Sunday, March 23, 2008

இடதுசாரிக் கட்சிகளின் கருத்தொற்றுமை - செயல் ஒற்றுமையேஇடதுசாரி இயக்கத்திற்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்குக் காரணம்

ஹைதராபாத், மார்ச் 23-
இடதுசாரிக் கட்சிகளின் மத்தியில் இருந்த கருத்தொற்றுமையும், செயல் ஒற்றுமையுமே, கடந்த மூன்றாண்டுகளில் நமக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்குக் கணிசமான காரணிகளாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
ஆந்திர மாநிலம் தலைநகர் ஹைதராபாத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மாநாட்டை வாழ்த்தி பிரகாஷ்காரத் உரைநிகழ்த்தும்போது இவ்வாறு கூறினார். அப்போது அவர் மேலும் கூறியதாவது:
‘‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாட்டின் பங்கேற்றுள்ள அனைத்துப் பிரதிநிதிகளுக்கும், விருந்தினர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு சார்பில் என் இதயங்கனிந்த தோழமை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பொதுவான வரலாற்றிற்கு நம் இரு கட்சிகளுமே இணையாக பங்களிப்பினைச் செய்துள்ளது. இவ்வாறு, நம் இருவருக்கும் இடையே தனி பிணைப்புண்டு. இந்தப் பிணைப்புதான் சமீபகாலங்களில் உறுதியாக முன்னுக்கு வந்து, நாட்டின் இடதுசாரி சக்திகள் எதிர்கொண்ட சவால்களை இணைந்து நின்று எதிர்த்திட துணைபுரிந்திருக்கிறது. இன்று, மாவீரன் தியாகி பகத்சிங் தூக்கிலிடப்பட்ட 77ஆவது நினைவுதினமாகும். சோசலிசத்தைத் தழுவிக்கொண்ட, ஏகாதிபத்திய எதிர்ப்பு இளம் போராளிகளில் முன்னணியில் நின்ற ஒப்புயர்வான இளைஞர்களில் பகத்சிங்கும் ஒருவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவருடைய பாரம்பர்யம்தான், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறுதியான நிலைபாட்டினை எடுத்திட, நம் இரு கட்சிகளுக்குமே தத்துவ வல்லமையைத் தந்திருக்கிறது.
ஹைதராபாத்தில் நாம் இங்கே கூடியிருக்கும் அதே சமயத்தில், உலக முதலாளித்துவ முறையானது கடும் சிக்கலில் சிக்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார நிலைமை மந்த நிலைமையை நோக்கி வெகு வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. அதன் ஆழத்தை இதுவரை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. முதலாளித்துவ உலகில் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடியானது மிகவும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. இதன் விளைவாக அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வீதிக்கு வந்துள்ளார்கள்.உலக நிதி மூலதனம் குறித்தும், ஏகாதிபத்திய உலகமயம் குறித்தும் கம்யூனிஸ்ட்டுகளாகிய நமக்கு எந்தவிதப் பிரேமையோ மாயையோ கிடையாது. இந்தியாவில் திணிக்கப்பட்டு வந்த நவீன தாராளமயக் கொள்கைகளை நாம் விடாப்பிடியுடன் எதிர்த்தே வந்திருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில், நாம் மத்திய அரசின் முழுமையான மூலதனக் கணக்கு நாணய மாற்றுக்கு நாம் அளித்துவந்த எதிர்ப்பின் காரணமாகவே, உலகமய நிதி மூலதனத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, அதே வேகத்தில் நம் நாட்டையும் தாக்காது நம் நாட்டைப் பாதுகாத்திருக்கிறது என்பது இங்கு நாம் குறித்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். நிதி நெருக்கடியின் அழிவிளைவுகளிலிருந்து கணிசமான அளவிற்கு நம் நாட்டைப் பாதுகாத்திருக்கிறோம் என்றால் அதற்கு, நாம் நம் நாட்டில் கட்டுப்பாடற்ற முறையில் மூலதன இறக்குமதியை அனுமதிக்காததே காரணமாகும்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மூன்று ஆண்டுகளுக்கு முன் தங்கள் அகில இந்திய மாநாடுகளை நடத்தின. கடந்த மூன்றாண்டுகளில் நாம் நடந்து வந்தப் பாதையைச் சற்றே திரும்பிப் பார்த்தோமானால், இடதுசாரி இயக்கம், மிகவும் வலுவான முறையிலும் ஆக்கபூர்வமாகவும் முன்னேறியிருக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். இடதுசாரி இயக்கம் மதச்சார்பின்மையைப் பாதுகாத்திடவும், பிரிவினைவாத மற்றும் மிகவும் கேடுபயக்கவல்ல பாஜக/ஆர்எஸ்எஸ் மதவெறி அரசியலுக்கும் எதிராக உறுதியாக நின்றிருக்கிறது. நாட்டில் மதவெறிக்கு எதிராக உறுதியானப் போராட்டத்தை மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல், மதவெறி அரசியலையை தனிமைப்படுத்தி, மக்களை மதச்சார்பற்ற மாண்புகளைப் பாதுகாக்கும் வண்ணம் அணிதிரட்டியும் இருக்கிறோம். இதனை மேற்குவங்கம், கேரளம், திரிபுராவில் நன்கு காண முடியும்.
வரவிருக்கும் காலங்களில், இந்துத்வா சக்திகளுக்கு எதிராக அரசியல்ரீதியாகவும், தத்துவார்த்தரீதியாகவும் நம் போராட்டத்தினை நாம் மேலும் இரட்டிப்பாக்கிட வேண்டும். அதன் மூலம் அது மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான பாதையை முற்றிலுமாக அடைத்திட வேண்டும்.
கடந்த மூன்றாண்டு காலமாக, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் அனைத்து அம்சங்களிலும் இடதுசாரி இயக்கம் முன்னின்று மக்களைக் காத்திருக்கிறது. அது, விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்துள்ள விவசாய நெருக்கடியாக இருந்தாலும் சரி, விவசாயத் தொழிலாளர்களுக்கும் நாட்டுப்புற மக்களுக்கும் வேலையில்லா நிலைமை ஏற்பட்டபோதும் சரி, பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகளும் சிறுதொழில் பிரிவுகளும் மூடப்பட்டு தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டபோதும் சரி, பெண்களின் வேலை நிலைமைகள் மோசமாகிக்கொண்டிருக்கும் போதும் சரி, தலித் மற்றும் பழங்குடியினர் பொருளாதார நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையிலும் சரி, மக்களின் வாழ்க்கைத்தரத்தை விஷம்போல் ஏறிவரும் விலைவாசி உறிஞ்சிடும் நிலையிலும் சரி - இடதுசாரி இயக்கம் மக்களின் நலன்களைக் காப்பதற்காக முன்னணியில் நின்றதோடு மட்டுமல்லாமல், மக்களின் நலன்களைக் காத்திட மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து போராடியும் வந்துள்ளது.
தீண்டாமைக் கொடுமை, சாதிய ஒடுக்குமுறை, பெண்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்திடவும் இடதுசாரி இயக்கத்தின் போராட்டம் கடந்த காலங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் மக்களுக்குக் கேடுபயக்கும் பல கொள்கைகளைத் தடுத்து நிறுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறது. அது, நிதித்துறையின் கட்டுப்பாட்டை அந்நிய மூலதனத்திற்கு ஒப்படைக்க இருந்த முயற்சியாக இருந்தாலும் சரி, அல்லது சில்லரை வர்த்தகத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் நடவடிக்கையாக இருந்தாலும் சரி, அல்லது, ஓய்வூதிய நிதியை தனியாரிடம் தாரை வார்த்திட மேற்கொண்ட முயற்சியாக இருந்தாலும் சரி, அல்லது, தொழிலாளர் சீர்திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் விஷயமாக இருந்தாலும் சரி - அனைத்திலும் இடதுசாரிக் கட்சிகள் உறுதியுடன் நின்று அவற்றைத் தடுத்து நிறுத்தி, மக்களைக் காத்திருக்கின்றன.
நிறைவாக, இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதிலும் இடதுசாரி இயக்கம் பாதுகாப்பு அரணாக நின்றிருக்கிறது. பாஜக பாணி தேசியவாதிகள் வெட்கங்கெட்ட முறையில் அமெரிக்காவைத் தங்களின் ‘‘இயற்கையான பங்காளிகள்’’ என்று வாய்கூசாமல் சொல்லிய அதே சமயத்தில், தற்போதைய ஆட்சியாளர்களும் ஏகாதிபத்திய வல்லரசுகளுடன் போர்த்தந்திரக் கூட்டணியை மேற்கொள்ள ஆவலுடன் முயற்சித்த அதேசமயத்தில், இடதுசாரி இயக்கம் மட்டுமே அமெரிக்காவுடன் எவ்விதப் போர்த்தந்திர கூட்டணியையும் உறுதிபட எதிர்த்து நின்றிருக்கிறது. இவ்வாறாக நம் எதிர்ப்பை - அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் போர்த்தந்திரம் - என அனைத்து முன்னணியிலும் உறுதிபட மேற்கொண்டு, நாட்டின் சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பாதுகாத்து வந்திருக்கிறோம். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரான போராட்டத்தில் இடதுசாரிக் கட்சிகள் முன்னணியில் இருந்து வருகிறது. அமெரிக்காவுடனான, மத்திய அரசின் ராணுவக் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராகவும் நாம் நம் போராட்டத்தைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளோம். அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளியாக இந்தியாவை மாற்ற முயற்சிக்கும் அனைத்து முயற்சிகளுக்கு எதிராகவும் இடதுசாரி இயக்கம் வலுவாகப் போராட வேண்டிய நிலையில் உள்ளது.
இந்தியாவின் 1.1 பில்லியன் (110 கோடி) மக்கள், சமீப காலத்தில் ஏராளமான பில்லியனர்களை உருவாக்கிவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. ஒரு பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக செல்வத்தைப் பெற்றிருக்கும் பணக்காரர்களில் இநதியாவில் 48 பேர் இருக்கிறார்கள். அதாவது ஒரு பில்லியனர் என்றால் அவருக்கு சுமார் 4000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து இருக்கிறது என்று பொருள். நாட்டில் 77 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் உழைக்கும் மக்களின் ஊதியம் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட இல்லாத நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் குறிக்கோள் இவ்வாறு பில்லியனர்களை உருவாக்கும் ஒன்றாக நிச்சயம் இருந்திட முடியாது.
எனவே, மாற்றுப் பாதைக்கான போராட்டத்தை நாம் முன்னிலும் சக்தியுடனும் வீர்யத்துடனும் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். வரவிருக்கும் காலங்களில் உழைக்கும் மக்களின் போராட்டத்தையும் வர்க்கப்போராட்டத்தையும் மேலும் கூர்மையாகவும் தீவிரமாகவும் கொண்டு சென்றிடுவோம். இதன் அடிப்படையில்தான் இடதுசாரி இயக்கமும் வலுப்பட்டு வளரும்.
இடதுசாரிக் கட்சிகளின் மத்தியில் இருந்த கருத்தொற்றுமையும், செயல் ஒற்றுமையுமே, கடந்த மூன்றாண்டுகளில் நமக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்குக் கணிசமான காரணிகளாகும். இவ்வாறான ஒற்றுமையை ஏற்படுத்துவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட அணுகுமுறையும் ஒருங்கிணைப்பும் முக்கியமான பங்களிப்பினைச் செய்திருக்கிறது. இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை, சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பதென்பது அப்படி ஒன்றும் இயல்புமீறிய ஒன்றல்ல. ஆனாலும், இடதுசாரி ஒற்றுமையைச் சீர்குலைக்கும் காரியம் எதனையும் செய்திடக் கூடாது. அதனைத்தான் ஏகாதிபத்திய வட்டாரங்களும், ஆளும் வர்க்கங்களும் விரும்புகின்றன. இடதுசாரி ஒற்றுமையை அடித்தளமாகக் கொண்டு, நம் எதிர்கால முன்னேற்றம் அமைந்திடும். இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உளப்பூர்வமாக உழைத்திடும் என்று, எங்கள் கட்சியின் சார்பில் அகிலஇந்திய மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன். அதேசமயத்தில், நாட்டில் உள்ள மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைப்பதற்கும் நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு மக்கள் முன், ஒரு மூன்றாவது மாற்றை உருவாக்கி முன்னிறுத்த வேண்டிய தேவையும் இடதுசாரி இயக்கத்தின் தோள்கள் மீது விழுந்துள்ளன.அகில இந்திய மாநாடு அனைத்து வெற்றிகளையும் பெற்றிட வாழ்த்துகிறேன். நம் இரு கட்சிகளும் மேலும் ஒற்றுமையுடன் மேலும் ஒத்தக் கருத்துக்களுடன் ஒன்றிணைந்து முன்னேறுவோம்.’’
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.
(ச. வீரமணி)

Friday, March 21, 2008

குடியரசு தலையங்கம்:பகத்சிங்





(தந்தை பெரியார் அவர்கள் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதும், ‘குடியரசு’ வார இதழில் எழுதிய தலையங்கம்)

திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப்பற்றி அனுதாபங்காட்டாதார்கள் யாருமே இல்லை. அவரைத் தூக்கிலிட்ட காரியத்திற்காக சர்க்காரைக் கண்டிக்காதவர்களும் யாரும் இல்லை. அதோடு மாத்திரமல்லாமல் இந்தக் காரியம் நடந்துவிட்டதற்காக திரு. காந்தியவர்களையும் அநேக தேசபக்தர்கள் என்பவர்களும், இப்போது வைகின்றதையும் பார்க்கின்றோம்.இவை ஒருபுறம் நடக்க இதே கூட்டத்தாரால் மற்றொருபுறத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போமானால் சர்க்கார் தலைவரான ராஜப் பிரதிநிதி மதிரு. இர்வின் பிரபுவைப் பாராட்டுவதும், அவரிடம் ராஜி பேசி முடிவு செய்து கொண்ட திரு. காந்தி அவர்களைப் புகழ்வதும், பகத்சிங்கை தூக்கிலிடக்கூடாது என்கின்ற நிபந்தனை இல்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க திருப்தியடைந்திருப்பதோடல்லாமல், அதை ஒரு பெரிய வெற்றியாய்க் கருதி வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடைபெறுகின்றன.

இவ்வளவோடு மாத்திரமல்லாமல் திரு. காந்தியவர்கள் திரு. இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி அந்தப்படியே அழைக்கும்படி தேச மகா ஜனங்களுக்கும் கட்டளையிடுவது, திரு. இர்வின் பிரபு அவர்கள் திரு. காந்தியவர்களை ஒரு பெரிய மகான் என்றும், தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றும், வெள்ளைக்காரர்கள் அறிய விளம்பரம் செய்வதுமான காரியங்களும் நடைபெற்றன.ஆனால் இப்போது வெகு சீக்கிரத்தில் அதே மக்களால் ‘‘காந்தீயம் வீழ்க’’ ‘‘காங்கிரஸ் அழிக’’ ‘‘காந்தி ஒழிக’’ என்கின்ற கூச்சல்களும், திரு, காந்தி அவர்கள் செல்லுகின்ற பக்கம் கருப்புக்கொடிகளும் அவர் பேசும் கூட்டங்களில் குழப்பங்களும் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டன. இவைகளையெல்லாம் பார்க்கும்போது, அரசியல் விஷயமாய்ப் பொது ஜனங்களுடைய அபிப்பிராயம் என்ன? கொள்கை என்ன? என்பதைக் கண்டு பிடிக்கவே முடியாமல் இருப்பதோடு அப்படி ஏதாவது ஒரு கொள்கை யாருக்காவது உண்டா என்று சந்தேகிக்க வேண்டியதாகவுமிருக்கிறது.

எது எப்படி இருந்தபோதிலும், திரு. காந்தியவர்களின் உப்பு சத்தியாக்கிரக கிளர்ச்சி ஆரம்பித்த காலத்திலேயே, இக்கிளர்ச்சி மக்களுக்கோ, தேசத்திற்கோ சிறிதும் பயன்படாது என்றும், பயன்படாமல் போவதோடல்லாமல் தேசத்தின் முற்போக்குக்கும், கஷ்டப்படும் மக்களின் விடுதலைக்கும் விரோதமானது என்றும் எவ்வளவோ தூரம் எடுத்துச் சொன்னோம். நாம் மாத்திரமல்லாமல் திரு. காந்தியவர்களே இக்கிளர்ச்சி ஆரம்பிப்பதற்கு காரணமே, பகத்சிங் போன்றவர்கள் செய்யுங்காரியங்களை கெடுப்பதற்கும், ஒழிப்பதற்குமே என்று கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லியுமிருக்கின்றார். போதாக்குறைக்கு அக்கம்பக்கத்து தேசத்தவர்களில் உண்மையான சமதர்மக் கொள்கையுடைய தேசத்தார்களும் ‘‘திரு. காந்தியவர்கள் ஏழைகளை வஞ்சித்து விட்டார், சமதர்மக் கொள்கைகளை ஒழிக்கவே தன்காரியங்களைச் செய்கின்றார், திரு. காந்தி ஒழியவேண்டும், காங்கிரஸ் அழிய வேண்டும்’’ என்று ஆகாயமுட்டக் கூப்பாடு போட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனால் நமது தேசிய வீரர்கள், தேசபக்தர்கள் என்பவர்கள் ஒன்றையும் கவனியாமல், பலாபலனையும் உணராமல் விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவதுபோலவும், பந்தயங்கூறிக்கொண்டு பாறையில் முட்டிக்கொள்வது போலவும் தலை கிறுகிறுத்துக் கண் தெரியாமல் கூத்தாடினார்கள், அதன் பயனாய் சிறை சென்று வீரர்களை ‘‘வாகை மாலை சூடி’’ திரும்பி வந்தார்கள். அதன் பெருமைகளையும் அடைந்து கொண்டார்கள். பிறகு இப்போது பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப் பார்த்துவிட்டு, ‘‘காந்தீயம் வீழ்க’’ ‘‘காங்கிரஸ் அழிக’’ ‘‘காந்தி ஒழிக’’ என்று கூப்பாடும் போடுகின்றார்கள். இதனால் என்ன பயன் ஏற்பட்டுவிடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

