Friday, March 4, 2016

அமைச்சரின் வெறுப்பை உமிழும் பேச்சு
மோடி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மதவெறியை விசிறிவிடும் வண்ணம்பேசுவதும் அதன்மூலம் தாங்கள் அமைச்சராக வும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பேற்றபோது அரசமைப்புச்சட்டத்தின்கீழ் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறுவதும் வழக்கமான ஓர் அம்சமாக மாறி இருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர், ராம் சங்கர் கட்டாரியா என்பவர் ஆக்ராவில் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழும் வண்ணம் பேசி இருப்ப தாகும். இந்தப் பேச்சு மிகவும் ஆழமான வகையில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.கட்டாரியா, விசுவ இந்து பரிசத் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். தங்களுடைய ஊழியர் ஒருவர் சமீபத்தில் இறந்ததைத் தொடர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதத்தில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய் யப்பட்டிருக்கிறது.
அங்கே பேசிய பேச்சாளர்களில் கட்டாரியாவும் ஒருவர். முஸ்லீம்களை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற வகையில்தான் அனைவரும் பேசியிருக்கிறார்கள். கட்டாரியா, “நாம் நம்மை வலுவானவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் ஒரு போராட்டத்தைத் துவங்க வேண்டியிருக்கிறது. நாம் அவ்வாறு போராட்டத்தைத் துவங்கவில்லை என்றால், பின் இன்று ஒரு அருணை இழந்திருக்கிறோம், நாளை நாம் மற்றொருவரை இழப்போம்.
அவ்வாறுமற்றொருவரை இழப்பதற்கு முன், இந்தக் கொலை காரர்கள் அவர்களாகவே காணாமல் போகிறமாதிரி நாம் நம் வலுவைக் காட்ட வேண்டும்’’ என்று பேசியிருக்கிறார். இதேபோன்றே தொடர்ந்து அவர் விஷத்தைக் கக்கி இருக்கிறார். மற்றொரு பாஜக எம்பி பேசுகையில், “நீங்கள் இந்துக்களைச் சோதிக்க விரும்பினால், பின் ஒரு தேதியைத் தீர்மானித்துக்கொள்வோம், முஸ்லீம்களுடன் மோதுவோம்,’’ என்று பேசியிருக்கிறார்.மற்றொரு பாஜக எம்எல்ஏ, “தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன, நாம் நம் பலத்தைக் காட்டத் தொடங்குவோம்,’’ என்று கூறியிருக்கிறார்.
மதவெறி நஞ்சை உமிழ்பவர்கள்
2013 செப்டம்பரில் முசாபர்நகரில் மிகவும்கொடூரமான முறையில் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை நிகழ்வுகள் கட்டவிழ்த்துவிடப் படுவதற்கு முன், அங்கே நடைபெற்ற மகா பஞ் சாயத்துக் கூட்டத்தில் இதே போன்றுதான் அனைவரும் பேசினார்கள். மோடி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஓர் அமைச்சர் இவ்வாறு மதவெறி வன்முறையைத் தூண்டிவிடுவது எந்தவிதத் திலும் பொறுத்துக்கொள்ள முடியாததாகும். கட்டாரியாவின் வன்முறையைத் தூண்டும் இத்தகைய பேச்சை ஏதோ ஒழுக்கம் தவறிய ஒரு செயலாக மட்டும் பார்த்தால் அது தவறாகிவிடும். இதுபோன்று அமைச்சர்கள் பேசுவதற்குஎதிராக மோடி தலையிட்டால் இவ்வாறு இவர்கள் பேசுவதுநின்றுவிடும் என்று இப்போதும்கூட சிலர் நினைக் கிறார்கள்.
ஆனால் எதார்த்தம் வேறாகவே உள்ளது.மோடி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா ஆகியவற்றால் வளர்க்கப்பட்டவர்கள். அவர்கள்மதவெறி நஞ்சை உமிழ்வதோடு மட்டும் நிற்பதில்லை, அவ்வாறே செயலாற்றிக் கொண்டும் இருக் கிறார்கள். சஞ்சீவ் பாலியான் அமைச்சரவைக்குள் கொண்டுவரப்படுகையில் அவர் யார் என்பது மோடிக்கு நன்கு தெரியும். பாலியான், முசாபர்நகர் கலக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருநபர். அதேபோன்றே மதவெறித் தீயை உசுப்பிவிடக் கூடியவர்களே கிரிராஜ் சிங் மற்றும் நிரஞ்சன்ஜோதி ஆகியோரும் என்று நன்கு தெரிந்து தான் அவர்களும் அமைச்சரவையில் சேர்க்கப்பட் டிருக்கிறார்கள்.
புகழினால் அல்ல...
கட்டாரியாவைப் பொறுத்தவரை, அவருடைய தவறான நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே பேர் வாங்கியவர்தான். தன்னுடைய எம்.ஏ. மதிப்பெண் தாளைத் திருத்தி மோசடி செய்ததற்காகவும், கல்வித்துறை ஏடுகளைத் திருத்தியதற்காகவும் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்ட பேர்வழிதான். 2011இல் இதற்காக அவர் தண்டிக்கப்பட்டு பின்னர் 2014இல் அமர்வு நீதிமன்றத்தில் விடுதலையானவர். ஸ்மிருதி இரானி, கட்டாரியா போன்றவர்கள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் அங்கம் வகிப்பது அவர்களின் கல்விச் சான்றிதழ்களின் புகழினால் அல்ல, மாறாக கல்வித்துறையில் தங்களுடைய இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை எப்படி அமல்படுத்தலாம் என்கிற குறிக்கோளுக் காகத்தான்.
மத்திய அமைச்சரவைக்குள்ளும்கூட, அரசமைப்புச் சட்டத்தைக் குழிதோண்டிப் புதைத் திடவும், சட்டம் குறித்து மறுவரையறை செய்திட வும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனவேதான், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை யைத் தூண்டுதல் “நாட்டுப்பற்றாக’’, அது பாரத மாதாவுக்கு அளித்த இராஜபக்தியாக மாறுகிறது. அதே சமயத்தில் மதச்சார்பின்மையைப் பாதுகாத்தல், பேச்சுரிமை போன்றவைகள் “தேச விரோத’’ செயல்களாகவும், ஆட்சிக்கு எதிரான கலகமாகவும் மாறுகின்றன. நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் ராஜ்நாத் சிங் மற்றும் ஸ்மிருதி இரானிபோன்ற அமைச்சர்கள் எப்படியெல்லாம் தலித் மற்றும் இடதுசாரி மாணவர் தலைவர்களை “தேச விரோதிகள்’’ என்று முத்திரை குத்தினார்கள் என்பதையும் அவ்வாறு அவர்களை முத்திரை குத்தியஅதே சமயத்தில் தங்களுக்கு எதிராகவும் இந்துத்துவா சக்திகளுக்கு எதிராகவும் கருத்து கூறுபவர் கள் எவராக இருந்தாலும் அவர்களைத் தாக்குகின்ற குண்டர்களைப் பாதுகாத்துக் கொண்டிருக் கிறார்கள் என்பதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
உ.பி. அரசு செய்ய வேண்டியது
\உத்தரப் பிரதேச மாநில அரசாங்கம் ஆக்ரா வில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் வெறித்தனமாகப் பேசிய கட்டாரியா மீதும் மற்றவர்கள் மீதும் வழக்குத் தொடர வேண்டியது கட்டாயமாகும்.முசாபர்நகர் வன்முறையின் போது அரசாங்கத் தரப்பில் இருந்த தவறுகளும், அவற்றுக்கெதிராகக் காலத்தே நடவடிக்கை எடுக்காததும் எந்த அள விற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தின என்பதிலிருந்து அது பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். மத்தியஅரசாங்கத்தைப் பொறுத்தவரை, அமைச்சர் கட்டாரியா நீக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எழுந்திருக்கும் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் உண்மையிலேயே அது மதிக்கிறது என்றால் இதனைச் செய்திட வேண்டும்.
மார்ச் 2, 2016,
தமிழில் : ச.வீரமணி