திருக்குறளில் மருத்துவம்முனைவர் டாக்டர் சு. நரேந்திரன்உலகப் பொதுமறை என்று கருதத்தக்க ஒப்புயர்வற்ற திருக்குறளை ஒரு மருத்துவ நூல் என்று குறிப்பிடுவது மிகப் பொருத்தமுடையதே யாகும். நோய்களெனில் உடலியல் சார்ந்தனவும், உளவியல் சார்ந்தனவும் தவிர உடலியலால் நலிவுற்ற உளவியலும், உளவியலால் நோயுள்ள உடலியல் நோய்களும் என்பனவும் உள்ளடக்கம். இன்றைய மருத்துவ அறிவியல் நலவாழ்வு உள நலனும் உடல் நலனும் சார்ந்ததே என்பதை நிறுவியுள்ளது. இந்த உண்மையினை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயமின்றி உணர்ந்து, தேர்ந்து உணர்த்தியுமுள்ள வள்ளுவப் பேராசானின் திருக்குறள் காலத்தால் மிக முந்தியிருப்பினும் கருத்தால் மிகப் புதுமையானது. கூடவே, இன்றைய உலகியலுக்கு மிகவும் பொருத்தமுடையதாகவும் விளங்குகின்றன.வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும் - 435
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல் - 442இவை முறையே குற்றங்கடிதல், பெரியாரைத் துணைகோடல் அதிகாரங்களில் இடம் பெற்றுள்ள குறள்கள். இவை இடம் பெற்றுள்ள தலைப்புகள், மக்கள் வாழ்வியலில் இவை உணர்த்தும் பாடங்களைத் தெளிவாகவே காட்டுகின்றன. அதே நேரம் மருத்துவம் என்ற நோக்கில் காண்கிறபோதும் சிறுமாற்றமும் தேவைப்படாமல் அப்படியே தடுப்பு மருத்துவத்துக்கும், தக்க மருத்துவரைத் தேர்ந்து பயன் கொள்ளவுமாக உணர்த்தும் பாங்கு எண்ணத்தக்கது.காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்நாமம் கெடக்கெடும் நோய் -360விருப்பு, வெறுப்பு, தெளிவில்லாமை என்னும் மூன்றன் அச்சமும் இல்லையானால் துன்பமும் இல்லையாகும்.இரத்தக் கொதிப்பு, நீரிழிவு, ஈளை நோய் என்று பல நோய்களுக்கும் காமம், வெகுளி, மயக்கம் அதாவது அளவுக்கு மீறிய அவா, சினம், தவறான மனோ நிலை ஆகிய இவையே காரணம் என்பது இன்றைய ஆய்வாளர்களின் முடிவு.உடல் தூய்மை - உள்ளத் தூய்மைதிருவள்ளுவர் வாய்மை அதிகாரத்தில் உடல் தூய்மையையும், உள்ளத் தூய்மையையும் ஒருசேர வற்புறுத்தியுள்ளார்.புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் - 298என்ற குறளின் மூலம் தனி மனித சுகாதாரத்தையும் எடுத்துக் கூறி உடல் நலத்திற்கு நீரால் குளிப்பது மட்டும் போதும், உள்ளம் தூய்மையுடையதாக இருக்க வாய்மை உடையதாகவும் இருக்கவேண்டும் என்கிறார்.பசியும், பிணியும்தனிமனித சுகாதாரத்தைப் பேசியவர், சமூகத்தையும் கூர்ந்து கவனித்து நாட்டில் பசியும், பிணியும் இருத்தல் கூடாது என்கிறார். பகைவர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டதாக, இருக்க வேண்டும் என்பதை இலக்கணமாகவே விதிக்கிறார்.உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்சேரா தியல்வது நாடு - 734என்ற குறள் மூலம் இதனை உணர்ந்து தனிமனித சுகாதாரம், சமூக நலம் ஆட்சியின் பொறுப்பு என்ற இவற்றில் தவறாது நலவாழ்வும், நலவாழ்வைப் பேண வேண்டியதன் அவசியமும் உணர்த்தப்படுவதைக் காண்கிறோம்.நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற - 304சிரிப்பையும், மகிழ்ச்சியையும் அழிக்கும் சினத்தைப் பார்க்கினும் தனக்குப் பகையானவை எவையும் இல்லை.தடுப்பு மருத்துவம்1) சினம்: சினம் கொள்ளுதல், பதட்டமடைதல், உறக்கமின்மை போன்றவற்றால் இதயத் தாக்கு உட்பட இரத்த ஓட்ட சீரழிவும் ஏற்படும். ஆதலால் அதனைக் கைவிடும்படி அறிவுறுத்துகிறார் வள்ளுவர். சினம், தன்னோடு பிறரையும் வருத்தச் செய்வது. ஆதலால் வெகுளாமை வேண்டுகிறார்.தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம் - 305சினத்தைக் கையாளும் பக்குவத்தையே இன்றைய மருத்துவம் தியானம், யோகா என்கிறது. வள்ளுவமோ வெகுளாமை, பொறையுடைமை, தவம் என்று கூறுகின்றது. கூற்றம் குதித்தனும் கைகூடும், நோற்றலின்ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு - 269தவத்தின் ஆற்றல் கை கூடியவர்கட்கு எமனைத் தாண்டுதலும் இயலுமாம்.2) மது அருந்துவதால் நாட்டிற்கும் வீட்டிற்கும் வரும் தீமைகளை கள்ளுண்ணாமை விளக்குகிறது. கல்லீரல் நோய்கள் உள்ளிட்டு பல நோய்கள் மது அருந்துபவருக்கு வருவது கண்கூடு. ஆகையால் கள் உண்பதை நஞ்சு உண்பவரோடு ஒப்பிடுகிறார், வள்ளுவர்.இதனை,துஞ்சினார் செத்தாரின் வேறல்லர், எஞ்ஞான்றும்நஞ்சுண்டார் கள்ளுண்பவர் - 926என்ற குறள் வழி புலப்படுத்துகிறார்.2000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மருத்துவம்இலை, பூ, காய், பட்டை, வேர் முதலிய பொருட்களாலும் மருந்தாகப் பயன்படும் மரத்தை பெருந்தகையான் பெற்ற செல்வத்திற்கு ஒப்பிட்டிருப்பதை காணும்போது மருந்தாகும் என்ற சொல் தமிழ் மருத்துவத்தில் சிறப்பிடத்தைப் பெறவும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் உணர்த்திச் சென்றிருக்கிறார் வள்ளுவர்.மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம் பெருந்தகை யான்கண் படின் - 217மருந்தாகும் மரம் எவ்விதப் பலனும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு உதவுவதைப் போல் என்று கூறும் செய்தியிலிருந்து மரமும் அதன் பகுதிகளும் தமிழ் மருத்துவத்திற்கு அன்றைய கால கட்டத்தில் பயன்பட்டிருப்பதையும் அறிய முடிகிறது.தனிப்பட்ட நோய்களுக்கு மருத்துவம்1) மாரடைப்பு இன்றைய உலகில் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் கொடிய நோய்களுள் மாரடைப்பு நோயும் ஒன்று. நம் அன்றாடப் பழக்க வழக்கம், உணவு ஆகியவைகளைக் கட்டுப்பாட்டோடு வைத்திருந்தால் மட்டுமே இந்நோயிலிருந்து தப்பிக்கலாம். இத்தகைய மாரடைப்பு நோய் பற்றிய சிந்தனையும் வள்ளுவருக்கு இருந்திருக்கிறது என்பதை எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லைஅதிர வருவதோர் நோய் - 429என்ற குறள் மூலம் அறிய முடிகிறது. அதிர வருவதோர் நோய் மாரடைப்பு தானே! இன்னலை எதிர்நோக்கி விழிப்புடனிருப்பவரை இந்நோய் அணுகாதுதானே!2) எய்ட்ஸ்மருந்தே இன்று வரை அறியப்படாத நோய் எய்ட்ஸ். இதனைத் தூய நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்தால் மட்டுமே எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பிக்கலாம் என்ற கருத்தை, திருவள்ளுவர்பிறன் பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்துஅறம் பொருள் கண்டார்கண் இல் - 141என்றும்,ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் - 131என்றும் கூறுகிறார்.சமூகம், தனிமனிதன், உளநோய், உடல் நோய் ஆகியவைகளைக் கூறிய திருவள்ளுவர், குறளில் மருந்து என்னும் ஓர் அதிகாரத்தைப் படைத்து அதில் மந்திர, மாந்திரீகம் என்ற கூறுகளைத் தொடாதுநோய்க்கு ஆளாதல் - 91நோய் வருமன் காத்தல் - 942 - 947நோய் வந்த பின் தீர்த்தல் - 948 - 950 எனும் முறையில் அமைத்துள்ளார்.1) நோய்க்கு ஆளாதல்மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்வளி முதலா எண்ணிய மூன்று - 941பரிமேலழகர் மிகினும் குறையினும் என்பதற்கு உணவு மிகுந்தாலும், குறைந்தாலும் என்று பொருள் எழுதினார். ஆனால் தமிழ் மருத்துவத்தின் தனித் தன்மையான வளி (வாதம்), பித்தம், ஐ (கோழை) என உடலில் அமைந்த மூன்றில் ஒன்று மிகுந்தாலும் நோய், குறைந்தாலும் நோய், சம நிலையில் அமைய வேண்டும்; எனவே நோய்க்குக் காரணம் வளி முதலிய மூன்றுந்தாம் என உணர்த்துகிறார்.2) நோய் வருமுன் காத்தல் - உணவியல்‘மருந்து என வேண்டாவாம்’’ என்று தொடங்கினார் வள்ளுவர். தொடங்கி மருந்து வேண்டாமைக்குக் காரணம் கூறினார்.‘‘அருந்தியது அற்றது போற்றி உணின்’’ - 942 என்கிறார்.அற்றது என்பது ஓர் உணவுப் பொருளும் அற்ற வெற்று அறையாக உள்ள வயிற்றினைப் போற்றி மறு உணவு இட வேண்டும். அந்த உணவுப் பாதுகாப்புக் குரிய உணவாக வேண்டும்.‘‘அற்றது போற்றி’’யைத் தொடர்ந்து,‘‘அற்றால் அளவு அறிந்து’’ (943) உண்டால் உடம்பு நோயின்றி விளங்கும். அதனைக் கடைப்பிடித்து ‘‘துவரப் பசித்துத் துய்க்க’’ (944) என்றார். இதனைத் தொடர்ந்து, ‘‘மாறுபாடு இல்லாத உணவு’’ என்றார். இவ்வுணவை அறிந்து பின்னர் மற்றவற்றை ‘மறுத்து உண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு’’ (945). இவற்றால் உடல் நலம் காக்கப்படும் என்பது மட்டுமன்று உயிருக்கே ஆபத்தில்லை என்றார்.வயிற்றுத் தீவயிற்றுத் தீயின் அளவு தெரிந்து, வயிற்றுத் தீயை அளவாக வைக்கும் அளவான உணவே உண்ண வேண்டும். அதாவது ஒரு மனிதனுக்கு தேவையான மாவு சத்து, புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவை கொடுக்கும் கலோரி மட்டும் ஆசூகும். இதனை வள்ளுவர், தீயளவின்றித் தெரியான் பெரிதுண்ணின்நோயள வின்றிப் படும் - 946 என்றார்.‘தீ அளவு’ என்பது எண்ணத்தக்கதாகும். தேவையான கலோரி, உண்™ம் உணவின் வழி கிடைக்கும் கலோரி என்று தெரியான் பெரிதுண்ணின் நோயளவில்லாமல் வரும். எவ்வுணவும் அளவோடுதான் இருக்க வேண்டும், இல்லையெனில் அவ்வுணவே நஞ்சாகி நோயின் வருகைக்கு வழிகாட்டிவிடும். இதனால்தான்,இழிவறிந் துண்பான்கண் இன்பம் போல நிற்கும்கழிபேரிரையான் கண் நோய் ( 946) என்றார்.
3) நோய் வந்த பின் தீர்த்தல் - மருத்துவ இயல்
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல் (948) பிணியறியும் முறையே நோய் நாடல் (னுயைபnடிளளை). நோயின் முதல் நாடல் என்பது நோயின் காரணத்தைக் கண்டறிதல் (னுநவநசஅiniபே வாந நுவiடிடடிபல டிச உயரளயவiடிn டிக னளைநயளந). அது தணிக்கும் வாயல் நாடல் என்பது பிணி தீர்க்கும் வகைகளை ஒத்து ஆராய்ந்து அறிதல் (னுநஉனைiபே வாந அநவாடினள டிக வசநயவஅநவே) என்பதனையும், வாய்ப்பச் செயல் என்பது ஓர்ந்துத் துணிந்த முடிவின்படி வழுவின்றி சிகிச்சை செய்தல் என்பதையும் உணர்த்தும்.திருவள்ளுவர், அடுத்து மருந்து கொடுக்கும் முன் நோயாளியின் உடல் நிலையளவு, நோயின் தாக்க அளவு, நோயின் கால அளவு, நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு இவற்றைக் கருதிப் பார்த்துச் செய்தலைக் குறித்தார்.இதனை, உற்றான் அளவும் பிணியளவும் காலமும்கற்றான் கருதிச் செயல் - 949என்ற குறளில் அமைத்தார்.நிறைவாக, மருத்துவத்தைக் கையாளும் போது, இடம் பெறும் நான்கு கூறுகளைக் குறித்தார். இவை நான்கும் சேர்ந்ததுதான் மருத்துவம். மருந்து என்றாலே இவை நான்கு கூறுகளும் அடக்கம்தான். உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்வான் என்றுஅப்பால் நாற் கூற்றே மருந்து - 950திருவள்ளுவ மருத்துவத்தில் இவை நான்கும், நினைவில் நிற்பவை. நோயாளி நோயைத் தீர்க்கும் மருத்துவன், நோய்க்குரிய மருந்து, உடனிருந்து உதவுவோன் (செவிலியர், கட்டுக்கட்டுபவர்கள்) என்று நான்கையும் முறைப்படுத்தி அடுக்கப்பட்டுள்ளது.முடிவுரைதிருவள்ளுவ மருத்துவம், மனிதர் நோய் கொள்ளாதிருக்கும் தடுப்பு முறைகளைக் கூறிவிட்டு, நோயின்றி வாழ அடிப்படையாக பசியின்றி இருக்க வேண்டும் என்று எடுத்துரைத்து, உண்பாரும் அளவறிந்து உண்ண, வயிற்றுத் தீ குறித்தும் உணர்த்தி உள்ளத்திற்கும் உடலிற்கும் மருந்து கூறி நோயற்ற வாழ்வு வாழ வகை செய்துள்ளார். ‘வயிற்றுத் தீ’க் குறிப்பில் மிகு உணவு, மிகுநோய் என்று அறிவுறுத்தினார். பின்னர் நோய் தீர்ப்பான் என்று மன அமைதி ஊட்டினார். துணை நிற்போன் உள்ளனர் என்று ஆறுதல் கூறினார். மருந்து கூறுகிறார். அதனையும் மருந்து என்று ஒன்றைக் கூறிவிடாமல் நான்கு கூறாகக் கூறி நான்கும் இணைந்ததே மருந்து என உணர்த்தினார்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சிந்தனையின் பிழிவே திருக்குறள் எனில் அதற்குப் பின்புலமான தமிழர்தம் வாழ்வியல் பாங்கினை எண்ண வேண்டும். அப்படிப்பட்ட வாழ்வின் பிரதிபலிப்புதான் வள்ளுவமும், வள்ளுவ ஆசானின் வாழ்வியல் மருத்துவமும், மருத்துவ வள்ளுவமும் என்றெல்லாம் எண்ணும்போது நுணுகிக் காணத்தக்க களங்களின் எண்ணிக்கை மிகுகின்றன.---
Thursday, January 17, 2008
தற்கொலை குறித்து ...பகத்சிங்
தற்கொலை குறித்து ...
-பகத்சிங்
சுகதேவுக்குக் கடிதம்(வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துவிட்டது. தீர்ப்பு எந்நாளிலும் எதிர்பார்க்கப்படலாம். சுகதேவ், தனக்கு நாடு கடத்தல் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்தார். அவரைப் பொறுத்தவரை, சிறையில் இருபதாண்டுகளுக்கும் மேல் இருக்க வேண்டும் என்கிற நினைப்பே மிகவும் வெறுப்பூட்டியது. ஒருக்கால் தனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால். தான் தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருப்பதாக பகத்சிங்கிற்கு சுகதேவ் கடிதம் எழுதினார். ஒன்று விடுதலை செய்யப்பட வேண்டும், இல்லையெனில் தூக்கிலிடப்பட வேண்டும். இரண்டுக்கும் இடையில் நடுவழி என்று எதுவும் இல்லை.சுகதேவ் கடிதத்தைக் கண்ணுற்றதும் பகத்சிங் மிகவும் வெகுண்டெழுந்தார். “சேவை செய், இன்னல்களை ஏற்றுக்கொள், இறுதி வரைப் போராடு.” இதுவே, பகத்சிங் நிலையாகும். “துன்பத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்வது கோழைத்தனம்” என்று பகத்சிங் கூறினார். இந்தக் கடிதத்தின் மூலமாக, தியாகி பகத்சிங்கின் மனவோட்டம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை அறிந்து கொள்ள மேலும் ஒரு வாய்ப்பு.)
அன்புள்ள சகோதரனே,
உன்னுடைய கடிதத்தை மிகுந்த கவனத்துடன் பல முறை படித்துவிட்டேன். மாறிய சூழ்நிலை நம்மை வெவ்வேறு விதத்தில் பாதித்துள்ளது என்பதை உணர்ந்து கொண்டேன். வெளியே இருக்கும் போது நீ வெறுத்து ஒதுக்கிய அம்சங்கள் இப்பொழுது உனக்கு அவசியமானவையாக மாறிவிட்டன. அதே போன்று, நான் கடுமையாக ஆதரித்த அம்சங்கள் எனக்கு இனிமேல் எவ்வித முக்கியத்துவமும் அற்றவையாக ஆகிவிட்டன. உதாரணமாக, தனிப்பட்ட காதலில் நான் நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது அது என் உள்ளத்திலோ அல்லது உணர்விலோ குறிப்பிட்டதொரு பாத்திரத்தை வகிக்கவில்லை. நாம் வெளியில் இருந்தபோது, இதனை நீ கடுமையாக எதிர்த்தாய். ஆனால் இப்போது அதனைப் பற்றிய உனது கருத்தில் தலைகீழான மாற்றம் வெளிப்படையாகவே தெரிகிறது. மனிதனின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அதனை நீ இப்போது கருதுகிறாய். அவ்வாறு கருதுவதில் ஒருவிதமான மகிழ்ச்சியையும் நீ கொள்கிறாய். ஒரு நாள் தற்கொலை குறித்து நம் இருவர் இடையே நடைபெற்ற விவாதம் இப்போதும் உனக்கு நினைவிருக்கும், அப்போது நான், சில சூழ்நிலைகளில் தற்கொலையைக் கூட நியாயப்படுத்திடலாம் என்றேன். ஆனால் அப்போது நீ அதனைக் கடுமையாக எதிர்த்தாய். நாம் பேசிக் கொண்டிருந்த இடமும் நேரமும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஷாகன்ஷாஹி குடியாவில் ஒரு மாலைப்பொழுதில் இதைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருந்தோம். அத்தகையதொரு கோழைத்தனமான செயலை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று நீ இகழ்ந்து கூறினாய். இது போன்ற செயல்கள் கோரமானவை என்றும் கொடுமையானவை என்றும் கூறினாய். ஆனால், இவ்விஷயத்தில் இப்போது உன்னிடம் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்கிறேன். இப்பொழுது, சில சூழ்நிலைகளில் தற்கொலை முறையானது மட்டுமல்ல, அவசியமானது, முக்கியமானது என்று கூட கருதுகிறாய். முன்பு நீ என்ன கருத்து வைத்திருந்தாயோ அதுவே இன்று என்னுடையது. அதாவது, தற்கொலை என்பது ஒரு கொடுமையான குற்றம். அது முழுக்க முழுக்க ஒரு கோழைத்தனமான செயல். புரட்சியாளர்களை விட்டுவிடுங்கள், எந்தவொரு தனிமனிதனும்கூட அத்தகைய செயலை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. எப்படி இன்னல்களை ஏற்றுக்கொள்ளுதல் மட்டுமே நாட்டிற்குச் சேவை செய்ய முடியும் என்று புரிந்துகொள்ள முடியவில்லை என்று நீ கூறுகிறாய். உன் போன்ற ஒருவரிடமிருந்து இவ்வாறு கேள்வி எழுவது உண்மையிலேயே என்னை திகைப்படையச் செய்கிறது. ஏனெனில் “மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் இன்னல்களை ஏற்றுக்கொண்டு, தியாகம் செய்” என்கிற நவஜவான் பாரத் சபையின் குறிக்கோளில் எந்த அளவிற்கு நாம் பற்றுக் கொண்டிருந்தோம் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். எந்த அளவிற்கு சாத்தியமோ அந்த அளவிற்கு நீ சேவை செய்துவிட்டாய் என்று நான் நம்புகிறேன். இப்போது நீ செய்த சேவைகளுக்காக இன்னல்களை ஏற்றுக்கொண்டிருக்கிறாய். நாட்டு மக்களை முழுமையாக தலைமை தாங்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கும் தருணம் இது என்பதும் மற்றொரு முக்கிய அம்சமாகும். நாம் பாராளுமன்றத்தில் வெடிகுண்டுகளை வீசியபோது நம் செயல்பாட்டில் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தது போல், செயல்பாட்டின் நியாயத்தன்மை நிச்சயமாகத் தெரியும்போது அதன்வழி நடப்பவனே மனிதன். அவ்வாறு நடவடிக்கையில் இறங்கிய பின்பு, அதனால் ஏற்பட்ட விளைவுகளைத் தாங்கிக்கொள்ளவும் வேண்டும். தண்டனையைத் தவிர்ப்பதற்காக கருணைக்காட்டுமாறு முயற்சித் திருந்தால், அது நன்றாக இருந்திருக்கும் என்று நீ நினைக்கிறாயா? கூடாது, அப்படி நாம் செய்திருந்தோமானால், அது மக்கள் மத்தியில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். இப்பொழுது நம் முயற்சியில் நாம் முழுமையாக வெற்றி பெற்றிருக்கிறோம். நாம் சிறையிலடைக்கப்பட்ட நேரத்தில், நமது கட்சியைச் சேர்ந்த அரசியல் கைதிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அதனை மேம்படுத்த நாம் முயற்சித்தோம். நாம் செத்துவிடுவோம் என்றே அப்போது நான் உன்னிடம் உண்மையிலேயே கூறினேன். அந்த சமயத்தில் நம்மை வலுக்கட்டாயப்படுத்தி உணவு உட்கொள்ளச் செய்திட்ட உத்திகள் குறித்து நமக்குத் தெரியவில்லை. அத்தகைய விஷயங்களை அப்போது நாம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நாம் சாகத் தயாராக இருந்தோம். இதனால் நாம் தற்கொலை செய்துகொள்ள எண்ணியிருந்தோம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள முடியுமா? நிச்சயமாக அப்படிக் கூற முடியாது. ஓர் உயர்ந்த லட்சியத்திற்காக ஒருவர் தன்னை வருத்திக்கொண்டு, தியாகப்படுத்திக் கொள்வதென்பதை தற்கொலை என்று எக்காலத்திலும் கருதிவிட முடியாது. தோழர் யதிந்திரநாத் தாஸின் மரணம் குறித்து நாம் பொறாமைப் படுகிறோம். அதனை நீ தற்கொலை என்று கூறுவாயா? இறுதியாக நாம் பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைத்தது. நாடு முழுவதும் மாபெரும் போராட்டங்கள் வெடித்தன. நம்முடைய நோக்கத்தில் நாம் வெற்றி பெற்றோம். இதுபோன்ற போராட்டங்களின்போது மரணம் ஏற்படின் அது ஓர் உன்னதமான மரணமாகும்.இது தவிர, நம்தோழர்களில் சிலர் தங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என்று நம்புகிறார்கள். என்றைக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் என்றைய தினம் தூக்கிலிடப்படுவோம் என்றும் தெரியாமல் அந்த நாட்களுக்காக மிகவும் பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சாவும் மிகவும் அழகானதுதான். ஆனால், தற்கொலை செய்துகொள்வதென்பது - துன்பங்களைத் தவிர்ப்பதற்காக வாழ்க்கையை முடித்துக்கொள்வதென்பது - கோழைத்தனமானது. தடைக்கற்களே ஒரு மனிதனை முழுமையானவனாக மாற்றுகிறது என்று உனக்குச் சொல்ல விரும்புகிறேன். நீயோ அல்லது நானோ, ஏன், நம்மில் எவருமே, இதுவரை எவ்விதமான துன்பத்தையும் உண்மையில் அனுபவித்ததே இல்லை. வாழ்க்கையின் அப்பகுதி இப்போதுதான் தொடங்க ஆரம்பித்திருக்கிறது. நம்முடைய இலக்கியத்தில் காணப்படாத ஆனால் ரஷ்ய இலக்கியத்தில் காணப்படும் யதார்த்த வாதம் பற்றி நாம் பலமுறை பேசியதை நினைத்துப்பார். அவர்களது கதைகளில் வரும் கடும் துன்பநிலைமைகளை நாம் சரியானமுறையில் மதிப்பிட்டு வெகுவாக பாராட்டினோம். ஆனால் அத்துன்பநிலைமைகள் நமக்கு ஏற்பட்டால் நாம் எப்படி இருப்போம் என்று அப்போது நாம் நினைத்துப் பார்க்கவில்லை. அவர்களது துன்ப உணர்ச்சியையும் அவர்களது கதாபாத்திரங்களின் அசாதாரண உயர்நிலையையும் நாம் வியந்து போற்றவும் செய்தோம். ஆனால் அதன் காரணத்தைக் கண்டறிய ஒருபோதும் நாம் கவலைப் பட்டதில்லை. துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் அவர்களின் மனவுறுதியே அவர்களது இலக்கியத்திலும் அவர்களது கதாபாத்திரங்களின் குணச்சித்திரத்திலும் அசாதாரணமான உயர்வையும் ஆழத்தையும் கொடுத்தது என்றே நான் சொல்வேன். இயற்கையின் பாற்பட்ட அல்லது உறுதியான அடிப்படை ஏதுமின்றி, பகுத்தறிவிற்குப் புறம்பான, கடவுள் நம்பிக்கையை நமது வாழ்வில் ஏற்றுக் கொள்ளும் போது, நாம் ஏளனத்திற்கும் கேலிக்கும் உரியவர்களாக மாறி விடுகிறோம். எல்லாவிதத்திலும் புரட்சியாளர்களாய் இருப்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளும் நம்மைப் போன்றவர்கள், நம்மால் துவக்கப்பட்ட போராட்டங்களின் மூலம் நமக்கு நாமே வரவழைத்துக் கொண்ட கஷ்டங்கள், கவலைகள், வேதனைகள் துன்பங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்வதற்கு எப்பொழுதும் நாம் தயாராய் இருக்க வேண்டும். அதனாலேயே நாம் நம்மை புரட்சியாளர்கள் என்று அழைத்துக் கொள்கிறோம்.மிகப் பெரும் சமூகப் பண்புகளாகிய குற்றத்தையும் பாவத்தையும் பற்றி அனுபவப் பூர்வமாய் ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை ஒருவர் சிறையிலேயே, சிறையில் மட்டுமே பெறமுடியும் என்று நான் உனக்குச் சொல்ல விரும்புகிறேன். இவற்றின் மீதும் சில இலக்கியங்களை நான் படித்தேன். இத்தகைய தலைப்புகள் பற்றி சுய ஆய்வு செய்து கொள்வதற்கு ஏற்ற இடம் சிறைச்சாலையே. ஒருவரது சுய ஆய்வின் மிகச் சிறந்த பகுதி என்பது அவர் தன்னைத்தானே வருத்திக்கொள்வதுதான். ரஷ்யச் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் அனுபவித்த துன்பங்களே, ஜாரின் ஆட்சி தூக்கியெறியப்பட்ட பின்னர் சிறை நிர்வாகத்தில் புரட்சிகரமான மாறுதல்கள் அங்கு ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது என்பது உனக்குத் தெரியும். இந்தியாவிற்கும் அது போல சிறைகளில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி முழுமையாக அறிந்த, அவற்றில் நேரடியான அனுபவம் பெற்றவர்கள் தேவையில்லையா? வேறு யாரேனும் ஒருவர் அதனைச் செய்வார்கள் என்றோ, அதனைச் செய்வதற்கு வேறு பலர் இருக்கின்றார்கள் என்றோ கூறுவது சரியாக இருக்குமா? நிச்சயமாய் இருக்காது. புரட்சியின் பொறுப்புக்களை அடுத்தவர்கள் தோள் மீது சுமத்துவது முற்றிலும் நேர்மையற்றது என்றும் வெறுக்கத்தக்கது என்றும் கருதுபவர்கள், தற்போதிருக்கும் அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்தை முழு ஈடுபாட்டுடன் துவக்க வேண்டும். இந்தச் சட்ட வரம்புகளை அவர்கள் மீற வேண்டும். ஆனால் செயலின் நடைமுறைப் பொருத்தத்தையும் அவர்கள் மனதிற்கொள்ள வேண்டும். ஏனென்றால், அவசியமற்ற, தவறான முயற்சிகள் எப்போதும் நியாயமானவையாக கருதப்படுவதில்லை. அத்தகைய கிளர்ச்சிகள் புரட்சியின் இயல்பான வளர்ச்சியை வெட்டிக் குறுக்கவே செய்யும்.இந்த இயக்கங்களில் இருந்து உன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்காக நீ கூறும் வாதங்கள் அனைத்தும் என்னால் புரிந்து கொள்ள முடியாதவையாகவே உள்ளன. நமது நண்பர்களில் சிலர் அப்பாவிகளாகவோ அல்லது முட்டாள்களாகவோ இருக்கிறார்கள். அவர்கள் உன்னுடைய நடத்தையை வழக்கத்திற்கு விரோதமானதாகவும் புரிந்து கொள்ள முடியாததாகவும் கருதுகிறார்கள். (நீ, அவர்களின் புரிந்து கொள்ளும் உணர்வு மட்டத்தைவிட மிக உயரமான இடத்தில் இருப்பதால்தான் தங்களால் உன்னை உன் நடவடிக்கைகளைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லையோ என்று அவர்கள் தங்களுக்குத்தாங்களே சமாதானம் சொல்லிக் கொள்கின்றனர்).சிறை வாழ்க்கை உண்மையிலேயே சுயமரியாதைக்கு இழுக்கேற்படுத்துவதாக இருக்கிறது என்று நீ கருதினால், போராட்டங்களை மேற்கொள்வதன் மூலம் அந்த நிலையை மேம்படுத்துவதற்கு நீ ஏன் முயற்சிக்கக் கூடாது? ஒருவேளை, இந்தப் போராட்டத்தால் ஒரு பயனும் விளையாது என்று நீ கூறலாம். ஆனால் இத்தகைய வாதம், ஒவ்வொரு இயக்கத்திலும் பங்கேற்பதைத் தவிர்ப்பதற்காக, பலவீனமானவர்களால் கூறப்படும் நொண்டிச் சமாதானம்தான். புரட்சிகர இயக்கங்களில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிப்பதற்காக சிறைக்கு வெளியில் இருப்பவர்கள் இவ்வாறு அடிக்கடி கூறுவதை நாமும் கேட்டிருக்கிறோம். அதேமாதிரி வாதத்தை இப்போது உன்னிடமிருந்தே நான் கேட்பதா? நமது கட்சியின் மாபெரும் குறிக்கோளோடும் கொள்கைகளோடும் ஒப்பிடும்போது, விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரால் என்ன செய்துவிட முடியும் என்று கருதுகிறாயா? அப்படியானால், நாம் நம் வேலையைத் துவக்கியதன் மூலம் மாபெரும் தவறு செய்துவிட்டோம் என்று நாம் கருதலாமா? கூடாது, இவ்வாறு கருதுவது முறையல்ல. இது போன்று ஒருவன் சிந்தித்தால் அது அவனது உள்மன பலவீனத்தையே காட்டுவதாக இருக்கும்.“ஒருவர், பதினான்கு ஆண்டுகள் சிறையில் துன்பங்களை அனுபவித்த பின்னரும் சிறை செல்வதற்கு முன்னர் தான் கொண்டிருந்த அதே சிந்தனையையே கொண்டிருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், சிறைவாழ்க்கை அவரது கொள்கைகள் அனைத்தையும் அழித்துவிடும்’’ என்று மேலும் நீ எழுதியிருந்தாய். சிறைக்கு வெளியே உள்ள நிலைமை, நமது கொள்கைகளுக்கு கொஞ்சம் கூடுதலாக சாதகமாக இருக்கிறதா என்று கூறமுடியுமா? அப்படியிருந்தும் நாம் தோல்வியடைந்துவிட்டோம் என்று நமது கொள்கைகளை கைவிட்டோமா? அல்லது, நாம் களத்தில் இறங்காமல் இருந்திருந்தால், இந்த நாட்டில் புரட்சிகர வேலைகளே நடந்திருக்காது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? அவ்வாறு ஏதேனும் சிந்தனையோட்டம் உன்னிடம் இருந்தால் நீ தவறு செய்கிறாய். நாட்டின் சமூக நிலைமையை மாற்றுவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நாமும் உதவிகரமாக இருந்திருக்கிறோம் என்பது உண்மை என்றாலும், நாம் களத்தில் இறங்காவிட்டால் ஒன்றுமே நடந்திருக்காது என்று நினைப்பது சரியல்ல. காலத்தின் தேவைக்கேற்ப வார்த்தெடுக்கப்பட்டவர்களே நாம். கம்யூனிசத்தின் தந்தை, காரல்மார்க்ஸ் கூட, இந்த தத்துவத்தின் மூலவர் அல்ல என்றுகூட நான் கூறுவேன். ஐரோப்பாவில் நடைபெற்ற தொழிற்புரட்சிதான் இத்தகையவர்களை வார்த்தெடுத்தது. மார்க்ஸ் அவர்களில் ஒருவர். உண்மை, ஒருகுறிப்பிட்ட பாதையில் காலச் சக்கரத்தை முடுக்கிவிட்டதில் மார்க்சுக்கு ஒரு கணிசமானதொரு பாத்திரம் உண்டு.நமது நாட்டில் சோசலிசம் மற்றும் கம்யூனிச சிந்தனைகளை நானோ (அல்லது நீயோ) தோற்றுவிக்கவில்லை. நாம் வாழும் காலத்தின் கட்டாயம் மற்றும் சூழலின் பாதிப்புகள் நம்மை அச்சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளுமாறு மாற்றியிருக்கின்றன. இச்சிந்தனைகளைப் பரப்புவதற்கு நாமும் கொஞ்சம் பங்களிப்பினைச் செய்திருக்கிறோம் என்பது உண்மை. நாம் கடினமான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தே பயணத்தை நாம் தொடங்கினோம். இதனை மேலும் தொடர்வதே சரியாக இருக்கும். இன்னல்களிலிருந்து தப்பிப்பதற்காகத் தற்கொலைகள் புரிவதன் மூலம் மக்களை வழிநடத்தக்கூடாது. மாறாக, அவ்வாறு நாம் செய்தோமாயின், அது ஒரு பிற்போக்குத்தனமான நடவடிக்கையேயாகும்.ஏமாற்றங்களும், நிர்ப்பந்தங்களும், சிறை விதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் நிறைந்த சோதனையான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் நாம் நமது பணிகளைத் தொடர்ந்தோம். நாம் செயலாற்றிய வேளையில் பல்வேறு தாக்குதல்களுக்கு இலக்கானோம். மாபெரும் புரட்சியாளர்கள் என்று தம்மைத்தாமே பீற்றிக் கொண்டவர்கள் கூட நம்மை கைவிட்டுவிட்டு ஓடியே போய்விட்டார்கள். இந்த நிலைமைகள் உச்சபட்சமாக நம்மை சோதிக்கவில்லையா? அதன் பின்னரும் நமது போராட்டங்களையும், முயற்சிகளையும் தொடர்ந்ததற்கான காரண காரியங்கள் தான் என்ன?இத்தகைய சாதாரண வாதமே நமது சிந்தனைகளின்பால் நமக்குக் கூடுதல் பற்றையும் பலத்தையும் தரவில்லையா? மேலும், தாம் பற்றுக்கொண்ட சிந்தனைகளுக்காக, சிறைகளில் தண்டனைகளை அனுபவித்துத் திரும்பிய பின்னரும், இன்னமும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமது புரட்சிகரத் தோழர்களின் உதாரணங்கள் நம்மிடம் இல்லையா? பகுனின் உன்னைப்போல் வாதம் செய்திருந்தாரானால், ஆரம்பத்திலேயே அவர் தற்கொலை செய்து கொண்டிருந்திருப்பார். தங்களது தண்டனைக் காலத்தை நிறைவு செய்வதற்காக தமது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்த பல புரட்சியாளர்கள் இன்று ரஷ்ய அரசின் பொறுப்பு மிக்க முக்கிய பதவிகளில் அமர்ந்திருப்பதை பார்க்கிறோம். மனிதன், தான் ஏற்றுக்கொண்ட சிந்தனைகளில் இருந்து பிறழாமல் இருப்பதற்கு முயற்சிக்க வேண்டும். எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எவராலும் அறுதியிட்டுக் கூற முடியாது.நமது வெடிகுண்டு தொழிற்சாலைகளில் செறிவூட்டப்பட்ட, வீரியம் மிக்க நச்சுப்பொருள்கள் வைத்திருக்க வேண்டும் என்று நாம் விவாதித்துக் கொண்டிருந்தது, உனக்கு ஞாபகம் இருக்கிறதா? அப்போது அதனை நீ ஆரம்பத்திலேயே கடுமையாக எதிர்த்தாய். அந்த யோசனையே உனக்கு ஏற்புடையதாக இல்லை. ஆனால், இப்போது உனக்கு என்ன வந்து விட்டது? அப்படியன்றும் நமக்கு இங்கே கடினமான, சிக்கலான நிலைமைகள் கூட இல்லை. இதுகுறித்து விவாதிப்பதே எனக்குச் சங்கடமாக இருப்பதை உணர்கிறேன். தற்கொலையை அனுமதிக்கும் எண்ணத்தையே நீ அடியோடு அப்போது வெறுத்தாய். நீ கைது செய்யப்பட்ட அந்தத் தருணத்திலேயே தற்போதிருக்கும் இந்த எண்ணப்படி நீ செயல்பட்டிருந்தால் (அதாவது, விஷம் அருந்தி நீ தற்கொலை செய்து கொண்டிருந்தால்) புரட்சியின் நோக்கத்திற்கு நீ உதவியிருப்பாய் என்று கருதுகிறேன். இப்படிக் கூறுவதற்காக தயவு செய்து என்னை மன்னித்து விடு. இதுபோன்று நினைத்துப் பார்ப்பதுகூட நமது லட்சியங்களுக்குக் கேடு விளைவித்து விடும்.நான் உனது கவனத்திற்கு கொண்டுவர விரும்பும் விஷயம் இன்னும் ஒன்று உள்ளது. கடவுள், சொர்க்கம் - நரகம், பூர்வஜென்ம காரியங்களுக்கு இந்த ஜன்மத்தில் தண்டனை - வெகுமதி என்பனவற்றில் நமக்கு நம்பிக்கை கிடையாது. அதாவது ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்பதிலோ ‘அவன் அப்போதே எழுதி வைத்துவிட்டான், அதை நாம் மாற்றமுடியாது’ என்பதிலோ நமக்குக் கிஞ்சிற்றும் நம்பிக்கை கிடையாது. ஆகவே, பொருள் முதல்வாதத்தின் அடிப்படையிலேயே, நாம் நம் வாழ்வையும் சாவையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.நான் டெல்லியிலிருந்து இங்கு அடையாளம் காட்டப்படுவது தொடர்பாக அழைத்து வரப்பட்டபோது, சில புலனாய்வு அதிகாரிகள், இந்தப் பொருள்பற்றி என் தந்தையின் முன்னிலையில் என்னிடம் பேசினார்கள். ரகசியங்களை மறைப்பதன்மூலம் என்னுடைய வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ள நான் முயற்சிக்காததால், என்னுடைய வாழ்க்கையில் சொல்லொணா துயரம் ஏற்படும் என்று பயமுறுத்தினார்கள். இதுபோன்று மரணத்தைத் தேடிக்கொள்வது தற்கொலைக்கொப்பாகும் என்று அவர்கள் வாதிட்டார்கள். என்னைப் போன்ற கடவுள் நம்பிக்கையற்றவர்கள், சிந்தனாவாதிகள், உபயோகமற்ற முறையில் சாவது குறித்து நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்று அப்போது அவர்களிடம், எங்கள் வாழ்க்கையை எந்த அளவிற்கு மதிப்பிடற்கரிய முறையில் வாழ முடியுமோ அவ்வாறு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம் என்றேன். மனிதசமுதாயத்திற்கு எந்த அளவுக்குத் தொண்டாற்ற முடியுமோ அந்த அளவிற்குத் தொண்டாற்றுவதையே நாங்கள் விரும்புகிறோம். எங்கள் வாழ்க்கை எந்தக்காலத்திலும் வருந்தத்தக்கதாகவோ அல்லது எவ்விதக் குறிக்கோளுமில்லாமல் அற்பர்களாக வாழ்ந்தோம் என்று கவலைப்படத்தக்கதாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. எனவே எங்களைப் போன்றவர்கள், தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பது இருக்கட்டும், அதைக் குறித்து நினைத்துக்கூடப் பார்க்க மாட்டோம் என்று கூறினேன். அதையே இப்போது உனக்கும் நான் கூற விரும்புகிறேன்.நான் என்னைப்பற்றி என்ன நினைக்கிறேன் என்று உனக்குக் கூற அனுமதிப்பாய் என்று நம்புகிறேன். எனக்கு உயர்ந்தபட்ச தண்டனை -மரண தண்டனை - கிடைக்கும் என்பது நிச்சயம். இதில் எவ்வித தயவுதாட்சண்யமோ அல்லது மன்னிப்போ கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை மன்னிப்பு கிடைத்தாலும், அனைவருக்குமாக அது இருக்காது. மற்ற ஒரு சிலருக்கு வேண்டுமானால் மன்னிப்பு கிடைக்கலாம், நம் எல்லோருக்கும் கிடைக்காது. அவ்வாறு மன்னிப்பு அளிக்கப்பட்டாலும் பல்வேறு கடுமையான நிபந்தனைகளுடன் கிடைத்திடலாம். நம்மைப் பொறுத்தவரை மன்னிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது, அவ்வாறு நடக்கப்போவதுமில்லை. அப்போதும் கூட, நம்மை விடுவிக்க வேண்டும் என்கிற அறைகூவல்கள் உலக அளவில் ஒட்டுமொத்தமாக விடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அத்துடன், அப்போராட்டம் அதன் உச்சகட்டத்தை அடையும்போது நாம் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன். இதுவே என் அவா. அத்துடன், நம் சுயமரியாதைக்குப் பங்கம் வராத அளவில் நியாயமான சமரசம் எதுவும் சாத்தியமானால், நம் வழக்கு போன்ற பிரச்சனைகள் அதற்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதே என் விருப்பம். நாட்டின் விதி தீர்மானிக்கப்படும் சமயத்தில், தனிநபர்களின் விதி மறக்கப்பட வேண்டும். புரட்சியாளர்கள் என்ற முறையில், கடந்த கால அனுபவங்கள் முழுமையாக நமக்குத் தெரியும். எனவே, ஆட்சியாளர்களின் - குறிப்பாக வெள்ளையர்களின் - அணுகுமுறையில் திடீரென்று மாற்றம் வந்துவிடும் என்ற நப்பாசை எதுவும் நமக்கு இல்லை. புரட்சி ஏற்படாமல் அத்தகைய அதிர்ச்சிதரத்தக்க மாற்றம் சாத்தியமே இல்லை. புரட்சி என்பது, கடும் போராட்டங்கள் - இன்னல்கள் - தியாகங்கள் மூலமாக மட்டுமே அடைந்திட முடியும், அவ்வாறு அடையத்தான் போகிறோம்.எனது அணுகுமுறையைப் பொறுத்தவரை, அனைவருக்கும் வசதிகள் மற்றும் மன்னிப்பு நிரந்தரமானதாக இருந்தால் அதனை வரவேற்கலாம். அடுத்து, நாம் தூக்கிலிடப்படுவதன் மூலம், மக்கள் மத்தியில் என்றைக்கும் அழியாத அளவிற்கு நாம் முத்திரைபதிக்க வேண்டும். இதுவே என் விருப்பம், இதற்கு மேல் ஒன்றும் இல்லை.
உன்
பகத்சிங்.
*** *** ***

Tuesday, January 15, 2008
தந்தை பெரியார் - மாபெரும் புரட்சியாளர்
தந்தை பெரியார் - மாபெரும் புரட்சியாளர்
இந்தியாவில் மக்கள் அனுபவித்து வந்த துன்பங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றப் பல தலைவர்கள் தோன்றினார்கள். அவர்களில் தந்தை பெரியார் என்று அன்புடன் அழைக்கப்படும் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கொள்கைகள் மிக உயர்ந்தவை, உண்மையானவை, சுயநலமற்றவை, ஆண் - பெண் சமத்துவம் குறித்து அந்தக் காலத்திலேயே குரல் கொடுத்தவர். ஆதலினால்தான் 1938 நவம்பர் 13 அன்று சென்னையில் கூடிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் அவரைப் பெரியார் என்றழைத்துத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அப்போது முதல் ஈ.வெ.ராமசாமி அவர்கள் தந்தை பெரியார் என அழைக்கப்படலானார்.தந்தை பெரியார், உண்மையையே அடிப்படையாகக் கொண்டு சிந்தித்தார். உண்மைக்குப் புறம்பானவற்றை வெறுத்தார். உள்ளும் புறமும் ஒன்றாக வாழ்ந்தார். தன்னையே முன்நிறுத்திப் போராடினார். வெற்றி பெற்றார். அவர் போராட்டங்களால் கல்வி அறிவில்லாத மக்கள் கல்விக் கண் பெற்றார்கள். அரசு வேலைவாய்ப்பு அறியாத மக்கள், வேலைவாய்ப்பைப் பெற்றார்கள். அரசியல் அதிகாரம் பெறாதிருந்தோர் அரசியல் அதிகாரம் பெற்றார்கள். தம் கொள்கை தாம் உயிர் வாழ்ந்த காலத்திலேயே வெற்றி பெற்றதைக் கண்டு அகமகிழ்ந்தார்.பெரியார் சொன்ன கொள்கைகள் என்ன? உலக மக்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உலக சொத்துக்கள், இன்ப துன்பங்கள் எல்லாம் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா மக்களுக்கும் பொதுவானது. ஒவ்வொருவரும் அவர்களது சக்திக்கு ஏற்றபடி உழைக்க வேண்டும். உள்ளதை ஒவ்வொருவரும் அவர்களுடைய தேவைக்குத் தகுந்தபடி அனுபவிக்கலாம். இந்தக் கொள்கைகள் நிறைவேறுவதற்காகவே தந்தை பெரியார் வாழ்நாளெல்லாம் உழைத்தார். அவரது கொள்கைகள் தனிமனித வாழ்வுக்கு உயிர்மூச்சு போன்றது. குடும்ப வாழ்வுக்கு வழிகாட்டும் அடிப்படையான நெறிமுறைகள் ஆகும். சமுதாய வாழ்வுக்கு, ஒரு நாட்டின் வாழ்வுக்கு, மனிதகுலம் முழுமைக்கும் பயன் செய்பவை ஆகும்.
``மனிதனது மதிக்க முடியாத உடைமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவைதான் வாழ முடியும். காலமெல்லாம் குறிக்கோளில்லாமல் பாழாக்கிவிட்டேனென்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பு அளிக்காத வகையில் அவன் சீராக வாழ வேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடம் இல்லாத வகையில் அவன் நேராக வாழ வேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனிதகுலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக, நான் என் வாழ்வு முழுவதையும், சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும்பொழுது கூறும் உரிமை பெறும் வகையில் அவன் வாழ வேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடி வைக்கக்கூடுமாதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்`` என்று
நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் தன்னுடைய வீரம் விளைந்தது என்னும் நாவலில் குறிப்பிட்டார். இதையே திருவள்ளுவர் தன்னுடைய திருக்குறளில் ‘‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ்வுலகு’’ என்றார். ஆம், பிறந்த ஒரு மனிதன் எந்த நிமிடம் இறப்பான் என்று தெரியாது. எனவே அவன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அதன் பொருள். அந்த வகையில் தன் வாழ்நாள் முழுதும் மனிதகுல மேம்பாட்டிற்காக வாழ்ந்திட்ட பெரியோரில் தந்தை பெரியார் குறிப்பிடத்தக்கவராவார்.
1879 செப்டம்பர் 17 அன்று தமிழகத்தில் ஈரோடு என்னும் நகரில் பிறந்த, தந்தை பெரியார், 1973 டிசம்பர் 24 அன்று சென்னையில் உயிர்நீத்தார். அவர் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள் 3 மாதங்கள் 7 நாட்கள். அதாவது 34 ஆயிரத்து 433 நாட்கள். இப்போதிருப்பது போல வசதியான போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே சுமார் 8600 நாட்கள் சுற்றுப்பயணத்திலேயே செலவு செய்தார். சுமார் 13 லட்சத்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்தார். அந்தப் பயணத்தில் அவர் பங்கு கொண்ட நிகழ்ச்சிகள் பத்தாயிரத்து எழுநூறு ஆகும். அவற்றில் அவர் கருத்துரைகள் ஆற்றிய நேரம் சுமார் 21 ஆயிரத்து 400 மணி நேரமாகும். இந்தச் சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்து, அது ஒலிபரப்பப்பட்டால் இரண்டு ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் இரவு பகலாகத் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். இவருக்கு முன்னர் வேறெந்தத் தத்துவ ஞானியும் இவ்வளவு நீண்ட நாட்கள் மக்களிடையே சொற்பொழிவு ஆற்றியதில்லை எனலாம். அதனால்தான் யுனெஸ்கோ என்னும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கீழ் உள்ள கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு மன்றம், ‘‘பெரியார் புதிய உலகத்தின் தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியக் கண்டத்தின் சாக்ரடீஸ், சமுதாய சீர்திருத்த இயக்கத்தின் தந்தை! அறியாமை, மூட நம்பிக்கை, அர்த்தமற்ற வழக்கங்கள், ஆதாரமற்ற நடப்புகள் ஆகியவற்றின் கடும் எதிரி’ என்று 1970 ஜூன் 27 அன்று பட்டயம் வழங்கியது. இதுபோல் வேறெவருக்கும் பட்டயம் வழங்கப்பட்டதில்லை.‘‘மனிதன் எவனும் தானாகவே பிறக்கவில்லை, ஆகவே அவன் தனக்காகவும் பிறக்கவில்லை. மனித வாழ்க்கை என்பது மக்கள் சமுதாயத்துக்குத் தொண்டு செய்வதேயாகும். தொண்டு செய்யாத மனித வாழ்வு என்பது மிருக வாழ்க்கைக்குச் சமமானதேயாகும்’’ என்று அறுதியிட்டு உறுதிபடக் கூறினார்.தமிழ் மக்களிடையே சுயமரியாதை உணர்வுகளை விதைக்க வேண்டும், சுயமரியாதை உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்ற கருத்தில் ஈ.வெ.ரா. ‘குடிஅரசு’ என்னும் வாரப் பத்திரிகையைத் தொடங்கினார். இவரது அச்சகத்து, ‘உண்மை விளக்கம் அச்சகம்’ எனப் பெயரிட்டார். ‘‘மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும். உயர்வு - தாழ்வு என்னும் உணர்ச்சியே, நமது நாட்டில் வளர்ந்து வரும் சாதிச்சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிர்களும் ஒன்றென்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர வேண்டும்’’ என்ற நோக்கங்களை குடிஅரசு அடிப்படையாகக் கொண்டிருந்தது. பெரியார் துவக்கி வைத்த சுயமரியாதை இயக்கம் சொல்வது என்ன? சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு - தாழ்வும் இருக்கக் கூடாது. மனித சமூகம் பொருளாதாரத் தன்மையில் ஏழை - பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் எல்லாப் பொருளும் பூமியும் எல்லாருக்கும் சரிசமமாக இருத்தல் வேண்டும். மக்கள் சமூகத்தில் ஆணுக்கும் - பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சமத்துவம் இருக்க வேண்டும். மனித சமூகத்தில் சாதி - மதம் - தேசம் - வருணம் - கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமூக ஒற்றுமையே நிலவ வேண்டும். உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் உயர்வு தாழ்வு இல்லாமல் சமூகத்தின் தேவைகளுக்கு, சகல மனிதர்களும் பாடுபட்டு அவற்றின் பயனைச் சரிசமமாக அனுபவிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் எவற்றுக்கும் எவ்விதத்துக்கும் அடிமையாகாமல் அவரவர் அறிவு, ஆராய்ச்சி, காட்சி, உணர்ச்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்க சர்வ சுதந்திரம் இருக்க வேண்டும். பெரியாரின் இந்தக் கொள்கைகளே அவர் நடத்திய ஒவ்வொரு போராட்டத்துக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அடிப்படையாகும். சுயமரியாதை இயக்கத்திற்காக தந்தை பெரியார், ‘ரிவோல்ட்’ என்னும் ஆங்கில இதழையும் நடத்தி வந்தார். ரிவோல்ட் என்ற ஆங்கில வார்த்தைக்குக் கட்டுப்பாட்டைத் தகர்த்தல் என்று பொருள். மனித இயற்கைக்கும் அறிவுக்கும் முரணான கட்டுப்பாட்டைத் தகர்ப்பதும் உலகமும் அதன் இன்பமும் எல்லாருக்கும் பொது என்பதும் அதன் நோக்கங்களாக இருந்தன. மக்கள் யாவரும் சமம் என்ற கொள்கையை மனச்சாட்சிப்படி சாத்தியமான வழிகளில் பிரச்சாரம் செய்வதே இப்பத்திரிகையின் நோக்கம் என்று பெரியார் பிரகடனம் செய்தார்.குடியரசு இதழை ஆங்கிலேயர் ஆட்சி 1933ஆம் ஆண்டில் தடை செய்தது. அப்போது அதற்கு மாற்றாக நவம்பர் 20ஆம் நாளன்று ‘புரட்சி’ என்னும் வார ஏட்டினைத் தொடங்கினார். அதன் முதல் இதழில் பெரியார், ‘‘குடிஅரசை ஒழிக்கச் செய்த முயற்சியில் புரட்சி தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும்பான்மையான மக்களின் ஆட்சியாகிய குடிஅரசுக்கு உலகில் இடமில்லையானால் கண்டிப்பாய் புரட்சி தோன்றியேதான் ஆகவேண்டும். அந்த ஐதீகப்படியே புரட்சி தோன்றியிருப்பதால், புரட்சியில் பற்றுள்ள மக்கள் யாவரும் புரட்சியை வரவேற்பார்கள். பாடுபட்டு ஊரானுக்குப் போட்டுவிட்டுப் பட்டினியாகவும், சமூக வாழ்வில் தாழ்மையாகவும் வாழும் மக்களின் ஆதரவையே ‘புரட்சி’ எதிர்பார்த்து நிற்கிறது. வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலாளிகளைக் காக்கும் வேலைக்காக இன்று ‘புரட்சி’ வெளிவரவில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்துக் கருப்பு ஆட்சியை ஏற்படுத்த ‘புரட்சி’ தோன்றவில்லை. அதுபோலவே இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்து மதத்தைப் பரப்ப ‘புரட்சி’ தோன்றவில்லை. ‘சகல முதலாளி வர்க்கமும், சகல சமயங்களும் அடியோடு அழிந்து மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண் - பெண் அடங்கலும் சர்வ சமத்துவமாய் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காகப் ‘புரட்சி’ தோன்றியிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.பின்னர் ‘புரட்சி’ ஏடும் நிறுத்தப்பட்டு, ‘பகுத்தறிவு’ வார ஏட்டைத் துவக்கினார். இதன் முதல் இதழில், ‘‘மனித சமூகத்தால் மவுடீகத்தால் ஏற்பட்ட துரபிமானங்களை கடவுள், சாதி, மதம், தேசம், நான், எனது என்பன போன்ற அபிமானங்கள் அறவே ஒழித்து, மனித சமூக ஜீவாபிமானத்தையும், ஒற்றுமையையும், பிரதானமாய்க் கருதி உழைத்து வரும் என்றும், ‘பகுத்தறிவு’ மனித ஜீவாபிமானத்திற்கு மக்களை நடத்திச் செல்லுமேயொழிய எக்காரணம் கொண்டும், மக்கள் பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வில் உயிர் வாழாது’’ என்றும் பெரியார் குறிப்பிட்டிருந்தார். பின்னர், 1935ஆம் ஆண்டு ஜூன் முதல்நாள் ‘விடுதலை’ தொடங்கப்பட்டு இன்றளவும் நடந்து வருகிறது. இவ்விதழின் முதல் இதழில் பெரியார், ‘இப்பத்திரிகை நீடுழி வாழ்ந்து பாமர மக்களுக்கும், பண்டிதர்களுக்கும் பயன்பட்டு உலகமக்களுக்கு உண்மை விடுதலையைக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தார். தன் வாழ்நாள் முழுதும் மக்கள் மேம்பாட்டிற்காகப் பல்வேறு இதழ்களையும், இயக்கங்களையும் கண்டவர் தந்தை பெரியார். அவர் தன்னைப்பற்றிக் கூறுகையில், ‘‘நான் ஒரு பூரணப் பகுத்தறிவுவாதி. எனக்கு மனிதப்பற்றைத் தவிர வேறு நாட்டுப்பற்றோ, மொழிப் பற்றோ, இனப்பற்றோ கிடையாது. ஓர் உண்மையான பகுத்தறிவு வாதிக்கு மனிதப் பற்றைத் தவிர வேறெந்தப் பற்றும் இருக்கவும் கூடாது’’ என்றார். இவ்வாறு ஓர் உன்னத மனிதாபிமானியாக, ஓர் உன்னத உலகக் குடிமகனாக மாபெரும் புரட்சியாளராக வாழ்ந்திட்ட தந்தை பெரியார் அவர்களை தமிழ்கூறும் நல்லுலகம் மட்டும் அல்ல, உலகமே என்றென்றும் நினைவு கூரும்.
ச. வீரமணி.
-----

Subscribe to:
Posts (Atom)