Sunday, August 18, 2019

“பெரும்பான்மையின் கொடுங்கோன்மை”




சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்
(ஆகஸ்ட் 7 அன்று ஐந்து இடதுசாரிக் கட்சிகள், தலைநகர் புதுதில்லியில் நாடாளுமன்றம் நோக்கி கிளர்ச்சிப் பேரணி நடத்தின. அந்த சமயத்தில் ப்ரண்ட்லைன் செய்தியாளர் டி.கே.ராஜலட்சுமி அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை நேர்காணல் கண்டபோது, சீத்தாராம் யெச்சூரி இந்திய அரசமைப்புச்சட்டம் எவ்வாறெல்லாம் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும், ஜனநாயகமும் கூட்டாட்சித்தத்துவமும் எவ்வாறெல்லாம் அரித்து வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் கூறினார். அவற்றின் சாராம்சம் வருமாறு):
கேள்வி: அரசமைப்புச் சட்டத்திலிருந்து 370ஆவது பிரிவு நீக்கப்படுவதற்கு இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது, ஏன்?
சீத்தாராம் யெச்சூரி: இவ்வாறு 370ஆவது பிரிவை நீக்கியதன் மூலமாக, இந்திய ஒன்றியத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இணைத்த சமயத்தில் காஷ்மீர் மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளை மீறியிருப்பது மட்டுமல்லாமல், இவ்வாறு இதனை ரத்து செய்திருக்கிற விதம் அரசமைப்புச்சட்டம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் உணர்வுகளுக்கும் எதிரானதாகும். அரசமைப்புச் சட்டத்தின் 3ஆவது பிரிவு, ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்ற வேண்டுமெனில் அதற்கு அம்மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல் வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், இப்போது அங்கே மத்திய அரசின்கீழ் நேரடி ஆட்சி நடைபெறுவதால், அதனை மேற்கொண்டுவரும் ‘ஆளுநர்’ மாநில சட்டமன்றத்திற்குச் சமம் என்று தந்திரமாகக் கூறிக்கொண்டு இதனைச் செய்திருக்கிறது. இதன்மூலமாக மத்திய அரசு நாட்டில் இதுவரை மொத்தம் 29 மாநிலமாக இருந்ததை, 28ஆகக் குறைத்திருக்கிறது. மேலும் மத்திய அரசு, காஷ்மீர் மாநிலத்தை நடைமுறையில் மூன்றாகப் பிரித்திருக்கிறது. ஆயினும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளை ஒரே நிர்வாகக்குடையின் கீழ் கொண்டுவந்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் விருப்பத்தைக் கேட்காது இவ்வாறு செய்திருப்பதால், இது அரசமைப்புச் சட்டத்தின் உணர்வை மீறிய செயலாகும்.
370ஆவது பிரிவின் பின்னணியைப் புரிந்துகொள்ளவேண்டியது முக்கியமாகும். ஆரம்பத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தினை ஆட்சி செய்து வந்த டோக்ரா மன்னர் தன் மாநிலத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைத்திட விருப்பமின்றிதான் இருந்தார். தனியாகவே ஒரு சுதந்திர நாடாக  ஆட்சி புரியவேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார். நாடு இரண்டாகத் துண்டாடப்பட்ட சமயத்தில், பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிவந்து தாக்கியவர்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை வலுக்கட்டாயமாகத் தங்களுடன் இணைத்துக்கொள்ள விரும்பியபோது, மன்னராட்சிக்கு எதிராக அந்த சமயத்தில் மக்களுக்குத் தலைமை தாங்கிப் போராடிக் கொண்டிருந்த ஷேக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் இணைத்திட வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இந்தியாவில் இடதுசாரிகள் ஆட்சி செய்த மாநிலங்கள் அல்லாது நிலச்சீர்திருத்தம் சிறப்பாக அமல்படுத்தப்பட்ட ஒரே மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம்தான். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு ஜனநாயக உரிமையும், மதச்சார்பின்மை உரிமையும் அளிக்கப்படும் என உறுதிமொழி அளிக்கப்பட்டதால், ஷேக் அப்துல்லா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடனேயே இணைக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த அடிப்படையில்தான், சுதந்திரத்திற்குப்பின்னர் 370ஆவது பிரிவு வரையப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. அப்போது இந்தியா அரசாங்கத்தால் பவித்திரமான உறுதிமொழிகள் (solemn promises) அளிக்கப்பட்டன.  ஆனால் இன்றையதினம் ஒரேயொரு கையெழுத்தின்மூலமாக அவ்வாறு அளித்த அனைத்து உறுதிமொழிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இதை மேற்கொண்டவிதம் மிகவும் தான்தோன்றித்தனமானதாகும். எனவேதான் இடதுசாரிக் கட்சிகள் இதனை எதிர்க்கின்றன.
கேள்வி: இவ்வாறு 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டிருப்பதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? அரசாங்கத்தின் தரப்பில் நாங்கள் அங்குள்ள பயங்கரவாதம் மற்றும் வளர்ச்சி முதலியவற்றில் கவனம் செலுத்துவோம் என்று கூறப்படுகிறதே!
சீத்தாராம் யெச்சூரி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதமும் அமைதியின்மையும் வளர்ந்திருப்பதற்கு அங்கே 370ஆவது பிரிவு இருப்பதுதான் காரணம் என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டு வந்தது. ஆனால் உண்மை நிலை என்ன தெரியுமா? அங்கே 370ஆவது பிரிவு கொஞ்சம் கொஞ்சமாகக் கணிசமான அளவிற்கு அரிக்கப்பட்டுவிட்டது. இப்போது மத்திய அரசின் பட்டியலில் உள்ள 97 இனங்களில் 94 இனங்கள் அம்மாநிலத்திற்கும் பொருந்தும். அங்கே சுயாட்சி இருந்ததாகக் கூறப்பட்டுவந்ததெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கப்பட்டுவிட்டது. ஜனநாயகம் தொடர்ந்து மீறப்பட்டது. அரசாங்கங்கள் தொடர்ந்து கவிழ்க்கப்பட்டன. கட்சித் தாவல்கள் ஊக்குவிக்கப்பட்டன. வளைந்து கொடுக்கும் அரசாங்கங்கள் சமீபகாலங்களில் அங்கே அமர்த்தப்பட்டன. இவற்றின் ஜனநாயக சாராம்சங்கள் கடுமையாக அரித்து வீழ்த்தப்பட்டன. இவ்வாறு அங்கே ஜனநாயகமும், சுயாட்சியும் படிப்படியாக அரித்துவீழ்த்தப்பட்டதன் காரணமாக மக்கள் அந்நியப்படுவதற்கு இட்டுச் சென்றது. இதனை பாகிஸ்தான் அதிகபட்ச அளவில் பயன்படுத்திக்கொண்டது. இதனைத் தொடர்ந்து அங்கே விடுதலை (Azadi) முழக்கங்கள் கேட்கத் தொடங்கின. எனவே இவற்றுக்கான மூலகாரணம் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு அல்ல. மாறாக அங்கே ஜனநாயகம் அரித்துவீழ்த்தப்பட்டிருப்பதுதான் மக்கள் அந்நியப்படுவதற்கு இட்டுச் சென்றது. இதில் மிகவும் விசித்திரமான விஷயம் என்னவென்றால் இவை அனைத்தையும் மோடி-1 அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அங்கீகரித்ததுதான். அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்சித் தூதுக் குழுவும் அப்போது அதன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையும் கூறியது என்ன தெரியுமா? காஷ்மீர் மக்களுடனான பிணைப்பை வலுப்படுத்துவதற்கு, ஜம்மு-காஷ்மீரில் இயங்கிடும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் மற்றும் இயக்கங்களுடனும் கலந்துபேசி நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிசெய்வதற்காக, ஓர் அரசியல் பேச்சுவார்த்தைக்கான நடைமுறை துவங்கப்படும்.இதுதான் அந்த அறிக்கையில் இருந்த வாசகங்கள். எனினும் கடந்த மூன்றாண்டுகளில் இதுதொடர்பாக அவர்கள் எதுவுமே செய்திடவில்லை. இது, அவர்களின் இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையிலான நிலைப்பாடாகும். காஷ்மீரை, முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு மாநிலமாகத்தான் அவர்கள் பார்க்கிறார்கள். அதனை, இந்தியாவில் உள்ள இதர பகுதிகளுடன் இணைக்கிறோம் என்ற பெயரில் 370ஆவது பிரிவை ரத்து செய்திட அவர்கள் விரும்பினார்கள். அவர்கள் அந்த நிலப்பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்களே யொழிய, அங்குள்ள மக்களின் மனதை வென்றெடுக்க வேண்டும், மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்  என்று விரும்பவில்லை.   அவர்கள் அங்கே இருந்த மாநில அரசில் ஓர் அங்கமாக இருந்தார்கள். பின்னர் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டார்கள். பின்னர் அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்தார்கள், சட்டமன்றத்தைக் கலைத்தார்கள், மத்திய ஆட்சியைத் திணித்தார்கள்,  பின்னர் அதனை 370ஆவது பிரிவை ரத்து செய்வதற்கும் பயன்படுத்திக் கொண்டார்கள்.
அங்கே இயல்பு வாழ்க்கை மற்றும் ஸ்திரமான நிலைமை உருவானால்தான், பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும். அங்கே இயல்பு வாழ்க்கையும் ஸ்திரமான நிலைமையும் பாதிப்புக்கு உள்ளானதற்கு 370ஆவது பிரிவு காரணம் அல்ல. அந்தப்பிரிவு படிப்படியாக அரிக்கப்பட்டது. அந்தப் பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கப்பட்டன. கடந்த முப்பதாண்டு காலமாக அம்மாநிலத்திற்கு என்று அளிக்கப்பட்ட சுயாட்சி படிப்படியாக அரிக்கப்பட்டது. இவை அனைத்தும்தான் இன்றைய நிலைமைக்குக் காரணங்களாகும்.  ராணுவம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிற ஒரு மாநிலத்தில் வளர்ச்சி என்பது சாத்தியமே இல்லை. 370ஆவது பிரிவு நீக்கப்பட்ட விதத்தை ஆராய்ந்து பாருங்கள். அதனை நீக்குவதற்கு முன்பு, 45 ஆயிரம் துருப்புக்கள் அங்கே கொண்டுசெல்லப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் திரும்பிச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். மாநிலத்தின் அனைத்து அரசியல்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மூன்று, நான்கு மாதங்களுக்கான உணவுப்பொருள்களையும் அத்தயாவசியத் தேவைகளையும் பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள் என்று மக்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மக்கள் மத்தியில் நிச்சயமற்றதன்மையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தின. எனவே, இங்கே வளர்ச்சி என்கிற பேச்சுக்கே இடமில்லை.
கேள்வி:  ஆர்எஸ்எஸ்/பாஜக, 370ஆவது பிரிவு தொடர்பாக தாங்கள் எடுத்துள்ள தவறான நடவடிக்கை குறித்து எவ்வித வருத்தத்துடனோ குற்றவுணர்வுடனோ இருப்பதாகத் தெரியவில்லையே! 370ஆவது பிரிவை ரத்து செய்த விதம் முன்னெப்போதுமில்லாத ஒன்றாக சித்தரிக்கப்படுகிறதே! வாஜ்பாயி அரசாங்கத்தின்போதுகூட இதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவில்லையே!
சீத்தாராம் யெச்சூரி: 370ஆவது பிரிவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான் எப்போதுமே அவர்கள் குறிக்கோளாக இருந்து வந்தது. ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்தவரை அவர்கள் புரிதல் என்னவென்றால், இந்தியாவுடன் காஷ்மீர் இணைய வேண்டும் என்று கூறுகிற அதே சமயத்தில் அங்கு வாழும் மக்களைப்பற்றி அவர்களுக்கு அக்கறை கிடையாது. இதில் வேடிக்கையான முரண்பாடு என்னவெனில், வாஜ்பாயி பிரதமராக இருந்த சமயத்தில், மனிதாபிமானம், ஜனநாயகம் மற்றும் காஷ்மீரிகளின் பண்பாடு (Humanism, Democracy and Kashmiri ethos) என்று பேசினார். ஆனால் இப்போது காஷ்மீரிகள் முற்றிலுமாக ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்.
கூட்டாட்சித் தத்துவம் முற்றிலுமாக அடித்து நொறுக்கப்பட்டு, ஜனநாயகம் தகர்க்கப்பட்டிருக்கிறது. இதனை நிறைவேற்றியவிதத்தில் மனிதாபிமானம் என்பது முழுமையாக இல்லை.
கேள்வி: அரசாங்கம் கொண்டுவந்த தீர்மானத்தினை சில மாநிலக் கட்சிகளும், பாஜகவை எப்போதுமே எதிர்த்துக் குரல்கொடுத்துவரும் சில அரசியல் கட்சிகளும்கூட ஆதரித்திருக்கின்றனவே!
சீத்தாராம் யெச்சூரி: இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள கதி, பாஜக-விற்குப் பிடிக்காத இந்தியாவில் இருக்கின்ற வேறு எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் பின்னர் ஏற்படலாம். எதிர்க்கட்சி ஆளும் எந்த மாநிலமும் மத்திய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட முடியும். பின்னர் நாடாளுமன்றத்தின் மூலமாக அம்மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட முடியும். இது, ஒற்றை ஆட்சிமுறை (unitary structure)யை நோக்கி நகர்வதற்கான நடவடிக்கையாகும். இதைத்தான் இந்துத்துவா சித்தாந்தமும் கோருகிறது. இவ்வாறு இந்தியாவை ஒரேகுடையின்கீழ் கொண்டுவர முயற்சிப்பது, நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கு, அதாவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும். இத்தகைய முயற்சிக்கு மாநிலக் கட்சிகளில் சில, துரதிர்ஷ்டவசமானமுறையில், ஆதரவு அளித்திருப்பது என்பது, தான் அமர்ந்திருக்கிற மரக் கிளையைத் தானே வெட்டிச் சாய்ப்பதைப்  போன்றதாகும். இவ்வாறு அவர்கள், பாஜகவின் நடவடிக்கையை ஆதரிப்பதற்கு இட்டுச்சென்ற கட்டாய நிலைமைகள் என்ன என்பதை அனைவரும் அறிவோம்.  பாஜக அரசாங்கம் எப்படியெல்லாம் மாநில அரசுகளுக்கு நிர்ப்பந்தங்கள் கொடுக்க முடியும் என்பதையும், மத்திய அரசின் உதவிகளை மறுக்க முடியும் என்பதையும் அனைவரும் அறிவோம். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சிதைத்து, யூனியன் பிரதேசங்களாக மாற்றும் தீர்மானத்தை ஏன் ஆதரித்தோம் என்று மாநிலங்களில் ஆட்சி செய்யும் அந்த மாநிலக் கட்சிகள்தான் பதிலளித்திட வேண்டும். மத்திய ஆட்சியாளர்கள் அனைத்துவிதமான ஜனநாயக விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருவதை சமீபகாலங்களில் நாம் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். உதாரணமாகக் கூறவேண்டுமானால், கர்நாடக மாநிலத்தில் குதிரை பேரத்தைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைப்பது, பின்னர் வேறு சில இடங்களில் அதனைப் பயன்படுத்தி தன் ஆட்சியை ஏற்படுத்திக்கொள்வது, அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றுமொரு அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்வது. இந்த நடவடிக்கைகளை எல்லாம் நாம் நன்கு அறிவோம்.
கேள்வி: நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், அரசாங்கம் சட்டமுன்வடிவுகளை அவசரகதியில் நிறைவேற்றியிருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றனவே!
சீத்தாராம் யெச்சூரி: நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மிகவும் ஆபத்தானதாகும். நான் அங்கே இருந்தபோது, தேர்தல் முடிந்தபின் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் மிகவும் குறுகிய நாட்களே நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள். பின்னர் ஏதாவது அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் இருக்குமானால் எடுத்துக் கொள்ளப்படும். பின்னர், கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படும். நாடாளுமன்றக் குழுக்கள் அமைக்கப்படும். அவ்வாறு அமைக்கப்பட்டபின் நடைபெறும் அடுத்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்படவேண்டிய சட்டமுன்வடிவுகள் நுண்ணாய்வுக்காகவும் அவற்றின் கருத்துக்களுக்காகவும் இக்குழுக்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு சட்டமுன்வடிவுகள் செம்மை செய்யப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடரில் இவ்விதம் எவ்விதமான ஆய்வும் செய்யப்படாது 30 சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.  சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், தனிநபர் எவரையும் பயங்கரவாதி என முத்திரை குத்த வகைசெய்யும் தேசியப் புலனாய்வு முகமைச் சட்டம் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள நீதிபரிபாலன அமைப்பு முறை, மாற்றியமைக்கப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவரே தான் குற்றவாளி அல்ல என்பதை மெய்ப்பிக்கவேண்டும் என்ற முறையில் தலைகீழாக மாற்றப்பட்டிருப்பது போன்று இச்சட்டமுன்வடிவுகளில் சில மிகவும் ஆபத்தானவைகளாகும்.   
நம் நாட்டில் நீதிபரிபாலன அமைப்பு முறை இதுவரை இருந்தது எப்படி எனில், ஒருவர் நீதிமன்றத்தின் முன் குற்றஞ்சாட்டப்பட்டவராக நிறுத்தப்பட்டு, அவர் குற்றம் செய்திருக்கிறார் என்பதை அரசுத்தரப்பில் சாட்சிகள் மற்றும் சான்றாவணங்களைக் கொண்டு நிரூபித்திட வேண்டும். பின்னர்தான் நீதிமன்றம் அவரைக் குற்றவாளியா, இல்லையா என முடிவுசெய்திடும். ஆனால் இப்போது இவர்கள் கொண்டுவந்திருக்கிற சட்டத்திருத்தங்கள் மூலமாக ஒருவர் பயங்கரவாதி என முத்திரைகுத்தப்பட்ட நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்படுவார். பின்னர், அவர்தான் தான் பயங்கரவாதியல்ல என்பதை நீதிமன்றத்தின்முன் சாட்சி மற்றும் சான்றாவணங்கள் மூலம் நிரூபித்திட வேண்டும். இக்கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட பல சட்டமுன்வடிவுகள், மாநிலங்களின் உரிமைகளில், கூட்டாட்சித் தத்துவத்தின் மீது,  நேரடியாகக் கை வைப்பவைகளாகும்.  பொதுமக்களின் நலன் காக்கும் அரசு என்பது போய் இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கின்ற சட்டங்களின் மூலமாக இந்த அரசு ஒரு ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஒரு பாதுகாப்பு (Security) அரசாக மாற்றப்பட்டிருக்கிறது. தொழிலாளர் சட்டங்களுக்கு ஏற்பட்ட கதியைப் பாருங்கள். நம் நாட்டிலிருந்துவந்த தொழிலாளர்நலச் சட்டங்கள் பல, நாட்டின் அரசமைப்புச்சட்டம் உருவாவதற்கு முன்பே இயற்றப் பட்டவைகளாகும். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே மாபெரும் தொழிலாளர் வர்க்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டங்களின் விளைவாக, இதுபோன்ற தொழிலாளர் நலச் சட்டங்களை உருவாக்கிட பிரிட்டிஷ் அரசு முன்வந்தது. ஒரு பக்கம் தனியார்மயம், மறுபக்கம் தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றப்படுதல், இத்துடன் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கீழ் இயங்கிடும் பாதுகாப்பு அரசு நிறுவனப்படுத்தப்பட்டிருத்தல் – ஆகிய இவை அனைத்தும், ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் ஆகியவைகள்மீது தாக்குதல் தொடுத்து அவற்றைக் கொல்லுகிறக் கூட்டுக் கலவை (lethal cocktail) ஆகும். இதுபோன்று சட்டத்திருத்தங்கள் கொண்டுவரும்போது, 370ஆவது பிரிவை ரத்து செய்வது உட்பட, எதுவாக இருந்தாலும் அவை தொடர்பாக அனைத்துக் கட்சியினருடனும் கலந்தாலோசனைகள் மற்றும் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் மீது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இச்சட்டமுன்வடிவுகள் மீது எவ்விதமான அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அவற்றுக்கான முயற்சிகளும் எதுவும் கிடையாது. இவை அனைத்தும் முன்னெப்போதும் இல்லாதவைகளாகும். நாடாளுமன்ற மாநிலங்களவையில் நான் இருந்தபோது, இவர்கள் குறித்து விளித்திடும்போது பெரும்பான்மையின் கொடுங்கோன்மை (Tyranny of Majority) என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி இருந்தேன். அதைத்தான் இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
 கேள்வி: யூனியன் பிரதேசம் அமைக்கப்படுவது என்பது தாமாகவே பயங்கரவாதத்தை ஒடுக்கிட உதவிடும் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறதே!
சீத்தாராம் யெச்சூரி:  காஷ்மீர் மக்கள் அந்நியப்பட்டிருப்பதற்கு அடிப்படைக் காரணம் சுயாட்சி தொடர்பாக அரசால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் எதுவும் அமல்படுத்தப்படாததேயாகும். அதனைச் செய்திடாமல், அங்கே நிலைமைகளில் இயல்பு நிலையைக் கொணர முடியாது. பயங்கரவாதம் ஊட்டி வளர்க்கப்படுவதை, முற்றிலுமாக வேறுவிதத்தில்தான் கையாள வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதைப் பொறுத்தவரையில் இடதுசாரிகளைப் பொறுத்தவரை மாற்றுக்கருத்து வேறெதுவும் கிடையாது. பயங்கரவாதம் என்பது தேச விரோதம். அது, எங்கிருந்து முளைத்தாலும் சரி. ஆனால், 370ஆவது பிரிவை ரத்து செய்திருப்பதுபோன்ற நடவடிக்கைகள் மூலமாக இதனைச் செய்திடமுடியாது. மாறாக இது, அனைத்து வகையான அடிப்படைவாதிகளையும் ஒருவர்க்கொருவர் ஊட்டி வளர்த்திடவே உதவிடும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் போது கையெழுத்தான ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கிற உறுதிமொழிகள் அனைத்தும் மதிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. நாங்கள் 370ஆவது பிரிவின் கீழ் சுயாட்சி அளிக்கப்பட வேண்டும் என்பதை எப்போதும் மதித்தே வந்திருக்கிறோம். உண்மையில், பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்த சமயத்தில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வானம் எட்டும் வரையில் சுயாட்சி அளிக்கப்படும் என்று கூறினார். ஆனால் இப்போது அதற்கு நேரெதிராக நடந்திருக்கிறது. இடதுசாரிகளின் நிலைப்பாடு என்பது கொள்கையின் அடிப்படை யிலானதாகும்.  வேலையின்மை என்பது கடந்த ஐம்பதாண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்தில் இருக்கிறது. நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நிலைமை மிகவும் வேகமாக வீழ்ந்துகொண்டிருக்கிறது. ஆட்டோமோபைல்ஸ் தொழில்கள் உட்பட ஏராளமான தொழில்பிரிவுகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பல தொழிற்சாலைகள் கதவடைப்புகள் செய்திருப்பதால், கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகி இருக்கின்றன. இவை எதைப்பற்றியும் கவலைப்படாது, இந்த அரசாங்கம் ஆர்எஸ்எஸ்-இன் பாசிஸ்ட் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதிலேயே குறியாக இருக்கிறது.
(நன்றி: ப்ரண்ட்லைன், ஆகஸ்ட் 30, 2019)
(தமிழில்: ச. வீரமணி)  

No comments: