Friday, October 16, 2020

நாங்கள், மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் உறுதியான பாதுகாவலர்கள் -சீத்தாராம் யெச்சூரி

 

 


நாங்கள், மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் உறுதியான பாதுகாவலர்கள்

-சீத்தாராம் யெச்சூரி

 

1920 அக்டோபர் 17 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவிய நூற்றாண்டு தொடர்பாக கடந்த ஓராண்டாக அனுசரித்த கொண்டாட்டங்கள் இப்போது நிறைவு பெற்றுக்கொண்டிருக்கின்றன.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு தழுவிய அளவில் நீட்டிக்கப்பட்ட சமூக முடக்கம் மற்றும் அதன் காரணமாக தனிநபர் இடைவெளி போன்று ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் நூற்றாண்டு விழாவை மிகவும் வலுவாகக் கொண்டாடமுடியாத விதத்தில் கடுமையாகப் பாதித்தன. எனினும், நமக்கிருந்த குறைந்தபட்ச வரையறைகளுக்கு உட்பட்டு, ஊடகங்களின் மூலமாகவும், டிஜிட்டல் தொடர்புகள் மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும்  கடந்த நூற்றாண்டுக் காலத்தில் இந்திய வரலாற்றில் பல்வேறு கட்டங்களில் கம்யூனிஸ்ட்டுகள் மேற்கொண்ட பங்களிப்புகளை உயர்த்திப்பிடித்து பல்வேறு இயக்கங்களை கட்சி நடத்தி இருக்கிறது.

 

நிகழ்ச்சிநிரலை வடிவமைத்தல்

 

விடுதலைப் போராட்டக் காலத்திலும் அதற்குப் பின்னரும் கணக்கிலடங்காத அளவிற்கு புரட்சியாளர்களும், தியாகிகளும் செய்திட்ட அளப்பரிய தியாகங்களின் மூலமாக இந்திய வரலாற்றின் பரிணாம வளர்ச்சியில் கட்சி வீரம் செறிந்த போராட்டங்களுக்கு எப்படியெல்லாம் தலைமை தாங்கின என்று குறிப்பிட்டிருக்கிறோம். கம்யூனிஸ்ட் கட்சி, மக்களின் உண்மையான பிரச்சனைகளை முன்னுக்குக் கொண்டுவந்ததிலும், தேசிய அளவிலான நிகழ்ச்சிநிரலுக்கான பிரச்சனைகளை வடிவமைப்பதிலும் பெரிய அளவில் பங்களிப்புகளைச் செய்திருக்கிறது.

இவற்றின் மத்தியில், இந்தியாவின் மகத்தான பன்முகத்தன்மையை அங்கீகரித்து, நம் நாட்டில் உள்ள பல்வேறு மொழிகளுக்கும் சமத்துவத்தை உத்தரவாதப்படுத்துவதும், அங்கீகரிப்பதும் அவசியம் எனக் கருதி, நாட்டின் பல்வேறு பகுதிகளையும் மொழிவழி மாற்றியமைப்பதற்கான போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியது. இந்தப் போராட்டங்களில் மற்றவர்களைவிட கம்யூனிஸ்ட்டுகள் முன்னணியில் நின்றார்கள்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கம்யூனிஸ்ட்டுகளால் தலைமை தாங்கப்பட்டு நடைபெற்ற வீரம் செறிந்த புகழ்பெற்ற நிலப் போராட்டங்கள் நிலச் சீர்திருத்தங்களுக்கான பிரச்சனையை தேசிய அளவிலான நிகழ்ச்சிநிரலாகக் கொண்டு வந்தது.  இதில் மிகவும் முக்கியமானது, தேசிய வாதத்தின் பிளவுவாத மற்றும் பிரத்தியேகக் கருத்துக்களுக்கு எதிராக (against sectarian and exclusivist notions of nationalism),  உள்ளீடான தேசியவாத பரிணாம வளர்ச்சியில் (in the evolution of inclusive nationalism) இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்புகள் இருக்கின்றன.

 

தொலைநோக்குப் பார்வைகளுக்கிடையேயான போராட்டம்

 

விடுதலைப் போராட்டக் காலத்தின்போது, உள்ளீடான இந்தியாவின் கருத்தாக்கத்தை எப்படி உருவாக்குவது என்பது குறித்து,  நாட்டில் மூன்று விதமான தொலைநோக்குப் பார்வைகளுக்கு இடையே தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்தன.  இதில் பிரதானமான காங்கிரஸ் கட்சியின் தொலைநோக்குப் பார்வை என்பது, அடைய இருக்கும் சுதந்திர இந்தியா, ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இருக்கும் என்பதாகும். கம்யூனிஸ்ட்டுகள், இதனுடன் ஒத்துப்போன அதே சமயத்தில், ஒருபடி முன்னே சென்று, அத்தகையதொரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு, முதலாளித்துவ வளர்ச்சிப்பாதையைப் பின்பற்றுமானால், நிலைத்து நிற்காது என்றும் கூறினோம். எனவே, கம்யூனிஸ்ட்டுகள் அடைய இருக்கும் அரசியல் சுதந்திரம், ஒவ்வொரு இந்தியனுக்கும் சமூக-பொருளாதார விடுதலையை விரிவாக்கிடும் விதத்தில், விரிவாக்கப்பட வேண்டும் என்றும், அது சோசலிசத்தின் கீழ் மட்டுமே சாத்தியம் என்றும் கூறியது. 

இவ்விரண்டு தொலைநோக்குப் பார்வைகளுக்கும் விரோதமான மற்றொரு மூன்றாவது தொலைநோக்குப் பார்வையும் இருந்தது. அது, அடைய இருக்கும் சுதந்திர இந்தியா அதன் மக்களின் மதஞ்சார்ந்த இணைப்புகளினால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றது. இந்தத் தொலைநோக்குப் பார்வையில் இரு விதப் போக்குகள் இருந்தன.   முஸ்லீம் லீக் கட்சி, ‘இஸ்லாமிய அரசு’ கோரியது. ஆர்எஸ்எஸ், ‘இந்து ராஷ்ட்ரம்’ கோரியது. துரதிர்ஷ்டவசமான முறையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் உதவியுடனும், உடந்தையுடனும் நாடு பாகிஸ்தான் என்றும் இந்தியா என்றும் பிரிவினைக்கு உள்ளாக்கப்பட்டு, முஸ்லீம் லீக் கட்சி பாகிஸ்தானை ‘இஸ்லாமிய அரசாக’ மாற்றும் தன்னுடைய தொலைநோக்குப் பார்வையில்  வெற்றி பெற்றது. ஆனால் இதர பகுதிகளில் இன்றுவரையிலும் அதன் பாதிப்புகள் தொடர்கின்றன. சுதந்திரம் பெற்ற சமயத்தில், ஆர்எஸ்எஸ், தங்கள் தொலைநோக்குப் பார்வையை எய்த முடியாது தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சுதந்திரத்திற்குப்பின் அமைந்திட்ட மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை, தங்களுடைய ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றுவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தது. இன்றையதினம் இம்மூன்று தொலைநோக்குப் பார்வைகளுக்கும் இடையேயான போராட்டம், சித்தாந்தப் போராட்டங்களாகவும், அரசியல் மோதல்களாகவும் இந்த வழியில், இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகும்.

 

மதச்சார்பற்ற ஜனநாயகம் 


கம்யூனிஸ்ட் கட்சியின் தொலைநோக்குப் பார்வை, மதச்சார்பின்மையும், ஜனநாயகமும் தனித்துவம் மிக்க, வெவ்வேறான அம்சங்கள் இல்லை  என்பதையும், மாறாக அவை ஒருங்கிணைந்தவை என்கிற உண்மையை அங்கீகரித்திருந்தது.  இந்தியாவின் எதார்த்த நிலைமையில் அவை உள்ளார்ந்த முறையில் ஒருங்கிணைந்தவைகளாகும். இந்தியாவின் பன்முகத்தன்மையை அங்கீகரித்து அனைத்துத் தரப்பினருக்கும் சமத்துவமும் பாதுகாப்பும் அளிப்பது, அதிலும் குறிப்பாக மதச்சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிப்பது, ஜனநாயகத்தின் ஓர் அவசியமான மூலக்கூறாகும். அதேபோன்று, ஜனநாயக உரிமைகளோ, குடிமை உரிமைகளோ இல்லாமல், மதச்சார்பின்மை நிலைத்திருக்க முடியாது. உண்மையில், அரசமைப்புச்சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள பொருளாதார சமத்துவம், அரசியல் சமத்துவம் மற்றும் சமூக சமத்துவம் ஆகிய அனைத்தும், துடிப்புள்ள ஜனநாயகம் இல்லாமல் நிறுவப்பட முடியாது. கம்யூனிஸ்ட்டுகள் கடந்த காலங்களிலும் சரி, இப்போதும் சரி, இந்தியாவில் இத்தகைய மதச்சார்பற்ற ஜனநாயகத்தை மிகவும் உறுதியுடன் உயர்த்திப்பிடிப்பவர்களாக தொடர்கிறார்கள்.

உண்மையில், 1920இலேயே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டவுடன், கட்சியில் சார்பில் எம்.என். ராய், 1920இல் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த மதக்கலவரங்களுக்குப் பின்னணியில், மதக் கலவரங்களைக் கட்டுப்படுத்தவதற்கான மாமருந்து, அனைத்து சாதியினரும் அனைத்து மதத்தினரும் இணைந்த உழைக்கும் மக்களின் வர்க்க ஒற்றுமை மட்டுமே என்று எழுதினார். அன்றிலிருந்து, கடந்த நூறாண்டுகளாக, கம்யூனிஸ்ட்டுகளின் பணி, இதற்கு அழுத்தம் கொடுத்து, ‘உழைக்கும் மக்களின் ஒற்றுமையை’ வலுப்படுத்தும் விதத்திலேயே இருந்து வந்திருக்கிறது.

1920இல் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டபின்னர், நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் ஒவ்வொரு மாநாட்டிலும், தேசிய இயக்கத்தின் நிகழ்ச்சிநிரல் என்னவாக இருந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஓர் அறிக்கை (manifesto) சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு 1921 அகமதாபாத் மாநாட்டின்போதும், 1922 கயா மாநாட்டின்போதும் பின்னர் நடைபெற்ற மாநாடுகளிலும் அளிக்கப்பட்டது.    

இவற்றிற்கு மத்தியில், 1926 குவஹாத்தியில் நடைபெற்ற மாநாட்டில் அளிக்கப்பட்ட அறிக்கையில், நாட்டில் அதிகரித்துக்கொண்டிருக்கும் மதவெறி மோதல்கள் குறித்து தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. உழைக்கும் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்திட வலியுறுத்தி அதில் கூறியிருந்ததாவது:

கடந்த சில ஆண்டுகளாக நாட்டையே பேரழிவிற்கு உள்ளாக்கியுள்ள வகுப்புவாத மோதல்களால், பலர் ஊக்கமிழந்துள்ளார்கள். நிச்சயமாக இது ஓர் ஊக்கமிழக்கச்செய்யும் நிகழ்வுதான். ஆனாலும், மீண்டும் ஒருமுறை மக்களின் கட்சி, இதற்குத் தீர்வைக் காணும். உயர் வர்க்கத்தார் தங்களுடைய உரிமைகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் போராடக்கூடிய அதே சமயத்தில், இரு சமூகத்திலும் இருக்கின்ற வெகுமக்கள், பொதுவாகவே ஒரு முக்கியமான அம்சத்தைப் பெற்றிருக்கிறார்கள். அதுதான் சுரண்டல். இந்து தொழிலாளர்களும், முஸ்லீம் தொழிலாளர்களும் ஒரே தொழிற்சாலையில் வியர்வை சிந்தி உழைக்கிறார்கள். இந்து விவசாயிகளும், முஸ்லீம் விவசாயிகளும் பக்கத்தில் பக்கத்தில்தான் நிலத்தில் உழுகிறார்கள். எனினும் இருவரும் சேர்ந்தே நிலப்பிரபுவாலும், பணலேவாதேவிக்காரராலும், ஏகாதிபத்தியத்தின் ஏஜண்டுகளாலும் சமமான அளவிலேயே சூறையாடப்படுகிறார்கள். முஸ்லீம் தொழிலாளி, தன் மதத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே முஸ்லீம் முதலாளியால் கூடுதலாக சலுகை எதுவும் அளிக்கப்படுவதில்லை. அதேபோன்றே இந்து நிலப்பிரபு, தன்கீழ் உள்ள இந்து குத்தகை விவசாயியிடமிருந்து, முஸ்லீம் விவசாயியிடம் பெறக்கூடிய வாரத்தை விடக் குறைவாக ஒன்றும் பெற்றுக்கொள்வதில்லை.

இதே விதிதான் பெரிய அளவில் (சிறிய அறிவுஜீவிகள், சிறிய வர்த்தகர்கள், கைவினைஞர்கள் போன்ற) மத்திய தர வர்க்கத்தினர் சுரண்டப்படுவதிலும் பிரயோகிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த மக்களில் சுரண்டல் சங்கிலியால் கட்டப்பட்டுள்ள 98 சதவீத மக்கள் மதவெறி மோதல்களில் தங்களைச் சம்பந்தப்படுத்திக்கொள்வதற்கு எவ்விதமான காரணமும் கிடையாது. அவர்களின் பொருளாதார நலன்களை உணர்வுபூர்வமாக அவர்கள் புரிந்துகொள்வதற்கு உதவிடுவோம்.  தங்களின் பொது எதிரியை, தங்களைச் சுரண்டும் சக்திகளை, எதிர்ப்பதற்கான போராட்டத்திற்கு அவர்களைத் துணிவுடன் தலைமையேற்கச் செய்திடுவோம். அதன்மூலம்  வகுப்புவாத மோதலைத் தூண்டும் நயவஞ்சகக் கொள்கையின் ஆணிவேரை வெட்டி வீழ்த்திடுவோம். இதனை ஒரேயிரவில் செய்ய முடியாது என்பது உண்மைதான். ஆனாலும், தேசிய இயக்கத்தின் நாடி நரம்புகளில் ஊடுருவியிருக்கின்ற மதவெறி என்னும் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுவதற்கு வேறெந்தப் பரிகாரமும் கிடையாது.            

 

மதச்சார்பின்மை

 

கம்யூனிஸ்ட்டுகளின் கொள்கைவழி நிலைப்பாடு: மதச்சார்பின்மை என்பதன் பொருள் அரசியலிலிருந்து மதத்தைத் தனியே பிரிப்பது என்பதேயாகும். இதன் பொருள் அரசு என்பது மத நம்பிக்கையைப் தெரிவு செய்துகொள்ளும் ஒவ்வொரு தனிநபரின் உரிமையையும் எவ்விதத்தயக்கமுமின்றிப் பாதுகாக்கும் அதே சமயத்தில், அரசு எந்தவொரு மதத்தையும் சார்ந்திருப்பதோ, பிரச்சாரம் செய்வதோ கூடாது. நடைமுறையில், இந்தியாவில் சுதந்திரம் பெற்ற பின்னர், மதச்சார்பின்மை என்பது, அனைத்து மதங்களும் சமம் என்கிற முறையில் வரையறுக்கப்படக்கூடியவிதத்தில் சுருக்கப்பட்டது. இதற்குள் ஒளிந்திருக்கும் ஒருதலைப்பட்சமான போக்கு என்பது, பெரும்பான்மையோரின் மத நம்பிக்கையை நோக்கி அரசை இழுத்துச் செல்வது என்பதாகும்.  உண்மையில், இதுதான் மதவெறி சக்திகளுக்கும், அடிப்படைவாத சக்திகளுக்கும் இன்றையதினம் தங்கள் மதவெறித் தீயை விசிறிவிடுவதற்கு வாய்ப்பாக  அமைந்தது.

எனவே, கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை, மதச்சார்பின்மையைப் பாதுகாப்பது என்பதோ, அல்லது மதச்சார்பற்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என்பதோ, இந்தியாவின் உள்ளீடான தேசியவாதத்தைப் பாதுகாப்பதற்கும், அத்துடன் இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கும் முக்கியம் மட்டுமல்ல, சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அரசமைப்புச்சட்டம் உத்தரவாதப்படுத்தியுள்ள சமத்துவத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கும், அதிலும் குறிப்பாக மிகவும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு மத்தியில் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் சோசலிசத்தின் குறிக்கோளை நோக்கி அவர்களை முன்னேற வைப்பதற்கும் மிகவும் முக்கியமாகும். இத்தகு ஒற்றுமையை வகுப்புவாதம் சீர்குலைக்கிறது. இந்தியாவின் வரலாற்றை பின்னடைவு மற்றும் பின்தங்கிய நிலைக்கு எடுத்துச்செல்கிறது.   

 

மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்கான போராட்டம்

 

இந்தியாவில், மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2000 ஆண்டு கட்சித் திட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

மதச்சார்பற்ற அடித்தளங்களுக்கான அச்சுறுத்தல், மத்தியில் வகுப்புவாத மற்றும் பாசிஸ்ட் ஆர்எஸ்எஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் பயமுறுத்தும்விதத்தில் மாறி இருக்கிறது. அரசின் நிறுவனங்கள், நிர்வாகம், கல்வி அமைப்பு மற்றும் ஊடகங்கள் அனைத்திலும் மதவெறி நஞ்சை ஏற்றுவதற்கான முயற்சிகள் படிப்படியாகத் திட்டமிட்டமுறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. (பத்தி 5.7)

மேலும், கட்சித் திட்டத்தில், கட்சியின் கடமையாகக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: மதஞ்சார்ந்த வகுப்புவாதத்தின் அடிப்படையில் பாசிஸ்ட் போக்குகள் அதிகரித்துவரும் ஆபத்து அனைத்து மட்டங்களிலும் உறுதியுடன் எதிர்த்து முறியடிக்கப்பட்டாக வேண்டும். (பத்தி 5.8)

பாஜக, அரசாங்கத்தில் அமர்ந்திருப்பது இந்திய அரசமைப்புச்சட்டத்திற்கு ஆழமான முறையில் ஆபத்துக்களைக் கொண்டுவந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, கட்சித் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: பாரதிய ஜனதா கட்சி,  பிரிவினை மற்றும் வகுப்புவாத மேடையுடன், பிற மதங்களுக்கு எதிராக வெறுப்பையும், சகிப்பின்மை மற்றும் அதிதீவிர தேசியவெறி கொண்ட பிற்போக்கு சாராம்சங்களுடனும் கூடிய ஒரு பிற்போக்கான கட்சியாகும். பாஜக ஒரு சாதாரண முதலாளித்துவக் கட்சி அல்ல. இது, பாசிஸ்ட் ஆர்எஸ்எஸ் வழிகாட்டக்கூடிய, ஆதிக்கம் செலுத்தக்கூடிய கட்சியாகும். பாஜக அதிகாரத்தில் இருக்கும் போது, ஆர்எஸ்எஸ் அரசு அதிகாரத்தின் அனைத்துக் கருவிகளிலும் மற்றும் அரசு எந்திரத்திலும்  வழியேற்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்துத்துவா சித்தாந்தம் கடந்தகாலப் பழக்க வழக்கங்களை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது. இந்து ராஷ்ட்ரத்தை நிறுவ வேண்டும் என்கிற குறிக்கோளுடன் இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தை நிராகரிக்கிறது. (பத்தி 7.14)

 

கார்ப்பரேட் மதவெறிக் கூட்டணி

இன்றைய நடப்புப் பின்னணியில், 2019 பொதுத் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தபின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு, ‘இந்திய ஆளும் வர்க்கங்கள் இப்போது ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மிக அதிகமான அளவில் மாறிக்கொண்டிருக்கும் விதத்தில் ஒரு கார்ப்பரேட் - மதவெறிக் கூட்டணியை ஏற்படுத்தி இருக்கின்றன’ என்று குறிப்பிட்டது. மத்தியக்குழுவின் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டதைப்போல பின்னர் நடைபெற்றுள்ள நிகழ்ச்சிப் போக்குகள் இவற்றைத் தெளிவானமுறையில் நிரூபித்துள்ளன.

மேலே கூறிய அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்தியக் குழு அறிக்கைகள், எந்த அளவிற்கு, ஆர்எஸ்எஸ்/பாஜக/மோடி தலைமையிலான அரசாங்கம், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றையும் அதனால் அறிவிக்கப்பட்ட சமூக முடக்கத்தையும், மக்களின் நடவடிக்கைகள் மீது திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் பயன்படுத்திக்கொண்டு,   இந்தியாவின் அரசமைப்புச்சட்ட ஒழுங்கை இடித்துத் தரைமட்டமாக்கிடக்கூடியவிதத்தில் முழுமையாகத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.   பெரிய அளவில் தாராளமயம், நாட்டின் சொத்துக்களை சூறையாடுதல், நாட்டின் விவசாயத்தை அந்நிய வர்த்தக நிறுவனங்களுக்கு அடகு வைத்திடும் விதத்தில் புதிய வேளாண் சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டிருப்பது ஆகியவற்றின் மூலமாக நவீன தாராளமய சீர்திருத்தங்களை மிகவும் மூர்க்கத்தனமாகப் பின்பற்றி, தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள் மற்றும் அனைத்து  உழைக்கும் மக்களின் உரிமைகள் மீதும் கடுமையாகத் தாக்குதல்கள் தொடுத்திருக்கிறது, மதவெறித் தீயை மிகவும் பயங்கரமான முறையில் கூர்மைப்படுத்தி, முஸ்லீம்களைக் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறது. தங்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துவேறுபாடு கொண்டவர்களையெல்லாம் ‘தேச விரோதிகள்’ என முத்திரை குத்தி, அரக்கத்தனமான சட்டங்கள் மூலமாகக் கைது செய்திருக்கிறது, குடிமை உரிமைகள் மீதும், மனித உரிமைகள் மீதும், ஜனநாயக உரிமைகள் மீதும் தாக்குதல் தொடுத்திருக்கிறது. இவ்வாறு ஏவப்பட்டுள்ள தாக்குதல்கள் அனைத்தும் மக்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைகளின்மூலமாக தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும்.

இதற்கு நாம், மதவெறி சக்திகளுக்கு எதிரான போராட்டமும், நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டமும் தனித்தனியானவை அல்ல என்பதையும், அவை நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்கான ஒருங்கிணைந்த போராட்டத்தின் ஒரு பகுதியே என்பதையும், உழைக்கும் வர்க்கத்தின் லட்சியங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான போராட்டங்களின் ஒரு பகுதியே என்பதையும் அங்கீகரிப்பது அவசியமாகும். இன்றைய பின்னணியில், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம், இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடனும், அதனால் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை உத்தரவாதப்படுத்துவதற்கான போராட்டங்களுடனும் பிரிக்கமுடியாதவைகளாகும். அவற்றைப் பாதுகாப்பது மட்டுமல்ல, அவற்றை முன்னெடுத்துச் சென்று வெல்வதும் அவசியமாகும்.  கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதைக் கடந்த ஓராண்டு காலமாக அனுசரித்ததன் மூலம், நாட்டையும், உழைக்கும் மக்களையும் பாதுகாப்பதற்கான இந்தப் போராட்டத்தை வலுப்படுத்திட நாம் நம் உறுதியை இரட்டிப்பாக்கிக் கொள்ள வேண்டும்.

மோடி அரசாங்கம் இந்தியாவை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பிள்ளையாக மாற்றிக்கொண்டிருப்பதால், இது ஒரு வல்லமை மிக்க போராட்டமாகும்.  நம்முடைய புரட்சிகர லட்சியங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு,  இவ்வாறு நம்மீது ஏவப்பட்டுள்ள பன்மடங்கு சவால்களையும் எதிர்த்துநின்று முறியடித்திட நம்மை நாம் தயார்செய்துகொள்வது இன்றைய காலத்தின் தேவையாகும்.

(தமிழில்: ச. வீரமணி)  

 

 

No comments: