Thursday, January 3, 2019

126 விமானங்கள் வாங்குவதற்குப் பதிலாக 36 விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்? ரபேர் ஒப்பந்தத்தின் மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தி கேள்வி



126 விமானங்கள் வாங்குவதற்குப் பதிலாக 36 விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்?
ரபேர் ஒப்பந்தத்தின் மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தி கேள்வி
புதுதில்லி, ஜன.3-
ரபேல் ஒப்பந்தத்தின்கீழ் 126 விமானங்கள் வாங்குவதற்குப் பதிலாக, 36 விமானங்கள் மட்டும் வாங்குவது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதன்கிழமையன்று மக்களவையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இதனைத் துவக்கி வைத்து ராகுல் காந்தி பேசியதாவது:
இந்த விவாதம் ரபேல் ஒப்பந்தம் தொடர்பானது. ஆனால் அதன்மீதான விவாதத்தை நடத்தவிடாது அஇஅதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு, பாஜகவினருக்கு சேவகம் செய்வது, வருத்தமளிக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்து அரசாங்கத்திடம்  கேள்வி கேட்பதே என்  வேலையாகும்.
நேற்று பிரதமர் அளித்திட்ட நேர்காணலின் ஒரு பகுதியைப் பார்த்தேன். சுமார் ஒன்றரை மணி நேரம் பல விஷயங்கள் குறித்துப் பதில்களைக் கூறினார்.  அப்போது அவர், ரபேல் தொடர்பாக யாரும் என்னிடம் எதுவும்  கேட்கவில்லை,என்று கூறினார். இது உண்மையல்ல என்று இந்த அவையில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஒரு நாடகம் போன்று நடைபெற்ற அந்த நேர்காணலில் பேசிய பிரதமர் அவர்கள், அந்த சமயத்தில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அடிப்படைக் கேள்விகளுக்கு ஏன் பதில் சொல்லவில்லை என்று ஒட்டுமொத்த நாடும்  கேட்டுக் கொண்டிருக்கிறது.  இந்தக் கேள்விகளை நாம் பிரதமரைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மூன்று முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன. முதலாவது, ஒப்பந்தம் தொடர்பான நடைமுறையைப் பொறுத்தது. இரண்டாவது, அதன் விலை நிர்ணயம். மூன்றாவது, இது யாருக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதாகும். இக்கேள்விகளை நாங்கள் தொடக்கத்திலிருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறோம். நம் விமானப்படையினரின் சுமார் எட்டு ஆண்டு கால அர்ப்பணிப்புடன் கூடிய வேலைகளின் காரணமாக ரபேல் விமானம் தெரிவு செய்யப்பட்டது. நம் விமானப் படைக்கு 126 விமானங்கள் தேவை. இப்போது நம்முன் எழுந்துள்ள கேள்வி என்னவெனில், விமானப்படைக்குத் தேவையான 126 விமானங்களை 36 என்று மாற்றியது யார்? நாட்டின் பாதுகாப்பின் தேவையுடன் இந்த மாற்றம் செய்யப்பட்டதா? விமானப்படையினர், எங்களுக்கு 126 விமானங்கள் தேவையில்லை, 36 விமானங்கள் மட்டும் போதும்என்று கேட்டுக்கொண்டார்களா? இது ஒரு கேள்வி.
நமக்கு மிகவும் அவசரமாகத் தேவைப்பட்டதால் 36 விமானங்கள் வாங்கப்பட்டதாக இப்போது சால்ஜாப்புகள் கூறப்படுகின்றன. அப்படி அவசரமாகத் தேவைப்பட்டது என்றால், ஏன் இன்னமும் ஒரு விமானம் கூட இந்தியாவில் தரையிறங்கவில்லை? இது தொடர்பாக நடைபெற்ற ஒட்டுமொத்த நடைமுறையும்,  ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் வேறுபாதையில் திருப்பிவிடப்பட்டிருக்கிறது. இதுபோன்ற ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு மீதான அமைச்சரவைக் குழு அதிகாரம் அளித்திட வேண்டும். அப்படி எந்த ஒப்புதலையும் அது அளித்திடவில்லை. எனவே, என்னுடைய அடிப்படைக் கேள்வி, ஏன் முந்தைய 126 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம், புதிய 36 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தமாக மாற்றப்பட்டது?
ரபேல் விமானங்கள் ஒவ்வொன்றும் 526 கோடி ரூபாய்க்கு வாங்கப்படுவதற்காக ஐமுகூ அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டிருந்தது என்பதை அனைவரும் அறிவோம். இப்புதிய ஒப்பந்தத்தின்படி ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாயிலிருந்து 1,600 கோடி ரூபாயாக மாறியிருக்கிறது. ஏன் இப்படி விலை உச்சத்திற்குச் சென்றது? நம் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட் கடந்த 70 ஆண்டுகளாக விமானங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இது தயாரித்த ஜிநாட் (Gnat) விமானம் மூலமாகத்தான் 1965 யுத்தத்தில் வெற்றி பெற்றோம். சு-30 விமானம், மைரேஜ் விமானம், எம்ஐஜி-27 விமானம் என அனைத்தையும் கட்டியது, இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனம்தான். இவ்வாறு எச்ஏஎல் மாபெரும் வரலாறு படைத்திருக்கிறது. நாட்டில் விமானத் தொழில்பிரிவில் ஒரு வலுவான எதிர்காலத்தை அது பெற்றிருக்கிறது. அது பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைகளை அளித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு எச்ஏஎல் நிறுவனம் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு விமானங்கள் உற்பத்தியில் மாபெரும் வெற்றிகளை ஈட்டியிருக்கிறது.
ஆனால், மறுபக்கத்தில் என்ன நிலைமை?  வியாபாரத்தில்  தோல்வியடைந்து சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் கடனுடன் இருக்கும் ஒரு நபர்,  பத்து நாட்களுக்கு முன்பு, புதிதாகத் ஒரு கம்பெனியைத் துவங்குகிறார்.  அவரிடம் இந்த ஒப்பந்தம் ஒப்படைக்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி, இந்தியப் பிரதமர்தான் இந்த ஒப்பந்தத்தை அவருக்குக் கொடுக்கும்படி ஆணையிட்டதாகக் கூறுகிறார். (குறுக்கீடுகள்)
எனவே எனது அடுத்த கேள்வி, அன்பான பிரதமர் அவர்களே, ஏன் இந்த ஒப்பந்தத்தை உங்களின் இனிய நண்பருக்கு கொடுத்தீர்கள்?இந்த ஒப்பந்தத்திற்காக அவர், நம் நாட்டின் கருவூலத்திலிருந்து 30 ஆயிரம் கோடி ரூபாயைப் பெறுகிறார்.
இங்கே நம் பாதுகாப்பு  அமைச்சர் அஇஅதிமுகவினரின் பின்னால் உட்கார்ந்துகொண்டும், மறைந்துகொண்டுமிருப்பதைப் பார்க்கிறேன். அவர் ஒளிந்துகொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. இப்போது அவர் புன்னகைப்பதையும் பார்க்க முடிகிறது.
இதே பாதுகாப்பு அமைச்சர்தான், முன்பு விலைநிர்ணயம் செய்யப்படுவது ரகசியமான ஒன்று என்று கூறியிருந்தார்.
ரபேல் ஒப்பந்தத்தில் ஏராளமான ஓட்டைகள். நேற்று ஒன்றரை மணி நேரம் அவர் அளித்திட்ட நேர்காணலில் ரபேல் ஒப்பந்தம் குறித்து ஐந்து நிமிடங்கள்கூட பேசவில்லை. இப்போது இங்கே அவைக்கு வந்து இது தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில்சொல்லக்கூடிய தைர்யம் அவருக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பாதுகாப்பு அமைச்சர், அஇஅதிமுக உறுப்பினர்களின் பின்னே ஒளிந்துகொள்கிறார். பிரதமரோ அவரது அறையில் ஒளிந்துகொள்கிறார்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

No comments: