Saturday, March 26, 2022

மனுஸ்மிருதியை நிராகரித்திடுவோம்

 


மனுஸ்மிருதியை நிராகரித்திடுவோம்

மாநிலங்களவையில் சிவதாசன் சங்கநாதம்

புதுதில்லி, மார்ச் 26-

மனுஸ்மிருதியை நிராகரித்திடுவோம் என்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன் கர்ஜித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமையன்று மாநிலங்களவையில் தனிநபர் சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தும் சமயத்தில் பாஜக-வைச் சேர்ந்த ராகேஷ் சின்கா என்பவர் இந்திய அறிவுப் பாரம்பர்யங்களைப் புதுப்பித்திட வேண்டும் என்பதற்காக தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட அளவில் ஆராய்ச்சி நிறுவனங்களை நிறுவிட வேண்டும் எனத் தனிநபர் சட்டமுன்வடிவு ஒன்றைக் கொண்டு வந்தார். இதற்குப் பதிலடி அளித்திடும் விதத்தில் டாக்டர் வி. சிவதாசன் பேசியதாவது:

மாண்புமிகு உறுப்பினர் டாக்டர் அமர் பட்நாயக் ஏற்கனவே அந்தோனியோ கிராம்சியின் பணிகளை மேற்கோள்காட்டினார். அந்தோனியோ கிராம்சியின் வாழ்க்கை மிகவும் தெளிவாகவே கலாச்சார மேலாதிக்கத்திற்கு (cultural hegemony) எதிராகப் போராட வேண்டியதன் முக்கியத்துவத்தைக் காட்டியிருக்கிறது. அவர் ‘சிறைக் குறிப்புகள்’ (’Prison Notebooks’) என்ற பெயரில் எண்ணற்றக் கட்டுரைகளை அவர் சிறையில் இருந்தபோது எழுதியிருக்கிறார். அவர், அவற்றில் காலனித்துவ ஆட்சியாளர்கள் அல்லது ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் எப்படி எல்லாம் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவற்றைத் தங்களுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் என்றும் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். காலனித்துவத்தின் அடிப்படைக் குணாம்சம் சுரண்டலாகும். எங்கெல்லாம் காலத்துவ ஆட்சி இருக்கிறதோ அங்கெல்லாம் அவர்கள் லாபத்திற்காக மட்டுமே தேடுதலில் ஈடுபட்டிருப்பார்கள். இவ்வாறு காலனித்துவத்தின் அடிப்படை நோக்கம் லாபம்.

இப்போது நாம் ஓர் ஏகாதிபத்திய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சக் கட்டமாகும்.

இங்கே, இப்போது நான் இந்த ‘மைக்ரோபோன்’ முன் பேசிக்கொண்டிருக்கிறேன். இதனைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரகாம் பெல். அவர் ஒரு ஸ்காட்டிஷ் விஞ்ஞானி (Scottish scientist). ஆனாலும் அதனை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆல்பர்ட்இ ஐன்ஸ்டின் என்னும் அறிவியல் மேதை ஜெர்மனியில் பிறந்தார்.  அவருடைய சார்பியல் மற்றும் குவாண்டம் இயக்கவியல் கோட்பாடு இயற்பியலின் இரு அடிப்படைத் தூண்களாகும். அவற்றை நாம் நம் கல்வி நிறுவனங்களில் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறோம். நாம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வாழ்வையும், பங்களிப்புகளையும் ஆய்ந்துகொண்டிருக்கிறோம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பங்களிப்புகளைப்பெற்றுக்கொள்வதில் எவ்விதமான தயக்கமும் நமக்கில்லை. அவர் கண்டுபிடித்த e=mc2 என்கிற மற்றொரு கோட்பாடும் மிகவும் முக்கியமான விஷயமாகும்.  மின் உலைக்களங்களில் நாம் இக்கோட்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

கலிலியோ கலிலி என்னும் மற்றொரு அறிவியலாளர். இத்தாலியைச் சேர்ந்தவர். அவர் நமக்கு சூரிய மைய அமைப்பு (solar-centric system) குறித்துச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவர் ஒன்றும் கேரளாவைச் சேர்ந்தவரோ, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரோ அல்லது வடநாட்டைச் சேர்ந்தவரோ அல்ல. நாம் கலிலியோ கலிலியை மதிக்கிறோம். அதேபோன்றே மற்றோரு தத்துவஞானியும் வரலாற்றாசிரியருமான கியார்டனோ புரூனோவையும் மதிக்கிறோம். அவர், உண்மை மற்றும் அறிவியல் உணர்வுத் தேடலுக்காகத் (truth and scientific spirit) தன் ரத்தத்தைச் சிந்தியவர். 

இங்கே உறுப்பினர் ராகேஷ் சின்கா, இந்தியா குறித்த ஜெயஸ்வால் கோட்பாடு (Jayaswal’s theory on India), தேசியக் கல்விக் கொள்கை மற்றும் பல் விஷயங்களைக் குறிப்பிட்டார். ஆனால் அவர் காலனித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் அடிப்படைக் குணாம்சங்கள் குறித்து ஏன் எதுவும் கூறவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள், இந்தியாவின் வளங்களை எப்படிச் சூறையாடித் தங்கள் நாட்டிற்குக் கொண்டுசெல்வது என்பதற்காகவே இந்தியா குறித்து ஆய்வு செய்தார்கள். எங்கெல்லாம் காலனித்துவம் செல்கிறதோ, அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி அல்லது ரஷ்யாவாக இருந்தாலும் சரி, அங்கெல்லாம் அது அங்குள்ள மக்களைச் சுரண்டுவதற்கே முயற்சித்திடும். இதற்காக அவர்கள் அந்நாட்டு மக்களின் கலாச்சாரங்களை ஆய்வு செய்திடுவார்கள். அவர்களின் வாழ்நிலைமைகளையும் இதர அம்சங்களையும் ஆய்வு செய்திடுவார்கள். அவர்கள் நோக்க மெல்லாம் ஒன்றே ஒன்றுதான். லாபம். அதற்காக மக்களைச் சுரண்டுவது என்பது மட்டுமே.     எனவே, நாம், இந்தியக் கருத்தியல் என்றால் என்ன என்பது குறித்தும் விவாதித்திட வேண்டும்.

உறுப்பினர் ராகேஷ் சின்கா இது தொடர்பாக எண்ணற்ற விஷயங்களைக் கூறியிருக்கிறார்.

நான், மனுஸ்மிருதியிலிருந்து ஒரே ஒரு வாக்கியத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். கங்கைக்கும் யமுனைக்கும் இடையில் உள்ள மக்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று மனுஸ்மிருதி கூறுகிறது. அப்படியென்றால் தென்னிந்தியர்களின் நிலை என்ன? வட கிழக்கில் வாழும் மக்களின் நிலை என்ன?  இவை குறித்தெல்லாம் நாம் விவாதித்திட வேண்டும். இவர் கொண்டுவந்திருக்கும் இந்த விஷயம் மிகவும் ஆபத்தான ஒன்று. நாம் மனுஸ்மிருதியை, மனுஸ்மிருதியின் விழுமியங்களைத் தூக்கிப் பிடித்தோமென்றால் அது மிகவும் ஆபத்தான ஒரு விஷயமாகும். இது இந்த அவையால் நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.

எண்ணற்ற அறிவுஜீவிகள், எண்ணற்ற சமூக சீர்திருத்தவாதிகள் ஏற்கனவே இந்தக் கருத்தியலுக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார்கள்.

முப்பது கோடி ஜனங்களின் சங்கம், முழுமைக்கும் பொது உடைமை, ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை என்று மகாகவி பாரதியார் பாடினார். அவ்வாறு நம் சமுதாயம் ஒப்பிடமுடியாத அளவிற்கு உயர்ந்ததொரு சமுதாயமாகும். அவர் வாழ்ந்த சமயத்தில் நாட்டின் மக்கள்தொகை முப்பது கோடியாகும். எனவே அவர் அப்போது அவ்வாறு கூறினார். அத்தகையதொரு பொதுவுடைமைச் சமுதாயத்திற்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கக்கூடிய ஒரு சமுதாயத்திற்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

மார்ட்டின் லூதர் கிங், ஓர் அமெரிக்கர். அவர், எனக்கு ஒரு கனவு உண்டு. என் நான்கு குழந்தைகளும் ஒரு தேசத்தில் வாழும். அங்கே அவை அதன் தோலின் நிறத்தால் வகைப்படுத்தப்பட மாட்டார்கள். அவர்கள், அவர்களின் குணத்தின் தன்மையால் மட்டுமே வகைப்படுத்தப்படுவார்கள். இது மார்ட்டின் லூதர் கிங் கூறிய வாசகங்கள். இத்தகைய பொருள்பொதிந்த வாசகங்களை எப்படி நாம் நிராகரித்திட முடியும்? எனவேதான் நான் மார்ட்டின் லூதர் கிங் அவர்களை விரும்புகிறேன். நான் மகா கவி பாரதியாரை விரும்புகிறேன். அதேபோன்று நான் ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி போன்ற சிந்தனாவாதிகளை விரும்புகிறேன்.

இதேபோன்றே நான் நம் தேசத்தின் சார்வாகனன் தத்துவங்களைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன். அவர்கள் நமக்கு ஏராளமாகக் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

நாட்டில் பிராமாண மேலாதிக்கம் இங்கே அனுமதிக்கப்பட முடியாததாகும். இதுதொடர்பாக ஜவகர்லால் நேரு, அலகாபாத் பல்கலைக் கழகத்தில் கூறியதை மேற்கோள்காட்ட விரும்புகிறேன். அவர் பல்கலைக் கழகங்கள் குறித்து உரையாற்றி இருந்தார். அப்போது அவர் கூறினார்: ஒரு பல்கலைக்கழகம் என்பது மனிதகுல முன்னேற்றத்திற்காக, சகிப்புத்தன்மைக்காக, சிந்தனைகளின் சாசகங்களுக்காக, உண்மையைக் கண்டறிவதற்காக இருந்திட வேண்டும்.

இந்த வார்த்தைகளுடன் நான் என் உரையை நிறைவு செய்கிறேன். ராகேஷ் சின்காஜி, நாம் சகிப்புத்தன்மைக்காக ஒன்றுபட்டு நிற்போம். நாம் உண்மையைக் கண்டறிவதற்காக ஒன்றுபட்டு நிற்போம். எனவே, மனிதகுல முன்னேற்றத்திற்கு எதிரான சிந்தனைகளை எதிர்த்திடுவோம். மனுவாதத்தை எதிர்த்திடுவோம்.

இவ்வாறு டாக்டர் வி. சிவதாசன் பேசினார்.

(ந.நி.)

 

No comments: