`அறிமுகம்’ இன்றைய நிலையையும்
அதன் பின்னணியையும் கோடிட்டுக்காட்டுகிறது.
அதனைத் தொடர்ந்து வரும் முதல் அத்தியாயம் ஆர்எஸ்எஸ் இயக்கம் தங்கள் குறிக்கோளான
`இந்து ராஷ்ட்ரம்’ நிறுவுவதற்காக உருவாக்கியுள்ள
ஆவணத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவராக
இருந்த மாதவ சதாசிவ கோல்வால்கர் அவர்களால் 1939இல் எழுதப்பட்ட இந்நூல் இந்த அத்தியாயத்தில் முழுமையாக ஆய்வுக்கு
உட்படுத்தப் பட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் பரிவாரங்களும்
நவீன மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, தங்களின் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரம்’-ஆக மாற்றுவதற்காகத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் முயற்சிகளையும் இது ரத்தத்தை
உறையவைக்கும் விதத்தில் தெளிவு படுத்துகிறது.
இரண்டாவது அத்தியாயம் புராணங்கள் மற்றும் வரலாறு குறித்து ஆய்வு
செய்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் கீழ்
இயங்கும் பல்வேறு அமைப்புகளும் இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுதிடவும், புராணங்களில் உள்ள
விவரங்களையே உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் உண்மையான வரலாறு என்று நிலைநிறுத்துவதற்கு விடாது முயற்சிகளை மேற்கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில்
இக்கட்டுரை மிகவும் முக்கியமானதாகும். அவர்கள், தங்கள் நடவடிக்கைகளின் மூலம், பலநூறு ஆண்டு காலமாக மனிதகுல நாகரிக வளர்ச்சியில் பல்வேறு சோதனைகளைக்
கடந்து இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற முன்னேற்றத்தையும், தொடர்ந்து முன்னேறுவதற்கு
மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் அழித்திடவும், இம்மண்ணின் வளமான நாகரிகப்
பண்புகளையும் பழக்க வழக்கங்களையும் அழித்திடவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். பல்வேறு சமயங்களிடையே ஏற்பட்டுள்ள சமரசப் பண்புகள், பல்வகை சமூக மற்றும்
கலாச்சாரப் பண்புகளினூடே ஏற்பட்ட வளர்ச்சியை, இவர்கள் ஒரே கல்லால் செதுக்கப்பட்டது போன்று, பகுத்தறிவுக்கு ஒவ்வாதமுறையில்
முட்டாள்தனமாக, இவர்களால் கற்பிக்கப்படும்
இந்து மரபுவழியாக மட்டுமே வந்தவர்கள் என்று பதிவுசெய்திட முயல்கிறார்கள். ஆர்எஸ்எஸ்/பாஜக அறிவியல்பூர்வமற்ற முறையில் தங்களுக்கேற்ற வகையில் வரலாற்றை
மாற்றி எழுத வேண்டும் என்ற அடிப்படையில்தான் நம் கல்வி அமைப்பின் பாடத் திட்டங்களை
மாற்றி அமைத்திடவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
மூன்றாவது அத்தியாயம் 1920களில் நம் நாட்டில் விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காகவும்
போராட்டங்கள் தொடங்கிய காலத்திலிருந்து போராடிய அமைப்புகளின் தத்துவார்த்த நிலைப்பாடுகள்
குறித்து ஆய்வு செய்கிறது. சுதந்திர இந்தியாவின் குணமும் கட்டமைப்பும் எப்படி அமைந்திட
வேண்டும் என்பது தொடர்பாக மூன்றுவிதமானக் கோட்பாடுகளுக்கு இடையில் நடைபெற்ற போராட்டங்களை
இந்த அத்தியாயம் விவரிக்கிறது.
இம்மூன்று கோட்பாடுகளுக்கு இடையிலான போராட்டம், சிறந்ததோர் இந்தியாவையும், மக்கள் அனைவருக்கும்
சிறந்த வாழ்க்கைத்தரத்தை அளித்திடவும் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களின் எல்லைகளை
வரையறுக்கக்கூடிய விதத்தில் தொடர்கிறது.
நான்காவது அத்தியாயம் மதம் குறித்தும் எப்படி வகுப்புவாதம் என்பது
மதத்துடனோ அல்லது மதம் சார்ந்த எதனுடனும் சம்பந்தப்பட்டதல்ல என்பது குறித்தும் மார்க்சிய
அணுகுமுறையுடன் விளக்குகிறது. `இந்துத்துவா’ என்ற சொல்லை உருவாக்கிய
வினாயக் தாமோதர் சாவர்கர் என்பவரே `இந்துத்துவா’ என்பது `இந்துயிசத்துடன்’ எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டதில்லை
என்று தெளிவுபடுத்தி இருந்தார். `இந்துத்துவா’ என்பது ஓர் அரசியல்
திட்டம். அதன் அடிப்படையில் ஓர் அரசியல் ஒழுங்கை எப்படிக் கட்டமைப்பது என்பதை நாம்
இரண்டாம் அத்தியாயத்தில் விவாதித் திருப்பதுபோல கோல்வால்கர் ரத்தம் உறையக்கூடிய விதத்தில்
தெளிவுபடுத்தி இருக்கிறார்.
ஐந்தாவது அத்தியாயம் பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏட்டில்
2014 தேர்தல் பிரச்சாரத்தின்போதும், அதனைத் தொடர்ந்து மோடி அரசாங்கம் ஆட்சி அமைந்த சமயத்திலும் எழுதப்பட்ட
தலையங்கங்களின் தொகுப்பாகும். இவை அனைத்தும் வகுப்புவாத சக்திகள் தங்கள் பிரச்சாரங்களின்
போது எழுப்பிய மற்றும் தொடர்ந்து எழுப்பி வருகிற பல்வேறு பிரச்சனைகளுக்குப் பதிலளிக்கக்கூடிய
விதத்தில் அமைந்துள்ளன. இப்பிரச்சனை களின்
மீது நடைபெற்று வரும் போராட்டத்தில் நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின்
மாண்புகளை போற்றிப் பாதுகாத்திட விரும்பும் நாட்டுப்பற்று கொண்டோர் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய
விதத்தில் இத்தொகுப்பானது அமைந்திடும் என்று
நம்புகிறேன்.
நிறைவாக,
அறிவார்ந்த நம் மூதாதையர்களால் காலங்காலமாக நம் சந்ததியினருக்குக் கூறப்பட்டு வரும்
ஓர் அறிவுரையை நாம் நினைவுகூர்வது அவசியம்: “தீயவை வெற்றி பெற வேண்டுமெனில், நல்லவை மவுனமாக இருந்திட
வேண்டும், (“For the evil to succeed, the good only
needs to be silent”).
நல்லவர்கள் மவுனமாக இருக்க அனுமதிக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்நூல் பணிவுடன்
சமர்ப்பிக்கப்படுகிறது.
கடைசியாக ஒருவார்த்தை.
இக்கட்டுரைகள் பல சமயங்களில் எழுதப்பட்டிருப்பதால், ஒரே விஷயம் திரும்பத் திரும்ப வேறு கட்டுரைகளிலும் வந்திருக்கக்கூடும்.
குறிப்பாக சில முக்கியமான மேற்கோள்கள் அவ்வாறு வந்திருப்பது தவிர்க்க முடியாதது. அவற்றை
வாசகர்கள் பொறுத்தருள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சீத்தாராம் யெச்சூரி
புதுதில்லி
24-8-2014
No comments:
Post a Comment