Sunday, December 12, 2021

நான் ஒரு ‘மல்ட்டிபிள் மைலோமா’ நோயாளி. -ச.வீரமணி

 

நான் ஒரு ‘மல்ட்டிபிள் மைலோமா’ நோயாளி.

-ச.வீரமணி

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன், 2017 ஆகஸ்டில் நான் புதுதில்லியில் இருந்தபோது வீடு மாறினோம். புதிதாகக் குடியேறி வீட்டில் அலமாரிகளில் புத்தகங்களை எடுத்து அடுக்கியபோது, முதுகைப் பிடித்துக் கொண்டது. இரவு படுத்துவிட்டு காலையில் எழும்போது எழ முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டேன். அதேபோன்று கஷ்டப்பட்டு எழுந்தபின் சிறிதுநேரம் படுக்கையிலேயே ஓய்வு எடுத்த பின்புதான் இயல்பு நிலைக்குத் திரும்பினேன்.

இதேபோன்று ஒருசில நாட்கள் படுத்தால் எழமுடியவில்லை. எழுந்தால் படுக்க முடியவில்லை. இப்படி இருந்தநிலையில், வீர. வியட்நாம், நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொழிமாற்று வல்லுநராகப் பணிபுரியும் என் மகள், என்னை நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே வரும் ஆர்த்தோ மருத்துவர் உட்பட அனைத்து மருத்துவர்களிடம் சிகிச்சைக்காகக் காண்பித்தார். அவர்கள் என் உடல்நலம் குறித்து அனைத்துப் பரிசோதனைகளையும் செய்துவிட்டு, எனக்கு வந்திருக்கும் பிரச்சனை ஆர்த்தோ பிரச்சனை அல்ல, அது ஒரு மாதத்தில் சரியாகிவிடும். வேறு ஏதோ பிரச்சனை. அநேகமாக புற்றுநோயாகக் கூட இருக்கக்கூடும். எதற்கும் புற்றுநோய் மருத்துவர்களிடம் காட்டுங்கள் என்று கூறிவிட்டார்கள்.

இதன்பிறகு, தில்லியில் மிகவும் புகழ்பெற்ற தனியார்மருத்துவமனை ஒன்றிற்குச் சென்று காட்டியபோது அவர்கள் சில பரிசோதனைகள் எடுத்துவிட்டு, இவருக்கு சிறுநீரகப் பாதிப்பு இருக்கிறது, அதற்கு உடனடியாக மருத்துவம் பார்க்க வேண்டும், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துவிடுங்கள், இதற்கு சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள், அடுத்து இரு மாதங்கள் கழித்து, இவருக்கு வந்துள்ள புற்றுநோய்க்கான சிகிச்சையைத் தொடர வேண்டும், அதற்கு 50 அல்லது 60 லட்சம் ரூபாய் செலவாகும். அவ்வாறு செலவு செய்தீர்களானாலும் 6 மாதங்கள்தான் உயிரோடு இருப்பார் என்று கூறிய மருத்துவர், என் மகள் கொண்டுவந்திருந்த, நாடாளுமன்றத்தில் மருத்துவர்கள் பார்த்த சிஜிஎச்எஸ் (CGHS) மருந்துச்சீட்டைப் பார்த்தபின் மிகவும் பதறிப்போய், நீங்கள் எல்லாம் ஏன் இங்கே வருகிறீர்கள், பின்னர் எங்கள் சிகிச்சை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கா? என்ற விதத்தில் புலம்ப ஆரம்பித்துவிட்டார். எங்களுடன் வந்திருந்த நண்பர் ஒருவருக்கு அந்த மருத்துவமனையின் கருப்புப் பக்கங்கள் குறித்து நன்கு தெரியும். அவர், பணம் கொண்டுவரவில்லை, நாளை வருகிறோம் என்று மருத்துவரிடம் கூறிவிட்டு, வீட்டிற்கு வந்துவிட்டோம்.

பிறகு மற்றொரு மருத்துவரிடம் ஆலோசனை செய்தபோது, அவர் என்னுடைய அனைத்துப் பரிசோதனை அறிக்கைகளையும் பார்த்துவிட்டு, இவருக்கு வந்திருக்கும் நோய் சீரியசான ஒன்றுதான் என்ற போதிலும், அவசரப்பட்டு கண்ட மருத்துவமனைகளில் காட்டாதீர்கள், இவருக்கு சிகிச்சை செய்வதற்குச் சிறந்த இடம் எய்ம்ஸ் மருத்துவமனைதான். எப்பாடுபட்டாவது எய்ம்ஸ் மருத்துவமனையில் காட்டுங்கள் என்று கூறிவிட்டார்.

(டாக்டர் லலித் குமார்)


பின்னர் நாங்கள் 2017 அக்டோபர் 16  (திங்கள் கிழமை) அன்று மாலை 4 மணியளவில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இன்ஸ்டிட்யூட் ரோட்டரி கான்சர் மருத்துவமனையில், துறைத் தலைவர், டாக்டர் லலித் குமார் அவர்களைச் சந்தித்தோம். அதற்கு முன்பே அவர் வெள்ளிக்கிழமையன்று நாங்கள் அனுப்பியிருந்த என் உடல்நிலை சம்பந்தமான பரிசோதனை அறிக்கைகள் அனைத்தையும் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்திருந்தார். நாங்கள் கொண்டுசென்று பரிசோதனை அறிக்கைகளையும், எக்ஸ்ரே படங்களையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு, எனக்கு வந்திருக்கும் நோய் என்பது ‘மல்ட்டிபில் மைலோமோ’ என்கிற எலும்பு புற்றுநோயாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டுவிட்டு, அதனை உறுதிப்படுத்துவதற்காக, ‘போன் மாரோ’ (‘bone morrow test’) எடுத்துவர எழுதிக்கொடுத்தார். எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே ஒரு டெஸ்ட்டும், அவர் பரிந்துரைப்படி தனியார் ஒருவரிடமும் அதே டெஸ்ட்டும் எடுத்து இரு அறிக்கைகளையும் ஆய்வு செய்தார். இரண்டிலிருந்தும் எனக்கு மல்ட்டிபில் மைலோமா என்னும் புற்றுநோய் பீடிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்தார்.

மல்டிபில் மைலோமா என்றால் என்ன?

மல்டிபில் மைலோமா என்பது மனிதரின் உடம்பில் உள்ள எலும்புகளின் செல்களில் வரக்கூடிய புற்றுநோய் ஆகும். மனித உடல் செல்களால் ஆனவை. ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் தேவைப்படும் செல்களுக்கான கட்டுப்பாடுகளை மீறி அங்கே செல்கள் வளருமானால் புற்றுநோய் உண்டாகிறது.

எலும்பு மஜ்ஜையில் உள்ள பிளாஸ்மா செல்களில் உண்டாகும் புற்று நோயை மல்ட்டிபிள் மைலோமா என்கிறார்கள். இதனைக் கண்டறிய இடுப்பில் உள்ள எலும்பு மஜ்ஜையில் இருந்து ரத்தத்தை எடுத்து சோதனை செய்கிறார்கள். இதற்கு ‘போன் மாரோ டெஸ்ட்’ (‘bone morrow’) என்று பெயர். இதனை எனக்கு வலது பக்கம் இடுப்பில் எலும்பு மஜ்ஜையில் கடையாணி போன்று ஒரு பெரிய ஊசியைக் குத்தி, எலும்பு மஜ்ஜையிலிருந்து ரத்தத்தை எடுத்து சோதனை செய்தார்கள்.

ஒரு மர அலமாரி கரையான்களால் அரிக்கப்படுவதை ஆரம்பத்திலேயே கவனித்து, மருந்து அடித்துவிட்டோமானால் அந்த அலமாரியைக் காப்பாற்றிவிட முடியும். அதேபோன்று மனித உடலிலும் செல்கள் அரிக்கப்படுவதை ஆரம்பத்திலேயே கவனித்து அவற்றை அழிக்க மருந்து உட்கொண்டோமானால் அவற்றை அழித்துவிட முடியும்.

இன்றையதினம் புற்றுநோயின் பல வகைகளுக்கு மருந்துகள் வந்துவிட்டன. எனினும் புற்று நோய் ஸ்டேஜ் - 1, புற்றுநோய் ஸ்டேஜ் -2, புற்றுநோய் ஸ்டேஜ் 3, புற்றுநோய் ஸ்டேஜ் - 4 என்று வகைப்படுத்தி இருக்கிறார்கள். ஸ்டேஜ் 4 அநேகமாக கைவிடப்பட்ட வழக்குகளாகும். ஸ்டேஜ் 3 அளவிற்கு வயதானவர்கள் வந்துவிட்டால் அவர்களைக் காப்பாற்றுவது கடினம். ஸ்டேஜ் 1 மற்றும் ஸ்டேஜ் 2 அளவிற்கு இருப்பவர்களைக் காப்பாற்றிவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எனக்கு ‘போன் மாரோ டெஸ்ட்‘ எடுத்தபின், அதனை ஆய்வுசெய்தபோது, எனக்கு சுமார் 20 சதவீத அளவிற்குப் பாதிப்பு இருந்தது தெரியவந்த்து. நான் புற்றுநோயாளிகளின் வகையில் இரண்டாவது கட்டத்தை அடைந்திருந்தேன். இதனை என்னிடம் தெரிவிக்க வேண்டாம் என்று டாக்டர் லலித்குமார் அவர்கள் என் மகளிடம் தெரிவித்திருந்திருக்கிறார். மேலும் அவர் என்னிடம், என்னைப் பொறுத்தவரை, நான் 85 சதவீத நோயாளிகளைக் காப்பாற்றி இருக்கிறேன். நான் கொடுக்கும் மருந்துகளை ஒழுங்காக உட்கொண்டீர்களானால், அவர்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள், என்று எனக்கு நம்பிக்கை அளித்து, நான் உட்கொள்வதற்கான மருந்துகளையும், ஒவ்வொரு வாரமும் ஊசி மூலம் போட்டுக்கொள்ள வேண்டிய மருந்தையும் எழுதிக் கொடுத்தார்.

இதில் மிகவும் முக்கியமானது போர்டிசோமிப் 2 mg (Bortezomib 2mg SC diluted in 1.5 ml) normal saline) என்னும் மருந்தாகும். இதனை ஊசி மூலம் போட்டுக்கொள்ள வேண்டும்.

இந்த ஊசியின் விலை 12,500 ரூபாய்க்கும் மேலாகும். இதனை எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள மருத்துவமனையில் வாங்கினால் 90 சதவீதம் தள்ளுபடி அந்த சமயத்தில் அளிக்கப்பட்டது.  இதே ஊசி மருந்தைத்தான் இந்தியாவில் இந்த நோய்க்காக எங்கே சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் போட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இதனை ஒருவர் தனியார் மருத்துவமனையில் போட்டுக்கொண்டார் என்றால் இந்த ஊசி மற்றும் மருந்தை அவர் 12 ஆயிரத்து 500 ரூபாய் + வரி ஆகியவற்றைச் செலுத்தி தனியார் மருத்துவமனை நடத்திடும் கடையில்தான் வாங்க வேண்டும். எனக்குத் தனியார் மருத்துவமனையில் ஊசி போட மறுத்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

இத்துடன் முதுகில் வலி இருந்த இடத்தில் உள்ளுக்குள் இருந்த எலும்பு பாகத்தை சரி செய்வதற்காக ஒரு தோலால் ஆகிய சட்டை ஒன்றையும் தைத்துப் போட்டுக்கொண்டேன். கிட்டத்தட்ட ஓராண்டு காலம் இதனைப் பயன்படுத்தினேன். வீட்டிலேயே நடப்பதற்குத் துணையாக ஊன்றுகோல் ஒன்றையும் பயன்படுத்தி வந்தேன். இதுவும் சுமார் ஓராண்டு காலம் தொடர்ந்தது.

இவ்வாறு இந்த ஊசியை 16 வாரங்கள் போட்டுக்கொண்டேன். அந்த சமயத்தில் உடலில் உள்ள எலும்புகள் மிகவும் தேய்ந்து இருந்ததன் காரணமாக அவற்றின் வளர்ச்சிக்காக மேலும் சில மருந்துகளையும் டாக்டர் எழுதிக் கொடுத்திருந்தார்.

2017 அக்டோபர் 20 தொடங்கிய மருத்துவ சிகிச்சையை டாக்டர் அறிவுரையின்படி நாள்தோறும் மாத்திரை மருந்துகளை உட்கொண்டும், வாரம் ஒருமுறை அந்த ஊசியைப் போட்டுக்கொண்டும் இருந்தேன். அடுத்து மூன்று வாரங்கள் கழித்து, நவம்பர் 6இல் டாக்டரைச் சந்தித்தபோது உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டார். உங்களைச் சந்தித்த அன்றே 90 சதவீதம் சரியாகிவிட்டது என்றும், இப்போது 95 சதவீதம் சரியாகிவிட்டது போல் உணர்கிறேன் என்றும் கூறினேன். டாக்டரும் அவருக்குத் துணையாக இருந்த உதவி மருத்துவரும் சிரித்துவிட்டனர். உதவி மருத்துவர் ‘நன்றி’ என்று தமிழில் கூறினார். உடனே இயல்பாக கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டு, நீங்கள் தமிழரா? என்றேன். இல்லை. நான் பாண்டிச்சேரியில் ஜிப்மர்-இல்தான் படித்தேன். என்றார். அன்றைய தினமும் டாக்டர் எனக்கு அளித்திருந்த அதே மருந்துகளைத் தொடருங்கள் என்று எழுதிக்கொடுத்தார். அதற்கு அடுத்து, மூன்று வாரங்கள் கழித்து, நவம்பர் 27 அன்று டாக்டரைச் சந்தித்தேன்.

இவ்வாறு ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் ரத்தத்தில் எந்த அளவிற்கு மைலோமா தொற்று இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கிறார்கள். அதனைப் பெற்றுப் பரிசீலித்துத்தான் அடுத்து மருந்தினைத் தொடர்கிறார்கள். உடலில் மருந்துகள் நன்கு வேலை செய்வதை உறுதிப்படுத்திக் கொண்டுதான் சிகிச்சையைத் தொடர்கிறார்கள்.

இவ்வாறாக சிகிச்சையைத் தொடர்ந்து, வாரம் ஓர் ஊசி என்கிற முறையில் 16 வாரங்களுக்கு ஊசியைப் போட்டுக்கொண்டபின், மீண்டும் ஒருமுறை ‘போன் மாரோ டெஸ்ட்’ (bone morrow test) எடுத்து ஆராய்ந்தார்கள். இப்போது மல்ட்டிபிள் மைலோமாவின் அளவு 20 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைந்திருந்தது.

இதனைப் பரிசீலனை செய்தபின், டாக்டர் அவர்கள், அப்படியெனில் ஊசி - மருந்தை மேலும் எட்டு வாரங்களுக்குத் தொடருங்கள் என்று கூறினார். அதன்படி எட்டு வாரங்கள் மீண்டும் அந்த ஊசியைப் போட்டுக் கொண்டேன். அடுத்து ஒரு ‘போன் மாரோ டெஸ்ட்’ (bone morrow test) எடுக்கப்பட்டது. இப்போது எட்டு சதவீதம் என்பது 2 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

இதனைக் கண்ணுற்றபின் டாக்டர் கூறிய வார்த்தைகள், நான் உங்களைக் காப்பாற்றிவிட்டேன்,”” என்பதாகும். பின்னர், இதேபோன்று ஊசி - மருந்தை செலுத்தி வாழ்நாள் முழுவதும் இருந்துவிடுகிறீர்களா, அல்லது ‘stem cell transplantation’ செய்துகொள்கிறீர்களா? என்று கேட்டார். மேலும், Stem cell transplantation செய்து கொள்வது என்றால் மருத்துவமனையில் உள்நோயாளியாக 25 நாட்கள் இருந்திட வேண்டும் என்றும், சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும் என்றும் கூறினார்.

இதற்கு நான், டாக்டர், நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதற்கு நான் கட்டுப்படுகிறேன்,”” என்று பதிலுரைத்தேன். டாக்டர் சிரித்துக்கொண்டே, stem cell transplantation செய்துவிடுவோம். இப்போது bed எதுவும் காலியாகவில்லை. சுமார் இரண்டு மாதம் ஆகும். அதற்குள் ஊருக்குப் போய்விட்டு வந்துவிடுங்கள். அதன்பின் எப்போது bed காலியாகிறதோ அப்போது சொல்வேன், உடனே வந்து சேர்ந்துவிடுங்கள் என்று கூறினார்.

இதுவரை மேற்கொண்ட சிகிச்சைகள் ஓர் அனுபவம் என்றால், ‘stem cell transplantation’ செய்து கொண்டது ஒருவித அனுபவமாகும்.

அடுத்து அது எப்படி இருந்தது என்று பார்ப்போம்.

Stem cell transplantation

2017 அக்டோபர் 16 அன்று ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் சிகிச்சையைத்துவங்கியபின்னர், சுமார் பத்து மாதங்கள் கழித்து 2018 ஆகஸ்ட் 27 அன்று ‘ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளான்டேஷனுக்காக’ மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டேன். எனக்கு உடன் உறை உதவியாளராக என் வாழ்க்கைத்துணைவியார், இரா. சிவகாமசுந்தரியும், வெளியில் ஓடியாடி வேலை செய்யும் உதவியாளராக என் மகள், வீர.வியட்நாமும் இருந்தார்கள். உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அன்றே மார்பின் இடது பக்கத்தில் இரு துளைகள் போடப்பட்டு, இரு ரப்பர் குழாய்கள் சொருகப்பட்டுவிட்டன.

இதயம் மற்றும் பற்கள் நல்ல நிலையில் இருக்கிறதா என சோதித்துப் பார்க்கப்பட்டு அவை நல்ல நிலையில் இருப்பதாக சான்றிதழ்கள் பெற்றபின்னர்தான் நான் ‘ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளாண்டேஷனுக்காக’ அனுமதிக்கப்பட்டேன். உள்நோயாளியாக சேர்ந்த இரண்டாவது நாள், என் உடலில் இருந்த ரத்தம் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு, புதிதாக ரத்தம் செலுத்தப்பட்டது. இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்ட ரத்தத்திலிருந்து ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளாண்டேஷனுக்காக எனக்கு செலுத்தப்படவேண்டிய பிளாஸ்மாவில் மூன்றில் ஒரு பங்கு என் ரத்தத்திலேயே இருந்தது. பின் இரு நண்பர்கள் மூலமாக மேலும் இரு பங்கு பிளாஸ்மா சேர்த்து, எனக்கு ‘ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளாண்டேசன்’ செய்யப்பட்டது.

இதனை டாக்டர் நரேஷ் என்பவர்தான் எனக்குச் செய்தார். அவர் செய்தபோது, எப்படிக் குழந்தைகளுக்கு ஊசி போடும்போது, செவிலியர்கள் அந்தக் குழந்தையிடம் ஏதேனும் கேள்விகள் கேட்டுக்கொண்டே அந்த வலியை அது உணராத விதத்தில் ஊசியை ஏற்றுவார்களோ, அதேபோன்றே டாக்டர் நரேஷ் என்னிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளாண்டேசன் செய்தார். சுமார் 20 நிமிடங்கள்தான். அனைத்து பிளாஸ்மா செல்களும் மார்பில் செருகப்பட்டிருந்த குழாய் மூலம் என் உடலுக்குள் சென்றுவிட்டது. பின்னர் டாக்டர் நரேஷ், ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளாண்டேசன் ஓவர் என்று சொல்லிக்கொண்டு விடைபெற்றுச் சென்றார்.

மாலையில் ஆறு மணிக்குப்பிறகு, டாக்டர் லலித் என்னைப் பார்க்க வந்தபோது, நான் எழுந்து நின்று அவரை வரவேற்றபோது, அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் ஒரு ரோல் மாடல் பேஷண்ட்”” என்று என்னைப் பாராட்டிவிட்டு, இவர் குறித்து மற்ற நோயாளிகளிடமும் சொல்லுங்கள் என்று, கூட வந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கூறிவிட்டுச் சென்றார்.

அதன்பின் சுமார் பத்து நாட்கள் மருத்துவமனையில் மிகவும் கவனமாக நான் பார்த்துக் கொள்ளப்பட்ட பின், மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டேன். எனினும் அதன்பின் சுமார் நான்கு மாத காலம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும், நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் அவரைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் என் உதவியாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அதேபோன்றே நான் 120 நாட்கள் வைக்கப்பட்டிருந்து, அதன்பின் மீண்டும் மருத்துவரைச் சந்தித்தேன்.

