Saturday, August 16, 2008

ஆறாவது ஊதியக்குழுப் பரிந்துரைகள்அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி

புதுடில்லி, ஆக.16-ஆறாவது ஊதியக்குழுப் பரிந்துரைகளை அரசு அப்படியே ஏற்றுக்கொண்டு புதிய ஊதிய விகிதங்களை அறிவித்திருக்கிறது. மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு - குறிப்பாக அடிமட்ட ஊழியர்களுக்கு அளித்துள்ள அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம் என்று தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனத்தின் மா பொதுச்செயலாளர் ராகவேந்திரன் கூறியுள்ளார்.

தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனத்தின் சார்பாக ஓர் இணைய இதழ் நடத்தி வருகின்றனர். அதில் அதன் மா பொதுச் செயலாளர் (செக்ரடரி ஜெனரல்) ராகவேந்திராமத்திய அரசு ஊழியர்களின் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

‘‘மத்திய அரசு ஊழியர்களுக்கு, அரசு புதிய ஊதியக்குழுப் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம் அள்ளிவழங்கியிருப்பதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இது உண்மையா? மத்திய ஊதியக் குழு பரிந்துரைகளின் பேரில் மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் அளித்திட்ட திருத்தங்கள் என்ன ஆயிற்று? அவை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டனவா? ஊழியர்களுக்கு, அதிலும் குறிப்பாக மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ஊழியர்களுக்கு நீதி வழங்கப்பட்டிருக்கிறதா? ஊழியர்கள் திருப்தியுற்றிருக்கிறார்களா? இவை அனைத்திற்கும் இல்லை என்றுதான் பதிலளிக்க வேண்டியிருக்கிறது.

தேவையின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்கிற 15வது சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் விதியின்படி, நான்காம் நிலை ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ஒன்றிற்கு 9700 ரூபாய் என்று வருகிறது. ஆனால் அறிவியல் பூர்வமற்ற வழிமுறைகளைப் பின்பற்றி ஆறாவது ஊதியக்குழு இதனை வெறும் 5700 ரூபாய் என்று குறைத்திருக்கிறது. மேம்படுத்தப்பட்ட நான்காம் நிலை ஊழியரின் ஊதிய விகிதம் கூட வெறும் 6600 ரூபாய்தான். ஐந்தாவது ஊதியக்குழு அளித்திட்ட ஊதிய விகித வழிமுறைகளைக் கையாண்டால் கூட குறைந்தபட்ச ஊதியம் 7400 என்று வருகிறது. ஆனால் இதனைக்கூட அரசு செய்திடவில்லை. இவ்வாறு அரசின் அறிவிப்பானது அரசு ஊழியர்களுக்கு அதிருப்தியை அளித்திருக்கிறது. மாபெரும் அநீதி அடிமட்ட அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச ஊதியம் 7000 ரூபாய் என்று நிர்ணயித்திருப்பதன் மூலம் மற்றொரு கேலிக்கூத்தான செயல்பாட்டையும் அரசு செய்திருக்கிறது. அதிகாரிகளுக்கு அது அளித்துள்ள போக்குவரத்துப்படி 7000 ரூபாய். ஆனால் தன் ஊழியர்களுக்கு அளித்துள்ள குறைந்தபட்ச ஊதியமும் 7000 ரூபாய். என்ன வெட்கக்கேடு?

அடுத்ததாக, நான்காம் நிலை ஊழியர் பணியிடங்களை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. இப்போதுள்ள நான்காம் நிலை ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக மூன்றாம் நிலை ஊழியர்களாகப் பதவி உயர்வு செய்யப்படுகிறார்களாம். ஆனால் அடிப்படைப் பிரச்சனை என்னவெனில், இவ்வாறு பதவி உயர்த்தப்பட்ட பணியிடங்களுக்கு அவர்கள் ஓய்வுபெறும்போது மீண்டும் ஆள் எடுக்கப்பட மாட்டார்கள் என்பதாகும். பியூன் மற்றும் ரயில்வேயில் உள்ள போர்ட்டர்கள் தவிர வேறு எந்த நான்காம் நிலை ஊழியர் பணியிடங்களும் இனி இருக்காது என்று அரசு தெளிவுபடுத்திவிட்டது. இதன் பொருள் இப்பணிகளை இனிவருங்காலத்தில் ஒப்பந்த முறையில் வெளியில் கொடுக்க இருக்கிறது. இது ஒரு மாபெரும் அநீதியாகும்.

அடுத்ததாக, ஆறாவது ஊதியக்குழு இயற்கையாக முதலாளிகளுக்கு சார்பான குழு என்பதை மெய்ப்பித்துள்ளது. உயர் அதிகாரிகளுக்கு ஊதியத்தை அள்ளி வழங்கியுள்ள ஊதியக்குழு அதே சமயத்தில் அடிப்படை ஊழியர்களுக்கு கிள்ளி வழங்கியுள்ளது. இதற்கு முன் அமைக்கப்பட்ட ஊதியக்குழுக்கள் அனைத்தும் அனைத்துத்தரப்பு ஊழியர்களுக்கும் ஊதிய நியமனத்திற்கு ஒரேமாதிரியான பொருத்த அட்டவணை (fitment formula) வெளியிட்டிருந்தது. ஆனால் ஆறாவது ஊதியக்குழு உயர் அதிகாரிகளுக்கு ஒரு பொருத்த அட்டவணையும், கீழ்மட்ட ஊழியர்களுக்கு வேறொரு பொருத்த அட்டவணையும் வெளியிட்டிருக்கிறது. நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக ஆரம்ப நிலை அதிகாரிகளுக்கு 41 சதவீத உயர்வும், உயர்மட்ட அதிகாரிகளுக்கு 180 சதவீத உயர்வும் அளித்திருக்கிறது. அனைவருக்கும் ஒரேசீராக - 2006 ஜனவரி 1 தேதியில் அடிப்படைச் சம்பளத்தில் 2.625 அளவிற்கு ஊதிய உயர்வு அளிக்கப்படுவதன் மூலம் 40 சதவீத உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று ஊழியர் அமைப்புகளின் கோரிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவே இல்லை. மாறாக வெறும் 1.86 அளவிற்கு பொருத்த அட்டவணையில் ஊதிய உயர்வு அளித்திருக்கிறது. இதன்படி கீழ்மட்ட ஊழியர்களுக்கு 40 சதவீத அளவிற்குக்கூட ஊதிய உயர்வு கிடைக்காது. இது மற்றுமொரு மாபெரும் அநீதியாகும்.

அடுத்ததாக. புதிய ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 2006 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படுவதாக அறிவித்திருந்தாலும், நிலுவைத் தொகைகளில் 40 சதவீதம் மட்டுமே இப்போது வழங்கப்படும் என்றும், மீதத் தொகை 2009-10 நிதியாண்டில்தான் வழங்கப்படும் என்றும் கூறியிருக்கிறது. இவ்வாறு ஊழியர்களின் தொகையை அவர்களுக்கு வழங்காது அதனை ஒத்திப்போட்டிருப்பதும் அநீதியாகும்.அடுத்ததாக, ஆண்டு ஊதிய உயர்வு என்பது அடிப்படைச் சம்பளத்தில் 3.5 சதவீதமாக இருக்க வேண்டும் என்று ஊழியர் அமைப்புகள் கோரி வந்தன. அதுவும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இனிவருங்காலங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் பொதுத்துறை ஊழியர்களுக்கும் இடையில் ஊதிய விகிதத்தில் வித்தியாசத்தின் இடைவெளி மேலும் அதிகமாகும்.

அடுத்ததாக, போக்குவரத்துப் படியைப் பொறுத்தவரை கீழ்மட்ட ஊழியர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை.இவ்வாறு எப்படிப்பார்த்தாலும் மத்திய அரசு அறிவித்துள்ள ஊதியக்குழுப் பரிந்துரைகள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரம் அல்ல, மாறாக அவர்களுக்கு அநீதி வழங்கப்பட்டிருக்கிறது, அவர்கள் புத்திசாலித்தனமாக வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்..எனவே அரசின் முடிவினை எதிர்த்து, ஊழியர்களுக்கு நீதி வழங்கக்கோரி, கிளர்ச்சி நடவடிக்கைகளில் மத்தியஅரசு ஊழியர்கள் ஈடுபட இருக்கிறார்கள். இதற்கான செயல் திட்டம் புதுடில்லியில் வரும் ஆக°ட் 26 அன்று நடைபெறவுள்ள மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனத்தில் தீட்டப்பட இருக்கிறது.இப்போது ஊதியக் குழு பரிந்துரை குறித்து ரொம்பவும் குழப்பிக் கொள்ளாமல் வரும் ஆக°ட் 20 அகில இந்திய வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வதற்கான வேலைகளில் இறங்கிடுவோம். 20 ஆக°ட் வேலை நிறுத்தம் என்பது நம்முடைய ஓய்வூதியம் மற்றும் நம்முடைய பல்வேறு உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் நடைபெறும் போராட்டமாகும். ஜூலை 22 இல் ஐமுகூ அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற பின் ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஆக°ட் 20 n வலை நிறுத்தம் அரசின் அனைத்து நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக - பொதுத்துறை மற்றும் அரசுத்துறை நிறுவனங்களை இல்லாதொழிக்கும் அரசின் கொள்கைகளுக்கு எதிராக - நடைபெறும் போராட்டமாகும். இப்போராட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் குறிப்பாக அஞ்சல் துறை ஊழியர்கள் பெருவாரியாக கலந்துகொண்டு வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வதன் மூலம் நம் உரிமைகளை நாம் பாதுகாத்திடுவோம்.இப்போராட்டத்தில் நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தோடு,பொதுத்துறை ஊழியர்களோடு, மற்ற மாநில அரசு ஊழியர்களோடு மத்திய அரசு ஊழியர்களும் கைகோர்ப்போம்.’’இவ்வாறு கே.ராகவேந்திரன் கூறியுள்ளார்.

No comments: