் கேட்காது, போர்க்களம் போல் காட்சியளித்த கெர்கியும், டிர்மிஷ்சும் மீண்டும் ஒருமுறை அமைதிப் பகுதியாக மாறியது. பொகாராவிற்காகப் புறப்பட்டோம் என் நினைவு சரியாக இருக்கும்பட்சத்தில், நாங்கள் போர்முனையில் சுமார் ஒரு மாத காலம் இருந்தோம். அக்டோபரின் இறுதியில் (சற்று முன்னதாகக் கூட இருக்கலாம்) வலுவான படைப்பிரிவுகள் அங்கே வந்து சேர்ந்தன. பின்னர் எங்கள் பணிகள் விட்டொழிக்கப்பட்டது. தாஷ்கண்டுக்குக் செல்வதற்குத் தயாராக இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம். ஆக்சஸ் வழியே ஓர் உற்சாகமான பயணத்தை மேற்கொண்டோம். கெர்கியில் எதிர்ப்புரட்சியாளர்களுக்கு எதிராக ஆற்றின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சமயத்தில் எங்களுக்குப் பக்கபலமாக வந்து நங்கூரமிட்டு நின்ற அதே நீராவிப்படகுதான், எங்களை வடக்குப் பக்கமாக இழுத்துச் சென்றது. நாங்கள் போகும் வழியில் கிராமப்புறங்களில் மிச்சமீதமிருந்த எதிர்ப்புரட்சி சக்திகளைக் கண்டறிந்து, களையெடுக்கும் பணியைச் செய்து கொண்டே சென்றோம். செஞ்சேனைத் தோழர்கள் திருப்தியுறும் விதத்தில் நாங்கள் எங்கள் கடமைகளைச் செய்தோம். பயணத்தின் இரண்டாம் நாளன்று மாலை, நாங்கள் சர்ஜூயி (Charjui) போய்ச் சேர்ந்தோம். இங்கே எங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ இசைக்குழுவினர் எங்களை வாழ்த்தி முழங்கிக் கொண்டிருந்தன. மக்கள், “கெர்கியைப் பாதுகாத்த வீரர்கள் நீடூழி வாழ்க” என்று வீறாவேசத்துடன் முழக்கமிட்டார்கள். சர்ஜூயியில் இரண்டு நாட்கள் தடபுடலாக விருந்து. நாங்கள் இந்த நகரை விரும்பினோம். ஒரு திரைப்படத்திற்கும் போகத் திட்டமிட்டிருந்தோம். எனினும், திடீரென்று, மேற்கொண்டு பயணத்தைத் தொடங்க தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டோம். இந்த அழகான நகரத்தில் மேலும் கொஞ்ச நேரம் இருப்பதற்கு விரும்பினோம். எனினும் பெரிய மசூதிகள், தங்கம் பதித்த கூம்பு வடிவத்திலிருந்த தேவாலயங்கள், பூங்காக்கள், தியேட்டர்கள் நிறைந்த இந்த நகரத்தை விட்டு புறப்பட்டோம். எங்களை உடனடியாகப் புறப்படச் செய்ததற்கான காரணம், தாஷ்கண்ட் அதிகாரிகளிடமிருந்து வந்த ஒரு தந்தியாகும். அதில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக எங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. பொகாரா நிர்வாகம், தாஷ்கண்ட் மத்திய அதிகாரக் குழுமத்திடம் எங்களை எமிரேட் வீழ்ந்த பின் இடைக்கால நகரமாக விளங்கும் அந்த நகரத்தில் தங்கியிருக்கும் சமயத்தில் நடைபெறும் விழா வைபவங்களைக் கண்டு களித்திட அனுமதித்திடுமாறும் கேட்டுக் கொண்டிருந்தது. தாஷ்கண்ட் தாஷ்கண்டில் நாங்கள் சந்தித்த இந்தியர்களுக்கு இரண்டு இல்லங்கள் இருந்தன. இந்தியன் இல்லம் மற்றும் பொகாரா இல்லம். எம்.என்.ராய், அபானி முகர்ஜி, சஃபீக் (Shafique), முகமது அலி (பின்னர் இவர் சிபாசி (Sepasi) என்னும் புனைபெயரால் அறியப்பட்டார்) ஆகியவர்களும் மற்றும் சில சோவியத் தோழர்களும் பொகாரா இல்லத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இந்த இல்லம் முன்பு பொகாராவின் அமீரின் பிரதிநிதிகளுக்கான இல்லமாக இருந்தது. இப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் தலைமையின் இல்லமாக இருந்தது. எங்களை இந்தியன் இல்லத்தில் (Indiiski Dom) தங்க வைத்தார்கள். இங்கே, மௌலானா அப்துல் ரப் (Maulana Abdul Rab), எம்.பி.டி.ஆச்சார்யா, அமின் சித்திக் மற்றும் பரூக்கி என்பவர்கள் தங்கி இருந்தார்கள். அன்று மாலை இந்தியன் இல்லத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. எம்.என்.ராய் மற்றும் அபானி முகர்ஜி அதில் உரையாற்றினார்கள். இங்கே தங்கள் குழு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்து அவர்கள் விரிவாகப் பேசினார்கள். பின்னர் எங்களிடம் ‘நீங்களும் எங்களுடன் இணைந்துகொள்ள விருப்பமா’ எனக் கேட்டார்கள். இந்தியாவில் எப்படி வேலையைத் திட்டமிடுவது என்பது குறித்து ராய் அளித்த யோசனைகளை, எங்கள் குழுவிலிருந்த பலர் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அவருடன் இணைந்தனர். நானும், அக்பர் கான் குரேஷியும், அப்துல் மஜீத்தும் மற்றும் சிலரும் நடுநிலை வகித்தோம். நாங்கள், ராயிடம், “உங்களுடைய முன்மொழிவினை ஆராய்ந்துபார்த்து பின் உங்கள் குழுவில் சேர்ந்துகொள்வோம்,” என்றோம். ராய், மார்க்சியம் குறித்து ஆழமான அறிவினைப் பெற்றிருந்தார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் (Comintern-Communist International) இந்தியப் பிரிவுக்குப் பொறுப்பு வகித்தார். நாங்கள், மௌலானா அப்துல் ரப் தலைமையிலான குழுவைக்காட்டிலும், ராய் தலைமையிலான குழுவிடம் அதிக சாய்மானம் கொண்டோம். ஆச்சார்யா, அதிக காலம் அண்டிஜானில் (Andijan) இருந்தார். அங்கே அவர் கஷ்காரி புரட்சியாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அவ்வப்போது தாஷ்கண்டுக்கு வந்து சென்றார். மேலும், இந்தியப் போராளிகளுக்கு செஞ்சேனையின் உதவி கிடைப்பதற்குரிய சரியான சந்தர்ப்பம் வாய்த்திருப்பதாக எங்களிடம் ராய் நம்பிக்கை ஏற்படுத்தியிருந்தார். இதுதான் அவரிடம் எங்களை அதிக அளவில் ஈர்த்ததற்கான காரணமாகும். ஆனாலும் ஆப்கானிஸ்தானத்தின் அமீர், சோவியத் தோழர்கள், அவருடைய நாட்டின் வழியே இந்தியா வருவதற்கு அனுமதி கொடுப்பதற்கு எதிராக இருப்பதாக, ராய் சொன்னார். இது, சோவியத் எல்லைக்குள் நுழைவதற்கு மேலும் இந்திய முஹாஜிரீன்களை அனுப்புவதற்கு அனுமதி மறுத்திருந்த ஆப்கன் அரசாங்கத்தின் அணுகுமுறைக்கு மிகவும் சரியாக ஒத்திருந்தது. ஆனாலும், ஆப்கன் அரசாங்கத்தின் நட்பற்ற அணுகுமுறை இவ்வாறு இருந்தபோதிலும், தாஷ்கண்டில் எங்களின் எண்ணிக்கை, சுமார் இரு ராணுவப் படைப்பிரிவுகளை அமைக்கும் அளவுக்கு அதிகரித்திருந்தது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைமையின் கீழ், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிமைத்தனத்திலிருந்து, இந்தியாவை விடுவிப்பதற்காக சுமார் 50 ஆயிரம் அல்லது 75 ஆயிரம் வீரர்களை அனுப்பிவைத்திட, சோவியத் ரஷ்யா ஒப்புக்கொண்டிருப்பதாக, இந்திய வட்டாரங்களில் செய்திகள் சுற்றிக்கொண்டிருந்தன. இதற்கிடையில் கம்யூனிஸ்ட் அகிலம் இந்தியப் புரட்சிக்காக சுமார் 14 மில்லியன் தங்க ரூபிள்கள் ஒதுக்கியிருந்ததாகவும், ராய்-ஆச்சார்யா கருத்துவேறுபாடுகளின் விளைவாக வெளிவந்த செய்திகள் தெரிவித்தன. இது வதந்தியா, வெட்டிப்பேச்சா அல்லது செய்தியா என்று என்னால் உறுதிப்படுத்தவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை. எனினும், கம்யூனிஸ்ட் அகிலம், இந்தியாவின் லட்சியத்திற்காக அளப்பரிய அளவில் உதவி இருக்கிறது என்பதையும், அதன் பொக்கிஷங்களின் சாவிகள் எம்.என்.ராயிடம் இருந்தன என்பதையும் என்னால் நம்பிக்கையுடன் கூற முடியும். தாய்நாட்டிற்கு வெளியே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயம் (Emigre Communist Party of India Founded) அக்டோபரின் இறுதியை இப்போது நெருங்கியிருந்தோம். தாய்நாட்டிற்கு வெளியே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை அமைப்பதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன. இத்தகைய துணிச்சலான நடவடிக்கைக்கான பிரதான முயற்சி ராய் மற்றும் முகர்ஜி தலைமையிலான குழுவிடமிருந்து வந்திருந்தது. என் நினைவு சரியாக இருக்குமானால், கட்சி 1920 நவம்பர் 7 அன்று அதிகாரபூர்வமாகத் துவக்கப்பட்டது. முகமது சஃபீக், கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர், ராஜா மகேந்திர பிரதாப், மௌலானா பரகதுல்லா மற்றும் காபூலில் ஒபீதுல்லா சிந்தி ஆகியோரால் நிறுவப்பட்டிருந்த தற்காலிக அரசாங்கத்தின் முன்னாள் உறுப்பினர். (a former member of the Provisional Government established by Raja Mahendra Pratap, Maulana Barkatullah and Obeidullah Sindhi in Kabul). நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சுமார் ஆறு மாத காலம் இணைந்துகொள்ளாமல் இருந்தேன். இதற்கான காரணம் மிகவும் எளிது. எனக்கு மார்க்சியம் என்றால் என்ன என்றே தெரியாது. என்னுடைய பிரதான குறிக்கோள், ஒரு ராணுவ வீரனைப்போல சண்டையிட வேண்டும் என்பது மட்டுமேயாகும். இந்தியாவை விடுவிப்பதற்கான போராளிகளில் ஒருவனாக இருக்க விரும்பினேன், அவ்வளவுதான். ராயுடன் நடைபெற்ற ஒரு சந்திப்பின்போது அவர், புரட்சிக்குழு அலுவலகத்திற்குச் சென்று, அங்கே ஒரு சிறு அலமாரியில் வைக்கப்பட்டிருந்த சில ஆங்கிலப் புத்தகங்களை எடுத்துவருமாறும், அவற்றைப் படிக்குமாறும் கேட்டுக் கொண்டார். அவருடைய அறிவுரையின்படி புரட்சிக்குழு அலுவலகத்திற்குச் சென்று, பாரசீக மொழியிலும், ஆங்கிலத்திலும் இருந்த சில பிரசுரங்களை எடுத்துக்கொண்டேன். அவற்றைப் படிக்கத் தொடங்கினேன். பூர்ஷ்வா (bourgeoisie), தொழிலாளி வர்க்கம் (புரலிடேரியட்) (proletariat), குட்டி-பூர்ஷ்வா (petty-bourgeoisie), தொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம், (dictatorship of the proletariat) போன்ற சொற்றொடர்கள் எனக்கு மிகவும் வேடிக்கையாகத் தெரிந்தன. இத்தகைய சொற்றொடர்களைப் படிக்கும்போதெல்லாம் என்னையறியாமலேயே எனக்குச் சிரிப்பு வந்ததை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் நடந்துகொள்ளும் விதத்தைக் கண்டு, என்னுடன் தங்கியிருந்தவர்களுக்கும் வேடிக்கையாக இருந்தது. ஒரு சமயம், தொழிற்சங்கவாதம் (trade unionism) குறித்து, படிக்குமாறு என்னை ராய் கேட்டுக்கொண்டபோது நான் சிரித்துவிட்டேன். நான் ஒன்றும் வர்த்தகம் (trade) புரிவதிலோ அல்லது தொழில் நடத்துவதிலோ (industry) ஆர்வம் உள்ளவன் இல்லை என்று அவரிடம் கூறினேன். இதைக்கேட்டதும் ராயும், அவருடைய அமெரிக்க மனைவியும் சிரிப்பை அடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இப்போது நாங்கள், எஸ்கி-ஷேஹரின் (பழைய நகரத்தின்) தெருக்களில் இயங்கத் தொடங்கினோம். அங்கே மக்களுடன் எங்களுக்குத் தெரிந்த பாரசீக மொழி மற்றும் துர்கிஷ் மொழிகளின் உதவியுடன், அவர்களுடன் கலந்துரையாடினோம். எங்கள் கருத்துக்களை ஆர்வத்துடன் கேட்டார்கள். லெனினிஸ்ட் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எங்கள் அறிவு நாளுக்கு நாள் வளரத்தொடங்கியது. புதிய பார்வை, புதிய தொலைநோக்கு என் கண் முன்னால் விரியத் தொடங்கின. என்னுடைய பார்வை, படிப்படியாக விசாலமடையத் தொடங்கியது. சொத்தின் பரிணாம வளர்ச்சி, மனிதனின் பரிணாம வளர்ச்சி, வரலாற்றுப் பொருள்முதல்வாதம் குறித்துக் கற்றுக்கொண்டேன். இப்போது நான் உண்மையிலேயே மார்க்சியத்தை ஆழமாகக் கற்கத் துவங்கினேன். படிப்பதில் நிறைய நேரத்தைச் செலவு செய்தேன். ஆழமான புத்தகங்களை மணிக்கணக்காகப் படித்தேன். புதிய சிந்தனைகளில் பொதிந்துள்ள உண்மைகளைத் தெரிந்துகொள்ளத் தொடங்கிய பின்னர் இதன் மீதான நம்பிக்கை மேலும் மேலும் அதிகரித்தது. நான் கற்ற புதிய கருத்துக்களை, இதர தோழர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினேன். மாணவனாக இருந்த நான், புதிய சிந்தனைகளின் பரப்புரையாளராக மாறினேன். இதைத்தான் ராய் என்னிடமிருந்து எதிர்பார்த்தார். . “…இப்போது அவருடைய பேச்சுக்கள் உடனடியாகப் புரிந்து, செல்வாக்கு செலுத்தத்தொடங்கியது. …” இன்னும் மனம்திறந்து சொல்லவேண்டுமென்றால், நான் இது தொடர்பாக கற்றுக்கொண்ட தத்துவார்த்த அறிவுடன் திருப்தியடையவில்லை. இதன் அடிப்படையில் உள்ளூரில் உள்ள மக்களையும் பார்க்க விரும்பினேன். புதிய சிந்தனைகள் குறித்து முஸ்லீம்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினேன். இருப்பினும், சூழ்நிலைகள் எங்களை எங்களின் ராணுவ ஆசைகளை மறந்துவிடுமாறு எங்களுக்கு நிர்ப்பந்தம் அளித்தன. மற்றவர்களின் கோஷ்டிச் சண்டைகளின் சுழல்களுக்குள் எங்கள் தனித்துவம் காணாமல் போய்விட்டது. நாங்கள் மெய்யாகவே அவர்களின் எரிபொருளாக மாறியிருந்தோம். மாபெரும் தத்துவவாதிகள் இந்தியப் புரட்சிக்கான தத்துவார்த்தப் பின்னணியைக் கட்டி எழுப்புவதுபற்றிய வாதங்களுக்குள் எங்களை அமிழ்த்திக் கொண்டிருந்தார்கள். இவ்வாறாக செஞ்சேனையின் உதவியுடன் இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்கிற கனவுகள் வெறும் கதையாக மாறியது. இதில் சோவியத் தோழர்கள் மீது எவ்விதத் தவறும் கிடையாது. மாறாக, இந்திய மண்ணில் பிறந்தவர்களால், எதிர்காலத்தில் இந்தியாவில் புரட்சியை முன்னெடுத்துச் செல்லக்கூடிய பரப்புரையாளர்களாக மாற்றப்பட்டு எங்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகளால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். இவ்வாறுதான், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் இந்திய பூர்ஷ்வாக்களின் கூட்டாட்சியைத் தூக்கி எறிவதற்காக நாங்கள் செம்பதாகைகளுடன் அணிவகுக்கப்பட்டுக் கொண்டிருந்தோம். இவ்வாறு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. மார்க்சியத்தைக் கற்கத் தொடங்கினோம்.” சோவியத் யூனியனில் சௌகத் உஸ்மானி கற்ற கல்வி, அவருக்குள்ளே மார்க்சிய-லெனினியத்தின் உண்மையான போதனைகளைப் படிப்படியாகப் புகட்டி அவரைத் தெளிவு படுத்தியது. அதன்பின்னர், சோவியத் யூனியன் அவருக்கு உத்வேகமூட்டும் ஒரு நாடாக மாறியது. புகழ்மிக்க அந்நாட்டின்மீது அவருக்கிருந்த அளவிடற்கரிய அன்பு அவரை மூன்று முறை அந்நாட்டிற்குச் சென்றுவர அவரைக் கட்டாயப்படுத்தியது. இந்த அனுபவங்கள் அனைத்தையும் இந்தப் புத்தகத்தில் அவர் எழுதியிருக்கிறார். இந்தப் பயணங்கள், வெவ்வேறான மூன்று கால கட்டங்களில், வெவ்வேறான சூழ்நிலைகளில், மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு முறையும் அந்நாட்டிற்குச் சென்று அந்நாட்டு மக்களுடன் இரண்டறக் கலந்தபின் அவருடைய சிந்தனைகளும் செயல்பாடுகளும் அபரிமிதமான அளவில் வளம் பெற்றன. பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டிருக்கிறது. ஒவ்வொரு தோழரும் அதனை வாங்க வேண்டியதும் வாங்கிப் படிக்க வேண்டியதும் அவசியமாகும். ...

Tuesday, November 26, 2024

இலங்கை: மக்கள் எங்களுக்கு அளித்துள்ள அதிகாரத்தை மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்திடப் பயன்படுத்துவோம் ஜேவிபி பொதுச் செயலாளர் தில்வின் சில்வா உறுதி

இலங்கை: மக்கள் எங்களுக்கு அளித்துள்ள அதிகாரத்தை மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்திடப் பயன்படுத்துவோம் ஜேவிபி பொதுச் செயலாளர் தில்வின் சில்வா உறுதி
[இலங்கையில் தேர்தல்கள் நடைபெற்றபின் நவம்பர் 15 அன்று மாலை ஜேவிபி தலைமையகம் உள்ள பெலவத்தாவில் பொதுச் செயலாளர் தில்வின் சில்வா, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது தேசிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் டாக்டர் நிகல் அபெசிங்கே மற்றும் அதன் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் சரோஜா பால்ராஜ், வழக்குரைஞர் சுனில் வடகலா ஆகியோரும் உடன் இருந்தார்கள். அப்போது அவர் கூறியதாவது:] “நாடாளுமன்றத் தேர்தல்களின் இறுதி முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. தேசிய மக்கள் சக்தி இந்தத் தேர்தலில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இது ஒரு வரலாற்றுசிறப்புமிக்க அரசியல் திருப்புமுனையாகும். பிரதிநிதித்துவ வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஓர் அரசியல் கட்சி இத்தகைய ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருப்பது இதுவே முதல் தடவையாகும். இது, ஆட்சியின் ஒரு சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, புதிய சகாப்தத்தை தொடங்கும் நோக்கில் நம்நாட்டு மக்கள் நமக்கு அளித்துள்ள கட்டளையாகும். மக்கள் நமக்கு அளித்துள்ள கட்டளையில் உள்ள அரசியலை நம்மால் தெளிவாகவே பார்க்க முடியும். நாடாளுமன்றத்தின் மொத்தம் உள்ள 225 இடங்களில் 159 இடங்களை நம்மால் வெல்ல முடிந்திருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருக்கிறது. வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய இரு மாவட்டங்களிலும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் ஒரு சிறப்பான அரசியல் தன்மை முன்னுக்கு வந்திருக்கிறது. கிழக்கு மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் திரிகோணமலை ஆகிய இரு மாவட்டங்களிலும் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். கடந்த காலங்களில் ஒரு விதமான அரசியலால் ஆதிக்கம் பெற்றிருந்த தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியான மலை நாட்டிலும் நாம் வெற்றிகளை ஈட்டியிருக்கிறோம். நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் வெற்றிகளை ஈட்டியிருக்கிறோம். நம் நாட்டு மக்கள் அனைவரும் ஒரே லட்சியத்தை நோக்கி முன்னேறும் விதத்தில் வெற்றிக்காக கைகோர்த்திருக்கிறார்கள். எனவேதான் இந்த வெற்றியை மிகவும் சிறப்பான ஒன்றாக நாம் கருதுகிறோம். மேலும், அரசு ஊழியர்களில் 80 விழுக்காட்டினரும் தங்கள் ஆதரவை நல்கி இந்த வெற்றிக்குத் தங்கள் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். நமக்குக் கிடைத்துள்ள இந்தக் கட்டளை முழுக்க முழுக்க ஓர் அரசியல் கட்டளையாகும். இதுவரையிலும், இதற்கு முன்னிருந்த பல கட்சிகளின் கூட்டணிகளால் கட்டமைக்கப்பட்ட வெற்றிகளைக் காட்டிலும் இந்த வெற்றியானது ஓர் அரசியல் ஆழத்தையும் சாராம்சத்தையும் கொண்டுள்ளது. எனவே, இதற்காக முதலில் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்த இயக்கத்தை இந்த வெற்றிக்கு கொண்டு வருவதில் பலர் தாங்கள் எதிர்கொண்ட கஷ்டங்களை சகித்துக்கொண்டனர். பலர் தியாகம் செய்து உழைத்துள்ளனர். மேலும், நமக்கு வாக்களித்து உதவியவர்களும் உள்ளனர். தேசிய மக்கள் சக்தி என்ற வகையில், நீண்டகாலமாக துன்பங்களைச் சகித்துக்கொண்டு, இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நாங்கள் எங்களது அஞ்சலியை செலுத்துகிறோம். அந்த மக்கள் அனைவரின் துணிச்சலும்தான் புதிய நாட்டைக் கட்டியெழுப்பும் வாய்ப்பை நமக்கு வழங்கியுள்ளது. இந்த வெற்றியை ஆதரித்த, வாக்களித்த, உதவிய அனைவருக்கும் எங்கள் நன்றியையும் மரியாதையையும் தெரிவிப்பதற்கும், தலை வணங்குவதற்கும் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறோம். குறிப்பாக, வட பகுதி மக்கள் வரலாற்றில் முதன்முதலாக மற்றொரு பிராந்தியத்தைத் சேர்ந்த ஒரு தலைவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். வடக்கு, கிழக்கு மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இனவாதத்தைப் புறந்தள்ளிவிட்டு தென்னிலங்கை மக்களுடன் கரம்கோர்த்துள்ளார்கள். இதற்கு நாங்கள் அளப்பரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இனவெறியை விசிறிவிடும் தலைவர்களால் பரப்பப்படும் பொய்கள், புழுகு மூட்டைகள், தவறான கருத்துக்கள் மற்றும் கற்பனைக்கதைகளைக் கொஞ்சம்கூட நம்பாமல் நம்முடன் கைகோர்த்திருப்பதற்காகவும், நாம் அனைவரும் ஒரு நாட்டு மக்கள் என்று சிந்தித்திருப்பதற்காகவும் நாம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். சிலர், சமூகத்தில் எங்கள் கருத்தை