இவ்வாறு எனக்கு, 2017 அக்டோபர் 16 தொடங்கிய ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையுடனான பயணம் கடந்த மூன்றாண்டுகளாகத் தொடர்கிறது. மாதம் ஒரு முறை டாக்டரைப் பார்த்து வந்த நான், பிறகு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, பின்னர் மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று மாற்றப்பட்டிருக்கிறது. இடையில் ஏதேனும் பாதிப்பு என்றால் போய்ப் பார்க்கலாம் என்றாலும் கடந்த மூன்றாண்டுகளில் அதுபோன்றதொரு நிலைமை எனக்கு ஏற்படவில்லை.

இடையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆறு மாதங்களாக வீட்டை விட்டே வெளியே வராது இருந்ததன் காரணமாக, சற்றே எடை கூடிவிட்டது, தொப்பை அதிகமாகிவிட்டது. இதனைக் குறைக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். மற்றபடி என் எழுத்துப் பணிக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

நான் முழுமையாகக் குணப்படுத்தப்பட்டதாகக் கூறியபோதிலும், நான் உயிருடன் இருக்கும்வரை ஒரு ‘மல்ட்டிபிள் மைலோமா’ நோயாளி என்ற ரீதியில்தான் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையால் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறேன்.

நான் வெளியில் பார்ப்பதற்கு நோயற்றவன் போலக் காட்சியளித்தாலும், நான் ஒரு நோயாளிதான். அதுவும் மல்ட்டிபிள் மைலோமா நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவன்தான். இதனை எப்போதும் கவனத்தில் கொண்டே நான் இனிவருங்காலங்களில் செயல்பட வேண்டும்.

வாகனங்கள் எதையும் ஓட்டக்கூடாது. இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்தும்கூட பயணம் செய்யக்கூடாது. தேவையானால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கலாம். ஏனெனில் உள்ளே உள்ள எலும்புகள், மற்றவர்களுக்கு இருப்பதுபோன்று வலுவானதாக எனக்கு இருக்காது என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள். திடீரென்று குனியக் கூடாது. நாள்தோறும் குறைந்தது ஒரு மணி நேரம் நடக்க வேண்டும். எளிய உடற்பயிற்சிகள் செய்திட வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இதுபோல் சிவற்றைக் கட்டாயமாக செய்துவந்தால், சமூகத்திற்கு மேலும் சில நாட்களுக்குப் பயனுள்ள விதத்தில் வாழலாம்.

அடுத்து, நான் எழுதுவதை நான் சார்ந்திருக்கும் தீக்கதிர் நாளிதழில் பார்க்கும் நம் தோழர்கள் பலருக்கு எனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்தோ, நோயின் தன்மை குறித்தோ அநேகமாகத் தெரியாது.

தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மாநிலங்களவை உரைகளைத் தொகுத்து பாரதி புத்தகலாயம் மூலம் வெளியிட ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தபோதுதான் நோய்வாய்ப்பட்டேன். அதன் வெளியீட்டு விழாவிற்குத் தோழர் பாரதி நாகராஜனும் என்னை அழைத்திருந்தார். ஆயினும் அப்போதுதான் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடங்கி இருந்தேன்.

நோயின் தன்மை அறிந்து அதிக செலவு பிடித்திருக்கும் என்பதை ஊகித்துக்கொண்ட சில நண்பர்களும், தோழர்களும் ஏதேனும் பொருள் உதவி தேவையா என்று கேட்டார்கள். என் மகள்களும், என் வாழ்க்கைத் துணைவியாரும் அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதாலும், நானும் மாநில அரசு ஓய்வூதியன் என்ற முறையில் ஓய்வூதியம் பெற்று வந்ததாலும், தீக்கதிரிலும் ஒரு தொகை மாதந்தோறும் எனக்குக் கொடுத்து வந்ததாலும், பாரதி நாகராஜனும் மொழிபெயர்ப்பு மற்றும் தட்டச்சுப் பணிக்காக அவ்வப்போது கணிசமான நிதி கொடுத்து உதவி வருவதாலும், உதவ முன்வந்ததற்கு நன்றி தெரிவித்துவிட்டு, அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டேன்.

‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மருத்துவர் டாக்டர் லலித் குமார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உற்ற துணையாக இருந்தபோதிலும், தஞ்சையில் என்மீது மிகவும் பற்று வைத்திருக்கக்கூடிய மருத்துவர் சு. நரேந்திரன் அவர்களும், சரியான முறையில் என்னை வழிநடத்தி வந்தார். அதேபோன்று தோழர் கல்யாணத்தின் மகனும் தற்போது தஞ்சை மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய்ப்பிரிவு மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர் பாரதி ராஜா அவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் பணியாற்றி வந்த காலத்திலிருந்தே ‘எனக்கு என்ன செய்ய வேண்டும்’ என்பதை அவ்வப்போது தெரிவித்து வந்தார்.

‘மல்ட்டிபிள் மைலோமா’ என்பது உலகம் முழுவதும் உள்ள ஒரு நோய்தான். ஆயினும் தமிழகத்தில் அதன் பெயர் அவ்வளவாகத் தெரியவில்லை. அதற்கான மருத்துவமும் முறையாகச் செய்யப்படுகிறதா என்றும் தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக நான் தில்லியில் இருந்ததால், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் மிகச்சிறந்த டாக்டரிடம் மிகச்சிறந்த முறையில் சிகிச்சையை எடுத்துக் கொண்டேன். தமிழகத்தில் இருந்திருந்தால் என்னவாகியிருப்பேன் என்று தெரியவில்லை.

‘மல்ட்டிபிள் மைலோமா’ என்னும் புற்று நோய் ஓர் உயிர்க்கொல்லி நோய் என்று அனைவருக்கும் தெரியும். இதனை அறிந்தவர்களில், சிறுவர்கள் அல்லது இங்கிதம் தெரியாத சிலர் ‘நீங்கள் எப்போது சாவீர்கள்?’ என்றுகூடக் கேட்கலாம். அவர்களுக்கும் சிரித்துக்கொண்டே பதில் சொல்லக்கூடிய பக்குவத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

ஒரு நோய் குணமடைய வேண்டும் என்றால், நான்கு அம்சங்களை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது, நோயாளி, மருத்துவர், மருந்து மற்றும் நோயாளிக்குத் துணை புரிபவர் என்று பொருள்படும் விதத்தில்,

உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வானென்று

அப்பால் நாற்கூற்றே மருந்து

என்று கூறுகிறார்.

மல்ட்டிபிள் மைலோமா நோயாளியான என்னை நல்ல மருத்துவர் டாக்டர் லலித் குமார், எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள், உரிய மருந்துகள் மற்றும் என்னைக் கவனித்துக்கொண்டுவரும் என் குடும்பத்தார் ஆகியவர்களின் உதவியால் மற்றவர்களைப் போல நானும் வெளித்தோற்றத்திற்கு மாறியிருக்கிறேன்.

மருத்துவரின் அறிவுரைகளின்படி எச்சரிக்கையாக இருந்தால் மேலும் சில ஆண்டுகள் இப்பூலகில் நீடிக்கமுடியும் என நம்புகிறேன்.

மருத்துவர் பணி என்பது நோயுற்று நம்மை நோக்கி வரும் மக்களுக்குத் தொண்டாட்டும் மகத்தான பணியாகும். அதிலும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும், ஊழியர்களும் நோயாளிகளிடம் பிரதிபலன் எதுவும் எதிர்பார்க்காது, அர்ப்பணிப்பு உணர்வுடன் ஊழியம் செய்வதைப் பார்க்கும்போது இனிய அதிர்ச்சி ஏற்படும்.

டாக்டர் லலித்குமார் ஒவ்வொரு நாளும் காலை பத்து மணி முதல் மாலை 6 மணி வரை தன்னுடன் உள்ள இளநிலை மருத்துவர்களுடன் சேர்ந்து நூறு நோயாளிகளுக்கு சிகிச்சை செய்கிறார்.  பின்னர் எட்டு மணி வரையிலும் உள்நோயாளிகளைப் பார்க்கச் செல்கிறார். இவ்வாறு எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் அனைவருமே மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அதனால்தான் தோழர் சீத்தாராம் யெச்சூரி மாநிலங்களவையில் உரையாற்றும்போது எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களையும், ஊழியர்களையும் மிகவும் புகழ்ந்துரைத்தார்.

..

 

 

1 comment:

ஞானகுரு.ந said...

உங்கள் மனதிடம் மருந்துகளைவிட முக்கியமானது. நீங்கள் விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் முன்போல விரைந்து நலம் வாழ வாழ்த்துகள் தோழர்.