Sunday, October 6, 2024

வீரம் விளைந்தது மதிப்புரை

 


அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே!

மல்ட்டிபிள் மைலோமா (Multiple Myeloma) என்னும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு, அதற்கெதிரான போராட்டத்தில் உருக்குபோன்று நின்று வெற்றி பெற வைத்ததில், நிக்கொலாய் ஒஸ்த்ரோவ்ஸ்க்கியின் ‘வீரம் விளைந்தது’ நாவலுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு.

நான் இந்த நாவலை என் பதின்பருவ வயதில் படித்திருந்தேன் என்ற போதிலும், பின்னர் 1976இல் கட்சியில் சேர்ந்தபின் இதனை நான் பல முறை படித்திருக்கிறேன். இப்போது 2024 அக்டோபர் 2 அன்று 76 வயதைக் கடந்து 77ஆவ வயதில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இப்போது மீண்டும் அந்த நாவலைப் படித்து முடித்திருக்கிறேன். இப்போது படித்தபோதும் எவ்வளவு விஷயங்களை அது எனக்குக் கற்பித்திருக்கிறது.

ஒவ்வொரு தோழரும் இந்நாவலை அவசியம் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்நாவலில் சில பக்கங்களை உங்கள் பார்வைக்காகப் பகர்கிறேன். அவசியம் படியுங்கள்:

மனிதனது மதிக்க முடியாத இனிய உடமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவைதான் வாழ முடியும். காலமெல்லாம் குறிக்கோளில்லாமல் பாழாக்கிவிட்டேன் என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பு அளிக்காத வகையில் அவன் சீராக வாழ வேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழ வேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனிதகுலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக, நான் என் வாழ்வு முழுதையும், சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும்பொழுது கூறும் உரிமைபெறும் வகையில் அவன் வாழ வேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடிவைக்கக்கூடும் ஆதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். (பக்கம் 316)

சமுதாயம் புரட்சிகரமாக மாறிக்கொண்டிருப்பதைக் கண்ணுறும் ஒரு கிராமத்தில் உள்ள வண்டிக்காரன், சமுதாயத்தில் வாலிபர் சங்கத் தோழர்கள் செயல்படும் விதம் குறித்து அதிர்ச்சியடைந்து கூறும் கூற்றைக் கவனியுங்கள்:

இந்தக் கம்ஸமோல் இளைஞர்கள் எல்லோரும் எங்கிருந்து வந்தார்கள் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. இந்த மாதிரி ஆட்களை நான் முன்னால் பார்த்ததே இல்லை. அந்தப் பள்ளிக்கூட ஆசிரியைதான் இவர்களையெல்லாம் கிளப்பி விட்டிருக்கிறாள். … இளம் வயதுதான். ஆனாள் மிகவும் தீயவள். கிராமத்தில் உள்ள பெண்களையெல்லாம் தூண்டி விடுகிறாள். அவர்களுக்கு ஏதேதோ அபத்தமான விஷயங்களையெல்லாம் சொல்லிக்கொடுக்கிறாள். இதனால் கலகமே உண்டாகிறது. முன்போல ஒருவன் தனது சொந்த மனைவியை அடிக்க முடியாத அளவுக்கு நிலைமை கெட்டுவிட்டது! ஏண்டா வழியிலே போகிற தொல்லையை வாங்கிக் கட்டிக்கொண்டோமென்று வருந்த வேண்டியிருக்கிறது. பொதுஜன நீதிமன்றத்தில் வழக்கு போடுவேன் என்று வீரம் பேசுகிறாள். அவள் வயதுப் பெண்களோ, தத்தம் கணவன்மாரிடம் சட்டம் பேசுகின்றனர்! அடித்தால், விவாகரத்து செய்து விடுவேனென்று அச்சுறுத்துகின்றனர். என் மனைவி கன்கா, மகா சாது! வாயில்லாப் பூச்சி! இப்பொழுது அவள் மாதர் சங்கத்தில் சேர்ந்து பிரதிநிதியாக வேறு ஆகிவிட்டாள்! பிரதிநிதி என்றால் தலைவி மாதிரியாம். கிராமத்துப் பெண்கள் எல்லாம் அவளிடம் வந்து ஆலோசனை கேட்கின்றனர். இதை அறிந்தவுடன் எனக்கு ஆத்திரம் வந்தது. அந்தக் கோபத்தில்  அவளைச் சவுக்கால் அடிப்பதற்கு ஆயத்தமானேன். கடைசியில் எப்படியாவது தொலையட்டுமென்று விட்டுவிட்டேன்! ஆனால் வீட்டு வேலை போன்ற விஷயங்களில், கன்காவிடம் குற்றம் காண முடியாது. (பக்கம் 384-385)