எடுத்துச் செல்வதற்காக, எங்களிடமிருந்து எதையும் எதிர்பாராமல் எங்களுக்குப் பணம் அளித்து உதவியிருக்கிறார்கள். சில இதழாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் தங்களுக்கு வேலையிழக்கும் ஆபத்து இருந்தபோதிலும் அதனை உதாசீனப்படுத்திவிட்டு எங்களுக்கு உதவியிருக்கிறார்கள். நாட்டை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் ஏராளமான மக்கள் எங்களுக்கு உதவி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்குக் கிடைத்துள்ள வெற்றியின் முழுப் பரிமாணத்தையும் நாங்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கிறோம். மக்கள் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம். நாட்டில் 76 ஆண்டுகளாக அரசியல் அதிகாரத்தை வைத்திருந்த அரசியல் கட்சிகளைத் தோற்கடித்து நாங்கள் இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எங்களின் வெற்றியின் வேகத்தைப் பார்க்கும்போது, சுமார் 56,34,000 வாக்குகளைப் பெற்றிருந்தோம். இந்த பொதுத் தேர்தலில் அதை 68,63,000 ஆக உயர்த்தி இருக்கிறோம். ஒன்றரை மாதங்களில் 12 லட்சம் அதிகரித்திருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் சமகி ஜன பலவேகய சுமார் 43,63,000 வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அது பெற்ற வாக்குகள் 19,68,000 ஆகக் குறைந்துள்ளது. அவர்கள் கிட்டத்தட்ட 24 லட்சம் வாக்குகளை இழந்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளில் பாதியைக்கூட அவர்களால் பெற முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க சுமார் 22,99,000 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்தத் தேர்தலில் அவரால் சுமார் 5,00,000 மட்டுமே பெற முடிந்தது. சுமார் 17 லட்சம் பேர் அவரை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த ஒன்றரை மாதங்களில் இந்த அரசியல் கட்சிகள் சரிந்து விட்டன. ஜனாதிபதி தேர்தலின் போது ரணிலும், சமகி ஜன பலவேகய கட்சியினரும் பொய்களை கூறி மக்களை மிரட்டியதால் மக்கள் சற்றே தயங்கினர். ஆனால், கடந்த ஒன்றரை மாதங்களில் இவர்களின் பொய்களின் அளவு என்ன என்பதை அவர்கள் நன்கு உணர்ந்துவிட்டனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரமும், பங்குச் சந்தையும் வீழ்ச்சியடையும், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும், ரூபாய் மதிப்பு குறையும் என்றார்கள். இரண்டு கார்களில் ஒன்று எடுக்கப்படும், ரத்தம் சிந்தப்படும், அமைதி குலைந்துவிடும், நாடு அழிந்துவிடும் என்றார்கள். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் மத வழிபாட்டை அனுமதிக்க மாட்டோம் என்றார்கள். அந்த வகையில் அவர்கள் அச்சமூட்டிய சமூகத்தில்தான் நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றோம். ஆனால், அதன் பிறகு கடந்த ஒன்றரை மாதங்களில் அந்த அறிக்கைகள் அனைத்தும் பொய் என்பதை மக்கள் உணர்ந்தனர். அதனால் மக்கள் எங்களுக்கு உதவுவது எளிதாக இருந்தது. பொய்யால் வெற்றி பெற முயன்றவர்கள் பொய்யால் தோற்கடிக்கப்பட்டனர். பொதுப் பணத்தைச் சார்ந்து இருந்த பழைய, சிறப்புரிமை, குடும்பக் கட்டுப்பாடு, உயர்சாதி ஆதிக்க அரசியல் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. பழைய காலம் முடிந்துவிட்டது. இப்போது, சாதாரண மக்களின் அரசியல், ஆட்சியைப் பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்கு மக்களின் ஆதரவும் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. நமது நாட்டு மக்கள் மதவெறியை நிராகரித்துள்ளனர் என்பதை இந்த முடிவிலிருந்து அறியலாம். வடக்கின் இனவாதத் தலைவர்கள் வடக்கிற்குச் சென்று இனவாதத்தைத் தூண்ட முயன்றனர். எங்களின் சில அறிக்கைகளைத் திரித்து தமிழ் மக்களுக்கு எதிரான அறிக்கைகளாக காட்ட முயன்றனர். மேலும், தேசிய மக்கள் சக்திக்கு எதிராக முஸ்லிம் மக்களைத் தூண்டிவிடவும், முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மதவெறியை விசிறிவிட ஆரம்பித்தனர். எனினும் அவர்களின் பொய்களை தமிழ் மக்களோ அல்லது முஸ்லிம் மக்களோ ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே முடிவுகள் காட்டுகின்றன. நம் நாட்டின் அரசியல் தலைவர்களைக்காட்டிலும் நம் மக்கள் புரிந்துணர்வுடன் செயல்பட்டுள்ளார்கள். மதவெறி மற்றும் தீவிரவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பழைய அரசியல் கட்சிகளுக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது. கடந்த 50 நாட்களில், தேசிய மக்கள் சக்தியின் நடைமுறையை நம் நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டதைக் காண முடிந்தது. எளிமையான அரசை தொடங்கினோம். பொதுமக்களின் பணத்தை வீணாக்காமல் எப்படி செயல்படுவது என்பதை நிரூபித்துள்ளோம். மக்களுக்கும் மேலே நின்று பிரபுத்துவ மனப்பான்மையுடன் நாங்கள் நடந்துகொள்ளவில்லை. மக்களோடு மக்களாக உழைத்து நேர்மையாக உழைக்கும் எளியவர்கள் என்பதைக் காட்டி இருக்கிறோம். அதுவே நமது வாக்குகள் பெருகக் காரணமாக இருந்திருக்கலாம். இவ்வாறு நம்மீது நம்பிக்கை வைத்துள்ள நம் மக்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாப்பது நமக்கு சவாலாக உள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அதிகமான அதிகாரம் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதீத சக்தியைப் பயன்படுத்துவதில் நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்போம். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வழங்கக்கூடாது என்ற கருத்து இருந்து வருகிறது. அது, ஏன்? 1977க்குப் பிறகு, ஆட்சிபுரிந்தவர்கள் தங்களுடைய அதீத அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்களை அடக்கி ஒடுக்கி, மக்களின் குரலுக்குச் செவி சாய்க்காமல், முடிந்தவரை பொதுச் சொத்துக்களை அனுபவித்து வந்தனர். இதுவரை ஆட்சி புரிந்தவர்கள் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அதிகார போதையில் மிதந்தனர். அது தோற்கடிக்கப்பட வேண்டியிருந்தது. நாங்கள் அரசியல் அதிகார போதையில் இருக்க மாட்டோம். இந்த அதிகாரம் மக்களால் எங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரமாகும். அதை மிகவும் கவனமாக மக்கள் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு நம் முன் உள்ளது. இந்த அதிகாரத்தை மக்களை ஒடுக்குவதற்கோ அல்லது ஆட்சியில் இருப்பவர்களின் பிழைப்புக்காகவோ பயன்படுத்தப்படாமல், இந்த நாட்டைக் கட்டியெழுப்ப, ஜனநாயகத்தை நிலைநாட்ட, மோசடி இல்லாத, ஊழலற்ற நல்லாட்சியை உருவாக்கிட, மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிட பயன்படுத்துவோம் என்று உறுதி அளிக்கிறோம். நம் நாடு மிகவும் வறுமையில் இருந்து வருகிறது. மூன்று வேளையும் உண்ண முடியாத மக்கள் இருந்து வருகிறார்கள். குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. போதைப் பொருள்கள் பயன்படுத்துவது அதிகமாகி இருக்கிறது. சர்வதேச சமூகத்தின் முன்னால் நம் பிம்பம் அழிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் பொதுப் பணத்தில் சொகுசாக வாழ்ந்து ஊறித்திளைத்தார்கள். அத்தகைய அமைப்பு முறைக்கு முற்றிலும் மாற்றாக புதியதொரு நாட்டைக் கட்டி எழுப்பிட வேண்டும். நல்லதொரு நாட்டைக் கட்டி எழுப்பிட வேண்டும். ஜனநாயகம் மற்றும் பொருளாதாரத்தின் நேர்மையற்ற தன்மை நம் முன் உள்ளது. நாம், நம் மக்களின் அத்தியாவசியப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டியிருக்கிறது, கிராமப்புற வறுமையை ஒழித்துக்கட்ட வேண்டியிருக்கிறது, ஒரு தூய்மையான இலங்கையை உருவாக்க வேண்டியிருக்கிறது, கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்கமான நாட்டை உருவாக்க வேண்டியிருக்கிறது, மக்களின் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டியிருக்கிறது, நாட்டின் கடனை அடைக்க வேண்டியிருக்கிறது, வீழ்ந்த பொருளாதாரத்தை மீளவும் கட்டி எழுப்ப வேண்டியிருக்கிறது, மக்கள் கண்ணியத்துடன் வாழக்கூடிய விதத்தில் நாட்டை உருவாக்க வேண்டியிருக்கிறது. இந்த சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுவதற்கு இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவோம் என்றும், எங்கள் கட்சியின் சொந்த நலனுக்காக இதனைப் பயன்படுத்தமாட்டோம் என்றும் மக்களுக்கு நாங்கள் உறுதி கூறுகிறோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இந்தத் தேர்தலிலும் அரசியல் கலாச்சாரம் மாற்றப்பட்டதுடன் தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகள் இடம்பெறவில்லை. எங்களுக்கு வாக்களிக்காதவர்களை அடக்கியாளும் வெற்றியைக் கொண்டாடும் கலாச்சாரத்தை நாங்கள் உருவாக்கவில்லை. எனவே ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்காதவர்கள் இம்முறை எங்களுக்கு வாக்களித்திருப்பது எளிதானது. குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றியைப் பெற்றுள்ளோம். இந்த வெற்றியால் எங்களுக்குத் தலைக்கனம் ஏறிவிடவில்லை. இதன் பின்னே வெற்றியாளர்கள், தோல்வியாளர்கள் என்று இரண்டு பிரிவுகள் இல்லை. நம் நாட்டு அரசியலுக்குத் தேவைப்படாத அரசியல்வாதிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். இனி அவர்கள் தேவையில்லை. நாம் அனைவரும் இந்த நாட்டின் குடிமக்கள். இது நாட்டுக்குக் கிடைத்த வெற்றி. முஸ்லிம்கள், தமிழர்கள், சிங்களவர்கள், பர்கர்கள், மலாய்க்காரர்கள், பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள், இந்துக்கள் ஆகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, வீழ்ந்துள்ள நாட்டை மீளவும் தூக்கி நிறுத்திடுவோம். இது நம் பொறுப்பாகும். இதற்காக அனைத்துத் தரப்பினரையும் எங்களுடன் சேர வருமாறு அறைகூவி அழைக்கிறோம். தேசிய மறுமலர்ச்சி, பொருளாதார மறுமலர்ச்சி, அரசியல் மறுமலர்ச்சி, கலாச்சார மறுமலர்ச்சி, மனித சிந்தனையின் மறுமலர்ச்சி ஆகியவற்றை உருவாக்கி, நம் நாட்டை உலகில் ஒளிமயமானதாக மாற்றிட நாம் அனைவரும் இப்போதிருந்தே பாடுபடுவோம். மக்கள் எமக்கு வழங்கிய ஆணை நாட்டிற்கு வெற்றியை பெற்றுத் தருவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என நாங்கள் உறுதியளிக்கின்றோம். இந்த வெற்றிக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். “பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 25.11.2024” (தமிழில்: ச.வீரமணி)

Tuesday, November 5, 2024

வைகறைவாணனும் நானும்.

 வைகறைவாணனும் நானும்.

ச.வீரமணி

~~~~~~~~~~~~~~~~~~~~~~

நான் 1970களில் மன்னார்குடியில் வேலை பார்த்த சமயத்தில் மன்னை பேருந்து நிலையத்தில் உள்ள புத்தகக்கடைகளை மேய்ந்தபோது, ‘மனிதன்’ என்று ஒரு சிவப்பிலக்கிய இதழ், புதிதாக வெளிவந்த இதழ், அட்டைப்படத்தில் ஓர் உழைப்பாளி தன் கைவிலங்கை முறித்துக்கொண்டு ஓடிவருவது போன்ற படத்துடன் வெளிவந்ததைப் பார்த்தேன். உடனே அதனை வாங்கிவிட்டேன்.

பின்னர் நான் திருவையாறு, நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு மாற்றலாகிவந்தபோது, திருவையாறில் செந்தமிழ்வேங்கை என்கிற ப.ஜெயபாலன் என்பவர் ‘மனிதன்’ இதழ் வரவழைத்து விநியோகம் செய்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டு, அவர் தங்கியிருக்கும் அறையைத் தேடிச் சென்றேன். வெளியில் ஒரு சிறு பெயர்ப்பலகை. அதில் செந்தமிழ் வேங்கை, இளமுருகன், மெய்யடியான், திருவேங்கடம் என்னும் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இளமுருகன், அப்போது தமிழ்க்கல்லூரியில் இறுதி ஆண்டில் படித்து வந்தார். அவரிடம், செந்தமிழ்வேங்கை இருக்கிறாரா என்று கேட்டேன். அவர் ‘நீங்கள் யார்?’ என்று என்னை வினவ, நான் ‘நீதிமன்றத்திலிருந்து வருகிறேன்’ என்றதும் சற்றே அவர் துணுக்குற்றார் என்றே கருதுகிறேன். பின்னர் சிறிது நேரம் பேசியபின் சரளமான உணர்வுக்கு வந்து, ‘ஜெயபாலன் கடைவீதியில் உள்ள ‘திருவையாறு கபே’ என்னும் உணவுவிடுதியில் மூலையில் உள்ள மேசையில் உட்கார்ந்து கணக்கு எழுதிக்கொண்டிருப்பார். போய்ப் பாருங்கள்’ என்று அனுப்பி வைத்தார்.

அப்போது பார்த்த, வைகறையின் புன்னகை முகம் இப்போதும் என் நெஞ்சில் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது. பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த, ஒருசில நிமிடங்களிலேயே நாங்கள் ஒன்றிப் போனோம்.

அடுத்து, ந.விஜயரங்கனும் திருவையாறு நீதிமன்றத்திற்கு மாற்றலாகி வந்தபின், அநேகமாக மூவரும் இணைபிரியாது இருந்தோம். தோழர் சி.அறிவுறுவோன் எங்கள் மூவரையும் அநேகமாக தன்னுடைய அன்புப் பிணைப்பில் கட்டிப்போட்டிருந்தார் என்று சொன்னால் மிகையல்ல.

1975இல் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட சமயத்தில், வைகறைவாணன் தலைமையில் கமுக்கமாக எவ்வளவோ செய்திருக்கிறோம். தோழர்கள் ஏ.கே.கோபாலன், இரா.செழியன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள், தமிழாக்கம் செய்யப்பட்டு, வந்ததை, தட்டச்சு செய்து, உருளச்சு முறையில் பல படிகள் எடுத்து, பரப்பியிருக்கிறோம். தோழர் சிகரம் செந்தில்நாதன் அவர்களை வரவழைத்து திருவையாறில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் கூட்டம் நடத்தி இருக்கிறோம்.

தோழர் வைகறைவாணனிடம் உள்ள அசாத்திய திறமை எவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக இருந்தாலும் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு, மிகச் சிறப்பாக நடத்திடுவார்.

ஒருதடவை தோழர் கோ.வீரய்யன் மற்றும் தோழர் வே.ஆனைமுத்து இருவரையும் வரவழைத்து, ஒரே மேடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும், பெரியார் சமஉரிமைக் கட்சி குறித்தும் பேச வைத்தார்.

திருவையாறு என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, திருவையாறு தியாகேசர் கீர்த்தனாவாகும். அதைப்போலவே தமிழிசைக்கும் விழா எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, வைகறைவாணன், சி.அறிவுறுவோன், பேராசிரியர்கள் திருமாவளவன், இளவழகன், திருவேங்கடம், தங்க. கலியமூர்த்தி உள்ளிட்டு ஒருசில நண்பர்கள் தமிழிசை விழா தொடங்கி அது இன்றளவும் ஒவ்வோராண்டும் தைத் திங்களில் நடைபெற்று வருகிறது என்றே நம்புகிறேன்.

அன்னக்கிளி திரைப்படம் வந்த புதிது. அதில் மிகவும் புகழ்பெற்ற அன்னக்கிளியே உன்னைத் தேடுதே பாட்டின் மெட்டில் இவர் ஒரு பாடல் எழுதித் தந்ததை, தோழர் சி.அறிவுறுவோன் தன் நிலத்தில் நாற்றுப்பறிக்கும் பெண்களை விட்டுப் பாடச் செய்தார். அப்போதெல்லாம் நாங்கள், கண்ணதாசன் போன்று, வாலி போன்று நாளை நாம் நம் வைகறைவாணனையும் பார்க்கப் போகிறோம் என்று கற்பனை செய்துகொண்டிருந்தோம்.

எங்களுடன் அன்பு நண்பர் அரண்மனைக்குறிச்சி கு.கைலாசம் அவர்களும் இணைந்தார். அதன்பின் ஈழ இலக்கியங்கள் அனைத்தும் எங்களுடன் மிகவும் நெருக்கமாக உறவாடின. குறிப்பாக செ.கணேசலிங்கன் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த 26 குமரன் இதழ்கள் எங்களைப் பக்குவப்படுத்தியதில் முக்கியமான பங்கினையாற்றியது. குமரனில் வெளிவந்த தோழனின் காதல் கடிதம், பின்னர் அதற்குத் தோழி எழுதிய பதில் கடிதத்தின் சாராம்சம் இன்றளவும் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. மாவோவின் ‘மலையைப் பிளந்த மூடக் கிழவனின் கதை’யை முதலில் படித்தது, செ.கணேசலிங்கனின் ‘சிறுவர்க்கான சிந்தனைக் கதைகள்’ என்னும் புத்தகத்தில்தான் என்று நினைவு.

ஈழ இலக்கியங்கள் மட்டுமல்ல, ஈழத்திலிருந்து வரும் நண்பர்களும் பலர் வைகறையைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

எங்கள் மத்தியில் வறுமை கடுமையாக இருந்த நேரம். இருந்தாலும் வறுமையால் எங்களின் உணர்வுகளைத் தடுத்திட முடியவில்லை. என் அன்னை இறக்கும் நாளன்று, நான், விஜயரங்கன், வைகறைவாணன் ஆகியவர்களுடன் திருவையாற்றில் பூசைபடித்துறைத் தெருவிலிருந்த மாடி அறையில் இரவு முழுதும் பேசிக்கொண்டே இருந்தோம். இப்படி மத்தியதர ஊழியராக இருக்கும் நம்மாலேயே நம் அன்னையரை ஒழுங்காகக் கவனிக்க முடியவில்லையே, நம்மைவிட மோசமான நிலையில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்ற விதத்தில் எங்கள் விவாதம் அன்றையதினம் அமைந்திருந்தது. அதன்பின்னர்தான், இவ்வாறு வெறுமனே சிவப்பு இலக்கியங்களைப் படித்துக்கொண்டிருந்தால் மட்டும் போதாது, இடதுசாரி இயக்கங்களில் ஏதேனும் ஒன்றுடன் பிணைத்துக்கொண்டு, ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைத்திட நம்மாலான அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற முடிவினை அன்றைய தினம் எடுத்தோம் என்றே கூறலாம். அதன் பின் நான் நாகைக்கு சுருக்கெழுத்தராக மாற்றலானேன்.

வைகறை சென்னை சென்றுவிட்டார். 15 சாரி தெரு, கோடம்பாக்கம் ரயில்நிலையம் அருகில் அறை. அநேகமாக அந்த சமயத்தில் தஞ்சையிலிருந்து வேலை தேடி செல்லும் பட்டினிப் பட்டாளத்தின் புகலிடமாக அது பல ஆண்டு காலம் இருந்தது.

சென்னையில், வைகறை, அரணமுறுவலுடன் இணைந்து பயணித்தார். நான் தமிழ்ச்சுருக்கெழுத்தைச் சுயமாகக் கற்று, இளநிலை, பின் முதுநிலை என்று தேர்ச்சியடைந்தபின், உயர்வேகத் தேர்வு, நிமிடத்திற்கு 100 வார்த்தைகள், 120 வார்த்தைகள், பின் 150 வார்த்தைகள் என்று தேர்வுகள் எழுதி, தேர்ச்சியடைந்தபோது, தோழர் வைகறைவாணன், ‘மக்கள் செய்தி’யில் ஒரு பெட்டிச் செய்தி, ‘தமிழ்ச் சுருக்கெழுத்தில் வீரமணிக்கு முதலிடம்’ என்று வெளியிட்டிருந்தார். இதைவிடச் சிறந்த விருது வேறு என்ன இருக்க முடியும்!

அஞ்சலட்டை வடிவிலான என் திருமண அழைப்பிதழையும், விஜயரங்கனின் திருமண அழைப்பிதழையும் வடிவமைத்தது தோழர் வைகறைவாணன்தான். என் திருமணத்திற்காக நான் அச்சிட்ட அழைப்பிதழையும், மணமகள் சார்பில் என் மைத்துனர் தோழர் இரா.இரத்தினகிரி அச்சிட்ட அழைப்பிதழையும் பேராசிரியர் இரா. இளவரசிடம் நானும், வைகறையும் சென்று அளித்தபோது, இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்துவிட்டு, இளவரசு ஐயா அவர்கள், ‘இரத்தினகிரி அச்சிட்டுள்ள அழைப்பிதழில் இல்லாத தமிழ் இதில் இருக்கிறது’ என்று மகிழ்வுடன் சொன்ன வரிகள் என் நெஞ்சில் இப்போதும் இருக்கிறது. இதற்குக் காரணம் தோழர் வைகறைவாணன்தான்.

அதேபோல் மே தினம் ஒன்றிற்கு வாழ்த்துச் செய்தி ஒன்று சுமார் 100 அஞ்சலட்டைகள் அச்சிட்டு விநியோகித்தோம். அதன் வாசகங்களை தோழர் ஜோதி இன்றளவும் நினைவு கூர்வார். அதனைப்பார்த்தபின்தான் தோழர்கள் மணியரசனும், ஜோதியும் எங்களுக்கு மிகவும் நெருக்கமானார்கள்.

அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டபின்னர், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நாமக்கல்லில் ஒரு பயிற்சி முகாம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்திலிருந்து கி.வெங்கட்ராமன், சி.அறிவுறுவோன், வைகறைவாணன், பொதியவெற்பன், நான் உட்பட ஏழு பேர் கலந்துகொண்டோம். தோழர் கு.சின்னப்பபாரதி ஏற்பாடு செய்திருந்தார். தோழர்கள் என்.சங்கரய்யா, கே.முத்தையா, கே.செல்வராஜ், செந்தில்நாதன், இளவேனில் முதலானவர்கள் உரையாற்றினார்கள். தோழர் இளவேனில் சீன இலக்கியம் குறித்து ஆற்றிய உரையும், தோழர் என்.சங்கரய்யா, செம்மலரில் வெளியான ஒரு சிறுகதையை விமர்சனம் செய்ததும் இன்னமும் நெஞ்சில் நிழலாடுகின்றன.

நான் திருமணமானபின் நாகையில் வேலைபார்த்த சமயத்தில், 1976இல் புயலால் நாகை நிர்மூலமாக்கப்பட்ட சமயத்தில், நாகைக்கும் இதர பகுதிகளுக்கும் தொடர்பு அறுபட்டிருந்த சமயத்தில், தோழர் வைகறை எப்படியோ நாகை வந்து எங்களைச் சந்தித்ததை மறக்க முடியாது. அப்போதுதான் நாங்களிருவரும் சென்று சர்வதேசகீதத்தைத் தமிழில் எழுதிய கவிஞர் நாகை சாமினாதன் அவர்களைச் சந்தித்தோம். அதனைத் தோழர் வைகறை ஒரு சிறுபிரசுரமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

1984இல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உருவாகிக்கொண்டிருந்த சமயம். அதற்கு முன் ‘அரசு ஊழியர்’ மாத இதழ் தோழர் தே.இலட்சுமணனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துகொண்டிருந்தது. இதனை ஆரம்பத்தில் அச்சிடும் பணியைத் தோழர் வைகறைவாணன்தான் பார்த்தார்.

அரசு ஊழியர் இதழில் செம்பியன் (எம்.ஆர்.அப்பன்) எழுதிய ஸ்தாபனம் என்ற கட்டுரையை ஒரு சிறுபிரசுரமாகக் கொண்டுவர, எம்.ஆர்.ஏ-இடம் நான் அனுமதி கோர, அவரும் அனுமதி அளித்தார். அதன்பின்னர் நான், தோழர்கள் வைகறைவாணன், வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து அதனை வெளியிட்டோம். தோழர் இளவேனில் அட்டையை வடிவமைத்துத்தர அதனை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முதல் மாநாட்டின்போது வெளியிட்டோம்.

நான் சென்னையில் சட்டமன்ற மேலவையில் வேலை பார்த்த சமயத்தில் ‘சீன இலக்கியம்’ மாத இதழ் ஒன்றிலிருந்து, நாட்டுப்புற நாடோடிக் கதை ஒன்று. ஒருவன், ஒரு கிளிக்கு ‘ஆமாம்’ என்று மட்டும் சொல்லக் கற்றுக்கொடுத்து, இந்தக் கிளி, தங்கம், வெள்ளி புதைத்து வைத்திருக்கும் இடங்களைச் சரியாகக் கூறும் என்று ஏமாளிகளை நம்ப வைத்துக்கொண்டிருப்பான். இவனது ஏமாற்றுத்தனத்திற்கு அந்நாட்டின் அரசனும் பலியாகிவிடுவார். இந்தக் கதையை, ‘ஆமாம்’ என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்து தந்ததை, க.சுப்பு அவர்களை ஆசிரியராகவும், க.திருநாவுக்கரசு அவர்களையும், வைகறையையும் உதவி ஆசிரியர்களாகக் கொண்டும் வெளியிட்டுவந்த நக்கீரன் இதழில் வெளியிட்டார். அதேபோன்று நான் பிரேம்சந்த்தின் சிறுகதைகளில் ஐந்தை (குழந்தை, கடவுளின் இல்லம், மோட்சம், பண்பாளன் யார்? மற்றும் இரு நண்பர்கள்) கதைகளைத் தமிழாக்கம் செய்து அது, காக்கை சிறகினிலே மற்றும் பல இதழ்களில் வெளிவருவதற்கு, முக்கிய காரணம் தோழர் வைகறைவாணன்தான்.

அதேபோன்று ‘நாடாளுமன்றத்தில் தமிழ்’ தொடர்பாக வீர.வியட்நாமின் எழுதிய கட்டுரையும் மற்றும் ‘ஞாயிற்றைக் கை மறைப்பாரில்’ என்ற பழமொழிக்கேற்ப ‘கதிரவனைக் கைகள் மறைத்திடுமோ’ என்று மாக்சிம் கார்க்கி குறித்து எழுதிய கட்டுரை காக்கை சிறகினிலே இதழில் வெளிவந்ததற்கும், வைகறைவாணன்தான் காரணம்.

தோழர் வைகறை, எவ்வளவோ திருமணங்களை மிகவும் எளிமையாகவும், சிறப்பாகவும் நடத்தியிருக்கிறார். ஆனால் அவருக்குத் திருமணமே நடக்காதா என்று நாங்கள் ஏங்கிக்கொண்டிருந்த சமயத்தில், பேராசிரியர் விருத்தாசலனார் முன்முயற்சியில், தோழர் வைகறைக்கும் தோழர் இந்திராவுக்கும் தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அத்திருமணம் நடைபெற்ற சமயத்தில் தோழர் செல்வபாண்டியன் எறும்பைப்போல் சுறுசுறுப்பாக சுழன்று பணியாற்றியது இன்னமும் என் நெஞ்சில் நிலைத்திருக்கிறது.

இவ்வாறு 1970களில் எங்களிடையே ஏற்பட்ட நட்புப் பிணைப்பு, 50 ஆண்டுகள் கழிந்தும் வளர்பிறையாகவே தொடர்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக நானும், தோழர் வைகறையும் பலவிதமான நோய்களுக்கு ஆளாகி அவதிப்பட்டபோதிலும், மனதளவில் இறப்பு குறித்து எவ்விதமான அச்சமுமின்றி, வாழ்ந்த வாழ்க்கையை எங்களால் முடிந்த அளவிற்கு, சமூகத்திற்குப் பயனுறுவிதத்தில்தான் வாழ்ந்திருக்கிறோம் என்ற மனநிறைவு எங்களுக்கு உண்டு. அந்த மனநிறைவுடன் வருங்காலங்களையும் கடத்திடுவோம்.


Sunday, October 6, 2024

வீரம் விளைந்தது மதிப்புரை

 


அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே!

மல்ட்டிபிள் மைலோமா (Multiple Myeloma) என்னும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு, அதற்கெதிரான போராட்டத்தில் உருக்குபோன்று நின்று வெற்றி பெற வைத்ததில், நிக்கொலாய் ஒஸ்த்ரோவ்ஸ்க்கியின் ‘வீரம் விளைந்தது’ நாவலுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு.

நான் இந்த நாவலை என் பதின்பருவ வயதில் படித்திருந்தேன் என்ற போதிலும், பின்னர் 1976இல் கட்சியில் சேர்ந்தபின் இதனை நான் பல முறை படித்திருக்கிறேன். இப்போது 2024 அக்டோபர் 2 அன்று 76 வயதைக் கடந்து 77ஆவ வயதில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இப்போது மீண்டும் அந்த நாவலைப் படித்து முடித்திருக்கிறேன். இப்போது படித்தபோதும் எவ்வளவு விஷயங்களை அது எனக்குக் கற்பித்திருக்கிறது.

ஒவ்வொரு தோழரும் இந்நாவலை அவசியம் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்நாவலில் சில பக்கங்களை உங்கள் பார்வைக்காகப் பகர்கிறேன். அவசியம் படியுங்கள்:

மனிதனது மதிக்க முடியாத இனிய உடமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவைதான் வாழ முடியும். காலமெல்லாம் குறிக்கோளில்லாமல் பாழாக்கிவிட்டேன் என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பு அளிக்காத வகையில் அவன் சீராக வாழ வேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழ வேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனிதகுலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக, நான் என் வாழ்வு முழுதையும், சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும்பொழுது கூறும் உரிமைபெறும் வகையில் அவன் வாழ வேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடிவைக்கக்கூடும் ஆதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். (பக்கம் 316)

சமுதாயம் புரட்சிகரமாக மாறிக்கொண்டிருப்பதைக் கண்ணுறும் ஒரு கிராமத்தில் உள்ள வண்டிக்காரன், சமுதாயத்தில் வாலிபர் சங்கத் தோழர்கள் செயல்படும் விதம் குறித்து அதிர்ச்சியடைந்து கூறும் கூற்றைக் கவனியுங்கள்:

இந்தக் கம்ஸமோல் இளைஞர்கள் எல்லோரும் எங்கிருந்து வந்தார்கள் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. இந்த மாதிரி ஆட்களை நான் முன்னால் பார்த்ததே இல்லை. அந்தப் பள்ளிக்கூட ஆசிரியைதான் இவர்களையெல்லாம் கிளப்பி விட்டிருக்கிறாள். … இளம் வயதுதான். ஆனாள் மிகவும் தீயவள். கிராமத்தில் உள்ள பெண்களையெல்லாம் தூண்டி விடுகிறாள். அவர்களுக்கு ஏதேதோ அபத்தமான விஷயங்களையெல்லாம் சொல்லிக்கொடுக்கிறாள். இதனால் கலகமே உண்டாகிறது. முன்போல ஒருவன் தனது சொந்த மனைவியை அடிக்க முடியாத அளவுக்கு நிலைமை கெட்டுவிட்டது! ஏண்டா வழியிலே போகிற தொல்லையை வாங்கிக் கட்டிக்கொண்டோமென்று வருந்த வேண்டியிருக்கிறது. பொதுஜன நீதிமன்றத்தில் வழக்கு போடுவேன் என்று வீரம் பேசுகிறாள். அவள் வயதுப் பெண்களோ, தத்தம் கணவன்மாரிடம் சட்டம் பேசுகின்றனர்! அடித்தால், விவாகரத்து செய்து விடுவேனென்று அச்சுறுத்துகின்றனர். என் மனைவி கன்கா, மகா சாது! வாயில்லாப் பூச்சி! இப்பொழுது அவள் மாதர் சங்கத்தில் சேர்ந்து பிரதிநிதியாக வேறு ஆகிவிட்டாள்! பிரதிநிதி என்றால் தலைவி மாதிரியாம். கிராமத்துப் பெண்கள் எல்லாம் அவளிடம் வந்து ஆலோசனை கேட்கின்றனர். இதை அறிந்தவுடன் எனக்கு ஆத்திரம் வந்தது. அந்தக் கோபத்தில்  அவளைச் சவுக்கால் அடிப்பதற்கு ஆயத்தமானேன். கடைசியில் எப்படியாவது தொலையட்டுமென்று விட்டுவிட்டேன்! ஆனால் வீட்டு வேலை போன்ற விஷயங்களில், கன்காவிடம் குற்றம் காண முடியாது. (பக்கம் 384-385)

நண்பர்களே! நாவலில் தோழர்கள் ரீத்தாவுக்கும், பாவெலுக்கு இடையில் உள்ள ஆழ்ந்த நட்பு குறித்தும், பாய்லோ என்ற ஓர் அயோக்கியன் தோழர் என்ற பெயரில் பெண் தோழர்களிடம் மிகவும் இழிவாக நடந்துகொள்வதைச் சகிக்க முடியாது பாவெல் அவனை அடித்து நொறுக்குவதையும் முன்பே பதிவிட்டிருக்கிறேன்.

 பாய்லோ பற்றிக் குறிப்பிடுகையில் பாவெல் குறிப்பிடுவதாவது:

ஒரு புரட்சிக்காரன், ஒரு கம்யூனிஸ்ட், அதே சமயத்தில் ஆபாச மிருகமாகவும், துஷ்டப் போக்கிரியாகவும் இருக்க முடியுமென்பதை நான் ஒருபொழுதும் நம்ப முடியாது. நமது கம்யூனிஸ்ட் தோழர்கள், சொந்த வாழ்வில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற பிரச்சனையில் கவனம் ஏற்பட்டிருப்பதே, இந்த விவகாரத்தின் ஒரு நல்ல அம்சம். (பக்கம் 446)

அவை bookday.in இணையப் பக்கத்தில் வெளியாகி இருக்கின்றன. அவற்றையும் தோழர்கள் படிக்க வேண்டும். இறுதிப் பகுதியை மட்டும் கீழே தருகிறேன்.

மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பாவெல், தன் நண்பன் அக்கீமிடம் கூறுவதைக் கேளுங்கள்.

அக்கீமின் கரத்தைத் தன் மார்புக் கூட்டின்மேல் இதயம் மந்தமாக அடித்துக்கொண்டிருந்த இடத்தில் வைத்துக்கொண்டே, கூறினான். என் இதயம் இங்கு அடித்துக்கொண்டிருக்கும்வரை என்னை எவராலும் கட்சியிலிருந்து பிரிக்க முடியாது. மரணம் ஒன்றுதான் என்னைக் கட்சி அணியிலிருந்து அகற்றவல்லது. இதை மறந்துவிடாதே, நண்பா.” (பக்கம்472)

பாவெலின் உடல் மிகவும் நலிவுற்றிருப்பதைக் கண்டு, கட்சி அவனை இலக்கியத்தொண்டில் பயன்படுத்த முடியுமா என்று ஆராய்ந்தது. கட்சிப் பத்திரிகையின் ஆசிரியர் குழு அவனை ஆராய்ந்தது. அவன் எழுதியவற்றைப் பார்த்துவிட்டு, அவர்கள் கூறியதாவது:

தோழர் கர்ச்சாகின், உங்களுக்குக் கணிசமான திறமை இருக்கிறது. ஓரளவுக்குக் கடுமையாக உழைத்தால், நீங்கள் நன்றாக எழுத முடியும். ஆனால், தற்சமயம் உங்களது இலக்கணமெல்லாம் தப்பும் தவறுமாயிருக்கிறது. உங்களுக்கு ருஷ்ய மொழியில் போதுமான ஞானம் இல்லை என்பதை உங்கள் கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. அதில் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால், மொழிப்பயிற்சி பெறும் வாய்ப்பு உங்களுக்கு இருந்ததில்லை. துரதிஷ்டவசமாக, உங்களிடம் திறமைஇருந்தபோதிலும், அதைப் பயன்படுத்தக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. உங்களது கட்டுரைகளின் உள்ளடக்கத்தை மாற்றாமல் அவற்றைத் திருத்தி எழுதினால், அவை சிறப்பாய் அமையும். ஆனால் அதற்கு மற்றவர் கட்டுரைகளைத் திருத்தி எழுதும் தரமுள்ளவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று ஆசிரியர் விளக்கினார்.

பின்னர் பாவெல் சரியாக மொழிப் பயிற்சி மேற்கொண்டு கசடறக் கற்றுக்கொண்டு கட்சி அணிக்குத் திரும்பினான். அதன் விளைவே இந்த வீரம் விளைந்தது நாவல்.

அவசியம் படியுங்கள் தோழர்களே!