Friday, February 8, 2008

வாழ்க்கை ஒரு சவால் - சந்தியுங்கள் - நீதியரசர் கற்பக விநாயகம்



புதுடில்லி, பிப். 9-

வாழ்க்கை ஒரு சவால் - சந்தியுங்கள் என்பது இன்றைய காலகட்டத்திலே மிகவும் தேவையான சொற்களாக மாறிவிட்டன என்று ஜார்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் கற்பக விநாயகம் கூறினார்.தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமையன்று மாலை ‘‘வாழ்க்கை ஒரு சவால் - சந்தியுங்கள்’’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் வரவேற்புரையாற்றினார். பின்னர் சிறப்புச் சொற்பொழிவாற்றியபோது நீதியரசர் கற்பக விநாயகம் பேசியதாவது:

‘‘இங்கே சிறப்புச் சொற்பொழிவாற்ற தில்லித் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் என்னைக் கேட்டுக்கொண்டபோது நான் சில தலைப்புகளைச் சொன்னேன். அதில் ‘‘வாழ்க்கை ஒரு சவால் - சந்தியுங்கள்’’ என்கிற தலைப்பை பொதுச்செயலாளர் இரா. முகுந்தன் தேர்ந்தெடுத்து அதிலேயே உரையாற்றும்படிக் கேட்டுக் கொண்டார். வாழ்க்கை ஒரு மலர்ச்சோலை என்று சொல்லாமல், வாழ்க்கை ஒரு சொர்க்கம் என்று சொல்லாமல், வாழ்க்கை ஒரு சவால் - சந்தியுங்கள் என்று ஏன் சொல்ல வேண்டும்? வாழ்க்கை ஒரு சவால் - சந்தியுங்கள் என்ற சொற்கள் விவேகானந்தர் சொன்ன சொற்கள். அதுவும் இங்கே பள்ளிக் குழந்தைகள் இருக்கிறபோது, இளைஞர்கள் இருக்கிறபோது இளைஞர்களை மிகவும் விரும்பிய விவேகானந்தர் கூறிய சொற்கள் அவை. இன்றைய உலகமய காலகட்டத்திலே மிகவும் தேவையான சொற்களாக அவை மாறிவிட்டன. வாழ்க்கை ஒரு சவால் சந்தியுங்கள், வாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள், வாழ்க்கை ஒரு சோகம் - முறியடியுங்கள், வாழ்க்கை ஒரு பாடல் - இசைத்துப் பாருங்கள், வாழ்க்கை ஒரு பயணம் - முடித்து வையுங்கள், வாழ்க்கை ஒரு பரிசு - பெற்றுக்கொள்ளுங்கள், வாழ்க்கை ஒரு அழகு - ஆராதியுங்கள், வாழ்க்கை ஒரு கடமை - செய்து முடியுங்கள், வாழ்க்கை ஒரு லட்சியம் - அடைந்து விடுங்கள், வாழ்க்கை ஒரு சக்தி - உணர்ந்துகொள்ளுங்கள், வாழ்க்கை ஒரு சரித்திரம் - பகிர்ந்துகொள்ளுங்கள், வாழ்க்கை ஒரு வரலாறு - படைத்துவிடுங்கள், நீங்களே வரலாறாக மாறி வரலாற்றைப் படையுங்கள். இந்தச் சொற்கள் அத்தனையும் என்னுடைய சொற்கள் அல்ல. இவை அனைத்தும் விவேகானந்தர் கூறிய சொற்களாகும். நாம் ஏன் விவேகானந்தரை எண்ணிப் பார்க்க வேண்டும்? இன்றைய இளைஞர்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்? உலகமயக் கொள்கைகள் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும்போது, மனிதாபிமானம் எங்கே இருக்கிறது என்று தேட வேண்டியதாக இருக்கிறது. மணி (money) தா, அபிமானம் தருகிறேன் என்ற நிலையிருக்கிறது. அடுத்தவரிடம் அன்பு பாராட்டுவது, அன்புசெலுத்துவது, திருப்தியாக இருப்பது, மகிழ்ச்சியாக இருப்பது, சுறுசுறுப்பாக இருப்பது அவசியம்.சுறுசுறுப்பான மனிதர்களைப் பார்க்கும்போது நமக்கும் சுறுசுறுப்பு வரும். மகிழ்ச்சியான மனிதர்களைப் பாருங்கள், நமக்கும் மகிழ்ச்சி வரும். இளைஞர்கள் என்பது வயதில் இல்லை, மனதில்தான் இருக்கிறது. இருபது வயது கிழவர்களும் உண்டு, 70 வயது இளைஞர்களும் உண்டு. வேலையை நினையுங்கள், துடிப்பாகச் செய்யுங்கள், அப்போதுதான் இளைஞர்களுடைய மனம் வரும். எதையாவது செய்து முடிக்க வேண்டும் என்ற ஆற்றல், ஆர்வம் இருக்க வேண்டும்.