நிற்க, நம்மைப் பொருத்தவரை நாம் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பகத்சிங் அவர்கள் இந்த மாதிரி பொருப்பும் கவலையும் அற்ற மூட மக்களும், மட மக்களும் பலாபலனை எதிர்பாராமல் எப்படியாவது தங்களுக்கு கௌரவம் கிடை;ததால் போதுமென்கின்ற சுயநல மக்களும் உள்ள நாட்டில் உயிருடன் வெகுகாலம் இருந்து கொண்டு இவர்களது நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு வினாடிதோரும் வேதனைப் பட்டு இவர்களது முட்டுக்கட்டைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் அவர் தன் உயிரை விட்டு மறைய நேர்ந்தது, பகத்சிங்கிற்கு மெத்த ‘‘சாந்தி’’ என்றும், நன்மை யென்றுமே கருதுதுகின்றோம். அந்தப் பேற்றை நாம் அடைய முடியவில்லையே என்றுதான் கவலைப்படுகின்றோம்.

ஏனெனில் ஒரு மனிதன் தன் கடமையைச் செய்தானா? இல்லையா? என்பதுதான் கேள்வியே தவிர, பலன் என்ன ஆச்சுது என்பது இங்கு நமது கேள்வி அல்ல. ஆனாலும் காமறிந்து, இடமறிந்து கடமையைச் செலுத்த வேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொள்ளுகின்றோமாயினும் பகத்சங் கொள்கைக்கு காலமும் இடமும், நடப்பும் விரோதமாயில்லை என்றே சொல்லுவோம். ஆனால் அவர் தனது கொள்கையை நிறைவேற்றக் கைக்கொண்ட முறைகளில் சிறிது தவறு நேர்ந்துவிட்டதாக நம் புத்திக்குத் தோன்றிய போதிலும் அவரது கொள்கை குற்றமுடையது என்று சொல்ல நாம் ஒருக்காலும் துணியவே மாட்டோம், அதுவேதான் உலகத்தின் சாந்தநிலைக் கொள்கையாகும். நிற்க, உண்மையிலேயே பகத்சிங் அவர்கள் தனது கொள்கைகள் முழுவதையும் சரி என்று மனப்பூர்த்தியாய் நிச்சயித்துக்கொண்டு அதை நிறைவேற்ற அவர் நடந்து கொண்ட மாதிரிகள்தான் சரியான மார்க்கம் என்று அவர் முடிவும் செய்து கொண்டு இருப்பாரேயானால் கண்டிப்பாக அவர் நடந்துகொண்டபடியேதான் நடந்து இருக்க வேண்டியதென்று நாம் சொல்லுவதோடு அந்தப்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் யோக்கியமான மனிதரென்று சொல்ல முடியாது என்றும் சொல்லுவோம். ஆதலால் இப்போது நாம் அவரை ஒரு உண்மையான மனிதர் என்று சொல்லுவோம்.

இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும். ஏனெனில் நாமறிந்தவரை திரு பகத்சிங்கிற்கு பொது உடைமையும்தான் அவரது கொள்கையென்று கருதி இருக்கின்றோம். இதற்கு உதாரணம் என்னவென்றால் திரு பகத்சிங் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்ட வாக்கியம் காணப்படுகிறது. அதாவது:-‘‘பொதுஉடைமைக் கட்சி அதிகாரம் பெற்று ஜனங்களுக்குள் வித்தியாசமான அந்தஸ்துகள் இல்லாமல் இருக்கும்வரை எங்கள் யுத்தம் நடந்துகொண்டுதானிருக்கும். எங்களைக் கொல்வதோடு இந்த யுத்தம் முடிந்துவிடாது. அது பகிரங்கமாகவும் ரகசியமாகவும் நடந்துதான் தீரும்’’என்று குறிப்பிட்டிருக்கிறார். அன்றியும் அவர் கடவுள் விஷயத்திலோ எல்லாம் கடவுள் செயல் என்பதிலோ நம்பிக்கை இல்லாத தன்னம்பிக்கையுடையவர் என்றும் கருதிக்கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்துக்கொள்கையானது எந்த சட்டத்தின்படியும் குற்றமாக்கக்கூடியது அல்லவென்றும் ஆவதாயிருந்தாலும் கூட யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொல்லுவோம். ஏனென்றால் அதனால் பொது மக்களுக்கு எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ ஏற்பட்டுவிடாது என்று உறுதிகொண்டிருக்கின்றோம். அந்தப்படி ஒரு சமயம் ஏதாவது ஏற்படுவதாயிருந்தாலும் நாம் நம் மனப்பூர்வமாய் யாதொரு தனிமனிதனிடமாவது, தனி வகுப்புகளிடமாவது, தனி தேசத்தார்களிடமாவது துவேஷம் இல்லாமலும் எந்த தனி மனிதனுடைய திரேகத்திற்கும் துன்பமுண்டு பண்ணாமலும் நம்மை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கஷ்டப்படுத்திக்கொள்ளவும் சம்மதிக்கின்றதான தியாகத்தன்மையுடன் இருந்துகொண்டு அக்கொள்கையை நிறைவேற்ற முயற்சிக்கின்றோம். ஆதலால் நாம் எதற்கும் கவலைப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை என்று சொல்லுகிறோம்.

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சாதாரணமாக நாம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கி இருக்கின்றதோ அதுதான் மக்களின் ஏழ்மைத் தன்மை ஒழிய வேண்டும் என்பதிலும் அடங்கி இருக்கின்றது. தீண்டாமை ஒழிவதாயிருந்தால் எப்படி மேல்ஜாதி, கீழ்ஜாதி தத்துவம் அழிந்து தானாக வேண்டும், அதுபோலவேதான் ஏழ்மைத்தன்மை ஒழிவதாயிருந்தால் முதலாளித் தன்மை, கூலிக்காரத் தன்மை ஒழிந்துதானாக வேண்டும். ஆகவே இந்தத் தன்மைகள் மறைபடுவதுதான் சமதர்மத்தன்மை பொதுஉடமைத் தன்மை என்பவைகளை ஒழிய வேறில்லை. இந்தக் கொள்கைகள்தான் திரு பகத்சிங் போன்றவர்களின் கொள்கைகள் ஆதலால் இக்கொள்கைகளை நியாயமானவை யென்றும், அவசியமானவை என்றும் கருதுகின்ற ஒருவன் காங்கிரஸ் ஒழிக! காந்தீயம் அழிக!! என்று சொல்லுவதில் நமக்கு ஆச்சரியமோ, குற்றமோ ஒன்றுமே இல்லை. ஆனால் இந்தக் கொள்கைக்காரர்கள் காங்கிரசுக்கு ஜே, காந்திக்கு ஜே என்று சொல்லுவதுதான் நமக்கு மிக ஆச்சரியமாயிருக்கின்றது.

திரு. காந்தியவர்கள் என்றையதினம் கடவுள்தான் தன்னை நடத்துகின்றார் என்றும், வருணாச்சிரமந்தான் உலக நடப்புக்கு மேலானதென்றும், எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ அன்றே பார்ப்பனீயத்திற்கும், காந்தீயத்திற்கும் வித்தியாசமில்லை என்று கருதியதுடன் அத்தத்துவம் கொண்ட காங்கிரசு ஒழிந்தாலொழிய நாட்டுக்கு நன்மை இல்லையென்றும் கருதிவிட்டோம். அந்த உண்மை இன்றுதான் மக்களில் சிலராவது கண்டுபிடித்து காந்தீயம் அழிக என்று சொல்லத்தக்க அறிவையும் துணிவையும் அடைந்திருக்கின்றார்கள். இது நமது கொள்கைகளுக்கு ஒரு பெரிய வெற்றியாகும். திரு பகத்சிங் தூக்கிலிடப்பட்டு உயிர்துறந்திருக்காவிட்டால் இந்த வெற்றி இவ்வளவு பிரபலத்தில் ஏற்படுத்துவதற்கு ஆதாரமே இருந்திருக்காது. அன்றியும் பகத்சிங்கை தூக்காமல் இருந்திருந்தால் காந்தீயத்திற்கும் இன்னமும் ஆக்கம் ஏற்பட்டு இருக்கும் என்றுகூடச் சொல்லுவோம். சுபமாக, தானாகவே நோய்கொண்டு அவஸ்தைப் பட்டு செத்துச் சாம்பலாகி இருக்க வேண்டிய பகத்சிங்குக்கு இந்திய மக்களுக்கு ஏன் உலகமக்களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்கு பயன்படத்தக்கதாய் தனது உயிரைவிட நேர்ந்தது. சாதாரணத்தில் வேறு யாரும் அடைய முடியாத பெரும்பேறு என்றே சொல்லி, பகத்சிங்கை மனமார, வாயாரா, கையார பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம் !! பாராட்டுகின்றோம் !!!

இதே சமயத்தில் ந்மது அரசாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உண்மையான எண்ணமுடையவர்களாகப் பார்த்து மாகாணத்திற்கு 4 பேர் வீதமாவது தூக்கிலிட வேண்டுமென்றும் மனமார வேண்டுகின்றோம்.---

(பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள குறுந்தகட்டிலிருந்து, வெளிக்கொணர்ந்திருப்பவர்: ச. வீரமணி)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக



ன்றியமையாப் பண்டங்களின் விலைகள் தொடர்ந்து கடுமையாக உயர்ந்து கொண்டே செல்கிறது. சமீபத்தில மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் தலைநகரில் நடத்திய பேரணி/ஆர்ப்பாட்டம், மீண்டும் ஒருமுறை, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட, ஐக்கிய முற்போக்கு அரசு மிக மோசமான முறையில் தோல்வி கண்டுவிட்டது என்பதை உயர்த்திப்பிடித்தது.இவ்வாறு எகிறிக்கொண்டே செல்லும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் மூன்று முக்கிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கோரி வருகிறது. முதலாவதாக, வேளாண் செலவினம் மற்றும் விலைகளுக்கான அடையாளம் காட்டியுள்ள 24 இன்றியமையாப் பண்டங்களை ஊக வர்த்தகத்தில் ஈடுபடுத்துவதைத்தடை செய்ய வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழுவும் கூட, 25 வேளாண் பண்டங்கள் குறித்து, ஊக வர்த்தகத்தைத் தடை செய்திட வேண்டும் என்று தனியே கோரியிருக்கிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் அதிகாரமட்டத்திலான ஆய்வானது, மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகமாகியிருப்பதுதான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்று கூறியிருப்பது பிழையானதாகும். ஊக வர்த்தகத்தில் மிகவும் விரிவான முறையில் ஏற்படும் ஊகமே இன்றியமையாப் பண்டங்களின் விலை உயர்வுக்கு அடிப்படைக் காரணமாகும். இத்தகு ஊக வணிகத்தினால், உணவு தான்யங்களின் விலைகள் உலக அளவில் உயர்ந்து கொண்டு செல்கிறது. இடதுசாரிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்தின் விளைவாக, மத்திய அரசு, பயறு மற்றும் பருப்பு வகைகள், அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றினை, ஊக வர்த்தகச் சந்தையிலிருந்து நீக்கி இருக்கிறது. ஆயினும், சமையல் எண்ணெய் உட்பட மற்ற அனைத்து இன்றியமையா இனங்களையும் ஊக வர்த்தகத்திலிருந்து தடை செய்தாலொழிய, இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட முடியாது.

இரண்டாவதாக, மாநிலங்களுக்கு பொது விநியோக முறையில் அளித்து வந்த உணவு தான்யங்களின் விநியோகத்தைக் கடுமையான முறையில் வெட்டிச் சுருக்கிட மத்திய அரசு தீர்மானித்திருப்பதும், இப்பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல், விலைவாசியை மேலும் கடுமையாக உயர்த்திவிட்டது. நாம் இப்பகுதியில் முன்பே சுட்டிக்காட்டியிருப்பது போல, கேரளாவிற்கு அளித்து வந்த உணவு தான்யத்தின் அளவு மிகப் பெரிய அளவில் - சுமார் 82 சதவீதத்திற்கும் அதிகமாகவும், மேற்கு வங்க மாநிலத்திற்கு 44 சதவீத அளவிற்கும் வெட்டப்பட்டிருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்திற்கு, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 139 லட்சம் டன் உணவு தான்யங்களின் விநியோகம் வெட்டப்பட்டிருக்கிறது. கேரளாவில், 49 லட்சத்து 40 ஆயிரம் வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு 1 லட்சத்து 13 ஆயிரத்து 420 டன்கள் அரிசி வழக்கமாக விடுவித்து வந்தது. ஆனால், அது இப்போது 21 ஆயிரத்து 334 டன்கள் என்ற அளவிற்கு - சுமார் 90 சதவீத அளவிற்கு - கடுமையான முறையில் வெட்டப் பட்டிருக்கிறது. கேரளம், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள ஒவ்வொரு குடும்ப அட்டை தாரருக்கும் மாதம்ஒன்றுக்கு 35 கிலோ அரிசி கொடுக்கிறது. இதற்கு 1 லட்சத்து 72 ஆயிரத்து 900 டன்கள் அரிசி தேவை. ஆனால், மத்திய அரசு வெறும் 20 ஆயிரம் டன்களுக்கும் கொஞ்சம் அதிகமான அளவில் அரிசியை விடுவித்திருக்கிறது.

திரிபுரா மாநிலத்திற்கு விடுவிக்கப்பட்டு வந்த உணவு தான்யங்களின் அளவும் கணிசமான அளவிற்குக் குறைக்கப்பட்டிருக்கிறது. அரசின் இத்தகு நடவடிக்கையானது, பொது விநியோக முறையை சின்னபின்னமாக்கி, உணவுப் பாதுகாப்பை இடருக்கு உட்படுத்திடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ‘பல மாநில அரசுகள் தங்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடுகளைச் சரிவரப் பயன்படுத்தாததால்தான் இவ்வாறு பொருள்களின் விநியோகம் குறைக்கப்பட்டிருக்கிறது’ என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறது. சில மாநிலங்களைப் பொறுத்து இது உண்மையாக இருக்கலாமே ஒழிய, இடதுசாரிகள் தலைமையில் உள்ள எந்த மாநிலமும் இந்த வகையறாவின் கீழ் வர வாய்ப்பே இல்லை. இன்னும் சரியாகச் சொல்வதெனறால், பொது விநியோக முறை மிகவும் சிறப்பாகச் செயல்படுவதே இடதுசாரிக் கட்சிகள் தலைமையில் உள்ள மாநிலங்களில்தான். பிரதமரைச் சந்தித்த, இடதுசாரிக் கட்சித் தலைவர்களின் தூதுக்குழு, இம்மாநிலங்களுக்கு எப்போதும் விநியோகித்து வந்த உணவு தான்யங்களின் அளவு மீண்டும் வழங்கப்படுவதற்குத் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்திருக்கிறது.மூன்றாவதாக, நாட்டு மக்களில் மிகப் பெரும்பான்மையோரின் வருமானத்தில் பெரும்பான்மையான பங்கை விழுங்கிடும் இவ்விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட வேண்டுமானால், அதற்கு பொது விநியோக முறையின் கீழ் வழங்கப்படும் குடும்ப அட்டைகளை வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு என்றும் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு என்றும் பிரிக்காது இன்றியமையாப் பண்டங்களை அனைவருக்கும் அளித்திட வேண்டும். மாறாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது, பொது விநியோக முறையின் கீழ் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்களை முற்றிலுமாக ஒழித்திட வேண்டும் என்பகைக் குறியாகக் கொண்டு, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் உணவு தான்யங்களை விநியோகிக்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. இது நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னப்படுத்திவிடும். இது, நாட்டு மக்களின் பெரும்பகுதியினருக்கு உணவுப் பாதுகாப்பின்மையை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே உயர்ந்துள்ள பண்டங்களின் விலையை மேலும் மோசமான முறையில் உயர்த்திடும்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட வேண்டும் என்று மத்திய அரசு உண்மையிலேயே கருதுமானால், மேற்கண்ட மூன்று நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் விலைவாசியைக் கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, இடதுசாரிக் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள எதிர்ப்பு ஒரு தொடக்கம் மட்டுமே. வரவிருக்கும் காலங்களில் இது மேலும் தீவிரமாகும்.

தமிழில்: ச. வீரமணி