நண்பர்களே! நாவலில் தோழர்கள் ரீத்தாவுக்கும், பாவெலுக்கு இடையில் உள்ள ஆழ்ந்த நட்பு குறித்தும், பாய்லோ என்ற ஓர் அயோக்கியன் தோழர் என்ற பெயரில் பெண் தோழர்களிடம் மிகவும் இழிவாக நடந்துகொள்வதைச் சகிக்க முடியாது பாவெல் அவனை அடித்து நொறுக்குவதையும் முன்பே பதிவிட்டிருக்கிறேன்.

 பாய்லோ பற்றிக் குறிப்பிடுகையில் பாவெல் குறிப்பிடுவதாவது:

ஒரு புரட்சிக்காரன், ஒரு கம்யூனிஸ்ட், அதே சமயத்தில் ஆபாச மிருகமாகவும், துஷ்டப் போக்கிரியாகவும் இருக்க முடியுமென்பதை நான் ஒருபொழுதும் நம்ப முடியாது. நமது கம்யூனிஸ்ட் தோழர்கள், சொந்த வாழ்வில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற பிரச்சனையில் கவனம் ஏற்பட்டிருப்பதே, இந்த விவகாரத்தின் ஒரு நல்ல அம்சம். (பக்கம் 446)

அவை bookday.in இணையப் பக்கத்தில் வெளியாகி இருக்கின்றன. அவற்றையும் தோழர்கள் படிக்க வேண்டும். இறுதிப் பகுதியை மட்டும் கீழே தருகிறேன்.

மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பாவெல், தன் நண்பன் அக்கீமிடம் கூறுவதைக் கேளுங்கள்.

அக்கீமின் கரத்தைத் தன் மார்புக் கூட்டின்மேல் இதயம் மந்தமாக அடித்துக்கொண்டிருந்த இடத்தில் வைத்துக்கொண்டே, கூறினான். என் இதயம் இங்கு அடித்துக்கொண்டிருக்கும்வரை என்னை எவராலும் கட்சியிலிருந்து பிரிக்க முடியாது. மரணம் ஒன்றுதான் என்னைக் கட்சி அணியிலிருந்து அகற்றவல்லது. இதை மறந்துவிடாதே, நண்பா.” (பக்கம்472)

பாவெலின் உடல் மிகவும் நலிவுற்றிருப்பதைக் கண்டு, கட்சி அவனை இலக்கியத்தொண்டில் பயன்படுத்த முடியுமா என்று ஆராய்ந்தது. கட்சிப் பத்திரிகையின் ஆசிரியர் குழு அவனை ஆராய்ந்தது. அவன் எழுதியவற்றைப் பார்த்துவிட்டு, அவர்கள் கூறியதாவது:

தோழர் கர்ச்சாகின், உங்களுக்குக் கணிசமான திறமை இருக்கிறது. ஓரளவுக்குக் கடுமையாக உழைத்தால், நீங்கள் நன்றாக எழுத முடியும். ஆனால், தற்சமயம் உங்களது இலக்கணமெல்லாம் தப்பும் தவறுமாயிருக்கிறது. உங்களுக்கு ருஷ்ய மொழியில் போதுமான ஞானம் இல்லை என்பதை உங்கள் கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. அதில் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால், மொழிப்பயிற்சி பெறும் வாய்ப்பு உங்களுக்கு இருந்ததில்லை. துரதிஷ்டவசமாக, உங்களிடம் திறமைஇருந்தபோதிலும், அதைப் பயன்படுத்தக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. உங்களது கட்டுரைகளின் உள்ளடக்கத்தை மாற்றாமல் அவற்றைத் திருத்தி எழுதினால், அவை சிறப்பாய் அமையும். ஆனால் அதற்கு மற்றவர் கட்டுரைகளைத் திருத்தி எழுதும் தரமுள்ளவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று ஆசிரியர் விளக்கினார்.

பின்னர் பாவெல் சரியாக மொழிப் பயிற்சி மேற்கொண்டு கசடறக் கற்றுக்கொண்டு கட்சி அணிக்குத் திரும்பினான். அதன் விளைவே இந்த வீரம் விளைந்தது நாவல்.

அவசியம் படியுங்கள் தோழர்களே!