If you engage yourself, your will become young age.

ஒருவரிடம் அன்பு செலுத்தி பாராட்டுவது என்பது, அவருக்கு வெள்ளித் தட்டில் தங்கக் கனியை அளிப்பது போலாகும். இந்த உற்சாகத்தை அடுத்தவருக்குக் கொடுங்கள். அதிலிருக்கிற இன்பம் வேறெதிலும் இல்லை. யார் இளைஞன்?

எவன் ஒருவன் தன் லட்சியத்தை நோக்கிய பயணத்தை நிறுத்தாதவனோ அவனே இளைஞன். லட்சியத்தை நோக்கி முன்னேறு, முன்னேறிக் கொண்டே இரு. அவ்வாறு முன்னேறிக்கொண்டிருப்பவனே இளைஞன்.

எவன் ஒருவன் லட்சியத்திற்காகப் போராடுகிறானோ, எவன் ஒருவன் அடுத்தவர் மகிழ்ச்சிக்காகப் போராடுகிறானோ அவனே இளைஞன். தன்னைத் தியாகப்படுத்திக் கொண்டு, அடுத்தவருக்காக வாழ்கிறவனே இளைஞன். உயர்ந்த எண்ணங்களுடன் வாழ்பவன், தன்னையும் உயர்த்திக் கொள்கிறான், அடுத்தவர்களையும் உயர்த்துகிறான். அப்படி நாம் வாழ்கிறோமா என்று சிந்தித்துப் பாருங்கள். ஒருவன் உயர்ந்தவன் என்று எதை வைத்துச் சொல்கிறோம். அவன் உயரத்தை வைத்து அல்ல. மரம் கூட உயர்ந்திருக்கிறது. மரங்களின் உயர்வு உயரத்தைப் பொறுத்தது அல்ல. அது மக்களுக்கு அளிக்கும் பழங்களைப் பொறுத்தது, பயன்பாட்டைப் பொறுத்தது. அதேபோன்று மனிதர்களுக்குப் பெருமை எப்படி வருகிறது? பதவியை வைத்தா? நாம் எந்தப் பதவியிலிருக்கிறோம் என்பது முக்கியமல்ல, அந்தப் பதவியிலிருந்து கொண்டு மனிதகுல முன்னேற்றத்திற்கு என்ன உதவி செய்கிறோம் என்பதைப் பொறுத்தே நமக்குப் பெருமை. இவ்வாறு நான் இந்த மனிதகுல முன்னேற்றத்திற்கு உருப்படியாக எதையேனும் செய்திருக்கிறேனா? நல்லவனா இருந்திருக்கிறேனா? வல்லவனாக இருந்திருக்கிறேனா? இத்தகைய கேள்விகளுக்குப் பதில் சொல்லி நம்மை நாமே சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.நம்மில் பலர் நம் தலைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, மூளைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இதயத்திற்குக் கொடுப்பதில்லை. மனிதநேயத்திற்குக் கொடுப்பதில்லை. வாழ்க்கை என்றால் என்ன? What is LIFE. Live for love. Ignore bad habits. Fight against troubles. Enjoy the life. This is LIFE. அனைவரிடமும் அன்பு செலுத்து. தீயதைப் புறக்கணி. இன்னல்களுக்கு எதிராகப் போராடு. வாழ்க்கையை அனுபவி.

இதுதான் வாழ்க்கை. வாழ்க்கை வாழ்வதற்கே, வாழ்க்கை அனுபவிப்பதற்கே. எழு, விழி, லட்சியம் நிறைவேறும் வரை துவண்டு விடாதே. Arise, awake and stop not till the goal is reached. இதுவே விவேகானந்தர் நமக்குச் சொல்லித்தந்துள்ள வாழ்க்கை.

வாழ்க்கை என்பது போராட்டம். போராட்டத்தின்போது பல்வேறு சோதனைகள் வரலாம், தோல்விகளும் வரலாம். அவற்றைக் கண்டு துவளாதீர்கள். இறுதி வெற்றி கிட்டும்வரை போராடுங்கள். வெற்றி பெற்ற பிறகு கிடையாது வாழ்க்கை. வெற்றிக்காகப் போராடுகிறோமே அதுதான் வாழ்க்கை. போராடுவதில் இருக்கிற சுவை வேறெதிலும் இல்லை.

இவ்வாறு நீதியரசர் கற்பக விநாயகம் பேசினார். பின்னர் திருக்குறள், பாரதியார், பாவை விழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தில்லித் தமிழ்க் கல்விக் கழக, தில்லி மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார். துணைத் தலைவர் எஸ். துரை நன்றி கூறினார்.

(தொகுப்பு: ச. வீரமணி)

Thursday, February 7, 2008

பிராந்திய வெறி தன் கோர முகத்தை மீண்டும் தூக்குகிறது


தலையங்கம்:
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பிராந்திய வெறி தன் கோர முகத்தை மீண்டும் உயர்த்தியிருக்கிறது. தன்னுடைய சுயேட்சையான அடையாளத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, தங்கள் மாமாவும் சிவசேனைத் தலைவருமான பால் தாக்கரேயிடமிருந்து பிரிந்து தனிக் கட்சி ஆரம்பித்துள்ள ராஜ்தாக்கரே, தன்னுடைய மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா மூலமாக மாநிலத்தில் பிராந்திய வெறியைக் கிளப்பக்கூடிய பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார், மும்பையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் வட இந்தியர்கள் மீது தாக்குதல்களை ஏவிவிட்டிருக்கிறார்.
1960களின் பிந்தைய ஆண்டுகளில், அரசியலில் தனக்கென்று ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, சிவசேனை மேற்கொண்ட நடவடிக்கைகளையே இது நினைவுபடுத்துகிறது. அப்போது சிவசேனைக் கட்சியானது, ‘மண்ணின் மைந்தர்கள்’ என்னும் முழக்கத்தை கையில் எடுத்துக் கொண்டு, ‘வேட்டி கட்டியவர்களை எல்லாம் விரட்டி அடியுங்கள்’ என்று கூக்குரலிட்டுக்கொண்டு, தென்னிந்தியர்களை எல்லாம் விரட்டி அடித்தது. சிவசேனை பின்னர், பிராந்திய வெறிப்போக்கைக் கைவிட்டு, படிப்படியாகப் பட்டம் பெற்று, இந்திய அரசியல் மற்றும் சமூகத்தின் மாபெரும் பிரிவினைக் கொள்கையாக உள்ள இந்துத்வாக் கொள்கையை ஆரத் தழுவிக்கொண்டது.
ஆயினும் ராஜ் தாக்கரே, தற்சமயம் சிவசேனாவின் ஆரம்ப கால பிற்போக்குப் பாரம்பர்யத்தை மீண்டும் தூக்கிப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். மராத்திய பிராந்திய வெறித் தீயை விசிறி விடுவதன் மூலமாக, வட இந்தியர்களின் மீது - குறிப்பாக உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள் மீது - மிகவும் கயமைத்தனமான முறையில் தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறார்கள். டாக்சிகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. இதனை அடுத்து டாக்சி யூனியன்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அச்சுறுத்தல்களை விடுத்திருக்கின்றன. போஜ்பூரி திரைப்படங்கள் காட்டப்பட்ட தியேட்டர்கள் எல்லாம் சூறையாடப்பட்டுள்ளன. மத்திய இரயில்வே அமைச்சர் லாலு தனியே அடையாளப்படுத்தப்பட்டு, ‘‘இரயில்வேயில் பீகாரிகளை மட்டுமே வேலைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்’’ என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தித் திரைப்பட உலகின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் கூட, கயவர்களின் தாக்குதல் இலக்கிலிருந்து, விட்டு வைக்கப்படவில்லை.பீகார் மக்கள் மீது மிகவும் கேவலமான முறையில் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்னவெனில், அவர்கள் தீபாவளிப் பண்டிகைக்கு ஆறு நாட்கள் கழித்து வரும் சாட் பண்டிகையை (chhat festival) வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்களாம். உண்மையில் அந்த சமயத்தில் மும்பையில் குறைந்த கூலியில் வெகுநேரம் வேலை செய்திடும் பீகாரித் தொழிலாளர்கள் கிடைக்காமல் போய்விடுவதுதான், இத்தகைய விரக்தியான வெளிப்பாட்டிற்குக் காரணமாகும். இந்தியா போன்ற சமூக, கலாச்சார, மொழி வேற்றுமைப் பண்புகள் வளமாக உள்ள ஒரு நாட்டில், பல்வேறு விதமான மக்கள் தங்களுடைய பாரம்பர்யப் பண்டிகைகளைக் கொண்டாடுவது இயற்கையே. அவர்களின் பண்டிகை கால உணர்வுகளுக்கு மையமாக இருப்பதே பாரம்பர்யக் கலாச்சாரங்கள்தான். எந்த ஒரு குறிப்பிட்ட மொழி அல்லது கலாச்சாரப் பிரிவினரும் மற்றொரு மொழி அல்லது கலாச்சாரப் பிரிவினர் மீது தங்கள் பண்டிகையைத்தான் கொண்டாட வேண்டும் என்று நிர்ப்பந்தத்தைத் திணிக்க முடியாது.
இத்தகைய பல்வேறு சமூக, கலாச்சார, மொழி வேற்றுமைப் பண்புகளினூடே ஒற்றுமையைக் காண்பதன் மூலம்தான் வலுவான இந்தியாவைக் கட்டிட முடியும். இந்த வேற்றுமைப் பண்புகளில் ஒரு சீரான தன்மையைத் திணிக்க முயன்றால், அது நாட்டின் ஒற்றுமையைத் தகர்ப்பதற்கே இட்டுச் செல்லும். இதைத்தான் தற்சமயம் மும்பையில் பிராந்திய வெறி சக்திகள் செய்து கொண்டிருக்கின்றன. நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணிப் பாதுகாத்திட நினைக்கும் ஒவ்வொருவரும் இத்தகையப் பிரிவினை சக்திகளை ஓரங்கட்ட வேண்டியது அவசியம். நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வுகள் இந்தப் புரிதலுடனே அமைந்திருக்கிறது. அது, ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் நாட்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வேலை செய்யும் உரிமையையும், குடியேறும் உரிமையையும் அளிக்கிறது. எனவே, மகாராஷ்ட்ராவில் சமீபத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பிராந்திய வெறியானது அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் சரி, சமுதாய நெறிமுறைகளின்படியும் சரி விரோதமானதாகும். முந்தைய ஆண்டுகளில் சிவசேனையின் வெறித்தனமான பிரச்சாரங்களால் பாதிக்கப்பட்ட, அதிலிருந்து தங்களை உருக்கு போன்று மாற்றிக்கொண்டுள்ள இன்றைய மும்பையினர், இப்போது ‘‘மும்பை மும்பையினருக்கே’’ என்ற முழக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் பொருள் உலக நாகரிகத்தின் மையமாக மாறியுள்ள மும்பை மாநகரத்தில் வாழும் அனைவரும் - அவர்கள் எந்த கலாச்சார, மத, மொழி அல்லது அடையாளத்தைக் கொண்டிருந்தாலும் சரி, அவர்களனைவரும் - மும்பையினரே. இத்தகைய உலக நாகரிகத்தின் பொது மையமான, இந்தியாவின் வணிகத் தலைநகரான, மும்பை மாநகரம்தான் பிராந்திய வெறியர்களால் இன்றைக்கு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. நவீன இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் கருத்தாக்கத்தையே இது அச்சுறுத்தலுக் குள்ளாக்கியுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ முடியாது. இது துரதிர்ஷ்வசமானது மட்டுமல்ல, ஐயத்திற்கிடமற்ற வகையில் நாட்டின் ஒற்றுமைக்கு அழிவு உண்டாக்கக்கூடியதுமாகும். தேர்தல் ஆதாயத்திற்காகப் பல்வேறு வெறித்தனங்களையும் ஊட்டி வளர்த்திடும் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் இத்தகைய குறுகிய வழியைத் தேர்ந்தெடுக்கின்றன. நவீன இந்தியாவைப் பாதுகாத்திடவும், ஓர் ஆரோக்கியமான ஜனநாயக அரசியலமைப்பை வலுப்படுத்திடவும் வேண்டுமென்றால் இத்தகைய போக்குகளை ஆரம்பத்திலேயே முழுமையாகக் கிள்ளி எறிந்திட வேண்டும். நவீன-தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நாட்டில் மாநிலங்களுக்கிடையே பொருளாதார சமத்துவமின்மையை அதிகப்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில் இது மேலும் அவசியமாகும். இத்தகைய ஏற்றத்தாழ்வான நிலைமையானது பின்தங்கிய பிராந்தியங்களிலிருந்து மக்களை நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும் வளர்ந்த மாநிலங்களை நோக்கி புலம்பெயரச் செய்கிறது. இத்தகைய செயல்பாடுகளானது ஒரு நீண்ட நெடிய காலகட்டத்தில், ஒரு சமச்சீரான பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை. மும்பையில் சமீபத்திய தாக்குதல்கள்போல் அல்லது தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் போல் அப்போது எழாது என்பதும் நிச்சயம். ஆயினும், அத்தகைய சமச் சீரான வளர்ச்சியை அரசின் உறுதியான தலையீட்டின் மூலம்தான் அமல்படுத்த முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நவீன தாராளமய பொருளாதார நிகழ்ச்சிநிரலைக் கட்டித் தழுவிக்கொண்டுள்ள இந்திய ஆளும் வர்க்கம் ‘சந்தையாகிய கடவுள் கிருபையே’ தேவை என்று கிடப்பதால், இதனைச் செய்யாமல் விட்டுவிட்டது. விளைவு, ஆட்சியாளர்கள் பொருளாதார செயல்பாடுகளிலிருந்து தங்களை விலக்கிக் கொள்வது அதிகரித்தவண்ணம் உள்ளது.பொருளாதார சமத்துவத்தை நோக்கி நாடு முன்னேற வேண்டும் என்று சொல்கிறபோது, இன்றைய சூழ்நிலையில், பிராந்திய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்குறித்து கவலைப்படாமல் இருப்பதோ அல்லது ஏற்றத்தாழ்வுகளைக் காட்டி பிராந்திய வெறியைக் கிளப்புவதோ சரியல்ல என்பதும் அடிக்கோடிடப்பட வேண்டும். பொறுப்புமிக்க அனைத்து அரசியல் கட்சிகளும், மும்பையில் கிளறிவிடப்பட்டுள்ள பிராந்திய வெறி என்னும் தீயை அணைத்திடமுன்வர வேண்டும். இதனை நாடு முழுதும் பரப்பிட எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.
தமிழில்: ச. வீரமணி

விவசாயிகள் கடன் நிவாரண ஆணையம் அமைக்கப்பட வேண்டும்:பிரகாஷ்காரத்

புதுடில்லி, பிப்.7-

வரவிருக்கும் பட்ஜெட் உரையில் விவசாயிகள் கடன் நிவாரண ஆணையம் அமைப்பது குறித்து அரசின் முடிவு தெரிவிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறினார்.

இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் சார்பில் பத்திரிகையாளர்கள் கூட்டம் வியாழன் அன்று மாலை புதுடில்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் மற்றும் தேசிய செயலாளர் து. ராஜா, ஆர்.எஸ். பி. சார்பில் அபனிராய், பார்வர்ட் பிளாக் சார்பில் தேவபிரதா பிஸ்வாஸ் மற்றும் தேவராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அவ்வமயம் 2008-09ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டிற்காக இடதுசாரிக் கட்சிகள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை விளக்கி பிரகாஷ்காரத் கூறுகையிலேயே இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:‘‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்ததிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாகவே இடதுசாரிக் கட்சிகள் சார்பில் பட்ஜெட் குறித்து முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்த ஆண்டும் அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்பியிருக்கிறோம். சில முக்கியமான அம்சங்கள் குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டுவருவது இது சரியான தருணம் என்று கருதுகிறோம். சமர்ப்பிக்கப்படவிருக்கும் பட்ஜெட் நாடு எதிர்நோக்கியுள்ள உண்மையான மற்றும் அவசரமான பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய வகையில் அமைந்திட வேண்டும். விவசாய நெருக்கடியால் விளைந்துள்ள பிரச்சனைகள், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகியவற்றிற்குத் தீர்வு காணக்கூடிய வகையில் பட்ஜெட் அமைந்திட வேண்டும். மேலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் தன்னுடைய குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தில் அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றக்கூடிய வகையிலும் பட்ஜெட் அமைந்திட வேண்டும். குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிகளில் பல இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டு இந்த ஆண்டு அவற்றை நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் மற்றும் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் அரசு அளித்துள்ள உறுதிமொழிகளின் அடிப்படையில் எங்கள் முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி இருக்கிறோம்.

அடுத்ததாக, அரசு தன்னுடைய பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை எவ்வாறெல்லாம் ஒதுக்கிட வேண்டும் என்றும் நிதி வருவாயைப் பெருக்கிட அரசு எவ்விதங்களில் வரி விதிக்க வேண்டும் என்றும் சில யோசனைகளை அளித்திருக்கிறோம். குறிப்பாக விவசாயிகள்/விவசாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள். குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தில் அறிவித்துள்ளபடி விவசாயத்திற்கான பொது முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். குறிப்பாக விவசாயிகளின் கடன்களிலிருந்து அவர்களை விடுவிக்க அரசு என்ன செய்ய இருக்கிறது என்பதை பட்ஜெட் அறிவித்திட வேண்டும். சிறிய நடுத்தர விவசாயிகள் கடன்களை ரத்து செய்திட வேண்டும். விவசாயிகளுக்கான தேசிய ஆணையம் அளித்திட்ட பரிந்துரையின் அடிப்படையில் தேசிய கடன் நிவாரண ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதற்கு கேரள அரசு கொண்டுவந்துள்ள கடன் நிவாரணச் சட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டிடலாம். கேரளாவில் கந்துவட்டிக்காரர்களிடம் வாங்கியுள்ள கடன்களைக்கூட அரசே கட்டி, விவசாயிகளை கடன் வலையிலிருந்து விடுவித்திருக்கிறது. அதேபோன்று எதிர்காலத்தில் விவசாயிகளுக்கான தேசிய ஆணையம் பரிந்துரைத்திருப்பதுபோல் 4 சதவீத வட்டிவிகிதத்தில் கடன் கொடுத்திட அரசு முன்வர வேண்டும். விலைவாசி உயர்ந்திருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில், அரசு கொள்முதல் சமீப காலங்களில் முறையாக இல்லாததால் விவசாயிகளும் சாமானிய மக்களும் கடும் இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். எனவே அரசு கொள்முதலை மீண்டும் முறைப்படுத்தி, பொது விநியோக முறையையும் செம்மையாக்கிட வேண்டும். மீண்டும் பொது விநியோக முறையில் ஒரே சீரான முறையை (Universal Public Distribution System) கொண்டுவரப்பட வேண்டும். அதற்குத் தேவையான வகையில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அனைத்திற்கும் மான்யங்கள் வழங்கிட வேண்டும்.குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் அளித்துள்ள உறுதிமொழிகள், கல்வி, சுகாதாரம், சச்சார் கமிட்டி பரிந்துரைகள், தேசிய கிராமப்புற உறுதித் திட்டம் ஆகிய அனைத்திற்கும் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அடுத்ததாக, அரசு தேவையற்ற முறையில் பலருக்கு வரி விலக்கு அளித்திருக்கிறது. அவற்றை அரசு கைவிட வேண்டும். குறிப்பாக சிறப்புப் பொருளாதார மண்டலத்தின்கீழ் பெரும் நிறுவனங்களுக்கு அளித்துள்ள வரிச்சலுகைகளை வாபஸ் பெற வேண்டும். அதற்கேற்ற வகையில் சிறப்புப் பொருளாதார மண்டனலச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். நீண்டகால மூலதன ஆதாய வரியை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும். பத்திரம் பரிவர்த்தனை வரி விகிதமும் (Securities Transaction Tax) அதிகரிக்கப்பட வேண்டும். எங்கள் முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பிவிட்டோம். இவை அனைத்தையும் அரசும் நிதி அமைச்சரும் கணக்கில் எடுத்துக் கொண்டு பட்ஜெட் தயாரித்திட வேண்டும். இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.

இது தொடர்பாக நிதி அமைச்சரை சந்திப்பீர்களா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, கடந்த இரு ஆண்டுகளாக அந்த நடைமுறை கைவிடப்பட்டுவிட்டது என்றும் இந்த ஆண்டும் அவ்வாறு இருக்காதென்றே கருதுகிறோம் என்றும் பிரகாஷ் கூறினார்.