Friday, July 18, 2014

இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு ஆதரவு தருவதா?


பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்

நாம் இதனை அச்சுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஆயுதத் தாக்குதல்கள் தொடர்பாக குறுகிய கால விவாதம் தொடர்பான பிரச்சனை காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் சீர்குலைக்கப்பட்டன. 2014 ஜூலை 16 மாநிலங்களவைக் கான திருத்தப்பட்ட அலுவல் பட்டியல், அன்றைய தினத்தன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் சுற்றுக்கு விடப்பட்டது. அச்சிடப்பட்ட இத்தகைய அலுவல் பட்டியல் அனைவருக்கும் சுற்றுக்கு விடுவது என்பது எப்போதும் மேற்கொள்ளப்படும் வழக்கமான ஒரு நடவடிக்கையாகும். அன்றையதினம் 12 மணியளவில் கேள்வி நேரம் முடிந்தவுடனேயே இக்குறுகிய கால விவாதம் எடுத்துக்கொள்ளப்படும் என்று அதில் பட்டியலிடப்பட்டிருந்தது.

இவ்வாறு சுற்றுக்குவிடப்படும் அலுவல் பட்டியல் எந்தக்காலத்திலும் அரசின் முன் அனுமதியுடன் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் மூலமாகத்தான் வெளியிடப்படும். ஆயினும், அன்றைய தினம், அயல்துறை அமைச்சர் மற்றும் சில மூத்த அமைச்சர்களின் மூலமாக அரசாங்கம் இதன் மீதான விவாதத்தை ஒத்தி வைத்திடவும், மாறாக, ரயில்வே பட்ஜெட் மீது விவாதத்தைத் தொடங்கிடவும் கோரியது. இவ்வாறு இதற்குமுன் எப்போதும் நடந்ததில்லை. அலுவல் பட்டியல் சுற்றுக்கு விடப்பட்டுவிட்டால், அது அவையின் சொத்தாகிவிடுகிறது. அதனை பின்னர் அரசாங்கம் உட்பட எவரும் மாற்ற முடியாது. ஆண்டாண்டு காலமாய் இருந்துவரும் இந்தநடைமுறை மற்றும் பழக்கத்தை மீறிட,பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் மேற்கொண்டுள்ள பிடிவாதமான நடவடிக்கை, இயற்கையாகவே அனைத்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் வலுவாக எதிர்கொண்டது.திருத்தப்பட்ட அலுவல் பட்டியல் சுற்றுக்கு விடப்பட்ட பின்னர் பாஜகஅரசாங்கம் தன் மனதை மாற்றிக்கொண்டுவிட்டது என்பது தெளிவு. இது தொடர்பாக, ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின்படி, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர், காஸா பகுதியில் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல்களைக் கண்டிக்கும் விதத்தில் தீர்மானம் எதுவும் கொண்டுவரத் தயாரில்லை என தெரிவித்துவிட்டார்.

உள்நாட்டு அரசியல் நம்முடைய அயல்துறைக் கொள்கையைப் பாதித்திடக் கூடாது,” என்று அவர் கூறியிருக்கிறார். அவர் மேலும், “இந்த விஷயம் மிகவும் உணர்வுப்பூர்வமானது” “highly sensitive”) என்றும் அரசாங்கம் மேற்கொள்ளும் எவ்விதமான நடவடிக்கையும் எவ்விதமான பாதிப்புகளுக்கும் (“implications”) இடமளிப்பதாக இருக்கக்கூடாதுஎன்றும் தெரிவித்துள்ளார். இது அவையில் உறுப்பினர்கள் மத்தியில் ஆவேசத்தை எழுப்பியது. அமைச்சர் என்னவிதமான பாதிப்புகள்’’ குறித்துப் பேசுகிறார் என்று கேட்டார்கள்.பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா `நல்லஉறவுகள்கொண்டிருப்பதால், நாடாளு மன்றம் இதனை விவாதிக்கக் கூடாது என்ற விதத்திலும் பாஜக சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வாதமாகும். இந்தியா, இலங்கையுடன் அதிகாரப்பூர்வமான முறையில் நல்ல உறவுகளைக் கொண்டிருக்கிறதுதான். ஆனாலும், இந்திய மீனவர்கள் இலங்கையால் இக்கட்டான நிலைக்கு அவ்வப்போது ஆளாகும்போது அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடப்பது தடுக்கப்படவில்லை. இந்தியா, வங்கதேசத்துடன் தூதரக உறவு கொண்டிருக்கிறதுதான். ஆயினும், வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்திருப்பவர்கள் பிரச்சனையை இந்த நாடாளுமன்றத்தில் எழுப்பிட பாஜகவையோ அல்லது பிரதமரையோ எதுவும் தடுத்திடவில்லை. இந்தியாவும், பாகிஸ்தானும் தூதரக உறவுகள் கொண்டிருப்பதும், பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருப்பதும் அனைவரும் அறிந்த உண்மை. ஆனாலும் அந்த நாடு நம்முடைய பாதுகாப்புக்கும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று திரும்பத் திரும்ப விவாதிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, மும்பையில் 26/11 பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்குப்பின் இத்தகைய விவாதங்கள், அதிகமானது. மேலும், நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் உள்நாட்டு அரசியல் சம்பந்தமாக அளித்துள்ள அறிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று. ஏனெனில், எந்தவொரு நாட்டின் அயல்துறைக் கொள்கையும் அந்த நாட்டின் உள்நாட்டுக் கொள்கையின் ஒரு விரிவாக்கமாக இருப்பதை இயல்பாகப் பார்க்க முடியும். அதனால்தான், பாஜக,பாலஸ்தீனத்திற்கு எதிராக வலுச்சண்டையில் ஈடுபட்டிருப்பதற்கு ஆதரவானநிலை எடுத்திருப்பதையும், பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டிருக்கும் வலுச்சண்டை கொள்கைகளுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதையும் மாநிலங்களவை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களால் மிகவும் சரியாகவே பார்க்கப்படுகிறது.பாஜக அரசின் இந்த நடைமுறை நமது நாடு இதுவரை கடைப்பிடித்து வந்த அணுகுமுறைக்கு முற்றிலும் முரணானதாகும். நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முற்பட்ட காலத்திலிருந்தே, நம்முடைய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்தே, பாலஸ்தீனப் பிரச்சனையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்தியா தன் ஒருமைப்பாட்டைக் காட்டி வந்துள்ளது.

ஆட்சியில் எந்தக்கட்சி கோலோச்சினாலும், நம் நாட்டில் பாரம்பரியமாக இந்த அணுகுமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு முற்றிலும் முரணாக இப்போது பாஜக நிலை எடுத்திருக்கிறது. மகாத்மா காந்தி ஒரு தடவை, “பிரெஞ்சுக்காரர்கள் பிரான்ஸைப் பெற்றிருக்க முடியும் என்றால், ஆங்கிலேயர்கள் இங்கிலாந்தைப் பெற்றிருக்க முடியும் என்றால், பாலஸ்தீனியர்கள் பாலஸ்தீனத்தைப் பெற்றிட வேண்டும்,’’ என்று கூறினார். அவர் அவ்வாறு கூறி எழுபதாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. பாலஸ்தீனியர்களுக்கு இப்போதும் தங்கள் தாய்நாட்டுக்கான உரிமை மறுக்கப்படுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. இன்றளவும் அவர்கள் மனிதாபிமானமற்றமுறையில் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.தற்போதைய பாஜக அரசாங்கம் இந்தியா இதுநாள்வரை கடைப்பிடித்து வந்த பாரம்பரியமான புரிதலிலிருந்து தடம்புரண்டு செல்லத் தொடங்கிவிட்டதாகவேத் தெரிகிறது. அதன் பித்தலாட்டம் ஜூலை 10 அன்று அயல்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையிலேயே தெரிந்தது.
அந்த அறிக்கையில், அவர், “இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே அதிகரித்து வரும் வன்முறை இந்தியாவிற்கு ஆழ்ந்த கவலையை அளிக்கிறது. குறிப்பாக, காஸாவில் அதிக அளவில் வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்று அப்பாவி மக்கள் துயரார்ந்த முறையில் கொல்லப்பட்டு வருகின்றனர், ஏராளமான சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. அதே சமயத்தில், இஸ்ரேலின் சில பகுதிகளிலும் ராக்கெட் தாக்குதல்கள் மூலம் எல்லை தாண்டிய தூண்டுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு இந்தியா தன் கவலையைத் தெரிவித்துக்கொள்கிறது,’’ என்று கூறியிருந்தார். அந்த அறிக்கையில் மேலும், “பாலஸ்தீனப் பிரச்சனைகளுக்குஅமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று நாங்கள் இருதரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்,’’ என்றும் கூறப்பட்டிருந்தது.பாஜக அரசாங்கம் இதையே நாடாளுமன்றத்திலும் வலியுறுத்திக் கூறியிருக்க முடியும். அந்த சமயத்தில் இஸ்ரேல், காஸா பகுதியில் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் ராணுவத் தலையீடு மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சிகள், குறிப்பாக இடதுசாரிகள், தங்கள் கண்டனத்தை எழுப்பியிருக்க முடியும்.

ஆயினும், பாஜக அரசாங்கம் மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் அடிவருடியாக விளங்கும் ஒரு நாட்டினைக் குஷிப்படுத்தும் விதத்திலேயே நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, வலியச் சண்டை செய்பவனையும் அவனால் அடிவாங்கிக்கொண்டிருப்பவனையும் சமமாகப் பார்க்கும் விதத்தில் அறிக்கை விட்டிருப்பதிலிருந்து, இந்தியா ஒரு நடுநிலைப் பார்வையாளர் என்ற முறையிலேயே தன் பங்களிப்பினைச் செலுத்திட முன்வந்திருப்பது போல் தோன்றுகிறது. இது, இஸ்ரேலின் அரக்கத்தனமான ஆக்கிரமிப்பு நடைமுறைகளுடன் பாஜகவின் அரசியல் நடைமுறைகளும் ஒத்துப்போவதன் பிரதிபலிப்பேயாகும். பாலஸ்தீனப் பிரச்சனையின் மிக முக்கிய அம்சமே பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்திருப்பதேயாகும். தற்போது காஸா பகுதியில் நடைபெற்றுவரும் வான்வழித் தாக்குதல்கள் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான 66 ஆண்டுகால வன்முறை வரலாற்றின் தொடர்ச்சியாகும். 1967 ஜூன் மாதத்தில் ஆறு நாட்கள் யுத்தம் நடைபெற்று, இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க், கிழக்கு ஜெருசலம், காஸா, சிரியாஸ் கோலன் ஹைட்ஸ் மற்றும் பல பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சுமார் அரை நூற்றாண்டு கழிந்துவிட்டது. காஸா பகுதியில் இருக்கின்ற சுகாதார அமைச்சகத்தின் ஓர் அறிக்கையின்படி, தற்போதைய இஸ்ரேலின் அரக்கத்தனமான சண்டையில் குறைந்தது 196 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், 1,486 பேர் காயமடைந்துள்ளார்கள், 250க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் பிரதமர் நேடான்யாஹூ, `இஸ்ரேல் எவ்விதமான சர்வதேச `நிர்ப்பந்தத்தையும்பொருட்படுத்தாது என்று தடித்தனமாக கூறியிருப்பதிலிருந்து, இஸ்ரேல் காஸா பகுதிக்குள் தரைவழி மார்க்கமாக தாக்குதலைத் தொடுப்பதற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது நன்கு தெரிகிறது. நாம்இதனை அச்சுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஆதரவு எகிப்திய முன்மொழிவை பாலஸ்தீனியர்கள் நிராகரித்துள்ளதால், வான்வழித்தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டிருக்கின் றன. எகிப்திய முன்மொழிவு என்பது அரபு நாடுகளால் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் சரி என்று ஏற்றுக்கொள்ளும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. தங்கள் தாய்நாட்டிற்கான பாலஸ்தீனியர்களின் உரிமைகளுக்காக ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவும் குரல் எழுப்புவதற்கு பதிலாக, இப்போதைய பாஜக அரசாங்கம் இஸ்ரேலையும் அதன் புரவலரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் குஷிப்படுத்திடும் வகையில் வளைந்து கொடுப்பதாகவே தோன்றுகிறது. இச்செயல் பாலஸ்தீனியர்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு இந்தியா இதுநாள்வரை அளித்து வந்த ஆதரவிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் நம்பிக்கை துரோகம் இழைப்பதுபோல் நடந்துகொள்வது மட்டுமல்ல, நமதுநாடு இதுநாள்வரை மிகவும் உறுதி யானமுறையில் கடைப்பிடித்து வந்தஅயல்துறைக் கொள்கை நிலைப்பாட் டிற்கும் முற்றிலும் தலைகீழானதாகும்.

சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி செயல்பட்டுக்கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு ஆதரவான முறையில் கைகட்டி வாய் பொத்தி இயங்க முன்வந்திருக்கும் பாஜக அரசாங்கத்தின் நிலைப்பாடும் அதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக மாறியிருப்பதும் நம் நாட்டு மக்களின் நலன்களுக்கு நல்லதல்ல என்பதோடு, இதுநாள்வரை ஒடுக்கப்பட்ட நாடுகள் மற்றும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் சுதந்திரமான நாடு இந்தியா என்று உலக நாடுகளின் மத்தியில் நிலவிவந்த இந்தியாவின் நற்பெயருக்கும் தீங்கு பயக்கக்கூடியதாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்காக இவ்வாறுகைகட்டி நிற்பது என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. நாட்டு மக்கள் சார்பாக உலகிற்கு உறுதியானமுறையில் தன் கருத்தினை வெளிப்படுத்தி இந்திய நாடாளு மன்றம் தன் இறையாண்மையை நிலை நிறுத்திட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி


Tuesday, July 8, 2014

அச்சுறுத்தும் பயங்கரவாத அரசியல்



பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்


திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் தபஸ்பால் கூறிய மூர்க்கத்தனமான அடாவடித் தனமான கருத்துக்களுக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனக் கணைகள் மிகச்சரியாகவே வெளிப்பட்டுள்ளன. பயங்கரவாத அச்சுறுத்தல்கள், வன்முறை மற்றும் வன்புணர்ச்சி ஆகியவற்றை நியாயப்படுத்தும் இத்தகைய அடாவடித் தனமான கருத்துக்களுக்கு எந்தவொரு ஜனநாயக சிவில் சமூகத்திலும் இடம் இல்லை. இத்தகைய கருத்துக்களை வெளிப் படுத்தும் பேர்வழிகள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.
மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் இவர்களின் கட்சி இத்தகைய கருத்துக்களை உள்ளார்ந்த முறையில் ஏற்றுக்கொண்டிருப்பதையும் அனுமதிக்க முடியாது. இவரது கூற்றுடன் எங்களுக்கு உடன்பாடில்லைஎன்று வெறுமனே கண்துடைப்புக்காக கூறுவதை மட்டும் வைத்து இவர்களுக்கு இதில் எந்தப் பொறுப்பும் இல்லை என்று விட்டுவிட முடியாது. நம் அரசியல் சமூக அமைப்பை சுத்தப்படுத்துவதற்கு, குறைந்தபட்சம் இத்தகைய நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தம்மிச்சையாகவே சமூகப்புறக்கணிப்பு செய்து தங்கள் கடும் நடவடிக்கையைத் துவங்கிட வேண் டும்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியோ அதன் தலைவரோ இத்தகைய நட வடிக்கை குறித்து மனதளவில்கூட சிந்தித்துப் பார்க்காததிலிருந்து இக்கட்சியானது பயங்கரவாத அரசியலையே பெரிதும் ஊக்குவிக்கும் கட்சி என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்திருக்கிறது. ஜூன் 14 அன்று பொதுக்கூட்டம் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினரால் ஆற்றிய விஷம உரை, மின் ஊடகங்களின் வாயிலாக மக்களால் விரிவானமுறையில் அறியப்பட்டு கடும் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. மேற்படி எம்பிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைமை யின் ஆதரவு இருப்பதால் மாநிலக் காவல்துறை அவருக்கு எதிராக இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்திடவில்லை.
மின் ஊடகங்களில் கிடைத்திடும் அவரது உரை, `குற்றமுறு மிரட்டல்’ (criminal intimidation) என்னும் இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இருப்பதைக் காட்டுகிறது.
எனவே அவருக்கு எதிராக இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 503வது பிரிவின் கீழ் வழக்குத் தொடர முடியும். மேலும், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய பொறுப்புள்ள மாநிலக் காவல்துறை அவ்வாறு அவர்மீது வழக்கு தொடர 1861ம் ஆண்டு இந்தியக் காவல் சட்டம் 23வது பிரிவின் கீழ் எவரிடமிருந்தும் எவ்விதமான முறையீடும் பெறாமலேயே இவ்வாறு உரை நிகழ்த்துவதிலிருந்து ஒரு நபரைத் தடுக்கும் விதத்தில் முன்னதாகவே நட வடிக்கைகளை எடுத்திட அதிகாரம் பெற்றிருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட வழக்கில், இவ்வாறு பேசியதற்காக, இத்தகையதொரு செயலை அவர் மீண்டும் செய்யாது தடுக்கும் விதத்தில் கைது செய்யப்படுவதற்கு மிகவும் சிறப்பான முறையில் தகுதிபடைத்தவராகிறார்.
இந்தி யத் தண்டனைச் சட்டத்தின் 503வது பிரிவு கூறுவதாவது:வேறு ஒருவரின் உடலுக்கு, பெய ருக்கு அல்லது சொத்துக்கு அல்லது அவர் அக்கறை கொண்டுள்ள ஒருவரின் உடலுக்கு அல்லது பெயருக்கு, கேடுஇழைப்பதாக அவருக்கு பீதி விளைவிக் கும் உட்கருத்துடன் அல்லது அத்தகைய மிரட்டல் நிறைவேற்றப்படுவதைத் தவிர்க் கும் பொருட்டு அவர் சட்டப்படி செய்யக் கட்டுப்பட்டிராத செய்கை எதனையும் செய்வதை அல்லது சட்டப்படி அவர் செய்ய உரிமைப் பெற்றிருக்கிற செய் கை எதனையும் செய்யாது விடுவதை விளைவிக்க அச்சுறுத்துகிற எவரொரு வரும் ... குற்றமுறு மிரட்டலைச் செய்கிறார்.’’ எனவே இவர் கைது செய்யப்படுவதற்கு உரியவராகிறார்.
ஆயினும் இந்தப்பேர்வழிக்கு மாநில அரசின் ஆதரவு இருப்பதால், மாநில காவல்துறை இதுவரை இவருக்கு எதிராக எவ்வித நட வடிக்கையும் எடுக்காதது இயற்கையே.இந்த எம்பி என்ன கூறினார் என் பதைப் பரிசீலித்தோமானால், மாநிலக் காவல்துறை எந்த அளவிற்குத் தங்கள்கடமைகளைச் செய்யாது தவறியுள் ளன என்பதை உணர்ந்து கொள்ளமுடியும். ஊடகங்களில் வெளியானவை களிலிருந்தும், பத்திரிகைகளில் மேற் கோள் காட்டப்பட்டவை களிலிருந்தும் மேற்படி எம்பி பேசியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தஎவனாவது இங்கே இருந்தால், நான்சொல்வதைக் கேட்டுக்கொள். சௌ மாஹாவில் எந்தவொரு திரிணாமுல் காங்கிரஸ் ஊழியர் அல்லது அவர்களு டைய குடும்பத்தினர் மீது நீ கை வைத்தால், அதற்கான விலையை நீ கொடுக்க வேண்டியிருக்கும். என்னுடன் மோத முயற்சிக்காதே. உன்னை நான் மோதித் தள்ளிவிடுவேன். ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளின்படி அவர், “அரசியல் எதிரிகளை சுட்டுத் தள்ளுங்கள்,’’ என்றும், “அவர்களுடைய குடும்ப பெண்களை வன்புணர்வுக்கு உள்ளாக்கும் வகையில் நம் பையன்களை அனுமதித்திடுங்கள்  என்றும் மிரட்டி இருக்கிறார்.
தான் எப்போதும் ஒரு துப்பாக்கியை ஏந்திய வண்ணம்தான் இருப்பேன் என்றும் அவர் பீற்றிக் கொண் டிருக்கிறார்.இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு நபர் இவ்வாறெல்லாம் ஆபாசமாகப் பேசுவது ஏற்கத்தக்கதல்ல. இதனை நாம் அச்சுக் குக் கொடுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில், இந்நபருக்கு எதிராக பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டு அது நீதிமன்றத்தால் அனுமதிக்கப் பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. சம்பந்தப்பட்ட எம்பிக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கண்டனக்குரல் எழுப்பியிருக்கையில் அதனை மட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வரும் என்ன சொல்லி யிருக்கிறார் தெரியுமா? “நான் என்ன செய்ய முடியும்? நான் அவனை சுட்டுக் கொல்ல முடியுமா?’’ என்று பதிலுக்கு கோபப்பட்டிருக்கிறார். எம்பியின் பேச்சுக்கு இணையான அளவில் இதுவும் மூர்க்கத் தனமான ஒன்றேயாகும்.
மேற்குவங்க மாநிலத்தில் அரசியல் ஒடுக்குமுறையின் ஒரு கருவியாக வன்புணர்வும் பயன்படுத்தப்படுகிறது என்கிற உண்மையை ஒப்புக்கொண்டு, கொல்கத்தா இப்போது நாட்டின் வன் புணர்வு தலைநகராக மாறியிருப்பதை வெட்கக்கேடான முறையில் ஏற்றுக் கொண்டு, மகளிர்க்கான தேசிய ஆணை யம் சுயமாகவே இந்த எம்பிக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கையைத் தொடர்ந்திட வேண்டும். அதேபோன்று, இந்தக் குறிப் பிட்ட எம்பியின் பேச்சு அரசமைப்புச் சட் டத்தின் 21வது ஷரத்தான நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளின் `உயிருக்கும் சுதந்திரத்திற்கும்அடிப்படை உரிமை அளிக்கிறது என்பதை மீறும் விதத்தில் இருப்பதால், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இவர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி தபஸ் பால் கூறியவை ஒருவிதத்தில் இன்றைய மேற்கு வங்க மாநிலத்தின் எதார்த்த உண்மைகளின் பிரதிபலிப்பேயாகும்.
திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும், தேர்தலில் மக்கள் ஆதரவினைத் திரட்டிடவும், தன்னுடைய பிரதான கருவி யாக, பயங்கரவாத வன்முறை வெறி யாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டிருக் கிறது. கீழ்க்கண்ட உண்மை சம்பவங்கள் இவற்றைத் தெளிவுபடுத்திடும்:2011 சட்டமன்றத் தேர்தல்களிலிருந்து, 2011 மே 13க்கும் 2014 ஜூனுக்கும் இடை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணியைச் சேர்ந்த 157 ஊழியர்களும் தலைவர்களும் மேற்குவங்க மாநிலத்தில் கொல்லப்பட்டிருக் கிறார்கள். 2014 மார்ச் 5க்குப்பின், மக்களவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த 12 தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 8,785 பேர் கடும் காயங்களுக்கு ஆளாகியுள் ளார்கள்.
மாநிலத்தில் விவசாயப் பணிகள் மிகப்பெரிய அளவில் கடுமையாக சீர்குலைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களி லும் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 27 ஆயிரத்து 283 பேர் அவர்களின் 9,811.83 ஏக்கர் நிலங்களிலிருந்து சாகு படி செய்யவிடாமல் தடுக்கப்பட்டு, வெளி யேற்றப் பட்டிருக்கிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் இவர்களுக்குச் சொந்த மான பல கோடி ரூபாய் மதிப்புள்ள கால் நடைகள் அழிக்கப்பட்டுள்ளன. 48 ஆயிரத்து 382 குடும்பங்கள் அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள். 6,152 வீடுகள் முழுமையாக இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்டுள்ளன.9,529 பேர் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி மற்றும் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டு இவற்றிலிருந்து மீள்வதற் காக அவர்கள் 27 கோடியே 87 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வரை தண்டம் அளித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான 1,365 அலுவலகங்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன. இடதுசாரிக் கட்சிகளுக்குச் சொந்தமான வெகுஜன அமைப்புகளின் 398 அலுவலகங்களும் அழித்துத் தரைமட்டமாக்கப்பட் டிருக்கின்றன.
இவற்றைச் செய்த கயவர்கள் மீதுஎவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதற் குப் பதிலாக, மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ள காவல்துறை, பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சியின் ஊழியர்களான 5732 பேர்கள் மீதே பொய் வழக்குகளை ஜோடித்து சிறையில் தள்ளியுள்ளது. இறுதியாக, இவர்களின் இத்தகைய வன்முறை மற்றும் பயங்கரவாத அரசி யலுக்கு மிகவும் மோசமாகப் பலியாகி இருப்பது பெண்களாகும். 291 பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாகி யுள்ளார்கள். 675 பேர் மானபங்கப் படுத்தப் பட்டுள்ளார்கள். 1,035 பேர் தாக்கப்பட்டுள்ளார்கள். இவை அனைத்தும் மற்றும் இதற்கு மேலும் விவரங்கள் மேற்கு வங்க இடது முன்னணியின் தூதுக்குழுவால் சமீபத்தில் மேற்குவங்க முதல்வரிடம் சமர்ப்பிக் கப்பட்டுள்ளது. ஆயினும் அதன்மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லத் தேவையில்லை.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க இருக்கிறது.
சட் டத்தை உருவாக்குபவர்களின் மத்தியில் இத்தகைய சட்டவிரோதமான மற்றும் மூர்க்கத்தனமான கருத்துக்களைக் கூறிய உறுப்பினர்களை இருக்க விடலாமா என்பது குறித்து அது ஒரு முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. சட்டத்தை மீறும் இத்தகைய பேர்வழிகளே சட்டத்தை உருவாக்குபவர்களாக இருப்பது உண்மையில் ஜனநாயகத்தின் கேலிக் கூத்தாகும். நாட்டின் ஜனநாயகத்திற்கும், அதன் குடியரசு அரசமைப்புச் சட்டத்திற்கும் பங்கம் விளைவிக்கக்கூடிய விதத் தில் அமைந்துள்ள இத்தகைய பயங்கர வாத மற்றும் மிரட்டல் அரசியல் அனுமதிக்கப்பட முடியுமா என்பதை நாடும் நாட்டு மக்களும் தீர்மானித்திட வேண்டும்.
நிச்சயமாக, இதனை அனுமதித்திட முடியாது. மேற்கு வங்க மக்கள், வெகுகாலமாக தாங்கள் அனுபவித்து வந்த துன்ப துயரங்களையும், மன வேதனைகளையும், வலுவான ஒற்றுமைப் போராட்டத்தின் மூலமாக 1970களில் தங்கள் மீது ஏவப்பட்ட அரைப் பாசிச அடக்குமுறைகளை முறியடித்தார்கள். அதன்பின்னர் புதியதொரு தலைமுறை பிறந்து வளர்ந்திருக்கிறது. இத்தகைய வீரஞ்செறிந்த பாரம்பரிய வரலாற்றை நாட்டின் ஜனநாயகம், மனித வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாத்திட இளைய சந்ததியினரிடம் கொண்டு வருவது இன்றைய அவசியத் தேவையாகும்.


- தமிழில்: ச.வீரமணி

Sunday, July 6, 2014

புத்துயிர் பெற்று எழுவோம்! - பிரகாஷ் காரத்



பிரகாஷ் காரத்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல் களில் மிகவும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளன. கட்சி ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, போட்டியிட்ட 93 இடங்களில் 3.25 சதவீத அளவிற்கே வாக்குகளைப் பெற்றிருக்கிறது. கேரளாவில் சுயேச்சையாகப் போட்டியிட்ட இருவர் கட்சி மற்றும் இடது ஜனநாயக முன்னணி ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், இடதுசாரிகளின் மொத்த எண்ணிக்கை 12 மட்டுமே. நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மோசமான பங்களிப்பு ஓர்ஆழமான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்தி இருக்கிறது. விமர்சனப் பூர்வமான ஆய்வின் அடிப்படையில்தான் முறையான முடிவுகளுக்கு வர முடியும், அதன் அடிப்படையில் கட்சியின் அரசியல் தளம் மற்றும் ஸ்தாபனத்தை முழுமையாக சரிசெய்திட வேண்டியிருக்கிறது.

மத்தியக் குழு, ஜூன் 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தின்போது கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆழமாகப் பரிசீலித்தது. கட்சியின் சுயேச்சையான பலமும், வெகுஜன தளமும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதற்கு மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ஆழமானப் பின்னடைவு மட்டும் காரணம் அல்ல, நாடு முழுவதும் கட்சியை முன்னெடுத்துச் செல்வதில் ஏற்பட்ட தோல்வியும் இதற்கு முக்கிய காரணமாகும். கட்சியையும் அதன் அரசியல் செல்வாக்கையும் முன்னெடுத்துச் செல்வதில் தோல்வி ஏற்பட்டிருப்பதற்கான பொறுப்பு கட்சியின் அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்தியக் குழுவையே சாரும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் பாஜக தலைமையிலான அரசாங்கமாக இருந்தாலும் சரி அல்லது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமாக இருந்தாலும் மத்திய அரசாங்கங்கள் பின்பற்றி வந்த நவீன தாராளமயக் கொள்கைகளைத் தொடர்ந்து உறுதியாக எதிர்த்து வந்திருக்கின்றன. இத்தகைய கொள்கைகளின் கடுந்தாக்குதல்களைத் தடுத்து நிறுத்திடவும் தங்களுடைய உரிமைகளைப் பாதுகாத்திடவும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை அவை தொடர்ந்து மேற் கொண்டு வந்தன. நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றாக, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் அரங்கங்களில் மாற்றுக் கொள்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் தொடர்ந்து இயக்கங்கள் மற்றும் பிரச்சாரங்கள் நடத்தி வந்தனர். வகுப்புவாதக் கொள்கைகளை எதிர்ப்பதுடன் மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்காகவும், சமூகரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் இடதுசாரிகள் தொடர்ந்து உறுதியுடன் போராடி வந்திருக்கிறார்கள்.

இவ்வளவு நடவடிக்கைகளை இடதுசாரிகள் மேற் கொண்டிருந்தபோதிலும், மக்களின் ஆதரவினைப் பெறுவதில், அதிலும் குறிப்பாக இளைஞர்களின் ஆதரவினைப் பெறுவதில், தோல்வியடைந்து விட்டதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.

மத்தியக்குழு தன்னுடைய பரிசீலனை அறிக்கையில், குறைபாடுகளைக் களைந்திடவும், கட்சி மக்களிடமிருந்து அந்நியமாகியிருப்பதை உடனே சரி செய்யவும், சில முக்கிய முடிவுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசரம், அவசியம் என்று கருதுகிறது. இன்றைய நிலையை சரிசெய்து முன்னேறிடவும், கட்சி மற்றும் இடது மற்றும் ஜனநாயக சக்திகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அடிப்படையை அமைத்திடவும் நான்கு முக்கிய நடவடிக் கைகளை எடுத்திட தீர்மானித்திருக்கிறது.

நான்கு நடவடிக்கைகள்
1. கட்சியின் சுயேச்சையான பலத்தை அதிகரித்திட வேண்டும் என்று தொடர்ந்து கட்சியின் அகில இந்திய மாநாடுகளில் நாம் நம்முடைய அரசியல்-நடைமுறை உத்திகளுக்கு அழுத்தம் கொடுத்து வந்த போதிலும், நாம் அதனை செய்ய இயலாதவர்களாகவே இருந்து வந்திருக்கிறோம். மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுரா ஆகிய மூன்று வலுவான மாநிலங்களுக்கு அப்பால், இது தொடர்பாக முன்னேற்றம் எதுவும் இல்லை. கட்சியின் பலம் சுயேச்சையாக வளராமல், இடது - ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவது மற்றும் இடது - ஜனநாயக மாற்றை உருவாக்குவது என்கிற அரசியல் உத்தி வெற்றி பெறாது.

நாம் மேற்கொள்ள வேண்டிய பெரிய அளவிலான முதல் நடவடிக்கை என்பது, இதுவரையிலும் கடைப்பிடித்து வந்த அரசியல் உத்தியை மறு ஆய்வுக்கு உட்படுத்துவது என்பதேயாகும். நாம் இதுநாள்வரை பின்பற்றி வந்த ஐக்கிய முன்னணி உத்தி என்கிற கட்சியின் அரசியல் நிலைப்பாட்டின் அனைத்து அம்சங்களும் விமர்சன ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம். இவ்வாறு நடவடிக்கைகளை மேற் கொள்வதன் மூலம் ஒரு சரியான, பொருத்தமான அரசியல்மேடை மற்றும் முழக்கங்களை உருவாக்குவதில் நமக்கிருந்த குறைபாடுகள் அல்லது பலவீனங்களை அடையாளம் கண்டறிய முடியும்.

கட்சி முழுமையும் விவாதிக்கும்
ஒவ்வொரு அகில இந்திய மாநாட்டின்போதும், நாம் பின்பற்றி வரும் அரசியல்-நடைமுறை உத்திகளை அமல் படுத்தியது தொடர்பாக இயல்பாகவே கட்சி ஓர் ஆய்வினை மேற்கொள்ளும். ஆனால், இன்றைய சூழ்நிலையில் இதுமட்டும் போதுமானதல்ல. இதுவரை பின்பற்றி வந்த அரசியல் - நடைமுறை உத்திகளை ஓர் ஆழமான ஆய்வுக்கு இன்றைய தினம் உட்படுத்துவது அவசியம். இதற்காக, அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாட்டுக்கு முன்பாக நாம் பின்பற்றி வந்த அரசியல் - நடைமுறை உத்திகள் குறித்து ஒரு மறு ஆய்வினை மேற்கொள்வது என மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் அரசியல் - நடைமுறை உத்திகள் தொடர்பான மறு ஆய்வின் முடிவுகள் அடங்கிய அறிக்கை, கட்சியின் நகல் அரசியல் தீர்மானத்துடன் கட்சி முழுமைக்கும் விவாதத்திற்காக முன்வைக்கப்படும். இதனை அடுத்து நடைபெறவிருக்கும் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் புதிய அரசியல் - நடைமுறை உத்திகள் நிறைவேற்றப்படும். இவ்வாறாக, முழுமையான அளவில் ஓர் உள்கட்சி விவாதத்தை நடத்திட உள்ளோம்.

மாற்றங்களுக்கு ஏற்ற முழக்கங்கள்
கடந்த இருபத்தைந்து ஆண்டு கால வரலாற்றில், ஏகாதிபத்திய உலகமயத்தின் தாக்கம் காரணமாகவும், நவீன தாராளமயக் கொள்கைகள் நாட்டில் பின்பற்றப்பட்டு வந்ததன் விளைவாகவும், சமூக-பொருளாதார நிலைமைகளில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வர்க்கங்களின் நிலைப்பாடுகளிலும், வர்க்கங்களுக்குள்ளேயும் இத்தகு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொழிலாளர் வர்க்கம், விவசாய வர்க்கம், விவசாயத் தொழிலாளர் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கங்களுக்குள்ளேயும் இத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே, இவ்வாறான மாற்றங்கள் இவர்களின் அரசியல் ஸ்தாபன நடவடிக்கைகளில் எப்படிப்பட்ட அளவிற்கு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாம் பார்த்து வருகிறோம். பெரு முதலாளிகள் மற்றும் முதலாளித்துவத்தின் மற்ற பிரிவினர் மத்தியிலும் கூட வலுவான முறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவினர்களின் பிரச்சனைகளை எடுத்துக்கொள்ளும்போது, முழக்கங்களை உருவாக்குகையில், இவ்வாறு ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக ஒரு வலுவான இயக்கத்தைக் கட்டி எழுப்பிட, அனைத்து வர்க்கப்பிரிவினர்களையும் அணுகக் கூடிய விதத்தில் நம்முடைய முழக்கங்களில் மாற் றங்களை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். இதற்கு, சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், அத்தகு சமயங்களில் பல்வேறு வர்க்கப் பிரிவுகளின் நிலைப்பாடுகள் மற்றும் பங்களிப்புகள் குறித்தும் ஒரு துல்லியமான ஆய்வினை மேற்கொள்வது அவசியமாகும்.

பல்வேறு துறைகளிலும் அத்தகைய துல்லியமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அத்தகைய துல்லியமான ஆய்வுகளின் அடிப்படையில், கட்சியின் எதிர்கால லட்சியங்களை மனதில் கொண்டு, முழக்கங்களையும் கோரிக்கைகளையும் அமைத்திட முடியும். இத்தகைய துல்லியமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலவரையறையினை தீர்மானித்திட வேண்டும் என்றும் மத்தியக் குழு முடிவு செய்துள்ளது.

மக்களுடன் ஜீவனுள்ள தொடர்பு
3. இவ்வாறு அரசியல் நிலைப்பாட்டை மேற்கொள்வதற்காக நாம் முயற்சிகளை மேற் கொள்வதுடன், நம் கட்சி ஸ்தாபனத்தின் நிலை குறித்தும், அதன் செயல்பாடுகளின் பாணி எப்படி இருந்தது, மக்கள் மத்தியில் அதன் வீச்சு எந்த அளவிற்கு இருந்தது என்பது குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டியதும் அவசியம். கட்சியின் கீழ் அமைந்துள்ள வெகுஜன அமைப்புகள் பல்வேறு வெகுஜனப் போராட்டங்களையும் இயக்கங்களையும் நடத்தியுள்ள போதிலும், அத்தகு இயக்கங்களில் ஈடுபட்ட மக்களை அரசியலாக மாற்ற முடியாத நிலையிலேயே கட்சி ஸ்தாபனம் இருக்கிறது என்கிற பிரச்சனை இதில் ஒன்று.

அடுத்து ஸ்தாபனம் பலவீனம் அடைந்திருக்கும் பிரச்சனையும் போராட்டங்கள் மற்றும் இயக்கங்களை வளர்த்தெடுக்க முடியாத நிலைக்கு இட்டுச் சென்றுள்ளன. செயல் பாடுகளில் ஒரேவிதமான சலிப்பூட்டுகிற முறைகள் மற்றும் மக்களுடன் ஜீவனுள்ள தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாததும் பிரச்சனைகளாகும். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நம்முடைய பிரச்சார முறைகளில் மாறுதல்களை மேற்கொள்ள வேண்டியதும் அவ்வகையில் மக்களிடம் விரைவில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கின்றன. கட்சி ஸ்தாபனத்தை முழுமையாக பழுதுபார்த்து, தவறான போக்குகளை சரி செய்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வர்க்க - வெகுஜன அமைப்புகள்
4. வெகுஜன அமைப்புகளின் வளர்ச்சி, அவற்றின் சுயேச்சையான செயல்பாடுகள் மற்றும் அவற்றின் கீழ் மக்களை விரிவான முறையில் அணிதிரட்டுதல் ஆகியவையும் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய அம்சங்களாகும். மாநிலக் குழுக்கள் நடத்தியுள்ள தேர்தல் ஆய்வுகள் காட்டுவது என்னவெனில், நம் கட்சியின் கீழ் அமைந்துள்ள வெகுஜன அமைப்புகளில் அணிதிரண்டுள்ள மக்களில் கணிசமானவர்கள் நம் கட்சிக்கோ அல்லது இடதுசாரி வேட்பாளர்களுக்கோ வாக்களிக்கவில்லை என்பதாகும். வர்க்க, வெகுஜன அமைப்புகள் மற்றும் நம் அரசியல் வேலைகளில், நம்முடைய சுயேச்சையான செயல்பாடுகளில் குறைகள் மலிந்துள்ளன. இவற்றை மிகவும் ஆழமான முறையில் சரி செய்திட வேண்டியது அவசியம். மேற்கண்ட நான்கு பிரதான நடவடிக்கைகளையும் ஒன்றிணைத்து முன்னெடுத்துச் செல்லவேண்டும். கட்சி எதிர்கொண்டுள்ள நிலைமைகளை கவலையுடன் பரிசீலித்திட வேண்டும் என்று கட்சி முழுமைக்கும் மத்தியக்குழு அறைகூவல் விடுத்திருக்கிறது.

புதிய நிலைமை
தேர்தலுக்குப் பின்னர் நரேந்திர மோடியின் கீழ் பாஜக தலைமையிலான அரசாங்கம் அமைந்தபின், ஒரு புதிய அரசியல் நிலைமை உருவாகி இருக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகள் முன்னிலும் வெறித்தனமான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கிவிட்டன. பெரு முதலாளிகள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டன. இதன் எதிர்விளைவாக, மக்களின் வாழ்வைக் கசக்கிப் பிழியக்கூடிய வகையில் நடவடிக்கைகளும் துவங்கி விட்டன.

பணவீக்கத்திற்கும் விலைவாசி உயர்வுக்கும் காரணமாக விளங்கும் கொள்கைகளை அமல் படுத்துவது தொடர்கின்றன. பாஜக/ஆர்எஸ்எஸ் கும்பல் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை உந்தித்தள்ளுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன. அரசின் கீழான பல்வேறு அமைப்புகளிலும் ஆர்எஸ்எஸ் ஊழியர்களை ஊடுருவச் செய்வதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்துத்துவா தீவிரவாத விஷமிகள் சிறுபான்மையினர் மற்றும் மதச்சார்பற்ற மாண்புகளின் மீது தாக்குதல்களைத் தொடுக்கத் துவங்கி யிருக்கின்றனர். புனேயில் நடந்துள்ள நிகழ்வுகள் மற்றும் குஜராத், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடந்துள்ள வகுப்பு மோதல்களும் ஓர் எச்சரிக்கை மணியாகும்.

புத்துயிரோடு எழுவோம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் வலதுசாரிகளின் தாக்குதல்களுக்கு எதிராக எதிர்ப்பினை முடுக்கிவிடவும், உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திடப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. வகுப்புவாத சித்தாந்தம் மற்றும் அரசியலுக்கு எதிராக உறுதியான போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பது இடதுசாரிகள் மட்டுமே. பெரும்பான்மை மதவெறியின் நாசகர அச்சுறுத்தல்களுக்கு எதிராக களத்தில் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளை இறக்கி விடுவதில் கேந்திரமான பங்கு வகிக்க வேண்டிய நிலையில் இடதுசாரிகள் இருக்கிறார்கள்.

இப்பணிகளை வலுவாக செய்யக்கூடிய விதத்தில் இடதுசாரிகள் புத்துயிர் பெற்று எழுவதில் உடனடிக் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். அனைத்து இடதுசாரி சக்திகளுடனும் ஒன்றிணைந்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியோடு செயலாற்றும். அனைத்து இடது மனோபாவம் கொண்ட சக்திகள், குழுக்கள் மற்றும் அறிவுஜீவிகளையும் ஒரேகுடையின்கீழ் திரட்டிட விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். ஒன்றுபட்ட மற்றும் புத்துயிர் பெற்ற இடதுசாரிகளால் மட்டுமே 
இந்திய அரசியலில் வலதுசாரிகளால் கட்டவிழ்த்துவிடப்படும் சவால்களை எதிர் கொள்ள முடியும்.


தமிழில்: ச.வீரமணி